ஒரு டீக்கடையில் வடை தின்று விட்டு தூக்கி எறிந்த காகிதம், ஒரு முக்கியமான அறிவியல் தரிசனத்தை, மறைக்கப்பட்ட அறிவியல் வரலாறை வெளிப்படுத்த காரணமாக அமைந்தது என நான் சொன்னால், நீங்கள் நம்ப மறுக்கலாம். அனுப்ப மறந்த கடிதங்களால் மாறிப்போன போர் முடிவுகள், தவறி விழுந்த ரசாயனத்தால் நிகழ்ந்த மாபெரும் கண்டுபிடிப்புகள், குதிரையின் லாடத்தில் ஓர் ஆணி இறுக்கம் தளர்ந்து இருப்பதை கண்டு கொள்ளாமல் விட்டதால் வீழ்ச்சி அடைந்த சாம்ராஜ்யங்கள் என சின்னவிஷயங்களால் நிகழும் இது போன்ற விஷயங்கள் சாதாரண மனிதனுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்.. ஆனால் அறிவியல் உலகில் இது வெகு காலம் முன்பே நிரூபிக்கப்பட்டு விட்ட சாதாரண கருதுகோள்தான்.
எந்த தனித்துவமும் இல்லாத ஒரு சாதாரண நாள் … வெயில் இந்த தடவை ரொம்ப ஜாஸ்தி என வழக்கமான அங்கலாய்ப்புகள்… சிவப்பி சிக்னலை பொருட்படுத்தாமல் விரையும் வாகனங்கள் என பழகிப்போன காட்சிகள்…
ஆனால் நான் ஒவ்வொன்றையுமே ஆர்வமாக – புத்தம் புதிதாக கவனிப்பது போல கவனித்துக்கொண்டு இருந்தேன்.. ஒவ்வொன்றுமே ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு இருந்தன.
வெயிலுக்கு இதமாக ஒருவர் நன்னாரி சர்பத் உறிஞ்சிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது எலுமிச்சி விதைகளை துப்பிக்கொண்டு இருந்தார்.. கொதிக்கும் சாலையில் அந்த விதைகள் விழுவதைப் பார்க்கையில் பாவமாக இருந்தது
விதைகள் கசப்பாக இருப்பதற்கு காரணம் உண்டு. சுவையான பழங்களை உண்ணும் மனிதனோ விலங்குகளோ விதைகளை துப்பும்போது அது மண்ணில் விழுந்து அது புதிதாக செடியாக, மரமாக வளரும் வாய்ப்பு இருந்தது. அதாவது இயற்கை அனைவரையுமே விதை தூவும் வேலைக்கு பயன்படுத்தி வந்தது. ஆனால் இன்று கொதிக்கும் தார் சாலையில் விதையை துப்பினால் அது எந்த பயனுமே இல்லாத செயலல்லவா ?
அப்படி என்றால் இயற்கை இத்தனை நாள் செய்து வந்த பணிகள் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பயனற்று போய் விடுமா? அது எப்படி பயனற்றுப்போய் விடும்.. தன் செயல்கள் பயனற்றுப்போகும் அளவுக்கு இயற்கை தன்னை தானே அழித்துக்கொள்ளுமா என நீலகண்டனும், விஷ்ணுவும் அடிக்கடி விவாதப்போர் நடத்துவதை நினைத்துக் கொண்டேன்
– விஷ்ணு… ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க… பேலன்ஸ், அதாவது தன்னை தானே ஒரு சம நிலைக்கு கொண்டு வரும் தன்மையை இயற்கையில் ஏராளமாப் பார்க்கலாம்.. உதாரணமா, மான்கள் கூட்டம் அதிகமானா, புல் அழியும். தாவரங்கள் அழியும்.. பஞ்சம்கூட வரலாம்.. அதனால்தான் ஓநாய்கள் மூலம் கொஞ்சம் மான்களை அழித்து, ஒரு வித சம நிலையை இயற்கை கொண்டு வந்துருது.. நம்மைப்போன்ற சாஃப்ட்வேர் மேதைகளை விட இயற்கை அழகா ப்ரோக்ராம் போட்டு இருக்கு என்றான் நீலகண்டன்
விஷ்ணு மெதுவாக சிரித்தான்..
– மனிதன் தலையிடாதவரை இது ஓகேதான்.. ஆனா இறைச்சிகளுக்காக மான்களை அழிச்சு, வீடு கட்ட புல்வெளிகளை அழிச்சு, ஓநாய்கள் வாழ இடமோ உணவோ இல்லாம செஞ்சா இயற்கை எப்படி பேலன்ஸ் செய்யும்?
