ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை

அந்த நூலகக் கட்டடம் ஒரு நூற்றாண்டு ஆனது என்பதைத் தெரிவிக்கும். அதைவிடப் பெரிய லண்டன் கடிகாரம் ஒன்று டன் டன் என  தன் இருப்பைக் காட்டிய சப்தத்தில், அவர் சொன்னது என் காதில் விழாததால், “என்ன?” என்று கேட்டேன். ஆறுதலாக என் தோளைப் பற்றி

‘வீட்டிற்கு வாருங்கள் ஒரு தேநீர் சாப்பிடுவோம்’

முதலில் அவர் அழைக்கும்பொழுது அது ஒரு சம்பிரதாயமான ஒன்றுதான் என்று “வருகிறேன்” என சொல்லி வைத்திருந்தேன். சம்பிரதாயம் என்று ஒன்றை பகுத்துப்பார்க்கும் அறிவு அதேபோன்ற ஒன்றைதான் பதிலாகத் தரவும் அனுமதிக்கிறது பார்த்தீர்களா? இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்லி வந்தேன்.

ஆனால் இந்த முறை அந்தக் கேள்வி எனக்கு சம்பிரதாயமாகப் படவில்லை, இதையும் பகுத்துப்பார்க்கும் அறிவுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். பழகிய இத்தனை நாட்களில் அவர் மிகவும் தன்மையான மனிதர் என புரிந்து கொண்டேன்.  என்ன தன்மை என்றால் என்னால் சொல்லத் தெரியாது, பழகிய இத்தனை நாட்களில் இதுவரை அவர் அந்த ஒற்றைக் கேள்வியைத் தவிர வேறு ஏதும் என்னுடன் பேசியது கூட கிடையாது.

ஆனாலும் பல காலமாய் அவரை, சொல்லப்போனால் தினசரி அவரை, அப்படியென்றால் வெள்ளிக்கிழமை நூலகம் விடுமுறை ஆயிற்றே, இப்போது சரியாகச் சொல்கிறேன். அவர் நூலகம் திறந்திருக்கும் நாட்கள் எல்லாம்… (இருங்க முழுதாக சொல்லிவிடுகிறேன்) நான் நூலகம் செல்லும் நாட்களெல்லாம் அவரையும் சந்தித்து வந்தேன்.

பொதுவாக நூலகங்களில் பரிச்சயமான முகத்தைக் கண்டாலே பேச வேண்டிய அவசியம் இருக்காது, நூல்களைப் படிப்பதைக் காட்டிலும் நூலகங்கள் வந்து போக இதனை விட சிறப்பான காரணம் எதுவாக இருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை நூலகம் ஒரு சிறந்த யோக மையம். உங்கள் முன்னாள் காதலி, துரோகமிழைத்த நண்பன், பள்ளி நாட்களில் அடித்துத் துவைத்த ஆசிரியர்கள், ட்ரில் மாஸ்டர்கள், தடுப்பூசி போடுபவர் முக்கியமாக கடன்காரர்களோ அந்த வங்கியின் பிரதிநிதிகளோ வந்தால்கூட  சம்பிரதாய பேச்சுகளையோ அல்லது முறையான பதில்களையோ தரத் தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் சஞ்சாரித்துக் கொண்டிருப்பது நூலகம் எனும் அற்புத உலகில். இவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு மொழிபெயர்ப்பு பிரதிபோல் உருமாறிக்கொள்ள வேண்டியதுதான். கவனம் அப்போது உங்கள் கைகளில் குறைந்த எண்ணிக்கையிலான அல்லது நூலகங்களில் மட்டுமே கிடைக்கின்ற சஞ்சிகையையோ அல்லது கெட்டி அட்டை புத்தகமோ இருத்தல் நலம்.  இது என்ன ஒரு கணக்கு என்கிறீர்களா. பொதுவாக ஒரு அனுமானம்தான்.  இங்கே நூலகங்களுக்காகவே நடத்தப்படும் பதிப்பகங்களென்று சில இருக்கின்றன அவற்றின் நூல்கள் விநோதமான தலைப்புகளில் இருக்கும், சிலவற்றில் சம்பிரதாயமாக இருக்கும். விநோதமான முறையில் தோற்றமளிக்கும் ஒருவர் சம்பிரதாயமான நூல்களை வாசிப்பதும், சம்பிரதாயமான முறையில் தோற்றமளிக்கும் ஒருவர் விநோதமான நூல்களை வாசிப்பதும் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். முதலில் லைப்ரரியன்களுக்கு அப்புறம் என்னைப் போன்ற வழக்கமான வருகையாளர்களுக்கு.

