அழியாத கோலங்கள்

கிருஷ்ணன் சங்கரன்

கிராமத்து விளையாட்டுக்களுக்கான சட்ட திட்டங்களைப் பிறப்பித்தவர் யாரோ?  அன்றெல்லாம் – இது எண்பதுகளின் ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தின் ஒரு சிற்றூரில் நடந்த கதை.- பருவ மாற்றங்களைப் போல விளையாட்டுக்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு தெருவில் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தால் ஊரின் எந்தத் தெருவுக்குப் போனாலும், அடுத்த ரெண்டு மாதத்திற்கு பம்பர விளையாட்டுதான்.  திடீரென்று ஒரு நாள் எல்லோரும் கிட்டிப் புள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதுவும் ரெண்டு மாதம்தான்.  அது போக அந்தந்தப்  பிரதேசங்களுக்கான ‘வீர’ விளையாட்டுக்கள். கருவேல மரத்தில் வில், சோளத்தட்டை அம்பு நுனியில் தார் தடவி முள் பதித்து பன்றிகளின் மேல் எய்து விளையாடும் சந்தோஷம்தான்..அடேயப்பா… 

காவியம்..

மணிக்காவியம்..

லாபத்தின் கொக்கு..

லட்சத்தின் மணல்வாரி..

சூடா..ஸ்டாங்கா..?

கிராமத்து ‘ஹை ஜம்ப்’பின் வெவ்வேறு படிநிலைகள். இதற்கெல்லாம் என்ன அர்த்தமோ? வெங்கடேசனின் சத்தம் ‘கிரௌண்ட்’டைக் கலக்கிக்கொண்டிருந்தது.  வகுப்பிலேயே  உயரமான பையன் வெங்கடேசன்தான். படிப்பில் மந்தம். அப்போதெல்லாம் இந்த மாதிரி வகுப்புக்கு ரெண்டு பேராவது இருப்பார்கள். இந்தக்காலமாக இருந்தால் ‘ஸ்பெஷல் சைல்ட்’ என்று கௌரவமாக நடத்தியிருப்பார்கள். அப்போதெல்லாம் சர்வ கேலி நிச்சயம். ‘நீ வேற..ஆனந்தம் பய என்னென்ன செய்வான்ற..’ என்று பசங்கள் அவனுடைய உறுப்பைப் பிடித்து விளையாடுவார்கள் என்று சொல்லியிருக்கிறான் முகம்மது. அதற்கேற்றாற்போல் அவ்வப்போது ‘ டீச்சர்ட்ட சொல்லிருவேண்டா’ என்று கடைசி பெஞ்சிலிருந்து வெங்கடேசனின் சத்தம் கேட்கும் போதெல்லாம் முகம்மது கண்ணைக் காட்டுவான். என்ன ஒன்று, அவனுடைய அப்பா அதே பள்ளியில் ஆசிரியராக இருந்ததால், அவனை எந்த டீச்சரும், சாரும் அடிக்க மாட்டார்கள்.

காவியம் என்று கத்திக்கொண்டே குனிந்து தரையைத் தொடும் வெங்கடேசன் ஒவ்வொரு நிலைக்கும் நாலு நாலு இஞ்சாக உயரத்தை ஏற்றிக்கொண்டு வருவான். ஏதோ குறைந்தால் தெய்வ குத்தம் போல ‘சவுண்டை’யும் ஏற்றிக் கொண்டே போவான். காவியத்திலேயே, குனிந்த திருக்கோலத்தில் மூன்றரை அடி உயரம் இருப்பான் வெங்கடேசன். நான் மணிக்காவியத்தைத் தாண்டியதில்லை. சூடா..ஸ்டாங்கா..வின் போது எப்போதும் ரெண்டே பேர்தான் களத்தில் இருப்பார்கள். செல்லப்பாண்டியும் ஆனந்தனும். யார் ஜெயித்தாலும் கரகோஷம் காதைப் பிளக்கும். 

