கூடுகள்

கூடு

நான்ஸி க்ரெஸ்

விடிந்து சற்றே நேரம் கழித்து வேவுக் குழு இன்னொரு சம்பவம் பற்றிய தகவலைக் கொணர்ந்தனர். அந்தப் படை வீரர்கள் முழு அளவு உயிரின-ஆபத்துத் தடுப்பு உடுப்புகளை அணிந்திருந்தனர்; என்ன சொல்லியும் இது தொற்று அன்று என்று அவர்களை நம்ப வைக்க முடியவில்லை. உடலை மருத்துவ ஸ்ட்ரெச்சரில் இறக்கி வைத்தார்கள். நான் அதை தொற்றுத் தடை அறைக்குள் உருட்டி இழுத்துப் போனேன், அங்கு சோதனையிட்டேன்.

இந்த முறை, முதல் தடவையாக, அது ஒரு குழந்தை. சுமார் பதினோரு வயதான, பெண் குழந்தை. அவளுடைய முகத்தில் பாதி இன்னும் பார்வைக்குத் தெரிந்தது.

***

தன்னுடைய காஃபியில் இன்னும் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கிய வண்ணம், கர்னல் டெரென்ஸ் ஜேமிஸன் சொன்னார், “இதன் மொத்த அடிப்படையுமே கேலிக்கூத்தாக இருக்கிறது.”

நான் எதிர்பார்த்தது போலவே அவர் இல்லை. புது ஈடனில் இருந்த தலைமையகத்திலிருந்து வந்த விண்கலத்திலிருந்து அவர் முப்பது நிமிடங்கள் முன்புதான் இறங்கி இருந்தார், எக்கச்சக்கமான பொருட்களால் அடைசலாகி இருந்த என்னுடைய அலுவலக அறையில் இப்போது, பாதிரியாரிடம் தன் பாவங்களை ஒப்புக் கொடுக்க வந்தவரைப் போல, நுரைக் களியால் வார்த்த நாற்காலி ஒன்றின் விளிம்பில், அதைரியத்தோடு உட்கார்ந்திருந்தார். ஒல்லியாக இருந்த அவர், என் பார்வையைத் தன் வெளிறிய, பால் நீலக் கண்களால் சந்திக்கத் தயாராக இல்லாதவர் போலத் தெரிந்தார். சீருடையை அணியாமல் இருந்த அவர், பொறுப்பான பதவி ஏற்றவர் போலத் தெரிய வரவில்லை, ஏழு கிரகக் கூட்டு விண்வெளிப் படையில் ஓர் உயர் பதவியில் உள்ளவரைப் போல அவர் நிச்சயம் தோற்றம் தரவில்லை.

நான் சொன்னேன், “ஒரு வேளை அது கேலிக் கூத்துதானோ என்னவோ. என்ன இருந்தாலும், நம்மிடம் பதிவு செய்யப்பட்ட நிரூபணங்கள் ஏதும் இல்லை, ஏதோ வாய்வழிக் கதைகள்தான் உண்டு, அதுவும் பெரும்பாலான சமயம், நம்ப முடியாத இடங்களிலிருந்துதான்.”

ஜேமிஸன் என்னைப் பார்த்தபடி கண்களைக் கொட்டினார். “டாக்டர் ஸெய்பெர்ட்-”

“நோரா என்றால் போதும், ப்ளீஸ்,” நான் ராணுவத்தைச் சேராத வெளி ஒப்பந்தக்கார ஊழியர்,  அவரோ ‘மரியாதை நிமித்தம்’ பார்க்க வந்திருக்கிறாராம். ஆமாம், நான் அதை நம்ப வேண்டுமாம் போல.

“நோரா, உண்மையைச் சொன்னால், நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. மேல் மட்டத்தில் யாருக்கோ தலையைச் சுற்றித் தேனீக் குடைச்சல்.”

அவர் உண்மையைச் சொல்லவில்லை, ஜேமிஸன் எப்போதாவது ஒரு தேனீயைப் பார்த்திருப்பாரா? நான் பார்த்ததில்லை. நியூ ஈடனும் சரி, அங்குதான் நான் பிறந்திருந்தேன், ’காற்றின் பாட்டு’ என்ற இந்த எல்லைக் கிரகமும் சரி, தங்கள் தாவரங்களுக்கான மகரந்தச் சேர்க்கையை காற்றாலோ, பறவைகள் மூலமோ செய்து வந்தன. ஜேமிஸன் இங்கு ஏன் வந்திருக்கிறார் என்பதும், இதிலிருந்து எழக் கூடிய இரு வேறு முடிவுகளைப் பற்றியும் எனக்குக் கச்சிதமாகத் தெரிந்திருந்தன.

இரண்டில் எதுவும் நல்லதல்ல.

“டாக்டர்… நோரா,” அவர் சொன்னார், “நாம் துவங்கலாமா?”

***

 “கடவுளே!” என்றார் ஜேமிஸன். பிறகு, “எனக்கு இது தெரிந்திருக்கவில்லை…” இறுதியாக, ஓரளவு சுதாரித்த பிறகு, “தகவலாக வந்த படங்கள் போதுமானதாக இருக்கவில்லை.”

“ஆமாம்,” என்றேன்.

நாங்கள் ஸ்ட்ரெச்சர் அருகே நின்றிருந்தோம். அந்த “சிலந்திகள்,” அவை உண்மையில் சிலந்திகள் இல்லை, தங்கள் வேலையை அனேகமாக முடித்திருந்தன. அவளுடைய நிர்வாண உடலின் மீது ஒரு மெல்லிய, ஒளி புகும் படலமாக, மங்கிய சிவப்பு நிறத்தில் மிகச் சன்னமான இழைகள் பின்னப்பட்டிருந்தன. அந்தச் சிலந்திகள் சீரில்லாமல் வேலை செய்திருந்தன; அவளுடைய முன் நெற்றியும், கழுத்தும், குறியும் இன்னும் பூரணமாக மூடப்படவில்லை, ஆனால் அவளுடைய கண்களும், மொட்டாக எழும்பத் துவங்கிய மார்பகங்களும் ஏற்கனவே கூட்டுக்குள் மூடப்பட்டிருந்தன.

ஜேமிஸனின் முகம் அருவருப்பால் கோணியது. “அவள் மீதிருந்து அதையெல்லாம் நீங்கள் கழுவி விட்டிருக்கலாமில்லையா?”

அதற்கு விடை அவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்; பத்து வருடமாக இந்த நிலை பற்றிய தகவல் தெரிவிப்பு அறிக்கைகளில் அது இருந்தது. அப்படியானால் நாங்கள் இப்படி ஒளிவு மறைவு விளையாட்டுகளை விளையாடப் போகிறோம். நான் ஏதோ விஷயங்களைச் சொல்லாமல் கையில் வைத்திருக்கிறேன் என்பது அவர்கள் எண்ணம், அல்லது ஐயம் அல்லது எதிர்பார்ப்பு. அவர் அறியாதவர் போல பாவனை செய்வார், அப்படிச் செய்தால் என் பதில்களில் படையமைப்புக்குத் தேவையான ஏதோ தகவல் வெளிப்பட்டு விடும் என்பது அவர் நம்பிக்கை. ஜேமிசனுக்கு என்னைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ அதே அளவு அவரைப் பற்றி எனக்கும் தெரியும்; எனக்குத் தலைமையகத்தில் நண்பர்கள் இருந்தனர். பணயம் வைக்கப்பட்டிருந்தவற்றின் மதிப்பு மிக அதிகம் என்பதால் விளையாட மறுக்க முடியாது.

அதனால் நான் சொன்னேன், “நாங்கள் வெளியிலும், உள்ளேயும் நீரால் கழுவிப் பார்த்தோம், அது துவக்க வருடங்களில். இரு முறை. இரண்டு நோயாளிகளும் இறந்து போனார்கள். நீங்கள் ‘சிலந்திகளை’ப் பார்க்கிறீர்கள், ஆனால் அவளுடைய மூக்குத் துவாரங்கள், வாய், மலக்குடல், பெண் குறி, காதுகள் ஆகிய பகுதிகளில் எல்லாம் ஆக்கிரமித்து விட்ட மெல்லிய உயிரிப் படலத்தைப் பார்க்கவில்லை. முதல் சவப் பரிசோதனைகள் அவற்றை வெளிக்காட்டின. அவள் நுண்ணுயிரிகளாலான தகடுகளால் பீடிக்கப்பட்டிருக்கிறாள், உள்புறமிருந்து மாற்றப்பட்டாள். தயக்கம் வேண்டாம், நீங்கள் அவளைத் தொடலாம்- சிலந்திகளும், நுண்ணுயிரிகளும் ஏற்கனவே அவளுடைய இனக் கீற்று அமிலத்துடன் (டிஎன் ஏ) தம்மைப் பொருத்தமாக்கிக் கொண்டு விட்டன. அவை உங்களை ஏதும் செய்யாது.”

அவர் அவளைத் தொடவில்லை. “அவளுக்கு வலி இருக்கிறதா?”

“இல்லை.” அவர் கண்காணிப்புத் திரைகளை ஒரு தடவை கூடப் பார்க்கவில்லை, அவை அவளுடைய மூளை அலைகளில் வலி சிறிதும் பதிவாகவில்லை என்பதைத் தெளிவாகவே காட்டின. அவர் ஒரு மருத்துவர் இல்லை.

“அவள் யார்?”

