1.
அப்பாதான் என்னை அழைக்கப் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். நான் பேருந்திலிருந்து இறங்கி, அப்பாவை நோக்கிச் சென்றேன். என்னைப் பார்த்ததும், அருகில் இருந்த இரு சக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு என்னை நோக்கி வந்தார். அதிகாலை என்பதால், பேருந்துகள் அதிகமாக இல்லை. தூரத்திலிருந்த டீக்கடையில் சத்தமாக ஏதோ ஒரு சாமி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நான், என் தோள் பையைச் சரிசெய்துகொண்டு, கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டேன். அது தொட்டியின் விளிம்பில் பட்டு கீழே விழுந்து உருண்டோடியது. நான் அதனை எடுத்து மீண்டும் குப்பைத்தொட்டியில் போடலாமா வேண்டாமா என்று யோசிக்கும் இடைவெளியில், அப்பா ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பி, என் அருகில் வந்திருந்தார். நான் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன். அப்பா சற்று தடுமாறி, மெதுவாகச் சமன் செய்து, வண்டியைக் கிளப்பினார். காலை வெயில் அவ்வளவாக உரைக்கவில்லை. பேருந்து நிலையத்தைக் கடந்து, பிரதான சாலைக்கு வந்திருந்தோம்.
அப்பா எதோ சொன்னது போல இருக்க “என்னப்பா? ” எனக் கேட்டேன்.
அப்பா, ” செமஸ்டர் பரிட்சையெல்லாம் எப்படி இருந்தது?” எனக் கேட்டார்.
“ம். நல்லா எழுதிருக்கேன்.” என்றேன்.
“கல்லூரிக்கு மறுபடியும் எப்ப போகணும்?,” எனக் கேட்டார்.
“இரண்டு வாரத்துக்கு அப்புறம்,” என்றேன்.
“தங்கவேலு மாமாகிட்ட சொல்லிவை. அவரு ட்ரைன்ல சீட்டு ரிசர்வ் பண்ணிவைப்பார்.” என்றார்.
“சரி,” என்றேன்.
எதோ சொல்ல வந்தவர், எங்களைக் கடந்து செல்லும் பேருந்து போகும் வரை காத்திருந்து, “மதன் இரண்டு நாளைக்கு முன்னாலே வந்துட்டான்,” என்றார்.
நான் காதில் வாங்காதது போல ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். மீண்டும் அதைச் சொல்லுவார் என்று நினைத்தேன். சொல்லவில்லை.
வழியெங்கும் கருப்பு வெள்ளையில் யாரோ இறந்துபோனதற்கான “வருந்துகிறோம்” சுவரொட்டிகள் வரிசையாகத் தென்பட்டது. இது போன்ற சுவரொட்டிகளில் இருக்கும் புகைப்படங்கள் வெறித்த பார்வையுடன், புன்னகையின்றி இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. எதற்கோ எடுத்த புகைப்படம், இதற்கும் பயன்படும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்பா சட்டென வலதுபக்கம் திரும்பி, ஜெயம் காப்பி தூள் கடையில் நிறுத்தினார். எனக்காக அம்மா வாங்கிவரச் சொல்லியிருப்பாள். அப்பா உள்ளே சென்று சிறிது நேரத்திற்குப் பிறகு கையில் ஒரு சிறிய பையுடன் வந்தார். நான் அதனை வாங்கி வைத்துக்கொண்டேன்.
அப்பா வண்டியை எடுத்துக்கொண்டே, “கம்பெனியிலிருந்து ஆள் எடுக்க இப்போதே வந்துட்டாங்களாம். மதன் சொன்னான். உங்க கல்லூரிக்கு வந்தார்களா?” என்று கேட்டார்.
“இப்ப வரமாட்டார்கள். அடுத்த வருஷம் தான் வருவார்கள்,” என்றேன்.
மீண்டும் மதன். அப்பா மதனிடம் பேசி எல்லாவற்றையும் வாங்கி வைத்திருப்பார். எந்த கம்பெனியில ஆள் எடுப்பார்கள். எந்த கம்பெனி நல்ல கம்பெனி. என்ன படிக்கவேண்டும், எப்படித் தேர்வு பண்ணுவார்கள் என்று இந்நேரம் தெரிந்துவைத்திருப்பார். நான் ஊருக்குச் செல்லும் வரை மதன் பற்றிய பேச்சுக்கள் நிறைய இருக்கும். இது ஒன்றும் எனக்குப் புதிது அல்ல.
அப்பா ஏதோ ஒரு யோசனையுடன் வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தார். கண்ணாடியில் அவரது முகம் அடுத்த கேள்வியை தயார் செய்யும் நிலையில் இருந்தது. நாங்கள், சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியை கடந்து சென்றுகொண்டிருந்தோம். வெளியே இருக்கும் பெரிய இரும்பு கதவு இன்னும் திறக்கவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் மாணவர்கள் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். இந்தப் பள்ளியில் தான் மதன் படித்தான். பின்பு, நானும் படிக்கவைக்கப்பட்டேன். மதன் என் எதிர்வீட்டிலிருக்கும் பாலு மாமாவின் பையன். அப்பாவும் பாலு மாமாவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். அப்பாவுக்கு மதன் போல நானும் படிக்க வேண்டும் என்று நினைப்பவர். மதன் வாங்கும் ஒவ்வொரு பரிசும் நானும் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆதனாலேயே, வேறு பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் பிய்த்து மதன் படித்த இந்தப் பள்ளியில் சேர்த்தார். வீட்டில் பெரும்பாலும் அவர் மதனின் பெயரையே அதிகம் சொல்வார். மதன் நன்றாகப் படிக்க கூடியவன். அவன் ஆங்கில வழி வகுப்பிலும், நான் தமிழ் வழி வகுப்பிலும் இருந்ததால், பள்ளியிலும், வெளியேயும் அதிகமாகப் பழக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அப்படியே, பள்ளியில் அவனை எப்போதாவது பார்த்தாலும், மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்வோம். அவனைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டும், ஓர் உயர் தர உடல் மொழியை வெளிப்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். என்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை அவனிடம் நெருங்கிப் பழக தடுத்தது. அப்பாதான் வலுக்கட்டாயமாக அவன் வீட்டுக்கு அழைத்துச்சென்று சந்திப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பார் . அவை பெரும்பாலும் படிப்பு பற்றியே இருக்கும். அவன் தான் அதிகமாகப் பேசுவான். அவன் சொல்லும் பல விஷயங்கள் என்னால் புரிந்து கொள்ள முடியாது. அவனிடம் இருந்த ஆங்கில கதை புத்தகங்களைப் படிக்க கொடுப்பான். அவற்றை வாங்குவதோடு சரி. படித்ததில்லை. அப்பா என்னை மேலும் மேலும் உந்திக்கொண்டே இருந்தார். அவர் மதனுடன் ஒப்பீடு செய்து பேசுவது எனக்கு மேலும் மனச்சோர்வு மட்டுமே கொடுத்தது. ஒரு கட்டத்தில், அவனுடன் நம்மால் நெருங்கவோ, பழகவோ முடியாது என்று தோன்றியபோது, நான் அவனுக்கு எதிர்த் திசையில் பயணிக்க ஆரம்பித்தேன். எனக்கான சிறு உலகத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தேன். அவை மதனால் செய்ய முடியாதவற்றால் நிறைந்திருந்தது. வீட்டுக்குத் தெரியாமல் திரைப்படத்துக்கு செல்வது, அம்மாவிடம் பொய் சொல்லி காசு வாங்குவது, பள்ளிக்குச் செல்லாமல் தமிழ் நூலகத்தில் உட்கார்ந்திருப்பது என மாறியது. அவையும் நீண்ட நாட்களுக்கு வரவில்லை. அப்பாவுக்கு ஒரு நாள் தெரிந்து போக, என்னிடம் பல நாட்கள் பேசாமல் இருந்து தண்டனை கொடுத்தார். சிறிது காலத்தில் என்னால் முடியாமல் அப்பாவின் வழிக்கே வந்தேன். மீண்டும் கடினமான படிப்பு, மதன் எனச் சூழ்ந்திருந்தது.
