உள்வாங்கும் அலை

வயல் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அந்த அதிகாலையிலும் குறுக்கே பெருச்சாளி ஒன்று குடுகுடுவென்று ஓடியது. பகலானாலும் இரவானாலும் அவை பயந்தே வாழ நேர்ந்து விடுகிறது. ராமையா மேல்சட்டை அணிவது இல்லை. அதிகாலைக் குளிரின் இதமான காத்து துண்டுக்குள் புகுந்து சிலுசிலுவென்று வீசியது. உலகம் சோம்பிக் கிடந்தது. ஊருக்குள் வெளிச்சம் நுழையுமுன் அவர் எப்பவுமே எழுந்து வெளி கிளம்பி விடுவார். என்னவோ வெளிச்சத்தை வரவேற்கிறாற் போல. தூரத்து மலைக்கு மேலே ஒரு சிறு ஒளி பிசிர் தட்டும். சர்ர் சர்ரென்று யாரோ அங்கே மாட்ல பால் கறக்கிறாங்களா?… மெல்ல அது மேலேறி மஞ்சள் பரவ துலக்கம் காட்டும். சந்தன மினுக்கலாய் ஒளி பீரிட்டு வரும் அழகை அனுபவித்தால் தான் புரியும். விக்கிரக சாஸ்தாவுக்கு சந்தனக் குளியல். மலைதான் சாஸ்தா. அதைப் பார்க்கவே, “அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்”… என்று சரண கோஷம் மனதில் வரும்.  வருடா வருடம் சபரிமலை போய்வருவார் ராமையா.

இரவு சீக்கிரம் படுத்துவிட வேண்டும். வேலை எதுவும் இல்லையானால் சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் மொட்டை மாடியில் இருள் டிகாஷன் கெட்டிப்படும் வரை உலா. அவர்வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்கிறது தெரு விளக்கு. மஞ்சளாய்க் கொசு பறக்க நோஞ்சானாய் ஒளி தரும். இங்கே வரை அந்த வெளிச்சம் வராது. டிரான்சிஸ்டர் கேட்பார். வீட்டில் டிவிப்பெட்டி இல்லை. மாடி நடைக்கு ஒரு வேகத்தில் தன்னைப்போல பாடல்கள் உள்ளே உருள ஆரம்பித்தால் நிற்காமல் அடுத்து அடுத்து என்று பாடுவார். உக்கிராண அறையில் இருந்து பழைய சாமான் ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைக்கிறாற் போல இருக்கும் அது. சுமாராய்ப் பாட வரும். எல்லாம் பழைய மெட்டுக்கள். அல்லது பக்திப் பாசுரங்கள். இப்பத்தைய பாடலும் அதற்கு பாத்திரக்கடையில் உருட்டினாப்போன்ற தாளங்களும் அவருக்கு ஒட்டவில்லை. ஏல தமிழாடா இது…

அந்தக்காலப் பாடல்களின் தமிழ்ச் சொல்லாடல்களை ரசித்து நாவில் தேனூறப் பாடுவார். பதிகங்கள் நமக்கே இப்பிடி இனிச்சிக் கெடக்கே, இதைக் கடவுள் முன்ன நின்னு ஒருத்தன் கற்பனை பண்ணி இசையேத்திப் பாடியிருக்கானேய்யா… என நெகிழ்வார். ஏ. பி. நாகராஜன் பக்திப் படங்கள் பிடிக்கும். ஒன்றானவன் உருவில் இரண்டானவன்… ஏல இப்பிடியே ஆயிரத்து நானூத்தின்னு பாடினா படமே முடிஞ்சிருமே. நாடகங்களில் போல இப்படியும் அப்படியும் நடந்தவாறே பாடுவார். எல்லாம் ஓய்ந்து கடைசியில் மிச்சமாய் கால்வலியுடன் அந்த அமைதி ஆகாவென்றிருக்கும். குரைப்படங்கி தூக்கிய வாலைக் கப்பைக்குள் செருகி நாய் அமைதியுற்றாற் போல. உள்வாங்கும் அலை. ஓஹ்… என பெருங் கொட்டாவி. வாயின் அதிகபட்ச விரிசல் அது, தாய் பிரசவிக்க வயிற்றைத் திறந்தாற் போல… பாடி முடிச்சாச்சி. பிரசவம் ஆயாச்சி… கீழே வந்து படுத்து விடலாம்.

எளிமையாய் இருந்தது வாழ்க்கை. மனைவி இல்லை. அவள் இறந்துபோய் ஏழெட்டு வருசம் ஆனது. அவர்மேல் மிகவும் மரியாதையுள்ள பெண். அவளுக்கும் அவருக்கும் பதினெட்டு வயது வித்தியாசம். வயசு வித்தியாசம் அதிகம் உள்ள ஆண், பெண்ணை நல்லபடியாகப் பார்த்துக் கொள்வதும், அந்தப் பெண் அவரை மதிப்பதும் வழக்கமான ஒன்றுதான். தங்கை சுமதிதான் ரொம்ப வற்புறுத்தி இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தாள். இவள், உலகநாயகி பற்றியும் குறைசொல்ல ஒன்றும் இல்லை. குறை என்று என்ன, அவள் ஆசை என்ன என்பதே அவருக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி அதுவரை, அதுவரை என்ன எப்பவுமே அவரிடம் அபிப்ராயம் இல்லை. என்னமோ அந்த ஆண்டவனுக்குத் தோணியிருக்கு பாரேன். ஆண் பெண்ன்னு ரெட்டையாப் படைச்சிப்பிட்டான். சரி. அவன் இஷ்டம்…