“சில மணிகள் முன்புதான் அதை நாங்கள் சோதித்து உறுதி செய்தோம். அவள் பெயர் எலிஸபெத் ஜேன் டிபோர்ஷியோ, சேனை உறுப்பினரின் வாரிசு. அவளுடைய அம்மா ஒரு சுரங்கத்தின் ஆதார முகாமில் எடுபிடி வேலை செய்கிறாள்; அவளுக்கு அழைப்பு போயிருக்கிறது, அவள் கடற்கரைப் பகுதியிலிருந்து இங்கு கொணரப்படுவாள். அவளுடைய அப்பா சேனை உறுப்பினரை நம்பி வாழும் சாதாரண மனிதன். முதல் கட்ட அறிக்கைகளின் படி அவர் ஒரு குடிகாரர். இவளிடம் அவர் முறைகேடாக நடந்திருக்கக் கூடும்.”

“அதை யாரும் கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லையா?” கண்டனம் அவரிடமிருந்து பெருகி வழிந்தது. கரிசனம் இல்லை- கண்டனம். ஊழியரின் ஆதரவை நம்பி இருக்கிறவர்களில் குடிகாரர் அல்லது கெட்ட முறையில் நடத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் ராணுவத்தின் விதிமுறைகளால் ஏற்கப்படாதவர்கள். நம்பிக்கை இல்லாதவராகப் பாவிக்கும் முகமூடிக்குப் பின்னால் அவர் ஒரு கண்டிப்பான மனிதர். அவர் புது ஈடன் கிரகத்தின் ஈர்ப்பு விசையை விட இரண்டு ஜீக்கள் குறைவாக இருந்த காற்றின் பாட்டு கிரகத்தின் ஈர்ப்பு விசையை எளிதாகக் கையாண்டார், கிரகங்களிடைப் பயணங்களில் நிறைய அனுபவம் உள்ளவர் போலத் தெரிந்தார்.

“கர்னல்,” என்றேன் நான் இனிமையாக, “ஆல்ஃபா பேட்டா தளத்தில் 6500 பேர்கள் இப்போது, ராணுவத்தினரும், அல்லாதவருமாக. நாங்கள் எல்லாவற்றையும் பார்ப்பதோ, அனைத்தையும் கையாள்வதோ இயலாதது.”

அவர் அங்கீகரித்துத் தலை அசைத்தார், தொல்லை கொடுக்காதவர் என்பதாகப் பொய்யாகக் காட்டும் விதமாக: இங்கே இருப்பவரெல்லாம் வெறும் முயல்களே. “அவளுக்கு உள்புறம் என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று சொல்லுங்க.”

“அவளுடைய ஜீரணத்திற்கு உதவும் தாவரங்கள் – அவளுடைய வாயிலிருந்து ஆசன வாய் வரை பரவியுள்ள நுண்ணுயிரிகள்- அழிக்கப்படுகின்றன, மேம்படுத்தப்படுகின்றன, அல்லது அகற்றப்பட்டு, உயிரிப் படலங்களில் உள்ளவற்றால் அந்த இடம் நிரப்பப்படுகிறது. அந்த உயிரிப்படலங்களும், இனக் கீற்று அமிலத்தில்தான் அடிப்படையுள்ளவை- பேரண்டம் பூராவும் பரவியுள்ள உயிரிகள்தான், உங்களுக்கு அது தெரிந்திருக்குமே.”  நான் சற்று இளக்காரமாகத்தான் பேசினேன். அவர் சிறிதும் அசரவில்லை. “அவளுடைய பெருவாரி அவயங்கள் புது நுண்ணுயிரிகளுக்கு ஏற்ப சிறிதளவே மாற்றி அமைக்கப்படுகின்றன, அவளுடைய குரல் நாண்களைத் தவிர. அவை, மட்டும், மனித செவித்திறனுக்கு அப்பால் உயர் மட்டத்தில் இயங்கும் ஒலிகளை எழுப்பும்படி தீவிரமாக மாற்றப்படுகின்றன.”

“எதோடு தொடர்பு கொள்ள?”

“நமக்கு அது தெரியாது. ஒருக்கால் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளத்தான் இருக்கும். இது ஒரு பெரிய கிரகம், கர்னல், நம் படைகள் இதில் ஒரு சிறு புள்ளிதான். இரண்டு புள்ளிகள். ஆதார முகாமும், மலைகளில் உள்ள சுரங்க வேலைகளும்.”

பெரிய மனது வைத்து நான் அளித்த விளக்கத்துக்கு,“ஆமாம்,” என்று புன்னகையோடு, பதில் சொன்னார், ஆனால் அதில் சிறிதும் மகிழ்ச்சி இல்லை. நான் அவரை வெறுத்தேன். “எனக்குத் தெரியும். எப்படி இவை…அந்த…”

“நமக்குத் தெரியாது. பூமியில் சில சிலந்திகள் தம் இரைக்குள் தம் விஷத்தை கொடுக்கால் செலுத்துகின்றன, அது தசைகளை ஜீரணம் செய்ய உதவுகிறது. இந்தச் சிலந்திகள் ஒருவேளை, நம் இனக்கீற்று அமிலத்தைத் தன்னியல்பு இழக்கச் செய்யும் எதையோ உள்செலுத்துகின்றனவோ என்னவோ, அல்லது அதிலேயே வேறு பகுதிகளுக்குச் செயல் திறனூட்டுகின்றனவோ என்னவோ.  ஒருக்கால் இந்த நுண்ணுயிரிகள் தம்முடைய இனக்கீற்று அமிலத்தை, இந்த உடல்களுள் செலுத்தி, குறிப்பிட்ட உயிரணுக்களைக் கைப்பற்றுகின்றனவோ, நம் வைரஸ்களைப் போல. ஆனால், அனேகமாக பூமியில் இந்த நடப்பிற்கு ஈடான உதாரணங்கள் ஏதும் இரா.”

 “இந்த நுண்ணுயிரி நடவடிக்கை எந்த அளவுக்கு அவளுடைய மூளையைப் பாதிக்கிறது?”

“ஓரளவு. ஆனால் எத்தனை என்பதை அளப்பது இயலாதது. இவற்றில் மிகச் சிறியவை வைரஸ்களின் அளவே உள்ளன. அவை, வைரஸ்களைப் போலவே மூளை- இரத்தத் தடையைத் தாண்டிப் போகக் கூடியவை.” இதனால்தான் கர்னல் ஜேமிஸன் இங்கே வந்திருக்கிறார்.

முதல் தடவையாக, அவர் என்னை நேராகப் பார்த்தார். “இதெல்லாம் முழுதும் பூர்த்தியான விளைவுப் பொருளை நான் பார்க்க வேண்டும்.”

“அவர்கள் விளைவுப் பொருள் இல்லை, கர்னல். நாங்கள் அவர்களை ‘அந்துப் பூச்சிகள்’ என்று அழைக்கிறோம். மேலும் நாங்கள்-”

“அந்துப் பூச்சிகளா? அவர்களுக்கு ஏதும் இறக்கைகள் போல இருக்கிறதா என்ன?”

“இல்லை, நிச்சயமாக இல்லை. அந்தப் பெயர் கொஞ்சம் அதிக பட்சம் என்று நான் ஒத்துக் கொள்வேன். கூட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர்களை தளத்தினுள்ளே நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் காட்டுக்குள் போய் விடுகிறார்கள்.”

“ஆனால் சிலர் திரிந்து விட்டுத் திரும்பி வருகிறார்களே. ஒருத்தர் இங்கே இப்போது இருக்கிறாரே.”

நான் நினைத்ததை விட மேலான உளவுத் தகவல் அவருக்குக் கிடைத்திருந்தது. வாரன் குடும்பத்தினர் தங்கள் மகனின் வருகைகளை ரகசியமாக வைக்க முயன்றிருந்தனர்.

ஜேமிஸன் சொன்னார், “நான் ப்ரெண்ட் வாரனைப் பார்க்க விரும்புகிறேன்.”

***

நாங்கள் எலிஸபெத் டிபோர்ஷியோ.  நாங்கள் வாழ்க்கையை வெறுக்கிறோம். நாங்கள் இந்த மாறுதலைத் தேர்ந்தெடுத்தோம். அதை விட இது மோசமாக இருக்க முடியாது.

***

முதல் நபர் ஒரு விபத்து. பத்து வருடங்கள் முன்பு, கார்ப்பொரல் நேதன் கார்டர், ப்ரைவேட் ஸல்லி ஓகீஃப், மற்றும் ப்ரைவேட் ஸாரா லானோவ்ஸ்கி ஆகியோர் தளத்தை விட்டுப் போய், காட்டுக்குள் ‘கேளிக்கை விருந்து’க்குப் போனார்கள். அது முற்றிலும் முட்டாள்தனமானது, ஏனெனில் காற்றின் பாட்டு கிரகம் வேட்டையாடும் மிருகங்களின் இருப்பிடம், அவற்றில் ஒன்று ரைனாஸ்ரஸ் அளவு பெரியதும் கூட. பெருமளவு இன்னும் தேடிப் பார்க்கப்படாத இந்த பெரும் கண்டத்தில், அதை விடவும் பெரியதான, மேலும் ஆபத்தான மிருகங்கள் இருக்கக் கூடும். ஆனால் இந்த மூன்று படைவீரர்களும் இளைஞர்கள், எல்லா இடங்களிலும் இருக்கும் இளைஞர்களைப் போலவே, தம்மை அழிக்கப்பட முடியாதவர்கள் என்று எண்ணியிருப்பார்கள். அங்கு மது, போதைப் பொருட்கள், மேலும் பாலுறவு ஆகியன இருந்தன. அடுத்த நாள் மாலையில், ஓகீஃபும், லானோவ்ஸ்கியும், ஏற்கனவே விடுப்பு இல்லாமல் தளத்தை விட்டு நீங்கிய குற்றமிழைத்தவர்களாக (AWOL) கருதப்பட்டவர்களாகி இருந்தவர்கள், தள்ளாடியபடி தளத்தை வந்து அடைந்தனர். கார்டர் காணாமல் போயிருந்தான். தேடும் குழுவினர் அவனை கால் மைல் தூரத்தில் கண்டு பிடித்தனர்.  சிலந்திகளும், உயிரிப் படலமும் ஏற்கனவே அவனை கூட்டுக்குள் அடைக்கத் துவங்கி இருந்தன. அவனை நோய்த் தடுப்பறையில் சேர்த்து, மேலே படர்ந்த மெல்லிழைகளை நீரால் அடித்து நீக்கி, அவனுக்கு அனைத்து கிருமிகளையும் அழிக்கும் ஆண்டி பயாடிக் மருந்துகள், ஆண்டி வைரல் மருந்துகளால் தாக்கி, அது தவிர மருத்துவத்திடம் இருந்த எல்லா ஆயுதங்களாலும் தாக்கினர். அவனுடைய இருதயம் நின்று போனது, அவன் இறந்து போனான்.