முதன்முதலாக நான் வந்தபோது அப்படித்தான் மாட்டிக்கொண்டேன். சில வருடங்களுக்கு முன்னர் வேலைக்காக நடையாய் நடந்த களைப்பில் இளைப்பாறுதலுக்காக நூலகம் வந்த நான் கற்றை இயற்பியலைக் கையில் எடுத்து வைத்தபடி பக்கங்களை திருப்பிக் கொண்டிருந்தேன். கற்றை இயற்பியலைக் கையில் வைத்திருந்தால் நான் எப்படி கண்டுபிடிக்கப்படுவேன் என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றுவது இயல்புதான். ஆனால் அது ஒரு அசாதாரண புத்தகம். அப்படி என்ன அசாதாரணம்?

கடினமான தலைப்புகள் என்றால் அசாதாரணம் என்று சொல்லிவிடுவாயா என்று என்னைக் கேட்கலாம்? ஆனால் தலைப்பு ஒரு காரணமே அல்ல. அந்த புத்தகம் ஒரு அசாதாரண பதிப்பகத்தால் பதிக்கப்பட்டது.  நாட்டுடமையாக்கப்பட்ட ஒரு சரித்திர நாவலுக்கு பைண்டர் செய்த தவறினால் கற்றை அறிவியல் என்கிற அட்டை வந்துவிட்டது என்றாலும் கரிசனம் கொண்ட நூலகத்துறை அரசாங்கத்தின் நற்சேவகனாக அவற்றை ஏற்றுக்கொண்டது. என்னைப் போல் பல நூறுபேர் நூலகத்திற்கு வந்து வாசிக்காமல் ஓசியில் காற்று வாங்கி இடத்தை, இருக்கைகளைத் தேய்த்துவிட்டுச் செல்கிறோம் என உளவுத்துறையே அரசாங்கத்திடம் சொல்லிவிட்டதால் அவர்களை அடையாளம் காண பப்ளிக் ப்ரைவேட் பார்ட்னர்ஷிப் என்கிற திட்டத்தைப் போலே, சில பதிப்பகங்கள் தாமாக முன்வந்து இப்படியான புத்தகங்களை நூலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. இதனைத் தடுக்க சில புல்லுருவி பதிப்பகங்கள் வழக்குத் தொடுக்க முற்பட்டாலும் அவர்களை புறங்கையால் ஒதுக்கிவிட்டு அரசாங்கம் வலிமையாக இயங்கிக் கொண்டிருந்தது.

இப்படித்தான் ஒருநாள் நான்கூட ஒருவனை அடையாளம் கண்டேன், முகத்தில் தெரிந்த அந்த பட்டணத்து ரேகை, கிராமம் என்றால் அறிந்திராத லட்சணம், ஆனால் கையில் வைத்திருந்த புத்தகமோ “கிணற்றில் அறுந்து விழுந்த வாளியை மீட்பது எப்படி?”. அவனைப் பற்றி புகார் சொல்ல அந்த நூலகரிடம் செல்கையில்தான் ஒருவர் என்னை கவனிப்பது தெரிந்தது,  “ஹெல்லோ” என்றேன்.

‘வீட்டிற்கு வாருங்கள் ஒரு தேநீர் சாப்பிடுவோம்’ என்றார். அதுதான் அவர் என்னிடம் பேசிய முதல் வாக்கியம், இன்றுவரையிலும் அதுவேதான். பின்னர் பல தினங்களில் பலமுறை நான் அவருக்கு “ஹெல்லொ” சொல்வதும் அவர் என்னிடம் ‘வீட்டிற்கு வாருங்கள் ஒரு தேநீர் சாப்பிடுவோம்’ என்று சொல்வதும்.