2.
பத்தாம் வகுப்புத் தேர்வில் மதன் பள்ளியிலே முதல் மாணவனாக தேர்ச்சிபெற்றிருந்தான். அவனுக்கு, அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து சொன்னார்கள். என் மதிப்பெண், நான் ஒரு சராசரி மாணவன் என்பதை உறுதிசெய்தது. நான், மதனைப் பார்க்காமல் தவிர்த்தேன். வீட்டில் அப்பா மதன் வாங்கிய மதிப்பெண் பற்றியும், அவன் படித்தது போல நானும் செய்திருந்தால் நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கலாம் என்றும் தினமும் கூறிக்கொண்டிருந்தார். என் மதிப்பெண் குறைந்தாலும் என்மீது அப்பாவின் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. நான் பனிரெண்டாம் வகுப்பில் என்ன பாடம் தேர்வு செய்வது என்பதை மதனிடம் கேட்டு அதனையே தேர்வு செய்தார். அது மேலும் பளுவானதாக, பிடித்தம் இல்லாத பாடமாக இருந்தது. வீட்டினுள், அப்பாவின் பார்வை என்னை நோக்கியே நீண்டிருப்பதுபோல இருக்கும். அப்போது, பள்ளிக்கூடம் மட்டுமே அடைக்கலமாக இருந்தது. விடுமுறை நாட்களில் கூட பள்ளியின் நூலகத்திற்குச் சென்று படித்தேன். அங்கு இருந்த அமைதியும், தனிமையும் மதன் பற்றிய அழுத்தங்களிலிருந்து பிரிந்து இருக்க உதவியது.
பனிரெண்டாம் வகுப்பில் ஓரளவு மதிப்பெண் வாங்கியிருந்தேன். மதன் வழக்கம் போல நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான். அவனுக்கு, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. நான், என்ன படிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் இடைவெளியில், எதிர் வீட்டில் எனக்கான படிப்பினை ஆலோசித்து, தேர்வு செய்துகொண்டிருந்தார் அப்பா. எனக்கு வேறு ஊரில் இருந்த பொறியியல் கல்லூரியில், மதன் சொன்ன அதே பாடம் இருக்க, நான் அங்குச் செல்லவைக்கப்பட்டேன். மூன்று வருடங்கள், நிறைய இடைவெளியைக் கொடுத்திருந்தது. பெரும்பாலும் மதன் ஊருக்கு வரும் நாட்களில் நான் வராமல் தவிர்த்தேன். அவனைப் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது. ஆனால், அப்பா அவனைப் பற்றி சொல்வதை விடுவதில்லை. இப்போதெல்லாம், நான் பெரிதாக அதனை எடுத்துக்கொள்வதில்லை. கல்லூரியில் கிடைத்த நண்பர்கள், புதிய சூழ்நிலை என்னைக் கொஞ்சம் மாற்றியிருந்தது. இந்த முறையும் வீட்டிற்கு வருவதைத் தவிர்க்க எண்ணினேன். ஆனாலும், அக்காவின் வற்புறுத்தலால் வரவேண்டியதாகிவிட்டது.
அப்பா, வீட்டுக்குள் வந்து வண்டியை நிறுத்தினார். நான் இறங்கி, என் தோள்பையை கீழே வைத்துவிட்டு, காலணியை கழட்டி வைத்தேன் . அதற்குள் அக்காவும் அம்மாவும் வெளியே வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் அக்கா, “வாடா..ஏன்டா பேருந்து லேட்டா?,” எனக் கேட்டாள்.
நான், “இல்லையே,” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றேன்.
அப்பா வெளியே நின்றுகொண்டு எதிர் வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
3.
அன்றைய நாள் முழுவதும் தூக்கத்திலும், அக்காவுடனான அரட்டையிலும் போனது. மறு நாள் காலை அப்பாவின் சத்தம் மாடியில் கேட்க, நான் கண்விழித்து, என் அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அப்பா, மாடியிலிருந்து வாழை இலையை நறுக்கிக் கொண்டே கீழே இருந்த அக்காவிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தார். நான், மாடியிலிருந்து கீழே வந்தேன். அம்மா, அடுப்படியில் ஏதோ செய்துகொண்டிருக்க என்னைப் பார்த்ததும்,
“வாடா, பல் தேச்சிட்டியா? , காப்பி போடட்டுமா?,” என் கேட்டாள்.
நான், “இன்னும் இல்லமா,” என் சொல்லிக்கொண்டே கீழே பார்த்தேன். வாழை இலைகள் துண்டு துண்டாக நறுக்கி அடுக்கி வைக்கப்பட்டது, சரிந்து கிடந்தது.
“யாருக்கு இவ்வளவு இலை?” எனக் கேட்டேன்.
“அதுவா, பாலு மாமா வீட்டுக்கு அவங்க தம்பி பசங்கள் நிறையப் பேர் வந்துருக்காங்க. மாமா வந்து இலை கொஞ்சம் கிடைக்குமா கேட்டார்கள். அதான், அப்பா அறுத்து வச்சிருக்காங்க. உன்னப் பத்தி கூட கேட்டார்கள். உனக்கு நேரம் கிடைக்கும் போது போய் மாமாவை பாரு,” என்றாள்.
“ம்..,” என்று சொல்லிக்கொண்டே, பல் துலக்க கொல்லைப்புறம் சென்றேன்.
அக்கா அப்பாவிடம் கீழிருந்து கை காட்டி முருங்கை மரத்தில் இருந்த காய்களையும் பரிக்கசொல்லிக்கொண்டிருந்தாள். சிறு வயதில் முருங்கை மரத்தின் மீது ஏறி விளையாடியது ஞாபகம் வந்தது. இப்போது பெரியதாக வளர்ந்திருந்தது. முருங்கை மரத்தில் பூத்திருந்த பூக்கள் உதிர்ந்து என் மீது விழுந்தன. ஏனோ, உடனே கம்பளி பூச்சியின் ஞாபகம் வர, உடல் சற்று சிலிர்த்து கூசியது.