அவள் இருந்தவரை மாடு ஒன்று வாங்கி பின்தொழுவத்தில் கட்டியிருந்தார். அவளுக்கும் வீட்டில் வேலை வேணும்லா. தினசரி மூணு லிட்டர் வரை பால் தந்தது. ரெண்டு தெரு வரை போய் அதிகப் பாலை அவள் விநியோகம் செய்து விற்றாள். வருடம் ஒரு சங்கிலி புதுச் சங்கிலி தங்கத்தில் வாங்கி மாட்டிக் கொண்டால் நன்றாய்த்தான் இருக்கிறது அவளுக்கு. சிரித்தபடியேதான் அவள் செத்துப் போனதாக நினைத்தார். அசுர ஜுரம் ஒன்று வந்தது. சனியன் இறங்கவே இல்லை. உள்ளூர் ராமநாதன் பத்தாமல் வெளியூர் வரை கூட்டிப்போய் மானாமதுரையில் நல்ல ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பார்த்தார். பெரிய ஆஸ்பத்திரி… வீடு வரை அவள் சடலத்தை எடுத்துப்போக அவர்களே ஏற்பாடு பண்ணினார்கள். துட்டுல்லா எல்லாத்துக்கும். நம்மூர்ல துட்டுக் குடுத்தாலும் காரியம் நடக்கணுமே.

மனைவி இறந்ததும் தங்கைக்கே பசு மாட்டைத் தந்துவிட்டார் ராமையா. சுமதி அழுதபடி அவருக்கு அடுத்த கல்யாணம் பற்றிப் பேச்செடுத்தாள். அவர் பிடி கொடுக்கவில்லை. மாட்டை அவள் ஓட்டிப்போன பின் ரெண்டொரு தரம் அது அங்கேயிருந்து கட்டவிழ்த்துக் கொண்டு இங்கே வந்து வந்து நின்றது. இங்க யாரிருக்கா அதைப் பார்த்துக் கொள்ள. ஏல என்னியப் பார்த்துக்கிடவே ஆள் கிடையாது.  திரும்ப தங்கை வந்து கூட்டிப் போனாள். மாடு அங்கேபோய் ரெண்டு குட்டி ஈனியது. அதன் திருமணத்தை சுமதி பார்த்துக் கொண்டிருக்கலாம்.

ராமையா அடுத்து கல்யாணம் முடிக்கவில்லை. ஒரே பையன் அவருக்கு. நாகராஜன். அம்மா இறந்தபோது அவன் கல்லூரி சேர வேண்டிய பருவம். வீட்டுவேலை செய்ய, மற்றும் சமையல் செய்ய என்று சுமதியே ஊரில் இருந்து வேறொரு சிறுமியை அனுப்பினாள். பாவப்பட்ட பெண்கள் நிறையப் பேரை அவள் தெரிந்து வைத்திருந்தாள். இப்பவும் அந்தப் பெண் வந்து போகிறது. அதே தெருப் பையனுடன் அவளுக்கு ‘இது’-வாகி அவரே கல்யாணம் முடித்து வைத்தார். இது… எப்படி ஆனது, அவருக்கு அதெல்லாம் தெரியாத ஆச்சர்யம்.

எளிய கிராமம். ஊரில் எல்லையில் ஒரு சினிமாக் கொட்டகை. பழைய மிகப் பழைய படங்கள் அதில் திரையிட்டார்கள். ஃபிலிமில் மழை கொட்டுகிற புத்தம் புதிய காபி. நிறைய நிறைய பாடல்கள் உள்ள படங்கள். அதையெல்லாம் பார்த்துவிட்டு அப்படியே வீட்டில் வந்து பாடிப் பார்ப்பார். சாமி பாட்டு என்றால் ரொம்ப உற்சாகமாக இருக்கும். சாமி பாட்டு பாடும்போது ஆண்கள், குளிக்க இறங்கிய பெண்கள் போல நெஞ்சுவரை துண்டை ஏத்திக் கட்டிக் கொள்கிறார்கள். ஏன் தெரியவில்லை. வெற்றுடம்புக்கு ஒரு தங்கச் சங்கிலி பார்க்க சௌக்கியமாக இருக்கும். பளபள பட்டுடன் நெற்றியில் சந்தனமும்… பக்தி என்றாலே மஞ்சள், பொன் சேர்ந்து கொள்கிறது. இதுக்கு ஒரு மாற்று வண்ணம் போல பெரிய குங்குமம்.

துண்டை இழுத்துப் போர்த்திக்கொண்டே ஹா என சிறு கொட்டாவி விட்டார். ரப்பர் செருப்புகளை மீறி பருக்கைக் கற்கள் காலில் குத்தி உறுத்தின. செம்மண் நிலத்தில் சீடை சீடையாய் இப்படி சிறு சரளை, கூழாங் கற்கள் எப்படி உற்பத்தி யாகின்றன தெரியவில்லை. தூக்கச் சடவுடனான சிறு அலுப்பில் அவர் நடக்கையில் கால் முட்டியில் சொடக்கு விழுந்தது. கைவிரல்களை நெறித்துப் பார்த்தாலும் சொடக்கு எடுக்கலாம். அதிகாலை நடை என்பது அன்றைய நாளைத் தெளிவுடன் துவங்க ஏதுவாக இருக்கிறது. வெயில் வர வர கண் திறந்து கொள்வது கண்ணுக்கு இதம். இதுநாள் வரை கண்ணாடி தேவைப் படவில்லை. பெரிய ரெண்டு கிரவுண்டு வீட்டில் முன்னெடுப்பு நெல்லடி களமாய்க் கிடக்கும். பின் பகுதியில் வீடு. வேப்ப மரத்தை, தென்னை மரத்தையும் சேர்த்து வளைத்து வெளி காம்பவுண்டு வேலிப் படல். வேம்பின் அடியில் எந்த வெயிலுக்கும் கயிற்றுக் கட்டில் போட்டுப் படுத்தால் கண் சொக்கி சுகமாய்த் தூக்கம் வரும். சில சமயத் நிலாவும் இருந்தால்… வேறென்ன? பாட்டு கிளம்பும்.