அதுவும்  நூலகங்களில் சில ஆண்டுகளாக அதிக நூல்களை எடுத்ததாக கையெழுத்திட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால், அந்நூலகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவனாகவும், சில பாதுகாக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து வாசிக்க அனுமதி பெற்றவனாகவும், அவ்விடத்தைப் பாதுகாக்கும் சற்றே பருத்த, ஆனால் சதா வாசித்து வாசித்து தன் உடலில் ஒரு கரிய மையின் வாசனையை அணிந்திருக்கும் அந்த லைப்ரரியனின் அருகில் அமர்பவனாகவும் இருந்து வந்தேன். அதே லைப்ரரியனிடம் என்னைவிட மிகுந்த செல்வாக்கு பெற்றவராகத்தான் அவரும் அருகிலேயே அமர்ந்திருப்பார். இருந்தாலும் எங்கள் சம்பாஷணைகளில் வேறெந்த முன்னேற்றமும் இருந்ததில்லை.

சில சமயம் தோன்றினாலும் வழக்கமான ஹெல்லோவையும்கூட  தவிர்த்துவிடுவேன். அவரோ என்னிடம் பேசுவதற்காக துளியும் மெனக்கெட யத்தனிப்பவராய் ஒருபோதும் எனக்குத் தெரிந்ததில்லை.

இந்த இடத்தில் அவரைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும், வேடிக்கையைப் பாருங்கள் இந்த கதையே அவரைப் பற்றிதான். வெறுமனே நூலின் பக்கங்களைப் புரட்டுவது போல நான் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன செய்ய பல மாதங்களாக இந்த சிறு உரையாடலைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குள் நிகழாமல் இருக்கும்போது அவரைப்பற்றி உங்களுடன் நான் என்ன கதைக்க முடியும்? ஒரு வறட்சியான இண்டெர் டெக்ஸுவல் நாவலை வாசிப்பதைப் போன்றே எங்கள் கதையொன்றிற்கு நீண்ட காலவரிசையும் ஒன்றுமேயில்லாத விவரிப்புகளுமாக பக்கங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் எதிர்பால் மனிதர்களாக நாங்களிருவரும் இருந்திருந்தால், அவரை அவளாக சித்தரிக்கும்போது கன்னக்கதுப்பை, நீண்ட கழுத்தை, திரட்சியான மார்பகங்களை அல்லது/மற்றும் பிருஷ்டங்களை, விரல் நகங்களை, உதட்டுச்சாயங்களை, கண் மையினை, அவிழத் தயாராக இருக்கும் பித்தான்களை என ரசனையோடு மாட்ஸ்டி ப்ளைஸை, லோலிட்டாவை, அம்முவை வர்ணிப்பதை போல ஏதாவது எழுதியிருக்கலாம். ஆனாலும் சில விசயங்கள் இருக்கின்றன.

அவர் வாசிக்கின்ற தமிழ் நூல்களைக் கொண்டு அவர் நிச்சயம் வடக்காக இருக்க முடியாது என்று புரிந்தாலும் நிச்சயம் தமிழரல்ல, ஒருவேளை திராவிடம். இல்லை – இந்த விவரணையை இப்போது விடுவதே சாலச்சிறந்தது என்றாலும் அவர் நிச்சயமாக ஒரு கலப்பினத்தவராக இருக்கக்கூடும் என்று தோன்றியது. ஒருவேளை ஆங்கிலொ இந்தியன்? எதற்கும் விட்டல்ராவின் நூலின் பின்னட்டையைக்கூட பார்த்துக் கொண்டேன். அவரல்ல. அவர் ஆங்கிலோ இந்தியராக இருக்கலாம் என்றாலும், அவரது உடை இந்த நிலத்திற்கு மிகவும் அந்நியப்பட்டது என்பதால் ஒருவேளை பார்ஸி இனத்தவராக இருக்கக்கூடும் என்று தோன்றியது. மீசையும், கிருதாவும், உயரமும், வெள்ளைத்தோலும் (இந்திய வெள்ளை அல்ல) அதனையே உறுதி செய்தது. நான் அதற்கு முன்பு இவரைப் பற்றி இவ்வளவு யோசித்தது கிடையாது.

இதற்கு முன்னரெல்லாம் அவர் வீட்டிற்கு அழைத்த போது, “இல்லை சார் வேலை இருக்கிறது / இன்னொரு நாள் சந்திப்போம் / சார் நிச்சயம் ஒருநாள் வருவேன்” என்றுதான் இருக்கும். பின்னர் ஒருநாள் அவர் அழைக்கையில் “இன்று எந்த வேலையும் இல்லை, வாருங்கள் போவோம்” என்றேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்த முறை சம்பிரதாயமாக அழைக்கவில்லை என்று. என்னை அழைத்துக் கொண்டு நூலகத்தின் பிரதான வாசல்வரை வந்தவர்.

