வைர வாள்

பளிங்கு நீர்த்துளி ஒன்று
நேர்த்தியின் முழுமையோடு
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
கீறிச் செல்கிறது
ஒலியெழாது புன்னகைத்து
எனை
இரண்டாய்
நான்காய்
எட்டாய்
பிளந்து போடுகிறது
பிறகது
உலர்வதன் முன்னம்
மின்னலின் விரைவில்
நழுவிச்சென்று
நிலம் அதிர குதித்து
சிற்றோடையாகிறது
பெருநதியாகிறது
விரிகடலாகிறது
அங்கும் துயில் கொள்ளாது
ஆயிரம் கால்களில்
துள்ளித் தாவி வானேறி
கருமுகிலாகிறது
குறுமழையாகிறது
மழைக்காட்டில்
ஒரு துளியாகிறது
மீளவும்
என் முன்
வாளேந்தி வந்து
நிற்கிறது
அதில்லையா?
மானுட குலத்தின்
கடைசி முத்தத்தினை
நம் இதழ்களை
பிரித்துக் கொள்ளும்
ஒவ்வொரு முறையும்
கொடுத்து நிற்கிறாய்
இப்பூவுலகின்
கடைசி நாளினை
என்னோடு நீ
விடைகொள்ளும்
ஒவ்வொரு நாளும்
கொடுத்துச் செல்கிறாய்
என்றால்
கடைசி என்பதெல்லாம்
உண்மையில்
கடைசி இல்லையா?
அடுத்த ஆரம்பம்
அவிழும் வரையில்
ஊடறுக்கும் சிற்றோடை
மட்டுமே தானா?
கட்டக் கடைசியில்
எல்லாமே
தீராத விளையாட்டுதானா?
அப்படி என்றால்
இது
அதில்லையா?
பொரியுருண்டை

என்
செல்ல மகள்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு காலடிக்கும்
தன்னை
பூப்போல ஏந்திக்கொள்ளும்
இந்த தித்திக்கும் பூமியை
கொஞ்சம் கொஞ்சமாய்
கிள்ளித் தின்று
கொறித்துக் கொண்டே
மெதுக் மெதுக்கென்று
நடந்து
உடன் வருகிறது
அவள்
குட்டி பூ பாதங்கள்
தத்தி தாவிக்கொண்டே
நடக்கும்
அந்த குட்டி குட்டி
தவளைப் பாதங்களுக்கு
போதவே இல்லை
இந்த பூமியென்னும்
சின்னஞ்சிறு
பொரியுருண்டை
கடங்காரன்
துயில் விழிக்கும்
ஒவ்வொரு புலரியிலும்
யாரோ
வான் திறந்து இறங்கி வந்து
என் படுக்கைக்கு அடியில்
வைத்துவிட்டுப் போகும்
செங்கனியை
எடுத்துக் கொள்கிறேன்
என் உள்ளங்கையில்
அக்கனியை
உருட்டி உருட்டி
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
ஆளுக்கொரு கடி கடித்து
முடிக்கப் பார்க்கிறீர்கள்
வேறு வழியில்லாமல்
அவசர அவசரமாய்
நானுமொரு
கடி கடித்துக் கொள்கிறேன்
வான்விரிந்த நீலத்தின் சுவை
இதுதானா?
இதுவே தானா?
நன்று நன்று
கூர்மின்னும் சுழல் வாளாய்
சுவைத்து தீர்க்கிறது
உங்கள் கொடும் நா
வேறு வழியே இல்லாமல்
என் நாவும்
மணிச் சுடர்
அணையும் அந்தியில்
முற்றாத இளம் இருளில்
பறந்து வந்து என் தோளமர்ந்த
சின்னஞ் சிறு பட்டுக்குருவியின்
உருளும் மணிவிழிகளில்
ஒளிர்பவன்
எனக்காக காத்திருக்கிறான்
அவனுக்கு
நான்
என்ன பதில் சொல்வது?
மிகவும் அருமையான கவிதைகள். வாழ்த்துகள் அதியமான் அவர்களுக்கு.
அன்புள்ள கவிதா அவர்களுக்கு மிக்க நன்றி
முழுதும் மொக்கவிழா அரும்பென முகிழ்த்திருப்பதுதானே கவியென்பதும்
தீரா அன்புடன்
வ. அதியமான்