நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.

முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன்.

அணில்கள் எங்கள் வீட்டில் வாடகை கட்டாமல், ஏழெட்டு தலைமுறைகளாக வாழும் விருந்தாளிகள்.  எங்கள் வீட்டு மாதுளை மரத்தில் ஒரு காய் கனியத்தொடங்கிவிட்டால் எங்களுக்கும் அணில்களுக்கும் போட்டி தொடங்கிவிடும். ஒவ்வொரு நாளும் நாங்களும் அதுகளும் முந்தியடித்துச்சென்று பார்ப்போம், காய் பழுத்துவிட்டதா என்று. பழுத்துவிட்ட அடுத்த நொடி அதுகளுக்கு எப்படியோ செய்தி போய்விடும். நாங்கள் அடுத்த முறை போய் பார்க்கும்போது பழம் பாதி கடிக்கப்பட்டு பிளவுண்டு பல்லிளித்துத் தொங்கும். மண்மேல் மாணிக்கங்களாக சிதறியிருக்கும். அவற்றை பொறுக்கித் தின்றால் இனிப்பாகத்தான் இருக்கும். ஆனால் அணில்கள் தின்ற எச்சில் தான் எங்கள் மிச்சம் என்ற நினைவோடு தான் அவற்றை தின்ன முடியும். எப்போதும்.

நாங்கள் பார்த்தோம். ஒரு முறை முழுவதும் பழுப்பதற்கு மூன்று நாளுக்கு முன்னாலேயே பறித்துவிட்டோம். ஆனால் பழம் காய்வெட்டாகவே இருந்தது. அப்படியொரு கசப்பு. நாங்கள் அதனை தூர எறிந்ததைப் பார்த்த அணில்களுக்கு அன்று பொறுக்கவில்லை. வீடு முழுவதும் ஏறி இறங்கி கீச்சிக் கதறி துவம்சம் செய்து ஒரு வழியாக்கிவிட்டன. அதன் பின் எப்போதும் அணில்களுக்கு முதல் கடியை கொடுத்துவிட்டு நாங்கள் சாப்பிட்டால் போதும் என்று அம்மா சொல்லிவிட்டார். அணில்களுக்கு வீட்டில் கிட்டத்தட்ட குலதெய்வ அந்தஸ்து அளிக்கப்பட்டது. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஏழு ஜன்ம பந்தம், அவர் பெயர் சீதம்மா.

நான் அந்த நட்சத்திரத்தை மாதுளை என்று நினைத்து பறித்ததை அம்மா அறிந்துகொண்டால் திட்டுவார். ஆக பறித்துவிட்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. சற்று நேரம் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருந்தேன். நட்சத்திரங்கள் இவ்வளவு வெம்மையாக இருக்கும் என்று யாரும் சொன்னதில்லை. அதிகம் யோசிக்காமல் முழுவதுமாக வாயில் போட்டு மென்றேன். கரைந்து உள்ளே சென்றது. பழத்தைப் போலவே சாறு இருந்தது. தொண்டையில் இலேசான வெம்மை. ஆனால் பெரிய உளைச்சல் இல்லை. நானும் அதிகம் யோசிக்கவில்லை. சாப்பிட்டு கையைத் துடைத்துக்கொண்டு அப்படியே போய் அம்மா பக்கத்தில் சுருண்டு படுத்து தூங்கினேன்.

அடுத்தநாள் நட்சத்திரம் செரித்துவிட்டிருந்தது. ஒன்றும் பெரிய வேறுபாடில்லை.

ஆனால் மேலும் சில நாட்களில் நகங்களில் அதன் ஒளியைக்கண்டேன். எப்படியோ நான் விழுங்கிய நட்சத்திரம் உடல்முழுவதும் ஊர்ந்து வழிதேடி நகமுனையில் வந்து சேர்ந்திருக்கவேண்டும். மருதாணி வைக்கும்போது நகத்துக்கும் சேர்த்து வைக்கும்படி அம்மாவை கேட்பேன். எல்லோருக்கும் நகங்களில் ஆரஞ்சு நிறத்தில் மருதாணி பிடிக்கும். எனக்கு என்றுமே அடர்சிவப்பு. ஆம் நகமும் சிவப்பு.

