சென்சினி

சென்சினியுடனான எனது நட்பு வளர்ந்த விதம் சற்றே வழக்கத்திற்கு மாறானது. அப்போது எனக்கு வயது இருபதோ என்னவோ இருக்கும், ஒரு தேவாலயத்துச் சுண்டெலியை விடவும் ஏழ்மையுற்றவனாக இருந்தேன். நான் ஜிரோனாவின் புறநகர்ப் பகுதியில், என் சகோதரியும் மைத்துனரும் எனக்காக விட்டுச்சென்ற ஒரு பாழடைந்த வீட்டில் வசித்து வந்தேன். மேலும், பார்சிலோனாவில் நான் பார்த்துக் கொண்டிருந்த இரவுக் காவலன் வேலையை அப்போதுதான் இழந்திருந்தேன், இரவில் தூங்காமல் இருக்கும் எனது போக்கைத் தூண்டிப் பெருக்கிய வேலை அது. சொல்லப்போனால் உண்மையில் நண்பர்கள் என்றே எனக்கு யாரும் கிடையாது, நான் செய்ததெல்லாம் எழுதுவதும், நீண்ட நடை செல்வதும்தான். மாலை ஏழு மணிக்கு, விழித்தவுடன் ஜெட்-லாக் போன்றதொரு உணர்வு எழும்: வலுவற்றிருப்பதைப் போன்ற ஒரு விந்தையான உணர்வு, அங்கே இருப்பதைப் போலவும் இல்லாததைப் போலவும், என்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து எப்படியோ விலகி நிற்பதைப் போல.  நான் கோடைக் காலத்தில் சேமித்திருந்தவற்றை வைத்துத்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். நான் மிகக் குறைவாகவே செலவழித்திருந்தாலும், இலையுதிர் காலம் தொடங்கியபோது என்னுடைய சேமிப்பு சுருங்கிவிட்டது. ஒருவேளை அதுதான் என்னை அல்காய் தேசிய இலக்கியப் போட்டியில் கலந்துக்கொள்ளத் தூண்டியிருக்கலாம். தேசம், வசிப்பிடம் போன்றவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் ஸ்பானிய மொழி எழுத்தாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போட்டியில் மொத்தம் மூன்று பிரிவுகள் இருந்தன: கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். பரிசுக்காகக் கவிதையில் நுழையலாம் என்றுதான் முதலில் நினைத்தேன் ஆனால் படைத்ததிலேயே சிறந்ததை சிங்கங்களுடன் (அல்லது கழுதைப் புலிகள்) வளையத்துக்குள் அனுப்புவது பழிக்கு ஆளாகும் செயல் என்று உணர்ந்தேன். பின்னர் கட்டுரையைப் பற்றி யோசித்தேன், ஆனால் அவர்கள் எனக்கு நிபந்தனைகளை அனுப்பியபோதுதான் அக்கட்டுரை ஆல்காயைப் பற்றியும், அதன் சுற்றுச் சூழல், வரலாறு, அதன் சிறந்த மண்ணின் மைந்தர்கள், வருங்காலத்தை வளமாக்கும் வாய்ப்புகள் பற்றியும் இருக்க வேண்டும் என்பதைக் கண்டுகொண்டேன், அவற்றை எதிர்கொள்ள முடியாததால், கதைப் போட்டிக்காக நுழைவதென்று முடிவு செய்தேன். என்னிடமிருந்தவற்றில் சிறந்த ஒன்றின் மூன்று நகல்களை அனுப்பி வைத்தேன் (கைவசம் நிறைய இருந்தன என்று இதற்கு அர்த்தமில்லை), பின்பு காத்திருக்கத் தொடங்கினேன்.

வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டபோது நான் கைவினைப் பொருட்களின் சந்தையில் விற்பனையாளனாய்ப் பணிபுரிந்து கொண்டிருந்தேன், உண்மையிலேயே கைகளால் செய்யப்பட்ட பொருட்களை ஒருவர்கூட விற்பனை செய்யாத இடம் அது. நான் நான்காவது பரிசையும் 10,000 பெசேட்டாக்களையும் வென்றேன், அதை ஆல்காய் நகர் மன்றம் மனசாட்சி வழுவாமல், காலக் கருத்துடன் என்னிடம் செலுத்தியது. அதன் பிறகு விரைவிலேயே வெற்றிபெற்ற கதையுடன் ஆறு இறுதியாளர்களின் கதைகளையும், தாராளமான அச்சுப் பிழைகளுடன் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகத்தை நான் வரப்பெற்றேன். என்னுடைய கதை வெற்றியாளரின் கதையைவிட சிறந்ததாகவே இருந்ததுதான் நிதர்சனம், அதனால் நான் நடுவர்களை பழித்தேன், “வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் உண்மையான ஆச்சரியம் லூயிஸ் ஆண்டோனியோ சென்சினி என்ற பெயர் என் பார்வையில் பட்டபோதுதான் எழுந்தது, அர்ஜெண்டேனிய எழுத்தாளர் அவர். மூன்றாவது பரிசை வென்ற அவரது கதையில், கதை சொல்லி தன் மகன் இறந்துபோன கிராமப்புறத்திற்கு கிளம்பிச் சென்றுவிடுகிறார் அல்லது மகன் நகரத்தில் இறந்துபோனதால் கிராமத்திற்குச் சென்று விடுகிறார் – எதுவென்று சரியாகச் சொல்வது கடினமாக இருந்தது – அது எதுவாக இருந்தாலும், அங்கே கிராமப் புறத்தில், வெற்று சமவெளிகளில், கதை சொல்லியின் மகன் இறந்து கொண்டிருக்கிறான், என்பது மட்டும் தெளிவாக இருந்தது. அது ஒரு மூட்டமருட்சியளிக்கும் இடத்தைப் பற்றிய கதை, பெரிதும் சென்சினியின் பாணியில், அகண்ட புவியியல் பரப்புகள் ஒரு சவப் பெட்டியின் நீள அகலத்திற்குத் திடீரென சுருங்கிவிடும் ஓர் உலகில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், முதல் பரிசுபெற்ற கதையை விடவும் இதுவே சிறந்த கதையாக இருந்தது, இரண்டாவது இடத்தைப் பிடித்ததைக் காட்டிலும்கூட, நான்கு, ஐந்தாவது, ஆறாவது என எதை விடவும். 

சென்சினியின் முகவரியை ஆல்காய் மன்றத்தினரிடம் என்னைக் கேட்கத் தூண்டியது எது என்று தெரியவில்லை. அவர் நாவல்களில் ஒன்றையும், லத்தீன் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் சில சிறு கதைகளையும் வாசித்திருக்கிறேன். அந்நாவல் வாய்மொழி மூலமாகவே விற்பனைச் சுற்று பெரும் வகையிலான புத்தகம். ‘உகார்த்தே’ என்று பெயரிடப்பட்ட இது, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ‘ரியோ தே லா பிளாட்டா’வின் ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரியான ‘ஹூவான் தே உகார்த்தே’ யின் வாழ்க்கைத் தருணங்களைப் பற்றிய ஓர் தொடர். சில (முக்கியமாக ஸ்பானிய) விமர்சகர்கள், ‘காலனிகளின் காஃப்கா’ என்று அதை நிராகரித்திருந்தாலும் படிப்படியாக அந்த நாவல் தனக்கான பாதையைக் கண்டடைந்தது. ஆல்காய் தொகுப்பில் நான் சென்சினியின் பெயரைப் பார்த்தபோது ‘உகார்த்தே’, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் விரவிக்கிடந்த, பெரும்பாலும் ஒருவரையொருவர் நண்பர்களாகவோ அல்லது காரணமின்றி அனிச்சையாகவே கசப்புற்றிருக்கும் எதிரிகளாகவோ அறிந்திருந்த ஒரு சிறிய வாசகர் குழுவைத் தனக்கெனச் சேர்த்திருந்தது. அர்ஜெண்டினாவில், அதோடு நசிந்துபோன சில பதிப்பாளர்களுடன் இணைந்து அவர் வேறு புத்தகங்களையும் வெளியிட்டிருந்தார். மேலும், அவர் இருபதுகளில் பிறந்தவர். கொத்தசார், பியோய் காசாரேஸ், சபாட்டோ, முஹிக்கா லைனேஸ் மற்றும் அத்தலைமுறையின் நன்கு அறியப்பட்ட பிரதிநிதியான (எனக்கு, அப்போது, எல்லா விதத்திலும்) ஹெரால்ட் காண்டி ஆகியோருக்கு அடுத்த, அர்ஜெண்டினாவின் நடுவாந்திர தலைமுறையைச் சேர்ந்தவர். சர்வாதிகார ஆட்சியின்போது, விடேலாவும் அவரது அதரவாளர்களும் அமைத்த சிறப்பு முகாம்களில் ஒன்றில் காணாமல் போனவர் காண்டி. எதையும் அதிகம் பெற்றிராத தலைமுறை அது. (சற்று தளர்வான அர்த்தத்தில் இவ்வார்த்தையை நான் பயன்படுத்துகிறேனாக இருக்கலாம்.) ஆனால் திறத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும் குறைபோனவர்கள் அல்லர்: அவர்கள் ரொபெர்த்தோ அர்ல்ட்டைப் பின்தொடர்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள்; ஒரு விதத்தில் அவர்கள் வரவிருப்பதை முன்னறிவித்தார்கள், அவர்களுக்கே உரிய சோகமும் ஐயங்களும் கொண்டு, அதுவே அவர்களை ஒவ்வொருவராகப் படுகுழிக்கு இட்டுச் சென்றது.