அதன் பின் இது வரை இருபத்தி இரண்டு நபர்கள் இப்படி ஆனார்கள். சில விபத்துகள், சில தற்கொலைகளாக இருக்கலாம். அனேகமும் சுரங்க முகாமில் ஏற்பட்டவை, புவியியல் ரீதியிலும், மனித வாழ்க்கை என்னுமளவிலும் கடினமான சூழல் கொண்ட இடம். இங்குதான், விண் வெளிப் பயண நிலையத்துக்கேற்ற சமதளம் கொண்ட நிலம், இதில் ஒரு பெரும் எல்லையை வேதிப் பொருட்களில் ஊறச் செய்து சிலந்திகளை உள்ளே புகாமல் தூர வைக்க முடிகிறது. தளத்துக்குள் எவரும் இன்னும் கூட்டுக்குள் சிக்கவில்லை.

எலிஸபெத் டி போர்ஷியோ, வேண்டுமென்றே தளத்தை விட்டு வெளியேறி நடந்து போயிருக்கிறாள், இரவில். ப்ரெண்ட் வாரன் சுரங்க முகாமில் பறி போனான். எலிஸபெத்திற்கு முன்னால், அவன் ஒருத்தன்தான், திரும்பி வர ஒரு குடும்பம் இருந்த, ‘அந்துப் பூச்சி.’

ஏழு கிரக கூட்டு விண்வெளிப் படையின் மிதவை விமானம் தளத்திலிருந்து ஒரு மைல் தள்ளி கீழே இறங்கியது, அது அடர்ந்த தோப்புகளுக்கும், ஆறுக்கும் இடையே இருந்த சமதளப் புல்வெளி. ஒரு தரை உலாவி ஏற்கனவே அங்கு நின்றது. விமான ஓட்டி எஞ்சினை நிறுத்தினார். ஜேமிஸன் என்னிடம் சொன்னார், “அது படையின் தரை உலாவி இல்லை. அந்தக் குடும்பத்திடம் சொந்தமாக ஒன்று இருக்கிறதா?”

“அது அவர்களுடைய சர்ச்சுடையது, சர்ச் அவர்களுக்கு அதைக் கடனாகக் கொடுக்கிறது. வாரன் குடும்பத்தினர் நல்ல மனிதர்கள், கர்னல். ஒற்றுமையான குடும்பம், அதனால்தான் ப்ரெண்ட் சுரங்க முகாமிலிருந்து இங்கே வர முயன்றிருக்கிறான், அதனால்தான் சில மாதங்களுக்கு ஒரு முறை அவர்களைப் பார்க்க வர விரும்புகிறான்.”

“அவன் எப்படி—”

“அவன் சும்மா இங்கே வந்து, காத்திருக்கிறான். கடைசியில் ஒரு தானியங்கி விமானத்தின் காமெரா அவனைக் காண்கிறது, யாராவது அந்தக் குடும்பத்துக்குத் தெரிவிக்கிறார்கள்.”

அவர் வாய் இறுகியது. “அது படையின் தானியங்கி விமானக் காமெரா.”

 “ப்ரெண்டைக் கண்டு பிடிப்பதற்காக, அது தன் வழக்கமான வேலையிலிருந்து விலகவில்லை.” ஜேமிசனைக் கூடுதலாகப் பார்க்கப் பார்க்க, எனக்கு அச்சம் கூடி வந்தது.

“வாரன்கள் எங்கே இருக்கிறார்கள்…. அப்புறம் அவன்?”

அவர் கிட்டத் தட்ட “அது” என்று சொல்ல இருந்தார். நான் சடேரென்று வெட்டினேன், “எனக்கு எப்படித் தெரியும்?” அவர் – அமைதியாக, தன்னம்பிக்கை இல்லாதவர் போல, முயல் போல ஆபத்தற்றவராக- என்னைப் பார்த்தார், பிறகு ஏதும் சொல்லவில்லை. நான் மேலும் சொன்னேன், “நாம் காத்திருக்கலாம்.” மிதவை விமானத்திலிருந்து நான் கீழே இறங்கினேன். ஜேமிஸன் பின் தொடர்ந்தார். இந்த கிரகத்துக்கு அதன் நகைப்புக்குரிய விதத்தில் கவித்துவம் கொண்ட பெயரைத் தரக் காரணமான காற்று எங்கள் முகங்களில் அடித்தது. கதகதப்பான, இனிமையான வாசம் கொண்ட காற்று, தென்றலும் இல்லாது, புயலும் இல்லாது, விடியற்காலையிலிருந்து சூரிய அஸ்தமனம் வரை வீசியது.

சில நிமிடங்கள் கழிந்த பின், ஜீனாவும், டெட் வாரனும் மரங்கள் நடுவிருந்து வெளியே வந்தனர். அவர்களுடைய சிறு பெண்ணும் அவர்களோடு இருந்தாள், அவளுடைய பெயரை நான் நினைவு கூர முடியவில்லை. ப்ரெண்ட் பின்னே வந்தான். ஒரு சாதாரணக் குடும்பம், சனிக்கிழமை நடை பயில வெளியே போனவர்கள் போல.

ஜேமிஸன் ஆழமாக மூச்சை உள்ளிழுத்தார்.

ப்ரெண்ட் இலேசாக நடந்தான், நீரொழுகுவது போல, ஒரு நாட்டியக்காரன் போல. அவன் நிர்வாணமாக இருந்தான். கூட்டுக்குள்ளிருக்கும் நிலை ஒரு வாரம் போல நீடிக்கும்- சில நேரம் மேலும் கூடுதலான அல்லது குறைவான நாட்கள் பிடிக்கும். ஏனென்று எங்களுக்குத் தெரியவில்லை. என்ன வெளியே வருகிறதோ, அது மனிதனில்லை. அந்த உருவுக்கு இன்னும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், உடல், மேலும் தலை இருந்தது. அந்த மங்கிய சிவப்புத் தோலில் எங்கும் தூரிகை முடி போலச் சிறு முண்டுகள் இருந்தன- மயிர் இல்லை, மிருக உரோமம் இல்லை, செதிள்களில்லை- அவற்றின் பயன் என்ன என்று தெரியவில்லை. தலைதான் அருவருப்பூட்டியது.

ப்ரெண்டின் முகம் வீங்கி, உருண்டையான, வழுமூனான பந்து போல இருந்தது. துவக்கத்தில் செய்த இரண்டு சவப் பரிசோதனைகளும் காட்டின, தோலுக்குக் கீழே தசை சேர்க்கப்பட்டிருந்தது, அதில் இருந்த நுண்ணுறுப்புகளின் பயன்பாடு இன்னதென்று தெரியவில்லை, ஆனால் அவை மூளைக்குள் ஆழமாகத் தங்களின் சுருளிழைகளைச் செலுத்தி இருந்தன. ப்ரெண்டின் முகத்தின் பரப்பில், அம்சங்கள் மிகக் குறைக்கப்பட்டிருந்தன. அவனுடைய மூக்கு இரு சிறு துளைகளாகி இருந்தது. வாய் உதடுகள் இல்லாத ஒரு பிளவாக, சிரிக்கவோ, சுருக்கவோ உதவும் உயர்த்தித் தசைகள் இல்லாததாகியிருந்தது. முகத்துக்கு மேலே, தலையின் மேல்புறம் ஒரு இரண்டாவது, சிறிய வீக்கம் இருந்தது. அவன் கண்கள் மட்டுமே அப்படியே இருந்தன, பச்சைத் துண்டுகள் இருந்த சாம்பல் நிறத்தோடு. வாரன் தம்பதியர் தம் மகனின் கண்களைத்தான் அடிக்கடி பார்த்தனர்.

அவர்கள் எங்களைப் பார்த்து நிச்சயமற்று, நடப்பதை நிறுத்தினர், ஜீனா புன்னகைத்தார், ஆனால் அவருடைய கண்கள் ஜேமிஸனின் சீருடை மீது நோக்கி விட்டுத் துடித்தன. டெட் சிரிக்கவில்லை. இருவரும் படைகளில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணி செய்தவர்கள், ப்ரெண்டுக்கு இப்படி ஆகுமுன் இருவரும் கிளம்பிப் போய் விடத் தீர்மானித்திருந்தனர். ஆனால், இப்போது அவர்கள் தங்கி விடுவார்கள், அவனுக்கு அருகில் இருப்பதற்காக. ஆனால் எங்களைப் போலவே வாரன் தம்பதியருக்கும், என்ன வதந்திகள் தலைமையகத்துக்குப் போயிருக்கும் என்பது தெரிந்திருக்கும்.

“கர்னல் ஜேமிஸன், இவர்கள் டெட்டும், ஜீனா வாரனும், இவர்களின் பெண்… ஆஆ..”

”எலீஸ்,” ஜீனா சொன்னார்.

”ஆமாம், மன்னியுங்க, எலீஸ். அப்புறம் இவன் ப்ரெண்ட்.”