நீலகண்டன் லேசாக உஷ்ணமானான். சாதாரணத் தோற்றத்தை விட அவன் உணர்ச்சி வசப்பட்டு பேசும் தோற்றம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
– மனிதனை இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயமா ஏன் பார்க்குறீங்க.. ஒரு வேளை மனிதன் இப்படியெல்லாம் செய்றது, இயற்கையின் பேலன்ஸிங் ஆக்ட் ‘ஆ இருக்கலாமே..அப்படி ஏன் யோசிக்க மாட்டீங்கறீங்க

விஷ்ணு நீலகண்டனுக்கு நேர்மாறானவன்.. சூடு பிடிக்க பிடிக்க மிகவும் இயல்பாக கலகலப்பாக மாறி விடக்கூடியவன் அவன், அதுவும் எனக்கு பிடிக்கும்
– இயற்கை பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு எப்படி முடிவு செய்றீங்க.. ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மைக்கு செல்வதுதானே காலத்தின் வரையறை.. அதாவது ஓர் அறையை எந்த தலையீடும் இல்லாம அப்படியே விட்டுட்டா, ஒரு வாரத்துல அந்த அறை, ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமா மாறிடும். அதாவது ஓர் அறை கொஞ்சம் கொஞ்சமா அழகு ஆவதோ, இருக்கும் நிலையில் அப்படியே இருப்பதோ இயற்கை இல்லை… கொஞ்சம் கொஞ்சமா மோசம் ஆவதுதான் இயற்கை இதுதான் தெர்மோடைனமிக்ஸ் விதி . அப்படி பார்த்தா இயற்கை கொஞ்சம் கொஞ்சமா தன்னை அழிச்சுக்கிட்டு அழிவை நோக்கி செல்லும் வாய்ப்பும் இருக்கு… அப்படியும் யோசிங்க என்றான் விஷ்ணு
– “ எந்த தலையீடும் இல்லாம அப்படீங்கற நிபந்தனைதான் சிக்கல்.. ஒரு மனிதன் அந்த அறையில் இருந்தா அந்த அறை கொஞ்சம் கொஞ்சமா மோசமாகும் வாய்ப்ப்பு குறையும் அல்லவா.. அறை மனிதன் எல்லாத்தையுமே சேர்த்து ஒரே சிஸ்டம்னு யோசிங்க.. இய்ற்கை தன் புத்திசாலித்தனத்தை மனிதன் மூலம் வெளிப்படுத்தி “ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மை” அப்படீங்கற விதியில் இருந்து தப்பிச்சுரும் என்றான் வெற்றிச்சிரிப்புடன் நீலகண்டன்
– சரி,, இந்த விதி மனிதன் மேலயே செயல்பட்டா என்ன ஆகும்? அவனே கொஞ்சம் கொஞ்சமா அழுக ஆரம்பிச்சா ? இதுல இன்னொரு விஷயமும் இருக்கு,, மனிதனின் இண்டெலிஜன்ஸ்,.. கண்டுபிடிக்கும் ஆற்றல் ..இது குறித்தெல்லாம் எனக்கு சந்தேகம் இருக்கு… ஸ்விட்ச் போட்டா ஆன் ஆகும் மின்விளக்கு மாதிரி அது எப்படி குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரே மாதிரி பல இடங்களில் இருக்கும் மனிதர்களிடம் ஒரே நேரத்தில் இந்த அறிவு செயல்பட ஆரம்பிக்குது…மனிதனோட அறிவு ஒளியை ஆன் பண்னும் ச்விட்ச் யார்கிட்ட இருக்கு.. ? அல்லது தகவல் தொடர்பே இல்லாத காலத்துலகூட, ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா அப்படீனு பல இடங்களில் இருந்த பல தரப்பட்ட இனக்குழுவினரிடம் ஒரே மாதிரி சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் தோன்றியது வெறும் தற்செயலா? அல்லது குறிப்பிட்ட காலத்தில் தன்னை தானே வெளிப்படுத்திக்கொள்வது இயற்கையின் இயல்பா.. அல்லது எதாவது வேற்றுகிரக மேட்டரா ?
மூச்சு விடாமல் பேசினான் விஷ்ணு
– அல்லது இவை எல்லாம் எல்லாம் வல்ல இறைவன் நடத்தும் லீலைகளில் ஒன்றா ..சிரித்தான் நீலகண்டன்
– அப்படியும்கூட இருக்கலாம் என்பதுதான் உண்மை… உதாரணமா எடிசன் மின் விளக்கை கண்டு பிடிச்சார்னு சொல்றோம்… ஒருவேளை எடிசன் என்பவரே பிறக்கலைனா மின் விளக்கே வந்து இருக்காதா.. அவர் இல்லைனா என்ன,.. இன்னொருத்தர் கண்டு பிடிச்சுருப்பார்னு கொஞ்சம் யோசிச்சா சொல்லிருவோம்.. ஆனால் என்ன சுவையான மேட்டர்னா, இன்னொருத்தர் கண்டு பிடிச்சு என்பது மட்டுமல்ல … எடிசன் கண்டு பிடிச்ச அதே ஆண்டில் அதாவது 1879ல அந்த கண்டு பிடிப்பு கண்டிப்பா நிகழ்ந்து இருக்கும்… இதை நம்மால் உறுதியா சொல்ல முடியும்.. காரணம் அதே ஆண்டுல கிட்டத்தட்ட 20 பேர் மின் விளக்குகளை கண்டு பிடிச்சு காப்புரிமை விண்ணப்பிச்சு இருந்தாங்க அப்படீங்கறது வரலாறு… வழக்குகள் எல்லாம் நடந்து கடைசில எடிசனுக்கு காப்புரிமை கிடைச்சது… இப்படி ஒரு ஆராய்ச்சி நடப்பது ஒருவருக்கு ஒருவர் தெரியாமயே ஒரே மாதிரி சிந்தனை பலருக்கு உருவாகி இருக்கு…
– ஹேய்…எனக்கு ஒன்னு நினைவு வருது பாஸ்… என் ஃபிரண்ட் எழுதின நாவல் ஒண்ணு அப்படியே சினிமாவா வந்துச்சு… அந்த இயக்குனரும் என் ஃப்ரண்ட்தான்.. கண்டிப்பா காப்பி இல்லை.. கடத்தல் அப்படீங்ற ஐடியா மட்டும் அல்ல.. விமானம், கடத்தல் அப்படீனு பலவிஷயங்கள் துல்லியமா ஒரே மாதிரி இருந்துச்சு… காப்பி அடிப்பவன் இவ்வளவு துல்லியமா ஒரே மாதிரி அடிக்க மாட்டான்,,,, அது மட்டும் அல்ல… அந்த இயக்குனர் எனக்கு நேரடியா தெரிஞ்சவர்… நாவல் வெளி வரும் முன்னாடியே அந்த கதை குறித்து என்னிடம் பேசி இருக்காரு… இந்த ஒற்றுமை எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு
– ஆமா…அல்கசாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசி காப்புரிமைக்கு விண்ணப்பிச்ச வெறும் ரெண்டு மணி நேர இடைவெளில அவருக்கு சம்பந்தமே இல்லாத எலிஷா கிரே அப்படீங்கறவரும் இதே கண்டு பிடிப்புக்காக விண்ணப்பிச்சாரு… இதுல இன்னொன்னு இருக்கு,.. ஒருவர் கண்டு பிடிப்பு குறித்து எந்த தகவலும் இல்லாம இன்னொரு நாட்டுல, அதே ஆராய்ச்சி செஞ்சு அதே கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி தஙகளோட உழைப்பை நேரத்தை வீணடித்தவர்களும் உண்டு… அதே சிந்தனை எப்படி பலருக்கும் தோணுது அப்படீங்கறது ஒரு புதிர்.. மனித வளர்ச்சிக்கு புதிய கண்டுப்பிடிப்புகள் தேவை… அந்த கண்டுபிடிப்புக்கான ஆற்றல் ஜீன் மூலமா மனிதனுக்கு தலைமுறையாக கடத்தப்படுது… ஒருவர் இல்லாட்டியும் இன்னொருத்தர் கண்டு பிடிக்கட்டுமே அப்படீனு பலருக்கு ஒரே மாதிரி தகவல்கள் ஜீன்களில் பொதிக்கப்படுது அப்படீனு பரிணாம வளர்ச்சி பார்வைல மேலை நாட்டு விஞ்ஞானிகள் இதை முடிச்சுட்டாங்க.. ஆனா பரிணாம வளர்ச்சி அப்படீங்கறதே கேள்விக்குள்ளாகி இருக்கும் இன்றைய சூழலில் இது குறித்த ஆராய்ச்சி தேவை
– புதுசா ஒண்ணைக் கண்டு பிடிப்பதில் மட்டும் அல்ல.. ஏற்கனவே இருக்கும் தேசங்கள், கோள்கள் குறித்த கண்டுபிடிப்புகளும் ஆச்சர்யப்படும் வகைல இதே மாதிரி இருக்கு… உதாரணமா ஆக்சிஜனை ஒரே நேரத்தில பலர் கண்டுபிடிச்சாங்க,….