அந்த எழுத்தாளர்களுக்கென, ஒரு கருணைமிக்க இடம் என் மனதில் இருந்தது. கடந்த ஆண்டுகளில் அபெலார்டோ காஸ்டிலோவின் நாடகங்களையும், டேனியல் மொயானோ மற்றும் ரோடோல்போ வால்ஷின் (காண்டி போலவே சர்வாதிகாரத்தின் கீழ் கொல்லப்பட்டவர்) கதைகளையும் படித்திருந்தேன். நான் அவர்களின் படைப்புகளை, அர்ஜெண்டேனிய, மெக்ஸிகன் அல்லது கியூபப் பத்திரிக்கைகளிலோ, மெக்ஸிகோ நகரத்தின் பழைய புத்தகக் கடைகளிலோ கண்ட அத்தனையையும், துண்டு துண்டாக வாசித்திருக்கிறேன்: கள்ளப் பிரதிகளில் ப்யூனோஸ் அயர்ஸிலிருந்து வெளிவந்த படைப்புகளின் தொகுப்புகளின், அனேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஸ்பானிய எழுத்துகளில் சிறந்தவை அவைதான். அவர்கள் அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தனர், ஆயினும் போர்ஹேஸ் அல்லது கொர்த்தசாரின் அந்தஸ்து அவர்களுக்கு கிட்டவில்லை, விரைவிலேயே மானுவல் புய்க் மற்றும் ஓஸ்வால்டோ சொரியானோவால் பின்தள்ளப்பட்டனர். அவர்களின் சுருக்கமான, விவேகமான எழுத்துகள் தடையற்ற உற்சாகப் பெருக்கிற்கு நிலைத்த தலையூற்றாக இருந்தன. சொல்லத் தேவையில்லை, அவர்களில் எனக்கு மிக விருப்பமானவர் சென்சினிதான். மேலும் ஒரு மாகாண இலக்கியப் போட்டியில் – ஒரே நேரத்தில் எனக்குப் பெருமையையும் ஆழ்ந்த மனச்சோர்வையும் கொடுத்த ஒரு தொடர்பு –  சக போட்டியாளர் ஆகிவிட்டதும், அவரைத் தொடர்புகொள்ள என்னைத் தூண்டியது, என்னுடைய மரியாதைகளை செலுத்தவும், அவரது படைப்புகள் எனக்கு எவ்வளவு பொருள்மிக்கது என்று சொல்லவும். 

ஆல்காய் மன்றம், அவருடைய முகவரியைத் தாமதமின்றி எனக்கு அனுப்பியது – அவர் மாட்ரிட்டில் வசித்து வந்தார் – ஒரு நாள் இரவு, இரவு உணவுக்குப் பிறகோ, நொறுக்குத் தீனியோ, சிற்றுண்டிக்குப் பிறகோ, நான் அவருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதினேன், ‘உகார்த்தே’வில் தொடங்கி  பத்திரிக்கைகளில் நான் படித்த அவரது கதைகளைப் பற்றிய உளறல்கள். ஜிரோனாவின் புறநகரில் இருக்கும் எனது வீடு, இந்தப் போட்டி (வெற்றியாளரைக் கேலி செய்திருந்தேன்), அர்ஜெண்டினாவிலும், சிலேவிலும் நிலவும் அரசியல் சூழல் (இரண்டு சர்வாதிகாரமும் திடமாக நிலைபெற்றிருந்தன), வால்ஷின் கதைகள் (சென்சினியோடு சேர்த்து அந்தத் தலைமுறையில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் வால்ஷ்), ஸ்பெயினில் வாழ்வது மற்றும் பொதுவாக வாழ்க்கை குறித்து எழுதியிருந்தேன். என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஒரு வாரமே கழிந்திருந்த நிலையில் எனக்குப் பதில் வந்தது. என் கடிதத்திற்கு நன்றி சொல்லி அவர் தொடங்கியிருந்தார்; அல்காய் மன்றம் அவருக்கும் அத்தொகுப்பை அனுப்பியிருந்ததாகச் சொன்னார். ஆனால், என்னைப் போலல்லாமல் வெற்றிபெற்ற கதையையோ அல்லது மற்ற இறுதியாளர்களின் கதைகளையோ பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் (பிற்பாடு, போகிற போக்கில் ஒரு குறிப்பில், நேரம் இல்லாததால் அன்று, மன திடம் இல்லாததால்தான் என்று ஒப்புக்கொண்டார்), இருப்பினும் என்னுடையதை மட்டும் வாசித்ததாகவும், அது நன்றாக இருந்ததென்றும், “ஒரு முதல் தரக் கதை” என்றும் (நான் அக்கடிதத்தை வைத்திருந்தேன்) கூறிவிட்டு, நான் முதலில் நினைத்ததுபோலத் தொடர்ந்து எழுதுவது குறித்து அல்லாது, போட்டிகளில் தொடர்ந்து கலந்துக் கொள்ள விடாமுயற்சியுடன் செயலாற்றுமாறு வற்புறுத்தினார். தானும் அதையே உத்தேசித்திருப்பதாக எனக்கு உறுதியளித்தார். தற்போது ‘தொடுவானத்தில் தென்படும்’ போட்டிகள் எவை என்றும், அப்படி ஏதாவதொன்று தெரியவந்தாலும் தன்னிடம் தெரிவிக்கும்படி மன்றாடினார். அதற்கு ஈடாக முறையே 25,000 மற்றும் 30,000 பெசெட்டாக்கள் பரிசுத்தொகை அளித்த பிளாசென்சியா மற்றும் எசிஜா போட்டிகளுக்கான நிபந்தனைகளை எனக்கு அனுப்பினார்.  அவர் மாட்ரிட் செய்தித் தாள்களிலோ அல்லது உங்கள் பார்வையைப் பொருத்து, இன்னமும் வெளிவந்து கொண்டிருப்பது குற்றமாகவோ அதிசயமாகவோ தோன்றும் பத்திரிகைகளிலோ, இவற்றைத் தேடிப் பிடித்தார் என்பதை நான் பின்னால் தெரிந்து கொண்டேன். இந்த இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கான அவகாசம் எனக்கு இன்னும் இருந்ததென்றும், ஏதோ கடினமான அர்த்தமற்று  நீளும் முடிவற்ற ஒரு பந்தயத்தின் ஆரம்பக் கோட்டில் நாங்கள் ஜோடியாக நிற்பது போலவும், ‘பேனாவிலிருந்து பேப்பருக்கு, இப்போதே. தட்டிக் கழிக்கக் கூடாது!’ என்றும், சென்சினி தன் கடிதத்தை ஓர் ஆர்வமூட்டும் உற்சாகக் குறிப்புடன் முடித்திருந்தார். என்ன ஒரு விசித்திரமான கடிதம் என்று நான் யோசித்தது நினைவிலிருக்கிறது. ‘உகார்த்தே’வின் சில அத்தியாயங்களை வாசித்ததும் நினைவிலிருக்கிறது. அந்த நேரத்தில்தான் புத்தக விற்பனையாளர்கள் ஜிரோனாவிற்கு வந்து சினிமாக்கள் இருக்கும் சதுக்கத்தில் பெரும்பாலும், விற்பனையாகாத தங்கள் கையிருப்புகளை, பார்வையில்படும் வகையில் கடைகளை அமைத்தனர்: சமீபத்தில் நொடித்துப்போன நிறுவனங்கள் வெளியிட்டிருந்ததில் மீதமுள்ள புத்தகங்கள், இரண்டாம் உலகப் போரின்போது அச்சிடப்பட்ட புத்தகங்கள், காதல் புனைகதைகள் மற்றும் வைல்ட் வெஸ்ட் நாவல்கள், அஞ்சல் அட்டைகளின் திரட்டுகள். ஒரு கடையில் தென்பட்ட சென்சினி கதைகள் கொண்ட புத்தகத்தை வாங்கினேன். புத்தம் புதியதைப்போல இருந்தது – உண்மையில் அது புதியதேதான், வேறு எவராலும் விற்கமுடியாது என்கிறபோது, பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்களிடம் தள்ளிவிடும் தலைப்புகளில் ஒன்று அது, எடுத்துக்கொள்ள ஒரு புத்தகக் கடையோ அல்லது விநியோகஸ்தரோ முன்வராத நிலை. அதற்கடுத்த வாரத்தில் சென்சினியே  உயிர்மூச்சென வாழ்ந்தேன். நான் அவருடைய கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்தேன், ‘உகார்த்தே’வைப் புரட்டினேன், ஏதாவது புதியதாக சுவாரசியம் வேண்டும் போதெல்லாம் இக்கதைகளின் பக்கம் திரும்பினேன். கருப்பொருளும் சூழ்நிலையும் மாறுபட்டிருந்தாலும், களங்கள் பொதுவாக கிராமப்புறங்களாக இருந்தன, மேலும் கதாநாயகர்கள் மேற்கு அர்ஜெண்டீனிய புல்வெளிகளின் புராணப் புகழ்மிக்க குதிரை வீரர்களாக இருந்தனர், அதாவது ஆயுதமேந்திய, பொதுவாக துரதிருஷ்டம் வாய்ந்த நபர்கள் என்று அர்த்தம், தனியர்கள் அல்லது தோழமை கொள்வது பற்றி ஒரு தனித்துவமான கருத்துக்கொண்ட ஆண்கள். ‘உகார்த்தே ஓர் இருண்மையான புத்தகம், நரம்பியல் அறுவை சிகிச்சையின் துல்லியத்துடன் எழுதப்பட்டது, ஆனால் இத்தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும் வெம்மையானவை: கொஞ்சம் கொஞ்சமாக வாசகனிடமிருந்து விலகிச் செல்வதைப்போலத் தோன்றும் (சில சமயம் வாசகர்களையும் தங்களுடனே அழைத்துச் செல்லும்) நிலப்பரப்புகளில் அலையும் தீரமிக்க இலக்கற்ற பாத்திரங்கள் கொண்டவை. 

