143

எஸ். சங்கரநாராயணன்

எப்படியும் இப்படியொரு நாள் வரும் என்று அம்மாவுக்கு… தெரியாமல் என்ன? மகன் வளர்வதில் மகிழ்ச்சியும் அவனைப் பிரியப் போகிற வருத்தமும் இருந்தது அவளிடம். அவனுக்கு எப்போது என்ன தேவை அவளுக்குத் தெரியும். அவன் வெளியே போகும்போது அவன் உடைகளின் நேர்த்தியை அவள் கவனித்துக் கொண்டாள். அவனது உடைகளை அவளே கடையில் தேர்வுசெய்து வாங்கினாள். மகனையிட்டு அவளுக்குப் பெருமை உண்டு. “வண்டில மெதுவாப் போயிட்டு சீக்கிரமா வந்துருடா…” என்று அம்மா முரண்நகையுடன் சொல்வாள்.


பிரசாத் நன்றாகப் படித்தான். கல்லூரி போக என அப்பா அவனுக்கு இருசக்கர வாகனம் வாங்கித் தந்திருந்தார். அவன் கடைசி வருடம் படித்து முடிப்பதற்குள்ளாகவே காம்ப்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து விட்டது. அவனது கிழக்கு திசையைக் காட்டிவிட்டது காம்ப்பஸ். ஆக அம்மா எதிர்பார்த்த அந்தக் கணம், வந்துதான் விட்டது. அப்பா இதைப் பற்றியெல்லாம் பெரிதும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். எதிலும் ரொம்பப் பிடிப்பு வைக்கக் கூடாது. எப்படியும் அது தடுமாற்றங்களைப் பின்னாளில் தந்துவிடும், என்பார் அவர். அன்புதான் சுயநலம். ஆனால் அதுதான் பகிர்வு… என்பது வேடிக்கையான விஷயம் தான்.


மென்பொருள் வல்லுநன். முதலில் பயிற்சி என்று ஹைதராபாத். பிறகு வேலை அநேகமாக வெளியூரில்தான். சென்னையில் கிடைக்க வாய்ப்புகள் அரிது, என்றார்கள். நல்ல வேலை. பையனின் எதிர்காலம் முக்கியம், என்றிருந்தது அப்பாவுக்கு. பிரசாத் விமானமேறி ஹைதராபாத் போனாலும் தினசரி காலையில் இரவில் என்று அம்மாவுடன் பேசினான். அங்க சாப்பாடு எப்பிடிடா, அது இது என்று அம்மா பெரிதும் கவலைப் பட்டாள். அவன் வேலைபாக்கப் போயிருக்கான், சாப்பிடப் போகவில்லை, என்று அம்மாவிடம் அப்பா சொல்வது கேட்டது. அம்மா பதில் சொல்லவில்லை. சரிடா, அப்பா இல்லாத சமயம் பேசறேன், என்று அலைபேசியைத் துண்டித்தாள்.


பிரசாத்துக்கு வேலை பெங்களூரில் வாய்த்தது. ஹைதராபாத்தைவிட இது பக்கம் அம்மா, என்று பிரசாத் சிரித்தான். உங்கம்மாவுக்கு வீட்டில் இருந்தே அலுவலகம் தூரம்… என்று அப்பா புன்னகைத்தார். அவனது வளர்ச்சியைக் கிட்டே இல்லாமல் தூர இருந்தே ரசிக்கிறவராய் அப்பா இருந்தார். சிறகுகளைக் கோதிக்கொண்டு எழுந்து பறவை பறக்கத் துவங்குகிற நேரம் அது. மொக்கு விட்டு ஒரு செடி மணம் வெடிக்கிற நேரம். இதைப் பக்கத்துல இருந்து பார்த்து ரசிக்க வேண்டாமா, என்பது அம்மா கட்சி.
கௌரவம் படத்தில் நீலு பத்தி ஒரு டயலாக் வரும்… பதினஞ்சு வருஷம் முன்னாடி மெட்ராசைச் சுத்திப் பாக்கறேன்னு வந்தீங்க. இன்னும் ஊருக்குப் கிளம்பவே இல்லியே?… அதுக்கு நீலு சொல்வார். நான் என்ன பண்றது. சிட்டிதான் டே டுடே டெவலப் ஆயிண்டே இருக்கே – அப்டிம்பார்.


குழந்தைகள் எப்பவுமே நம் குழந்தைகள். அவர்களது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமுமே கிட்ட இருந்து பார்க்க வேண்டியவைதாம்… என்று அப்பா சிரித்தார். கிண்டல் பண்ணுகிறாரோ என்று தோன்றியது. அன்பே அவர்களிடையே, பெற்றோரிடையே நெருங்கி வரவும் இப்போது சண்டையிடவுமாக அமைந்து விட்டது.
ஒரு அடுக்ககத்தின் மாடிப்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டான் பிரசாத். படுக்கையறையைத் திறந்தால் சிறு சிட் அவ்ட் இருந்தது.அதில் நாற்காலி போட்டு ஸ்டூலில் காலை நீட்டியபடி அமர்ந்து லாப் டாப்பில் எதாவது பார்த்துக் கொண்டிருந்தால் சிலுசிலுவென்று காற்று தலையைக் கோதிவிட்டது. காற்றெனும் அம்மா. எப்பவாவது அப்பாவோ அம்மாவோ அவனைப் பார்க்க என்றே வரக்கூடும் என நினைத்தான் பிரசாத். அப்போது லாட்ஜ் மாதிரி எங்கேனும் தான் தங்கினால் சரியாக வராது என்று தோன்றியது. மின்விசிறி ஹீட்டர் படுக்கை சோபாக்கள்… எல்லாம் இணைந்தே கிடைக்கிற ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தான். வெயில் வந்தாலும் கூட இளஞ்சூட்டில் குளிக்க அவனுக்குப் பிடிக்கும். தினசரி ஒரு பெண் வந்து வீட்டை சுத்தம்செய்து பெருக்கிக் கொடுத்துவிட்டுப் போவாள்.