அது வாரத்திற்கு ஒருமுறை வரும் பி டி பீரியட். தாலுகா ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற “கச்சேரி”யை ஒட்டிய சுற்றிலும் கருவேல மரங்கள் (ஸ்தல விருட்ஷம்?)  நிரம்பிய பொட்டல்தான் விளையாட்டு மைதானம். என்னதான் வேகாத வெய்யிலில் நடந்து போனாலும் படிப்பை விட்டு விலகியிருக்கும் அந்த ஒரு மணி நேரத்தை எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.  ‘ரீசஸ்’ பீரியடில் வாங்கிய ஜவ்வு முட்டாய்களும், ஈச்சம் பழங்களும் பரிமாறிக்கொள்ளப்படும். புட்பால், வாலிபால், கிரிக்கெட்  முதலிய விளையாட்டுக்களுக்கான எந்த உபகரணங்களும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் அது. பள்ளிக்கூடத்தின் நிதிநிலைமைக்கு எந்த பங்கமும்  விளைவிக்காத கபடி, கோகோ, பச்சக்குதிரை விளையாடிய நேரம் போக, போன வாரம் பார்த்த படம் பற்றியோ, செல்லப்பாண்டியின்(அவன் இல்லாதபோது) சமீபத்திய “திருவிளையாடல்கள்” பற்றியோ பேசிக்கொண்டிருப்போம். 

அவன் இருந்தால் அந்த இடமே களைகட்டும். ‘சாமி..இங்க கேளு…மதுரை சந்தைக்கு சித்தப்பா கூடப் போனனா….அங்க தங்கம் தியேட்டர் எதித்தாப்பல ஒரு சாராயக்கடை..அங்க எழுதிப் போட்டிருந்தாண்டா…இங்கு அய்யப்பசாமிகளுக்கு சுத்தமான கிளாசில் சாராயம் வழங்கப்படும்னு…இது எப்படி இருக்கு..’  இப்படி ஏதாவது புதுசு புதுசாகச் சொல்வான். நல்ல கபடி பிளேயர். எல்லா வகுப்புகளிலும் ஆற அமர ரெண்டுரெண்டு வருடம் படித்து வந்ததால், எங்கள் எல்லோருக்கும் பெரியண்ணன் போலவும், எல்லா சார்களுக்கும் தம்பி போலவும் இருப்பான் செல்லப்பாண்டி.”ராஜாதி ராஜாயப் ப்ரஸஹ்ய சாஹினே… ” என்று ஆரம்பித்து முழு மந்திரமும் சொல்லி, மாரியம்மன் கோயில் ஐயரை அப்படியே “இமிடேட்” செய்வான். ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டியருகே ஆவலோடு காத்திருக்கும் ரசிக நெஞ்சங்களுக்கு அன்பு கலந்த வணக்கம்’ என்று இலங்கை வானொலியின் நட்சத்திர அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா போலவே பேசிக்காட்டுவான்  நன்றாக எண்ணெய் தேய்த்து, “பப்” வைத்து படிய வாரிய தலை. நெற்றியில் திருநீறுக் கீற்று. நடுவே குங்குமப்பொட்டு. வாயில் எப்போதும் ஒட்டியிருக்கும் அந்தக் கால் இன்ச் சிரிப்பு என்று மங்களகரமான முகம். செல்லப்பாண்டிக்கு சர்ச்சில் ‘பாதரோ’டும் நல்ல பழக்கம் இருந்தது. பாதர் எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்திய அவருடைய துப்பாக்கியை அவனுடைய பட்டறையில்தான் ‘சர்வீஸ்’ செய்து கொள்வார். கிறிஸ்துமஸ் ‘கரோல்’ லிலும் அவனுடைய குரல் தனித்து ஒலிக்கும். அப்போது மட்டும் விபூதி,குங்குமம் பூச மாட்டான்.  பாதரோடு முயல் வேட்டைக்குப் போவான். பிடித்த முயலை எப்படி சூட்டாம் போடுவார்கள் என்று சொல்லி என்னைக் கதி கலங்கடிப்பதில் அவனுக்கு எல்லையில்லா ஆனந்தம். அன்றைக்கு மட்டும்  பாதர் ‘டொரினோ’ வில் எதோ கலந்து  தருவார் என்றும் சும்மா மெதக்குற மாதிரி இருக்கும் என்றும் சொல்வான்.