நாகராஜன், எங்கோ பிறந்திருக்க வேண்டிய பிள்ளை அது. நாகராஜனுக்கு ஊர் பிடிக்கவில்லை. நன்றாகப் படித்தான் நாகராஜன். படிப்பில் அவன் ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. “ஏல நீ மனம் போனபடி வாசி. எத்தனை ஆங்கிலம் படித்தாலும் தமிழை மறந்திறப்டாது கேட்டியா?” என்பார். சிலமந்தி அலமந்து… திருவையாறு பத்தி ஞானசம்பந்தர். அடாடா. அடாடா.  அவர் ஐந்தாவது வரை படித்தவர். ஆங்கிலம் எழுத்துக் கூட்டி வாசிப்பார். கடைபோர்டு பார்த்தால் வாசிக்கத் தெரியும். கடிதத்தில் முகவரி வாசிப்பார். செய்தித்தாள் ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாது. போதாததற்கு பொடிப்பொடி எழுத்துக்கள். அவ்வளவுக்கு, இத்தனை பக்கத்துக்கு நாட்டில் என்னென்னவோ நடக்கிறது, என்பதே ஆச்சர்யம். மேட்டுப்பட்டியில் காலை விடியல், அந்தியில் அஸ்தமனம், அவ்ளதான் நியூஸ். அட அதுகூட ஒரு நியூசா? இதைப் பேப்பரில் தினசரி போடறதா?

மேல் வகுப்புகளில் பாடங்கள் எல்லாமே ஆங்கிலத்தில் இருந்தன. தாட் பூட் தஞ்சாசூர். கல்லூரி படிக்க என்று அவன் வெளியூர் போக வேண்டியிருந்தது. அவர் அஞ்சவில்லை. சம்சாரத்துக்கு உடம்பு சொகமில்லை என்றே வெளியூர் போறதாயிருக்கு ஊர். இங்க டீக்கடை வரவே ஒரு மாமாங்கம் ஆயிட்டு. பெரிய படிப்புன்னா இங்க இருந்தா வேலைக்காவுமா? இருந்த வயலில் ஒன்றை அவனுக்காக, அவனது படிப்புக்காக விற்கவும் அவர் தயங்கவில்லை. வருத்தமா? ச். செத்தபிறகு அவனுக்குன்னு இருக்கறதை இருக்கறச்ச செலவழிக்கப்டாதா? அவன் நல்லா படிச்சி முன்னுக்கு வந்தா வேணான்னிருக்கா? ராமையா குடும்பத்ல படிச்சாளு வேணாவாவே? அவர் இறங்கி உழுத வயல் அது. பயிர் விளைந்து கதிர்சாய்ந்து நிற்பதைப் பார்க்க பெருமை தட்டும் அவருக்கு. அப்போது மீசை இருந்தது. அதை நீவி விடுவார். இப்போது மீசை கிடையாது. முழுக்க சிரைத்துக் கொள்வதுதான்.

மனைவி இறந்தபின் அவருக்கு மேலும் ஓடாடித் திரிவதில் ஆசை விழுந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. கபடிக் கபடின்னு பாடிப்போயி உப்ப மிதிச்சாச்சி. இனி திரும்பறதுதான். அவ இருந்தவரை வீடு வீடாக் கெடந்தது. ஒரு நல்லநாள் விசேஷம் என்றால் வீட்டை மெழுகித் தெளித்து கோலம் பெரிதாய்ப் போட்டு… பெண்கள் தங்களை மாத்திரம் அல்லாமல் தங்கள் சுற்றுப் புறத்தையும் அழகாக வைத்துக்கொள்ள மெனக்கிடுகிறார்கள். அவள் இல்லாத வீடு ஒளியிழந்து போனாற் போல இருந்தது. வீட்டு வாசல்பிறை விளக்குமாடம் கரிப்பிடித்துக் கிடக்கிறது. தீயின் அஜீர்ணம் அது. யார் இருக்கா விளக்கேற்ற?

பொதுவாக ஸ்திரீகள் மேல் அவருக்கு பெரிய நாட்டம் கிடையாது. குளித்துவிட்டு ஈர உடையைச் சுற்றிக்கொண்டு எதிரில் பெண் வந்தால் ஒதுங்கி வழிவிடுவார் சலனம் இல்லாமல். காமம் செப்பாது காண்பார் அவர்களை. அவர் ஊரில் அவர்களைப் பார்க்க திண்ணையில் ஒரு ஜமாவே காத்திருக்கும்… இவள் உலகநாயகி… அவளைத் தேடிப்போய் ஆசையாய் அவர் அணைத்திருப்பாரா? இவளுடன் ஒரு குழந்தை பெற்றதே ஆச்சர்யம்தான். அவ ஜாதகம் கெட்டி ஜதகம் போல. ஆனால் அல்பாயுசில் போய்விட்டாள். தங்கச்சி வந்து அழுதபோது அப்படியே அவரிடம், இனி… என்கிறாற் போல, அவருக்கு அடுத்த கல்யாணம் பற்றி பேச்செடுத்தாள். யாருக்காவது சொத்து இருந்தால் அது விணாயிறப்டாது அவளுக்கு. “பிள்ளையோட படிப்பைப் பார்க்கணும்டி…” என்றுதான் அப்போது அவளுக்கு பதில் சொன்னார். உலகநாயகி இப்போது இல்லை… என்ற  வெற்றிடத்தின் அந்தரங்கம் அழகானது அல்லவா. அவள் இல்லாதபோது அது இழப்பாகத் தெரிகிறது. அத்தனைக்கு உத்தமி அவள்… என்று தோன்றியது. ஒரே ரயிலில் பயணப் பட்டோம். அவ ஊர் வந்ததும் புண்ணியவதி இறங்கிப் போயிட்டா. அவ்ளதான்.