பிளாசென்சியா போட்டிக்கான பதிவை என்னால் சமர்ப்பிக்க இயலவில்லை, ஆனால் எசிஜாவுக்கு அனுப்பி வைத்தேன். என் கதையின் பிரதிகளை அஞ்சலில் அனுப்பிய பிறகு (அலோசியஸ் ஆக்கர் என்ற புனைப் பெயரில்), எதுவும் செய்யாமல் முடிவுகளுக்காக காத்திருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்பதை உணர்ந்தேன். அதனால் அதிக போட்டிகளில் பங்குகொள்ள முடிவு செய்தேன்; குறைந்தபட்சம் அது சென்சினியின் கோரிக்கைக்கு இணங்கியது போலிருக்கும். அடுத்த சில நாள்களில் நான் ஜிரோனாவிற்கு சென்றபோது, பழைய செய்தித்தாள்களின் நகல்களில் அறிவிப்புகளைத் தேடிப் பல மணி நேரங்களைச் செலவு செய்தேன். சில செய்தித்தாள்கள் சமூகச் செய்திகளுக்கு அடுத்து வரும் பத்தியில் இவற்றை வைத்திருந்தன; மற்றதில், அவை குற்றச் செய்திகளுக்குப் பின்னரும், விளையாட்டுச் செய்திகளுக்கு முன்பாகவும் வந்திருந்தன. சில தீவிரமான பத்திரிக்கைகள் அவற்றை வானிலைக்கும், இரங்கல்களுக்கும் மத்தியில் செருகியிருந்தன. ஆம், அவை ஒருபோதும் புத்தகங்களுக்கான பக்கங்களில் இருந்ததில்லை. என்னுடைய தேடலில் கேடலோனிய அரசாங்கம் வெளியிட்டிருந்த ஒரு பத்திரிகையைக் கண்டுபிடித்தேன்; அது, கல்வி உதவித் தொகைகளுக்கான விளம்பரம், மாணவர் பரிமாற்றங்கள், பணியிடங்கள் மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான விளம்பரங்களோடு சேர்த்து, இலக்கியப் போட்டிகளையும் அறிவித்திருந்தது. பெரும்பாலும் கேட்டலான் மொழியில் எழுதும் கேட்டலான்களுக்கானது, ஆனால் சில விதிவிலக்குகள் இருந்தன. சென்சினியும் நானும் கலந்துக் கொள்ளும் தகுதி பெற்ற மூன்றை விரைவிலேயே கண்டுபிடித்தேன், அவற்றின் கெடு இன்னமும் முடியவில்லை என்பதால், அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 

முன்பைப் போலவே மறு-அஞ்சலில் எனக்குப் பதில் அனுப்பியிருந்தார். சென்சினியின் கடிதம் சுருக்கமாக இருந்தது. எனது சில கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார், முக்கியமாக நான் சமீபத்தில் வாங்கியிருந்த கதைகளின் தொகுப்புப் பற்றி. இணைப்பில் மேலும் மூன்று சிறுகதை போட்டிகளுக்கான விவரங்களின் நகல்கள் இருந்தது, அவற்றில் ஒன்று, தேசிய ரயில்வே நிறுவனத்தால் வழங்கப்படுவது, வெற்றியாளருக்கு ஒரு நேர்த்தியான தொகை, பத்து இறுதியாளர்களுக்குத் தலா 50,000 பெசேட்டாக்கள் (அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால்): கனவு காண்பதற்குப் பரிசுகள் கிடையாது, வெல்ல வேண்டுமெனில் நீ போட்டியில் இருக்க வேண்டும். ஆறு போட்டிகளுக்கும் போதுமான கதைகள் என்னிடம் இல்லை என்று பதில் எழுதினேன், ஆனால் எனது கடிதத்தின் பெரும்பகுதி மற்ற விஷயங்களைப் பற்றியதே (உண்மையில், நான் கொஞ்சம் தன்னிலை மறந்தே எழுதிவிட்டேன்): பயணம், தொலைந்த காதல், வால்ஷ், காண்ட்டி, ஃப்ரான்சிஸ்கோ உரோண்டோ… கெல்மனைப் பற்றி அவரிடம் கேட்டேன், அவருக்கு இவரைத் தெரிந்திருக்க வேண்டும். என் வாழ்க்கைக் கதையின் சுருக்கத்தை அவருக்கு அளித்தேன், பிறகு எப்படியோ நான் எப்போதும் அர்ஜெண்டினியர்களிடம் செய்வதைப்போல டேங்கோ நடனம் மற்றும் மாயப் புதிர் பாதைகளைப் பற்றிய தொன்மங்களுக்கெல்லாம் சென்றுவிட்டேன். (சிலே மக்களும் இதற்கு ஆட்பட்டவர்கள்தான்.)