அவனுக்கு வேறு பல முகங்களும் உண்டு.  பி. டி சாருக்கும் இங்கிலிஷ் டீச்சருக்கு ஒரு “இது” உண்டு என்று அவன் பாலியல் வகுப்பு எடுத்து முடித்து  அப்போது எல்லா டீக்கடைகளிலும் முழங்கிக்கொண்டிருந்த ‘பதினாறு வயதினிலே’ பரட்டை குரலில் ‘இது எப்படி இருக்கு’ என்ற போது எனக்கு பயத்தில் கை, காலெல்லாம் ஆட்டம் கண்டு விட்டது. வீண் சண்டையிடுவது(அவன் நகம் பதியாத பையன்களே வகுப்பில் இல்லை), வாயைத் திறந்தால் பேசுகிற கெட்ட வார்த்தைகள் (அதில் சிலவற்றை வீட்டில் பேசி என் அப்பாவிடம் அடி வாங்கியதுண்டு)போன்று பல விஷயங்கள் மற்றவர்கள் அவனிடம் ஒரு பயம் கலந்த மரியாதையோடு பழகக் காரணமாக இருந்தது. இவ்வளவு இருந்தும்  ரேஷன் வாங்கி வருவது, பாங்கில் “செக்” கை டெபாசிட் செய்வது , கல்வி உயர் அதிகாரி ஆய்வுக்கு வரும் போது ஊமத்தங்காய் மற்றும் கரி சேர்த்து அரைத்து எல்லா போர்டுகளையும் மெழுகி “பிளாக் போர்டு” களாக மாற்றுவது – ஆனால் அதென்னவோ சரியாக உயர் அதிகாரி ஆய்வுக்கு வரும் அன்று செல்லப்பாண்டிக்கு “கௌரவ விடுப்பு” கொடுத்தனுப்பி விடுவார் வகுப்பு ஆசிரியர் – வாட்ச்மேன் வராதபோது மணி அடிப்பது – நான் ஒரே ஒரு முறை அடித்திருக்கிறேன். ஏதோ நாமே ஆயிரம் பேரை விடுதலை செய்ததுபோல் சந்தோஷமாக இருக்கும் – போன்ற “எக்ஸ்ட்ராக்கரிக்குலர்” விஷயங்களில் அவனை அடித்துக் கொள்ள ஆள் இல்லாததால் அவன் எப்போதும் ஆசிரியர்களுக்குச் செல்லப் பிள்ளைதான். இப்பிடியெல்லாம் மாங்குமாங்கென்று வேலை செய்வதால்தான் அவனை பள்ளிக்கூடத்திலிருந்து விடாமல் வைத்திருக்கிறார்களோ என்னவோ? 

அவனுடைய அப்பா இரும்புப் பட்டறை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் அங்கு வேலை செய்வான். வாரச்சந்தைக்கு வரும் மாட்டு வண்டிகளுக்கு அச்சுக்கூட்டுவது, வண்டிச்சக்கரங்களுக்கு இரும்புப்பட்டையடித்துத் தருவது, மாட்டுக்கு லாடம் கட்டுவது என்று வேலைகள். இவனுடைய சித்தப்பா ஒருவர் ஸ்கூலுக்கு அருகில் இருக்கும் “பிராமணாள் கபே” வாசலில்தான்(!) – பிடரியில் முடி வழிய வரலாறு புத்தகத்தில் இருக்கும் ராபர்ட் கிளைவ் போலவே இருப்பார் ஐயர் – வாரச்சந்தையன்று விதவிதமான அரிவாள்களைப்பரப்பி விற்றுக்கொண்டிருப்பார். ஸ்கூல் முடிந்ததும் அவரோடு சேர்ந்து கொள்வான்.  அவனுடைய சித்தப்பா ஒரு பல தொழில் வித்தகர். அரிவாள் கடையில் உட்கார்ந்து எப்போதும் புத்தகம்(!) படித்துக்கொண்டிருப்பார். ‘நமது நண்பன்’ என்ற பெயரில் ‘லெண்டிங் லைப்ரரி’ நடத்தி வந்தார். அவரை எனக்கு  முன்னாலிருந்தே தெரியும். எங்கள் வீட்டில் வாங்குவோம். அவர் கொண்டு வருகிற அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா மற்றும் பொன்னி, முத்து காமிக்ஸ் புத்தகங்களுக்கு நான் அடிமை.  ஒரு முறை தியேட்டரில் ‘டிக்கெட்’ கொடுத்துக்கொண்டிருந்தார்.   தேர்தல் சமயத்தில் ஒரு முறை சுவற்றில் ‘பசுவும் கன்றும்’ சின்னம் பெரிதாக வரைந்து கொண்டிருந்தார். சுற்று வட்டாரத்தில் எந்தக் கடைகளுக்காவது ‘சைன்’ போர்டு எழுதுவதென்றால் இவரைத்தான் கூப்பிடுவார்கள்