காலை உணவு அருந்திவிட்டு, அருகில் இருந்த நூலகத்திற்குச் சென்றேன். பள்ளியில் படிக்கும் போது தெரியாமல் உள்ளே வந்து, இன்றும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொடர்கிறது. என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் ஒரு விஷயம் இதுதான். நேரம் ஆனதே தெரியவில்லை. மீண்டும் வீட்டுக்குச் சென்றேன். அப்பா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும்,
“எங்க போன?,” எனக் கேட்டார்.
“நூலகத்திற்கு,” என்றேன்.
“வா, சாப்பிடலாம்,” என்றாள் அம்மா.
நான் சாப்பிட உட்கார்ந்தேன்.
அப்பா, “மதனிடம், நீ வந்திருக்கிற விசயத்தை சொன்னேன். உன்ன பார்க்கவேண்டுமென்று சொன்னான்.” என்றார்.
நான் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
“உன்கிட்ட தான் சொல்றேன்,” என்றார்.
“ம். சரி,” என்றேன்.
“இப்ப போகாத. அவன், அவங்க வீட்டுக்கு வந்திருக்கிற பசங்களோட ஆத்துக்கு குளிக்க போகிறான் போல இருக்கு. சாயந்தரம் போய் பாரு,” என்றார்.
“ஆத்துல நிறையத் தண்ணி ஓடுது.” என்றாள் அம்மா என்னைப் பார்த்து. “படியே தெரியல. நேதிக்கு அப்பாவோட கடைக்குப் போகும் போது பார்த்தேன். நல்ல கூட்டம். நிறைய பேர் பாலத்துலேர்ந்து குதிக்கிறார்கள்,” என்றாள் சிரித்துக்கொண்டே.
எனக்குச் சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. எவ்வளவு நாள் ஆனது. பள்ளியில் படிக்கும் போது, ஒரு முறை அப்பாவுடன் போய் குளித்தது ஞாபகம் வந்தது. அப்பா என்னைத் தண்ணீரினுள் உள்ளே முக்கி எடுத்த அந்தக் கண நேரம் மூச்சிழந்து, திணறி, நீருக்கடியில் கண் விழித்துப் பார்க்கும் போது, பொன்னிற துகள்கள் எங்கும் நிறைந்திருக்க, மண் வாசனையை நுகர்ந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
அம்மா, “டேய், ரசம் ஊத்தட்டுமா? வெறும் சாதத்தை அப்பிடியே வைத்திருக்க.” என்றாள்.
நான் சுதாரித்து, “ம்..ஊத்துமா,” என்றேன்.
சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து செய்தி தாள்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் ஏதோ தவித்துக்கொண்டிருந்தது. உள்ளே சென்று வேறு உடைக்கு மாறி, அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆற்றங்கரைக்குச் சென்றேன். வழக்கமாக எல்லோரும் செல்லும் படித்துறைக்குச் செல்லாமல், வேறு ஒரு கரைக்கு சென்றேன். படித்துறை கூட்டமாக இருக்கும். பல பேர் குளித்தும், துணி துவைத்தும் அந்த இடம் முழுவதும் சோப்பு வாடை அடிக்கும். நான் செல்லும் கரை மாந்தோப்பு வழியாகச் செல்ல வேண்டும். நிறையப் பேருக்கு இது இருப்பது தெரியாது. நான் நடந்து மாந்தோப்புக்கு அருகில் வந்தேன். ஆற்றில் நிறையத் தண்ணீர் ஓடுவது அது எழுப்பும் சத்தத்திலேயே தெரிந்தது. கரையில் இருந்த மரங்களையும், செடிகளையும் தடவி கொண்டே சென்றது. நான் சிறிது தூரம் சென்று ஒரு பாதையில் திரும்பினேன். இரு பெரிய மரங்களுக்கு இடையே அந்த கரை தென்பட, நான் மரங்களைக் கடந்து அந்த மேட்டின் மீது ஏறிப் பார்த்தேன். சட்டென அந்த சிறு கரை அகல விரிந்து பெரிய ஆறாக மாறியிருந்தது. நான், அந்த மேட்டின் மீது நடந்து ஆற்றினுள் சற்று தூரம் செல்லும் வேறு ஒரு மேட்டின் மீது சென்று நின்றுகொண்டேன். கரையில் ஒரு சில பேர் மட்டுமே குளித்துக்கொண்டு இருந்தனர். குளுமையான காற்று முகத்தில் அடித்துச் சென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், விரைவாக ஓடிக்கொண்டிருந்தது. எங்குச் சென்றாலும் அம்மாவை நோக்கியே மனது நீண்டிருப்பது போல, தண்ணீர் எங்கு இருந்தாலும், கடலை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதனால் அடைத்து வைப்பதும் , நிறுத்தி வைப்பதும் கேளிக்கையான ஒரு விளையாட்டே என்று தோன்றியது. கீழே குளித்துக்கொண்டிருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் தண்ணீரை தெளித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். இவ்வளவு தண்ணீரில் குளிக்காமல் வேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு நகைப்பை உருவாக்கும் என்று நினைத்துக்கொண்டேன். காற்றில் என் தலைமுடி கலைந்து, ஆடைக்குள் காற்று புகுந்துகொண்டது. ஆற்றின் நடுவில் இருந்த மண்டபத்திலிருந்து சிலர் சுழன்று தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அது ஆழமான பகுதி என்பதை நினைக்கும் போதே, மனது ஆழத்துக்குள் இருக்கும் இருட்டைக் கண்டடைந்து திரும்பியது. இவ்வளவு தண்ணீரிலும் அங்குச் செல்வது என்பது, நீச்சலில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும். ஆனால், இங்கு நிறையப் பேர் ஆற்றில் அடிக்கடி குளித்து நன்றாக நீச்சல் செய்பவர்களாக மாறியிருந்தார்கள். எனக்கு, ஒரு முறை தண்ணீரில் உள் சென்று வந்ததிலிருந்து, ஆறு வெறும் வேடிக்கை பார்க்கும் பொருளாக மட்டும் ஆகிவிட்டது.
சட்டென நிறையச் சிரிப்பொலி கேட்க, திரும்பிப் பார்த்தேன். கூட்டமாகப் பல பேர் அங்கு வந்துகொண்டிருந்தனர். அனைவரும் என் வயதொத்தவர்களாக இருந்தாலும், யாரையும் இதற்கு முன்பு பார்த்தது போல் தெரியவில்லை. சிறிது இடைவெளி விட்டு, அவர்களுக்குப் பின்னால் மதன் வந்துகொண்டிருந்தான். பெரிய மாற்றம் இல்லை அவனிடம். கொஞ்சம் தாடி வைத்திருந்தான். பின்புதான் புரிந்தது. மற்ற அனைவரும் அம்மா சொன்னதுபோல் மதன் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகள். மதன், நான் நிற்கும் இடம் நோக்கி வேறு ஒருவருடன் வந்தான். மற்ற அனைவரும் பெரிய கூச்சலிட்டு தண்ணீரில் விழுந்தனர். மதன், என்னைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு சிரித்தான். சிரிக்கும் போது இடுங்கும் அதே கண்கள்.