அம்மாவிடம் தன் செல்போன் மூலமே வீட்டைக் காண்பித்தான் பிரசாத். சில சமயங்களில் பகல் வேலை, சில சமயங்களில் இரவில் கூட வேலை இருந்தது. அதைப் பொறுத்து கம்பெனியில் இருந்து அவனை அழைத்துப் போகக் கார் வந்தது. ஓரிரு வருடம் வேலை பார்த்தபின் சேர்ந்த அந்தப் பணத்தில் மேலே படிக்கலாம் என்று நினைத்திருந்தான். இப்பவே படிக்கலாம், என்றார் அப்பா. தன் சொந்தச் செலவில் மேற்படிப்பு படிக்க அவனுக்கு ஆசை.
பொதுவாக அந்த அடுக்ககத்தில் யாரும் யாருடைய அந்தரங்கத்தையும் தொந்தரவு செய்யாதவர்கள். அவரவர் வீடுகளிலேயே கூட தொலைக்காட்சி சத்தமில்லாமல் ஓடியது. எப்பவாவது கிரிக்கெட் இந்தியா விளையாடினால் மாத்திரம் கதவை மீறி வெளியே உற்சாகம் பீரிடும் இரைச்சல் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து கேட்கும். வயதில் சிறியவர் பெரியவர் மாமிகள், என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாருமே விளையாட்டு சேனல் பார்த்தார்கள். அதிகாலையில் எல்லார் வீட்டு வாசலிலும் ஆங்கில நாளிதழ் கிடந்தது. சிட் அவ்ட்டில் இருந்து வாசலில் கயிறு கட்டி சிறு வாளி தொங்கியது. அதிகாலையில் பால் பாக்கெட் அதில் கிடக்க அவர்கள் கிணற்றில் நீரிறைப்பது போல பாலிறைத்தார்கள்.


சில மாலைகளில் அவன் லிஃப்ட் தட்டி தன் வீடு சேரும்போது எதாவது வீட்டில் இருந்து சாம்பிராணிப் புகை மணத்தது. மிக மிக அமைதியாய் இருந்தது அந்தச் சூழல். அமைதிக்கே ஒரு குளிர்ச்சி வந்து சேர்ந்துகொள்ளும் போல. பளிச்சென்று சுத்தமாய் எப்போதும் புன்னகையுடன் சனங்கள். அந்தச் சூழல் அவனுக்குப் பிடித்திருந்தது. ஓஷோ வாசிக்க அவனுக்குப் பிடிக்கும். இந்த அமைதிக்கு அது அத்தனை சுகமாய் இருந்தது. வாழ்க்கை ஒரு பேறான அனுபவம். அதன் ஒரு துளியும் இழக்க வல்லது அல்ல…
வாசல் கூர்க்காவிடம் சொன்னால் சாப்பிட எதுவும் வெளியே யிருந்து வாங்கி வந்துவிடுவான். மீதிக் காசில் கூர்க்கா சாப்பிடலாம். பிரசாத் வேலைக்குக் கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் கூர்க்கா எழுந்து சல்யூட் அடித்தான். நேரம் இருந்தால் போகும் வழியில் சாப்பிடவும் செய்யலாம். அல்லது அலுவலகம் போய் ‘ஸ்விக்கி’ மூலம் வரவழைத்துக் கொள்வான். குளிரூட்டப்பட்ட அறையில் தன் கேபினில் போய் உட்கார்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாது. அலுவலக சமயம் வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் கூட எடுக்க மாட்டான். ரொம்ப அவசியம் என்றால் குறுஞ்செய்தி அனுப்பி விட்டுக் காத்திருக்க வேண்டி யிருக்கும். பத்து பதினைந்து நிமிடத்தில் அழைப்பான்.


