விறால்

மழை. வேறெதுவும் இல்லாமல் ஊர்க்காரர்களின்  மனதை முழுதாய் நிரப்பியிருந்தது. ஒரு மாதமாய் பெய்யும் மழையில் ஊரே சொல்லடங்கி அமைதியாகிவிட்டது.மழை மட்டும் ஊர் மேலும், ஊரைத் தாண்டி இருக்கும் ஏரி மேலும், ஏரிக்கரை வழியாக போகும் ரயில்கள் மேலும் நின்று, ஆடி பாடிக்கொண்டிருந்தது. என் வீடு முழுவதும், கதைகளில் வரும் ராஜாவிற்கு ரத்தினக் கம்பளம் விரிப்பது போல, தட்டு முட்டுச் சாமான்களை அம்மா மழை சொட்டும் இடமெங்கும் பரப்பி வைத்திருந்தாள். அது கூரைத் தார் சீட்டுகளின், பொத்தல் வழி சொட்டி, நேராக பாத்திரத்தில் குதித்து, பூப்போல விரிந்து தெறித்தது. நிரம்பும் பாத்திரங்களை அம்மாவும் நானும் வெளியே சந்தில் ஊற்றிவிட்டோம். நான் அப்பாவிற்காகக் காத்திருந்தேன்.இன்று  மீன் பிடிக்கக் கூட்டிச்செல்வதாகச் சொல்லியிருந்தார்.

பக்கத்து வீடுகளில் எல்லாம் தாயக்கட்டை உருட்டும் சத்தம் கேட்கிறது. மழைக் குளிரில் தறியின் அச்சு இறுகிவிடுவதால், பட்டு நெய்வது கடினம். எல்லோரும் மஞ்சள் போட்டு வேகவைத்த புளியங்கொட்டை, முறுக்கு என எதையாவது செய்துவைத்துக் கொண்டு தாயம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பா மண்ணெண்ணையைப் அச்சில் பூசி இளகவைத்து, தினம் ஒரு முழமாவது நெய்துவிடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில், சூரிய வெளிச்சம் மறைந்துவிடும்.பின் நெய்யமுடியாது. அப்போது வந்துவிடுவார்.

வரும்போது, என் தலையில் மாட்டிக்கொள்ள ஒரு நைலான் கோணிப்பையும், ஒரு பெரிய கொசு வலையும் கொண்டுவந்தார். இருவருமாக உட்கார்ந்து, கொசுவலையின் ஓட்டைகளை எல்லாம், குவித்துச் சுருட்டி, முடி போட்டு அடைத்துவிட்டோம். அம்மா மழையில் நனைந்தாலும் பிரச்சினை இல்லாத அழுக்கு நிஜாரை கொடியில் இருந்து எடுத்துக்கொடுத்தாள்.அதை போட்டுக்கொண்டேன். அம்மா கொடுத்த அலுமினிய அன்னக்கூடையை எடுத்துக்கொண்டு அப்பாவும் நானும் மீன்பிடிக்கப் போனோம். 

கால்வாய் தறிக்காரர்களின் வீட்டுவரிசையின் கடைசியில் ஓடியது. எங்கள் வீடு வரிசையில் மூன்றாவது. கால்வாய்க்கு அந்தப்பக்கம் பட்டு நெய்யும் தறிக்கொட்டகைகள். கால்வாயில் கரையை மீறி நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கரை என்பது, ஈசுவரன் கோயில் மண்டபம் இடிந்தபோது, அதன் தூண்களை கொண்டுவந்து போட்டு காட்டியது. கால்வாயை நான் ஓடிவந்து ஒரே தாண்டாகத் தாண்டிவிடுவேன். அப்பா, நின்ற இடத்திலேயே, கொஞ்சமாய் முட்டியை மடக்கி, ஒருக்களித்து  உட்காருவது போல் பாவனை செய்து, சட்டென விடுபட்டு, அக்கரையில் குதித்துவிடுவார். ஏரியின் நீர் தாமரை குளத்திற்கு செல்லும் வழி அது.