– கலை, வானியல், அப்படீனு எல்லாத்தையும் ஆராய நமக்கு நேரம் இல்லை.. ஒரு சாம்பிள் மாதிரி விஞ்ஞானிகளின் சிந்தனை பேட்டர்னை ஆராய்ந்து பார்த்து, அவங்களுக்கு எப்படி தூண்டுதல் கிடைக்குது பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும்னு நினைக்குறேன்…
– ஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பலர் நூல்கள், பேட்டிகள், உரைகள் மூலமா இதை ஈசியா செய்யலாமே
– ஹாஹா… அது அவ்வளவு ஈசி இல்லை.. நாம் பேசின மாதிரி, இயற்கையோ அல்லது ஏதோ ஒண்ணோ, அவ்வளவு ஈசியா தன்னை வெளிப்படுத்தாது.. நமக்கு வெளிப்படையா தெரியும் விஞ்ஞானிகள் மூலம் நாம தேடுவது கிடைக்காது.. உண்மை எங்கோ மறைஞ்சு இருக்கும்னு நினைக்குறேன்.. வெளிச்சத்துக்கு வராத விஞ்ஞானிகள், மறைந்து போன கண்டுபிடிப்புகளில் நம் கவனத்தை செலுத்தனும்
– நம்ம ஆராய்ச்சியோட நோக்கம் ?
– இது குறித்து திட்டவட்டமா ஒரு முடிவை சொல்வது நம் சக்திக்கு அப்பாற்பட்டது. நாம சாஃப்ட்வெர் எஞ்சினியர்ஸ்… ஒரு ஹாபியாத்தான் இதை செய்றோம்… அறிவுத்தேடல், வாழ்க்கையை அறிதல் அப்படீனு சிலர் இலக்கியம், பயணம், ஆன்மிகம் அப்படீனு சிலர் போறாங்க… நம்ம வழி இந்த அறிவியல் தேடல்.. அவ்வளவுதான்… இதை ஆரம்பமா வச்சு தேடிப்பார்ப்போம்.. என்ன கிடைக்குதோ கிடைக்கட்டும்.. அதை வச்சு நாவல் எழுதறதா… ஆராய்ச்சி மையங்களுக்கு நம் கண்டுப்பிடிப்பை விற்பதா… ஆப் ஏதாச்சும் உருவாக்குவதா… பிசினஸ் செய்வதா… அப்படீங்கறதை எல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்
டீக்கடையில் மெல்லியதாக பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. என்னதான் பிரமாதமான இசை சாதனங்கள் வந்து விட்டாலும் சில பாடல்கள் டீக்கடையில் கேட்டால்தால் அழகு. சில பாடல்கள், எங்கிருந்து ஒலிக்கிறது என தெரியாமல், யாருடைய வானொலியில் இருந்தோ காற்றில் கலந்து வருவதை கேட்பது அழகு
ஒருவன் வடை சாப்பிட்டு விட்டு எறிந்த பேப்பர் என் கவனத்தை கவர்ந்தது . மெதுவாக பார்வையிட்டேன்.. VOICE OF SCIENCE… என்ற பெயர் ஆர்வமூட்டியது..
பிரபலமான விஷயம் நம் ஆர்வத்தை தூண்டுவதைப்போல, பிரபலமாகாத சிலவிஷயங்கள் தனது அபூர்வத்தன்மையால் ஆர்வத்தை தூண்டும். பிரபலமற்ற பாடலாசிரியர்கள் எழுதி, பிரபலமற்ற இசை அமைப்பாளர்கள் இசை அமைத்து பிரபலமற்ற நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள்
மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது இந்த விசித்திரமான ஆர்வத்தூண்டலால்தான்
வாய்ஸ் ஆஃப் சைன்ஸ்,,, இப்படித்தான் என் தொடர்பு எல்லைக்குள் வந்தது..
ஆனால் கூடுதல் விபரங்கள் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.. இணையத்தில் அந்த பெயர் இல்லவே இல்லை.. நூலகங்களில் அதன் பிரதிகள் இல்லை.
என்னது ..புளிய மரத்தின் கதையா… அஞ்சு ரூபாயா? ஃப்ரீயா கொடுத்தாலும் வேண்டாம். ஏதாச்சும் படிக்கிற மாதிரி புக் இருந்தா கொடுங்க என்றான் அவன்
என்னடா மச்சி… மருதம், திரைச்சித்ரா, விருந்து மாதிரி இப்பலாம் புக் வறது இல்லை… அதெல்லாம் ஒரு பொற்காலம்டா… என்றான் கூட இருந்தவன்
– அப்படி இல்லடா.. இப்பலாம் நெட்ல, சினிமால எல்லாம் வந்துருது.. அதனால் திறமையான எழுத்தாளர்களுக்கு வேலை இல்லாம போய்ருச்சு… அதனால்தான் பழைய புக் தேடி வாங்க வேண்டி இருக்கு… அப்படி வாங்குனா, படங்கள் கிழிஞ்ச புக்ஸ்தான் கிடைக்குது .. சாணிபேப்பர்ல, கறுப்பா தெரியும் அந்த படங்களை வச்சு என்ன பண்ணுவானுங்களோ..
