பிரபஞ்சம்

கமலக்குமார்

இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? யார் எல்லா உயிரினங்களையும் உருவாக்கினார்கள்? என்ற கேள்வி எல்லா மனிதர்களுக்கும் என்றாவது ஒரு சில தருணங்களில் எழுந்திருக்கலாம். இது எனக்குள்ளும் ஒரு தீராத வினாவாகவே இருந்து வந்தது. இதற்கான விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது, நான் படித்த, பிரமித்த, விளக்கங்களை ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பல பில்லியன் ஆண்டுகள் அடங்கிய பரிணாம வளர்ச்சியை ஒரு சில பக்கங்களுக்குள் முடக்கிவிட விரும்பவில்லை. உங்களின் சில மணித்துளிகளை ஒரு நீண்ட விண்வெளிப் புரிதலுக்கு முன்பதிவு செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பாகம் 1:

இந்த பூமி தோன்றிய காலத்தையும், உயிர்களின் ஆதாரம், மூலம் கடவுள் என்று சொல்லும் அல்லது நம்பும் மனிதர்கள் இந்த பூமியில் தோன்றிய காலத்தையும், ஒப்பிட்டுப் பார்த்தால் கடவுள் எப்போது தோன்றினார் அல்லது நம்மால் கடவுள் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டார் என்று அறிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பூமி தோன்றிய கால அளவு மிக மிக நீண்ட வருடங்களின் கணக்கு என்பதால் சில சுருக்கமான அளவைகளை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நம் அறிவியலின் ஆதாரம் புவியீர்ப்பு விசையும், ஒளியும் . இந்த ஒளியின் வேகமே நம் அறிவியலின் அடிப்படை அளவை. ஒளியைவிட வேகமாகச் செல்லக்கூடிய ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்பது நம் அறிவியலாளர்களின் நிர்மாணம். இது எப்போது தவறு என்று நிரூபிக்கப்படுகிறதோ அப்போது நம் அறிவியல் நிலை குலைந்துவிடும் .

வெற்றிடமான அண்ட வெளியில் (In Outer Space)
ஒளியின் வேகம் ஏறத்தாழ ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் (3,00,000 km/sec). இந்த ஒளியின் வேகத்தால்

  • நம் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களைத் தொடும் நேரம் ஏறத்தாழ 119 மில்லி வினாடிகள் மட்டுமே.
  • பூமியைச் சுற்றிவர ஆகும் நேரம் ஏறத்தாழ 134 மில்லி வினாடிகள் மட்டுமே.
  • நிலவைத் தொட ஆகும் நேரம் ஏறத்தாழ 1.3 வினாடிகள்.
  • சூரியனைத் தொட ஆகும் நேரம் ஏறத்தாழ 8.3 நிமிடங்கள்.

நம்மால் இந்த ஒளியின் வேகத்தில் செல்ல முடியவில்லை என்றாலும், ஒலியின் (வினாடிக்கு 330 மீட்டர் ) வேகத்தை எளிதில் எட்டிவிட்டோம்.

இந்த ஒளி, ஓர் ஆண்டில் எவ்வளவு தூரம் செல்கிறதோ அது ‘ஓர் ஒளி ஆண்டு’ ( One Light Year) என்று கணக்கிடப்படுகிறது.

ஓர் ஆண்டுக்கு = 60 x 60 x 24 x 365 = 3,15,36,000 வினாடிகள் என்றால்,
ஓர் ஒளி ஆண்டின் தூரம் = 3,15, 36, 000 x 3,00,000 ஏறத்தாழ 94,60,80,00,00,000 கிலோமீட்டர் (தொண்ணூற்று நான்கு லட்சத்து அறுபதாயிரத்து எண்பது கோடி கிலோமீட்டர்).
மலைக்க வேண்டாம். இனிமேல் நாம் இந்த அளவையைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது கோடிகளில் இருப்பதால் நாமும் இனி கோடி ‘ஈஸ்வரர்’கள்தான்.

எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவன் ஈஸ்வரன் என்றால், நாமும் மேலே செல்ல வேண்டுமல்லவா! மன்னிக்கவும், நான் சொல்வது பூமிக்கு மேலே. சரி, முதலில் இந்த ஆகாயம் எப்படிப்பட்டது என்று கவனிப்போம். நம் பூமி சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள். நம் சூரிய மண்டலம், பால் வீதி என்னும் விண்மீன் மண்டலத்தின் (Milky way Galaxy ) ஓர் அங்கம். இந்த விண்மீன் மண்டலத்தில் மட்டும் இதுவரை 40,000 கோடிக்கும் அதிகமான சூரியக் குடும்பங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

நாம் அடிக்கடி செயற்கைக் கோள்களின் புகைப்படங்களில் காணும் சூறாவளியின் தோற்றம் கொண்ட இந்த விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதிக்கும், நம் சூரியக் குடும்பத்துக்கும் இடையிலான தூரம் ஏறத்தாழ 27,000 ஒளி ஆண்டுகள். சூரியனுக்கும் நமக்கும் உள்ள தூரம் வெறும் 8.3 ஒளி நிமிடங்கள் என்றால் , நம் விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரக் கிட்டத்தட்ட 270 நூற்றாண்டுகள் ஆகும். நாம் இப்பொழுது அந்த ஒளியைக் கண்டுகொண்டிருந்தால் அது ஏறத்தாழ 27,000 ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய ஒளியாகும்.