 ‘என் கைத்தடியை மறந்துவிட்டேன்’ என்று என்னை மட்டும் வெளியே நிற்க வைத்துவிட்டு, உள்ளே சென்றார். சற்று நேரத்திலேயே அவர் மீது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது, அவர் அதற்கு முன்னர் கைத்தடி வைத்திருந்தாரா என்று கூட நினைவிலில்லை. அவர் முதியவர் என்று உங்களுக்கு சொன்னேனா? அவர் முதியவரென்றாலும் கைத்தடி தேவைப்படும் அளவுக்கு திடமற்றவர் அல்ல என்பது அவர் நூலகத்திற்கு திரும்ப நுழையும் வேகத்திலேயே புரிந்தது. இருந்தாலும் சற்று நேரமே என்னால் காத்திருக்க முடிந்தது. அவர் எப்படியும் வேறுவாசல் வழியாகக் கிளம்பியிருப்பார் என அனுமானித்திருந்ததால், பெரிதும் ஏமாற்றமடையவில்லை. ஆனாலும் அவர் மீது ஏன் எனக்கு இத்தனை கோபம் என வியப்பாக இருந்தது.

காரணம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்: அவர் என்னையும் உங்களையும் போல சாதாரணமானவரோ, இயல்பானவரோ அல்ல அந்த தோற்றம்தான் ஏமாற்றமற்ற நிலையிலும் கோபம் தலைக்கேற வைத்தது. வேகவேகமாக நூலகத்திற்குள் நுழைந்தேன். நாங்கள் பெரும்பாலும் உட்காரும் அரிய நூல்கள் பகுதியில் நுழைந்தேன். அந்த லைப்ரரியன் என்னை விசித்திரமாகப் பார்த்தார்.

 “அந்தக் கிழவர் வந்தாரா”

என் கோபம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாத அப்பெண். என்னை ஏலத்திற்கு செல்லவிருக்கும் விநோத பதிப்பகங்களின் புத்தகம் ஒன்றை பார்ப்பது போல் ஏளனமாகப் பார்த்தார். அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, நடந்தவற்றைச் சொன்னேன். அவர் அங்கு வரவேயில்லை என்று சொன்னார்.

நான் நினைத்தது போலவே நடந்தது என்று நிம்மதியாகத் திரும்பினேன். அப்பெண்மணி என்னை திரும்ப அழைக்காமல் இருந்தால், கதையும் இத்தோடு முற்று பெற்றிருக்கும். ஆனால் அவர் என்னை ‘ஹெல்லோ மிஸ்டர்’ என்றார். மேலும் ,

‘ஆனால் அவர் கைத்தடியை விட்டுப்போய்ட்டார். அவரைப் பார்த்து நீங்கள் தந்துவிட முடியுமா?’

ஆகவே இன்னொரு அத்தியாயம் எழுத வேண்டியிருந்தது.

2.

இரவெல்லாம் அந்த கைத்தடியை பார்த்தபடியே இருந்தேன். கைத்தடி என்றால் சாதாரணமான வுடன் கேன்   என்று நினைத்து தான் அவரிடமிருந்து வாங்கினேன். அதன் கனம், அது ஒரு அதிக விலை கொடுத்த வாங்கின தடியாக இருக்கும் என்று  தோன்றியதால். அதனை நீங்களே அவர் மறுமுறை வரும்போது அவரிடம் சமர்பித்துவிடுங்கள் என்று சொல்ல முடியவில்லை. அவர் ஒரு பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இயலாது என்று எனக்கே ஒரு பதில் பிறந்தது..

நுட்பமான கலை வேலைப்பாடுகள் கொண்ட அந்த கைத்தடியின் மேல்பகுதி வெள்ளித்தகட்டில் பொருத்தப்பட்டிருந்தது, அந்த தகடின் மேல் முனையில் இருந்த இலச்சினை ஒரு கோப்பையைப் போலும், மேலிருந்து பார்க்கையில் கோப்பையின் குழியில் கங்குகளைப் போன்ற புடைப்புகளும் இருந்தன. மொத்த எடையில் 30 சதவீத பளு அதில் இருந்தது

***

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அதற்கடுத்த நாள் கைத்தடியை எடுத்துக்கொண்டு நூலகத்திற்குள் நுழைந்தேன். அரிய நூல்கள் பகுதிக்கு சென்றால் அங்கே வேறொரு புதிய பெண் நூலகராக இருக்கையில் அமர்ந்திருந்தார். அதேபோல் அந்தக் கிழவரும் வந்திருக்கவில்லை.