ஒரு காலை நேரத்தில் அவன் பகுதிக்கு எதிர் வீட்டுக்கு ஆட்கள் புதிதாய்க் குடி வந்தார்கள். சிட் அவ்ட் வழியே பார்த்தால் வாயிலில் லாரி ஒன்று வந்து நிற்பதும் கூர்க்காவும் வேறு சில பணியாட்களும் சாமான்களை இறக்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இன்டக்ஷன் ஸ்டவ்வில் காபி மாத்திரம் தினசரி காலையில் அவனே போட்டுக் கொள்வான். காபியை உறிஞ்சியபடியே அவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்றைக்கு மாலையில் அவன் அலுவலகம் விட்டுத் திரும்பும்போது லிப்டில் அவனுடன் கூட வந்தவரை அதுவரை அவன் பார்த்ததில்லை. ஒரு ஹலோவுக்குப் பின் அவர், நான் பார்த்தசாரதி, என்றார். ஆனால் நான் பார்க்கவில்லையே உங்களை, என்று சிரித்தபடி கை குலுக்கினான். எதிர்வீட்டுக்கு அவர்கள்தான் குடி வந்தது என்று தெரிந்தது. அப்பா அம்மா சென்னையில். நான் வேலை நிமித்தம்… என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவர், பார்த்தசாரதி. கனரா வங்கி அதிகாரி. திருச்சிப் பக்கம் இருந்து வேலை இடம் மாறி பெங்களூர் வந்து நாலு வருடம் ஆகிறது. தற்போது கோரமங்கலாவில் இருந்து இங்கே சிவாஜிநகருக்கு மாற்றி வருகிறார்கள். அவர் குடும்பம் என்றால் மாமி. மற்றும் அவளது பெண்… சம்யுக்தா. எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.


சில சமயம் அவன் தன்வீட்டுக் கதவைத் திறக்கும் போது எதிர்வீட்டு, சம்யுக்தா வீட்டு வாசலும் திறந்திருந்தது. வாசலில் இருந்து நேர் எதிரே சுவரில் பெரிய வெங்கடாஜலபதி படம். அதன் அருகில் ஒரு காகிதமலர் பூந்தொட்டி இருந்தது. மேலும் அதைப் பார்க்காமல் வெளியே லிப்டுக்கு வந்தான். சம்யுக்தா… என்று பெயர் மாத்திரம் ஒருதரம் அலையடித்தது மனதில். அவர்கள் குடிவந்து இரண்டு நாட்கள் ஆகி யிருந்தன. இன்னும் அவள் அவன்கண்ணில் தட்டுப் படவில்லை. கல்லூரியில் படிக்கிறாள் என்று தெரிகிறது. வரலாற்றுப் பாடத்தில் அவன் படித்திருக்கிறான். ராணி சம்யுக்தா.


அன்றைக்கு அம்மாவிடம் பேசும்போது எதிர்வீட்டில் புதிதாய் ஆள், என்று சொல்ல நினைத்து ஏனோ தவிர்த்து விட்டான். இதுநாள் வரை இப்படி அம்மாவிடம் பேசுகையில், பேச இப்படி யோசித்தது கிடையாது. தனக்கே அவனைப் பற்றி ஆச்சர்யமாய் இருந்தது. அம்மா சில இளகிய போதுகளில் எதுவும் பாடுவாள். முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவள் அல்ல அவள். என்றாலும் சங்கதிகள் தொண்டைக்குள் புரளும் அவளுக்கு. ஈரநாக்கால் பசுமாடு எஜமானனைத் தடவித் தருவது போல அம்மா காற்றால் தொண்டைக்குள் உரசிக் கொடுக்கிறாள். அவனுக்கு ரொம்ப சங்கீதம் தெரியாது என்றாலும் அம்மா பாடும்போது அத்தனை ரசித்து ருசித்துப் பாடுகிறாள் என்பது தெரியும்.
ஒரு ஞாயிறு, விடுமுறை நாளன்று காலை பதினோரு மணி வாக்கில் எதிர்வீட்டில் இருந்து பாட்டு கேட்டது. இளமையான குரல். ஜோ அச்சுதானந்தா, ஜோ ஜோ முகுந்தா. அந்தப் பாடலை அம்மா பாடிக் கேட்டிருக்கிறான். நீ சின்னக் குழந்தையா இருக்கறபோது உன்னைத் தூங்கவைக்க இந்தப் பாட்டுதான்டா பாடுவேன். (“நான் சின்னக் குழந்தையா இருக்கறபோது உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குடுத்ததைச் சொல்ல வந்தியோன்னு பாத்தேன்.”) தானறியாமல் அப்படியே நின்று சிறிது அந்தப் பாடலைக் கேட்டான். இளமையான குரல். சம்யுக்தாவைக் குரலால் அறிகிறேன். காபி ராகம். இது, என்ன தவம் செய்தனை… பிறகு, ஜகதோ தாரணா… எல்லாம் காபி ராகம். அம்மா அவனை சங்கீதத்தை அறிந்துகொள்ள பயிற்றுவிக்க முயன்றாள். எதாவது ராகம் அடையாளம் தெரிய வேண்டுமானால் அதில் பிரபலமான பாடலை வைத்துக்கொண்டுதான் அவன் சரி பார்த்தான். அவனது ரசனை அவ்வளவே. காபி ராகத்தில் சினிமா பாடல், மே மாதம் படத்தில், என்மேல் விழுந்த மழைத்துளியே. ஆனால் பாடலில் கிளை பிரிந்து மனோதர்மத்துடன் ஸ்வர ஆலாபனை என்று பாடகர் ஆரம்பித்தால், அவனுக்கு யாரோ கையில் முகவரியுடன வீடு தெரியாமல் தெருவில் அலைகிறாப் போலத் தோன்றும். அவனது இசையறிவு அவ்வளவுதான்.