“கிரௌண்ட்” டிற்கு ஒரு ஐந்து நிமிடம் நடந்துதான் செல்லவேண்டும். பஞ்சாயத்து போர்டு தண்ணித் தொட்டியைத் தாண்டி ரெண்டு பக்கமும் கடைகள். சுமதி தட்டச்சு நிலையம் – வேலைக்குப் போகிறார்களோ, கல்யாணமாகி வேறு வீடு போகிறார்களோ பத்தாவது படித்த அக்காக்கள் கட்டாயம் பயிற்சி பெறுவார்கள்.        எஸ் பி பி யின் குரலில் ‘நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே’ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ் சேவை இரண்டின் நிகழ்ச்சிகள் பல கடைகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. விதூஷா,  ஜெயகிருஷ்ணா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா போன்ற நட்சத்திர அறிவிப்பாளர்களின் குரலில் ‘மரண அறிவித்தல்’ கூட இனிமையாகவே இருந்தது. தசரதனுக்கு ஒன்பது பெண்கள், புது செருப்பு கடிக்கும் என்று நம்ம ஊர் ரேடியோவில் கேட்க முடியாத பாடல்களும் போடுவார்கள். அன்றைக்கு நட்சத்திர அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா சினிமா நட்சத்திரங்களுக்கிணையான புகழுச்சியில் இருந்தார். பக்கத்து ‘மாமி’ – இவர்கள் கொங்கு பகுதியைச் சேர்ந்த நாயக்கர்கள் – வீட்டில் மூன்று அக்காக்கள் ‘திரை விருந்தில்’ பாசமலர் ஒலிச்சித்திரம் கேட்டு விசும்பி விசும்பி அழுதது ஞாபகத்திற்கு வருகிறது. பாட்டும் பதமும், ஒரு பொருட் கோவை, இசையும் கதையும் என்று கொடுக்கிற விதத்தில் கொடுத்து சாதாரண சினிமா பாடல்களையும் காலத்தால் அழியாமல் செய்து விட்டார்கள்…..ம்ம்ம்…  

கண்மாயை ஒட்டிய குடிசை ஓட்டல் ஒன்று. ஓட்டலுக்குப் பின்னால் முனையில் கம்பி வளையம் பொருத்தப்பட்ட நீண்ட கழிகளோடு ஆட்கள் விரட்டிக்கொண்டிருக்க  குர்க்..குர்க்.. என்று பன்றிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆடி வந்திருச்சில்ல…மாப்பிளைகளுக்குக் கொண்டாட்டம்தான்… என்றான் முகம்மது.  இவன் மீது எப்போதும் மீன் வாடையடிக்கும். அப்பாவுக்கு மீன் வியாபாரம். வகுப்பிலேயே நானும் ரெண்டு மூணு பொம்பளப்பிள்ளைகளும்தான் செருப்புப் போட்டிருப்போம். பி.டி பீரியட் இருப்பது மறந்து போய் இன்று செருப்பு போட்டு வந்து விட்டேன். இப்போது கூட பின்னாலிருந்து காலை செருப்புக்கு உள்ளே விட்டு என்னை விழுத்தாட்ட முயற்சி பண்ணிக்கொண்டிருந்தான் செல்லப்பாண்டி. இதோ கீழே கிடக்கிற தேங்காய் மட்டையை  மூன்றே உதையில் அங்கே நிற்கிற லாரியைத் தாண்டி கொண்டு சென்றுவிட்டால் இந்த முறையும் நான் தான் ‘பர்ஸ்ட் ரேங்க்’. ஒருவேளை நாலு உதையில்தான் கடக்குமென்றால், முதலிலேயே நான் நாலு உதை என்று நினைத்துக்கொண்டதாக நினைத்துக்கொண்டு எப்போதும் ‘வெற்றி’யை நிலை நாட்டுவது என் வழக்கம். எங்கே? ரெண்டாவது உதையிலேயே என் செருப்புக்குள் காலை விட்டு எண்ணத்தில் மண்ணைப்போட்டான் செல்லப்பாண்டி. தேங்கா மட்டை கருவேலம்புதருக்குள் போய்விட்டது. ” என்ன சாமி மொறைக்கிற….நல்…ல்லா சாப்பாடு போட்டுத்தான் அடிப்பாரு எஸ் ஐ” என்று கண்ணைக்காட்டினான்.ஓட்டலுக்கு வெளியே மூன்று போலீசார் நிற்க, கைதிகள் இருவர் விலங்குகளோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்..பி. டி சார் முன்னால் நடக்க பையன்களும் பிள்ளைகளும் தனித்தனி வரிசையாகப் பின் தொடர்ந்தோம்.

