தபால் பெட்டி

ப்ரஜேஷ்வர் மதான்

இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (ब्रजेश्वर मदान); தமிழாக்கம்: கோரா

இன்று எனக்கு ஓய்வு தினம். பொது விடுமுறையும்கூட. இரும்புப் பிடிமானங்களில் சாய்ந்தபடித ரீகலு’க்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறேன் . பல நாள்களுக்குப் பிறகு, இன்று இரும்புக் கிராதிகளுக்கு அருகில் இருந்த  பெரிய சிவப்பு தபால்பெட்டியைப்  பார்த்துக் கொண்டிருக்கிறேன். முன்பொரு நாள்  அவசரமாக ஒரு   கடிதத்தைப்   போஸ்ட் செய்யவேண்டி இங்கே  தபால்பெட்டிக்காகச் சுற்றுமுற்றும் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது இந்தத் தபால்பெட்டி இங்கே இல்லையென நினைவுகூர்கிறேன்.  இரும்புக் கிராதியில் சாய்ந்தவாறு தபால்பெட்டியைப் பார்த்தபோது மறுபடியும் இங்கே அது எப்படி வந்தது என்று யோசிக்கிறேன்.

“முன்பு இங்கே இருந்த தபால்பெட்டியை வேறிடத்துக்குக் கொண்டுபோய் விட்டார்களில்லையா?” என்று அங்கே இருக்கிற ஓர் இளைஞனைக் கேட்கிறேன். அவன் அங்கே நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

 “ஓ, இந்தத் தபால் பெட்டியா!” என்று அந்த சிவப்புத் தூண் பக்கம் பார்வையைச் செலுத்தியவன், ”இதை முதல் தடவையாகப் பார்க்கிறேன்” என்று வியக்கிறான். 

ஓரிடத்தில் உள்ள பொருட்களை  அவை அங்கே இல்லாததுபோல மக்கள் கவனமில்லாமல் எப்படி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தருவது.  இன்று காலையில்தான் என் பக்கத்து வீட்டுக்காரன் என்னைப் பார்த்து, “உன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா?” என்று கேட்டான். யோசித்துப் பாருங்கள், அவனுக்குப் பக்கத்து வீட்டில் நான் பல வருடங்களாக வசித்து வந்திருக்கிறேன். கண்ணுக்குப் புலப்படாத  ஏதோ வஸ்துவாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஒருக்கால்  ஒரு தபால்பெட்டியைப்போல.  என்னைக் கடந்து போகும் பெண்ணோ குழந்தையோ அல்லது ஆணோ, என்னை  ஒரு தபால்பெட்டி எனக் கருதி என் பாக்கெட்டில் லெட்டர் ஒன்றைப் போட்டுவிட்டுப் போயிருந்தாலும் நான் வியப்படைய மாட்டேன்.

சிறு வயதில் என் அண்ணனின் கடிதங்களைத் திருட்டுத்தனமாகப் படித்து வந்தேன். அவனுடைய கடிதங்களை நான் படிக்கையில் யாரும் பார்த்ததில்லையாகையால்,  அது அவனுக்கு எப்படித் தெரிய வந்திருக்கும் என வியந்தேன். இதேபோல், அருகாமையில் வசிக்கும் ஒரு சிறுமி என்னிடம் மூன்றே சட்டைகள் இருப்பதை (நீல சட்டை  ஒன்றும்  மஞ்சள் சட்டை  ஒன்றும்  வெள்ளை சட்டை ஒன்றும்) தெரிந்து கொண்டுவிட்டாள். நானோ இந்த  மூன்று சட்டைகளையும்  சேர்ந்தாற்போல்  ஒருபோதும்  ஒரே சமயம்   அணிந்ததில்லை!

தபால் பெட்டியின் சிவப்பு நிறம் என் கண்ணைத் தாக்குகிறது. நான் சிவப்பு நிற ஆடை ஒருபோதும் உடுப்பதில்லை. அம்மா சில சமயம் சிவப்பு சேலை அணிவதுண்டு. ஆனால் பாட்டி மாற்றமில்லாமல் வெண்ணிற ஆடைகளையே  அணிந்தார்.   வயதான பெண்களிடம் சிவப்புச் சேலைகள் இருக்காதா என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன். ஒருநாள் பாட்டியின் பெட்டியைத் திறந்து அதன் உள்ளடக்கத்தை ஆராய்ந்தேன். அதில் வெண்ணிற ஆடைகளைத் தவிர வேறெதுவும்  இல்லை. வெண்ணிற ஆடைகள் மிகத் தூய்மையானவையாகத் தோற்றமளிக்கின்றன.  அந்நாளில் மக்கள் எவ்வாறு தூய்மையைப் பேணிக் காத்தனர் என்பது அற்புதமான விஷயம். அவர்கள் அவற்றைப் பெட்டியில் பூட்டி வைத்தனர்.       