அப்பா இரண்டு பட்டை ஓடுகளைக் கொண்டுவந்து, முக்கோணம் போல் நிற்கவைத்து, உள்ளே கிருஷ்ணாயில் விளக்கை நிறுத்திப் பற்றவைத்தார். லேசான தூறலில், இருண்டு மூடியிருந்த மேகங்களால் ஆறு மணிக்கே இரவு போலிருந்தது. வீசிய காற்றில் வந்த குளிருக்குக் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு, தலையை மூடியிருக்கும் நைலான் கோணியின் நுனியை கைகளில் பிடித்துநின்றேன். 

கால்வாயின் கரையை ஒட்டி, கால்களால் வலையைப் பரப்பி மிதித்துக் கொண்டு, மேலோரத்தை கைகளால் பிடித்து, ஓடும்நீர் வலையின் அடிவயிறு வரை போகும்படி பிடித்துக்கொண்டு, விளக்கின் வெளிச்சத்தில் அப்பா நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூறலும் ஓய்ந்துவிட்டது. வெகுநேரம் ஆகியும் ஒரு மீனும்  கிடைக்கவில்லை. 

“ஓடி போய், ஒரு சொம்பு தண்ணி கொண்டுவா” என்கிறார். நான் பறக்கும் கோணியை பிடித்துக்கொண்டு ஓடி, “இதுவரைக்கும் ஒன்னும் கிடைக்கல. அப்பா ரொம்ப நேரமா தண்ணியிலேயே நிக்காரு” என்றேன். கொடுத்த சொம்பு அப்பாவிடம் சென்று, மீண்டுவந்தது. திரும்பி போகையில், பக்கத்துவீட்டுக்காரர்களும் உடன் வந்தார்கள். 

ரகு அப்பா, அன்னக்கூடையை ஆராய்ந்தார். ‘இம்மா நேரம் ஆகியும் ஒன்னும் கிடைக்கிலியா?” அப்பாவிடம் கேட்டவாறே, கரைத்தூணில் ஏறி நின்றுக்கொண்டார். தாடிதாத்தா கொஞ்சம் தள்ளிப்போய் இன்னொரு தூணில் நின்றுகொண்டு, தனக்கு மட்டுமே கேட்கும்படி எதோ சொல்லிக்கொண்டார். 

யாரோ கருவாட்டு கொழம்பு வைக்கும் வாசம் வந்தது. அம்மா என்ன சமைக்கிறாளோ  என நினைத்துக்கொண்டேன். விளக்கின் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமும் இல்லை. கால்வாயின் நீர் ஓடும் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. இடுப்பில் நிற்காத என் நிஜாரை, அரைஞாண் கயிற்றின்வழி விட்டுச் சுருட்டிக்கொண்டேன். தூறலும் இல்லை. ஊரே பேரமைதியில் இருந்தது. 

கரையில் நின்ற எல்லோரும் குந்தவைத்து உட்கார்ந்துவிட்டார்கள். நான் என் கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு, ஓடும் நீரின் மேல் காட்டி, மீன்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்பா மட்டும் சலிக்காமல் நின்றுகொண்டிருந்தார். 

அப்போதுதான் வலைவிரித்திருந்த, நீர் ஓடும் திசைக்கு எதிர் திசையில், மீன்கள் ஏறிவந்து, குழிந்த வலையை ஒட்டி தயங்கிநிற்பதைப் பார்த்தேன். அப்பா கால்வைத்து, வலையை மிதித்திருந்த இடத்தில், நீர் திமிலாக பொங்கி வழிந்தது. அதன்வழி மீன்கள் ஏறிக்குதித்து, குதித்தவுடன் நீரோட்டத்தில் வலைக்குள் சென்று மீண்டு, எதிர் நீச்சலிட்டு நீரோட்டத்தில் மறைந்தன. 