ஆனால் நட்சத்திரம் பூத்த நகங்கள் வேறு நிறம் கொண்டவை. இளஞ்சிவப்பு. ஊதா. மஞ்சள். எல்லாம் கலந்த நிறம். பனிக்கட்டியில் வெயில் விழும் நிறம். மங்களமான, நிதானமான ஒளி. நட்சத்திர நிறம்.

இரகசியமாக, யாருக்கும் தெரியாமல், நட்சத்திரங்களைப் பறித்து விழுங்கிக்கொண்டிருந்தேன். வட்ட வட்ட மாதுளைப்பழங்கள். வட்ட வட்ட நிறத்தட்டுகள். வட்ட வட்டத் தூக்கமாத்திரைகள். அவை கண்களில் கூந்தலில் விரல்களில் நகங்களில் ஏறிக்கொண்டன. அணில்கள் தான் முதலில் கவனித்தன. கோபமாகக் குரல் எழுப்பின. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டின. நான் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் நான் நட்சத்திரமழையை கண்டுபிடித்துவிட்டேன்.

நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் வானத்தில் அசைவில்லாமல் நின்றுகொண்டிருப்பதாகத்தான் நினைக்கிறோம் இல்லையா? நாம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கிறோம். ஒவ்வொன்றாகப் பறிக்கிறோம். ஒவ்வொன்றாக விழுங்குகிறோம் செரிக்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு பழம் தான். ஒன்றுக்கு மேல் சாப்பிட்டால் சூடு ஏறும். வயிற்றை வலிக்கும். உங்கள் அம்மாவும் சொல்லியிருக்கிறார் இல்லையா?

எல்லாம் கண்தோற்றம். நட்சத்திரங்கள் எந்நேரமும் விழுந்துகொண்டிருக்கின்றன. தெரியவில்லையா? அசடா, அவை மிகமிக மெதுவாக விழுகின்றன. அதனால்தான் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. உண்மையில் இங்கு நட்சத்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அறியவேண்டுமென்றால் நீயும் அந்த கதியில் பறக்கவேண்டும். விழவேண்டும். தும்பி இறகுகளை அணிந்துகொண்டு சென்றால் சரியாக இருக்கும். மெல்லப் பறக்கப் பழகு. அதோ அந்த விளிம்பிலிருந்து குதி. பயப்படாதே, நினைவுகொள் உனக்கு இறகுகள் இருக்கின்றன. அப்படித்தான், அப்படியே இறங்கி வா. இன்னும் மெதுவாக. இன்னும் இன்னும் மெதுவாக. தெரிகிறதா? உன் இடது பக்கம் படர்ந்து இறங்குவது? அது ஒரு நட்சத்திரம். உன் பின்னால் பார். வேகத்தைக் கூட்டாதே! நிதானம். நிதானம். மெல்லத்திரும்பு. அதோ, இன்னொன்று. இப்போது உன் முன்னால். சேர்ந்தாற்போல் மூன்று. தெரிகிறதா? உன்னை சுற்றி விழுகிறதா? நட்சத்திர மழை?

நாம் அவ்வளவு மெதுவாகச் செல்கிறோம். அசைவற்ற நிதானம். வெளியிலிருந்து பார்த்தால் நாமும் நட்சத்திரம் போலவே ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டிருப்பது போல, கண்சிமிட்டாமல் ஒன்றையே பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றும். ஆனால் நாம் பறந்துகொண்டிருக்கிறோம். தும்பிகளைப்போல். காலத்தை கரைக்கும் மழையில் பறந்துகொண்டிருக்கிறோம்.