நான் அந்த கிழவரைப் பற்றிதான் விசாரிக்க வேண்டும், ஆனால் அந்த நூலகரைப் பற்றி விசாரித்தேன். அவர் பணி இடம்மாற்றம் பெற்று ஊர் சென்றுவிட்டார் என அறிந்தேன். அவர் எங்கே மாற்றலாகியிருக்கிறார் என்பதற்கு பதிலாக சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மேப்பினைச் சுட்டினார். அந்தப் பெண்மணியின் செய்கை விநோதமாக இருந்தது. ஆனால் அதற்கு மேலே அவரோடு பேச எதுவுமில்லை என நகர்ந்துவிட்டேன். ஒரு நடுத்தர வயதில், உருவத்திற்கு பொருத்தமற்ற வாக்கிங் ஸ்டிக்கோடு என்னைப் பார்க்கையில் அவள் என்னைப் பார்த்து சிரித்திருக்க வேண்டுமென என் முதுகுத்தண்டு உணர்ந்தது. அந்த உணர்வு கையில் பற்றியிருக்கும் வெள்ளிக் கைப்பிடியில் இருக்கும் குளிர்மையை ஒத்திருந்தது. ஆனால் நான் பொருட்படுத்தியதெல்லாம், அந்தக் கிழவர் எங்கே?

3.

முன்பைப்போலச் சாவகாசமாக இல்லாமல் கடந்த சில நாட்களாக நூலகம் திறக்கும்போதே முதல் ஆளாகவும், கடைசியாக வெளிவருபவனாகவும் இருந்து வருகிறேன். நான் அந்தக் கிழவர் வாசித்த புத்தகங்களை எல்லாம் நாமும் வாசித்தால் ஏதும் துப்பு கிடைக்குமா என்கிற யோசனையில் அவற்றை கடைபிடித்து வந்தேன். அப்போது நான் கண்டறிந்த விசயங்களில் ஒன்று அசுவாரஸ்யமான மனிதர்கள் என்று நாம் நினைப்பவர்கள் மிகவும்  அற்புதமான வேறு ஓர் உலகைத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். கட்டடக் கலை, ஜோதிடம், உணவு வகைகள், ஓவியங்கள், கல்வெட்டியல் ஆய்வுகள், மொழியியல் ஆய்வுகள் என பல்வேறு துறைகளில் அவர் வாசித்து இருந்தார். கிஞ்சித்தும் இலக்கியங்களை அவர் சீண்டவேயில்லை. அறிவியல் நூல்கள் குறைவாக இருந்தன. சில நூல்களின் பெயரே விசித்திரமாக இருந்தது. எல்லாவற்றையும் குறித்துக்கொண்டே வந்தேன். அதில் பெரும்பாலான புத்தகங்கள் கட்டடக்கலை, ஓவியங்கள், கலை பொருட்கள், சிலைகள் பற்றிய நூல்கள். அவற்றிலும் கட்டடக்கலை குறித்தே திரும்பத்திரும்ப வாசித்திருந்தார். அப்போது எனக்கு ஒன்று தோன்றியது, “அவர் வீட்டிற்கு வா..” என்று சொல்லும் தொனி சற்று வித்தியாசமானது என்று. அவர் வாசிக்கும் நூல்களுக்கும் அவர் வீட்டிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று தோன்றியது. அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று தோன்றியது. நான் புரட்டிய புத்தகங்கள் யாவுமே முழுமையானது இல்லை என்பதுதான். ஆங்காங்கே சில தாள்கள் கிழிக்கப்பட்டு  இருந்தன. கிழிக்கப்படாத தாள்களும் கை வைத்தால் உதிரும்படி மோசமான நிலையில்தான் பாதுகாக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தலைமை நூலகரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். அவர் சிலகாலமாக விடுப்பில் சுற்றுலா சென்றிருந்தார், இல்லையேல் இந்த நூல்களை நோண்டாமல், அவரிடம் நேரே முகவரி கேட்டிருக்கலாம்தான்.

