எங்களை ஊசியால் குத்தினீர்களானால்

சொல்வனம் 173 ஆம் இதழில் யூதக் குடிமக்களுக்கு எதிராக யூரோப்பின் ‘ஜனநாயகங்களில்’ காணப்படும், கடைப்பிடிக்கப்படும் இனவெறுப்பு/ இன அழிப்புக் கொள்கைகளையும், அவற்றை யூதர்கள் எப்படி மீறித் தப்பிப் பிழைத்தார்கள், இன்னமும் பிழைக்கிறார்கள் என்பன பற்றியும் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தோம். இத்தகைய வெறுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது, யூதர்களுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை, யூரோப்பிய வெள்ளை இன மையப் பார்வை என்ற நெடுங்காலப் போக்கும், கிருஸ்தவத்தின் நீண்டகாலத்துப் பழக்கமாக இருக்கிற குழு மைய வெறியும் இணைந்த ஒரு கொடும்போக்கு, எப்படி வரலாறு நெடுக பல கிருஸ்தவரல்லாத சமூகக் குழுக்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்ட, இந்தியா / இந்து சமுதாயங்களுக்கு எதிராகப் பல நூறாண்டுகளாக நடத்தப்பட்ட அரபு/ பெர்ஸிய/துருக்கிய முஸ்லிம் படையெடுப்புகளிலிருந்து தப்பி ஓடிய இந்துக்கள் என்று கருதப்படும் ‘ரோமா’ இனக்குழு மக்களும், யூரோப்பில் பல நாடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்த இடங்களில், இதே போன்ற இனவெறுப்பு/ இன அழிப்பு முயற்சிகளை எதிர் கொண்டார்கள், இன்னமும், 21 ஆம் நூற்றாண்டிலும் கூட நாடு கடத்தப்படுகிறார்கள் என்பதை எல்லாம் விளக்கும் ஒரு கட்டுரையையும் பிரசுரித்தோம். யூரோப்பின் இனவெறிப் பார்வை இன்னமும் அடங்கவோ, ஒழியவோ இல்லை.

இந்த இதழில் யூதர்களுக்கு யூரோப்பிலும், அமெரிக்காவிலும் இருந்த பிரச்சினைகள் பற்றிய இன்னொரு கட்டுரையைக் கொடுக்கிறோம்.

இது, ஹார்வர்ட் பல்கலையில் இங்கிலிஷ் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் என்ற விமர்சகர் ஜூலை 10-17, 2017 என்ற தேதிகளைத் தாங்கிய நியுயார்க்கர் பத்திரிகையில் எழுதிய ‘If You Prick Us’ என்ற கட்டுரையின் அடிப்படையில் உருவாகிறது. அதைத் தழுவி எழுதியது என்று கொள்ளலாம். மொழி லகுவுக்காகவும், மூலக் கட்டுரையில் இருக்கும் பல நாடக/ கவிதைப் பத்திகளை மொழி பெயர்ப்பதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கவும் இந்தத் தழுவி எழுதல் முயற்சி. சில பத்திகள் மட்டும் அப்படியே இங்கிலிஷில் கொடுக்கப்படுகின்றன. ஷேக்ஸ்பியரின் பத்திகளைத் தமிழாக்கம் செய்தால், அவற்றில் க்ரீன்ப்ளாட் சுட்டும் நுணுக்கங்கள் விளங்காமல் போகும் என்பது அவற்றை மொழி பெயர்க்காததற்கு இன்னொரு காரணம். கட்டுரையில் ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருப்பவை மூலக் கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லப்படாத தகவல்கள், வாசகர்களுக்கு எளிதாக்கப் படுவதற்காக, தமிழாக்கம் செய்தவரால் கொடுக்கப்படுபவை.

 

ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட்

நான் படித்த பல்கலையும், இப்போது நான் போதிக்கும் பல்கலையும் வெவ்வேறு உலகங்களில் இருந்தன என்றே சொல்லலாம். 1961 இல் நான் நுழைந்த யேல் கல்லூரி, முழுதும் ஆண்களுக்கு மட்டுமானது. நான் என் இளங்கலைப் பட்டத்தை வாங்கிய பிறகு, ஐந்தாண்டுகள் கழித்துத்தான் அங்கு முதல் முறையாகப் பெண்கள் பட்டம் வாங்கினார்கள். இளநிலை மாணவர்களில் வெகு சிலரே ஆசியா, ஆஃப்ரிக்கா, மேற்காசியா ஆகிய பகுதியிலிருந்து வந்தவர்கள். மிகச் சிலரே ஆஃப்ரிக்க- அமெரிக்கர்கள், ஆசிய-அமெரிக்கர்கள். அதே போல மிகச் சிலரே ஹிஸ்பானியர்கள், அவர்களில் கூடச் சிலர், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து பெரும் செல்வந்தக் குடும்பத்திலிருந்து வந்தவர்களாக, மிகுந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்றவர்களாக இருந்தார்கள்.