நட்சத்திர மழை நம்மை மென்வெம்மையுடன் நனைக்கும். ஒருதுளி விடாமல், அருவிச் சாரலைப் போல் நனைக்கும். நீராவியெழப் பிரியும். உடலில் நிறங்களை விட்டுச்செல்லும். வெப்பத்தைக் கூட்டிச்செல்லும். ஆனால் விட்டு விலகும்போது குளிரடிக்கும். வாய் திறந்து மழைத் துளிகளைப்போல் நிறத்துளிகளைப் பிடிக்கலாம். நாக்கு ஊதா நிறமாகும். அது நம்மை பாட்டுப்பாட வைக்கும்.

அவர் பாடச்சொன்னபோது அந்தப்பாடலைத்தான் பாடினேன். அந்த ஊதா நிறப்பாடல்.

எங்கே கற்றுக்கொண்டாய், என்றார்.

நட்சத்திரமழையில், என்றேன்.

நட்சத்திரமழையை எப்படிப் பார்க்கவேண்டும், என்று கேட்டார்.

அதில் கரைந்து நனையவேண்டும் என்று சொன்னேன்.

அதை இங்கிருந்தே பார்க்கமுடியுமா, என்றார்.

இல்லை, அதில் நனையவேண்டும், அப்பத்தான் வண்ணங்கள் ஏறும், என்றேன்.

என்ன வண்ணங்கள், என்றார்.

உடலைக் குனிந்து பார்த்தேன். விரல்களைத் திருப்பிப் பார்த்தேன். நகத்தை உற்றுப் பார்த்தேன். பிறகு, அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

உன்னை நட்சத்திர மழை அடித்துச்சென்றுவிட்டது, என்றார்.

நீ அந்த நட்சத்திரங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் எடுத்துக்கொண்டாயல்லவா நிறங்களை? உன்னை அடித்துச் சென்றபோது அதுவே அந்நிறங்களையும் திரும்ப எடுத்துக்கொண்டது, என்றார்.

நான் வெளிறிப்போயிருந்தேன்.

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார்.

நான் உதட்டைக் கடித்து சுற்றிமுற்றிப் பார்த்தேன்.

வெள்ளை அறையின் கண்ணாடிக்கு அப்பால் அம்மாவும் அண்ணாவும் நின்றுகொண்டிருந்தார்கள். முகத்தில் கவலை. இரண்டு நாள் முகம் கழுவாத தடம். கசங்கிய புடவை. அம்மா வாய்க்கடியில் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். மகாமிருத்யுஞ்சய ஸ்தோத்ரம். அல்லது மந்த்ரராஜபத ஸ்தோத்ரம். இல்லை இந்திராக்‌ஷி ஸ்தோத்ரம். எனக்கும் எல்லாம் மனப்பாடமாக தெரியும். அப்பாவுக்குச் சொன்னபோது பழக்கமானது.

அவர்கள் என்னை மழையில் நனைய விடவில்லை. ஆனால் எனக்கு நட்சத்திர மழையின் நினைவாகவே இருந்தது. வண்ணங்களற்றவளாக வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அவரிடம் சொன்னேன். டாக்டர், இசை கேட்கவில்லை. சப்தங்களாகிவிட்டது. மணம் வரவில்லை. மூக்கறுந்துவிட்டது. கண் தெரியவில்லை. கனவொழிந்துவிட்டது.

அவர்களால் எனக்கு உதவமுடியவில்லை. அதற்கெல்லாம் அவர்களிடம் மருந்துகளில்லை. தாரா, உன்னை மழை அடித்துச் சென்றுவிட்டது என்று திரும்பத்திரும்பச் சொன்னார்கள். என்னை எப்போதும் மழைப் போர்வைக்கடியிலேயே வாழும்படி சொன்னார்கள். குடைபிடித்து நடக்கச் சொன்னார்கள். நட்சத்திரங்களைப் பார்க்க விடவேயில்லை.