செனிசினியின் பதில் நேரடியாகவும், விரிவானதாகவும் இருந்தது, குறைந்தபட்சம் எழுத்து, போட்டிகளைப் பொருத்தமட்டிலாவது. மாகாண இலக்கியப் பரிசுகளை வெல்வதற்கான சில பொது உத்திகளை அவர் வகுத்தார். ஒரு தாளில், முன்னும் பின்னும், ஒற்றை இடைவெளியுடன் இருக்க வேண்டும். என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன் என்று எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் பரிசுகள் பெறுவதற்கான ஆசிகளுடன் தொடங்கியிருந்தார் (மெய்யான அக்கறையா, அல்லது ஏளனமா என்பதை என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை), எழுத்தாளர்களின் எளிய ஊதியத்திற்கு இவையே மதிப்புமிக்க துணைச் சேர்க்கைகள். அவர் போட்டிகளின் ஆதரவாளர்களை – உள்ளூர் மன்றங்கள் மற்றும் சேமிப்பு வங்கிகள் – “இலக்கியத்தின் மீது ஐயமற்ற நம்பிக்கைகொண்ட நல்ல மனிதர்கள்” என்றும், “தன்னலமற்ற கடமையுணர்வுள்ள வாசகர்கள்” என்றும் குறிப்பிடுவார். எவ்வாறாயினும், இந்த நிலையற்ற நூற்தொகுப்புகளின் மீது குன்றாத நம்பிக்கை வைத்திருப்பதாகக் (அப்படி இல்லாமலும் இருக்கலாம்) கருதப்படுகின்ற இந்த ‘நல்ல மனிதர்களின்’ புலமையின் மீதான எந்த மயக்கத்தையும் அவர் கொண்டிருக்கவில்லை. எத்தனை முடியுமோ அத்தனை போட்டிகளிலும் நான் கலந்து கொள்ளவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார், இருப்பினும் ஒரே கதையை, ஒரே நேரத்தில் தீர்ப்பளிக்கப்படும் மூன்று போட்டிகளில் நான் கலந்து கொள்வதாக இருந்தால், அக்கதையின் தலைப்பை மாற்றுவதற்கான முன்னெச்சரிக்கையையும் அவர் பரிந்துரைத்தார். ‘விடியலின் போது’ என்ற அவரது கதையை உதாரணமாக சுட்டியிருந்தார், நான் அறிந்திராத கதை அது, ஒரு புதிய தடுப்பூசியின் விளைவுகளை பரிசோதிக்கப் பயன்படுத்தும் ‘கின்னி’ பன்றியைப் போல அவர் இக்கதையைத் தனது முயற்சியைப் பரிசோதிக்கப் பயன்படுத்தியிருந்தார். மிகப் பெரிய பரிசுகொண்ட முதல் போட்டியில், “விடியலின் போது”, “விடியலின் போது” என்றே அனுப்பப்பட்டது; இரண்டாவதில், அவர் தலைப்பை “குதிரை வீரர்கள்’ என்று மாற்றியிருந்தார்; மூன்றாவதில், அது “இரண்டாவது புல்வெளி” என்று அழைக்கப்பட்டது; கடைசி போட்டிக்கு “கவலைகள் இல்லை”. இந்த நான்கு போட்டிகளில் அக்கதை இரண்டாவதிலும் நான்காவதிலும் வெற்றி பெற்றது, அப்பரிசுத் தொகை கொண்டு அவரால் ஒன்றரை மாத வீட்டு வாடகையைச் செலுத்த முடிந்தது (மாட்ரிட்டில் வாடகைகள் கூரையை முட்டியெறிந்து உயர்ந்துக் கொண்டிருந்தன). “குதிரை வீரர்கள்” “கவலைகள் இல்லை” இவை இரண்டும் வெவ்வேறு தலைப்புகள் கொண்ட ஒரே கதை என்பதை யாரும் உணரவில்லைதான், இருப்பினும் நீதிபதிகளில் ஒருவர் மற்றொரு போட்டியில் அதை ஏற்கனெவே படித்திருக்கக்கூடும் என்ற ஆபத்து எப்போதும் இருந்தது (ஸ்பெயினில் இலக்கியப் பரிசுகளுக்கு தீர்ப்பளிக்கும் தனிச் சிறப்புடைய பணியைச் சிறிய கவிஞர்களும், நாவலாசிரியர்களும், முன்னாள் வெற்றியாளர்களும் கொண்ட ஒரு சிறு குழு பிடிவாதமாக முழு அதிகாரத்துடன் கைப்பற்றியிருந்தது). இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு. கடிதத்தின் இறுதியில் அவர் சொல்லியிருந்தார், நிறைவான ஓர் உலகில் நிச்சயமாக அவர் வேறு வகையாகத் தொழிற்பட்டு, உதாரணமாக ப்யூனோஸ் அய்ர்ஸில் வாழ்ந்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருந்திருப்பார், ஆனால் நிலவும் சூழலில் அவர் எப்படியாவது வயிற்றுப் பிழைப்பிற்காகச் சம்பாதித்தாக வேண்டும் (அர்ஜெண்டினாவில் இப்படிச் சொல்வார்களா என்று தெரியவில்லை, ஆனால் சிலேயில் சொல்வோம்) மேலும், தற்போதைக்குப் போட்டிகள்தான் அதைத் தேற்றுவதற்கு உதவுகின்றன. இது ஸ்பானிய புவியியலில் ஒரு பாடம் போன்றது என்று எழுதியிருந்தார். இறுதியில் அல்லது பிற்சேர்க்கையில், அவர் அறிவித்திருந்தார்: நான் அறுபதை எட்டப் போகிறேன் ஆனால் இருபத்தைந்து வயது ஆனது போலத்தான் உணர்கிறேன். முதலில் என்னை இது மிகவும் வருந்தச் செய்தது, ஆனால் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை வாசித்தபோதுதான் புலப்பட்டது என்னை வினவுவதற்கான ஓர் உத்தி இது என்று: உன் வயதென்ன, தம்பி? அவருக்கு உடனடியாகப் பதிலளித்தது நினைவிலிருக்கிறது. நான் அவரிடம் எனக்கு இருபத்தி எட்டு என்று பதிலளித்தேன், அவரை விட எனக்கு மூன்று வயது அதிகம். அன்று காலை நான் மீண்டும் உற்சாகத்துடன் இருந்தேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், அதிக உயிர்ப்புடன் இருந்தேன், ஏதோ ஊற்றெடுக்கும் ஊக்கம் என் நினைவுகளையும், நகைச்சுவை உணர்வினையும் மீட்டுயிர்த்ததைப் போல. 

நான் சென்சினியின் அறிவுரையைப் பின்பற்றி முழுநேரப் பரிசு வேட்டுவனாக மாறவில்லை என்றாலும், நானும், அவரும் சமீபத்தில் கண்டுபிடித்த போட்டிகளில் கலந்துக்கொண்டேன். வெற்றி பெறவில்லை. டான் பெனிட்டாவிலும், எசிஜாவிலும் கலந்துகொண்டு சென்சினி இரட்டை வெற்றிகளைப் பறித்தார், ‘கொடுவாள்’ என்று முதலில் பெயரிடப்பட்ட அக்கதையை, எசிஜாவிற்காக ‘இரு கூர்வாள்’ என்றும் டான் பெனிட்டாவிற்காக ‘ஆழமான வெட்டு’ என்றும் பெயர் மாற்றியிருந்தார். ரயில்வே அறிவித்திருந்த போட்டியிலும் இறுதியாளர்களில் ஒருவரானார். பணத் தொகையும், அதன்கூடவே ஸ்பானீஷ் ரயில்களில் ஒரு வருடம் இலவசமாகப் பயணிப்பதற்கான டிக்கெட்டையும் வென்றார். 

கொஞ்சம் கொஞ்சமாக நான் அவரைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். அவர் மாட்ரீடில் உள்ள ஒரு குடியிருப்பில் தன் மனைவியுடனும், பதினேழு வயதான தம் மகள் மிராண்டாவுடனும் வாழ்ந்து வந்தார். தன்னுடைய முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகனைப் பெற்றிருந்தார், அவன் லத்தீன் அமெரிக்காவில் எங்கேயோ மறைவாக இருந்தான் அல்லது அப்படித்தான் அவர் நம்ப விரும்பினார். அவர் மகனின் பெயர் ‘க்ரெகாரியோ’; பத்திரிகையாளனாக இருந்த அவனுக்கு முப்பத்தி ஐந்து வயது. சில நேரங்களில் சென்சினி, க்ரெகாரியோவின் இருப்பிடத்தை உறுதிசெய்வதற்காக மனித உரிமைக் கழகங்களிடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் தாம் மேற்கொள்ளும் விசாரணைகளைப் பற்றிச் சொல்லுவார். அவர் இது குறித்து எழுதத் தொடங்கினால், அவருடைய உரைநடை மிக கனமிக்கதாகவும், சலிப்பூட்டுவதாகவும் மாறிவிடும், ஏதோ அதிகாரத்தின் புதிர் வலையை விவரிப்பதன் மூலமாகத் தன்னை ஆட்டுவிக்கும் பேய்களை விரட்ட முயற்சிப்பவர் போல. அவனுக்கு ஐந்து வயது ஆனதிலிருந்தே, அப்போது அவன் ஒரு குழந்தை, தான் க்ரெகாரியோவுடன் சேர்ந்து வாழ்ந்ததேயில்லை என்று ஒரு முறை கூறினார். அவர் விரிவாகச் சொல்லவில்லை, நான் ஐந்து வயதுச் சிறுவனையும், சென்சினி செய்தித்தாள் அலுவலகத்தில் தட்டச்சு செய்வதையும் கற்பனை செய்துகொண்டேன். நான் அச்சிறுவனின் பெயரைப் பற்றிய ஆச்சரியம் கொண்டிருந்தேன். அது ‘க்ரெகார் சாம்ஸாவிற்கு’ தன்னுணர்வின்றி செய்யப்பட்ட மரியாதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன். சென்சினியிடம் ஒருபோதும் இதைக் குறிப்பிட்டுக் கேட்டதில்லை என்பது உண்மைதான். மிராண்டாவைப் பற்றி அவர் பேசத் தொடங்கும்போதெல்லாம் அவர் உற்சாகமானார். மிராண்டா இளமையானவள், இவ்வுலகை கைக்கொள்ளத் தயாராக இருந்தாள், தனியாத ஆர்வமுடையவள், அன்பானவள், அழகானவளும்கூட. அவள் பார்ப்பதற்கு க்ரெகாரியாவைப் போல இருப்பாள், ஆனால் அவள் ஒரு பெண் (அது தெரிந்ததுதானே) மற்றும் என் மகனின் துன்பங்களை அனுபவித்திராதவள்.