நான், “எப்பிடி இருக்க மதன்?” என்றேன்.
“நைஸ். நல்லா இருக்கிறேன். நீ எப்பிடி இருக்க? நிறைய நாள் ஆச்சு உன்னப் பார்த்து,” எனக் கேட்கும் போது அவன் கண்களில் ஆச்சரியம் இருந்தது.
“ம். நல்லா இருக்கிறேன். ஆமா, நிறைய நாள் ஆச்சு,” என்றேன். என்ன பேசுவது என்று தெரியவில்லை.
மதனுடன் வந்தவர், எங்களைக் கடந்து முன்னே சென்றார்.
“டேய், ஜாக்கிரதை. மண் சரியும் அங்க” என்று அவரைப் பார்த்து கூறினான்.
பின்பு எங்கள் கல்லூரியை பற்றியும், படிப்பைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். ஆற்றில் குளிப்பவர்கள், தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது, எங்கள் மீதும் வந்து விழுந்தது.
“நேற்று அப்பாவைப் பார்த்தேன். கேம்பஸ் இண்டெர்வியூ பற்றிக் கேட்டார். நீ என்ன பண்ணலாமென்று இருக்க,” எனக் கேட்டான்.
அந்தக் கேள்வி அந்த இடத்தின் அழகியலையும், சற்று முன்பு ரசித்தவற்றையும் சட்டென ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. எதிர்காலம் பற்றிய சிந்தனைகள், நிகழ்காலத்தை அழித்துக்கொண்டே செல்கிறது.
“ஒண்ணும் முடிவு பண்ணல என்றேன். உனக்கு என்ன பிளான்?,” எனக் கேட்டேன்.
“எனக்கு, அமெரிக்காவுக்கு போகணும். அங்க தான் பெரிய கம்பெனியெல்லாம் இருக்கு. மைக்ரோசாப்ட், ஆப்பிள் எல்லாம் நிறைய ஆள் எடுக்கிறார்கள். அமேசான் நல்லா வந்துகிட்டு இருக்கான். அதனால, எந்த கம்பெனி உடனே அமெரிக்கா அனுப்புறானோ அவனிடம் தான் சேருவேன்.” என்றான் சிரித்துக்கொண்டே.
“ஓ! ” என்று ஒரு வெற்று புன்னகையுடன் சிரித்தேன்.
“சென்னைல தான் இனிமே எல்லாம். அப்பாவையும், அம்மாவையும் அங்கே கூட்டிட்டு போய்டலாம்னு இருக்கிறேன்,” என்றான்.
நான் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி இவனால் எதிர்காலத்தைத் தீர்மானமாக திட்டமிட்டுச் செயல்படுத்தமுடிகிறது என்று நினைத்துக்கொண்டேன்.
அவன், ஆற்றைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ” இப்படி, நிறைய பிளான் இருக்கு,” என்றான்.
இன்னும் கொஞ்ச நேரம் பேசினால், நான் மறுபடியும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று தோன்றியது. நல்லவேளையாக, கீழே இருந்த ஒருவர் மதனைக் கூப்பிட, அவன் அவர்களை நோக்கி கையை அசைத்துவிட்டு, “நீ குளிக்கல?” எனக் கேட்டான் .
“இல்ல, நீச்சல் தெரியாது.” என்றேன்.
“ஓ! சரி, வீட்டுக்கு வா. ” என்று சொல்லிவிட்டு நாங்கள் நின்றுகொண்டிருந்த மேட்டிலிருந்து கீழே இறங்கி அவர்களை நோக்கி ஓடினான்.
நான் அவர்களைப் பார்த்தேன். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தேன். அக்கா, தொலைக்காட்சியில் எதோ பார்த்துக்கொண்டிருந்தாள். அடுப்படியில் அம்மா வேலை செய்துகொண்டிருந்தாள். அப்பா, அறையில் மெல்லிய குறட்டையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். நான் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, மாடிக்குச் சென்று என் அறையில் படுத்து உறங்கிபோனேன்.

4.
“டேய்..டேய்..” என யாரோ முதுகில் தட்ட, எழுந்து அமர்ந்தேன். இப்பதான் படுத்தது போல் இருந்தது. நிறைய நேரம் ஆனதால் அக்கா வந்து எழுப்புகிறாள் என்று நினைத்துக்கொண்டு அக்காவைப் பார்த்தேன். அக்கா கலவரமான முகத்துடன் என்னைப் பார்த்தாள். நான் ஒன்றும் புரியாமல் விழிக்க.
அவள், “மதன் ஆத்துல குளிக்க போயிருக்கிறான். எங்கேயோ தொலைந்துபோயிட்டான், அவனை கண்டுபிடிக்க முடியவில்லையாம்,” என்று கூறினாள்.
“தொலைந்துபோயிட்டானா?” என்ன உளறுகிறாள் என்று நினைத்துக்கொண்டேன்.
“ஒன்னும் புரியலடா. அப்பா ஆற்றங்கரைக்கு போயிருக்கிறார்கள். நீயும் அங்குப் போய் பாரு. ” என்று கூறினாள். அக்காவின் படபடப்பு என்னை மேலும் குழப்பியது. இது கண்டிப்பாக ஏதோ கனவுதான் என்று தோன்றியது. நான் எழுந்து அமர்ந்து அக்காவையே பார்த்துக்கொண்டிருக்க. அம்மாவும் என் அறைக்கு வந்தாள்.
“சீக்கிரம் போய் பாருடா” என்றாள் அம்மா.
நான் சுதாரித்து, வெளியே ஓடினேன். எதிர் வீட்டில் ஒரே சத்தமாக இருக்க. கூட்டம் கூடியிருந்தது. அங்கு இருந்த இருவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை நோக்கி ஓடினேன்.
“என்ன ஆச்சி. நீங்கத் தானே மதனோட அங்க குளிக்க வந்தீர்கள்” எனக் கேட்டேன்.
அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு. “ஆமா..” என்று கூறினார் ஒருவர். அவர் தலையிலிருந்து தண்ணீர் சொட்டியது.
“என்ன ஆச்சு?” எனக் கேட்டேன்.
“இல்ல, மண்டபத்துக்கு போலாம்னு எல்லோரும் போனோம். திரும்பி வரும்போது மதன மட்டும் காணும்.” என்றார்.