ப்ரெண்ட் ஜேமிஸனை எந்த உணர்ச்சியும் முகத்தில் இல்லாது உற்று நோக்கினான். அவனுடைய உதடுகளில்லாத வாய் சிறிதே அசைந்தது, ஆனால் அவன் என்ன சொல்லி இருந்தாலும், எந்த கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழியாக அதிருந்தாலும், அது எங்களிடம் சொல்லப்படவில்லை.

***

நான் எலிஸபெத் டி போர்ஷியோ. என் வாழ்வை வெறுக்கிறேன். இந்த மாறுதலைத் தேர்ந்தெடுத்தேன். அது மேலும் மோசமானதாக இருக்க முடியாது.

***

அந்த சந்திப்பை ஜேமிஸன் தன் பொறுப்பிலெடுத்துக் கொண்டார், அந்த ஆறு மேலும் காற்றின் ஓசைக்கு மேலாகத் தன் குரலை உயர்த்தினார், ஆனால் தன் பணிவான, முயல் தனமான குணத்தை விடாமல் வைத்துக் கொண்டார். இருந்த போதும், அவருடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்தோம். அவர் படைகளுக்கானவர், படைகளே காற்றின் பாட்டு கிரகத்தை ஆண்டனர்.

”கனம் வாரன் அவர்களே,  உங்களால் உங்கள் மகனோடு பேச முடிகிறதா?”

“இல்லை.”

“நீங்கள் அவனோடு சைகைகளால் தொடர்பு கொள்கிறீர்களா?”

“அனேகமாக, ஆமாம்.”

“அதை எனக்குச் செய்து காட்டுகிறீர்களா?”

டெட் வாரனின் தாடை இறுகி உறைந்தது. ஜீனா தன் கணவனின் கை மீது தன் கையை வைத்தார், சொன்னார், “நாம் முயலலாம். ப்ரெண்ட் கண்ணே, கர்னல் ஜேமிஸனுக்கு நீ எங்களுக்காகக் கண்டு பிடித்த மூலிகைகளைத் தயவு செய்து காட்டுகிறாயா?”

ப்ரெண்ட் அசையவே இல்லை. ஆனால் அவனுடைய இடது கை இலேசாக சுருண்டு இருந்தது, அதில் அவன் ஏதோ பிடித்துக் கொண்டிருப்பது போல.

“தயவு செய்து, ப்ரெண்ட்.”

ஏதும் நடக்கவில்லை.

ஜீனா தன் மகனின் இடது கரத்தைத் தொடுவது போல நகர்ந்தார். டெட் அவரை நிறுத்தினார். “அவனுக்குக் காட்ட விருப்பமில்லை, அன்பே.”

எலீஸ் ஜீனாவின் பின்புறம் நகர்ந்தாள், அம்மாவின் கால்களைப் பிடித்துக் கொண்டாள்.

ஜீனா ஜேமிஸனிடம் சொன்னார், “சரி, அவன் எங்களுக்குச் சில மூலிகைகளைக் காட்டினான், பிறகு எங்களுக்குக் கொஞ்சம் கொடுத்தான்.” அவர் தன் கையைக் காட்டினார், அதில்  ஊதா நிறத்துத் தண்டுகளில் ஊதா இலைகளோடு ஒரு சிறு கொத்து இருந்தது. “அவனிடம் எனக்குத் தலைவலி இருக்கிறதென்று சொன்னேன், அவன் இவற்றைப் பறித்து, இவற்றை மென்று தின்பதாக மௌனச் சைகை செய்து காட்டினான்.”

நான் துரிதமாகச் சொன்னேன்,”ஜீனா, தயவு செய்து அவற்றைச் சாப்பிடாதீர்கள். ப்ரெண்டின் உடலின் வளர் சிதை மாற்றம்- ஒருக்கால்- நம்முடையதிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும். இப்போது.”

ஜேமிஸனுக்கு எவருடைய உடலின் வளர் சிதை மாற்றம் குறித்தும் அக்கறை இருக்கவில்லை. அவர் சொன்னார், “இது… ப்ரெண்ட் இன்னும் இங்கிலிஷைப் புரிந்து கொள்கிறானா? நீங்கள் அவனிடம் சொல்வதை அவன் அறிந்திருக்கிறானா?”

“ஆமாம்,” டெட் சொன்னார். ஜேமிஸன் மீது அவருக்கிருந்த வெறுப்பு அவரிடமிருந்து ஒரு வெப்ப அலை போல வெளிப்பட்டது.

“அவன் கூட்டுக்குள்ளிருந்து வெளி வந்த பிறகு எப்போதுமே நீங்கள் சொல்வதைப் புரிந்து கொண்டிருந்தானா?”

“ஆமாம்.”

“நீங்கள் அவனுக்கு ஒரு ஆணை பிறப்பித்தால் அவன் அதைச் செய்கிறானா?”

“நான் அவனுக்கு ஆணைகள் பிறப்பிப்பதில்லை.”

“நீங்கள் சொல்வதற்கு மறுவினை செய்வதைத் தவிர, அவனாகவே சைகைகளாலோ, மௌன ஜாடையாலோ அல்லது வேறு ஏதோ வழியிலோ, தகவல் தருகிறானா?”

இப்போது நாங்கள் விஷயத்திற்கு வந்து கொண்டிருந்தோம்.

“ஆமாம்.” டெட் சொன்னார்.

“என்ன மாதிரி தகவல்?”

ஜீனா சொன்னார்,”அவன் எங்களிடம், தான் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொன்னான். நாங்கள் கேட்குமுன்பே.”

“அதை அவன் உங்களுக்கு எப்படிச் சொல்கிறான்?” ஜேமிஸன் கேட்டார்.

ஜீனா அதற்குப் பதில் சொல்லுமுன், அல்லது டெட் ஏதாவது குத்தலாகச் சொல்லுமுன், ப்ரெண்ட் ஓரடி முன்னெடுத்து வைத்தான். ஓர் அடி, இரண்டு. ஜேமிஸன் பின்னால் போகவில்லை- அந்த மட்டில் அவரை நான் மெச்ச வேண்டும்- ஆனால் மிதவை விமானத்தில், ஓட்டி விறுவிறுப்பானார். வாரன் தம்பதியர் அதைப் பார்க்கவில்லை. ப்ரெண்ட் அதைப் பார்த்தானா அல்லது அதைப் புரிந்து கொண்டானா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவன் நடப்பதை நிறுத்தினான். அவனுடைய உதடில்லாத வாய் அசைந்தது, காற்றிடம் பேசுவது போல- நிச்சயமாக எங்களிடம் இல்லை, ஏனெனில் எங்களால் அவன் பேசுவதைக் கேட்க முடியாது என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வேறு யார் அல்லது எது அதைக் கேட்டுக் கொண்டிருந்தது?

ப்ரெண்ட் தன் பெற்றோரை நோக்கிப் பாதி திரும்பினான், தன் வலது கையை வாயிடம் கொண்டு சென்றான். வாயைத் தன் உள்ளங்கையில் ஒத்தினான், பிறகு அதை வாரன் தம்பதியரை நோக்கி விரித்தான். ஒரு முத்தம்.

பிறகு அவன் போய் விட்டான், தோப்புகளை நோக்கிப் பெரும் எட்டுகளாக எடுத்து வைத்து ஓடினான், மரங்களிடையே மறைந்து போனான்.

நான் ஒருபோதும் அழுவதில்லை, ஆனால் என் கண்களில் நீர் மல்கியதை உணர்ந்தேன்.

ஜேமிஸன் சொன்னார், “அவன் உங்களை ஒரு போதும் தொடுவதில்லையா?”

“அவன் தொடுகிறான், ஆமாம்.” ஜீனா உடனே சொன்னார், டெட் பதிலளிக்கு முன்.

“அவன் உங்களைத் தொடும்போது, அவன் மீதுள்ள முண்டுகள் ஒட்டிக் கொள்வது போலிருக்குமா, செதிள்கள் போலவா அல்லது வேறெப்படி?

“தொலைஞ்சு போங்க,” என்றார் டெட்.

***

நான் எலிஸபெத் டி போர்ஷியோ.  நாங்கள் என் வாழ்வை வெறுக்கிறோம். Ø . அது நல்லதாக இருக்கும்.

***

மிதவை விமானத்தில், நான் கேட்டேன், “நீங்க என்ன கேட்கணும்னு நினைச்சீங்களோ, அதைக் கடைசி வரை கேட்கவேயில்லை. அவங்களை விரோதிச்சுக்கிட்டீங்க, நீங்க அதை வேணும்னே செய்தீங்க. ஏன்?”

ஜேமிஸன் மென்மையாகச் சொன்னார்,” நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குக் கொஞ்சமும் புரியல்லே.” பிறகு மேலும், “அவர்கள் அந்தச் சிறுமியை நிர்வாணமாக இருக்கிற அதன் கிட்டே கொண்டு வரக் கூடாது.”

நான் பதில் சொல்லவில்லை. எனக்கு யோசிக்க வேண்டி இருந்தது. ஜேமிஸன் எதற்காக இங்கு அனுப்பப்பட்டிருந்தாரோ, அதைச் செய்யவே இல்லை, அதற்கு ஒரு காரணம்தான் இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.

***

நான் எலிஸபெத் டி போர்ஷியோ. நாங்கள் என் வாழ்க்கை. Ø. அது நல்லதாக இருக்கும். 

***

மருத்துவ மனையில், எலிஸபெத் டி போர்ஷியோவின் பெற்றோர்கள் ஒரு சோதனை அறையில் அமர்ந்திருந்தனர். என் உதவியாளர், கர்ட் சொன்னார், “அவங்களை நான் உங்க ஆஃபிஸுக்குள்ளே விட மாட்டேன், அப்புறம் நோயாளியைப் பார்க்க நிச்சயமா அழைச்சுப் போக மாட்டேன், அவங்க யாராயிருந்தாலும் சரி, எனக்குக் கவலையில்லை.” என்று கோபித்துக் கொண்டார்.