 “கமலகாசன்(பெரிய பெல்பாட்டம் பாண்ட் போட்டிருப்பார் சார்) இப்ப என்னையத்தான் உங்களெல்லாம் கூட்டிட்டுப் போகச் சொல்லுவார் பாரு….”என்று போய்க்கொண்டிருக்கும்போதே சொன்னான்.அதேபோல் “டேய், செல்லப்பாண்டி இன்னும் முக்கால் மணி நேரத்தில் பசங்களெல்லாம் கூட்டிட்டு ஸ்கூலுக்குப் போயிரு.. நான் நேர ஸ்கூலுக்கே வந்திருவேன்” என்றார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். “டேய் செல்லப்பாண்டி, சண்டை கிண்டைன்னு எதாவுது பேச்சு வந்துச்சு கொண்டே பொடுவேன் பாத்துக்க…, சத்தம் போடாம விளையாடணும் ..நான் திரும்பி வாரதுக்குள்ள எவனாவுது அங்கிட்டு இங்கிட்டுப் போனீங்க, டேய் சாமி, ஒன் “மஹாபாரதத்தை” ஆரம்பிச்சிறாத – இது எனக்கு. நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களிலிருந்து பசங்களுக்கு கதைகள் சொல்வதுண்டு. ஒரு முறை அபிமன்யு பத்ம வியூகத்தில் நடத்தும் போரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டார் –  கபடி டோர்னமெண்ட் இருக்கு…இந்தவாட்டி அய்யம்பாளையத்தை அடிக்கிறோம்.. கப்பு வாங்குரோம்.. பொம்பளைப் பிள்ளைகளோட தகறாருனு பேச்சு வந்துச்சு வெச்சு நிமித்திப்போடுவேன் பாத்துக்க” போன்று எப்போதும் கொடுக்கும் எச்சரிக்கைகளைச் செய்து விட்டு பி டி சார் ஓடை வழியே இறங்கிப் போய் விட்டார். “ஏ சாமி, சார் எங்க போறாரு தெரியுமில்ல, அங்கதான்… டீச்சர் இன்னைக்கு லீவு” என்று என்னைப்  பார்த்து கண்ணடித்தான் செல்லப்பாண்டி.- இதில் சாமி  என்பது என் பெயர் அல்ல. சாதி குறித்து சொல்லக் கூடிய ஒரு சொல் என்று சில நாட்கள் கழித்தே எனக்கு தெரிந்தது. மரியாதை, ஏளனம் இரண்டையும் இச்சொல்லின் வழியே சமஅளவிலே கடத்த முடியும். ஏளனம் புரிந்தபோது சண்டை பிடித்தேன். வீம்புக்கென்றே எல்லோரும் கூப்பிட என் பெயர் சாமியென்றே ஆனது. நாளாக ஆகப் பழகியும் விட்டது.