கிழவர் வாசித்த புத்தகங்களிலேயே என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய  புத்தகம் ‘mystic acoustical structures’ என்கிற நூலும், ‘The holy hand, thinks a lot’ என்கிற நூலும்தான். திரும்பத்திரும்ப எடுத்து வாசித்திருக்கிறார் பல பக்கங்களை கிழித்திருக்கிறார். நிறைய கோடுகளை இட்டிருக்கிறார். அவரைப் பற்றி புகார் ஒன்றை கொடுக்கலாமா என்று தோன்றியது.

4.

தலைமை நூலகரிடம், கிழவர் பற்றிய தகவலைச் சொன்னேன். அப்படியெல்லாம் முகவரியைத் தரமுடியாது தீர்க்கமாக மறுத்தார். பணம் தரட்டுமா என்று கேட்டதற்கு என்னைத் திட்டினார். என் கையிலிருந்த அந்த கைத்தடியை காரணமாகச் சொன்னேன்.

 “அவர் ஒருவேளை இறந்துபோனால் கூட, அவர் பொருளை அவரிடம் கொடுப்பதுதானே முறை” என்றேன். மேலும், ‘நியாயமாக அதை நூலகராகிய நீங்கள்தான் செய்ய வேண்டும், நான்தான் வலிய வந்து இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்’ என்று சொல்லும்போது, என்னிடம் அவர் கையை நீட்டினார். அவரிடமே கொடுத்தேன்.

அந்த கைத்தடியை வாங்கியவுடன் அந்த வெள்ளிப்பிடியை தொட்டுப்பார்த்தார்

 ‘ஜில்லென்று இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார், கூடவே முகவரியையும்.

***

உடனேயே கிளம்பி அந்த முகவரி இருக்கும் பகுதிக்கு சென்றேன். நகரின் பெரிய பெரிய புள்ளிகள் வசிக்கும் கடற்கரையோர நிழற்சாலையில் இருக்கின்ற பங்களாதான் தலைமை நூலகர் கொடுத்த முகவரி. அந்த தெருவின் முனையில் நின்றிருந்த அசட்டையான காவலாளியைத் தவிர அங்கே ஒரு மனிதரையும் காணவில்லை. ரொம்ப நேரமாக அந்த முகவரிக்கு வெளியே நின்று அந்த பெரிய மரக்கதவுகளைத் திறக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த கிழவரது கைத்தடி ஒரு தைரியத்தைக் கொடுத்தது. காவலாளி இல்லாத பங்களாவின் பெரிய மரக்கதவை திறக்கும் போது, தீராத சோம்பலை முறிக்கும் ஒரு கொழுத்த நாயொன்றின் ஊளைச்சப்தம் கேட்டது போல இருந்தது.

வர்ணம் பூசாத பழைய பங்களா, ஈரத்தின்பாற் பச்சையம் பூண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் மழை பெய்கிறது அல்லவா. பழைய டச்சுக்கோட்டைக்கு செல்வது போல் பிரம்மாண்டமான  அந்த பங்களா பழைய கண்ணாடி விளக்குகளால் கேட்டிலிருந்து பங்களாவுக்கு வழிகாட்டியது. பாதையிலும் வெட்டப்படாத புற்கள் இருந்தன, எனக்காக காத்துக் கொண்டிருந்தவராய் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி நான் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் பெயரைச் சொன்னேன்.

க்ளாட் டூ மீட் யூ என்று சொல்லி என் பெயரையும் அவர் சொன்னார்.

நான் கொண்டு வந்த அவர் கைத்தடியை அவர் பார்த்ததும், என்னைப் பார்த்து புன்னகைத்தார். தோளில் கைவைத்து,

‘உள்ளே வாருங்கள் ஒரு தேநீர் சாப்பிடுவோம்’ என்றார்

அவன் சன்னமான தன் குரலில் தனது குடும்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். நானோ அந்த வீட்டின் தோற்றத்தை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தேன். கிழிந்து போன சோஃபா, திக்கித்திக்கி எரியும் குண்டு பல்புகள். அழுக்கேறி இருந்த சுவர். பெயர்ந்து போன தரைத்தளம் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாகவும் நாற்றம் மிக்கதாகவும் இருந்தது.  உடைந்து போன பீங்கான் சாமான்கள், பூச்சாடிகள், அழுக்கேறியிருந்த நான்கைந்து காலனி பாணி பெரிய போர்ட்ரெயிட் ஓவியங்கள், சில மினியேச்சர்கள். பலகை இல்லாத ஊஞ்சல் கம்பிகள். செத்துப்போன பூனையின் வாடை வேறு. அந்த வீடு புணரமைக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெரிடேஜ் ரிஸார்ட்டாக மாற்றியிருக்கலாம் என தோன்றியது.