படிப்படியாக சென்சினியின் கடிதங்கள் நீண்டு வளரத் தொடங்கின. மாட்ரிட்டில் அவர் வசித்த மாவட்டம் நசிவுற்றிருந்தது; அவருடைய குடியிருப்பு இரண்டு படுக்கையறைகளும், உணவறையாகவும் பயன்படும் ஒரு பொது அறையும், ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறையும் கொண்டிருந்தது. முதலில் என்னைவிட அவருடைய இடம் சிறியதாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்; பிறகு வெட்கமடைந்தேன். இது நியாயமற்றதாகத் தோன்றியது. இரவுகளில் ‘அவருடைய மனைவியும், மகளும் உறங்கிய பிறகு’ உணவறையில்தான் சென்சினி எழுதுவார், அவர் அதிகம் புகை பிடிப்பவர். பதிப்பாளருக்கு அவர் ஏதோ சில வேலைகள் செய்வதன் மூலமாகவும் (அவர் மொழிபெயர்ப்புகளைத் திருத்தினார் என்று எண்ணுகிறேன்), மாகாண இலக்கியப் போட்டிகளில் போர்புரியத் தன் கதைகளை அனுப்பியும் சம்பாத்தியம் பெற்று வந்தார். அவ்வப்போது அவரது பல புத்தகங்களில் ஒன்றிற்கு மட்டும் புனைவுரிமைத் தொகைக்கான காசோலையைப் பெற்று வந்தார், ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் நாள்பட்ட மறதிக்கு ஆளானார்கள் அல்லது திவாலானார்கள். தொடர்ந்து நன்றாக விற்பனையான அவரது ஒரே புத்தகம், பார்ஸிலோனாவிலுள்ள ஒரு நிறுவனம் பதிப்பித்த “உகார்த்தே” தான். அவர் வறுமையில் வாழ்கிறார் என்பதை உணர எனக்கு நீண்ட காலம் ஆகவில்லை: நிராதரவான நிலையன்று, ஆனால் கஷ்ட காலங்களில் ஒரு நடுத்தரக் குடும்பம் சந்திக்கும் உயர் வகுப்புக்குரிய வறுமை. அவரது மனைவி (அவர் பெயர் கார்மேலா ஸட்மேன், அது ஒரு தனிக் கதை) பதிப்பாளர்களுக்குச் சுயாதீனமாகச் சில வேலைகளைச் செய்து கொடுத்தார் மற்றும் அவர் அவ்வப்போது துப்புரவு வேலைகளை எடுத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருந்தாலும், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் ஹீப்ரூ வகுப்புகளும் எடுத்தார். மகள் தன்னுடைய படிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார், விரைவிலேயே பல்கலைக்கழகத்திற்க்ச் செல்லவிருந்தார். நான் என்னுடைய கடிதங்கள் ஒன்றில் மிராண்டாவும் எழுத்தாளராக விரும்புகிறாரா என்று சென்சினியிடம் கேட்டேன். அவர் பதில் எழுதினார்: இல்லை, கடவுள் புண்ணியத்தில் அவள் மருத்துவம் படிக்கப் போகிறாள். 

ஒரு நாள் இரவு, அவர் குடும்பப் புகைப்படம் கேட்டு அவருக்கு எழுதினேன். கடிதத்தை அஞ்சலிட்ட பிறகுதான், மிராண்டா பார்க்க எப்படி இருப்பாள் என்பதையே உண்மையில் அறிய விரும்பினேன் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு வாரம் கழித்து நான் ஒரு புகைப்படம் வரப்பெற்றேன், சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிக ஓய்வான சூழலில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது, ஒரு வயதான ஆணும், ஒரு மத்திய வயது பெண்மணியும், அவர்களுக்கு அடுத்து உயரமான, மெலிந்த, நேரான தலை மயிரும், மிகப் பருத்த மார்பகங்களும் கொண்ட ஒரு பதின்ம வயதுப் பெண். வயதானவர் மகிழ்வாகச் சிரித்துக் கொண்டிருந்தார், நடு வயதுப் பெண் தன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார், ஏதோ அவளுடன் பேசிக் கொண்டிருப்பதைப்போல, மிராண்டா புகைப்படக்காரரை ஒரு தீவிர பாவத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள், அது என்னை ஒருசேரப் பரிவுகொள்ளவும், தொந்தரவும் செய்தது. சென்சினி வேறொரு புகைப்படத்தின் நகலை எனக்கு அனுப்பியிருந்தார், கிட்டத்தட்ட என் வயதையுடைய, மிக மெலிந்த உதடுகளும், எடுப்பான கன்ன எலும்புகளும், அகன்ற நெற்றியுமெனத் தெளிவான முகக் கூறுகள் கொண்ட ஓர் இளைஞனை அது காட்டியது. அவன் வலிமையான உடற்கட்டுடன் இருந்தான், உயரமானவனாகவும் இருக்கக்கூடும், தன்னம்பிக்கையுடனும், சற்றுப் பொறுமையற்றதனத்துடனும் கேமராவை பார்த்துக் கொண்டிருந்தான். (அது ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்). அது க்ரெகாரியோ சென்சினி, இருபத்தியிரண்டு வயதில், காணாமல் போவதற்கு முன்பு. உண்மையில் என்னைவிட சற்று இளையவன், ஆனால் ஓர் அனுபவசாலியின் தோரணை இருப்பதால் அவன் வயதானவனாகத் தோற்றமளித்தான்.

அப்புகைப்படமும், புகைப்பட நகலும் என் மேசைமீது நீண்ட காலம் உயிர்த்திருந்தன. நான் அங்கேயே அமர்ந்து அவைகளை வெறித்துக் கொண்டிருப்பேன் அல்லது அவற்றை என் படுக்கையறைக்குக் கொண்டுசென்று நான் தூங்கும்வரை பார்த்துக் கொண்டிருப்பேன். சென்சினி என்னுடைய புகைப்படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார், சமீபத்தில் எடுத்தது எதுவும் என்னிடம் இல்லை. அதனால், இரயில் நிலையத்திலிருந்த புகைப்படச் சாவடிக்கு செல்ல முடிவெடுத்தேன், அந்த நேரத்தில் மொத்த ஜிரோனாவுக்கென இருந்த ஒரே புகைப்படச் சாவடி அதுதான். ஆனால், புகைப்படங்கள் வெளிவந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் மெலிந்து அழுக்கடைந்த தலை மயிருடன் அசிங்கமாக இருப்பதாகத் தோன்றியது. அதனால் அவை எதையையும் அவர்களுக்கு அனுப்பாமல் தாமதித்தேன்,  மீண்டும் புகைப்பட சாவடிக்குச் சென்று மேலும் பணம் செலவழித்தேன். இறுதியில்  தோராயமாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓர் அஞ்சலட்டையுடன் உறைக்குள் வைத்து அவருக்கு அனுப்பினேன். பதில் வருவதற்குச் சற்றுக் காலம் பிடித்தது. இதற்கிடையில் நான் மிக நீண்ட, மிக மோசமான ஒரு கவிதை எழுதியது என் ஞாபகத்தில் இருக்கிறது. வேறுபட்டிருந்த முகங்களும் குரல்களுமாக அது நிறைந்திருப்பதாக முதலில் தோன்றினாலும், அவையனைத்துமே மிராண்டா சென்சினிக்கு உரிதானவை என்பதை நான் கவிதையின் மூலமாக இறுதியாக கண்டடைந்தபோது, நான்தான் உன் தந்தையின் கடிதத் தொடர்பாளன், நண்பன் என்று என்னால் அவளிடம் சொல்ல முடிந்ததுபோது, பின்னால் திரும்பி அவள் சகோதரன் க்ரெகாரியோ சாம்ஸாவைத் தேடி ஓடிச் சென்றாள். லத்தீன் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு ஆட்பட்ட நிழற் திரள் கண்ணுக்குப் புலப்படாது, பெயரும்  மங்கிய நீண்ட இடைவழியின் முடிவில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் க்ரெகாரியோ சாம்ஸாவின் கண்களைத் தேடி.

பதில் வந்தபோது அது நீண்டதாகவும், தோழமையுடனும் இருந்தது. என் புகைப்படத்தின் மீதான சென்சினி மற்றும் கார்மெல்லாவின் தீர்ப்பு சாதகமானதாக இருந்தது: கற்பனை செய்திருந்ததைப் போலவே, நான் காண்பதற்கு இனிமையானவனாக, சற்று அதிகமாகவே மெலிந்திருந்தது போலிருந்தாலும், பொருத்தமான உடல்வாகுடனும் நன்றாக இருப்பதாக அவர்கள் அபிப்பிராயப் பட்டார்கள்.  ஜிரோனா தேவாலயத்தின் படமிட்ட அஞ்சல் அட்டை அவர்களுக்கு பிடித்திருந்தது. சில பணத் தொல்லைகளையும், வீட்டுப் பிரச்சினைகளையும் சரி செய்ததும், அவர்களே கூடிய விரைவில் நேரில் வந்து பார்க்க எண்ணியிருந்த இடம் அது. அவர்கள் வரும்பொழுது என் இடத்தில் தங்குவதாக எண்ணியிருந்தார்கள் என்பது தெளிவாகப் தெரிந்தது. பதிலுக்கு நான் எப்போது மாட்ரீட் போக விரும்பினாலும் எனக்கு இடம் கொடுக்க முன்வந்தார்கள். இது மிகச் சாதாரணமான குடியிருப்புதான், சுத்தமாகக்கூட இல்லை என்று எழுதியிருந்தார் சென்சினி, தென்னமெரிக்காவில் எழுபதுகளின் ஆரம்பத்தில் புகழ் பெற்றிருந்த குதிரை வீரன் நையாண்டித் துணுக்குகளைப் போலிசெய்து கிண்டலடித்தார். அவர் தமது இலக்கியப் பணிகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. போட்டிகளைப் பற்றியும் அவர் எதையும் குறிப்பிடவில்லை.