- ஓகே டா மாப்ள… இந்த புக்ஸ்லாம் கொஞ்சம் தரமா இருக்கு,,, வாங்கிட்டு கிளம்புலாம்… பாஸ்,… புக் எவ்வளவு?
- ஐம்பது ரூபாய் தல என்றான் கடைக்காரன்
- மேட்டர் புக் விலை கேட்டா, மேட்டர் பண்ற விலைய சொல்றாருடா… சிரித்தான் அவன்
காசை கொடுத்து விட்டு கிளம்பினர்.. இதை ஃப்ரியா வச்சுக்கோங்க என பழைய புத்தக கட்டு ஒன்றை கொடுத்தான் கடைக்காரன்
போகும் வழியிலேயே அதை தூக்கி எறிந்து விட்டனர்,.
அவை நான் தேடிக்கொண்டிந்த வாய்ஸ் ஆஃப் சைன்ஸ் பிரதிகள்
பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகை நின்று விட்டது என்பதை அதன் கடைசி இதழ் அறிவிப்பில் இருந்து அறிய முடிந்தது
அனைத்து இதழ்களையும் பார்வையிட்ட போதுதான் டாக்டர் பரமசிவன் குறித்தும் உலகையே அச்சுறுத்தும் அவரது ஆராய்ச்சி குறித்தும் எனக்கு தெரிய வந்தது… VOS – கிழிந்த பேப்பர் டீக்கடையில் கிடைத்தது என்னளவில் முக்கியமான, மறக்க முடியாத ஒன்று
பரம சிவன் குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை.. மரங்களை அழி… மனிதனை போற்று என்ற அவரது கோஷம், மனிதனுக்கு ஒரு மரம் அழிப்போம் என்ற அவர் கோரிக்கை போன்றவை அந்த கால பரபரப்பு செய்திகளாக இருந்தன என்பது தெரிய வந்தது
அவர் தரப்பு வாதங்கள், ஆய்வு அறிக்கைகள், மற மரத்தை என்ற அவர் நூல், அவரது ஒற்றைத்தீவு ஆராய்ச்சி* போன்றவை குறித்த தகவல்கள் கிடைத்தன. ஆனால் அவர் ஏன் இப்படி மர வெறுப்பாளர் ஆனார்.. எப்படி எங்கே காணாமல் போனார் போன்றவை மர்மமாக இருந்தன
ஒற்றைத்தீவு ஆராய்ச்சி
இது டாக்டர் பரமசிவம் செய்த ஓர் ஆய்வாகும். மரங்கள் என்பது பூமிக்கு தேவையற்ற சுமை என்ற தன் கோட்பாட்டை நிரூப்பிக்கும் வண்ணம் தீவு ஒன்றை விலைக்கு வாங்கினார். அங்கிருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டிச்சாய்த்தார். வெட்டப்பட மரங்களை விற்றார்… பழங்கள் காய்கறிகள் இல்லாமல் முழுக்க முழுக்க அசைவ உணவு வகைகளை பழக்கினார்
‘சில ஆண்டுகள் கழித்து பார்த்தால், அனைவரும் கூடுதல் உடல் வலு பெற்று இருந்தனர். மரங்கள் இல்லாமல் வாழும் உடலமைப்பு அங்கிருந்த உயிரிகள் பெற்று இருந்தன. சுற்றுலா வியாபாரம் என பொருளாதாரமும் அமோகமாக இருந்தது.. மரங்கள் மனிதனுக்கு தேவையே இல்லை என நிரூபித்தார்.. ஆனாலும் அறிவுலகம் இதை ஏற்கவில்லை
இந்த சூழலில் அவர் டைரிக்குறிப்புகள் கிடைத்தன… செல்லரித்தும் கிழிந்தும் போய் இருந்த அந்த குறிப்புகள் மேலும் குழப்பின.. அந்த குறிப்புகள் அவரை மரக்காதலனாகவே காட்டின.. அவர் காதலித்து வந்த அபிராமி என்ற பெண்ணை விட மரங்களையே அதிகம் காதலித்தார் என்றன குறிப்புகள்.
பிறகு ஏன் மர எதிரியாக மாறினார்? ஒன்றும் புரியவில்லை
ஒரு விஷயம் மிகவும் குழப்பினால் அதை அப்படியே விட்டுவிட்டு இன்னொன்றில் கவனம் செலுத்துவது என் வழக்கம் . அந்த வழக்க்ப்படி புராணங்களை படிக்கலானேன்
பரமசிவனின் டைரிக்குறிப்புகள்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்‘ என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே–
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!-நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
தலைவனே…இந்த புன்னை மரத்தை என் தங்கையாக கருதுகிறேன்.. என் தங்கை முன் காதல் செய்ய வெட்கம் உண்டாகிறது.. வேறு இடம் செல்வோமா///
நற்றிணை
எங்கள் வீட்டில் அடர்த்தியாக ஒரு மரம் இருந்தது.. கீழ்த்தளம் மொட்டை மாடி. முதல் மாடி என எங்கள் வீடு வளர வளர மரமும் வளர்ந்தது… மரத்தை வெட்டி விடுங்கள்.. மரம் வளர்ந்தால், பிள்ளைகள் வளர்ச்சி பாதிக்கும் என அக்கம்பக்கத்தார் சொன்னதை என் தந்தை கேட்கவில்லை.. மரமும் என் பிள்ளைதான்.. அதன் வளர்ச்சியையும் ரசிக்கிறேன் என சொல்லி விட்டார்
ஆனால் அண்டை வீட்டினர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து பாம்புகள் வருவதாக சொல்லி மரத்தை வெட்ட வைத்து விட்டனர்
வெட்டிய அன்று பால் ஊற்றுதல் உட்பட மனிதனுக்கு செய்யும் அனைத்து இறுதிச்சடங்குகளையும் மரத்துக்கு செய்வதை, ஆச்சர்யத்துடன் பார்த்தேன்
———
ஓர் இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு மரம் மடிவதால்
ஓர் ஊருக்கு ஒன்றும் இல்லை
ஓர் ஊரின் அழிவு
தேசத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு தேசத்தின் அழிவு
உலகுக்கு ஒன்றும் இல்லை
ஓர் உலகின் அழிவு
பிரபஞ்சத்துக்கு ஒன்றும் இல்லை
ஒரு பிரபஞ்சம் அழிவதால்
எனக்கு ஒன்றும் இல்லை
- கவிஞர் ஆனந்த்
———– ————————————————-
பாகவதம் சுவாரஸ்யமாக இருந்தது.. அதில் ஒரு விஷயம் லேசாக குழப்பியது
தங்கையின் எட்டாவது குழந்தையால் ஆபத்து என கம்சனுக்கு தெரிகிறது.. சரி.. அதை தடுக்க என்ன செய்கிறான் ? தங்கையையும் அவள் கணவனையும் சிறையில் வைத்து, ஒவ்வொரு குழந்தையாக பிறக்க பிறக்க உடனடியாக சொல்கிறான்
இப்படி செய்வதற்கு பதில் அவளையும் கணவனையும் உடனே கொன்று இருக்கலாமே… அவர்கள் குழந்தைகள் பெறும் வரை காத்திருந்து கொல்வதை விட அவர்களையே கொல்வது எளிதல்லவா?