பாதி வயலை விற்றது போக மீதியைக் குத்தகைக்கு விட்டுவிட்டார். உழைக்கும் ஆர்வம் விழுந்துவிட்டது. ஒருவேளை தனக்கு வயதாகி விட்டதான உணர்வு அவருக்கு வந்துவிட்டதா தெரியாது. அவருக்கே தெரியாது. வாழ்வில் சிறு அலுப்பு தட்டிவிட்டதா? அது எப்போது சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது?… பையனும் அவருடன் இல்லை. படிக்கப் போய்விட்டான். பெரிய படிப்பு. மருத்துவம். எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருந்தான். படிப்பு ருசி கண்டவன். அவனிடம் கனவுகள் இருந்தன. இளமைக்கு அழகு கனவுகள். அதை, அந்த ஆகுதியை பெற்றவர்கள் நெய்யூற்றி வளர்க்க வேண்டும். அது அவர்களது கடமை என நினைத்துக் கொண்டார். இருக்கிறது ஒரு மகன். வேறு யாருக்குச் செய்யப் போகிறார். தவிரவும் நல்லா படிக்கிற பிள்ளை… கல்யாணம் தேவையா ஒரு ஆணுக்கு, என நினைத்த காலம் போய், பிள்ளை அவரை இயக்குவதாய் இருந்தது காலம். அவனது வெற்றிகளுக்கு அவர் பூரித்தார். தூரத்தில் மலையில் மழை பெய்வதை ரசிக்கிறாற் போல.

மருத்துவம் படிக்க அவன் ஆசைப்பட்டான். அதெல்லாம் பணக்காரப் பையன்கள், படித்த பெற்றவர்களுக்குப் பிறந்த பையன்கள் ஆசைப்படுவது என நினைத்தார். தனியார் கல்லூரியில்தான் அவனுக்கு இடம் கிடைக்கும் போலிருந்தது. இத்தனை செலவில் ஒரு படிப்பா என மலைப்பாய் இருந்தது. மொட்டை மாடியில் இங்கும் அங்குமாக நடந்தார். பாட்டு வரவில்லை. திக் டிகாஷன் இருள் வெளியில் முங்குநீச்சல் போல துழாவினார். அவனால் முடியும் என்றால்… என்னால் ஏன் முடியாது, என சட்டென்று நினைத்துக் கொண்டார். பாதி வயலை விற்க முடிவு செய்தார். தென்னந்தோப்பு இருக்கிறது. இன்னும் வேணுமானாலும் செலவு செய்யலாம்…

“தம்பி நீ படிடா…” என்றார். “அப்பா…” என்று நெகிழ்ச்சியுடன் அவர் காலில் விழுந்தான் நாகராஜன். என்ன அருமையான பிள்ளை. ஒரு கெட்ட பழக்கம் இல்லை. அதிரடியான பேச்சு இல்லை. அம்மா இல்லை என்கிற ஏக்கம் அவனுக்கு இருக்குமா தெரியாது. அதைவிட படிப்பில் அவனது தீவிரம் அவரை மலைக்க வைத்தது. இவன் சாதிக்கப் பிறந்தவன், என்றுதோன்றியது. என் மகன்… என நினைக்க நெஞ்சு விம்மியது. ஆனால் டாக்டர் என்று அவன் ஆகிவிட்டால், ஆகாமல் என்ன, அதெல்லாம் ஆகிவிடுவான்… ஆகிவிட்டால், நம்மூருக்கு வந்து பிராக்டிஸ் செய்யமாட்டான், நமக்கு ராமநாதன்தான்… என்று தோன்றியது.

பட்டணத்துக்கு அவனோடுதான் முதல்முறை போனார். புதுச்சட்டை. நல்ல செருப்புகள். தார்ச்சாலைகளில் எப்பவும் போக்குவரத்து இருந்தது. எப்பவும் யாராவது எங்காவது விரைந்துகொண்டே யிருந்தார்கள். அத்தனை அவசரம் வாழ்க்கையில் தேவையா என்ன? கைக்கு அதிகமாக அவர்கள் பற்றிக்கொள்ள ஆசைப் படுகிறார்களோ, என்று நினைத்தார். நான் நினைப்பது தவறாக இருக்கலாம் என்று உடனே தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.  இது வேறு உலகம். இது மேட்டுப்பட்டி அல்ல. போட்டிகள். சவால்கள். வெற்றிகள்… வாழ்க்கை கணக்குகளால் ஆனது. இங்கத்திய இசை என்பது போர்ப்பறை, என்று நினைத்தார்.

கிளம்பும்போதே சட்டை. அவருக்கு சிரிப்பு. கண்ணாடி காட்டினான் நாகராஜன். அப்பாவைப் பார்க்க அவனுக்கும் சிரிப்பு. “வேட்டி போதும்டா.. குழாய மாட்டி விட்றாதே” என அவருக்கும் சிரிப்பு. ஊரைவிட்டு அவர் கிளம்பியே வருஷங்கள் இருக்கும். எங்காவது சொந்தக்காரன் சொக்காரன் சாவு அல்லது கல்யாணம் என்று தகவல் வந்தால், தீராது என்றால் போகிறதுதான். மற்றபடி இந்த மேட்டுப்பட்டி. அதன் வயல்வெளி வரை அவர் உலகம். தெருநாய்ப் பிறவி. அவர் எல்லை அவ்வளவே.

காலில் குத்திய முள்ளை அப்படியே நடராஜர் போசில் பிடுங்கி யெறிந்தார். விடியலுக்கு முகம் வந்திருந்தது. இருள் எனும் ஆறோட்டத்தில் மூழ்கி எழுந்து கொண்டிருந்தது பூமி. ஜீராவில் போட்டு எடுத்த குலோப்ஜாமூன் போல. உலகநாயகி சின்னச் சின்ன பலகாரங்கள் வீட்டில் செய்வாள். இனிப்பு அவருக்கு அத்தனை பிரீதி இல்லை. என்றாலும் ஒன்றிரண்டு வாயில் போட்டுக் கொள்வார். “எப்பிடி இருக்குங்க?” என்று கேட்பாள் உலகு. “நல்லாருக்கு போதும்” என்பார். இனிப்பு என்றாலும் அளவோடு, என்று தன்னைப்போல ஓர் ஒழுங்கு இருந்தது அவரிடம். இனிப்பு என்று இல்லை. காபிதான் பெரிய லோட்டாவில் வேண்டும். அந்தப் பழக்கமும் இப்ப இல்லாமல் ஆயிற்று.