எல்லோரும் எழுந்து நின்றுவிட்டார்கள். ‘எதுத்த தண்ணியில ஏறி வருது. வலையை திருப்பிப்போடு ” என்றார் தாடிதாத்தா. அப்பா அப்போதும் அப்படியேதான் நின்றுகொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூட்டமாக கெண்டைகுசுமான்களும், சில ஜிலேபிகளும், குரவை மீன்களும் கால் பக்கமாக ஏறிக்குதித்து நீந்திப்போயின. தங்கக்காசு போல கெண்டைகுசுமான்கால் விளக்கின் வெளிச்சத்தில் ஜொலித்து நீரில் விழுந்து மறைந்தன. அப்பா பக்குவமாக காலை விலக்கி வலையின் வாயை சுருக்கி கரையில் இட்டார். கொத்து கொத்தாக மீன்கள். துள்ளும் பட்டை மீன்களையும், நெளிந்து வழியும் குரவையையும் பிடித்து அன்னக்கூடையில் போட்டுவிட்டு, ” ஓடிப்போய் அம்மாட்ட சொல்லி , பாப்பாவோட கொசுவலையையும் எடுத்துக்கிட்டு  வா” என்றார். 

அம்மா பரணையில் இருந்து எடுத்துக்கொடுத்தாள். அது கொசுக்குடை. பாப்பா தூங்கும் போது, மேலே கவிழ்த்துவைப்பது. ஓட்டமாக மீண்டுவந்தேன். வலையின் வாய் பக்கத்தை நீரோட்டத்தின் எதிர்திசையில், மீன்கள் ஏறிவரும் வழியில் பிடிக்க அப்பா திணறிக்கொண்டிருந்தார். தாத்தா இறங்கி, வலையின் வாலை நீரில் அடித்து  செல்லாதபடி பிடித்துக்கொண்டார். அதற்குள் இன்னும் சில பேர் வந்திருந்தார்கள்.

எல்லோர் முகத்திலும் ஆர்வம். ஒரு மாதமாக தாயம் விளையாடிக்கொண்டு இருந்தவர்களுக்கு இதுவும்  விளையாட்டுப்போல இருந்திருக்கும். “யோவ் நடேசா, நானும் எறங்குறேன்யா, கொழும்பு கொஞ்சம் குடுய்யா போதும்” என ரகு அப்பாவும் நீரில் இறங்கிக்கொண்டார். 

அப்பாவும், தாடிதாத்தாவும் பெரியவலையுடன் நிற்க, ரகுஅப்பா கொசுக்குடையை , தூரத்தில், கால்வாய் நீரில் அழுத்தி பிடித்து சத்தம்போட்டுக்கொண்டே தள்ளிக்கொண்டு வந்தார். சிறுநீர் கழிக்க வந்த முதலாளி , “தறிக்காரன் செய்ற வேலையாய  இது? கவாயில பாட்லு எதனா கிடந்து கைய கிழிச்சா, என்னையா பண்ணுவீங்க ?” என்றார். “இன்னிக்கி ஒரு நாளைக்கின்தாப்பா. வீட்ல கொர்ர்னு உங்கஞ்சிக்கினு இருக்கத்துக்கு என்னோமோ மாதிரி இருக்குது ” என்றார் தாடித்தாத்தா.

கால்வாயை தாண்டும் இந்த இடத்தை தவிர, மேல்பகுதியிலும், கீழ்பக்கமும் கரையோரம் எல்லாம் வேலிகாத்தான் மரங்கள் அடர்ந்திருக்கிறது. கீழ்ப்பக்கம் ஓடும் கால்வாய் சத்தமாக மட்டுமே கேட்கிறது. ஒரே கும்மிருட்டாக இருக்கிறது. இந்த விளக்கின் வெளிச்சத்தில் எல்லோருமாக மீன்களைப் பிடித்து, அன்னக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்கள். என் கைகளை மீன்களுக்கிடையே விட்டு அளாவிக் கொண்டிருந்தேன். மீன்களின் வழுக்கும் பரிசத்தில் சிரித்துக்கொண்டிருந்தேன். 