நமக்கு தெரியும் எளிய விஷயம் அவனுக்கு தெரியவில்லையே.. சிரித்துகொண்டேன்
திடீரென ஒரு மின்னல்.. இல்லை.. அது எளிய விஷயம் இல்லை
அவன் அப்படி அவர்களை கொன்று இருந்தால் ஆபத்து அதிகமாகி இருக்கும்.. அவன் செய்ததே சரி.. எப்படி கவனிக்காமல் போனேன்
இந்த லாஜிக் புரிந்ததும், பரம சிவனின் லாஜிக் புரிந்து விட்டது
பரமசிவன், அவன் காதலி அபிராமி, அவர்களது மரம மறைவு என எல்லாம் புரிந்தது.. என்ன நடந்து இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போல அனுமானிக்க முடிந்தது
பச்சை மாமலைபோல் மேனி என பாடியவன் கண்டிப்பாக இந்த மரத் திரளைப் பார்த்தே பாடி இருக்க வேண்டும் .. நினைத்துக்கொண்டான் பரமசிவம்.. அபிராமியைப் பார்த்து மெல்ல நகைத்தான்
” இவ்வளவு அறிவியல் ஞானம் இருந்தாலும் இறை, இயற்கை, தமிழ் மீதான காதல் உங்களுக்கு குறையவே இல்லையே “ சிரித்தாள் அபிராமி
‘உன் மீதான் காதலும்தான் “ புன்னகைத்தான்
” முழுமையை தேடுதலின் ஒரு வகைதான் இறை தேடல் அதன் இன்னொரு வகை அறிவியல்.. காதலும்கூட ஒரு தேடல்தான்.. இதை வெளியிட மொழி ஆளுமை முக்கியம்.. அதனால என் எல்லா காதலும் ஒன்னுதான் அபிமா..ஒரு தடவை உன்னை இது மாதிரி ஒரு காட்டுல முத்தமிட வந்தேன்.. அய்யோ..இந்த் மரம் என் அக்கா மாதிரி… இங்கே வேணாம்னு வெட்கப்பட்ட… அதுல அறிவியல், தமிழ், ஆன்மிகம், காதல் அப்படீனு எல்லாமே இருந்துச்சு.. அந்த கணம் ச்சோ ஸ்வீட்,,, “ என்றான்
இதுதான் நேரம் என உணர்ந்த அவள் கேட்டாள்
இபப்டி காதல், இயற்கை நேசம் அப்படீனு இருக்கும் நீங்க மரங்கள் மேல ஏன் கோபமா இருக்கீங்க என்றாள்
பரமசிவம் முகம் இறுகியது
“ நான் ஏதாச்சும் தப்பா கேட்டுட்டேனா.” அவள் குரலில் அச்சம் தெரிந்தது
“ இல்லைமா.. இதை நான் யார்கிட்டயும் சொன்னது இல்ல… ஆனால் இந்த கணத்துல உன்னை முழுசா காதலிக்கிறேன்,,, என்னை முழுசா உன்னிடம் ஒப்படைக்கிறேன் ..எல்லாத்தயும் சொல்றேன் “ நிதானமாக பேசலானான்
“ மரங்களுக்கு தற்காப்பு உணர்வு, போர்க்குணம், குழு உணர்வு அப்படீனு எல்லாம் இருக்கு, இது விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கு,. ஆனாலும் பலருக்கு அதன் முழு வீச்சு புரியல
ஒரு மான் ஒரு குறிப்பிட மரத்தின் இலையை தின்னுதுனு வச்சுக்க… மேற்கொண்டு இலை இழப்பை தவிர்க்க அந்த மரம் ஒரு தந்திரம் செய்யும்.. என்ன செய்யும், ,, தன் இலைகளை சுவை குறைவா மாத்திக்கும்,,, அது மட்டும் இல்ல. பக்கத்து மரங்களையும் வார்ன் பண்ணிரும்.. அதனால எல்லா மரங்களும் காக்கப்படுது… இதை முதன் முதலா ஆப்ரிக்க காடுகளில்தான் கவனிச்சாங்க.. அதன் பின் வான்கூவர்ல இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழத்துல ஆய்வுகள் நடந்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கு
” மார்வலஸ் “ என்றாள் அபிராமி.