தோட்டப் பக்கமாய்ப் போனால் காலையில் ஆள் நடமாட்டம் இராது. வீட்டில் கழிப்பறை இருக்கிறது, பெண்களுக்காக. ஊர் ஆம்பளைகள் இப்படி வெளியே காற்றாட வந்து போனார்கள். வீட்டில் எதை எதைச் சேர்த்து வைத்துக் கொள்வது என்று இல்லையா என்று தோன்றும் அவருக்கு. எட்டு மாசம் ஒரு வருடத்தில் கழிவுநீர் லாரி வரச்சொல்லி அள்ளிச் செல்கிறார்கள். தரையில் தரையில் முகர்ந்து அலைந்து திரியும் பன்றிகள். அதற்கு ஒரு உணவுன்னு படைச்சான் பார் ஆண்டவன், என நினைத்துக் கொண்டார்.

இடுப்பு முடியில் சிறு பணத்துடன் செல் வைத்திருந்தார். எளிய அலைபேசி. மகன்தான் பிடிவாதமாய் அவர் கையில் திணித்தது. எனக்கு யாருடா பேசப் போறா, என்று வாங்கிக் கொண்டார். அவன்தான் வாரம் இரண்டு தரம் பேசுவான். பெரிதாய் அவர் பேச விவரம் ஏதும் இருக்காது. அவன்தான் ஹிந்து பேப்பர் பொடி எழுத்து நியூஸ் மாதிரி நிறையப் பேசுவான். நன்றாகப் படித்து பட்டம் வாங்கினான். அவன் பட்டம் வாங்கியபோது அவர் போய்வந்தார். அவனது பட்டத்தின் தாளில் அவர் விற்ற வயலின் வரைபடம் தெரிந்தாற் போலிருந்தது. பொன்னா விளைவித்துக் கொட்டிய பூமி. எப்படியானாலும் இனி அவன் இங்கே வரப் போகிறானா, விவசாயம் செய்யப் போகிறானா என்ன என நினைத்துக் கொண்டார்.

பிறகு பெரிய இடமாய்ப் பார்த்து அவனை மாப்பிள்ளை கேட்டு வந்தார்கள். அவர் எதிர்பாராதது இது. சுமதிக்கு அதில் சிறு ஏமாற்றம் இருந்தது. என்றாலும் வந்த வரனைப் பார்த்து அவள் மலைத்தாள். அவளிடம் கையில் இருந்த இடம் எல்லாம் இத்தனை ஐசுவரியத்தோடு அமையவில்லை. பெரிய வீடு ஒன்றையே சீதனமாகத் தந்து அவனை மாப்பிள்ளை கேட்டார்கள். பெண்ணும் டாக்டர்தான். அவள் அழகாய் இருப்பதாய் சுமதி சொன்னாள். தலையாட்டினார். அழகைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? அவர் கண்ணாடியே பார்ப்பதில்லை. தலை வாரிக் கொள்வதுமில்லை.

கேட்டட் கம்யூனிட்டி, என்று சொல்கிறார்கள். பெரிய பரந்த விஸ்தீரணத்தில் கொத்துக் கொத்தாய் மாடி மாடியாய், அடுக்கு வீடுகள். வீடுமேல் வீடு வைத்துக் கட்டுவவார்களா யாரேனும்? பூமி யாருக்குமே சொந்தங் கிடையாது. ஆனால் எல்லாருக்கும் சொந்தம், என்ற ஏற்பாடு அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. கடவுள் இருக்காரா இல்லியா? இல்ல. ஆனா இருக்கார்… அந்தக் கதை. நம்ம வீடு… பெரிய படல் எடுத்த வீடுல்லா. தனி வீடு. இதை யாரும் ‘கேட்டட்’ என்று சொல்ல மாட்டார்கள். சரி. பேர்ல என்ன இருக்கு, என நினைத்துக் கொண்டார்.

இடுப்பு முடியில் அலைபேசியை முடிந்து வைத்திருப்பார். அவன் எப்ப வேணாலும், அவனுக்கு ஓய்வு கிடைக்கிறபோது கூப்பிடுவான். காலை இத்தனை நேரத்துக்கு அவர் எழுந்துகொண்டு விடுவார் என்பது அவனுக்குத் தெரியும். தனித்த வெறுமையான அதிகாலைப் பொழுதுகளில் அவனது குரல், “அப்பா”… என்ற அழைப்பு அவரைக் கிறுகிறுக்கச் செய்தது. நான் இதற்கெல்லாம் தகுதியானவனா, என்று எப்போதும் ஒரு திகைப்பு அவருக்கு ஏற்பட்டது. அவன் அழைத்தால் இடுப்பில் அலைபேசி அதிர யாரோ கிச்சுகிச்சு மூட்டினாற் போல இருந்தது. 

“எய்யா எப்பிடி இருக்கீங்க?” என்று பேசினான் நாகராஜன். அவன் குரலைக் கேட்டாலே உற்சாகத்துக்குக் குறைவில்லை. “குளிக்க வந்தீங்களாப்பா?” என்று கேட்டான். “ஆமடா தம்பி” என்றார். “சௌக்கியந்தானே? மேகலா எப்பிடி இருக்கா?” என்று கேட்டார். பிறகு சாதாரணமாகக் கேட்பார்களே பெரியவர்கள், அந்தக் கேள்வியைக் கேட்டார். “என்னமும் விசேசம் உண்டுமா தம்பி?”