எல்லோரும் “குரூப்” பாகப் பிரிந்து கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.பொம்பளப்பிள்ளைகள் தனியாக புளிய மரத்தடியில் “கோ கோ” . சற்று நேரத்தில் செல்லப்பாண்டியும் ஆனந்தனும் மட்டும் “கிரௌண்ட் “டில் இல்லை. சாமி கவனிச்சேல்ல.. என்று முதலில் பார்த்துச் சொன்னவன் முகம்மதுதான். உதட்டின் மீது கையை வைத்து கருவேல மரக் காட்டை நோக்கி கண்ணைக் காட்டினான். சகாக்களிடம் ஒண்ணுக்கிருந்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவன் பின்னால் சென்றேன். மெதுவாக சிறிது தூரம் போனபின் அங்கிருந்த எருக்கிலைப் புதருக்குப் பின் எட்டிப்பார்த்தான். என்னையும் பார்க்கச் சொன்னான். விஷயம் இதுதான். செல்லப்பாண்டியும், ஆனந்தனும் “சிகரெட்” குடித்துக் கொண்டு எதைப் பற்றியோ காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய கெட்ட நேரம் இதைப் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்து கொள்ள உட்கார்ந்த நேரம்பார்த்து  கால் லேசாகச் சறுக்கி விட்டது. சுதாரித்து எழுந்திருப்பதற்குள் வந்து ரெண்டு பேரையும் பிடித்து விட்டான் செல்லப்பாண்டி. ரெண்டு பேர் கையையும் பிடித்து “பைக்” ஓட்டுவது போல் திருக ஆரம்பித்தான். ரெண்டு பேர் தலையும் முட்டிக்கொண்டது “கை ..கை.. ” என்று ரெண்டு பேரும் ஏக காலத்தில் கத்தினோம். “யார் கிட்டயாவது சொன்னீங்க… செந்தட்டிய……. வெச்சு தேச்சு விட்டிருவேன்… சொல்லுவீங்களாடா?… ” என்று திருகின திருகில் “மாட்டோம்.. மாட்டோம்…” என்று மன்றாடினோம். வாயிலே சிகரெட்டோடு பேசினாலும் தெளிவாகப் புரிந்தது. பின் ஒரு வழியாய் கையை விட்டான்.  அவனுக்கு வீட்டுப்பாடங்களில் செய்த உதவி வீண்போகவில்லை. எனக்கு திருகல் கம்மிதான். முகம்மதுதான் பாவம். “செந்தட்டி வைத்தியம்” ஏற்கனவே ஒரு முறை செல்லப்பாண்டி கையால் அனுபவித்திருக்கிறேன். அது ஒரு செடி. உடலில் பட்டால் அரித்துப் பிடுங்கும். சொறிந்து சொறிந்து ரத்த விளாறாகிவிடும். அதற்கு ஒரே மருந்து ஒண்ணுக்கிருந்து தடவ வேண்டியது தான். இந்தப் பரிகாரமும் போனால் போகிறதென்று அவன்தான் சொன்னான்.       

சரி விஷயத்திற்கு வருவோம். விளையாட்டு முடிந்து வகுப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். கணக்கு சார் உள்ளே நுழைந்தார்.வணக்கம் சார், என்று கோரஸாக எழுந்து நின்றோம். கிரிக்கெட் அம்பயர் “போர்” காட்டுவது போல் காட்டிவிட்டு உட்கார்ந்தார். “டூருக்கு யாரெல்லாம் காசு கொண்டு வந்திருக்கறது. வரிசையா வந்து பணத்தைக் குடு” என்றார். ஏழெட்டு மாணவர்கள் பணம் கொடுக்க எழுந்தார்கள். பக்கத்திலிருந்த ஒரு அணைக்கட்டுக்கு இன்பச்சுற்றுலா அழைத்துப்போக ஏற்பாடு செய்திருந்தார் கணக்கு சார். அப்போது திடீரென்று பெண்கள் பகுதியிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது. மஞ்சுளா “ஜாமெட்ரி பாக்”ஸில் வைத்திருந்த காசைக் காணோம் யாரோ எடுத்துவிட்டார்கள் என்று அழுதுகொண்டே சாரிடம் வந்து சொன்னாள். அவ்வளவுதான் கணக்கு சார் போட்ட சப்தத்தில் வகுப்பே “கப் சிப்”. “டேய் ஒண்ணு தெரிஞ்சிக்க..இன்னைக்கு யாரும் வீட்டுக்குப் போகப்போறதில்ல…எல்லார் பைக்கட்டையும் கொட்டி கம்ப்ளீட்டா செக் பண்ணப்போறேன்…பிறகு மாட்டுனய்யின்னா போலீஸ் ஸ்டேஷ னுக்கு போக தயாராயிக்க .. ” என்றார். 