நான் படித்த யேல், முழுவதுமே வட அமெரிக்கர்கள், அதுவும் வெள்ளையர்கள், அவர்களிலும் மிகப் பெரும்பான்மையாக, ப்ரொடஸ்டண்ட்களான மாணவர்களையே கொண்டிருந்தது. கதோலிக்கர்கள் யாரென்பதை அடையாளம் கண்டு பிடிப்பது, கல்லூரியில் படிக்க நுழைவனுமதி கொடுக்கும் அலுவலர்களுக்குக் கடினமான செயலாக இருந்ததால், அவர்கள் நுழைந்தார்கள். அவர்களிலும் கூட, எளிதில் இனம் கண்டு பிடிக்கப் பட முடிகிற பெயர்களைக் கொண்ட, ஐரிஷ், இதாலிய, போலிஷ் மாணவர்கள் நுழைவது மிகக் கடினம். யூதர்களுக்கென்று, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் உச்ச வரம்பு இருந்தது, இப்போது சொல்கிறார்களே, ‘நாட்டின் எல்லாப் பகுதிகளும் இடம் பெற வேண்டும்’ என்பதற்காக சில குழுவினருக்கு (மட்டும்) எண்ணிக்கைக் கட்டுப்பாடு இருப்பதாக, அப்படி ஒரு ‘வசதியான’ காரணம் கூட அன்று சொல்லப்படவில்லை.  இப்படி நுழைவைக் கட்டுப்படுத்திய ஒரு அமைப்பு, ஏராளமான நன்கொடைகளால் தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது, அதோடு வசதி படைத்தவர்களின் உள்குழு இணக்கமும், அவர்களுக்குச் சகஜமாகக் கிட்டிய சலுகைகளும் எங்கும் பரவலாகக் காணப்பட்டதும் இந்த அமைப்பு நீடித்து நிலைத்திருக்க உதவியது. [அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடையே] படிப்பிலோ, மதிப்பெண்களைப் பெறுவதிலோ அதிக நாட்டம் காட்டுவது என்பதே தெளிவாகவே தரமற்ற நடத்தையாகப் பார்க்கப்பட்டது. இந்தக் கால கட்டம், படிப்பில் மதிப்பெண்களாக ‘கனவான்களுக்குரிய’ ‘ஸி’ க்ரேட் வாங்கும் காலமாகத்தான் இருந்தது.

[யேல் கல்லூரி இருக்கும்] நியு ஹேவன் நகருக்கு வந்து சேர்ந்த சில தினங்களிலேயே இதை எல்லாம் நான் தெரிந்து கொண்டு விட்டேன், ஆனால் யேல் கல்லூரி என்பது என்னைப் பொறுத்தவரை இன்னமும் அன்னிய நாடு போலவும், அதன் பழக்கவழக்கங்கள் எல்லாம் என்னால் ஒருபோதும் முழுதும் கற்றுத் தேற முடியாதன எனவுமே தெரிந்தன. என் பெற்றோர்கள் இருவருமே கல்லூரிக்குப் போனவர்கள் அல்ல. என் அம்மா, அவருடைய குடும்பத்தில் இருந்த மற்ற பெண்களைப் போலவே, பள்ளிப் படிப்பு முடிந்ததும், நேரடியாக ஒரு செக்ரடரி வேலையில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. என் அப்பா வழக்கறிஞராக வேலை செய்தார் என்றாலும், அவர் இளநிலைப் பட்டம் வாங்கி இருக்கவில்லை. பள்ளிப் படிப்பு முடிந்ததும் இரண்டாம் உலகப் போரில் படைவீரனாகப் போய்ச் சேர்ந்து விட்டு, போர் முடிந்ததும் திரும்பியபோது நேரே சட்டப் பள்ளியில் போய்ப் படித்தார். அதற்குக் கல்லூரியிலிருந்து பட்டம் வாங்குவது முன் தேவையாக இருக்கவில்லை.

அது அவருடைய நல்ல வேளை, ஏனெனில் என் தாத்தா, கிழிந்த துணிகளைப் பொறுக்கும் தொழில் செய்தார், அவரால் என் அப்பாவிற்குக் கல்லூரிப் படிப்புக்கான நிதியைக் கொடுத்திருக்க முடியாது. இத்தனைக்கும் அப்போது கல்லூரிப் படிப்புக்குக் கட்டணம் மிகக் குறைவுதான். என் தாத்தாவும், பாட்டியும் மேல் படிப்பு பற்றி அக்கறை இல்லாதவர்கள் இல்லை, ஆனால் அவர்கள் வறுமையில் இருந்தார்கள், நேரே வேலைக்கு இட்டுச் செல்லாத படிப்பு என்றால், அவசியமாக அது மதக் கல்வியாகத்தான் இருக்கலாம் என்ற கருத்து அவர்களிடம் இருந்தது. அவர்களுடைய பண்பாட்டுச் சூழலில், உயர் நிலை என்பது பணத்தாலோ, அதிகாரத்தாலோ வருவதல்ல, மாறாக தால்மூட் நூல்களில் ஆழ்ந்த ஞானத்தால் மட்டுமே வரக் கூடியது. [தால்மூட் என்பது யூத மதத்தின் மறை நூல்களின் தொகுப்பு.]

அவர்களின் உலகம் வெளித் தாக்கங்களுக்கு இடம் கொடுக்காத ஒரு சமூகத்தால் ஆனது. அதில் மண வாழ்வில் துணைக்கான தேர்வு என்பது – டார்வினியத்தில் பாலூட்டி மிருகங்களின் பரிணாமத்தை நடத்தும் மைய சக்தி அதுதான் – பல நூறாண்டுகளாகவே ஒல்லியான, கிட்டப் பார்வை உள்ள, நெருங்கிய தோள்கள் கொண்ட இளம் ஆண்களுக்கே, அதுவும் யூதச் சட்டங்கள் பற்றிய அடுக்கடுக்கான விரிவுரைகளையும், அனேகமாக ஆச்சரியமூட்டும் விதமான வினோத விளக்கங்களையும் கொண்ட நூல்களை முன்னும் பின்னும் ஆடியபடி உருப்போடும் இளைஞர்களுக்குத்தான், சாதகமாக இருந்தது.