இந்தக் கணக்கு நம்முடைய பால் வீதி விண்மீன் மண்டலத்திற்கு மட்டும் என்றால், இன்னும் பல்லாயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இதை எப்படிக் கணக்கிடுவது?. ஒருவேளை நம் உள்ளூர் அரசியல்வாதிகளை கேட்டால் சொல்லிவிடுவார்கள். கறுப்புப் பணத்தையே கணக்கிலடங்காமல் எண்ணுகிறவர்களை, வெளிச்ச ஆண்டுகளைக் கணக்கிடச் சொன்னால் முடியாமல் போய்விடுமா என்ன?

சரி, ஆகாயத்தை அளக்கத் தெரிந்துகொண்டோம், இனி நாம் பிரபஞ்சத்தின் வரலாறு என்ன என்று பார்ப்போம். இந்தப் பிரபஞ்சம் தோன்றி 1380 கோடி வருடங்கள் ஆகின்றன என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

இதில் மனிதம் எப்போது? மதம் எப்போது? சமயம் எப்போது? சாதி எப்போது? குலம் எப்போது? கோத்திரம் எப்போது? என்பது மிகவும் சுவாரஸ்யமான தூண்டுதல். கார்ல் சேகன் என்ற அறிஞன், இந்த 1380 கோடி வருடங்களை, எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக வருட அட்டவணை ஒன்றை உருவாக்கினான். இந்த அட்டவணையின் பெயர் பிரபஞ்ச அட்டவணை (காஸ்மிக் காலண்டர்). இந்த அட்டவணைப்படி, ஜனவரி முதல் நாள் நடு இரவு 12.00 மணிக்கு உலகம் தோன்றியது என்றும், நாம் வாழும் இந்த வருடம் டிசம்பர் 31 , 11.59 மணி நேரம் என்றும் கொள்வோம். அதாவது நாம் வாழும் காலம் இந்த கால அட்டவணையின் கடைசி நிமிடம் என்று வைத்துக் கொள்வோம். நம் பூமி அட்டவணையை இதற்குள் புகுத்திப் பார்க்க முயன்றோமானால், இந்தப் பிரபஞ்ச அட்டவணையின்படி
ஒரு வருடம் என்பது 1380 கோடி ஆண்டுகள் என்று கொண்டால்,
ஒரு மாதம் என்பது ஏறத்தாழ 3.79 கோடி ஆண்டுகள்,
ஒரு மணி நேரம் என்பது ஏறத்தாழ 15,76,000 ஆண்டுகள்,
ஒரு நிமிடம் என்பது ஏறத்தாழ 26,255 ஆண்டுகள்,
ஒரு வினாடி என்பது ஏறத்தாழ 437 ஆண்டுகள்.

சில வினாடிகளில் மட்டுமே பல்கிப் பெருகிய இந்த மானுட சமுதாயம், கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பொதிந்து கிடந்த இயற்கை வளத்தையும், சுற்றுச் சூழலையும், உருத் தெரியாமல் சிதைத்து விட்டு, இப்பொழுது மரம் வளர்க்கவும், உலக வெப்பமயமாவதைத் தடுப்பது பற்றியும் பிதற்றிக் கொண்டிருக்கிறோம். ஓ ! புரிந்துவிட்டது. நாம் கோடி ஈஸ்வரர்கள் அல்லவா, அதனால்தானோ என்னவோ நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி ,அதை விடுத்து இந்த உலகம் எப்படி உருவானது? என்று பார்ப்போம்.