பகல் உணவு இடைவேளையின் போது சாப்பிட்ட நேரம் போக கச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் குற்றவாளிகளை எப்படி விசாரிப்பார்கள் என்று பார்த்திருந்ததனால் எல்லோருமே ஒத்துக்கொண்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.”டேய், ஒண்ணு, ரெண்டு பத்து வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள எடுத்தவன் வரலையின்னா, சட்டை, டவுசர், பைக்கட்டு ஒண்ணுவிடாம தேடிட்டுத்தான் அனுப்புவேன். லேட்டாகும் பாத்துக்க ”  என்றவர் எண்ண ஆரம்பித்தார். ஒண்ணு..ரெண்டு…மூணு…நாலு… அடப்பாவி இவனா…. கையைக் கட்டிக்கொண்டுபோய் சார் முன்னால் நின்றான் செல்லப்பாண்டி. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு குச்சி உடையும் வரை, கை வலிக்கும்வரை அடித்துத் தீர்த்தார். பாவம் போலீசுக்குப் போயிருந்தால் கூட இவ்வளவு கிடைத்திருக்காது. ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள்ளிருந்த தவளை  – சயின்ஸ் சார் ஜீரண உறுப்பு விளக்கத்திற்காக அறுத்துக் காண்பிக்க பிடித்து வரச் சொல்லி இவன் பிடித்துவந்ததுதான்.இன்னைக்கு சயின்ஸ் சார் லீவு – செல்லப்பாண்டியையும் கணக்கு சாரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை அப்பாவைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். இல்லையேல் டி .சி கொடுக்கப்படும். ஆனால் ஸ்கூலுக்கே டி சி கொடுத்துவிட்டான் செல்லப்பாண்டி. அதன்பிறகு அவன் வரவே இல்லை. என் தந்தையின் பணி இடமாற்றம் காரணமாக நானும் விரைவிலேயே டி சி வாங்கிக்கொண்டு சென்னையில் தொடர்ந்து படிக்கவாரம்பித்தேன்.

இப்படி நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து மனத்திரையில் ஓடி மறைய வேண்டுமென்றால் என்ன காரணமாக இருக்கும்? அதிலே சம்பந்தப்பட்ட யாரையோ பார்த்திருக்கிறீர்கள்தானே?…யார்? செல்லப்பாண்டியா? வெங்கடேசனா? ஆனந்தனா? வருகிறேன். சென்னை விமானநிலையத்தில் அலுவலக வேலையாக லண்டன் போவதற்காக லவுஞ்சில் காத்துக்கொண்டிருந்தேன். கிளாஸ் பேனல்கள் அவ்வப்போது உடைந்து விழுவது வாடிக்கையான செய்தியானதால் பத்திரமான இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். பிரிட்டிஷ் ஏர்வேஸ் கிளம்ப நேரம் இருந்தது. கையிலிருந்த நாவலில் கவனத்தைச் செலுத்தினேன். சிறிது நேரத்திற்குப்பின் “செக்யூரிட்டி செக்” குக்கான அறிவிப்பு ஒலித்தது. எழுந்து மெதுவாக நகரும்போதுதான் “சூதானமா போயிட்டு  வாய்யா?” என்ற குரலைக் கேட்டுத் திரும்பினேன். அடடா..மண்ணின் மணம் கமழும் இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டுத்தான் எத்தனை நாளாகிவிட்டது. ‘ட்ராலி’யில் ஏற்றிய பெரிய பெரிய பெட்டிகளிலும் ‘கெளதம் செல்லப்பாண்டி’ என்ற பெயர் ஒட்டப்பட்டிருந்ததில் கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்தது. அதே குருவிகூட்டுத்தலை. விபூதிக்கீற்று. குங்குமப்பொட்டு. நாற்பது வருடமாக மாறாத அடையாளங்கள்.  கூடுதலாக வெள்ளை ஜிப்பா, வேட்டி. செல்லப்பாண்டீ.. . சத்தம் போட்டே கூப்பிட்டுவிட்டேன். 