இது எதுவும் என் வளர்ப்பில் இல்லை: ஆயிரத்து எண்ணூற்றி எண்பதுகளில், என் பாட்டி/ பாட்டனார்கள், ரஷ்ய ஜார் ஆட்சிப்பிடியில் இருந்த லிதுவேனியாவிலிருந்து தப்பி ஓடி வந்து, பாஸ்டன் நகரில் குடி வந்தபோதே இவற்றில் பலவும் கைவிடப்பட்டு விட்டன. ஆனால் கனமான டால்மூடின் புத்தகங்களுடைய தடயம் இருக்கவே செய்தது, புத்தகங்களின் வழியே கொடுக்கப்படும் விளக்கவுரைகள் மீது காட்டப்படும் மரியாதை கலந்த மதிப்பு இன்னும் எஞ்சி இருந்தது. இப்போது அதுவே மதமில்லாத படிப்பு மீது செலுத்தப்பட்ட மதிப்பாகி, என் போன்றவர்களை மனிதப் பண்புகள் பற்றிய படிப்பைத் தேர்ந்தெடுக்கச் செய்தது, இந்தத் துறையில் அப்போது இங்கிலிஷ் இலக்கியப் பிரிவுதான் உயரிய ஸ்தானத்தைக் கொண்டிருந்தது. யேல் கல்லூரியில் நான் வகுப்புகளில் பங்கெடுக்கத் துவங்கியபோது, என் கல்லூரித் தோழர்களில் பலருடைய உல்லாசமான அலட்சியத்தைப் புரிந்து கொள்ளவோ, ஏற்கவோ என்னால் முடியவில்லை. நியூயார்க்கில் புதுக் குடியேறிகளாக வந்திறங்குவோரை ‘பெருகி வரக் காத்திருக்கும் அறிவு ஊற்றுகளாக’ உள்ளதாகக் கூர்மையாகக் கவனித்து, ‘அன்னியர்களின் திரள் மேன்மேலும் பெருகிப் பெருகி பிரும்மாண்டத்தை அடையும்’ என்று எச்சரிக்கவும் செய்த 1904 ஆம் வருடத்து ஹென்ரி ஜேம்ஸ் என்னுள் இருப்பது போல உணர்ந்தேன். நான் ஓர் அன்னியனைப் போல உணரவில்லை- நான் இந்த நாட்டில்தான் பிறந்திருந்தேன், என் பெற்றோரும் அப்படியே பிறந்தவர்கள்தான், எனவே நான் என்னுடைய யேல் கல்லூரி மேல்சட்டையை அணிவதில் ஏதோ பொய்மை இருப்பதாக உணராமல் இயல்பாகவே அணிந்தேன் – ஆனால் எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கற்றுக் கொள்ள நான் பாவித்த ஊக்கம் சற்று அன்னியருக்கே உரியதாகப் பட்டது.

என் புதுமுக இங்கிலிஷ் இலக்கிய வகுப்பில் குறிப்பாகத் தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தேன். பாதி வருடம் முடியும்போது, வகுப்புப் பேராசிரியர், அவர் எழுதி முடித்திருந்த ஒரு புத்தகத்துக்கு குறிப்புப் பட்டியல் ஒன்றைத் தயாரிக்க, அவருடைய ஆய்வு உதவியாளனாக இருக்க எனக்கு விருப்பமுண்டா என்று என்னைக் கேட்டார். பெரும் உற்சாகமடைந்து, நான் உடனே ஒத்துக் கொண்டேன். அந்த நாட்களில் ஆய்வு உதவியாளர்கள், ‘நிதி உதவி அலுவலகத்தின்’ வழியே, தம் பல்கலை வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நான் அவர்களிடம் பேச எனக்கு நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தேன், அங்கே எனக்கு ஒரு திகைப்பு காத்திருந்தது.

“க்ரீன்ப்ளாட் என்பது ஒரு யூதப் பெயர்தானே, இல்லையா?” நிதி உதவி அலுவலகர் என்னைக் கேட்டார். நான் ஆம் என்று ஒத்துக் கொண்டேன்.  “வெளிப்படையாகச் சொல்கிறேன்,” அவர் மேலே பேசினார், “சேர்க்கப்பட்டவுடனே இந்த அலுவலகத்துக்கு வந்து யேல் கல்லூரியிடமிருந்து ஏதாவது பணத்தைக் கறந்து விட முயலும் கணக்கற்ற யூதர்களைப் பார்த்து, எங்களுக்குச் சலித்து விட்டது.” நான் திக்கித் திணறிக் கேட்டேன், “நீங்கள் எப்படி இப்படி பொதுமைப்படுத்த முடியும்?”

“ஆமாம், மிஸ்டர். க்ரீன்ப்ளாட், சிஸிலியர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியால் அவர் பதிலளித்தார்.  எனக்கு சிஸிலியர்கள் யாரையும் தெரியாது என்று பதில் சொன்னேன். “ஜே. எட்கர் ஹூவர்,” அவர் தொடர்ந்தார், எஃப் பி ஐ (மத்தியக் குற்ற விசாரணை அலுவலகம்) இயக்குநரிடமிருந்து தம் கருத்தைப் பெறுவதாகச் சுட்டியபடி, “சிஸிலியர்கள் நிறைய குற்றங்களைப் புரிவதாக நிறுவத் தம்மிடம் புள்ளி விவரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்.” அதே போல, அவர் மேலும் விளக்கினார், யேல் கல்லூரியிடம் இருந்து ஆய்வு மாணவர்களாக ஆகி எப்படியாவது பணம் பெற்றுவிட அளவு கடந்த யூத மாணவர்கள் முயல்வதாக நிறுவத் தேவையான புள்ளி விவரம் இருப்பதாகச் சொன்னார். அதற்கு மேலும் சொன்னார், “இந்த மொத்தக் கல்லூரியையும் ப்ராங்க்ஸில் உள்ள அறிவியல் உயர்நிலைப்பள்ளியிலிருந்து (Bronx High school of Science- நியூயார்க் மாநகரின் ஒரு பகுதியில் உள்ள பள்ளி] தேறி வரும் மாணவர்களைக் கொண்டு நிரப்பி விட எங்களுக்கு முடியும், நாங்கள் அப்படி ஏதும் செய்யாமல் இருக்கத் தீர்மானித்திருக்கிறோம்.”  நான் பள்ளியில் படித்தது மாஸ்ஸச்சூஸெட்ஸ் மாநிலத்தில் உள்ள நியூட்டன் நகரில் என்று பொருத்தமில்லாத ஒரு பதிலைச் சொல்லி விட்டு நான், வேலை ஏதும் கிடைக்காமல் குறுகிப் போய் அங்கிருந்து வெளியேறினேன்.