அம்மா முறையாகப் பயின்றவள் இல்லை. கேள்வி ஞானம் தான். தனிமைப் பொழுதுகள் கிடைத்தால் யூ டியூபில் கர்நாடக சங்கீதம் அவளது தேர்வாக இருந்தது. பாலமுரளி பிடிக்கும். கேட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென்று பொழுதின் மந்தாரத்தில் தாழை மடல் அவிழ்ந்தாற் போல குரல் மணம் பரப்புவாள். ஆனால் சம்யுக்தா சங்கீதம் பயின்றவளாட்டம் தோன்றியது. அவள் பாடுகையில் கூடவே தம்புரா மீட்டல் ஒலித்தது. மனித நரம்புகளையே சுண்டி இழுத்ததாக இருந்தது அது. நெடுந்தண்டில் சுற்றிப் படரும் கொடி போல குரல் இழைகிறது. சம்யுக்தாவுக்கு பாட என தினசரி அல்லது வாராந்திர நாட்களில் தனி ஒழுங்கு இருந்திருக்கலாம். அன்றைக்கு வாசலில் இருந்தே பிரசாத் பார்த்தானே உள்ளே பெரிய வெங்கடாஜலபதி படம். ஒருவேளை எஸ் வி பி சி திருப்பதி சேனலில் நாதநீராஞ்சனம் நிகழ்ச்சியில் கூட அவள் பாடியிருப்பாளோ என்று தோன்றியது.


வாசல் கதவு திறந்திருந்தது. எதோ வாசித்துக் கொண்டிருந்தான். அதை நிறுத்திவிட்டு தன்னைப்போல அந்தப் பாடலைக் கேட்டான். சங்கீதம் வாழ்க்கைக்கு வைட்டமின் மாத்திரை என்று தோன்றியது அவனுக்கு. நன்கு அனுபவித்து ரசித்துப் பாடுகிறாள். பெண்ணுக்கு எது பிடிக்குமோ அதைப் பார்த்துப் பார்த்து அளித்து வளர்த்திருக்கிறார்கள், அவள் அப்பாவும் அம்மாவும், என்று தோன்றியது. பிரசாத்? அவனுக்கு என்ன பிடிக்கும்? அவனுக்கு அதைச் சொல்லத் தெரியவில்லை.
ஆனால் இந்த வாழ்க்கையில் அவனுக்கு வெறுப்பு இல்லை. அலுப்பு இல்லை. தினசரி புதிதாய்த் தான் பிறக்கிறாற் போல இருக்கிறது. புதுப் புது அனுபவங்களை வாழ்க்கை தர வல்லதாய் இருக்கிறது. ஒருவேளை வாழ்க்கை வேறு கதியில் அவனை இழுத்து விட்டுவிட்டால்?… என நினைத்தபடியே துண்டால் முகம் துடைத்துக் கொண்டான் பிரசாத். இருக்கட்டும். அது ஒரு நிலை. சூழ்நிலைகளின் வெருட்டுதலில், தான் பலவீனப் பட்டுவிடக் கூடாது. மகிழ்ச்சி ஒரு நிலை, எனில் துக்கம் அதன் மறு துருவம். வாழ்க்கை என்பது என்ன? அது இருகரைகளுடனான நதியோட்டம் அல்லவா?


பிறிதொரு நாளில் ஊரில் எதோ அரசியல் காரணங்களுக்காக கதவடைப்பு. 144. மக்கள் வெளியே வரத் தடை இருந்தது. அவன் அலுவலகம் போகவில்லை. திடீரென்று இப்படி அறிவிப்பு வந்ததில் சாப்பிட என்று எதுவும் வாங்கி வைத்துக்கொள்ளவில்லை. அட ஒருநாள் சாப்பிடாமல் இருப்போமே, அதையும் தான் பார்த்து விடலாம்… என புன்னகையுடன் நினைத்துக்கொண்டான். ஆனால் கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் பார்த்தசாரதி. காலை வணக்கம், சொன்னார். அவர்கள் வீட்டு வாசலில் அவரது மனைவி. கூடவே அந்த… ஆ, சம்யுக்தா. சந்தனச் சிற்பம். அவளை இப்போது தான் முக அளவில் பார்க்கிறான். “காலை வணக்கம் சொல்லவா கதவைத் தட்டினிங்க?” என்று புன்னகை செய்தான் பிரசாத்.


அன்றைக்கு அவர்கள் வீட்டில் சாப்பாடு. அரைமணி நேரத்தில் வருவதாக, நன்றி சொல்லிச் சொன்னான் பிரசாத். மிக இயல்பாக அவர்களுடன் இப்படிப் பழக வாய்த்ததையிட்டு அவனுக்கு மகிழ்ச்சி. அவர்கள் வீட்டில் வீட்டு வேலைகளுக்கு என தனியே வேலைக்காரி இருந்தாள். அவன் உள்ளே வரும்போது வாங்க, என மாமி வரவேற்றாள். மஞ்சள் முகம். காதோரம் நரைத்திருந்தது. அந்த வயதிலும் சுரிதார் அணிந்திருந்தாள். அது விகல்பமாய் இல்லை. அவன் அம்மா, எப்பவும் புடவைதான் இஷ்டம் அவளுக்கு. ஹலோ, என்றாள் சம்யுக்தா. யாரோடயாவது போன்ல பேசறீங்களா?… என்று புன்னகை செய்தான் பிரசாத்.