நாற்பது வருடம் முந்திய நினைவுகள் நாற்பதடி தூரம் நடந்து முடிப்பதற்குள் ‘மான்டேஜ் ஷாட்’ களாக ஓடி மறைந்தன. தலை முடியெல்லாம் கொட்டிப்போன என்னை அவன் நிச்சயம் அடையாளம் காண முடியாது. நீங்க…? என்றான். சொன்னேன். அடடா..என்று கையைப் பிடித்துக்கொண்டான். ‘ஓல்ட்’ கெட்டப்பிலும் சுந்தரமாகத்தான் இருந்தான். “இதான் ஒய்ப்பு” என்று அறிமுகப்படுத்தினான். “வணக்கம்மா” என்று  கும்பிட்டுவிட்டு செல்லப்பாண்டியைப் பார்த்தேன். என்னையையே துளைக்கிறமாதிரி பார்த்துக்கொண்டிருந்தவன் ‘ஒய்ப்’ பக்கம் கண்ணைக்காட்டி “யார் தெரியுதா?” என்றான். அவன் சொன்ன பின்தான் ஞாபகம் வந்தது. தாமரை. சரிதான்…அப்போதே ஒரு கிசு கிசு உண்டு என்பது ஞாபகத்திற்கு வந்தது. குண்டாக அடையாளம் தெரியாமல் இருந்தாள். வகுப்பில் முதல் இரண்டு இடங்களை நானும், தாமரையும்தான் மாறி மாறி வாங்குவோம். என்ன லவ் மேரேஜா? என்று கேட்டேன். ஆமாமாம் என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினவன் “அன்னைக்கு கணக்கு சார் அடிச்சார் பாத்தியா, அதுக்கப்புறம் நான் பள்ளிக்கூடத்துக்கே போகலை. மஞ்சுளா பைலேர்ந்து காசெடுத்தவன் யார் தெரியுமா? ஆனந்தம்பயதான். அதை பி.டி பீரியட்லதான் கண்டு புடிச்சேன். கொடுமை பாரு, அன்னைக்குன்னு இவ பைக்கட்டுல பிரேயர் முடிஞ்சு மொத ஆளாவந்து லவ் லெட்டரை வெச்சேன் யாருக்கும் தெரியாம, அதை ஆனந்தம்பய பாத்துட்டான். ஒத்தரை ஒத்தர் காட்டிக்கொடுக்கக்கூடாதுன்னு அக்ரீமெண்ட்டு.ஆனா சாரு எல்லாரோட பைக்கட்டையும் சோதனை போடப்போறேன்னு சொன்னாரா, பயந்துட்டேன். மாட்டுனா இவளுக்கும் அவமானம். நமக்கென்ன பள்ளிக்கூடம் போனா இருக்கவே இருக்குது பட்டறை. அதான் செய்யாத குத்தத்தை ஒத்துக்கிட்டேன். இவ பேங்க்ல வேல பாத்து வி ஆர் எஸ் வாங்கியாச்சு. நான் பட்டறைய லேத்தாகிட்டேன். இந்தா, பையன் அமெரிக்கா போறான்.” என்று சுபம் மங்களம் போட்டு முடித்தான் செல்லப்பாண்டி. 

எனக்கு நான் படித்த நாவல்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. அவன் பையன் லண்டன் வரை நான் போகிற பிளைட்டில்தான் வருகிறான். எனக்குப் பக்கத்துக்கு ‘சீட்’. அங்கிருந்து பாஸ்டன். சாப்ட்வேர் என்ஜினீயர் மொபைல் நம்பர், அட்ரஸ் எல்லாம் பரிமாறிக்கொண்டோம்.ஊர்ப்பக்கம் வந்தால் கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் செல்லப்பாண்டி தம்பதியர்.நேரமானதால் விடை பெற்றுக்கொண்டேன். நான் இதுவரை கதை என்ற ஒன்றை எழுதியதில்லை. இதை வைத்து ஏன் ஒரு சிறுகதை எழுதக்கூடாது என்று தோன்றியது. பேரை மட்டும் மாற்றினால் போச்சு. ஆனா கதையில் இந்த ஆனந்தம் பயலை எப்படி தண்டிப்பது என்று யோசித்தபோது சிரிப்பு வந்து விட்டது.  லண்டன் வருவதற்குள் மேற்படி கதையையெல்லாம் ‘போரடிக்கவில்லையே’ என்று கேட்டுக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக செல்லப்பாண்டி பையனிடம் சொல்லி முடித்திருந்தேன்.

எங்களைப் போல கிராமத்து ஆட்களையும் அமெரிக்கா, ஐரோப்பா என்று தூக்கியடித்து விளையாடுகிற கல்வியின் மகோன்னத வீச்சை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. லண்டன் ஏர்போர்ட்டில், செல்லப்பாண்டி பையனிடம் ‘பாத்துப்பா… சூதானம்…ம்..’ என்று தோளில் தட்டி விடை பெற்றுக் கொண்டேன். இந்த வார்த்தையை இனி அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்கே சொல்லிக் கொண்டேன்.  திடீரென்று போன வருடம் சாலை விபத்தில் உயிர் நீத்த இவன் வயதேயான என் மகன் ஞாபகத்திற்கு வந்தான். அன்றைக்கு அவனும் சூதானமாகப் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.