ஆனால் அவரே எதிர்பாராத விதமாக “ஆமாப்பா” என்றான் நாகராஜன். அடேடே, என்று சிலிர்த்தது. தாத்தா ஆவது என்பது பெரும் அதிர்ஷ்டம் தான் போல. அவர் முகத்தின் சிரிப்பு அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஒரு காலை இதைவிடச் சிறப்பாக விடியாது போலிருந்தது.

செண்பகம் ஈரத்துணி சுற்றி இடுப்பில் குடத்துடன் வரப்பில் எதிரே வந்தாள். இத்தனை சீக்கிரம் வந்திருக்கிறாள். வெளிச்சம் வந்தால் ஆம்பளைகள் குளிக்க வந்துவிடுவார்கள் என்று அவள் அவசரப் பட்டிருக்கலாம். துரைசாமி தோட்டத்தில் மேல் தொட்டியில் தண்ணீர் கிடந்தது. மோட்டார் அறை பூட்டிக் கிடந்தது. தரைமட்டக் கிணற்றில் எட்டிப் பார்க்க உள்ளே தண்ணீர் கிடப்பது தெரிந்தது. நடுத்தெரு பச்சைமுத்து துண்டுக்குள் சோப் போட்டுக் குளித்துக் கொண்டிருந்தார். ராமையா அப்படியே தொம்மென்று கிணற்றில் குதித்தார். அவர் குதித்த வேகத்தில் நாலாபுறமும் நீர் திவலையாய்ப் பொங்கிச் சிதறியது. கிணற்றுக்குள் சப்தங்கள் குகைக்குள்போல எதிரொலித்து உருமின.

ராமையா சோப்பு தேய்த்துக் கொள்வது இல்லை. தலைக்கு தேங்காயெண்ணெய் தேய்ப்பது கிடையாது. எப்ப இப்படி வந்தாலும் நீரைப் பார்த்தவுடன் பாய ஆசை வந்துவிடுகிறது. நீர் அருமையான விஷயம். தாய்மையின் அரவணைப்பு அது. அதனுள் அமுங்கிக் கொண்டால் பூத்துவாலைக் குழந்தையாகி விடுகிறோம். வயதென்ன மூப்பென்ன? நாம் எல்லாரும் இயற்கைக்குக் குழந்தைகள்தானே? இயற்கை நமக்கு அம்மாதானே?

உடனேபோய் மேகலாவைப் பார்க்க ஆசை வந்தது அவருக்கு. உலகநாயகி நாகராஜனை சூல் கொண்டிருந்தபோது சுமதி வாரம் ஒருமுறை வந்துவிடுவாள். வீட்டு வேலைக்கு என்று அந்த சமயத்தில் தனியே ஆள் போட்டது அவள்தான். வளைகாப்பு ஏற்பாடுகள் பார்த்தது அவள்தான். பெண்கள் எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள்… என நினைத்துக் கொண்டார். இப்போது, நாகராஜனுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. சுமதிக்குச் சொல்ல வேண்டும், என்று தோன்றியது.

இம்முறை அவர் தனியே பட்டணம் போக வேண்டியிருந்தது. தானே வந்துவிடுவதாகச் சொன்னார். குழந்தை வயிற்றில் மும்முர வளர்ச்சியடையும் வரை மேகலா அவனுடன்தான் இருப்பாள், தவிரவும் அவர்களே இருவரும் மருத்துவர்கள், என்பதால் தாங்களே அதன் சிரமங்களை அறிந்தவர்கள்… அவளை அம்மாவீட்டுக்கு அவன் அனுப்ப மாட்டான், என நினைத்தார். மருமகளுக்கு அவரிடம் பெரிய ஒட்டுதல் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. சரி, நான்னாப்ல ரொம்ப நெருங்கிப் பழகிவிட்டேனா என்ன, என நினைத்துக் கொண்டார். அட நான் அங்கபோயி என் பிள்ளை முகச்சிரிப்பைப் பார்த்துவிட்டு வருவேன். அது வேணாமா, என்றிருந்தது.

மானாமதுரை ஜங்ஷனில் இருந்து ரயில். காலை விடிகிற நேரம் ஊருக்குள் நுழைகிறது. ரயில் நிலையத்துக்கே நாகராஜன் வந்திருந்தான். இப்போது சிறிது சதை போட்டிருந்தான். கார் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார். அவன் உலகம் வேறு என்று நினைத்துக் கொண்டார். இளமையின் உலகம். பரபரப்பான பரபரப்புகளை விரும்பும் உலகம். சந்தோசம் என்பது ஒரு கொந்தளித்த மனநிலையாக அங்கே கொண்டாடப் படுகிறது. தவிரவும் அவனது தொழில் அளவில் அவன் சற்று பரபரப்பாகவே இயங்குகிறவனாய் இருக்கிறான். பகலில் ஓர் மருத்துவமனையில் அவன், மற்றும் அவன் மனைவி வேறு மருத்துவமனையில் வேலை பார்க்கிறார்கள். மாலையில் இருவருக்கும் தனித்தனி கிளினிக் இருந்தது. இரவு வீடு பத்தரை முதல் பதினொன்று கூட ஆகிவிடுகிறது. காலை வெயில் வரும்வரை அவர்கள் தூங்கினார்கள். இடையே அவசர கேசுகள் என்று அழைப்புகள்கூட வரலாம்.