முதலில் தாடி தாத்தாதான் சத்தம் போட்டார். அப்போதே ஒரு பெரிய மீன் பெரியவலையை தாண்டி, கொசுக்குடைக்கும் பெரியவலைக்கும் இடைப்பட்ட நீரில் குதிப்பதை பார்த்தேன். அது யாரும் எதிர்பார்க்காத ஏரியின் பக்கமிருந்து வந்திருந்தது. “விறாலு, விறாலு” என எல்லோரும் கத்த தொடங்கிவிட்டார்கள். கரையில் நின்றவர்கள் கூட சட்டென நீரில் இறங்கிவிட்டார்கள். உணர்ச்சிவசப்பட்ட அப்பா, வலையை சட்டென தூக்கிவிட்டார். அவரைப் பார்த்து கொசுக்குடைக்காரரும் கால்வாயில் இருந்து வெளியே எடுத்து, வலைக்குள் விறாலை தேட ஆரம்பித்து விட்டார். இல்லை என தெரிந்ததும் பதறி, மீண்டும் அரைகுறையாக பெரியவலையை விரித்துக்கொண்டிருக்கும் போதே , குடைக்காரர் தூர ஓடி, அங்கேயே கொசுக்குடையை கால்வாயில் பொருத்தி சத்தம் போட்டு மீன்களை ஓட்டிக்கொண்டு வந்தார்.

 “விறாலு மீனுங்களுக்கு ராஜாப்பா. அப்டிலாம் மாட்டிக்காது. நல்ல தேடுங்கய்யா,” என்றார்  தாடிதாத்தா. கரையில் நின்றவர்களும் நீரில் இறங்கி, வத்திப்பெட்டியில் உரசிய  தீக்குச்சியைப் பிடித்துக்கொண்டு மீனை தேடத்தொடங்கினார்கள். 

சந்தடிகளைக் கேட்டு அம்மாவும் வந்துவிட்டாள். “பெரிய விறாலுமா” என்று நடந்ததை சொல்லும் போது, அப்பா தூரத்திலிருந்து கூப்பிட்டார். “ராஜா அந்த விளக்கை இங்கே எடுத்துக்கிட்டு வாடா”. நான் விளக்கை எடுத்துக்கொண்டு, வேகமாக நடந்தால், அணைந்துவிடுவதுப் போல் சுடர் சரிந்தாடியாது. சரிந்த தீபத்தை கைகளால் பொத்தி, நனைந்திருந்த தூண்கள் மேல் பொறுமையாக எட்டுவைத்து, நடந்தபோது, கரையோரமாய் அந்த விறால் ஒரே இடத்தில் வாலை ஆட்டிக்கொண்டு தைரியமாக நின்றுக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

என் காலை விட பெரிது. கரிய நீரை போல நெளியும் உடம்பு. அதன் கண்கள் ரத்தசிவப்பாக இருந்தன. அதற்க்கு பயம் இருப்பதாகவே தெரியவில்லை. அங்கிருந்த எல்லோரும் பதறி தேடிக்கொண்டிருக்கும் போதும், அது சாவகாசமாக அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது. என் மிலிட்டரி மாமாவை போல அதன் அசைவிலும் அவ்வளவு கம்பீரம். அது என்னை நோக்கித் திரும்பியது. என்னைத்தான் பார்க்கிறதோ எனத் தோன்ற நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது.

நெருங்கி வந்த அப்பா கவனித்துவிட்டார். பாய்ந்து அதன் மேலேயே விழுந்தார். சட்டென்று எல்லா பக்கங்களும் எல்லோரும் வந்து விட்டார்கள். அது பிடிபடவில்லை என்பதை அவர் எழுந்தபோதுதான் கவனித்தோம். எனக்கு ஆசுவாசமாக இருந்தது. அது தப்பித்துக்கொள்ள பிள்ளையாரை வேண்டிக்கொண்டேன் .

எல்லோரும் மந்திரித்து விட்டவர்கள் போல் ஆகிவிட்டார்கள். வலையை  எது எதுவோ போலவெல்லாம் ஓடும் நீரில் போட்டு வாரி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் கவனித்தபோது அத்தனை கலங்கின நீரிலும், அது கால் சந்துகளில் எல்லாம் புகுந்துப்  போவதை பார்க்கமுடிந்தது. அது மந்திரக்காரனை போல, ஒரு ராஜாவை போல ஒழுகிப்போய்க் கொண்டிருந்தது.