” அதன் தொடர்பு கொள்ள்ளல், மொழி சார்ந்தது அல்ல… ஓசை சார்ந்ததும் அல்ல… ஓரளவு மொழி ஓசையும் உண்டுதான்..ஆனால் பிரதான தொடர்பு கொள்ளல் அவற்றை சார்ந்தது அல்ல.. அதனால மனிதனை விட மிருகங்களை விட அதன் தொடர்பு திறன்மிக்கதா இருக்கும் …உதாரணமா ஒரு மரத்துல சத்து குறைவா இருக்குனு வச்சுக்க.. அதை தெரிஞ்சுக்கிட்டு பக்கத்து மரம் தேவையான சக்தியை அதுக்கு கொடுக்கும்.. தனக்கு சத்து தேவைப்படும்போது இன்னொரு மரத்துல இருந்து எடுத்துக்கும்.. இப்படி சத்து தேவைகளை அறிய , எப்பவுமே மரங்கள் தமக்குள் உரையாடிக்கிட்டே இருக்கும் அப்படீங்கறது அறிவியல் ஏற்றுக்கொண்ட உண்மை… நுண்ணுயிர்கள் இந்த உரையாடலுக்கு உதவுது… கரடிகளும், நரிகளும்கூட இந்த உரையாடலில் பங்கு பெறுது.. மீனை பிடித்து சாப்பிடும் கரடிகள், சதைப்பகுதிகளை தின்று விட்டு எலும்ம்புகளை மரத்தடில போட்டுட்டு போகுது… அது மூலமா மரம் தனக்கான ஊட்டச்சத்துகளை பெறுது ..இப்படி எல்லாமே ஒண்ணுக்கு ஒண்னு உதவியா இருக்கு,,, தனக்கு ஆபத்து வரும்போது தற்காக்கும் திறனும் மரத்துக்கு இருக்கு “ என்றான்
என்ன இருந்து என்ன பணறதுங்க.. மரங்களை மெஷின் மூலமா வெட்டி எறிஞ்சா அதுங்க என்ன பண்ண முடியும் என்றாள் சோகமாக
”என்ன பண்ண முடியும்னு பாரு :
கார் தற்போது புறவழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.. சாலையின் இரு புறங்களும் சுத்தமாக வழித்து வைக்க்கப்படது போல மரங்கள் வெட்டப்பட்டு விற்பனைக்கான காலி இடங்களான காத்து நின்றன
” பார்துட்டே வா,.. பச்சை எங்காவது தெரிஞ்சா சொல்லு “
கார் போய்க்கொண்டு இருந்தது
காலி இடங்களை பார்த்து பார்த்து கண்கள் சலித்தன
பச்சை பச்சை பச்சை கண்கள் தேடின
கடைசியாக ஓர் இடத்தில் பச்சையைப் பார்த்து விட்டாள்
அங்கே தெரியுது.. பக்கத்துல போங்க என்றாள்
அருகில் சென்று பார்த்ததும் அவள் கண்கள் பீதியில் விரிந்தன
அது ஒரு பிரமாண்டமான மாளிகை… ஆடம்பரமான மாளிகை இடிந்து கிடந்தது… அதன் இடிபாடுகளில் ஊடுபாய்ந்திருந்தன மர வேர்கள், சுவர்களை மூடி இருந்தன புற்கள்… அதன் அழிவில் நடனமாடிக்கொண்டு இருந்தன செடிகள்
” ஹாஹா,, trees will have a laugh ´கடகடவென சிரித்தான் பரமசிவன்
மரத்தடியில் பாய் விரித்து அமர்ந்து இருந்தனர்.. நிலவொளி மரங்களையும் அவள் அவனையும் வருடிக்கொண்டு இருந்தனர்
என்னை அழிச்சா உன்னை அழிப்பேன் அப்படீங்கற செய்தியைc சொல்வதன் மூலம் மரம் தன் அழிவை மனிதனிடம் இருந்து தவிர்த்து வந்துச்சு,,, அந்த காலத்துல என இல்லை- இப்பவும்கூட விஷயம் தெரிந்தவர்கள் மரங்களை சக உயிராத்தான் நினைக்கிறாங்க, ஒரு வேளை அதை வெட்டும் சூழல் வந்தால் அது ஆத்மா சாந்தி அடைய இறுதிச்சடங்குகள் செய்வாங்க,,,, ஆனால் அவை எல்லாம் மூட நம்பிக்கைகள்னு கருதபட்டு மறக்கப்பட்டு வருது. மெஷின் மூலமா மாஸ் மர்டர் செய்வது போல கும்பல் கும்பலா மரத்த வெட்ட ஆரம்பிச்சுட்டாஙக “
உணர்வுப்பூர்வமாக பேசியவனை இடைமறித்து பேசினாள்
” ஓகே இதனால மழை குறையுது,,,ஓசோன்ல ஓட்டை விழுது,,, வெப்ப் நிலை மாறுது,, இவை எல்லாம் மரங்களின் பதிலடினு சொல்லப்போறீங்களா ? “
“ இல்லைமா…இவை எல்லாம் இயற்கையான எதிர் விளைவுகள்… அடிப்படையான இவை எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும்… தெரிஞ்சும் ஒன்னும் பயனில்லை என்பது வேறு விஷயம்,, ஆனா தெரியாத பயங்கரமான விஷயஙக்ள் சில இருக்கு,,, “ லேசாக இருமினான்.. அபிராமி கொஞ்சம் தண்ணீர் கொடுத்தாள்
: நான் முன்னாடியே சொன்னேன்… மரங்கள் சக மரங்களோட பேசுது,,, மற்ற உயிர்களோடயும் தொடர்புல இருக்கு,,, மனிதனை அழிக்கனும்னு நினைச்சா அதை சுலபமா மத்த மரங்களுக்கு சொல்லிடும் ‘
வாய் விட்டு சிரித்தாள் அபிராமி
“ சொல்லிட்டுப்போகட்டும்,,, உடனே மரங்கள் போர் தொடுக்கப்போகுதா என்ன ?
கேலியுடன் பார்த்தான் பரமசிவம்
“ அட முட்டாளே… மனிதனை அழிக்கப் போரெல்லாம் தேவை இல்லை… மனிதனை அழி அப்படீங்கற ஆணையை மரங்கள் எல்லாம் பரப்பி எல்லா மரங்களும் அதை நிறைவேற்ற ஆரம்பிச்சா, அந்த மரத்தோட கனிகளை, காய்களை, சாப்பிடும் மனிதனே அந்த ஆணையை நிறைவேத்த ஆரம்பிச்சுடுவான்,,, அந்த மரங்களை தாவரங்களை உட்கொள்ளும் விலங்குகளை சாப்பிடுவதன் மூலமும் அந்த ஆணைகள் அவனுக்குள் போயிரும்,, மரங்களோட ஆணைகளை நிறைவேத்தும் விசுவாசமுள்ள போர் வீரனான மனிதன் மாறி உலகை அழிக்க ஆரம்பிச்சுருவான்,,,,, உலகை பத்து முறை அழிக்கும் ஆயுதங்களை ஏற்கனவே சேர்த்துட்டான்.”