அப்போது தான் ஒரு நாள், அந்தக் கனவு வந்தது.

நான் ஒரு மலையுச்சியில் அமர்ந்திருக்கிறேன். நிறமற்ற மலை, நிறமற்ற வானம், நிறமற்றவளாக நான்.

விளிம்பைத் தாண்டி கீழே ஆழத்திலிருந்து எங்கேயோ அணில்களின் கீச்சொலி எழுந்து வருகிறது. அவை பசி, பசி என்று கதறுகின்றன.

நான் விளிம்பைத் தாண்டி குனிந்து பார்க்கிறேன். யாரும் இல்லை.

ஆனால் பின்னால் நகர்ந்ததும் அதே குரல். பசி, பசி.

என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்குரல் அடிவையிற்றை பிசைக்கிறது. அவை பழங்களை மட்டுமே உண்ணும் சீவிகள் என்று அறிவேன்.

ஆனால் என்னிடம் பழம் இல்லை. பழம் ஆகும் நிறமும் இல்லை. நிறமாகும் நீரும் காற்றும் கூட இல்லை.

நான் என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று யோசிக்கிறேன்.

நட்சத்திரங்கள் முதன்முதலில் என் நகத்தையும் கூந்தலையும் நாவையும் நாடிச்சென்றதை நினைவுகொள்கிறேன்.

ஒவ்வொரு நகமாக அவிழ்த்து கீழே எறிகிறேன். கனவில் வலியில்லை. பூவைப்போல் மென்மையாக பிரிந்து வருகின்றன.

குரல்கள் அடங்கும் ஒலி. ஆயிரமாயிரம் அணில்கள் விழுங்கி செரிக்கும் ஒலி.

கூந்தல் குதிரை வாலைப்போல் கையில் தொங்குகிறது. விளிம்பை மீறி வீசுகிறேன். பற்கள் ஒவ்வொன்றும் ஒரு சோழிமுத்துபோல் உள்ளங்கையில் குலுங்க அவற்றை வெட்டவெளிக்குள் வீசியெறிகிறேன்.

நாவை அறுக்கும்போது அது மாதுளை மொட்டாகக் கைக்குள் மடிந்து பாந்தமாக உட்காருகிறது. அதை மெல்ல விளிம்புக்கப்பால் விழவிடும்போது ஆழத்தை அடைவதற்குள் அந்த மலர் கனியாகிவிட்டிருக்கும் என்று அறிந்திருக்கிறேன்.

*

இப்போதெல்லாம் நான் மழைப்போர்வை அணிவதில்லை. குடைபிடிப்பதுமில்லை.

இப்போதெல்லாம், நான் இப்பாலேயே அமர்ந்துகொள்கிறேன். மூட்டுகளைச் சுற்றி கைகளை கட்டிக்கொள்கிறேன். இனிய வெறுமையில் தலை சாய்க்கிறேன்.

அப்பாலே மென்மையான கோடை மழையைப்போல, ஊசி ஊசியாய், சுவரம் சுவரமாய், நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக, இங்கிருந்து, வெறுமனே, ஒன்றுமே சொல்லாமல் பார்க்கிறேன். ஒவ்வொரு நிறமாக. ஒவ்வொரு அசைவாக. மெல்ல மெல்ல. காலத்தில் கரைந்து. பார்க்க பார்க்க இந்த இனிய சாம்பல் நிற வெறுமை நீட்டிக்கிறது.

உடலிலிருந்து நிறங்களெல்லாம் கரைந்தோடி விளிம்பைக்கண்டு குதிக்கின்றன. நட்சத்திரங்களாகி ஆழம் வரை பொழிகின்றன. ஒருவேளை அவற்றைச் சுவைகாணும் அணில்கூட்டங்கள் அங்கு குடிகொண்டிருக்கலாம். எல்லா நிறமும் மணமும் சுவையும் அதுகளுக்கானவை. அம்மா சொல்வார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.