அகண்ட பூமியை அடைத்து வாசலில் வாச்மேன் போட்டு வளாகம். உள்ளே அடுக்கு வீடுகள். நவீன வாழ்க்கை இது. சட்டை போடாமல் அங்கே இருக்க முடியாது. வேலைக்காரர்கள் மத்தியில் அவர்களை அதட்டி வேலைவாங்கி இயங்க வேண்டியிருந்தது. அதிக அளவில் அவனும் மனைவியும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். மேகலா “வாங்க மாமா” என வரவேற்றாள். “நல்ல சேதிம்மா. அதான் வந்து பார்த்திட்டுப் போலாம்னு…” என்று புன்னகை செய்தார். தலையாட்டியபடி புன்னகைத்தாள் மேகலா. தலைமுடியைப் பராமரிக்க முடியாமல் ‘பாப்’ வெட்டிக் கொண்டிருந்தாள். நாகராஜன் போய் அவள் கையைத் தொட்டான். அவள் புரிந்துகொண்டாள். இருவருமாய் அவரைக் கிழக்கு பார்க்க நமஸ்கரித்தார்கள். “சாமி சரணம், மனம் போல நல்லபடியா எல்லாம் முடியணும்,” என அவர் முணுமுணுத்துக் கொண்டார். வேலைக்காரன் ஒருவன் வந்து அவரது பெட்டியை வாங்கிக் கொண்டான். இந்த சூட்கேஸ், இதுவே நாகராஜன் வாங்கித் தந்ததுதான். இங்கே வரும்போது மாத்திரம் பயன்படும்.

சம்பிரதாய நிமிடங்களுக்குப் பிறகு அவர் தனித்து விடப்பட்டார். அவரவர் உலகம், அவரவர் வேகம் அவரவருக்கு. இருவரும் அடுத்த அரைமணியில் வெளியே இறங்க வேண்டியிருந்தது. இது அவர் எதிர்பாராதது அல்ல. அவருக்கு என்ன வேண்டுமானாலும், குடிக்கத் தண்ணீர் என்றாலுங் கூட உடனே கொண்டுவந்து தர வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். பணம் என்பது மனிதனைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறது, என்றிருந்தது ராமையாவுக்கு. ஆனால் தனிமை அவருக்குப் புதியது அல்ல. வாஸ்தவத்தில் உலகு இறந்ததும் அவர் தன்னளவிலேயே தன்னைச் சுருக்கிக் கொண்டவர் தானே?

சிட் அவ்ட் பக்கமாக நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டார். இள வெயில் சுவரில் பெயின்ட் போல தீற்றி யிருந்தது.  சட்டையைக் கழற்றிவிட யோசித்து, ஆனால் கழற்றிக் கொள்ளவில்லை. வெளியே பார்த்தார். சிமென்ட் நடைபாதைகளின் ஓரங்களில் தூங்குமூஞ்சி மரங்கள் நடப் பட்டிருந்தன. அதன் அடியில் சிமென்ட் பெஞ்சுகள். குழந்தைகள் ஏறி இறங்கி விளையாட என இரும்பில் கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக. பெயின்ட் அடித்து வண்ணப் படுத்தி யிருந்தார்கள். ஒரு சறுக்குமரம். காலையில் மாலையில் அந்த அடுக்ககவாசிகள் நடைப் பயிற்சி வெளியே என்று கூடினார்கள். எப்படியும் வெயிலேற அந்த வளாகம் மெல்ல சோம்பல் முறித்து எழுந்து கொண்டது.

காலையிலலேய எழுந்து நடை என்று உலா கிளம்புகிறவர் அவர். அத்தனை சீக்கிரம் இங்கே எழுந்துகொள்ள முடியாது. வீட்டில் சண்டையா, என்று சந்தேகப் படுவார்கள், படுவாக்கள்…. பக்கத்து வீட்டுக்காரனோடு கதவைத் தட்டிப் பேச முடியாது. சட்டை போடாமல் அங்கே நடமாட முடியாது என்பதே பெரிய இம்சை அவருக்கு. அந்த வளாகத்துக்கு உள்ளேயே நீச்சல் குளம் ஒன்றுகூட இருந்தது. அதற்கு தனியே வாச்மேன் உண்டு. எல்லாருக்கும் சம்பளம் தர, பொது மாடிப்படி மின் விளக்கு, தூய்மைப் பணி என்று ஒவ்வொருவர் வகையிலும் தனியே பணம் கட்ட வேண்டும். எளிய ஒரு மனிதனின் வீட்டு வாடகைக்கும் அதிகப் பணம் அது. அதாவது அங்கு வேலைசெய்கிற ஊழியர்களின் வீட்டு வாடகைப் பணத்துக்கும் அதிகம், என நினைத்தார்.

கூட சுமதியையும் கூட்டி வந்திருக்கலாம். நானாவது தம்பி பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டோடு இருக்கிறேன். அவள்பாட்டுக்கு எதிர்வீட்டுக்குப் போய் நாலு வார்ததை பேச ஆரம்பிப்பாள். மனுசாள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டுவிட்டு பேசாமல் கடந்து போவது எப்படி? வீட்டோடு மாடுகட்டி வளர்க்கிறாட்கள் நாம. இவங்களுக்கு பாக்கேட் பால். அது சரி, அது நம்மவூர் நியாயம்டி. இது பட்டணம். இதை யார் அவளுக்குப் புரிய வைப்பா?

மாலை வந்து காரில் அவரை சம்பந்தி வீட்டுக்கும் அழைத்துப் போனான் நாகராஜன். அங்கே பிரியாணி அது இது என்று தடபுடல் பண்ணி விட்டார்கள். அதுவும் இந்த ராத்திரிக்கு இத்தனையா, அப்புறம் தூக்கம் வராது என்றிருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. மேகலா அவளே பரிமாறினாள்.

எப்படா கிளம்பலாம் என்று ஆகிவிட்டது. மனுசாள் என்றில்லை. இப்படி சட்டையை மாட்டிக்கொண்டே இருப்பது, எங்கோ வெளியே கிளம்ப யாருக்கோ காத்திருக்கிறாற் போல அவருக்குத் தோன்றியது. வரும்போதே ரெண்டுநாளில் திரும்பி விடுகிறதாக ரிடர்ன் டிக்கெட் போட்டுவிடச் சொல்லித்தான் வந்தார். மகனுக்கு அவர்கூட இருக்க நேரமும் இல்லை. இருந்தாலும் என்ன பேசிவிடப் போகிறான். செயற்கையுடனான கைகுலுக்கல் கொண்ட இந்த நவீன உலகம் அவன் உலகம். இளமையின் உலகம். முதியவர்களின் உலகம் இயற்கையோடு இயைந்தது. உள்வாங்கிய அலை அது.