பீடர் டி போர்ஷியோ ஒரு நாற்காலியில் தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தார், கண்கள் பாதி மூடியிருந்தன, ஆல்கஹாலும், வியர்வையுமாகக் கலந்த நெடி. பெவர்லி டி போர்ஷியோ, கட்டுமஸ்தான முப்பது வயதுப் பெண், சுரங்கத் தொழிலாளியின் உடுப்புகளை அணிந்திருந்தார், அடித்து மிதித்து விடுவார் போல ஆத்திரமாக இருந்தார். “….தா, என் பொண்ணுக்கு இப்படி ஆகும்படி எப்படி விட்டீங்க! நானும் படையிலதான் வேலை செய்றேன், நீங்கதான் எங்களைப் பாதுகாக்கணும், ஆனால் இப்ப நீங்க… அவங்க…”

“எலிஸபெத்துக்கு இப்படி ஆனதுக்கு நான் ரொம்ப வருந்தறேன்,” நான் சொன்னேன், “ ஆனால் இது படைகளோட பொறுப்புல இல்லை, என் பொறுப்பும் இல்லை. எலிஸபெத் முகாமை விட்டு ராத்திரில போயிருக்கா. அப்ப அதைக் கவனிக்க யாரும் வீட்டுல இல்லை போல இருக்கு.”

பீடர் டி போர்ஷியோ முணுமுணுத்தார், “கெட்ட விதை.”

நான் சரியாகக் கேட்கவில்லை போல என்று நினைத்தேன். அவரை மறுபடி சொல்லக் கேட்குமுன், பெவர்லி சொன்னார், “நான் எலிஸபெத்தைப் பார்க்கணும்.”

“நிச்சயமா, ஆனால் நான் உங்களை அதுக்குத் தயார்-”

“அந்தக் குப்பையை எல்லாம் தள்ளுங்க. நான் அவளைப் பார்க்கணும்!”

அவர்களை எலிஸபெத்தின் அறைக்கு அழைத்துச் சென்றேன். பீடர் கால்களைத் தேய்த்து இழுத்து நடந்தார், அப்படி ஒரு நடையை என்னால் கற்பனை செய்யக் கூட முடிந்திராது. அவருடைய உடலின் கீழ் பகுதி தள்ளாடி முன்னே நகர்ந்தது, முகமும், தோள்களும் பயத்தால் இறுகிக் கவிந்திருந்தன. அது எலிஸபெத்துக்காகவா? இல்லை- எலிஸபெத்தைப் பார்த்த உடனே, அவருடைய முகம் விடுதலை உணர்வடைந்தது.

பெவர்லி சொன்னார், “அவள் ரொம்ப வீணாப் போயிட்டா. இதை நான் முகாமிலேயே பார்த்திருக்கேன். நீங்க அவளை அழிச்சுத்தான் ஆகணும்.”

என் வாய் திறந்தது திறந்தபடி இருப்பதை நான் உணர்ந்தேன்.

“அவள் இனிமேல் மனிதப் பிறவியே இல்லை,” பெவர்லி சொன்னார், அவருடைய குரலில் துன்பம் இருந்தது, ஆனால் துன்பத்தை விட அருவருப்புதான் அதிகம்.

“அது நடக்காது, அம்மணி,”

அவர் என் மீது சீறினார். “இது என் உரிமை! அவள் என்னோட குழந்தை! அதுக்கான பத்திரங்களைக் கொடுங்க, நான் கையெழுத்துப் போடணும்!”

பீடர் எலிஸபெத்தின் வாயை உற்றுப் பார்த்தார், சிவப்பு இழைகளால் பாதி மூடியிருந்தது அது. “அவளால் இப்பவும் பேச முடியுமா?”

என் கட்டுப்பாடு நொறுங்கியது. ஜேமிஸன், இந்தக் குழந்தை, இந்த கிராதகப் பெற்றோர்…. நான் சீறினேன், “ஆமாம். அவள் விழித்தெழும்போது அவளால் பேச முடியும். கூட்டிலிருந்து அவள் வெளியே வந்த பின், படைகள் அவள் என்ன சொல்வாள் என்பதை அறிய விரும்புகிறார்கள்.”

அவர் அந்தப் பொய்யை நம்பி விட்டார். அவர் முகம் வெளுத்தது. அவர் பக்கவாட்டில் தள்ளாடினார், கிட்டத் தட்ட விழுந்து விட்டார், கதவுப் பிடியைத் தத்தளித்துப் பிடித்துக் கொண்டு நின்றார். அவரைப் பார்த்து ஆழ்ந்த, முழு வெறுப்பு நிறைந்த பார்வையை வீசினார், அவரை விலக்கித் தள்ளித் தாண்டிப் போய், அறையை விட்டு வேகமாக வெளியேறிப் போய் விட்டார்.

நான் வெகுநேரம் எலிஸபெத்தின் படுக்கை அருகே நின்றிருந்தேன், அந்தச் சிறு பேன் அளவே இருந்த சிலந்திகள் வேலை செய்வதைக் கவனித்திருந்தேன். என்னால் என் மனதை நிதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கர்ட் இடம், என் மாலை ஏற்பாடுகளை ரத்து செய்யச் சொன்னேன், திடீரென்று வருவோரை நர்ஸ்கள் பார்க்க ஏற்பாடு செய்தேன், அவசரம் என்றால் எனக்கு அழைப்பு விடச் சொன்னேன். தரையில் பயணிக்கும் வண்டி ஒன்றைக் கையெழுத்திட்டு எடுத்துக் கொண்டேன், வாரன் தம்பதியரின் பங்களாவிற்கு ஓட்டிப் போனேன்.

***

நான் எலிஸபெத் டி போர்ஷியோ. நாங்கள் என்னை. Ø. அது நடக்கும்.

***

மனித முனைப்புகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று யாராவது சொன்னால், மனிதர் ஏன் எதையும் செய்கிறார் என்பதற்கு எளிதாக, தெளிவாக காரணம் காட்ட முடியும் என்று யாராவது சொன்னால், அவர் ஒன்று வெகுளியாகவோ அல்லது பொய் சொல்பவராகவோதான் இருக்க முடியும். வாரன் தம்பதியின் சுத்தமான பங்களாவில், எலீஸும், ப்ரெண்ட் கூட்டுக்குள் போகுமுன்னரும், இருந்த ஒளிப்படங்கள் சுற்றிலும் இருக்கையில் நான் நின்ற போது, டி போர்ஷியோ தம்பதியினரின் வீட்டின் உள்புறத்தைப் பார்க்காமல் இருக்க நான் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து விடுவேன் என்று நினைத்தேன். ஓர் ஆழ்ந்த, முழு மனதோடு, ஆனால் சிறிதும் சம்பந்தமே இல்லாது எழுந்த யோசனை அது.

“ஜீனா, டெட், உங்களிடம் நான் சிலவற்றைக் கேட்க வேண்டும், இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை என்று நான் சொல்கையில், நீங்கள் என்னை முழுதும் நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  அந்துப் பூச்சிகளைப் பற்றிய வதந்திகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள்தானே?”

டெட் சொன்னார், “நாங்கள் அதைப் பேசப் போவதில்லை, நோரா.”

“நாம் பேசவில்லை என்றால், நாம் எல்லாருமே இறக்க நேரலாம்.”

அவருடைய கண்கள் விரிந்தன. நான் இப்படித்தான் அதைத் திட்டமிட்டிருந்தேன், அவருடைய கவனத்தை முழுதும் பெற இப்படி, அதன் மூலம் அவருடைய ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று நான் எதிர்பார்த்தேன்.  ஆனால் டெட் வாரன் அத்தனை எளிதாக வற்புறுத்தலுக்குப் பணியும் நபராக இல்லை. அவர் சொன்னார், “நீங்க இதை விளக்கியே ஆகணும்.”

“இதுக்குள்ளேயே விளக்க நான் விரும்பவில்லை, ஏன்னா எனக்கு இன்னும் நிச்சயமாக இல்லை. நீங்க ஒருக்கால்—”

“இதுக்குக் காரணம் கர்னல் ஜேமிஸன் தானே, இல்லையா?” ஜீனா சொன்னார். அவருக்கும் டெட்டுக்குமிடையே ஒரு பார்வை கடந்தது, திருமணமான தம்பதியர் நடுவே ஓடும் இத்தகைய பார்வைகளில் வெளியாட்களுக்குப் புலப்படாத எத்தனையோ உடனே பரிமாறப்பட்டு விடும். அவர் அதைத் தொடர்ந்தார், “உங்களுக்குத் தெரிய வேண்டிய எதையும் நாங்கள் சொல்கிறோம். அதே சமயம், நாங்கள் சொல்லலாம் என்றாலொழிய, எதையும் நீங்கள் யாரிடமும் -அப்படின்னா ஒருத்தர் கிட்டே கூட- சொல்லாமல் இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.”

“சரி” என்றேன், இந்தப் பொய் வரும் நாட்களில் எனக்கு என்ன நஷ்டத்தைக் கொண்டு வரப்போகிறதோ என்று யோசித்தபடியே. “அந்துப் பூச்சிகளைப் பற்றிய வதந்திகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா?”

“நிச்சயமா,” ஜீனா சொன்னார். கைகளிரண்டும் அத்தனை இறுகலாகப் பிணைந்திருந்தன, கை முட்டிகள் நீலமாக வீங்கின, மேலும் மறுபடியும்,  “நிச்சயமா.”