இந்த உரையாடல் என்னை அதிரச் செய்திருந்தது. சில பத்தாண்டுகள் கழிந்த பின், பேச வார்த்தையில்லாமல் திக்கித்து நிற்கும்படி என்னை ஆக்கிய சம்பவம் நடந்ததை இப்படி நினைவு கூர்கையில், ஆஃப்ரிக்க அமெரிக்க மாணவர்கள் யூத மாணவர்களை விடப் பல மடங்கு மோசமான விதங்களில் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும், முன்பு யூதர்கள் இருந்த இடத்தில் மற்ற இன/ மதக் குழுவினர் இன்று நிறுத்தப்பட்டிருப்பதையும் நிஜமான தகவலாக அறிந்திருப்பதால், ஆத்திரமும் வியப்பும் கலந்த உணர்வு எழுகிறது. யூதர்களைக் குறித்து என்னோடு உரையாடியவருக்கு முன்பு இருந்த அதே அச்சம், இன்று மற்ற இன/ மதக் குழுக்களின் பால் திருப்பப்பட்டிருக்கிறது. அன்று எனக்கு அத்தனை அதிர்ச்சி ஏன் எழுந்தது என்றால், அந்தச் சம்பவம் (சமூகச் சூழலைப் பற்றிய) என் பெற்றோரின் மிக மோசமான அச்சங்களை உறுதி செய்தாற்போல இருந்தது என்பதுதான். நான் வளர்ந்து வருகையில், அந்த அச்சங்கள் அபத்தமான விதத்தில் காலம் கடந்தவை என்றும், ஏதோ அவர்கள் வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவை, இன்று நான் இருக்கும் நாட்டுக்குத் தொடர்பில்லாதவை என்றும் நான் அவற்றை ஒதுக்கி இருந்தேன். என் பெற்றோரைப் பொறுத்தவரை, ‘நாங்கள்’ என்றும், ‘அவர்கள்’ என்றும் உலகம் இரு சாராராகப் பிரிந்திருந்தது, அவர்கள் தங்கள் வாழ்வைப் பூராவுமே தங்களுடைய சமூகத்தினர் வாழ்ந்த ஒரு அடைசலான இடத்திலேயே கழித்திருந்தனர் என்பதாக எனக்குப் பட்டிருந்தது.

இந்த நிதி உதவி இலாகா அலுவலரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்குச் சிறிதே காலம் கழித்து, இங்கிலிஷ் மொழிக் கவிஞர்களில் அப்போது இன்னும் வாழ்ந்திருந்தவர்களில் மிகச் சிறப்பானவரும், இலக்கியத்துக்கு நோபல் பரிசை வென்றவருமான டி.எஸ்.எலியட், யேல் கல்லூரிக்கு வந்தார். அவருடைய வருகைக்கான எதிர்பார்ப்பின் உற்சாகத்தை உள்வாங்கிய நான், அதனால் அவரைப் படிப்பதில் கொண்ட பேரார்வம் இன்று வரை தொடர்கிறது. ஆனால் அப்படி ஓர் ஆர்வம் எழுந்ததனால், நான் வெகு சீக்கிரமே அவருடைய துவக்க காலத்துக் கவிதைகளிலும், உரைநடையிலும் தெரிந்த யூத எதிர்ப்பை எதிர் கொள்ள நேர்ந்தது. அவருடைய சூழலில் அன்று இருந்த பழமை வாதப் பார்வையில் இதுதான் சகஜம் என்பது, அந்த எதிர்ப்பு நோக்கின் கோரத்தன்மையைச் சற்றும் மங்க வைக்கவில்லை. 1933 இல் வர்ஜீனியா பல்கலையில் ஒரு கூட்டத்தில் பேசிய எலியட், ‘மக்கள் கூட்டம் ஒரே வகையானதாக இருக்க வேண்டும்’ என்று சொன்னார். அந்த வருடம்தான் ஹிட்லர் பதவிக்கு வந்தார், அதனால் எழுந்த பெரும் திகிலால், பெரும் திரளான அகதிகள் அந்த நாட்டிலிருந்து புகலிடம் தேடி இதர நாடுகளுக்கு ஓடி வரப்போகும் சாத்தியங்கள் மிகவுமே அதிகரித்திருந்தன.  “இரண்டு அல்லது மூன்று பண்பாடுகள் எங்கே ஒரே இடத்தில் இருக்கின்றனவோ, அங்கு அவை தீவிரமாக சுயம் பற்றிய விழிப்புணர்வோடு இருக்கவோ அல்லது இரண்டுமே கலப்படமாகப் போகவோ வாய்ப்பு அதிகம்.” ஒருவேளை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று பண்பாடுகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது என்று அவருக்குத் தோன்றி இருக்கலாம். “முக்கியமானது என்னவென்றால் மத அடிப்படையில் ஒற்றுமை இருக்க வேண்டும்,” அவர் மேலும் பேசித் தன் கருத்தை மிக வெளிப்படையாக முன்வைத்தார்: “இனம் மேலும் மதம் பற்றிய காரணங்கள் இணைந்து, நிறைய எண்ணிக்கையில் சுதந்திரமாகச் சிந்திக்கும் யூதர்கள் இருப்பதை விரும்பத் தகாததாக்குகின்றன.”

எலியட்டின் சக்தி வாய்ந்த கவிதைகள் இந்த விரும்பத் தகாததை ஏற்கனவே வெட்ட வெளிச்சமாக்கி இருந்தன. “பர்பாங்க் வித் அ பைடெக்கர்: ப்ளைஸ்டைன் வித் அ ஸிகார்,” என்னும் கவிதையில் அவர் இப்படிப்பட்ட பிராணிகள் எத்தகைய புராதனக் கசிவிலிருந்து எழுகின்றன என்பதை உருவாக்கிக் காட்டி இருந்தார்:

A lustreless protrusive eye

            Stares from the protozoic stew

At a perspective of Canaletto.