ஆனால் ஒரு பெருந் தளத்தில் வாழ்க்கை என்கிற புள்ளியில் எல்லாரும் சந்தித்துக் கொள்ளவே நேர்கிறது… என்றார் அப்பா புன்னகையுடன். அவரை ரயிலேற்றிவிட காரில் வந்தான் அவன். டிரைவரை அனுப்புவான் என எதிர்பார்த்தார். எப்படியோ நேரம் ஒதுக்கி வந்திருக்கிறான். நல்ல பையன்தானப்பா. “அதெப்பிடிப்பா?” என்றான் நாகராஜன். “என் வீடு பாத்தியா தம்பி… பெரிய படல் எடுத்த உள் வீடு. அதுமாதிரிதான் நீங்களும் வாழறீங்க…” என்றார். “வேப்ப மரத்தடில நாங்க கயித்துக் கட்டில்ல ஓய்வெடுப்போம். நீங்க இங்க சிமின்ட் பெஞ்சு போட்டுக்கறீங்க…” என்று ஐயா சிரித்தார். ஒரு புள்ளியில் இப்படி அவனோடு பேசிக் கொள்வது அவருக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. “சட்டையைக் கழற்றிவிட்டு காற்றோட்டமா நான் இருப்பேன் தம்பி. நீங்க சட்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. வேர்க்கும்னு ஏ.சி போட்டுக்கறீங்க…”

வேலைக்காரனோடு சரி சமமாய்ப் பழக அவர்கள் ஒத்துக் கொள்வது இல்லை. உழைப்பு அங்கே மரியாதைக்குரியது அல்ல. அது ஒரு சிட்டிகை தாழ்வான விஷயம். வெள்ளைக்காலர் சனங்கள். வேலைக்காரனைப் பாராட்டாதே, என்கறி அவர்களின் யோசனை கூட நம்ம கிராமத்தில் உண்டு. ஒரு சொலவடை சொல்வார்கள். வயல் வேலைக்காரனுக்கு வயிறு நிறையச் சோறு போட்டுறாதே. அவன் பசியோட இருக்கற வரைதான் உனக்கு நன்றியோட இருப்பான். எப்பிடிச் சொன்னா என்ன, படுத்திக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன, போர்த்திக்கிட்டுப் படுத்தா என்ன?

ரயிலில் அவரால் அந்த தடதடப்புச் சத்தத்தில் தூங்க முடியவில்லை. இடுப்பு பெருத்த பொம்பளை மாதிரி ரயில் இப்படி அப்படி ஆடி நடக்கிறது. எப்படியும் சனங்கள் எங்காவது போய்க்கொண்டே தான் இருக்கிறார்கள். ரயிலில் கூட்டத்துக்குக் குறைவு இல்லை. திரும்ப எப்ப வருவோம் பட்டணத்துக்கு என்று யோசித்தார். தெரியவில்லை. வளைகாப்பு அது இதுன்னு நாம வைக்க வேண்டி வரலாம். அது மாப்ளை வகைச் சடங்கு தானே. சுமதிகிட்டப் பேசணும், என நினைத்தார்.

அரைத் தூக்கமும் குறைத் தூக்கமுமாக இருந்தது ரயிலில். மானாமதுரை இறங்கி பஸ் நிலையத்துக்கு வண்டி வைத்துக் கொள்ளாமல் நடந்தே போனார். வழியில் காய்கறி மார்க்கெட்டின் பச்சை வாசனையை மூச்சு இழுத்து அனுபவித்தபடி போனார். வீடு வர பத்து மணி ஆகிவிட்டது. சட்டையை உரித்துக் கடாசிவிட்டு வயல்பக்கம் குளிக்க என்று கிளம்பினார். அவர் எதிர்பார்த்தபடி நாகராஜனிடம் இருந்து அலைபேசி அழைப்பு இடுப்பில் குறுகுறுத்தது. “வந்து சேந்திட்டேன் தம்பி…” என்றார். “இப்பவா? குளிக்கப் போறேன்… எங்க ஊர் ஸ்விம்மிங் பூலுக்கு…” என்றார். வாயில் என்னவோ பாட்டு புரள ஆரம்பித்தது. ***

2 Replies to “உள்வாங்கும் அலை”

  1. இந்த உள்வாங்கும் அலை, ஒரு பெரும் எழுத்துச்சுனாமியில் கதாபாத்திரங்களை வகை வகையாய் கட்டிச் சுருட்டி வந்து நம் கண்முன் நிறுத்தி,வாழ்க்கையின் தத்துவங்களை பலரசமாகப் பிழிந்து தந்துள்ளது. இந்த எளிமையே … இந்த எழுத்தின் பிரமாண்டம். வழக்கம் போல வார்தைகளில் வர்ணஜாலம். கோலத்தில் எந்த சிக்கும் இல்லாத ரங்கோலியின் அழகு. எளிய மக்களின் கதையை வானளக்கும் அளவிற்கு எழுதும் வித்தையைக் கற்றதோடு நமக்கெல்லாம் கற்பிக்கும் சங்கரநாரயணன் சாருக்கு எமது அடந்த அன்பும், நெகிழ் பாராட்டுகளும்…🌾🙏🏻🐘

  2. ஒரு சிறிய நகரமான கடலூரிலிருந்து சென்னையில் இருக்கும் என் மகன்கள் வீட்டிற்குப் போனால் நான் என்னென்ன நினைப்பேனோ எல்லாவற்ரையும் சங்கரநாராயணன் அற்புதமாக எழுதி உள்ளார். உண்மைதான். அன்கு எழும்பும் அலை நம் உள்ளூரில் வந்துதான் உள்வாங்குகிறது. இருள் டிகாக்‌ஷன் நல்ல உவமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.