ஒருநாள் எங்கள் வீட்டிலிருந்த எல்லாப் பெட்டிகளின் பூட்டுகளும் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். எல்லாப் பெட்டிகளின் உட்புறமும் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தன. மற்ற எல்லாப் பொருட்களுடன் பாட்டியின் தூய்மையையும் அந்தத் திருடர்கள் களவாடிச் சென்றிருந்தனர்..

அந்த சிறுமி பல வர்ண குட்டைப் பாவாடைகளை அணிந்தாள்.  மேலெழும்பி வீசும் காற்று தாத்தாவின் குடையை மேல்நோக்கிக் குவித்ததுபோல் ஒருநாள் அவள் குட்டைப்  பாவாடையையும் உயர்த்தக்கூடும் என்று பயந்தேன் . எங்கள்  வீட்டில் ஒரே ஒரு குடைதான் இருந்தது. என் தாத்தா அதை ஊன்றுகோலாகவும் பயன்படுத்தினார். அதை எடுக்காமல் ஒருபோதும் வெளியில் போகமாட்டார். அவர் ஒருபோதும் குடையை மறந்துவிட்டுப் போகாதது  எனக்கு மாறாத ஆச்சரியம்.  அந்தோ! ஒருநாள் அவர் குடையைத் தன்னுடன் எடுத்துச்செல்ல மறந்துபோனார். அன்று போனதுதான்.  அவர் வீடு திரும்பவே இல்லை. அவர் தனக்குச் சொந்தமான மேலும் பல பொருட்களை மறதியாக விட்டுச் சென்றார் என விரைவில் அறிந்து கொண்டேன். உதாரணமாக அவருடைய மூக்குக் கண்ணாடி, சில வெள்ளிக் காசுகள் மற்றும் பாட்டியின் பூட்டிய பெட்டிக்குள் தூய்மையின் ஒளி வளையமளித்துக்  கிடந்த மோதிரங்கள். 

எங்கள் வீட்டில் நடந்த திருட்டுக்குப் பிறகு தாத்தாவின் மூக்குக் கண்ணாடி சந்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எப்படி அந்த மூக்குக் கண்ணாடியால்  பாட்டியின் பெட்டியைவிட்டு நழுவி, நடந்து சந்துக்குள் போகமுடிந்தது என்று சுத்தமாக எனக்குப் புரியவில்லை. வெள்ளிக் காசுகளும் மோதிரங்களும்கூட அவ்வாறே நடந்து சென்று ஏதாவது சந்தில் விழுந்து கிடந்தால் அவற்றை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன்  என் பார்வையைத் தரையில் பதித்தவாறு மற்ற சந்துகளின் முழு நீளத்திற்கும் நடந்தேன். இப்போதுங்கூட நான் வீடு திரும்பும்போதெல்லாம், நான் இல்லாத நேரம்  மேஜை நாற்காலிகளுக்குக் கால் முளைத்திருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் வீட்டிற்குள் நுழைகிறேன்.  அவை  வீட்டைவிட்டு நழுவிச்செல்ல,  தக்க தருணம் பார்த்துக் கதவுக்கு மிக அருகில் வந்து கிடப்பதைப் பார்க்கிறேன்.

தபால்பெட்டி ஏன் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என வியக்கிறேன். அப்பாவின் கண்களும் பெரும்பாலும் இரத்தம் தோய்ந்து  சிவப்பாக இருந்தன. சாலைகளின்  சந்திப்புகளில் சிவப்பு விளக்கு எரியக் கண்டால் எனக்கு அடிக்கடி அவர் கண்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சில சமயம்  சாலையில் போகையில்  நான் அவர் பார்வையில் பட்டுவிடுவேன். அப்போது  எனக்கு  அவரைவிட்டு விலகிப்போவது  மிகக்  கடினமானதாகத் தெரியும்.  

அந்தச் சிறுமிக்குச் சிவப்பு ரோஜாக்கள் பிடிக்கும். அவள் அடிக்கடி கட கடவென்று பூக்களின் பெயர்களை ஒப்புவித்து, பூக்களுக்கு உண்மையிலேயே பெயர்கள் உண்டா என்று என்னை வியக்க வைத்துவிடுவாள்.

என் பக்கத்தில் நிற்கும் பையனின் சட்டையில் பாக்கெட் இல்லை. உண்மையிலேயே இது எனக்கு விளங்காத புதிர்.  ஏதாவது வாங்கினால் எங்கே இருந்து பணத்தை எடுத்துத் தருவான்? அம்மாவும் அத்தையும் வழக்கமாகப் பணத்தைத் தம் உடுப்பில் எங்கேயோ பத்திரமாக முடிந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பெண்ணின் ஆடையிலும் அவிழ்த்து  திறந்துவிட  முடிகிற  முடிச்சு  இருக்கும்.  உடலின் ஒருபாதி ஆடையில்லாமல் நிர்வாணமாகவும்  மறுபாதி முடிச்சு இல்லாத துணி அங்கியால்  போர்த்தியும் நிற்கும்  பெண் சிலையைப்  பார்த்திருக்கிறேன். எந்த நேரமும்  துணி  கிழிந்து, அவள் உடலிலிருந்து கீழே நழுவி அவளை நிர்வாணமாக்கிவிடலாம் என்பது போலிருந்தது,  ஏனெனில்  துணி உடலைவிட்டு விலகி உடம்பை வெளிப்படுத்திவிடாமல் அதைப்   பிடித்துக்கொள்ள அவளுக்குக் கைகள் இல்லை.   