            The smoky candle-end of time

 

Declines. On the Rialto once.

            The rats are underneath the piles.

The Jew is underneath the lot.

“ஆன் த ரியால்டோ ஒன்ஸ்”: எலியட் இந்த யோசனையைப் பூர்த்தி செய்யவில்லை, ஆனால் நான் பூர்த்தி செய்து கொண்டேன். என் புதுமுக வகுப்பு வருடத்தில், நான் ஷேக்ஸ்பியரின் ‘த மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்,” புத்தகத்தில் தொடரும் எதிரொலியான கேள்வியாக, “வாட் நியூஸ் ஆன் த ரியால்டோ?” என்பதைப் படித்தேன். இந்த நாடகத்தை அந்த நேரத்தில் படித்ததும், அதுவும் எலியட்டின் கவிதையோடு சேர்ந்து படித்ததும், எப்படி எல்லாமே மோசம் என்றே [வாழ்வை] விளக்கும் என் பெற்றோரின் இருண்ட மனப்பாங்குள்ள வருணனைகளே மேலும் உறுதி செய்யப்பட்டது போல இருந்தது.

“த மர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ்” நாடகத்தைப் படித்து உணர்கையில், உங்கள் கற்பனையில் ஏதோ விதத்தில் அந்தப் பாத்திரத்துடனும், அந்த நாடகத்தின் கெடுமதியாளனாக வரும் பாத்திரத்துடனும் ஒரே நேரம் பிணைக்கப்பட்டதாக உணர்ந்தால், அது விசித்திரமான அனுபவமாகத்தான் இருக்கும். ஷைலாக்கின் வேலையாள், கோமாளி காவ்ப்போ (Gobbo) கருமியான தன் எஜமானனிடமிருந்து தப்பி ஓடி விடுவதைப் பற்றி யோசிப்பதைப் பார்க்கையில் நாம் நகைக்கிறோம். ஷைலாக்கின் மகள், ஜெஸ்ஸிகா, தன் அப்பாவுடைய இருண்ட வீட்டிலிருந்து தப்பி தன் காதலனிடம் தஞ்சம் புகுந்தவுடன் அறிவிப்பதைக் கேட்டுச் சிரிக்கிறோம், அவள் சொல்கிறாள், “நான் என் கணவரால் காப்பாற்றப்படுவேன். அவர் என்னைக் கிருஸ்தவளாக்கி விட்டார்.” இம்மியும் விட்டுக் கொடுக்காத ஷைலாக், தன் கத்தியைக் கூராக்கத் தன் காலணியின் அடித் தோலில் தீட்டும்போது, நாம் அதிர்ச்சியில் நடுங்குகிறோம். சாதுரியம் நிறைந்த போர்ஷியா, ஷைலாக்கின் கொலைவெறித் திட்டத்தைத் தோற்கடிக்க ஒரு சட்ட நுணுக்கத்தை முன் வைக்கும்போது, அவர்/ள் தீர்க்கவியலாத குழப்பத்தை முடிவுக்குக் கொணர்வதை நாம் கைதட்டி வரவேற்கிறோம். சட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் மதிக்கச் சொல்லி வற்புறுத்தும் யூதர், சட்டத்தின் வார்த்தைகளாலேயே கவிழ்க்கப்படுகிறார்; அதுதான் செயலுக்குத் தகுந்த நீதி என்று அழைக்கப்படுவது. ஆனாலும், நீங்கள் ஏதோ கலக்கமாக உணர்கிறீர்கள்.

நீங்கள் எதைக் கை தட்டி வரவேற்கிறீர்கள், எதைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள்? தன் வாழ்வுக்குச் செல்வம் தேடிக் கொள்வதற்காக யூதப் பெண்ணையும் கூடக் காதலிக்க வரும் ஒரு கிருஸ்தவ ஆணிடம், தன் யூத அப்பாவின் சொத்தைத் திருடிச் சேர்ப்பிக்கும் ஒரு யூத மகளை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு யூதரைப் பார்த்துக் கெக்கலித்து ஏளனம் செய்து அவர் மீது காறித் துப்பும் கிருஸ்தவர்களோடு நீங்களும் சேர்ந்து கொள்கிறீர்களா? அல்லது ஷைலாக்கின் பழிவாங்கும், தீயதை நாடும் கடும் சீற்றத்தை ரகசியமாக ஆதரிக்கிறீர்களா? மோசமான துன்பங்கள் சூழ்ந்த அந்த நீதி மன்றத்து அறையில், போர்ஷியா அந்த யூதரை முழுதும் சுற்றி வளைத்துத் தோற்கடித்த பின், அழித்த பின், தான் முதலில் போட்ட நிபந்தனைகளை அவர் ஏற்கிறாரா, அதன்படி அவர் உடனடியாகக் கிருஸ்தவராகிறாரா என்று கேட்கும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? “நீ இப்போது திருப்தியடைந்தாயா, யூதனே?” கேட்கிற அவள் தார்க்குச்சி போடுகிறாள், “என்ன சொல்லப் போகிறாய்?” அந்த யூதர் “நான் திருப்தி அடைந்தேன்,” என்று சொல்லும்போது உண்மையில் என்ன உணர்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்னுடைய இளநிலை வகுப்புக் காலத்தில், இந்தக் கேள்விகளை நான் கேட்கத் துவங்கியபோது, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மூடரும் வெறியருமான அந்த நிதி உதவி அலுவலகர் போன்றார் நசுக்கி விடக் கூடியவனாக நான் இருக்க மாட்டேன் என்றும், அதே நேரம் என் பெற்றோரைப் போல எப்போதும் முழுத் தற்காப்பு நிலையிலேயே வாழ்வைக் கழிக்க மாட்டேன் எனவும் முடிவு செய்தேன். மாற்றான் எனும் என் அடையாளத்தை நான் மறைக்கவும் மாட்டேன், நான் எவனில்லையோ அவனாக மாறவும் மாட்டேன். எனக்குத் துன்பம் கொடுக்கும் எழுத்துகளிலிருந்து நான் விலக மாட்டேன், அதே போல மகிழ்ச்சி தரும் எழுத்துகளிலிருந்தும் நான் விலக மாட்டேன். சொல்லப்போனால், பண்பாடு எனும் பெரும் குழப்படியான மேற்கொள்ளலின் மொத்தத்தையும், அது என்னுடைய பிறப்புரிமை என்பது போல எடுத்துக் கொண்டு நுணுகி ஆராய்வேன்.