ஷாம்பு போட்டுக் குளித்த கூந்தலை நாணலைக் காய வைக்கிறாற் போல பரத்தி விட்டிருந்தாள். நீளமான கூந்தல் தான். அடிக்கடி மை தீட்டிக் கொள்வாள் போலத் தெரிந்தது. பெண் என்றால் எல்லாருமே தங்கள் அழகின் சிறப்புகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். வில்லெடுத்த புருவ மத்தியில் பொட்டு. அவளை இவ்வளவு பார்த்திருக்கேறேன், என்பதே அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஆச்சர்யப் படுத்திவிட்டு, பெண்கள் நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட வைத்து விடுகிறார்கள்.


அவர்கள் வீட்டு சோபாவில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். உங்களுக்கு சிரமம் மாமி, என்றான் ஒரு சம்பிரதாய சங்கோஜத்துடன். எங்கம்மா சமையலை, நல்லா யிருக்குன்னு சொல்ல ஆள் கண்டுபிடிச்சிட்டாங்க, என்றாள் சம்யுக்தா. நான் இன்னும் சாப்பிடவே இல்லையே, என்றான் பிரசாத். அவர்கள் வீட்டு பொமரேனியன் சுற்றிச் சுற்றி வந்தது. அதைப் பராமரிப்பதே தனி வேலையாக இருக்கும்.
சம்யுக்தா பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி, மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். பெங்களூரில் பட்டப் படிப்பு என்றால் இரண்டு மேஜர் பாடங்கள் படிக்க வேண்டும். இந்த நாலு வருடத்தில் அவள் கொஞ்சம் கன்னடமும், ஆமாவா, என பெங்களூர்த் தமிழும் பேச ஆரம்பித்திருப்பாள். பளிச்சென்ற பற்களுடன் அவள் சிரிப்பது போதையேற்றியது.

சாப்பிடலாமே என்றதும் மாமி தவிர அவர்கள் மூவரும் மேஜையில் உட்கார்ந்தார்கள். நீ வேணா உட்காரும்மா. நான் பரிமாறறேன்… என்றாள் சம்யுக்தா. யாராவது வீட்டுக்கு வந்துட்டா உடனே அத்தனை வேலையும் பாக்கறாப்ல இவ அடிக்கிற டிராமா இருக்கே, என்றாள் அம்மா. முதல்ல நாங்க சாப்பிட்டு விட்டு நல்லா யிருந்தா மாமி சாப்பிடுவாளோ, என்ற கிண்டலை வாய்க்குள்ளேயே அடக்கினான் பிரசாத். அவன் பக்கத்திலேயே சம்யுக்தா உட்கார்ந்தாள். அவனுக்கு மாமி சோறு பரிமாறியதும் மேசையில் இருந்த சாம்பாரைக் கரண்டியில் எடுத்து அவனுக்கு சம்யுக்தாவே ஊற்றினாள். தேங்க்ஸ், என்றான். தேங்கஸ்னா போதும்னு அர்த்தமா, என்றுகேட்டாள் சம்யுக்தா.
அவளிடம் இருந்து ஒரு மென்மையான யுடிகோலன் குளுமை வந்தது. வெயில் படாமல் வளர்த்திருக்கிறார்கள். நீரூற்றி மரம் வளர்ப்பது போல யுடிகோலன் ஊற்றிப் பெண்ணை வளர்த்திருக்கிறார்கள். இப்போது நிழலியே விட்டுவிட்டு, பிறகு வெளியே காலை நடைப்பயிற்சி என்று பின் வயதுகளில் கிளம்புவார்களாய் இருக்கும். பிரசாத்தின் அம்மாவும் அப்பாவும் காலைகளில் அப்படிக் கிளம்பி காம்பவுண்டுக்குள்ளான புல்வெளியில் நடப்பார்கள். அவர்கள் வீடு பிரம்மாண்டமான கேட்டட் கம்யூனிட்டி உள்ளே ஒரு பிளாக்கில் இருந்தது. சமையல் எப்படி, என்று மாமி புன்னகையுடன் கேட்டாள். நீங்க நம்பி சாப்பிடலாம், என்று அப்போது சொல்ல நினைத்ததை இப்போது சொன்னான் பிரசாத்.