 ‘பயப்படாதீர்கள், இது நான் குடியிருக்கும் பகுதியல்ல, நான் மேலே வசிக்கிறேன்’ என்றார்.

ஒருவேளை மேலே சுத்தமாக இருக்கலாம் என்று நினைத்து அவரையே பின்தொடர்ந்தேன்

அந்த பங்களாவில் நாங்கள் பேசுவது எதிரொலிக்கும்போது கேட்கும் குரல் வேறு யாருடையதைப் போலவோ இருந்தது. சொல்லப்போனால் திகிலூட்டியது. அதனால் அவரிடம் பேச்சு கொடுக்காமலேயே பின்தொடர வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு கேள்வி மட்டும் துருத்திக் கொண்டிருந்தது

“இங்கிருந்தவர்கள் எங்கே போனார்கள்”

‘போனார்கள். அவ்வளவுதான்’.

தொண்டை வறண்டு தாகம் அதிகமானது,

 ‘மேலே செல்ல இந்த அறைக்கு வாருங்கள்’

ஸ்தம்பித்து நின்றேன். மேல்தளத்திற்கு செல்லும் வழி மிகவும் பிரகாசமான விளக்குகள் மேலே எரிந்து கொண்டிருப்பதைக் காட்டியது, நல்ல வாசனையும் கூடவே கமழ்ந்தது. மேலே நிச்சயம் சுத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்றாலும் செல்வதற்கான படிக்கட்டுகள் என்னை பயமுறுத்தின.

நல்ல விலையுயர்ந்தகற்களால் ஆன சுழலும் மாடிப்படிகள் மேல் தளத்தின் கூரையிலிருந்து கட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தது, அதுவும் அது தரையைத் தொடாமல் இரண்டடி உயரத்தில் தொங்கியபடி இருந்தது. அந்த உயரமான கிழவர் எந்த கைத்தடியும் இல்லாமலே கால்களை உயரே வைத்து மேலே ஏறினார். அவர் பருமன் அப்படிகளில் ஏறியதும், அது லேசான ஆட்டத்தைக் காண்பித்தது பெண்டுலம் போல, தான் ஒரு பெரிய மரக்கடிகாரத்தில் நுழைந்தது போன்ற பிரம்மை வந்து போனது. ஆம் கடிகாரம்தான். மேலே நான் சென்று விட்டால், ஒருவேளை இவரைப் போல நிமிட முள்ளாகவோ அல்லது சிறிய முள்ளாகவோ ஆகக்கூடும் என்று தோன்றியது. நான் செத்த பூனை வாடை என்று நினைத்தது கூட ஒரு கிரீஸ் வாடை என இப்போது பகுத்துப்பார்க்க முடிந்தது. மணி ஆறு ஆக சில நிமிடங்களே இருந்தன. நான் எந்தவித அசம்பாவிதத்திற்கும் தயாராக இல்லாதவனாக பதட்டத்தின் ஒத்திசைவாய் துடித்துக் கொண்டிருந்த இதயத்தின் ஒலியை நிதானம் கொள்ள அடக்கிக் கொண்டிருந்தேன்.

‘மேலே வாருங்கள் மிஸ்டர். ஒரு தேநீர் சாப்பிடுவோம்’ படியின் விளிம்பில் நின்றபடி என்னிடம் கையை நீட்டினார்.

“இன்னொரு நாள் கட்டாயம் சாப்பிடுவோம் சார்”

பதிலேதும் கேட்கத் தயாராக இல்லாதவனாய் அங்கிருந்து வெளியேறினேன். திரும்பிவரும் வழியில்தான் கவனித்தேன் நான் இன்னும் அந்த கைத்தடியை கொடுக்கவில்லை என்று.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.