அனைவரும் அந்த வதந்திகளைக் கேட்டிருந்தார்கள். ஒரு அந்துப் பூச்சி, முன்னாளில் ஒரு பொறியியலாளர், ஒரு சுரங்கத் தொழிலாளி யார் சொன்னதையும் கேட்காமல் நடை போயிருந்த போது, அவர் முன்பு தோன்றியதாகச் சொல்லப்பட்டது. அந்துப் பூச்சி கீழே விழுவதை அபிநயித்துக் காட்டி இருக்கிறார்; அடுத்த நாள், சுரங்கத்தின் ஒரு பகுதி கீழே விழுந்தது, இரண்டு விலை மிக்க ரோபாட்களை நொறுக்கியது. ஆனால்… உலா போன அந்த சுரங்கத் தொழிலாளி கேளிக்கைக்கான போதைப் பொருட்களைப் பயன்படுத்தி இருந்தார்.  வேறொரு அந்துப் பூச்சி, சுரங்கத்துக்கும், விண்வெளிப் பயண நிலையத்துக்கும் இடையே போகிற சாலையில் நடுவில் நின்றாராம், கனிமப் பொருளை ஏற்றிச் சென்ற பார வண்டி ஒன்றைத் தடுத்தவராக. எவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, அந்தக் காட்சி அப்படியே உறைந்து நின்றது, வண்டியை ஓட்டுபவர்கள் தம்முள் வாதிட்டனர்: அவள் மீது வண்டியை ஓட்டிச் செல்வதா? அங்குலம் அங்குலமாக முன் நகர்ந்து அவள் நகர்ந்து விடுவாள் என்று நினைப்பதா? அவள் நகர்ந்தாள், ஐந்து நிமிடங்கள் கழித்து. அந்த பார வண்டி ஒரு பாலத்தை அடைந்தது, ஆனால் அந்தப் பாலம் நொறுங்கி விழுந்து ஐந்து நிமிடம் ஆன பிறகுதான். மேலும் பல கதைகள் இருந்தன, ஆனால் அனேகமும் வெறும் தற்செயல் உடன் நிகழ்வுகளாக இருக்கலாம்; இப்படிக் கதை சொன்னவர்களில் பலர் நம்பத்தக்கவர்களாக இல்லை; அபிநயம் என்பது கச்சிதமாகத் தொடர்பு கொள்ளும் வழிமுறை இல்லை; சில ‘முன் கூட்டி அறிந்து எச்சரிக்கை செய்தல்’ எனப்பட்டவை, சம்பவம் நடந்த பின்னர் கற்பிக்கப்பட்ட விளக்கங்களாக இருக்கலாம்.

வதந்திகள். அவற்றில் பலவேறு குழுக்கள். ஒரு அமெச்சூர் பரிணாம உயிரியலாளர்- இந்தக் கிளை நிலையத்தில் பயிற்றுவிக்கப்பட்டவராக யாரும் இல்லை- ஒரு கருத்தை முன் வைத்திருந்தார், அதன்படி முன்பு ஒரு காலத்தில், மொழி ஏதும் உருவாகாத காலத்தில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் உடனே வரப்போகிற எதிர்காலம் பற்றிய முன் அறிதல் இருந்தது, அது உயிர் பிழைத்திருக்கத் தேவையான திறன். பூமியில் இன்று மறைந்து விட்ட பெரும் புல்வெளிகளில் (ஸவான்னா) நாற்பது அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகள் முன்பு திடீரென்று நேர்ந்த, இன்னும் புரிந்து கொள்ளப்படாத, பெரும் முன்னேற்றத் தாவலோடு, அது காணாமல் போய் விட்டது. ஓர் ஆற்றைப் போல, நம்மை நோக்கி எப்போதும் பெருகி வருவதும், அதன் பெரு வேகமும், ஆபத்தும் நிறைந்த பகுதிகளை நாம் பார்க்கு முன் கேட்கக் கூடியதுமான எதிர்காலத்தை முன்கூட்டி உணரும் திறனின் இடத்தை, (புதிதாக எழுந்த) மேம்பட்ட படைப்புத் திறனும், பிரித்தறியும் திறனும் பிடித்துக் கொண்டன. ஆனால் அந்த உணரும் சக்தி, உள்ளுறைந்திருப்பது, நம் மரபணுக்களில் இன்னமும் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. மரபணு அளவில் அடியோடு நேரும் பெரும் மாற்றம் அதை விடுவிக்கக் கூடும்.

இந்தக் கருத்தாக்கத்தை நான் நம்பினேனா? எனக்குத் தெரியவில்லை. ஒரு மருத்துவர் ஓர் அறிவியலாளர் போல, பிரித்தறியும் முறையை முழுதும் சார்ந்திருப்பவர். ஆனால் எது “பகுத்தறியப்பட்டது” என்பதைப் பற்றிய கருத்துகள் மாறுதல்களுக்கு உட்பட்டவை என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஒரு காலத்தில் உருண்டையான பூமி, கிருமிகள், விரிந்து வளர்ந்து கொண்டு போகும் பிரபஞ்சம், க்வாண்டம் இயக்கவியல் ஆகியன அறிவற்றவையாக இழிக்கப்பட்ட கருத்துகளாக இருந்தன. தலைமையகம் அந்துப் பூச்சிகளின் முன்னறி திறனை குறைந்த பட்ச சோதனைக்காவது உட்படுத்த வேண்டும் என்று எண்ணியிருக்கிறது.

நான் என்னால் முடிந்த அளவு மென்மையாகக் கேட்டேன், “ஜீனா, ப்ரெண்ட் உங்களிடம் சொன்னது எதுவாவது பிற்பாடு நிஜமாக நடந்ததா?”

டெட் அவளைத் தடுத்து நிறுத்துவது போல அசைந்தார், ஆனால் ஏதும் சொல்லவில்லை. ஜீனா சொன்னார், “ஆமாம்.”

”தயவு செய்து எனக்குச் சொல்லுங்க.”

“நாங்க… நாங்க அவனைப் பார்க்கப் போனோம். ஆற்றுக்குப் பக்கத்தில வழக்கமான இடத்தில. நாங்க போயிருந்த போது, ப்ரெண்ட் திடீரென்று எங்களை எல்லாம் தரை ஊர்திக்குள் தள்ளி விட்டான். அவன் ரொம்ப அவதிப்பட்டான். நாங்கள் உள்ளே ஏறிக் கொண்டோம், அவன் காட்டுக்குள் ஓடி விட்டான். அப்போது காண்டா மிருகம் போலப் பெரிசா இருக்கிற மிருகங்கள்லே ஒண்ணு காட்டுக்குள்ளே இருந்து, எங்கள் வண்டியைத் தாக்கப் பாய்ந்து வந்தது. வண்டியை உருட்டி இருக்கும். நாங்க மயிரிழையில உசிரோட தப்பிச்சு வந்தோம்.”

“ப்ரெண்ட் அந்த மிருகம் வர்றதைக் கேட்டிருக்கலாம், இல்லை மோப்பம் பிடிச்சிருக்கலாம் இல்லையா?”

“நான் அப்படி நினைக்கலெ. அந்த மிருகம் வர்றத்துக்கு முன்னாடி, நாங்க அந்த வண்டியில பதினஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம். எலீஸ் எங்க கூட இல்லை, நான் அழுதுக்கிட்டிருந்தேன்.”

டெட் சொன்னார், “அது தற்செயலாக அதே நேரம் நடந்ததாக இருக்கலாம்.” தான் சொல்வதை அவரே நம்பவில்லை என்று முகம் காட்டியது.

“அதே போல வேறெப்பவாவது உண்டா?”

ஜீனா சொன்னார், “இன்னொரு தடவை. நாங்க-”

டெட் அவரை இடைமறித்தார். “நாங்க உங்க கிட்டே நேர்மையா இருந்திருக்கோம், நோரா, ஏன்னா நாங்க உங்களை நம்பறோம். இப்ப நீங்க எங்களை நம்புங்க. ஜேமிஸனால என்ன நடக்கறது?”

“எனக்கு அது பத்தி நிச்சயமா ஏதும் தெரியல்லை. ஆனால் தலைமையகம் கூட்டுக்குள்ளே அடையறது ஒரு பெரிய தொற்று நோய் போல ஆகிறதைத் தடுக்க என்ன நடவடிக்கை வேணுமின்னாலும் எடுப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். ஜேமிஸன் அந்துப் பூச்சிகளை மனுசங்களுக்குப் பெரிய ஆபத்துன்னு பார்க்கிறார், அதுக்கான முடிவை அவர் எடுப்பார். அவரை மாற்றறத்துக்கு ஒரே வழி, ப்ரெண்ட் மாதிரி ஆட்களால ராணுவத்துக்கு உபயோகமுண்டுன்னு காட்டறதுதான். அந்துப் பூச்சி ஒருத்தர் ஒரு ராணுவக் குழுவோடு போனா, எதிரி அடுத்தது என்ன செய்யப் போறாங்கன்னு—”

“முடியாது,” டெட் சொன்னார்.

“டெட், அவர் எல்லாத்தையும் அழிப்பார்னு நான் நினைக்கிறேன் –”

“அவர் முயற்சி செய்யட்டும். எங்க பையனும், மத்தவங்களும் தங்களைத் தாங்களே காப்பாத்திப்பாங்க. அவங்களுக்கு எப்படி வனாந்தரத்துல பிழைச்சிருக்கறதுன்னு தெரியும், இதுவோ இன்னும் எதுவுமே தேடிப் பார்க்கப்படாத பெரிய கிரகம். அதோட, அவங்களுக்கு ராணுவம் எங்கே அடுத்தது தாக்கப் போறதுங்கறது முன் கூட்டியே தெரிஞ்சிடும்.”

என்னுடைய அடுத்த வார்த்தைகளைப் பேசறது எனக்கே தாங்க முடியாததாக இருந்தது. “ஜேமிஸனுக்கும் அது தெரியும். தலைமையகம் அந்துப் பூச்சிங்களைக் கொல்லணும்னு விரும்பினா, அவர்கள் நம் எல்லாரையும் அழிச்சு, கிரகத்தையே நோய்த் தடுப்புப் பகுதியா மாற்ற வேண்டி வரும்னு அவருக்குத் தெரியும்.”