அவன் கை கழுவியதும் துண்டு எடுத்து நீட்டினாள் சம்யுக்தா. வேண்டாம், என்று தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டை எடுத்து துடைத்துக் கொண்டான். நல்லா பாடறே… என்றான் மென்மையாய். அவள் பாட்டை அவன் கேட்டான் என்பது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அப்போது அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. உற்சாகமாக எடுத்துப் பேசினான். வெளியே ஊரடங்கு இருப்பதால் சாப்பாட்டுக்கு அவன் என்ன செய்தான் என்று அவள் கவலைப் பட்டிருக்கலாம். அம்மா ஒரு நிமிஷம்… இவங்க எனக்கு எதிர்வீடு. மிஸ்டர் பார்த்தசாரதி, கனரா பேங்க். இவங்க மாமி… பேர் தெரியாது. ராஜேஸ்வரி, என்றபடி மாமி வாட்சப் அம்மா முகத்துக்கு வணக்கம் சொன்னாள். இவங்க சம்யுக்தா. காலேஜ் தேர்ட் இயர். உன்னைவிட நல்லாப் பாடறாங்க இவங்க. ஹாய், என்றாள் அம்மா. அவர்கள் அவனைச் சாப்பிட அழைத்ததில் அவளுக்கு ரொம்ப திருப்தி. அப்படியே அம்மாவிடம் இருந்து போனை வாங்கி அப்பாவும் பேசினார்.
சம்யுக்தா கல்லூரி போய்வர என்று ட்டூ வீலர் வைத்திருந்தாள். அவள் வீட்டில் இருந்தால் கடைகண்ணி போக என்று மாமி அதை எடுத்துப் போய் வந்தாள். மாமா, காலையில் செய்தித்தாளில் வரும் சுடோகு புதிர்களை, கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் வார்த்தைப் புதிர்களை விடுவிக்கப் பிடிக்கும் அவருக்கு. ஒரு பார்வைக்கு மாமாவை விட மாமி சாமர்த்தியசாலி என்று ஏனோ அவனுக்குப் பட்டது.


ஒரு மாலை அவன் வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான். சம்யுக்தா அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவள் அவன் பக்கமாக நிறுத்தி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இப்ப என்ன, நீ நல்லா வண்டி ஓட்டறேன்னு சொல்லணுமா, என்றான் அவன். அது எனக்கே தெரியும், என்றாள் சம்யுக்தா. சரி. ஒரு நல்ல காபி… என்ன சொல்றே, என்றான் பிரசாத். சரி, என்றாள் சம்யுக்தா. அவளைப் பின்னால் உட்கார வைத்துவிட்டு அவனே வண்டியை ஓட்டினான். அந்த யுடிகோலன் வாசனை… அவள் கூடவே வந்தது. கைப்பையில் எப்பவும் வைத்துக்கொண்டு வெளியே கிளம்பினால் உடனே போட்டுக் கொள்வாளாய் இருக்கும். சம்யுக்தாவின் குதிரை… நல்லா யிருக்கு, என்றான் பிரசாத். சம்யுக்தா நல்லா இல்லையா, எனக் கேட்க நினைத்த கேள்வியை அவள் தவிர்த்தாள். இருவருமே விளையாட்டுப் போல என்றாலும் சுய கவனத்துடன் இயங்குகிறவர்களாய் இருந்தார்கள்.


படிப்புல எப்பிடி, நல்லா பாடறே, என்றான் காபியை உறிஞ்சியபடியே. உனக்கு அதுவும் தெரியும்… இல்லையா, என்றான். படிப்பேன். அதைப் பத்தி என்ன… அப்பாவுக்கு நான் பாடக் கத்துக்கிட்டு கச்சேரி பண்ணணும்னு ரொம்ப ஆசை. சனிக்கிழமையானால் மிஸ்கிட்ட போய்க் கத்துப்பேன். இப்ப வீடு மாத்தி வந்தாச்சி. இந்தப் பக்கம் வேற டீச்சர் தேடணும். உங்க மிஸ்சைப் பாராட்டுகிறேன், என்றான் அமெரிக்கையாக. விளையாட்டு தாண்டி அவளை கௌரவிக்க விரும்பினான் அவன். எங்க அம்மாவும் பாடுவா. அன்னிக்கு நீ பாடினியே… ஜோ அச்சுதானந்தா… அது அம்மாபாடிக் கேட்டிருக்கேன். சில பாடல்கள்… கிரூஷ்ணா நீ பேகனே பாரோ… அதுமாதிரி… அருமையா சாகித்யம், அதாவது லிரிக் அமைஞ்சிருது… அதைப் பாடறதே சுகம், என்றாள் சம்யுக்தா. துன்பம் நேர்கையில்… தேஷ் பாடுவியா? அந்த மூடுக்கு அந்த ராகம்ன்றதே அழகு இல்லையா, என்றான் பிரசாத்.


வீடு திரும்பும்வரை அவனே வண்டியை ஓட்டி வந்தான். தேங்க்ஸ் ஃபார் த காபி, என்றாள். தேங்க்ஸ் ஃபார் த கம்பெனி, என்றவன் புன்னகைத்து, ப்ளெஷர் இஷ் மைன்… என்றான். மைன் ட்டூ, என்றவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். சம்யுக்தா என்றால் நாணல் பற்றை. யுடிகோலன்… என்று மனதில் பதிந்துவிடும் போலிருந்தது.
அடுத்தமுறை மாமி காய்கறி வாங்கிவந்தபோது லிஃப்ட் வரை அவளது சுமையை வாங்கிக் கொண்டான். வேலைக்காரிய அனுப்பறது தானே மாமி, என்று கேட்டான். நாமாப் பாத்து பொறுக்கி வாங்க வேண்டாமா, என்றாள் மாமி. அந்தச் சுமையுடன் ஒரு பேமிலி பாக் ஐஸ் கிரீம் டப்பா இருந்தது. நீயும் வாயேன்… என்று அவனைக் கூப்பிட்டாள் மாமி. உங்க பொண்ணோட பங்கு குறைஞ்சிறப் போறது. நான் வரல்ல, என்றான்.
சம்யுக்தாவின் அருகாமை மிக அருமையாய் இருந்தது. இதமாய் தண்ணென்ற குளிர்ச்சியைப் பரவ விட்டாள் சம்யுக்தா. சங்கீதம் போலவே, பெண்மை ஆணுக்கு வைட்டமின் தான் போல… என நினைத்துக் கொண்டான். அதேபோல பெண்ணுக்கு ஆண், அதுவும்தான். ஒரு ராத்திரி படுக்கையில் படுத்தபடி கண்மூடிக் கிடக்கையில் சம்யுக்தாவை நினைத்துக் கொண்டான். அவளை நான் காதலிக்கிறேனா? நல்ல தோழி அவள். என்னைப்போல நிறைய நல்ல சிநேகிதர்கள் அவளுக்கு இருக்கலாம். காதலுக்கும் தோழமைக்கும் என்ன வித்தியாசம்? எனக்கு அது தெரியவில்லை… என நினைத்துக் கொண்டான்.