அறிவியலின் கூற்றுப்படி, இந்த மொத்தப் பிரபஞ்சமும் உருவாவதற்கு முன்னால் இன்று விண்வெளியில் இருக்கும் அத்தனை துகள்களும், விண்மீன்களும், கோள்களும், மண்டலங்களும் ஒரு மிகச் சிறிய அணுப்பந்தில் (singularity ), அளவிட முடியாத அழுத்தத்தோடும், அளவுக்கு அதிகமான வெப்பத்தோடும் (சூரியனை விட லட்சம் மடங்கு) அடைபட்டிருந்தது என்றும், ஜனவரி முதல் தேதியன்று இந்தப் பந்தின் வெடிப்பினால் உருவான ஒரு மகா ஒளிப் பிரளயம் (Big Bang ) மூலமாக இந்த மொத்தப் பிரபஞ்சமும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது வெடிப்பு என்று சொல்வதைவிட ஓர் அணுத்துகள் விரிவடைந்ததாகக் கருதுவதே சரியானது என்று பல அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். சரி எவ்வாறு, இவ்வளவு ஆற்றலும், வெப்பமும் ஒரு சிறு பந்துக்குள் அடங்கியது? ஒரு மிகப் பெரிய அண்டம் ஈர்ப்பு விசையால் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிப் பல ஆயிரம் கோடி ஆண்டுகள் கழித்து இவ்வாறு சுருக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போதைய அனுமானம். இது உண்மை என்றால், நாம் இருக்கும் இந்த அண்டம் இப்போது விரிந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துவிட்டோம். எனில் இது மீண்டும் சுருங்க வாய்ப்பு இருக்கக்கூடும். இது ஓர் அண்டம் அழிந்து மற்றோர் அண்டம் உருவாகும் நிலை. கவலை வேண்டாம், இவை நடப்பதைப் பார்க்க நாமும் நம் சாதிகளும், மதங்களும் இருக்கப் போவதில்லை.

இந்த அணு வெடிப்பு ஓர் அறிவியல் அனுமானம் என்றாலும், இதைச் சோதித்துப் பார்க்க இந்த மானுடம் மிகுந்த ஆர்வம் கொண்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து பல இடங்களில் ஆராய்ச்சி மையங்களை நிறுவி, அதில் செய்த சோதனைகளின் மூலம் பல புரியாத புதிர்களுக்கு விடை கண்டிருக்கிறது. இதிலும் மதச் சாயம் பூசிக் கடவுளைக் காப்பாற்றும் முயற்சி, மனிதனால் செய்யப்படுகிறது என்பது வேதனையான ஒன்று. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்றால், மனிதன்தானே காப்பாற்றியாக வேண்டும். விட்டு விடுவோம்.

சரி, இந்த வெடிப்பிற்குப் பிறகு என்ன நடந்தது? யார் முதலில் உயிரானது? பார்ப்போம்.

இந்த வெடிப்பிற்கு பிறகு, கருத்துகள்களும், நிற நிழல்களுடன் (கண்ணுக்கு தெரியாத) மின்காந்த அலைகளும் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இவை கொண்டிருந்த அளவுக்கு அதிகமான அடர்த்தியின் மூலம் ஏற்பட்ட விசை, இவற்றை வெகு வேகமாக விரிவடையச் செய்தது. இந்த விரிவாக்கம் மிக நீண்டு கொண்டிருந்த அதே நேரத்தில் அளவிட முடியாத வெப்பத்திலிருந்த கருத்துகள்கள் சீரற்ற வேகத்தில் இயங்கத் தொடங்கின. இந்த நிகழ்வு பெரியோஜெனிசிஸ் (Baryogenesis ) என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சீரற்ற இயக்கத்தினால் நேர் விசையும், எதிர் விசையும் கொண்ட துகள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு, அழிந்து பின் அந்த அழிவிலிருந்து மீண்டும் உருவாகி, ஒரு தொடர்ச்சியான அழிவுத் தோற்றச் சுழற்சி உண்டானது.

பின் இந்த விரிவாக்கம், ஓர் அணு வெடிப்புக்குப் பின் நிகழும் புகை மண்டலத்தின் விரிவாக்கம் போல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நிலைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் குவார்க் – க்ளுயான் (Quark — Gluon Plasma ) கருத்துகள்களும் மற்றும் பிற தொடக்கநிலைக் கருத்துகள்களும் பிரபஞ்சத்தில் நிறைந்திருந்தன. விரிவாக்கத்தினால் அடர்த்தி குறைய தொடங்கியது. இதற்குப் பிறகு பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது, இந்த நிலையில், கருத்துகள்கள் ஒன்றோடொன்று பிணைந்து ஒன்றுசேர ஆரம்பித்தன. வெப்பம் குறைய குறையக் கருத்துகள்கள் தம் அடர்த்தி குறைந்து மேலும் மேலும் நெருங்கி ஒன்றுசேர ஆரம்பித்தன. இந்த நிலையிலிருந்து, நம் அறிவியல் அறிவு, யூகங்களை நம்ப வேண்டிய நிலையைக் கடந்து, தீர்மானமாகச் சொல்லக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது.