இந்தப் பிறப்புரிமையை, அதில் எதெல்லாம் கடும் நச்சோ அதையும் சேர்த்தே, பூரணமாக, என்னால் முடிகிற மட்டும் புரிந்து கொள்ள நான் உறுதி பூண்டேன். இப்போது நான் ஹார்வர்டில் இங்கிலிஷ் இலக்கியப் பேராசிரியராக இருக்கிறேன். சமீபத்தில் என் மாணவர்களில் சிலர், நம் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் கொடுமையான பகுதிகளைத் தாம் எதிர் கொள்ள நேர்கிறதைப் பற்றித் தீவிரமான கவலை கொள்ளத் துவங்கியிருப்பதை நான் பார்க்கிறேன். என்னுடைய சொந்த வாழ்வில், இப்படி ஒரு கவலைக்கு நான் உட்பட்டால், நான் எந்தப் புத்தகங்களை மிகவும் வசீகரமானவை என்று கருதுகிறேனோ அவற்றில் பலவற்றை மூடி வைக்க நேர்ந்திருக்கும். அல்லது என் பெற்றோர்களிடம் எப்போதும் நிலவும் பொதுவான சோகத்திற்குள் நானும் விழ வேண்டி இருந்திருக்கும். கார் ஜன்னல் வழியே வெளியே தெரியும் அகன்ற புல்வெளிகளைப் பார்த்தால், யூரோப்பிய யூதர்களில் எத்தனை பேர்களை அழிவிலிருந்து காப்பாற்றி இந்த இடங்களிலேயே குடியமர்த்தி இருக்க முடியும் என்று பெருமூச்சு விட்டபடிப் பேசாமல் அவர்களால் இருக்கவே முடிந்ததில்லை. (இன்று நாம் ‘வெடிக்கத் தூண்டுவன’ என பலவற்றைப் பற்றி எச்சரிக்கை செய்வது போல, என் பெற்றோருக்கும் அன்று புல்வெளிகளைப் பற்றி எச்சரிக்கை தரப்பட்டிருக்க வேண்டும்.) என் மனவெளியின் வீச்சை விஸ்திகரிக்க நான் ஆர்வத்தோடு இருந்தேன், தற்காப்புக்கான பதுங்கலில் ஒடுங்க அல்ல. ஏராளமான புத்தகங்கள் கொண்ட யேல் கல்லூரி நூலகத்தின் அலமாரிகளைச் சுற்றிச் சுற்றி உலவினேன், சில நேரம் தலை சுற்றுமளவு கூடக் கிளர்ச்சி எனக்குள் எழுந்திருந்தது. இத்தனைக்கும் எனக்கு உரிமை இருந்தது, அல்லது குறைந்த பட்சம் என்னால் எத்தனையைக் கைப்பற்றி, அசை போட முடியுமோ அத்தனைக்கும் உரிமை இருந்தது. மேலும் இது எல்லாருக்குமே இருந்த உரிமை என்பதும் உண்மையே.

இன்று நான் முழுதும் புரிந்து கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றி எனக்கு அன்றே ஓரளவு சூசகம் இருந்தது. குழப்பம், மகிழ்ச்சி, மேலும் அவதி எல்லாம் கலந்து நான் அனுபவித்தவை எல்லாம் – தற்செயலாக நமக்குக் கிட்டும் குறிப்பிட்ட மதம், குடும்பம், அடையாளம் மேலும் காலகட்டம் ஆகியவற்றால் தகவல் செறிவூட்டப்பட்ட – ஓர் அனுபவ வகையே. மேலும் அது, சிந்திக்கும் மனிதர் எல்லாரும் தம் வாழ்நாளில் பெறும் அனுபவங்களைப் போன்றதே. நமக்கு என்ன வாய்க்கிறதோ, உலகத்திலிருந்து என்ன கிட்டுகிறதோ, எதை நாம் உருவாக்க முடியாதிருக்கையில், அது நம்மை உருவாக்க முயல்கிறதோ, அதெல்லாம் ஒரே நேரமும், உடனடியாகவும், மிக்க எழில் கொண்டதும் அருவருப்பூட்டுவதுமாகவே இருக்கும். அவற்றில் எதெல்லாம் அருமையானதோ அவற்றோடும், எதெல்லாம் குரூரமானதோ அவற்றோடும் நாம் எப்படியோ ஓர் ஏற்பாட்டுக்கு வரவே தேவை இருக்கிறது.