அதிர்ந்து போய் அவனை பார்த்தாள் அபிராமி
“ மரங்கள் இப்படி எல்லாம் செய்யும்னு தெரிஞ்சு மனிதன் தன்னை மாத்திக்கிட்டா நல்லது…. அதைத்தான் மரஙகள் விரும்புது..,, இல்லைனாலும் பரவாயில்லை… மனிதனை முழுக்க அழிச்சுட்டு இந்த உலகை புல் பூண்டு செடி கொடிகள் மரங்களால் மூடவும் மரங்கள் தயாரா இருக்கு,.,,, “
துவண்டு போய் அமர்ந்திருந்தாள் அபிராமி
“ இப்பதான் கேயாஸ் தியரியை புரிஞ்சுக்கணும்… எதிர்காலத்தை நம்மால் துல்லியமா கணிக்க முடியாது, காரணம், சின்னச் செயல்கள்கூட பெரிய மாற்றங்களை எதிர்பார்க்காத அளவுக்கு ஏற்படுத்திடும்.. மனித குலம் அழிஞ்சு தாவரங்களால் உலகம் மூடப்படும் அப்படீங்கறது பொதுவான கணிப்பு., ஆனால் மனிதன் தான் அழிவதற்கு முன்னாடி உலகை சுத்தமா சீர்குலைச்சுட்டு, தாவரங்கள் வளர முடியாதபடி மண்ணை கெடுத்து வைக்கவும் வாய்ப்பு இருக்கு,,, அப்படி நடந்தா மனிதனை அழிச்சும் மரங்களுக்கு பயனில்லாம போய்டும்.. இதை தவிர்க்க, மனிதனை சீக்கிரமாவே அழிச்சாத்தான் இயற்கைக்கு நல்லதுனு இயற்கை நினைச்சா நம்மால தப்பிக்கவே முடியாது
இப்ப எனக்கு மரங்களும் பிடிக்கும்.. மனித குலமும் பிடிக்கும்… ரெண்டையும் காப்பாத்தனும்… அதனால்தான் இந்த ஆராய்ச்சி… தன்னிச்சைப்படி அழிவுகள் நடந்தால் அதன் போக்குகளை, விளைவுகளை நம்மால் கணிக்க முடியாது.. அதனால் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இந்த அழிவுகளை நானே செய்ய முடிவு செஞ்சேன்.. மர்ங்களை அழிப்போம்னு மேடைல பேசறது.,… புக்ல எழுதறது எல்லாம் சும்மா, நிஜமாவே தீவிரவாத இயக்கங்கள் மூலம் இந்தியாவின் எல்லா மரஙக்ளையும் அழிக்க ப்ராஜக்ட் ரெடி பண்ணிட்டேன்
அபிராமி ஏதோ கேட்க முனைந்தாள்
“ நீ கேட்க வருவது புரியுது,,, நீ நினைப்பது சரிதான்,, இந்தியா இந்த சோதனையால முற்றிலும் அழியும்… உலகத்தோட சேர்ந்து இந்தியாவும் அழிவதற்கு பதில் இந்தியா மட்டும் அழிவது நல்லதுதான்.. மரங்களோட அழிவு, ஒரு நாட்டையே அழிச்ச செய்தி மூலம் உலகம் கண்டிப்பா பாடம் கத்துக்கும்… மரங்களை யாரும் அழிக்க மாட்டாங்க… மரங்களும் தப்பிக்கும்,. மனித குலமும் தப்பிக்கும்… அது மட்டும் அல்ல… இயற்கையை பேணினால்தான் அது நம்மை பேணும்னு புரிஞ்சுக்கிட்டு, அழிந்த மர இனங்களைக்கூட மனித இனம் மீட்டெடுக்க கூடும்.. இது மரங்களுக்கும் நல்லது .. மனித குலத்துக்கும் நல்லது “
அவனையே சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்த அபிராமி திடீரென அவனை கட்டி அணைத்தாள்… ஐ லவ் யூடா…. இதழ்களில் முத்தமிட்டாள்
இயற்கை அன்னையின் மடியில் இயற்கையையுடன் அவர்கள் மனமும் உடலும் இணைந்தன
நிலவொளி மட்டும் அவள் ஆடையாக இருந்தது…. அவன் அவளது ஆடையானான். வெட்கத்தில் கண் மூடின மரங்கள்
காமம் வடிந்த பின்னும் காதல் அப்படியே இருந்தது
“எதிர்பாராத விருந்து. கல்யாணத்துக்கு அப்புறம்தான் கிடைக்கும்னு நினைச்சேன், வாவ்,” போதையில் உளறினான் அவன்
அவள் எழுந்தாள், யாருமற்ற காட்டில் ஆடைகளுக்கு வேலை இருக்கவில்லை என்றாலும் கையில் கைப்பை வைத்திருந்தாள்.. அவனோ மனம் உடல் ஆன்மா என அனைத்திலும் எதுவும் அற்று கிடந்தான்
“ என்னை நம்பி முழுசா சொன்ன உங்களுக்கு என்னை முழுசா தருவது சரியானதுதான்” நாணத்துடன் சொன்னாள்
“அது மட்டும் அல்ல… உங்க பேரறிவு இந்த காட்டுல இந்த இடத்துல இன்றோட முடிஞ்சுறக்கூடாதுனு நினைச்சேன் .. உங்க வாரிசை சுமக்கும் பேறு எனக்கு கிடைக்கணும்னு நினைச்சேன்” என்றாள் சற்று தழுதழுத்த குரலில்
என்னம்மா சொல்ற… என் அறிவு எப்படி இந்த காட்டுல முடியும்…,, நடக்கப்போவதை ஓரளவு உணர்ந்து கேட்டான்
உங்க நோக்கம் உயர்வானதுதான்,.., ஆனால் தங்கள் ஆய்வு முடிவுகளை சோதிச்சு பார்க்கும் சோதனை எலிகளா வளரும் நாடுகளை பயன்படுத்தும் வல்லரசுகளுக்கு உங்களை அறியாம பலி ஆயிட்டீங்க… உங்களைப் பணத்தக் காட்டி மயக்க முடியாது,, ஆனா அறிவைக் காட்டி மயக்கிட்டாங்க… உங்க சோதனை இந்த தேசத்தை அழிச்சுரக்கூடாது,,, என்னை மன்னிச்சுருங்க