குளிரத் தொடங்கிய நிலையில் இருந்த பிரபஞ்சத்தில் குவார்க் மற்றும் க்ளுயான் கருத்துகள்கள் இணைந்து பெரியோன் (Baryon ) என்னும் புரோட்டான்களாகவும் (Protons ) நியூட்ரான்களாகவும் (Nuetrons ) உருவாகத் தொடங்கின. வெப்பநிலை மிகவும் குறைந்த போது இந்தப் புரோட்டான்களும், நியூட்ரான்களும் நிலை குலைந்து நிர்மூலமாகத் (Annihilation ) தொடங்கிக் கோடிகளுக்கு ஒன்றாய் எஞ்சி நின்றன. இதே மாதிரியான இன்னொரு தொடர் சுழற்சியில் எலெக்ட்ரான்களும், பாசிட்ரான்களும் எஞ்சி நின்றன. இந்த நிர்மூலமாக்களுக்குப்பின் போட்டான்கள் பிரபஞ்சத்தில் மேலோங்கி நின்றன, சிறிய அளவில் நியூட்ரினோக்களும் இருந்தன. இப்போது அனைத்துக் கருத்துகள்களும் சலனமின்றி ஒரு புயல் கடந்துபோன நிசப்தமாய் நிலை கொண்டிருந்தன. வெடிப்பு நிகழ்ந்து ஒரு நிமிடம் கழித்து, வெப்பநிலை மேலும் கடுமையாகக் குறைந்தபோது, ஒரு நீண்ட அமைதியில் இருக்கும் மனிதனின் மன இறுக்கம்போல், நிலை பெற்றிருந்த புரோட்டான்களும், நியூட்ரான்களும் இறுக்கமாக இணைந்து நீயூக்ளியோ சிந்தஸிஸ் (nucleosynthesis) எனும் கருத்தொகுப்பு நிகழ்வு நடக்க ஆரம்பித்தது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் முதல் முழு அணுக்களாக டியூட்டீரியம் (ஹைட்ரஜனின் மாற்று அணு ) மற்றும் ஹீலியம் அணுக்கள் உருவாகின. மேலும் புரோட்டான்கள் பல தொகுப்புராமல் ஹைட்ரஜன் கருத்துகள்களாவே இருந்தன.

பின், கிட்டத்தட்ட 3,79,000 ஆண்டுகளுக்குப் பிறகு, எலெக்ட்ரான்களும், ஹைட்ரஜன் கருத்துகள்களும் இணைந்து ஹைட்ரஜன் அணுக்கள் உருவாகின. இதுவரை இந்த கருத்துகள்களோடு ஒன்றியிருந்த மின்காந்த அலைகள் தம்மை விடுவித்துக்கொண்டு அண்டம் முழுதும் விரியத் தொடங்கின. இந்த அலைகளையே நாம் காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்கிரௌண்ட் (Cosmic Microwave Background ) என்று அழைக்கிறோம். இந்த அலை, ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு என்றாலும், நம் அத்தனை யூகங்களுக்கும், இது புத்துயிர் அளித்தது என்பது உண்மை.

இதுவரை, அண்டத்தில் ஓர் அணு எவ்வாறு கருவானது என்று தெரிந்து கொண்டோம். இது நம் பிரபஞ்ச அட்டவணையின் முதல் 13 நிமிடங்கள் மட்டுமே. நம் உடலில் இருக்கும் அத்தனை கனிமங்களும், இந்த வானவெளியிலும் இருக்கின்றன என்றால், நாமும் இந்த அண்டத்தின் ஓர் அங்கம். ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்துகொள்ள முனைவது ஞானம் என்றால், இந்த அண்டத்தினால் உருவான நாம், இந்த அண்டத்தை உணர்ந்துகொள்ள முனைவதும் ஞானம்தானே? ஞானம் தேடுபவர்கள் சந்நியாசிகளென்றால், கடவுள் மறுப்பாளர்கள் இல்லை என்றால், அண்டம் தேடும் அத்தனை உயிர்களும் சந்நியாசிகள்தான்.

சரி, எவ்வாறு ஒளி மீண்டும் தோன்றியது? எவ்வாறு விண்மீன்கள் உருவாகின? எவ்வாறு விண்வெளி மண்டலங்கள் உருவாகின என்பது போன்ற கேள்விகளுக்கு விடை வேண்டுமா? பொறுத்திருங்கள், அடுத்த பாகம் வரும் வரை.

இதன் இரண்டாம் பகுதி இங்கே கிடைக்கும்: பிரபஞ்சம் – பாகம் 2 – சொல்வனம் | இதழ் 228

(தொடரும்)

6 Replies to “பிரபஞ்சம்”

  1. ஆசிரியர் மிக கடினமான கருத்துக்களை கூட எளிய தமிழில் தெளிவு படுத்தியுள்ளார். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். அடுத்த பாகத்திற்க்காக காத்திருக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.