தாடிதாத்தாவும் நீரை கவனித்து, பின் சட்டென்று கொசுக்குடையைப் போட்டு அதை  வாரி எடுத்துவிட்டார். அதன் தலை மட்டும் வலைக்குள் சிக்கிக்கொண்டது. வால் காற்றில் அடித்துக்கொண்டிருந்தது. “நான் புடிச்சிட்டேன்” என்று சொல்லி, குடைமுனையை அக்குளில் கொடுத்து, மீனை பிடிக்க முயலும்போது, அது சுழன்று வாலால் அவர் வாயில் அடித்தது. அவர் “ஆ” என அப்படியே கொசுக்குடையை நீரில் போட்டுவிட்டார். அவரின் உதட்டில் இருந்து ரத்தம் வந்தது. 

அது ராக்கெட் போல, மடக்கின பக்கம் எல்லாம்,சட்சட்டென வளைந்து, சர்ரென அவர்களின் கால்களுக்குள் புகுந்து சுற்றிஅடித்தது. அப்படிதான் அது, பெரிய வலைக்குள்ளும் யாரும் எதிர்பாராத நொடியில் நுழைந்துவிட, அப்படியே சுருட்டி எடுத்து, அந்த வேகத்திலேயே கரைத்தூணில்  சுருட்டி அடித்தார் அப்பா . நான் கத்தி “அடிக்காதப்பா” என அலறும்போது, அம்மா என்னை வளைத்துப் பிடித்துவிட்டாள். நான் கத்திக்கொண்டு திமிறி அவள் பிடியில் இருந்து விடுபட முயலும் போது, முதுகில் தொப்தொப்பென்று அடி கிடைத்தது. “அந்த மீனக் கொல்லாதீங்கப்பா” எனக் கத்தி அழுகவும், அம்மா என்னை அடித்து வீட்டிற்கு இழுத்து சென்றுவிட்டாள். அழுது புலம்பி கொண்டிருந்த நான் பின் எப்போதோ தூங்கி போனேன்.

தூங்கிக்கொண்டிருந்தவனை அப்பாதான் எழுப்பினார். “துன்னாமலே தூங்கிட்டான்,” என அம்மா, ஒரு தட்டை அப்பாவிடம் கொடுத்தார்கள். மீன் குழம்பு வாசனை. ஆவி பறக்கும் அந்த குழம்பில், சோற்றைப் பிசைந்து, உருட்டி எனக்கு ஊட்டினார். அரைத்தூக்கத்திலும் ருசி நன்றாக தெரிந்தது. எழுந்து நன்றாக உட்கார்ந்துக்கொண்டு, ஊட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். புட்டுபோல இருந்த பெரிய மீன் கண்டத்திலிருந்து சதையை  பிட்டு  எடுத்து ஊட்டிவிட்டார். நான் “விறாலு எங்கப்பா?” என்றேன். “அது பாபு அண்ணன் வீட்டு கிணத்திலே விட்டிருக்கு. நாளைக்கு போய் பாரு” என்று சொல்லிக்கொண்டு, பொடி மீன் ஒன்றின் சதையை பெயர்த்து எடுத்து, சோற்றோடு சேர்த்து வைத்து ஊட்டிவிட்டார்.சாப்பிட்டு முடித்தபோது, அம்மா கிளாஸின் நீரைத் தொட்டு, வாயைத் துடைத்துவிட்டாள். மீண்டும் படுத்துக்கொண்டேன். நல்ல தூக்கம். “புள்ள நாளைக்கி ஏமாந்துறப் போகுதுங்க,” என அம்மா சொல்வது எங்கோ தூரமாக கேட்டது. அப்பா என்னவோ பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

பின் அந்த ரத்தச் சிவப்புக் கண்கள் உடைய விராலை பார்த்தேன். அது என் வயிறுக்குள் லாவகமாக வளைந்து, சுற்றிவந்துகொண்டிருந்தது. மையமாக நின்று, நின்ற இடத்திலியே துடுப்புகளை அலைபோல விசிறிக்கொண்டிருந்தது. பின் தலை மேல்வர கிடையை மாற்றி, என் கண்களை பார்த்தது.சட்டென தொப்புளை நெருங்கி “பொளக்” என முட்டைவிட்டுவிட்டு அடியாழத்திற்க்கு சென்று என்றென்றைக்குமாக மறைந்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.