முதலில், நான் மிராண்டாவிற்கு என்னுடைய கவிதையை அனுப்பி வைக்கலாம் என்று எண்ணினேன், ஆனால் மிகுந்த தயக்கத்திற்கும் ஆத்மப் பரிசோதனைக்குப் பிறகும், வேண்டாம் என்று முடிவு செய்தேன். எனக்குப் பைத்தியம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்று நினைத்தேன், அக்கவிதையை நான் அவளுக்கு அனுப்பி வைத்தால் அதன் பிறகு சென்சினியிடமிருந்து வேறு கடிதம் எதுவும் வராது. அதற்காக யார்தான் அவரைக் குறைகூற முடியும்? அதனால் நான் அனுப்பவில்லை. குறுகிய காலத்திற்கு புதிய இலக்கியப் போட்டிகளைத் தேட என்னை நானே பணித்துக் கொண்டேன். கடிதங்கள் ஒன்றில் சென்சினி தமக்கான பந்தயத்தை ஏற்கெனவே ஓடிவிட்டதாக வருந்தினார்.  புதிய பந்தயங்கள் எதுவும் இல்லை என்று கூறுவதாக முதலில் அதைத் தவறாகப் புரிந்து கொண்டேன்.

அவர்கள் ஜிரோனாவிற்கு வரவேண்டும் என்றும், அவரும் கார்மெலாவும் என் வீட்டில் எப்போது வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று பதில் எழுதினேன். மிராண்டாவுடன் எந்த நேரத்திலும் அவர்கள் வரக்கூடும் என்று என்னை நானே (அதற்கான அறிகுறிகள் ஏதுமின்றி) நம்பவைத்துக் கொண்டு, தூசி துடைத்து, தரையை ஒதுக்கிக் கழுக்ச் சுத்தம் செய்வதிலேயே பல நாள்களைக் கழித்தேன். அவர்களுக்கு ஏற்கெனவே ஓர் இலவசச் சீட்டு இருப்பதால், அவர்கள் இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க வேண்டியிருக்கும், மேலும் கேட்டலோனியா, பார்க்கவும் செய்யவும் பல அற்புதமான விஷயங்களால் நிறைந்தது என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டேன். பார்சிலோனா, ஓலோட், கோஸ்டா பிராவா ஆகிய இடங்களைக் குறிப்பிட்டு அங்கு நாங்கள் ஒன்றாகக் கழிக்கக்கூடிய மகிழ்சியான நாள்களைப் பற்றிப் பேசினேன். ஒரு நீண்ட பதிலில், எனது அழைப்பிற்கு நன்றி தெரிவித்த சென்சினி, தற்போதைக்கு அவர்களால் மாட்ரீட்டை விட்டு வெளியேற முடியாது என்று கூறினார். முந்தைய கடிதங்களைப் போலல்லாமல், நடுவில் அவரது பேசுபொருள் மீண்டும் போட்டிகளுக்கு (மீண்டும் அவர் வென்றிருப்பார் என்று நினைக்கிறேன்) திரும்பியது; என்னுடைய முயற்சிகளைக் கைவிட்டுவிடாமல் தொடருமாறு ஊக்குவித்தார் என்றாலும்கூட, இது சற்றுக் குழப்பம் தருவதாக இருந்தது. அவர் எழுத்தாளர்களின் வர்த்தகம் அல்லது தொழில்முறை பற்றி ஏதோ சொல்லியிருந்தார். அவர் வார்த்தைகளின் ஒரு பகுதிதான் எனக்கானது, மீதமெல்லாம் ஒருவித நினைவுகூரலாக அவருக்கேயானது என்று தோன்றியது. மீதமுள்ளவை நான் சொன்னதைப்போலக் குழப்படியாக இருந்தது. நான் கடிதத்தின் முடிவை எட்டியபோது, அவருடைய குடும்பத்தில் யாருக்கோ உடல் நலமில்லை என்ற எண்ணத்தை அடைந்தேன். 

இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து, சென்சினி எனக்கு எழுதியிருந்ததில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைக் குவியலில் இருந்த உடல்களில் ஒன்று க்ரெகாரியோவுடையதாக இருக்கலாம் என்று சொன்னார். அவரது கடிதம் தற்கட்டுப்பாட்டுடன் இருந்தது. துக்கத்தின் வெளிப்பாடு எதுவும் இல்லை; இன்ன நாளில், இன்ன நேரத்தில், தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கொண்ட குழு மற்றும் மனித உரிமை அமைப்புகளின் உறுப்பினர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் குவிந்திருந்த கல்லறையைத் திறந்தனர் போன்ற தகவல்களை மட்டுமே கொண்டிருந்தது. முதல் முறையாக எழுத்தில் அவருக்குப் பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை. அவரை நான் தொலைபேசியில் அழைக்கவே விரும்பினேன் ஆனால் அவரிடம் ஒன்று இருந்ததாக எனக்கு நினைவில்லை, அப்படியே இருந்திருந்தாலும் என்னிடம் அவருடைய எண் இல்லை. என்னுடைய கடிதம் சுருக்கமாக இருந்தது. என்னுடைய வருத்தங்களைத் தெரிவித்தேன், பின்பு அவ்வுடல் க்ரெகாரியோவுடையதுதான் என்பது அவர்களுக்கு இன்னும் உறுதியாக தெரியாது என்பதைச் சுட்டிக்காட்ட முயன்றேன். 

கோடை வந்தது, நான் கடற்கரையில் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். மாட்ரீடில் அந்தக் கோடையில் ஏராளமான சொற்பொழிவுகளும், நிகழ்வுகளும், அனைத்து வகையான கலாசார நடவடிக்கைகளும் நடந்தன, ஆனால் சென்சினி அந்த எதிலும் கலந்துக் கொள்ளவில்லை, அல்லது அப்படி அவர் எதிலாவது கலந்துக் கொண்டிருந்தார் என்று நான் படித்த செய்தித்தாள்கள் எதுவும் குறிப்பிடவில்லை. 

ஆகஸ்ட்டின் இறுதியில் நான் அவருக்கு ஒரு தபால் அட்டையை அனுப்பினேன். இந்தப் பருவகாலம் முடிந்ததும் நான் அவரை வந்து பார்ப்பேன் என்று எழுதியிருந்தேன். அவ்வளவுதான். செப்டம்பர் நடுவில் நான் ஜிரோனாவிற்குத் திரும்பி வந்தபோது, என் கதவுக்கடியில் தள்ளிவிடப்பட்டிருந்த கடிதக் குவியலில் சென்சினியிடமிருந்து வந்திருந்த ஆகஸ்ட்டு 7 தேதியிட்ட ஒன்றைக் கண்டேன். அவர் விடைபெறுவதைச் சொல்வதற்காக எழுதியிருந்தார். அவர் மீண்டும் அர்ஜெண்டினா செல்வதாக இருந்தார்; ஜனநாயகம் திரும்பியிருக்கும் நிலையில் அவர் அங்கே பாதுகாப்பாக இருப்பார், தூர விலகி வாழ்வதில் இனி அர்த்தமில்லை. க்ரெகாரியாவிற்கு என்ன நடந்தது என்பதை உறுதியாகக் கண்டுபிடிக்க அவருக்கு இருந்த ஒரே வழியும் அதுதான். கார்மெலா தன்னுடன் திரும்புவதாகவும், ஆனால் மிராண்டா அங்கேயே தங்கப்போவதாகவும் எழுதியிருந்தார். என்னிடமிருந்த ஒரே முகவரிக்கு நான் உடனடியாக எழுதினேன், ஆனால் பதிலேதும் வரவில்லை. 

படிப்படியகச் சென்சினி எப்போதைக்குமாக அர்ஜெண்டினா திரும்பிவிட்டார் என்றும், மீண்டும் அவர் எனக்கு எழுதாவிடில் எங்களுடைய கடிதத் தொடர்பு முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டேன். அவரிடமிருந்து ஒரு கடிதத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தேன், அல்லது இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்கு அப்படித் தோன்றுகிறது. ஆனால் கடிதமோ, நிச்சயமாக வரவேயில்லை. ப்யூனோஸ் அய்ர்ஸில் வாழ்க்கை பரபரப்பாக இருக்கக்கூடும், கண் சிமிட்டவோ அல்ல சுவாசிக்கவோகூட நேரமில்லாதபடி செயல்பாடுகளின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மாட்ரீட் முகவரியில் அவருக்கு மீண்டும் எழுதினேன், கடிதம் மிராண்டாவிற்கு அனுப்பப்படும் என்ற நம்பிக்கையில், ஆனால் ஒரு மாதத்தில் அது எனக்கு திரும்ப வந்தது ‘இந்த முகவரியில் உரியவர் இல்லை’ என்ற குறிப்புடன். எனவே முயற்சியைக் கைவிட்டுவிட்டு நாள்களைக் கடத்தினேன், படிப்படியக்ச் சென்சினியையும் மறந்து போனேன். இருப்பினும் நான் அரிதாகப் பார்சிலோனா செல்லும்போதெல்லாம், என்னுடைய மதியப் பொழுதுகள் அத்தனையையும் பழைய புத்தகக் கடைகளில், ஒரு நாளும் படிக்க வாய்த்திராத தலைப்புகளாக மட்டுமே நான் அறிந்து வைத்திருந்த, அவரின் மற்ற புத்தகங்களைத் தேடிக் கழிப்பேன். கடைகளில் நான் கண்டதெல்லாம் ‘உகார்த்தே’வின் பழைய பிரதிகளும், சமீபத்தில் கடனாளியாகிப் போன ஒரு நிறுவனத்தால் பார்சிலோனாவில் பதிப்பிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பும் மட்டும்தான். சென்சினிக்கு ஏதோவொரு செய்தியை அது தெரிவிப்பதைப்போல இருந்தது (எனக்கும்தான்).

ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடித்தேன். அதை ஒரு செய்தித்தாளில் படித்தேன் என்று நினைக்கிறேன், எதில் என்று சரியாக நினைவில்லை. அல்லது ஒருவேளை நான் அதைப் படிக்காமல், வேறெவரோ என்னிடம் சொல்லியிருப்பார்களோ என்னவோ. ஆனால் அந்நாள்களில் அவரை அறிந்த எவருடனும் பேசியதாக எனக்கு நினைவில்லை, அதனால் நான் இரங்கல் செய்தியை எங்காவது படித்திருக்கத்தான் கூடும். என் நினைவின்படி அது மிகச் சுருக்கமாக இருந்தது: அர்ஜெண்டீனிய எழுத்தாளர், லூயிஸ் ஆண்டோனியோ சென்சினி, பல வருடங்கள் புலம் பெயர்ந்து ஸ்பெயினில் வாழ்ந்தவர், பியூனோஸ் அய்ர்ஸில் இறந்துபோனார். ‘உகார்த்தே’ பற்றியும் ஒரு குறிப்பு இறுதியில் இருந்தது என்று நினைக்கிறேன். ஏனோ தெரியவில்லை, அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. எதனாலோ, இறப்பதற்காகத்தான் சென்சினி பியூனோஸ் அய்ர்ஸ் திரும்பிச் சென்றார் என்பது தர்க்கரீதியாகச் சரியென்றே தோன்றியது. 

சிறிது காலம் கழித்து, சென்சினி, கார்மெல்லா மற்றும் மிராண்டா இருக்கும் புகைப்படத்தையும், க்ரெகாரியோவின் புகைப்பட நகலையும், எனது மற்ற நினைவுகளையும் ஒன்றாக ஓர் அட்டைப் பெட்டியில், இங்கே விவரிக்க விரும்பாத காரணங்களுக்காகத் தீயிலிடாமல், கட்டி வைத்திருந்த நிலையில், என் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. அது நடு இரவாக இருந்திருக்கும், நான் விழித்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தது. எனக்கு ஜிரோனாவில் வெகு சிலரை மட்டுமே தெரியும், அவர்களில் யாரும் அசாதாரணமாக ஏதாவது நடந்திருந்தாலொழிய இப்படி வரமாட்டார்கள். நான் கதவைத் திறந்தபோது, நீண்ட கூந்தலுடன், பெரிய கறுப்பு மேலாடை அணிந்த ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் மிராண்டா சென்சினி, அவள் தந்தை எனக்குப் புகைப்படத்தை அனுப்பியதிலிருந்து இத்தனை ஆண்டுகளில் அவள் வெகுவாக மாறியிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் நீண்ட இளஞ்சிவப்பு முடியும், கழுகு மூக்குடனும் ஓர் உயரமான இளைஞன் இருந்தான். “நான் மிராண்டா சென்சினி,” என்னிடம் ஒரு புன்னகையுடன் சொன்னாள். எனக்குத் தெரியும் என்று நான் சொன்னேன், அவர்களை உள்ளே வரவேற்றேன். அவர்கள் இத்தாலிக்குச் சென்று கொண்டிருந்தார்கள்; அதன் பிறகு ஏட்ரியாட்டிக் கடலைக் கடந்து கிரேக்கம் செல்வதாக திட்டமிட்டிருந்தார்கள். அவர்களிடம் போதிய பணம் இல்லாததால், கடக்கும் வண்டிகளில் தொற்றிக்கொண்டு பயணித்தார்கள். அந்த இரவு அவர்கள் என்னுடைய வீட்டில் உறங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு எதையோ செய்து கொடுத்தேன். அந்த இளைஞன் பெயர் செபாஸ்டியன் கோஹன், அவன் அர்ஜெண்டினாவில் பிறந்தவன் என்றாலும், சிறு வயது முதல் மாட்ரிட்டில் வாழ்ந்து வந்தான். வீட்டை மிராண்டா சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் எனக்கு உணவு தயாரிப்பதில் உதவி செய்தான். “இவளை நீண்ட நாள்களாக உங்களுக்குத் தெரியுமா?” அவன் கேட்டான். இந்தக் கணம் முன்புவரை இவளை நான் புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தேன். 

இரவு உணவிற்குப் பின்னர், அறைகளில் ஒன்றை அவர்களுக்காகத் தயார் செய்து, விரும்பும்போது படுக்கைக்குச் செல்லலாம் என்று கூறினேன். நானும் படுக்கைக்குச் செல்ல எண்ணினேன், ஆனால் தூங்குவது கடினம், முடியாமலேகூட போகலாம் என்பதை உணர்ந்தேன். அதனால் அவர்கள் ஓய்வுகொள்ளச் சிறிது நேரம் கொடுத்தேன், பின்னர் கீழே சென்று குறைவான சத்தத்துடன் தொலைகாட்சியைத் திருப்பிச் சென்சினியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே அமர்ந்தேன். 

விரைவில் யாரோ படிக்கட்டில் வருவது எனக்குக் கேட்டது. அவளாலும் தூங்க முடியவில்லை. அவள் என் அருகில் அமர்ந்து சிகரெட் ஒன்று கேட்டாள். தொடக்கத்தில் நாங்கள் அவர்களின் பயணத்தைப் பற்றி, ஜிரோனாவைப் பற்றி (அவர்கள் நாள் முழுதும் இந்த நகரத்தில்தான் இருந்திருக்கிறார்கள், பிறகு ஏன் இவ்வளவு தாமதமாக என் வீட்டிற்கு வந்தார்கள் என்று நான் கேட்கவில்லை), அவர்கள் இத்தாலியில் சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்த நகரங்களைப் பற்றியும் பேசினோம். அதன் பிறகு அவளின் அப்பாவைப் பற்றியும், சகோதரனைப் பற்றியும் பேசினோம். மிராண்டாவைப் பொருத்தவரை, க்ரெகாரியோவின் மரணத்தைக் கடந்து சென்சினியால் வரமுடியவில்லை. எங்கள் அனைவருக்கும் அவன் இறந்துவிட்டான் என்று தெரிந்திருந்தாலும் அவனைத் தேடி அவர் திரும்பிச் சென்றார். “கார்மெல்லா கூடவா?” என்று நான் கேட்டேன். “அப்பா மட்டும்தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை,” என்று சொன்னாள். “அர்ஜெண்டினாவில் என்ன நடந்தது,” என்று நான் அவளிடம் கேட்டேன். “இங்கு நடந்ததைப் போலத்தான், மாட்ரீடைப் போல, எல்லா இடங்களையும் போல,” என்று சொன்னாள் மிராண்டா. “ஆனால் ‘அவர் அர்ஜெண்டினாவில் நன்கு அறியப்பட்டவர், விரும்பப்பட்டவர், நான் சொன்னேன். “இங்கு போலத்தான்,” அவள் சொன்னாள். நான் சமையலறையிலிருந்து ஒரு ‘காண்யாக்’ பாட்டில் கொண்டுவந்து அவள் பருகக் கொடுத்தேன். “நீ அழுது கொண்டிருக்கிறாய்,” அவள் சொன்னாள். நான் அவளைப் பார்த்தபோது திரும்பிக் கொண்டாள். “நீ எழுதிக் கொண்டிருந்தாயா?” அவள் கேட்டாள். “இல்லை, நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.” “அதைக் கேட்கவில்லை, நாங்கள் இங்கே வந்தபோது.” “ஆமாம்,” என்று சொன்னேன். “கதைகளா?” “இல்லை, கவிதைகள்.” “ஆஆஹ்,” என்றாள் மிராண்டா. நீண்ட நேரம் நாங்கள் அங்கே அமர்ந்து, டிவி திரையின் கருப்பு வெள்ளை உருவங்களை பார்த்தபடி அருந்திக் கொண்டிருதோம். “எனக்கு ஒன்றைச் சொல்,” நான் கேட்டேன், “உன் அப்பா எதற்காக க்ரெகாரியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்?” “நிச்சயமாகக் காஃப்காதான் காரணம்,” மிராண்டா சொன்னாள். “க்ரெகார் சாம்ஸா?” “சர்வ நிச்சயமாக,” அவள் சொன்னாள். “நான் நினைத்தேன்,” என்று சொன்னேன். பிறகு ப்யூனோஸ் அய்ர்ஸில் சென்சினியின் கடைசி மாதங்களின் கதைகளை என்னிடம் மிராண்டா சொன்னாள்.