எனக்கு இப்பொழுது எல்லாம் புரிந்தது. ஆற்றின் நடுவே இருக்கும் மண்டபத்திற்கு நீச்சல் அடித்து எல்லோரும் போயிருப்பார்கள் போலும். மதன் மட்டும் ஏதோ சூழலில் சிக்கியிருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நான் மீண்டும் மாந்தோப்பில் இருக்கும் கரையை நோக்கி ஓடினேன். அங்கும் கூட்டமாக இருந்தது. ஆற்றில் நிறையப் பேர் இறங்கித் தேடிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களைச் சற்று விலக்கி முன்னேறிச் சென்று பார்த்தேன். மதனுடன் குளித்த மற்ற அனைவரும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் அழுதுகொண்டிருக்க, வேறு ஒருவர் அவர் தோளை பிடித்து சமாதானம் செய்துகொண்டிருந்தார். பாலு மாமாவையும், அப்பாவையும் காணவில்லை. நான், அப்பாவின் மற்றொரு நண்பர் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, அவரிடம் சென்றேன்.
என்னைப் பார்த்துவிட்டு, “நீ எப்போது வந்த?” எனக் கேட்டார்.
“நேத்திக்கு மாமா,” என்றேன்.
“என்ன புள்ளைங்க நீங்க. இவ்வளவு தண்ணி போகும்போது அங்கெல்லாம் போகலாமா?” எனக் கடிந்துகொண்டார்.
“மாமா, அப்பா எங்க?” எனக் கேட்டேன்.
“அவர் அடுத்த கரைக்கு போய் பார்க்க போயிருக்கிறார். மற்ற கரைக்கும் ஆள் போயிருக்கு” என்றார். அவர் முற்றிலும் நம்பிக்கை இழந்து இருந்தார்.
பின்னாலிருந்து ஒரு சலசலப்பு ஏற்பட, திரும்பிப் பார்த்தேன். தீயணைப்பு வீரர்கள் சிலர் வந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் கையில் வைத்திருந்த கருவியில் வேறு யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் , மதன் திறமையானவன் அவன் எந்த நேரத்திலும் வெளியே வரக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.
வெகு நேரம் ஆகியும், மதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும். இப்போது கூட்டம் அதிகமில்லை. வெகு சிலரே நின்றுகொண்டிருந்தோம். வீட்டிற்குப் போக மனமில்லை. அங்கு இருக்கும் சூழல், என்னை மன அழுத்தத்திற்கு மேலும் தள்ளிவிடும். கடைசியாக மதன் என்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது. நாங்கள் இருவரும், நின்று பேசிக் கொண்டிருந்த அந்த மேட்டினை பார்த்தேன். மதன் அங்கு நின்று அந்த ஆற்றை உற்றுப் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த இடுங்கிய கண்ணில் எதைப் பார்த்திருப்பான். எத்தனை பொய்யான எதிர்காலம் நம் முன். நம்பிக்கை என்பது வெறும் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு பலூன் என்று தோன்றியது. அது இரண்டு மணி நேரம் கூட தாங்கவில்லை.
சிறிது நேரத்திற்குப் பின்பு, ஒருவர் வந்து “பாடிய கண்டுபிச்சிட்டாங்களாம்” எனக் கூறினார். சட்டென ஒரு அழுத்தம், தொண்டையை அடைத்தது. மதன் தொலைந்துபோய்விட்டான். என்னால் அங்கு நிற்க முடியாமல், வீட்டிற்குச் சென்றேன்.
5.
வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் பாலுமாமாவின் வீட்டில் இருந்தார்கள். அந்தத் தெருவே ஒரு சோகத்தை அடைத்துக்கொண்டிருந்தது. எதிர்வீட்டிலிருந்து சட்டென புறப்படும் அந்த அழுகுரல் எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. நான் மாடிக்குச் சென்று என் அறையில் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். ஏதேதோ நினைவுகள். அறையில் இருந்த அந்த அமைதியும், அந்த இருளும் என்னை வேறு எங்கோ அழைத்துச்சென்றது. நான், என் பள்ளியின் மாடியிலிருந்து இறங்கி இருட்டில் ஓடுகிறேன். ஏனோ அது ஓர் முடிவில்லாமல், படிகள் சுழன்று கீழே சென்றுகொண்டிருக்கிறது. சட்டென எதோ ஒரு அறையினுள் நுழைய, சிலுவையில் அறைந்த இயேசுவின் கைகளிலிருந்தும், கால்களிலிருந்ததும் குருதி வழிந்தோடுகிறது. நான் என் கால்களில் உணர்ந்த பிசு பிசுப்பை இன்னதென உணர்ந்த நேரம் வெடித்து அழுகிறேன்.
அம்மா, “டேய்..டேய்..என்னடா ஆச்சி?,” என்றாள்.
நான் கண்விழித்து பார்த்தேன். அம்மா நின்றுகொண்டிருந்தாள். “ஒண்ணும் இல்லமா,” என்று சொல்லிக்கொண்டே. மாடியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். எதிர் வீட்டில் கீழே பந்தல் போட்டு, இப்போது நிறையப் பேர் இருந்தது, பெரிய ஏமாற்றமாக இருந்தது.
“நீ கீழ போய் சாப்பிடு,” என்றாள் அம்மா.
“அப்பா வந்துட்டாங்களா?” எனக் கேட்டேன்.
“ம். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், ஆஸ்பத்திரியிலிருந்து பாடிய எடுத்துக்கிட்டு வந்தார்கள்,” என்றாள்.
நான் கீழே சென்று முகம் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். இரவு பத்து மணியாகியிருந்ததால், நல்ல பசியாக இருந்தது. பசி எந்தத் துக்கத்திலிருந்தும் இயல்பு நிலைக்கு எளிதாக அழைத்துவந்துவிடும் போல. சாப்பிட்டுவிட்டு, வெளியே வந்து அமர்ந்துகொண்டேன். நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். அப்பா, மறு நாள் சடங்குக்கு தேவையானவற்றை மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு இது ஒரு பெரிய இழப்பாக இருக்கும். அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை. எப்போதும், மதனின் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும் இவர் எப்படி மாறுவார்? அவர் இயல்பு நிலைக்கு வருவது கொஞ்சம் காலம் ஆகும் என்று தோன்றியது. காலம் ஒரு இயந்திரம் போல அனைத்தையும் மென்று தின்று செறித்துவிடும். பாலு மாமாவை வெளியே எங்கும் காணவில்லை. அவர் வேறு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். நான் வெகு நேரம் அமர்ந்திருந்தேன்.
மறுநாள் காலையில் அப்பாவின் அலுவலத்திலிருந்து நிறையப் பேர் வந்திருந்தார்கள். அப்பா, மேல் அதிகாரிகள் வரும்போது அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று வந்துகொண்டிருந்தார். அழுகை சத்தமும், பறை சத்தமும் வேறு சிந்தனைக்கு என்னைச் செல்ல விடாமல் ஆக்கிரமித்திருந்தது. அடக்கம் செய்ய வேண்டிய சடங்குகளும், வேலைகளும் சிறிது சிறிதாக வேகம் எடுக்கத் தொடங்கி, உச்ச நிலைக்கு வந்திருந்தது. பறை அடிப்பவர்கள் ஒரு உக்கிர நிலையில் ஆடிக்கொண்டு அடித்துக்கொண்டிருந்தனர். சட்டென யாரும் உணராத ஒரு தருணத்தில், மதனைத் தூக்கி கொண்டு அனைவரும் கிளம்ப, ஒரு வெறுமை ஆக்கிரமித்திருந்தது.