ஊரில் இருந்து வந்த செய்தி அதிர்ச்சியளித்தது. அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. திடீரென்று மயங்கி விழுந்து விட்டாள், என்றார்கள். என்ன பிரச்னை தெரியவில்லை. உடனே கார் வைத்துக் கொண்டு ஊருக்கு வந்தான் பிரசாத். படபடவென்று கிளம்பினான். எதிர்வீட்டில் இருந்து சம்யுக்தா, மாமி, மாமா எல்லாருமே வந்து விசாரித்தார்கள். யாரிடமும் அவனுக்குப் பேச வரவில்லை. பதட்டப் படாதே பிரசாத். ஒண்ணும் ஆயிருக்காது… என்றாள் சம்யுக்தா. அவளைப் பார்த்து தலையாட்டினான். கார் வந்தது. வீட்டைப் பூட்டி சாவியை அவர்களிடமே கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.
காரில் போகும்போது அப்பா பேசினார். தலையில் எதோ நரம்பு வெடித்து விட்டதாம். இரத்தம் கசிந்து உறைந்திருக்கிறது. உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும், என்றார். நீ கவலைப்படாதே அப்பா. நான் வந்துக்கிட்டே இருக்கேன்… என்றான் பிரசாத். பேசி முடித்தபின் கண்ணைத் துடைத்துக் கொண்டான். இத்தனை நெருக்கடியான ஒரு சம்பவத்தை இதுவரை அவன் சந்தித்ததே இல்லை. வழியில் எங்காவது நிறுத்தணுமா, என்று டிரைவர் கேட்டான். பிரசாத் வேண்டாம் என்றுவிட்டான். அதற்குள் சம்யுக்தாவிடம் இருந்து போன் வந்தது. எதும் தகவல் கிடைச்சதா, எங்க இருக்கே, என்று கேட்டாள். பி கூல் பிரசாத்… என்றாள். எஸ் எஸ், ஐம் ஆல்ரைட், என்றான். நேரே அப்போலோவுக்கே காரை விடச் சொன்னான்.


அம்மா இறந்து விட்டாள். இது மிகவும் துரிதமாய் நடந்து முடிந்து விட்டது. ஆபரேஷன் வைத்த நேரத்துக்கு முன்னாலேயே அம்மாவுக்கு மோசமாகி விட்டது. உடனே ஆபரேஷன் பண்ணலாம் என்று தியேட்டருக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். அவன் போய் இறங்கியபோது அம்மா உயிர் பிரிந்திருந்தது. சற்றும் நம்ப முடியாதிருந்தது அது. அப்பா கண்ணீருடன் அவனைப் பார்க்க தலையாட்டினார். இப்பதான்… என்றார். என்னாச்சிப்பா… என்றான். கையை மாத்திரம் விரித்தார். அம்மா, என்று கத்தினான். ஷ், என்று யாரோ எச்சரித்தார்கள். உடம்பு தன்னியல்பாய்த் துடித்தது. அவன்மேல் உயிரையே வைத்திருந்த அம்மா. உயிர் பிரிகிற அந்தக் கடைசி நேரத்தில்… அவனைப் பார்க்க அவள் ஆசைப் பட்டிருப்பாள். கட்டாயம் ஆசைப் பட்டிருப்பாள். அது முடியாமல் போனது. அவன் அவள்அருகில் இருக்க முடியாமல் ஆகிவிட்டது.
போன் அடித்தது. சம்யுக்தா. அம்மா… என்றாள். இறந்துட்டாங்க… என்றான். ஓ… என்றாள். நான் அப்பறம் பேசறேன்… என்றான். வைத்து விட்டாள்.


சோக அலை மெல்ல உள்வாங்கி நிகழ் காலத்துக்குள் அவர்கள் வரவே இரண்டு வாரம் ஆகிவிட்டது. யார் யாரோ உறவினர்கள் வந்து போனார்கள். அப்பாதான் பாவம். அவர் இதுநாள் வரை அவளோடு சந்தோஷமாய்ச் சண்டை போட்டுக்கொண்டே அன்பு செலுத்தி வந்தார். அவரை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது. அம்மாவின் பெரிய படம் ஹாலில் மாட்டப்பட்டு மாலை ஆடிக் கொண்டிருக்கிறது. வீட்டைவிட்டுக் கிளம்பவே மனசு இல்லை அவனுக்கு. இன்னும் எத்தனைநாள் இப்படியே இருப்பது… என்றும் திகைப்பாய் இருந்தது. அப்பா அவன் தன்வேலைக்குத் திரும்ப வேண்டும், அவனை நிறுத்துவது முறையல்ல, என நினைத்திருக்க வேண்டும். காரில் அவனை விமானம் ஏற்றிவிட அவர் வந்தார். போனமுறை அவன் கிளம்பியபோது அம்மாவும் வந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை.