டெட்டும், ஜீனாவும் என்னை முறைத்துப் பார்த்தார்கள். கடைசியில் ஜீனா சொன்னார், “அவங்க அதைச் செய்ய மாட்டாங்க. நீங்களே சொன்னீங்க, இதெல்லாம் உங்களோட ஊகம்தான்னு.  அவங்க இந்த கிரகத்தையே நோய்த் தடுப்புக்குள்ளே போட்டாங்கன்னா, அப்பொ  இங்கே இருக்கிற மனுஷங்களை அழிக்கத் தேவை இருக்காது.”

“நாம் எல்லாரும் அந்துப் பூச்சிங்களா ஆயிட்டோம்னு வைங்க, பிற்காலத்துல இன்னொரு கப்பல் காற்றின் பாட்டுக்கு வந்து இறங்கினா—”

“மேலே மேலே குருட்டு ஊகம்!” டெட் கத்திரித்தார். “ஆனா, நான் உங்க கிட்டே சொல்றேன், எது ஊகம் இல்லைங்கறதை – எங்களைக் காப்பாத்திக்கறத்துக்காக ப்ரெண்டை அவங்க கிட்டே விட்டுக் கொடுத்தா, அவங்க ப்ரெண்டுக்கு என்ன செய்வாங்கன்னு சொல்றேன். அவனைத் தலைமையகத்துக்கு எடுத்துக்கிட்டுப் போவாங்க, அவனை என்னென்னவோ வழியிலெ எல்லாம் சோதிப்பாங்க…. அது சித்திரவதையாகத்தான் இருக்கும், நோரா. ஒருவேளை கொலையாகக் கூட இருக்கலாம், அவனோட மூளை எப்படி வித்தியாசமா இருக்குன்னு பார்க்கறத்துக்கு.”

“வேற மாத்து வழிங்கறது ஒருவேளை நாம எல்லாருமே சாகிறதுதான்.”

“நான் அதை நம்பல்லை,” டெட் சொன்னார், ஜீனாவும் தலை அசைத்து ஆமோதித்தார்.

நம்பாமல் இருக்க அவர்கள் விரும்பினார்கள், அவர்களுக்கு அது தேவையாக இருந்தது.

நான் கிளம்பிப் போகையில், டெட் சொன்னார், “ஞாபகம் வச்சுக்குங்க, இதை எல்லாம் உங்களோடயே வச்சுக்கிறதா நீங்க உறுதி மொழி கொடுத்திருக்கீங்க. நாங்க சொன்னது எல்லாத்தையும். நீங்க சத்தியம் பண்ணினீங்க.”

“ஆமாம்,” நான் சொன்னேன். “நான் செஞ்சேன்.”

***

நான் எலிஸபெத் டி போர்ஷியோ. நாங்கள் என்னை. Ø. அது .

***

நான் என் அலுவலகத்தில் என் சோதனை அறையில், இருட்டில் அமர்ந்திருந்தேன். யாரும் வேலையில் இல்லை; எலிஸபெத்தைத் தவிர வேறு நோயாளிகள் யாரும் அங்கே இல்லை, அவளுக்கு நாங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. காற்றின் பாட்டு கிரகத்தின் பெரியதான சந்திரனிலிருந்து நிலா ஒளி, சரிகை வேலைப்பாடு போல நுண்மையாகவும், வெள்ளி போலவும் ஜன்னல் வழியே பெருகி வந்தது. பூமியிலிருந்து இறக்குமதியான, விலை அதிகமான ஸ்காட்ச் விஸ்கி இருந்த ஒரு கண்ணாடிக் கோப்பையை அந்த ஒளியில் பார்க்க முடிந்தது.

காலம் ஒரு நதியாக. நான் ப்ரெண்டையும், இதர அந்துக்களையும் அதன் கரையில் நின்றிருப்பவர்களாக, எங்களில் மற்றவர்களெல்லாம் இன்னும் பார்க்க முடியாத அந்த வளைவுக்குப் பின்னால் இருந்த நீரில் உற்று நோக்குபவர்களாகப் பார்த்தேன். வாரன் தம்பதியர் ப்ரெண்டைப் பற்றிச் சாதகமாக எதையும் சொல்லுமுன் அவர்களை ஜேமிஸன் வேண்டுமென்றே பகைத்துக் கொண்டதை நினைவுபடுத்திக் கொண்டேன். ப்ரெண்டையும், எலிஸபெத்தையும் பார்த்ததுமே ஜேமிஸனிடம் எழுந்த அருவருப்பை நான் பார்த்தேன். அது வெறும் அருவருப்பு கூட இல்லை, அதை விட ஆழமான, ஏதோ அனாதிகாலத்து உந்துதல், எதிரியாக உணரப்பட்டவரை அத்தனை முழுதாக அழித்து அவர் திரும்ப எழாதபடிக்குச் செய்ய எழும் உந்துதல்; கார்த்தேஜின் எல்லா வயல்களிலும் உப்பைப் பரப்பும்படி ரோமானியர்களைச் செய்ததும், எல்லா யூதர்களையும் கொன்றழிக்க முயல ஹிட்லரைச் செய்ததுமான உந்துதல். தளம், சுரங்க முகாம் ஆகியன எல்லாம் எரியூட்டி அழிக்கப்பட்டு, ஆழப் புதைக்கப்படுவதையும், விண்ணிலிருந்து ஆயுதங்களால் தாக்கப்பட்டு புகை மண்டிய இடிபாடுகளாக்கச் சிதைக்கப்படுவதையும் நான் பார்த்தேன். அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, வெறும் ஊகத்தால் இப்படி எல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கும் என்னைத் தவறான சிந்தனை கொண்டவளாகப் பார்த்தேன். நான் எடுக்க வேண்டிய முடிவு இரு கிளைப் பாதைகளாகப் பிரிவதைப் பார்த்தேன், இரண்டும் மூடுபனியில் மூழ்கி இருந்தன, இரண்டும் பெரும் சோகத்தில் முடிந்தன. நான் பார்த்தேன் –

முன்னறையில் ஏதோ நகர்ந்தது.

நான் சப்தமில்லாமல் எழுந்தேன், இதயம் சுத்தியடித்தது, இருட்டில் மெதுவாகக் கதவை நோக்கி ஊர்ந்தேன்.

***

இருக்கிறேன். நாங்கள் ஊவ் Ø. அது  .

***

எலிஸபெத்- கூட்டிலிருந்து வெளி வந்த எலிஸபெத், சாதாரணமாக இன்னும் ஒரு நாளைக்குக் கூட்டிலிருந்து வெளி வந்திருக்கக் கூடாது- அறைக்கு வெளியே நடையில் தள்ளாடிப் போய்க் கொண்டிருந்தாள். நான் விளக்கைப் போட்டேன். அவளுடைய உருண்டையான, மனிதம் இல்லாத முகத்தில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை. அவள் ஒரு தள்ளாடும் கையை நீட்டினாள், அவளுடைய மாற்றப்பட்ட உடலின் நகர்வுகள் ஒருங்கிணையாது அலங்கோலமாக இருந்தன, என் கையைப் பற்றினாள், என்னை அந்த நடையினூடே இழுத்துக் கொண்டு மருத்துவ மனையின் பின் வாயிலை நோக்கிப் போனாள்.

நான் ஏன் அவளை அனுமதித்தேன்? என் மூளையிலும் ஏதோ மறைந்திருந்த, மெலிதான முன்னுணர்வுத் திறன் இருந்ததா என்ன? பின்னால் அதைப் பற்றி நான் யோசித்திருக்கிறேன், விடைகள் ஏதும் கிட்டவில்லை.

நாங்கள் பின் கதவு வழியே வெளியே போன அதே சமயம் பீடர் டிபோர்ஷியோ முன் வாசலை அடைந்திருந்தார். நானும், எலிஸபெத்தும் மறைந்திருந்த தரை ஊர்திக் கொட்டகையிலிருந்து, அதை நாங்கள் நுழைந்த பின் உள்ளே பூட்டிக் கொண்டிருந்தோம், அவருடைய கடப்பாறை முன் கதவை உடைப்பதைக் கேட்டோம். குடிவெறியில் அவர் தன் பெண்ணாக இருந்ததைத் தான் கொல்லப் போவதாகக் கத்தியதைக் கேட்டோம். தோற்றத்திலும், குணத்திலும் அவர் ஜேமிஸனுக்கு எதிரானவர். ஆனால் அவர்கள் ஒன்றேதான்.

நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ப்ரெண்ட்டா அல்லது எலிஸபெத்தா என்பதல்ல தேர்வு, நிறைய பேருக்கு நல்லது என்பதற்கும், கொஞ்சம் பேருக்கு நல்லதற்கும் இடையே அல்ல தேர்வு. அதையெல்லாம் விட மிகப் பழமையான ஒன்று, என் பின் மூளையிலிருந்து எழுந்தது.

எதிரியாக உணரப்பட்ட ஒன்றிடமிருந்து தப்பிப்பது என்பது அது.

*** 

”நான் உங்களை நம்பவில்லை,” ஜேமிஸன் சொன்னார்.

“நீங்கள் நம்பவில்லை என்பது எனக்குத் தெரியும்,” நான் சொன்னேன். “அதனால்தான் உங்களுக்கு ப்ரெண்ட் வாரனை நான் கொடுக்கப் போகிறேன். புது ஈடனில் நீங்கள்… அவனை ‘சோதிக்கலாம்’, அந்துக்கள் எப்படி, எப்போது அடுத்து வரப் போவதைப் பார்க்கிறார்கள் என்பதை.”