பல்வேறு அர்ஜெண்டீனிய மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறி, மாட்ரீடை விட்டு வெளியேறும்போதே அவரது உடல் நலிவுற்றிருந்தது. அவர்கள் இவரிடம் ஒருபோதும் கட்டணம் வசூலித்தது இல்லை, மேலும் இரண்டு முறை தேசிய சுகாதார மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ப்யூனோஸ் அய்ர்ஸ்க்கு திரும்புவது வலி மிகுந்த, ஆனால் அதே சமயம் மகிழ்வு தரும் அனுபவமாக இருந்தது. முதல் வாரத்தில் அவர் க்ரெகாரியாவைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தில் தமது பழைய வேலைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார், ஆனால் அதிகாரத்துவத்தினாலும், தவிர்க்கவே முடியாத பொறாமைகளாலும், கசப்புகளாலும் அது சாத்தியப்படாததால் ஓரிரு பதிப்பகங்களுக்கு மொழிபெயர்ப்புகள் செய்யும் பணியை அவர் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது. கார்மெல்லாவிற்கோ ஆசிரியப் பணி கிடைத்தது, கடைசி காலங்களில் அவரின் சம்பாத்தியத்தில் மட்டுமே அவர்கள் வாழவேண்டியிருந்தது. ஒவ்வொரு வாரமும் சென்சினி மிராண்டாவிற்கு எழுதினார். நீண்ட காலம் வாழப் போவதில்லை என்பதை அறிந்திருந்தார், எஞ்சிய வலிமையைக் கொண்டு அதைக் கடந்துவிட விழைபவரைப்போல சில சமயங்களில் பொறுமையிழந்து காணப்பட்டார் என்று மிராண்டா சொன்னாள். “க்ரெகாரியாவின் விஷயத்தைப் பொருத்தவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. நோயியல் நிபுணர்கள் சிலர் பிணக் குழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட உடற் குவியலில் அவனது எலும்புகள் இருந்திருக்கலாம் என்று நினைத்தார்கள், ஆனால் அதை உறுதி செய்வதற்கு அவர்கள் நிச்சயம் மரபணுப் பரிசோதனை செய்தாக வேண்டும், அரசாங்கத்திடம் அதற்குத் தேவையான பணமோ, செய்வதற்கான விருப்பமோ உண்மையில் இல்லாததால் அதைத் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார்கள். க்ரெக் தலைமறைவாக இருந்தபோது, அவனின் பெண் தோழியாக இருந்திருக்கக்கூடிய ஒரு பெண்ணையும் சென்சினி தேடிச் சென்றார், ஆனால் அவரால் அவளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியது அவசியமாகியது. அதற்குப் பிறகு அவர் எழுதக்கூட இல்லை,” மிராண்டா கூறினாள். அவருக்கு அது எப்போதுமே மிக முக்கியமானதாக இருந்தது, ஒவ்வொரு நாளும் எழுதுவது, தன்னைச் சுற்றி வேறு எது நிகழ்ந்தாலும். “ஆமாம், அவர் அப்படித்தான்” என்று நான் ஆமோதித்தேன். “ப்யூனோஸ் அய்ர்ஸில் ஏதேனும் இலக்கிய போட்டிகளைக் கண்டுபிடித்தாரா, அவர் கலந்துக் கொள்வதற்கு,” என்று கேட்டேன். மிராண்டா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். “அட ஆமாம்! என் அப்பாவுடன் எல்லா போட்டிகளிலும் நுழைந்தவர் நீங்கள்தான் இல்லையா; போட்டிகளின் மூலமாகத்தான் உங்களை சந்தித்தார்” என்றாள். பிறகுதான் அது எனக்கு உறைத்தது, தந்தையிடம் இருந்த அத்தனை முகவரிகளையும் வைத்திருந்ததே அவளிடம் என் முகவரி இருந்ததற்கான ஒரே காரணம், நான் யார் என்பதையே அவள் இப்போதுதான் உணர்ந்திருப்பாள். “அது நான்தான்,” என்று சொன்னேன். மிராண்டா எனக்கு மேலும் காண்யாக் ஊற்றிவிட்டு, ஒரு குறிப்பிட்ட வருடம் முழுதும் அப்பா என்னைப் பற்றி அதிகம் பேசினார் என்று சொன்னாள். அவள் என்னை வித்தியாசமாகப் பார்ப்பதைக் கவனித்தேன். “நான் அவரை மிகவும் எரிச்சலூட்டியிருக்கக்கூடும்,” என்று சொன்னேன். “எரிச்சலா? விளையாடாதீர்கள்; அவர் உங்கள் கடிதங்களை மிகவும் நேசித்தார். அவர் எப்போதும் அவற்றை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்.” “அவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்,” நிச்சயமற்ற தொனியில் சொன்னேன். “அவை உண்மையிலேயே வேடிக்கையாக இருந்தன, என் அம்மா உங்கள் இருவருக்கும் பெயர்கள்கூட சூட்டினார்,” என்றாள் மிராண்டா. பட்டப் “பெயரா? யாருக்கு?” “அப்பாவிற்கும் உங்களுக்கும். அவர் உங்களைத் துடிக்கும் துப்பாக்கி வீரர்களென்றோ அல்லது வேட்டையாடும் வேங்கைகள் என்றோ அழைத்தார், இப்போது எனக்குச் சரியாக நினைவில்லை, ஆனால் அதுபோல ஏதோ… விசித்திரக் கடற்கொள்ளையர்களோ?” “ஓ அப்படியா. ஆனால் உண்மையான வெகுமதி வேட்டையன் உன் அப்பாதான். நான் வெறும் தகவல்களைத்தான் பகிர்ந்தேன்,” என்று கூறினேன். “ஆமாம் அவர் தொழில்முறை தேர்ந்தவர்,” திடீரெனத் தீவிரமாகச் சொன்னாள் மிராண்டா. “மொத்தம் எத்தனை பரிசுகள் வென்றார்,” என்று அவளிடம் கேட்டேன். “சுமார் பதினைந்து இருக்கும்,” தன்னிலை மறந்ததுபோல கூறினாள். “நீங்கள்?” “இதுவரை ஒன்றுதான்” என்று பதிலளித்தேன். “அல்காய் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானேன், அப்படித்தான் உன் அப்பாவைச் சந்தித்தேன்.” “உங்களுக்குத் தெரியுமா, மாட்ரிட்டில் அவர் இருந்தபோது போர்ஹேஸ் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் கதைகளில் ஒன்று தனக்கு எவ்வளவு பிடித்தமானது என்பதை விவரித்திருந்தார்.” “இல்லை, எனக்குத் தெரியாது” என்று சொன்னேன். “கொர்த்தசார் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார், முஹிக்கா லெய்னேஸ்கூட.” “ஆமாம், அவர் ஒரு நல்ல எழுத்தாளர்,” நான் சொன்னேன். “ஜீஸஸ்!” என்று சொல்லி மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டாள், ஏதோ அவள் புண்படும்படி எதையோ நான் சொல்லிவிட்டதுபோல. சில நொடிகள் கழியவிட்டு, காண்யாக் பாட்டிலை எடுத்துக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்தேன். மிராண்டா கைப்பிடிச் சுவரின்மீது சாய்ந்து, ஜிரோனாவின் ஒளிப் புள்ளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “இங்கிருந்து பார்வையிட, நல்ல காட்சி அமைந்திருக்கிறது உங்களுக்கு.” நான் அவளது கோப்பையை நிரப்பினேன், பின் என்னுடையதை. நிலவொளியில் நகரத்தைப் பார்த்தபடி சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தோம். திடீரென எங்களுக்கிடையே ஓர் அமைதி  நிலவிவிட்டதை உணர்ந்தேன், உலகம் ஏதோ உண்மையிலேயே மாறிக் கொண்டிருப்பதைப்போல, மர்மமான, விளக்க முடியாத ஏதோவொரு காரணத்தினால் நாங்கள் ஓர் அமைதி நிலையை எட்டிவிட்டதாகவும், இனி இப்போதிலிருந்து புலப்பட இயலா மாற்றங்கள் தொடங்கும் என்பதையும். நான் அவளிடம் அவள் வயதென்ன என்று கேட்டேன். “இருபத்தி இரண்டு” என்று சொன்னாள். “அப்படியெனில் நான் முப்பதைத் தாண்டியிருக்க வேண்டும்” என்று சொன்னேன், என் குரல்கூட வித்தியாசமாக ஒலித்தது. 

One Reply to “சென்சினி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.