6.
மதன் இறந்து, ஒரு வாரம் ஆகிறது. நேரம் ஒவ்வொரு துளியாக நகர்ந்துகொண்டிருந்தது. வீட்டில் யாரும் அவ்வளவாகப் பேசிக்கொள்ளவில்லை. கடந்த நான்கு நாட்களாய் பெரும்பாலும் அம்மா எதிர் வீட்டில் சமையல் செய்வதற்கு உதவியாக அங்கு அடிக்கடி சென்று வந்தாள். அப்பாவும், பாலு மாமாவுக்குத் துணையாக அங்கயே இருந்தார். இன்று தான் வீட்டில் அனைவரும் கூடி சாப்பிட அமர்ந்திருந்தோம். அப்பா, தட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அம்மா, அவரைத் தோளில் தட்டிச் சாப்பிடுமாறு சைகை செய்ய. அவர் சுதாரித்து சாப்பிட ஆரம்பித்தார். வெகு நேரம் யாரும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
“அப்பா,” என்று நான் தான் அந்த மௌனத்தை உடைத்தேன்.
அப்பா என்னை நிமிர்ந்து பார்த்தார்.
“நான் கல்லூரிக்கு போகலாமென்று இருக்கிறேன்,” என்றேன்.
அவர் ஏன் என்பது போல என்னைப் பார்த்தார்.
“இல்ல, இங்க இருந்தா இதே நினைப்பா இருக்கு. அதனால அங்க போனா கொஞ்சம் மாற்றமா இருக்கும்,” என்றேன்.
அப்பா ஒன்னும் சொல்லாமல் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
இப்ப வேண்டாம் என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சிறிது நேரம் கழித்து என்ன நினைத்தாரோ, தங்கவேலு மாமாவிடம் சொல்லி சீட்டு ரிசர்வ் செய்யச் சொன்னார்.
நான், மறுநாள் என்னுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு தயாராகி இருந்தேன். அப்பா எங்கோ சென்றிருந்தவர் சிறிது நேரம் கழித்து வந்தார். நான் அக்காவிடமும், அம்மாவிடமும் சொல்லவிட்டு கிளம்பினேன். அம்மாவுக்கு நான் இன்னும் சிறிது காலம் தங்கிச்செல்லேவேண்டும் என்று விருப்பப்பட்டாள். அதனால் நான் செல்வது அவளுக்கு வருத்தமாக இருந்தது. நான் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். எதிர்வீட்டுக் கதவு சாத்தியிருந்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர். அவர்கள் வீடு அமைதியாக இருந்தது. பாலு மாமாவை அதிகம் வெளியே பார்க்க முடிவதில்லை. அப்பா வண்டியைக் கிளப்பினார். போகும் வழியில் ஆற்றைக் கடக்கும் போது, அப்பாவும் நானும் ஆற்றைப் பார்த்துக்கொண்டே சென்றோம். ஆறு எந்த வித மாற்றமும் இல்லாமல், அதே அமைதியுடன் ஓடிக்கொண்டிருந்தது. மதனுக்குச் சடங்கு செய்ய மூன்று நாட்களுக்கு முன்பு வந்த கரையில் வேறு சிலர் அமர்ந்து அதே சடங்கை செய்துகொண்டிருந்தனர். பாலத்திலிருந்து சிலர் ‘ஓ’ வென கத்திக்கொண்டே குதிக்கத் தண்ணீர் எங்கள் மீது வந்து தெளித்தது.
7.
நான் என் கல்லூரிக்கு சென்றேன். விடுமுறை என்பதால் அதிகமாக யாரும் தென்படவில்லை. பெரும்பாலும் நூலகத்திலும், என் அறையிலும் பொழுது கழிந்தது. அறையிலும் புத்தகங்களுடன் தான் இருந்தேன். தனியாக இருப்பது நன்றாக இருந்தது. ஏதோ ஒரு சுதந்திரம் கிடைத்தது போல, என்னைக் கேட்க இனி யாரும் இல்லாததுபோல் உணர்ந்தேன். மதனின் இழப்பு வருத்தமாக இருந்தாலும், உள்ளுக்குள், எனக்கு எதோ ஒன்று அழுத்தம் கொடுத்த ஒன்று விடுபட்டது போல உணர்ந்தேன். எனக்கு என்ன தேவையோ, எனக்கு என்ன பிடிக்குமோ அதை இனி செய்யமுடியும். யாரையும் பின் தொடரத் தேவையில்லை. ஒப்பீட்டுக்கு இனி யாருமில்லை. நான் நானாக இருக்க முடியும் என்று நினைத்தபோது வந்த பெரு மூச்சு அருவருப்பாக இருந்தது. குற்ற உணர்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த அந்த நிம்மதியை வெளிப்படையாக என்னிடம் வராமல் தவிர்த்தேன். ஆனால், உள்ளுக்குள் இருந்த அந்த உணர்வை நீக்கமுடியவில்லை. அதனைத் தவிர்க்க வேறு விஷயங்களில் வலுக்கட்டாயமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். புத்தகம், மேலும் புத்தகம் எனக் காலை முதல் இரவு வரை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், விலக விலகப் பெரிதாகிக்கொண்டே இருந்தது எண்ணங்கள்.
அம்மாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவள், அப்பா இன்னும் மதனின் இழப்பிலிருந்து வெளிவரவில்லை என்று சொன்னாள். அப்பாவின் கவலை, எனக்கு அதிக வருத்தத்தையும் கோபத்தையும் உருவாக்கியது. அவரின் கவலை இனி நான் எப்படி மதன் இல்லாமல் முன்னேறுவேன் என்பதாகத்தான் தெரிந்தது. அவர் என் மேல் நம்பிக்கை இழந்து இருந்தார். கல்லூரி திறந்ததும் என்னை முற்றிலும் படிப்பில் செலுத்திக்கொண்டேன். விருப்பமாக இல்லாவிட்டாலும், மற்றவையிருந்து விலகி இருக்க அது உதவியது. வீட்டிற்கு வருமாறு அம்மா கூறினாள். நிறைய வேலை இருப்பதாகக் கூறி தவிர்த்தேன். படிப்பு, படிப்பு எனப் பைத்தியமாக இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நிறைய மதிப்பெண்களுடன் தேர்வில் முன்னேறிக்கொண்டிருந்தேன். அப்பாவும், அம்மாவும் ஒரு முறை என்னைப் பார்க்க கல்லூரிக்கு வந்திருந்தார்கள். நான் நிறைய மாறியிருப்பதாக அம்மா கூறினாள். அப்பாவிடம் அதிக மாற்றம் இல்லை. அவர் என்னுடன் குறைவாக தான் பேசினார். அது என்னை மேலும் மேலும் உந்தித் தள்ளியது.