குட்டைப் பாவாடை அணிந்த சிறுமியின்  வீட்டில் அந்த வீனஸ் சிலையைப் பார்த்திருந்தேன். அப்போது நான் முடிச்சு வேலை பற்றியெல்லாம்  அறியாத வெள்ளந்தி. சிலையின் கைகள் குறைபடாது இருந்தபோது அவை ஆப்பிள்களை வைத்துக்கொண்டு  இருந்திருக்கும்  என்பது  கையில்லாத சிலை குறித்த அந்த சிறுமியின் அப்பாவின் ஊகம்.  ஆனால் ஏன் ஆப்பிள்கள்,  மாம்பழங்களாக இருக்கக் கூடாதா?  என் பாட்டியிடம்  கேட்டிருந்த கதைப்படி, மலடியாய் நீடித்திருந்த ஒரு ராணி மாம்பழங்கள் சாப்பிட்டபின் குழந்தை பெற்றெடுத்தாளாம். என் அம்மா எக்கச்சக்கமான மாம்பழங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் வீட்டில்  எப்பொழுது குழந்தை பிறந்தாலும் ,வீட்டு வாசலின் குறுக்காக  மாவிலை மற்றும் நூக்க இலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருப்பதைப் பார்ப்போம். 

வீட்டிலுள்ள எல்லா அலமாரிகளுக்கும் அம்மா வழக்கமாகப் பெரிய பெரிய பூட்டுகளைப் போட்டிருந்தார் என்ற ஞாபகம் வருகிறது. இத்தனை சிறிய சாவிகள் இவ்வளவு பெரிய பூட்டுகளை எப்படித்தான் திறக்கின்றனவோ என்ற ஆச்சரியம் எனக்கு இருந்தது. அடிக்கடி  அந்தச் சாவிகளைத் தேட முயற்சித்தேன். ஆனால் ஒருபோதும் அவை என் கைகளுக்குக் கிட்டவேயில்லை. 

அப்புறம் நான்  சாவியைக்  கண்டுபிடித்திருந்ததைச் சட்டென்று புரிந்துகொண்டேன்.  வெகுகாலம்  பெருநகரில் வாழ்ந்திருந்த பின்பும், அந்த வீட்டையும்  ,அதன் மாவிலை, நூக்க இலைத் தோரணங்களையும்  நான் ஒருகணம்  நினைவுகூர்ந்திருக்கிறேன் என்ற எண்ணமே எனக்குப் பெருமகிழ்ச்சி தந்தது. 

வீடு திரும்பியதும்  முதல் காரியமாக  நான் நினைத்து மகிழ்ந்திருந்தனவற்றைத் தெரிவித்து அப்பாவுக்கு கடிதம் எழுத வேண்டுமெனத் தீர்மானித்தேன்.

எழுதிய கடிதத்தை நாளைக்கு நான்  போஸ்ட் செய்யப் போகும்போது, இதே தபால்பெட்டி முன்பு இருந்த இடத்திலிருந்து நடந்துபோய்க்  கும்பல் சூழ நடுரோட்டில் நின்று இருப்பதாக நான் பார்க்கக்கூடும்.  அல்லது  தபால்பெட்டிக்குப் பதிலாக நடுரோட்டில் நிற்கும்  ரத்தத்தில் நனைந்த மனிதனும் அவன்  பாக்கெட்டிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டு  அடையாளம் காட்டும் ரத்தக்கறை படிந்த கடிதங்களும் என் கண்ணில் படப்போவது கூடச் சாத்தியமே,   

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

26 ஹிந்தி சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து இங்கிலீஷில் மொழிபெயர்த்துத் தொகுத்து வெளிவந்த  Selections in  Modern Hindi Short Stories  என்ற நூலில்  இருந்து எடுத்த சிறுகதை இது. கதைத் தொகுப்பில் இது பரிசு பெற்ற கதை என்ற குறிப்பு இருந்தது.  இதன் ஆசிரியர் ப்ரஜேஷ்வர் மதான் (Brajeshwar Madan) சிறந்த நவீன எழுத்தாளர். ஹிந்தி சினிமாவில் ஈடுபாடு உடையவர். 35 வது தேசிய சினிமாப் பட விருதுகளில் சிறந்த சினிமா விமர்சகர் என்ற விருதைப் பெற்றவர். இவர் எழுதி 1990-ல் வெளிவந்த சினிமா நயா சினிமா என்ற நூல்  E-book ஆகவும் கிடைக்கிறது. 2017-ல் நோயுற்று இறந்தார்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.