நாம் என்ன வகை ஜீவன்கள் என்பதிலிருந்துதான் இந்த அவசியமான வேலை உருவெடுக்கிறது. இவ்வுலகில் நுழையும்போது நாம் வடிவாக்கப்பட்டிருப்பது ஒரு பகுதிதான்; பல நூறாயிரம் வருடங்களாக உருவாகி வந்திருக்கும் ஒரு பண்பாடு மீதி வடிவமைப்பைச் செய்யும். அந்தப் பண்பாடு தவிர்க்க முடியாதபடி நிறைய நன்மை தருவனவற்றோடு, நச்சுகளையும் சேர்த்தே கொண்டிருக்கும். இதிலிருந்து யாருக்குமே விலக்கு கிடையாது – யூதரோ, முஸ்லிமோ, கிடையாது என்பது இருக்கவே செய்கிறதென்றாலும், காக்னியானாலும் (பிரிட்டனில் உழைப்பாளி வகை மனிதர்), அரசவைப் பிரபுவானாலும், மேஃப்ளவர் கப்பலில் அமெரிக்காவுக்கு வந்தவரின் வாரிசுகளானாலும், ஒருவருடைய முன்னோர்கள் ஆல்காங்க்வின் சமூகத்தாரானாலும், லாப்லாந்தியரானாலும் – யாருக்கும் விதிவிலக்கு இல்லை. நம் மொத்த இனத்துக்கும் பிறப்புரிமையான பண்பாடு என்பது, ஒரு கலவையான ஆசீர்வதிப்புதான். அதுதான் நம்மை மனிதர்களாக்குகிறது, ஆனால் முழுதும் மனிதராக ஆவது என்பது இன்னும் பூர்த்தி அடையாத, கடினமான பணியாகத்தான் இருக்கிறது. மாற்றாரை வெறுத்தல் என்பது நம் சிக்கலான பரம்பரைச் சொத்தில் ஒரு பகுதிதான் – தம் குழுவல்லாதாரை அழிக்க முயலும்படி எது சிம்பன்ஸிக்களை உந்துகிறதோ அதே போன்ற உந்துதலால் நம்மிலும் அந்த வெறுப்பு மேலும் வேகம் பெறுகிறது என்றிருக்கலாம்- ஆனால் இந்த சொத்து நம் விருப்பமோ தேர்வோ ஏதும் இல்லாதபடி, நம்முடைய விதியாக மாறியே ஆக வேண்டும் என்பது இல்லை. நம்முடைய குறுகிய வரலாற்றில் கூட, கடந்த (சுமார்) ஐயாயிரம் ஆண்டுகளில் கூட, இயற்கையும், பண்பாடும் நமக்குப் போட்ட சீட்டுகளை, தனி நபர்களும், சமூகங்களும் இடைவிடாது கலைத்துப் போட்டபடியும், சில நேரம் விட்டெறிந்தும், தாமே உருவாக்கிய புதுச் சீட்டுகளை நுழைத்தும் மாற்றி மாற்றி விளையாடி இருப்பதை நாம் பார்க்க முடியும்.

17ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகரத்தில் ஒரு கிரேக்கக் கவிதை பிரசுரிக்கப்பட்டது. அது ஒரு யூதக் குடும்பத்து வாரிசான பெண் தன் வீட்டுக்குத் தினம் வந்த, கிரேக்க மரபு சர்ச்சைச் சேர்ந்த கிருஸ்தவனும், ரொட்டிகளைத் தயாரிக்கும் தொழில் செய்பவனுமான கட்டழகனான இளைஞனோடு ஓடிப் போன கதையைக் கொண்டாடிய கவிதை. அந்தக் கவிதை அந்தப் பெண் மதம் மாறித் திருமணம் செய்வதில் முடிகிறது. முடியும்போது ரகளையான சத்தம் போட்டு யூத எதிர்ப்பைத் தெரிவிக்கும் கூட்டுப் பாடலோசையுடன், அந்தப் பெண்ணின் தாயை, அவளுடைய கடும் வேதனையை ஏளனம் செய்தபடி முடிகிறது. 17 ஆம் நூற்றாண்டில் கவிஞர் எரெம்யா செலபி கோமுர்ஜியான், ஆட்டமான் பேரரசில் தன் வாழ்நாளைக் கழித்த மெத்தப் படித்த கிருஸ்தவர், இதே கதைக் கருவை எடுத்துக் கொண்டார், ஆர்மினோ- துருக்கிய (துருக்கிய மொழியை ஆர்மீனிய எழுத்துகளில் எழுதுவது) மொழியில் மறு உருவாக்கி, கதையை இஸ்தான்புல் நகரில் நடப்பதாக எழுதினார். அவருடைய படைப்பு வடிவான, ‘யூத மணப்பெண்’ணில், மிருக்கடா எனும் யூதப் பெண், டிமோவைக் காதலிக்கத் துவங்கியதும், தன் யூத உலகத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க விரும்புகிறாள்: “படுக்கை விஷம் போல வாடை அடிக்கிறது, என் சொந்த உலகு சிறையாகத் தெரிகிறது.” செயல் திறமை கொண்ட டிமோ அவர்கள் பயணிக்க ஒரு படகை ஏற்பாடு செய்கிறான், அந்தப் பெண், இருள் கொடுக்கும் மறைவில் நழுவி வெளியேறுகிறாள், ஆணாக வேடம் தரித்து ஒளிவாகிறாள், தன் தங்கச் சுருள் முடியை சேபிள் முடியால் ஆன ஒரு தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு விடுகிறாள். தேடிவரும் யூதக் குழுக்களிடமிருந்து தப்பி, காதலரிருவரும், கிருஸ்தவச் சிற்றரசான வாலாச்சியாவுக்குப் போய்ச் சேர்கிறார்கள், அங்கு சிறப்பான ஓர் ஊர்வலத்தில் அழைத்துப் போகப்பட்டு, மிருக்கடா அங்கிருந்த கதீட்ரலில் நுழைகிறாள், முறைப்படி மதம் மாறுகிறாள். கவிதை:

அவளுக்கு பரிசுத்தமான சோஃபியா என்று பெயர் கொடுத்தார்கள்,

யூத மாய்மாலங்களை விட்டு அவள் விலகினாள்.

இந்த வடிவிலும், முந்தைய கிரேக்க மூலத்தைப் போலவே, புலம்பும் யூதத் தாய் கிருஸ்தவப் பெண்களின் ஒரு குழுவால் ஏளனம் செய்யப்படுகிறாள், அவர்கள் அவளை அவளுடைய இளம் பேரச் சிறுவனைப் பார்க்க அழைக்கிறார்கள்.