கல்லூரியின் இறுதி ஆண்டில் அதிக மதிப்பெண் எடுத்து, அங்கு வந்திருந்த ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வானேன். நான் நினைத்தே பார்த்திராத அதிக சம்பளம். இதை உடனே அப்பாவிடம் சொல்லி, என் மீதிருந்த அவரின் அவ நம்பிக்கையைத் தூளாக்கவேண்டும் என்று மனம் குதூகலித்தது. அம்மா தான் எடுத்தாள். அவளுக்கு நிறைய சந்தோசம். அப்பாவிடம் என்னால் நான் பேச நினைத்தது போல பேச முடியவில்லை. விஷயத்தை மட்டும் கூறிவிட்டு வைத்துவிட்டேன். மனது, அடங்காமல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. எதோ மிகப் பெரிய சாதனையைச் செய்துவிட்டதாக நினைத்தேன். என்னுடைய தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவந்ததாக நினைத்துக்கொண்டேன். மதன் இருந்திருந்தால், அவனுடனான ஒப்பீட்டில் அவனைவிட ஒரு பெரும் வெற்றியை அடைந்ததாக என்னைப் புகழ்ந்திருப்பார்கள் என்று நினைத்தபோது பெருமிதமாக இருந்தது.
8.
அம்மா என்னைத் தட்டி எழுப்பினாள். கண் விழித்துப் பார்த்தேன். கார் ஒரு சாலையை விட்டு விலகி ஒரு ஓரமாக நின்றிருந்தது. நான் மெதுவாக என் இருக்கையிலிருந்து எழ முயற்சித்தேன். கழுத்தை ஒரு பக்கமாக வைத்துத் தூங்கியதால் வலித்தது. நான் கழுத்தை தடவிக்கொண்டே காரிலிருந்து இறங்கினேன். என்னைப் பார்த்ததும் கார் ஓட்டுநர், மெலிதாக புன்னகை செய்தார். அவருடைய பவ்யம் எனக்கு ஒரு கிளர்ச்சியை கொடுத்தது.
அவரிடம், “இன்னும், இரண்டு மணி நேரத்தில போய் சேர்ந்திரலாம் இல்ல?” என்றேன்.
அவர், “ஆமா, நிறைய டிராபிக் இல்ல,” என்றார்.
அப்பா, கடையிலிருந்து வாங்கி வந்த காபியை என்னிடம் கொடுத்தார். நான் அவரிடமிருந்து வாங்கிக்கொண்டேன். சாலையில் புழுதி கிளப்பியபடி பேருந்துகள் போய்க்கொண்டிருந்தன. நான் காபியை குடித்துவிட்டு, மீண்டும் காரில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில், அம்மாவும் அப்பாவும் எற மீண்டும் புறப்பட்டது.
நான் ஊருக்குச் சென்று, இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிறது. மதன் இறந்த பிறகு வீட்டிற்கு வரவேயில்லை. கல்லூரி முடித்து, வேலைக் கிடைத்தவுடன், சென்னையிலேயே வீடு வாங்கினேன். அம்மாவும், அப்பாவும் அவ்வப்போது வருவார்கள். அக்காவுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. அப்பா நினைத்ததுபோல நல்ல இடம் வந்திருக்கிறது என்று அம்மா சொல்ல, என்னுடைய சேமிப்பை அக்காவின் திருமணத்திற்கு அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டார். அவருக்கு நிச்சயம் சந்தோஷமாக இருந்திருக்கவேண்டும். வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், எனக்கு இது போன்ற தருணங்கள் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும். நான் இவ்வளவு தூரம் வாழ்க்கையில் முன்னேறுவேன் என்று அப்பா எதிர்பார்த்திருக்கவே மாட்டார் என்று நினைத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் அவர் என்னிடம் அன்பாகப் பேசுகிறார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் எதையும் அவர் செய்கிறார். எப்போதும் அவர் உச்சரிக்கும் மதனின் பெயரை அவர் முற்றிலும் மறந்தே போயிருந்தது எனக்குக் கிடைத்த வெற்றியாகவே எண்ணிக்கொண்டேன். உள்ளுக்குள் இருந்த அகங்காரம் மெலிதாகச் சிரித்தது.
அடுத்த ஒரு சில மணிகளில், எங்களுடைய கார் வீட்டை அடைந்தது. நாங்கள் வந்ததை அறிந்து, அக்கா வெளியே வந்து பார்த்தாள். நான் காரிலிருந்து கீழே இறங்கினேன். என்னை பார்த்ததும் அக்கா வந்து என் கையை பிடித்துகொண்டாள். அக்கா மிகவும் சந்தோஷமாக இருப்பது அவள் முகத்தில் தெரிந்தது. அப்பா காரின் பின் பக்கம் இருந்து பெட்டிகளை ஓட்டுநரின் உதவியில் இறக்கிக்கொண்டிருந்தார்.
“இந்த கார் தான் வாங்கியதா? ” என்று அக்கா கேட்டாள்.
“ஆமாம்,” என்றேன்.
“ஓ! நீ இப்பதான் பார்க்கறியா?,” என்று அப்பா அக்காவிடம் கேட்டுக்கொண்டே பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
நான், வீட்டைப் பார்த்தேன். அக்காவின் திருமணத்திற்காக மாடியைச் சற்று பெரிதாக்கி இழுத்துக் கட்டியிருந்தார்கள். புதியதாக வண்ணம் அடிக்கப்பட்டு, மேலே நிறைய பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. நான் பார்ப்பதை அறிந்த அக்கா என்னிடம்..
”எப்படிடா இருக்கு வீடு?,” எனக் கேட்டாள்.
“ம்.. ஒன்னும் பெரிசா மாறவில்லை,” என்றேன்.
அவள், “அந்த பூந்தொட்டியெல்லாம் நான்தான் வைத்தேன்,” என்றாள்.
நான் விளையாட்டாக முகம் சுளிக்க அவள் என்னை முதுகில் குத்தினாள்.
நான் சிரித்துக்கொண்டே திரும்பி எதிர் வீட்டைப் பார்த்தேன். துருப்பிடித்திருந்த வெளி கதவு சாத்தியிருக்க, உள் கதவு மட்டும் கொஞ்சம் திறந்திருந்தது. வெளி சுவர்கள் முழுவதும் பாசி படிந்து கருப்பாக இருந்தது. வெளியே இருந்த பெரிய செம்பருத்தி மரத்தை வெட்டிவிட்டார்கள் போல. அதிக வெளிச்சமாக என்னவோ போல இருந்தது. நான், திரும்பி வீட்டுக்குள் நுழைய முற்பட, அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
“வா, பாலு மாமாவை பார்த்துட்டு வந்துடலாம். அவர் எப்போதும் உன்னப் பத்தி கேட்டுகிட்டே இருப்பார்,” என்றார்
நான், சற்று தயங்க.