லிப்டில் ஏறி எதிர்வீட்டில் சாவி வாங்கிக்கொண்டு தன் வீட்டைத் திறந்தான் பிரசாத். இரவு முற்றியிருந்தது. அதுநாள் வரை தெரியாத வெறுமை அந்த வீட்டில் தெரிந்தது. வாசல் கதவு திறந்தே கிடந்தது. உள்ளே போய் ஹாவென நாற்காலியில் அமர்ந்தான். அப்படியே கண்மூடிக் கொண்டான். அறையில் யாரோ நிற்பதாய்த் தோன்றவே கண்ணைத் திறந்தான். சம்யுக்தா நின்றிருந்தாள். யுடிகோலன். அவனைப் பார்க்கவே அவளுக்கு துக்கமாய் இருந்தது. மொட்டைத் தலையில் முடி சிறிது வளர்ந்திருந்தது. சவரம் செய்யாத தாடி. சாரி பிரசாத். உன் மேல அவங்க உயிரையே வெச்சிருந்தாங்க… என்றாள் சம்யுக்தா. அதை எப்படி அவள் அறிந்து கொண்டாள் தெரியவில்லை.

பெண்கள் சில விஷயங்களைத் தாங்களே சூட்சுமத்தில் கண்டுபிடித்து விடுகிறார்கள். காபி போட்டுக் கொண்டு வந்திருந்தாள். இரவு பதினோரு மணி. இப்போது எதற்கு எப்படி தெரியவில்லை. என்றாலும் அவனுக்கு அது வேண்டியிருந்தது. வாங்கி சூடாய்க் குடித்தான். தொண்டையில் அந்தக் கதகதப்பு இறங்கியது. அவளைப் பார்த்து ஒரு வெறுமையுடன் புன்னகைத்தான். ரொம்ப தேங்கஸ் சம்யுக்தா… என்றான். நீ தைரியமா இருக்கணும் பிரசாத்… என்று அவன் தலையைத் தொட்டு முகத்தைத் தூக்கினாள். அந்தக் கரிசனம் அவனை சிலிர்க்க வைத்தது. என்ன தோன்றியதோ, ஐ லவ் யூ… என்றான். அவள் அதை எதிர்பார்த்தாளா தெரியாது. அவளும் ஒருமாதிரி கொந்தளிப்பில் இருந்தாளோ என்னவோ. சட்டென அவன் அவள்மார்பில் முகம் புதைத்தான். அந்த நடு இடைவெளி, தாய்மையின் இடம் அல்லவா? குழந்தை உறங்கும் இடம் அது. பெண்ணாய்த் தாயாய் அவன் மனதில் அவள் பிரம்மாண்டமாய் உருக் கொண்டிருந்தாள்.

4 Replies to “143”

  1. மிகவும் அற்புதமான கதையோட்டம், படிக்கத்துவங்கியதில் இருந்தே கண்களை வரிகளினூடே கட்டிப்போடும் திறமை. உள்ளீடுகள் நிறைந்த கவிதை போல மனதில் பதிந்து போன சொற்கள்…அப்பப்பா மனதின் குளுமையை சொல்லிமளாது. வார்த்தைகளில் வர்ணஜாலம்.அது மட்டுமில்லை அந்த யுடிகோலன் ஜில்லுக்குட்டியின் சிலுசிலுப்பு. இந்த கதை என் மனதில் பிரமாண்டமாய் உருகொண்டுவிட்டது. அடந்த அன்பும் அகமகிழ்வும் நெகிழ் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சங்கரநாராயணன் சார்…🌾🐘🙏🏻

    1. நன்றி திரு கார்த்திகேயன்… இதற்கு முந்தைய வாரம் திண்ணையில் எழுதிய கதை பற்றியும் திண்ணை இதழில் கடிதம் எழுதி யிருந்தீர்கள்.. பிரியங்களுடன் எஸ். சங்கரநாராயணன்

  2. காதல் இப்படித்தான் பிறக்க வேண்டும். அதற்கான சரியான தருணம் அது. தாய்மையின் இடைவெளி அது. குழந்தை உறங்கும் இடம். வெறும் கதையா இது…கவிதை…இனிமையான கவிதை…மனதைப் பிசைந்தெடுத்த கவிதை. வரி வரியாய் ரசித்தேன். ஈரநாக்கால் பசுமாடு எஜமானனைத் தடவிக் கொடுப்பதுபோல…அம்மா காற்றால் தொண்டையை உரசிக் கொள்கிறாள்….சம்யுக்தா….சந்தனச் சிற்பம்…போதும் இந்த ஒரு வார்த்தை….வெயில் படாமல் வளர்ந்த பெண்….சின்னசின்ன வார்த்தைகளால் வார்த்தெடுத்த அற்புதமான படைப்பு.
    உஷாதீபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.