நாங்கள் படைகளின் விருந்தினர் மாளிகையின் சந்திப்பு அறையில் நின்றிருந்தோம், போரின் அலங்காரப் பொருட்கள் சூழ்ந்திருந்தன: சுவரில் பண்டைக் கத்திகள் ஒன்றை ஒன்று குறுக்கிட்டன, கல்லால் ஆன ஏழு கிரகக் கூட்டுப் படையின் சின்னம் மேஜை மீதிருந்தது. இந்த இடத்தை யார் அலங்கரித்தார்கள் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஜேமிஸனின் தயக்கம் நிறைந்த, முயல் போன்ற தோற்றம் இங்கு முற்றிலும் மறைந்திருந்தது.

“வேண்டாம்,” என்றார் அவர்.

“கர்னல், உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். நான் ப்ரெண்ட் வாரனை உங்களிடம் அழைத்து வருகிறேன் என்று… உங்களுக்காகப் பொறி வைத்துப் பிடித்துக் கொடுக்கிறேன், படையின் விஞ்ஞானிகள் அந்துக்களின் முன்னுணரும் திறனைப் பயன்படுத்தும் வழிகளை ஆராயலாம் என்று. அவர்கள்—”

“அப்படி ஒரு திறன் ஏதும் கிடையாது.”

நான் வியப்பில் வாய் பிளந்து நின்றேன். “சொன்னது எதையுமே நீங்க கேட்கல்லியா? நானே பார்த்தேன். அது நிஜம். எலிஸபெத் டி போர்ஷியோ-”

“அப்படித் திறன் ஏதும் இல்லை. மனிதமே இல்லாத அந்தக் குரூரங்களை என்ன காரணத்தாலோ உங்களுக்குப் பிடித்திருக்கிறது, அவற்றைக் காப்பாற்றவென்று நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எந்தத் திறனும் அங்கே இல்லை.”

நான் மெதுவாகச் சொன்னேன், “அதுதான் தலைமையகத்துக்கு நீங்கள் அனுப்பப் போகும் அறிக்கையா?”

“நான் ஏற்கனவே செய்தாயிற்று.”

“ஓஹோ.”

“அவர்கள் என்ன-”

“எனக்குத் தெரியாது. நான் அறிக்கை அனுப்புகிறேன், அவ்வளவுதான், டாக்டர். ஆனால் நீங்கள் இதைப் பற்றி யோசிக்க வேண்டும்: ஒரு வேளை இந்த மனிதத்தின் அழிப்பு மற்ற ஆறு கிரகங்களுக்கும் பரவினால்? பூமிக்குப் போனால்? படைகளுக்குப் பரவினால்?”

“அது பற்றி நான் யோசிக்கிறேன்,” என்றேன், அவரை நோக்கிச் சென்றேன், என் கையை என் பாக்கெட்டிலிருந்து எடுத்தபடி.

***

தரை ஊர்தியில், நான் என்னையே நிதானமாக யோசிக்கும்படி கட்டாயப் படுத்திக் கொண்டேன். படைகள் ஜேமிஸன் ஏன் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று யோசிக்க இன்னும் பன்னிரண்டு மணி நேரம் போல இருக்கலாம், எனக்கு அவ்வளவுதான் அவகாசம் உண்டு. அதற்குப் பிறகு எனக்கு எத்தனை நேரம் பாக்கி உண்டு என்பது எனக்குத் தெரியவில்லை. காற்றின் பாட்டில் எத்தனை படை வீரர்கள் என்னை நம்புவார்கள், அல்லது அவர்கள் படைகளுக்கு அவர்களின் விசுவாசத்தையே மேலாகக் கருதுவார்களா என்பதும் எனக்குத் தெரியாது. 6500 பேர்களுக்கு செய்தியைப் பரப்ப எத்தனை நேரம் ஆகும் என்பதும் எனக்குத் தெரியாது. நான் வாரன் தம்பதியரிலிருந்து முதலில் துவங்குவேன். அவர்கள் வீட்டுக்குத்தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறேன்.

பன்னிரண்டு மணி நேரம். அந்த நேரத்தில், ஏராளமான நபர்கள் காட்டு வெளிக்குள் தப்பித்து விட முடியும், சிறு குழுக்களாகப் பிரிந்து தப்பினால் தேடிப் பிடிக்கக் கடினமாக இருக்கும், கிரகத்தின் ஏராளமான குகைகளிலோ, அல்லது இரண்டு மனிதக் குடியிருப்புகளில் தாக்கப் போகிற விண்வெளி ஆயுதங்களின் எல்லைகளுக்கப்பாலோ ஓடி விட முடியும். எல்லாரையும் அவர்களால் அழிக்க முடியாது. மக்கள் இந்த கிரகத்திலிருந்தே உணவைப் பெற முடிகிற வரை வாழத் தேவையான உணவுப் பொருட்களைச் சுமந்து செல்ல முடியும். எங்கள் நடுவே மிகச் சிலரே முதியவர்கள் அல்லது நோயாளிகள். ப்ரெண்ட் எங்களுக்கு உதவுவான், ஒருக்கால் இதர அந்துப் பூச்சி நபர்களும் உதவக் கூடும். எங்களில் சிலர் அந்துகளாகக் கூடும். அது தவிர்க்கவியலாதது. ஆனால் நாங்கள் உயிரோடு தப்புவோம்.

எங்கும் பலவிதமான கூடுகள் இருக்கின்றன. காலம் என்பது ஒன்று. அமைப்புடைய தளர்ச்சியற்ற, இறுகலான விதிகள் இன்னொன்று. இருப்பதில் பெரும் நாசத்தைக் கொணரும் கூடு என்பது மனிதர் எதை மனிதம் என்று நம்புகிறார்கள் என்பதன் குறைகள்தாம். ஒருவேளை இது கூடு விட்டு வெளியேறும் நேரமோ.

பன்னிரண்டு மணிகள். இந்த நேரத்தில் எத்தனை பேரை என்னால் காப்பாற்ற முடியும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இது தெரியும்: பன்னிரண்டு மணிகள் ஜேமிஸனின் உடலில் வேலை செய்யத் துவங்க சிலந்திகளுக்குப் போதுமானவை, எலிஸபெத்தும், நானும் அவரைப் போட்ட ஒரு குழியில் அவருடைய உடல், என் ஊசியில் இருந்த கொல்லுமளவு சக்தி இல்லாத அளவு கேடமைனால் அசைவில்லாமல் கிடக்கும்.

அவரை என்றாவது ஒருநாள் மறுபடி சந்திக்கலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

***

இங்கிலிஷில் மூலக் கதையை எழுதியவர் நான்ஸி க்ரெஸ்.

தமிழாக்கம்: மைத்ரேயன்/ ஜூன் 2019

நான்ஸி க்ரெஸ் முப்பத்தி மூன்று புத்தகங்களை எழுதி இருக்கிறார். இருபத்தி ஆறு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், எழுதும் கலை பற்றி மூன்று புத்தகங்கள் இவற்றில் அடங்கும். ஆறு நெபுலா பரிசுகள், இரண்டு ஹ்யூகோ பரிசுகள், மேலும் ஜான் w.காம்ப்பெல் பரிசு இவருக்குக் கிட்டிய விருதுகள். மிகச் சமீபத்து நூல், ‘டெர்ரன் டுமாரோ’ என்பது, அது அவருடைய அனேகப் புத்தகங்களைப் போல மரபணுப் பொறியியல் பற்றியது. ஸ்வீடிஷ், டானிஷ், ஃப்ரெஞ்ச், இதாலியன், ஜெர்மன், ஸ்பானிஷ், போலிஷ், க்ரோவேஷியன், சீனம், லிதுவேனியன், ரோமானியன், ஜப்பானியம் (அந்த மொழியில் அதன் பெயர் நிஹோங்கோ என்று தெரிகிறது!日 日本語 என அம்மொழியில் எழுதப்படுகிறது), கொரியம் (இதுவும் வேறு பெயரில் கொரியர்களால் அழைக்கப்படுகிறது, ஹங்குகோ என்பது அந்தப் பெயர் 한국어), ஹீப்ரூ (அந்த மொழியில் இது இவ்ரிட் என்று வழங்குகிறது, எழுதப்படுவது இப்படி-  עִבְרִית‎ ), ரஷ்யன் (இது அந்த மொழியில் இப்படி எழுதப்படுகிறது- русский (язык)- உச்சரிப்பு ரூஸ்கி (யெஸிக்)) ஆகிய மொழிகளில் இவரது கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவை எதுவும் அவருக்குத் தெரியாத மொழிகள் என்று அவர் சொல்கிறாராம். எழுதுவதைத் தவிர, பல அமைப்புகளில் இவர் பாடம் போதிக்கிறார், சமீபத்தில் (ஜெர்மனியில்) லைப்ஸிக் பல்கலையில் உரையாளராகப் பணியாற்றியவர், 2017 இல் பெய்ஜிங்கில் எழுதும் கலையைப் பற்றிப் போதித்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில், டாஓ டூல்பாக்ஸ் என்ற எழுத்துப் பாசறையை வால்டர் ஜான் வில்லியம்ஸூடன் இணைந்து, நடத்துகிறார்.

இங்கிலிஷ் மூலம்: நான்ஸி க்ரெஸ். மே, 2019 (இதழ்:108) லைட்ஸ்பீட் மாகஸீனில் பிரசுரமாகியது. அதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டில் நான்ஸி க்ரெஸ் எழுதிய சிறுகதைத் தொகுப்பாகிய, ‘மீட்டிங் இன்ஃபினிடி’ என்ற புத்தகத்தில் பிரசுரமாகி இருந்தது. லைட் ஸ்பீட் பத்திரிகை இதை மீள் பிரசுரம் செய்திருந்தது.  http://www.lightspeedmagazine.com/fiction/cocoons/ என்ற முகவரியில் மூலக் கதை கிட்டும்.

நன்றி: லைட்ஸ்பீட் பத்திரிகைக்கும், நான்ஸி க்ரெஸ்ஸுக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.