“நாளைக்கு மாப்பிளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்க. அப்புறம் பார்க்க நேரம் இருக்காது உனக்கு. வா, அப்படியே போய் பார்த்துட்டு வந்துடலாம்.” என்றார்.
என்னை யோசிக்கவிடாமல், அவர் எனக்கு முன்னால் சென்றார். தவிர்க்க முடியாமல் நான் அப்பாவைப் பின்தொடர்ந்தேன்.
9.
அப்பா வெளிக்கதவு திறக்க, அது ஒரு முனகலுடன் அலுத்துக்கொண்டது. கதவு திறக்கும் சத்தம் கேட்க, பாலு மாமா உள்ளிருந்து வெளியே வந்தார். முதலில் அப்பாவைக் கவனித்து, பின்பு என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
“நான், யாரோன்னு பார்க்கிறேன். வா..வா..எப்பிடி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்.
நாற்காலியை இழுத்துப் போட்டு என்னை உட்கார சொன்னார். நான் அதில் அமர, அப்பாவும், மாமாவும் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள். அப்பா, நாங்கள் சென்னையிலிருந்து வந்ததைப் பற்றியும், வழி நெடுக இருந்த சாலையின் குழிகளையும் பற்றி மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நான், இவ்வீட்டுக்கு வெகு நாட்களுக்கு முன்பு வந்தது. பெரிய மாற்றம் இல்லை. வீட்டுக்குள் நுழையும் போது இருந்த அந்த வாசனை, சட்டென மதனுடன் இங்கு அமர்ந்து பேசியது ஞாபகம் வந்தது. என்னால் அங்கு அதிக நேரம் உட்கார முடியாது என்று நினைத்தேன். சட்டென அவர்கள் பேச்சு முடிவுக்கு வந்து, சிறிது நேரம் ஒரு அமைதி இருந்தது. அந்த அமைதியில், நான் பாலு மாமாவைப் பார்த்தேன். அவர் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்பா,”வெளிநாடு போக சொல்லிருக்கிறார்கள் அவங்க கம்பெனியில,” என்று மாமாவிடம் சொன்னார்.
“ஓ! அப்பிடியா. ரொம்ப சந்தோசம். எங்க? அமெரிக்காவா?,” எனக் கேட்டார்.
நான்,”ஆமா மாமா. அடுத்த மாசம் போவது போல இருக்கும்,” என்றேன்.
“ஓ! சரி. அக்கா கல்யாணம் அதுக்குள்ள முடிஞ்சுடும்,” என்றார்.
நான், “ஆமாம்,” என்றேன்.
மீண்டும் ஒரு அமைதி. என்னை எதோ அது செய்தது.
அப்பா சட்டென, “மதன் போட்டோ உள்ள இருக்கு. போய் பாரு,” என்றார்.
நான் சற்று தயங்க, மாமா “இங்க வா” என அழைத்துச் சென்றார்.
அது ஒரு அறை. இருட்டாக, குளுமையாக இருந்தது. தண்ணீரில் கால் வைப்பது போல தரை சில்லிட்டது. நான் சற்று தயங்கித் தயங்கி உள் சென்றேன். மாமா அந்த இருட்டுக்குள் சட்டென நுழைந்து எங்கோ கரைந்து சென்றார். நான், கண்ணை இருட்டுக்குப் பழக உற்று நோக்க, சட்டென வந்த வெளிச்சதித்தில் மதன் என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் சற்று தடுமாறி பின்னால் நகர்ந்தேன். என் பின்னல் யாரோ இருப்பது போல இருக்க, திரும்பிப் பார்த்தேன். அப்பா நின்றுகொண்டிருந்தார். மதனின் புகைப்படத்தில் பெரிய மாலை ஒன்று வாடாமல் இருந்தது. எனக்குச் சற்று வியர்த்தது .
மாமா, அந்தப் புகைப்படத்தில் இருந்த மதனைப் பார்த்துக்கொண்டிருந்தார். “இந்த போட்டோ அவன் அமெரிக்கா போறதுக்காக விசா எடுக்க எடுத்தது.” என்றார். அவர் குரல் உடைந்திருந்தது.
“அவன் நிறையத் திட்டமிட்டு இருந்தான். பெரிய கம்பெனியில வேலைக்கு போகணும், கார் வாங்கவேண்டும், சென்னயில வீடு வாங்கி அங்கயே இருக்கணும், அமெரிக்காவுக்கு போய்டணும்..நிறையச் சொல்லுவான்,” என்று சொல்லிவிட்டு, கண்ணைத் துடைத்துக்கொண்டார்.
அப்பா, “வருத்தப்படாதிங்க பாலு. எங்கிட்ட ஒரு முறை கூட சொல்லிருக்கிறான். என்று சொல்லிவிட்டு, சிறிது இடைவெளியில் “மதன் திட்டமிட்ட எல்லாத்தையும் இவன் செய்றத பார்த்தா, எனக்கு மதன் இவன் ரூபத்தில் இன்னும் உயிரோடுதான் இருக்கான் போலன்னு நான் நினைச்சுக்குவேன். என்றார். பாலு மாமா அதை ஆமோதிப்பது போல தலையை அசைத்து என்னைப் பார்த்தார்.
எனக்கு சுரீர் என்றது அப்பா சொன்ன வார்த்தைகள். அப்பாவும், மாமாவும் என்னையே பார்த்துக்கொண்டிருக்க. நான் அவர்களின் கண்களை தவிர்த்து மதனின் புகைப்படத்தை சற்று அருகில் சென்று உற்று நோக்கினேன். என் முகம் அதில் பிரதிபலிக்க, மதன் தொலைந்துபோனான்.
***
ஒப்பிடும் உலகின் சில நேரங்களில், நாமனைவருமே ஏதோ ஒன்றில் தொலைந்து போனவர்களாகிறோம். அப்படியோர் நிகழ்வை கண் முன் நிறுத்துகிறது இக்கதை.
வாழ்த்துகள் ஒரு நல்ல அனுபத்திற்காக…
நன்றி திரு. சிவா.
கதைக் களமும்,கதாபாத்திரங்களும்
கண் முன்னே நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது…. நண்பா…வாழ்த்துக்கள்!!
கதையை படித்து உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி செல்வம்.
ஒப்பிடுதல் பெரிய வியாதி. தன் மகனை வருத்துகிறோமே
என்று ஒரு தந்தைக்குத் தெரிய வேண்டாமா. ஆனல் உலகம் இப்படித்தான். நல்ல ஒரு கதைக்கு வாழ்த்துகள்.
அருமையான எழுத்து நடை.
கதையை படித்து உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
கதைக்குள் ஆழ்ந்து படிக்க முடிந்தது…மனதை ஏதோ செய்யும் கதை..