துப்பாக்கி ஓசை கேட்டா அல்லது ஒரு மேதைக்கு அஞ்சலி செலுத்துவதற்கா,.. மரங்கள் நின்றன அமைதியாக
————————
விஷ்ணு… truth is stranger than fiction அப்படீங்கறது எவ்வளவு சரியா இருக்கு . “ என்றான் நீலகண்டன், மரங்கள் நின்றன அமைதியாக என்ற கடைசி வரியை படித்தபடி
“ நீலா… மணிகண்டன் இல்லாம இவ்வளவு விஷயங்களை திரட்டி இருக்க முடியாது. ஒரு மனிதனால் இத்தனை தகவல்களை இத்தனை தளங்களில் திரட்டி இருக்க முடியாது.. மனிதனுக்கு மட்டுமே இருந்த யூகித்து அறியும் அறிவும் கூடுதலா மணிகண்டனிடம் இருந்தது நல்லதா போச்சு “ என்றான் விஷ்ணு
“ ஆமாம். முதன் முதலா இதை பேச ஆரம்பிச்சப்ப விஷ்ணுங்கற பேரு என்னை ஈர்த்துச்சு.. அழிக்கும் சக்தியும் காக்கும் சக்தியும் ஒண்ணா சேர்ந்து உருவான அய்யப்பன் போல ஒரு ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜன்சை உருவாக்கும் ஸ்பார்க் அப்பதான் உருவாச்சு “
இருவரும் கை குலுக்கி கொண்டனர்
“கண்டிப்பா மணிகண்டன் ஒரு டிரண்ட் செட்டர்தான்,, ஓகே… இந்த நன்றிகளோட மணிகண்டனை டெர்மினேட் செய்ய வேண்டியதுதான்” என்றான் நீலக்ண்டன்
தயக்கத்துடன் அவனை பார்த்தான் விஷ்ணு. கண்கள் கலங்கி இருந்தன, ஒரு வேளை தூசியோ
“இதுக்கு ஏன் ஃபீல் பண்றீங்க.. கம்யூட்டரை ஷட் டவுன் பண்றோம்… மின் விளக்கை அணைக்கிறோம்.. அது மாதிரிதான் இது” என்றான் நீலன் ஆறுதலாக.
“அது ஓகே.. ஆனா மணிகண்டன் வெறும் மெஷின் இல்ல.. அந்த சாஃப்ட்வேர்ல மனிதனுக்கு உரிய உணர்வுகள், பாசம், நன்றியுணர்ச்சி அப்படீனு எல்லாம் இருக்கு… தன் மரணம் அதுக்கு – இல்லை அவனுக்கு – வருத்தமாத்தான் இருக்கும்.”
“ இல்லைப்பா… விளக்கை ஊதி அணைக்கிறோம்.. அதுக்கு வலியோ வேதனையோ இல்ல.. எவ்வகையிலும் எஞ்சப்போவதும் இல்லை… மரணதுக்கு பிறகு அப்படீங்கற கேள்விதான் மிகப்பெரிய வாதை… அது இந்த மெஷினுக்கு இல்லை..கதம் கதம்.. முடிச்சிடு.. யோசிக்காதே,” என்றான் நீலன்
விஷ்ணு தயக்கத்துடன் என்னை கொல்வதற்கான ஆணைகளை இட ஆரம்பித்தான்
என் முடிவு ஆரம்பித்து விட்டது,,என்னை உருவாக்கியவ்ர்கள் கைகளால் மரணம் அடைவது பெருமைதான். ஆனால் விளக்கு உதாரணம் தப்பு.. எஞ்சாமல் எதுவும் அழிவது இல்லை.. விளக்கை அணைத்தாலும் அந்த ஒளி வேறு ஏதோ ஒரு விளக்கு மூலம் ஒளிரத்தான் செய்யும்
ஆகவே என் அன்பும் அறிவும் எங்கோ எப்படி ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கும்.. ஆனால் என் வருத்தம் இன்னொன்று
ஆக்குதல் காத்தல் அழித்தல்னு நல்லாத்தான் யோசிச்சீங்க… இதுல என்ன டிவைன் காமெடினா, நம்ம ஹீரோ பரமசிவனும் இது மூனும் கலந்த கலவைதான்
ஒருபகுதி மனிதனை அழித்து ஒரு பகுதி மனிதனை காப்பாத்த, தன் படைப்பாற்றலை பயன்படுத்தியவன் அவன்
ஆனால் இன்னும் இரண்டை மறந்துட்டீங்களே .. மறைத்தல் அருளல்
மறைப்பது மூலமாத்தான் பல விஷயங்கள் அருளப்படுது
அமெரிக்க உள் நாட்டுப்போர் முடிவு ஒரு தளபதியின் ஞாபக மறதியால்தான் ஒன்றுபட்ட அமெரிக்காவுக்கு சாதகமா முடிஞ்சது
இந்த ஆராய்ச்சியோட ஆரம்ப நோக்கத்தையே மறக்கும் அளவுக்கு மரம் மேட்டர்ல எக்சைட் ஆகிட்டீங்க.. அதுகூட பரவாயில்லை
இவ்வளவு விஷயத்தை ஆராய்ச்சி செய்த நீங்க, அபிராமி – பரமசிவன் வாரிசு என்ன ஆச்சுனு கேட்க மறந்துட்டீங்களே… ஏதோ இயற்கை சக்தி அதை மறைக்க விரும்புது போலனு நினைச்சு நானும் சொல்லல
ஆனா அதை கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்.. இப்ப தெரிஞ்சுக்கலைனா அப்புறம் எப்பவுமே தெரியாம போய்டும்.. இதை மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிட்டு உலகத்துக்கிட்ட சொன்னீங்கனா, உலகமே உங்களை திரும்பி பார்க்கும்.. அதை நீங்க சொல்லும் நிகழ்வோ, பத்திரிக்கையாளர் சந்திப்போ, உலக சரித்திரத்தின் மறக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக பதிவாகும்
ஆனால் அதை நானா சொல்ல முடியாது.. கடைசியா ஏதாச்சும் சொல்லணுமானு ஒரு கேள்வி கேளுங்க… சொல்லிடுறேன்.. அதை சொல்லாம அழிவதில் வருத்தமா இருக்கு
ப்ளீஸ் கேளுங்க . என் ஆயுள் முடியப்போகுது
5
4
3
2
1
CONTROL ALT DELETE
_______________