இரு கவிதைகள் – சதீஷ் குமார்

1
ஒருவனைத் தோளில்
கிடத்திய தருணத்தில்..
இன்னொருவனின்
‘அப்பா..நான்தானே
உன் குட்டி!’
என்ற ஒற்றை விசும்பலின்
பொறாமை
தேனாய்
திகட்டியது..

~oOo~

2

இரவு

எப்போதும்
பகலாக..
இரவோடு
புணர விரும்பா
நகரத்து இரவு
கிராமத்து இரவுக்கான
மின்னொளியையும் விழுங்கிச் செரித்து
இரவை துரத்தும்
நகர நரக இரவு
சாலையோரம்
பகலெல்லாம் உறங்கி அடுப்பில் இட்ட
நீர் போல்
“சல்” லென்ற ஓசையுடன்
விழித்துக்கொள்ளும்
பரோட்டா கடைகள்
குடியிருப்புகள் நடுவே
உறங்கிய விளக்குகள்
உறங்கா இணைகள்
வினையூக்கியாய் ஒலிக்கும் குல்ஃபி வண்டிகள்
ஆக்கிரமிப்புகளால் விரிந்த
நகர வளரிரவில்
பெருவெள்ளம்
தன் இடம் தேடி
தடம் மாறி
கடல் புகுந்து
விடியலில்
நகரம் கலைந்து நரகமாய்…