உன் பெண் ஏற்கனவே கர்ப்பமானாள்

உனக்கென ஒரு பேரனை அவள் போஷிக்கிறாள்.

…. அந்த பாதி அல்பேனிய இனச் சிறுவன்,

அவன் முகம் யூதச் சாடைதான் கொண்டது.

ஆனால் அவன் கண்களோ கடலின் நீலம்.

சாவாய், பொறாமை பிடித்த சூன்யக்காரியே!

ஆனால் இங்கு ஏதோ விசித்திரமாக மாறி நடக்கிறது. கதையின் கவனம் அந்தத் தாயின் வேதனை மீது நகர்கிறது, அதற்கு குறிப்பிடத் தக்க தீவிரமான வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது:

என் ஒரே குழந்தையைப் பிய்த்து எடுத்துப் போனார்கள், என் நெஞ்சிலிருந்து,

என் ஒரே மகளை, பூவைப் போல் மென்மையான என் பெண்ணை, என் உயிரை.

நான் குழந்தையில்லாத தாயானேன், என்னவொரு பேதை நான்.

… என் வாழ்வே நாசமாக்கப்பட்டது, என் வீடு மட்டுமல்ல.

வானமெல்லாம் என்னை நசுக்குகிறது, சொர்க்கமும், இவ்வுலகும் எனக்கொரு

சிறையாயின, அதே போல என் நாட்களெல்லாமும்.

மற்றவருக்கோ, என் கண்ணீரனைத்தும் பகடியாயின.

இந்த கசப்பு நிறை ஓலத்துடனும், அந்தத் தாயின் சாவுடனும்- இழப்பைச் சந்தித்த அந்தத் தனி மனுஷியுடையதும், அந்த சமூகத்தினுடையதும் ஆன ஆழ்ந்த துன்பத்தை முழு வேகத்தோடு கொடுத்த பின் – அந்தக் கவிதை முடிகிறது.

எரெம்யா மூலக் கதையை இப்படி உருமாற்றியது எங்ஙனம் நேர்ந்தது என்பதை நாம் கண்டறிவது கடினம். தானும், தன் சக கிருஸ்தவர்களும் தம்முடைய சமூகத்திலிருந்து யாரோ ஒருவர் இஸ்லாத்துக்கு மாறினால் என்ன துயரத்தை அனுபவிப்போம் என்று தான் உணர்ந்திருப்பதையே, தன்னுடைய கவிதையின் இறுதிப் பகுதிகளில் அவர் பொருத்தினார் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நான் என்ன ஊகிக்கிறேன் என்றால், எரெம்யா அருமையானதோர் கவிஞர், செடுக்கான இன உறவுகள் கொண்டதோர் உலகில் தன் வாழ்வை அவர் கழித்திருக்கிறார், திறன்மிக்க கவிஞர்கள் அவ்வுலகில் என்ன செய்வார்களோ அதையே அவரும் செய்திருக்கிறார்.

சென்ற வருடம் வெனிஸ் நகரத்து யூதச் சேரி உருவாகி ஐந்நூறு ஆண்டுகள் நிறைவாயின. இந்த ஆண்டு நிறைவை எப்படிக் குறிப்பது என்பது பற்றி வெனிஸ் நகர மாந்தரிடையே முடிவு தெரியா நிலையும், கருத்து மாறுபாடுகளும் நிலவின, அந்த நிலை ஏனெழெந்தது என்று நாம் கவனிக்க முடிந்தது. 1516 க்கு முன் நகரில் தாம் விரும்பிய எந்தப் பகுதியிலும் வாழ முடிந்த யூதர்கள், அந்த வருடத்திலிருந்து சட்டப்படி நகரின் ஏழ்மையான, ஒரு சிறு பகுதியில், முன்பு செப்பு உருக்காலை இருந்த ஒரு இடத்தில் மட்டுமே வசிக்கவும், அங்கே மட்டும் தம் மத வழக்கங்களைப் பயிலவும் பணிக்கப்பட்டனர். (செம்பு உருக்காலை என்பதற்கு வெனிஷியச் சொல் ‘கெட்டோ’ (geto) என்பது.) அங்கு அவர்கள் பொருட்களை அடகுக்கு எடுக்கும், வட்டிக்குக் கடன் கொடுக்கும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகலில் அவர்கள் வெளிப்பட்டு, சில தொழில்களை மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவை, பழைய துணிகளை வாங்கி விற்பது, அச்சுக் கூடங்களில் ஹீப்ரூ புத்தகங்களைத் தயாரிக்கும் வேலை செய்வது, இசையும், நடனமும் கற்பித்தல், மருத்துவம் பார்த்தல் ஆகிய தொழில்கள் அவை. ஆனால் இரவில் அவர்கள் கெட்டோவுக்குத் திரும்ப வேண்டும், அங்கே அவர்கள் பூட்டப்பட்ட வெளிக் கதவுகளுக்குப் பின்னே இருந்தனர், அங்கு காவலர்களாக இருந்தவர்களுக்குச் சம்பளத்தையும் யூதர்களே கொடுக்க வேண்டி இருந்தது. யூத மருத்துவர்கள் இரவில் வெளியே போய் தமது கிருஸ்தவ நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டனர்; மற்றவர் எவரும் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு செயல்முறை கொண்டாடப்படக் கூடியதாக இல்லை. ஆனால் நவீனகாலத்து வரலாற்றில், அன்றைய வெனிஸ் நகர மாந்தருக்கு, தமது கடும் வெறுப்புக்கு இலக்கான, ஆனால் பல விதங்களில் மிகப் பயன்படுபவர்களாக உள்ளவர்களின் அருகாமையில் வாழ்வதற்கு உதவும் ஒருவகை அமைப்பு முறையாக இது இருந்தது. யூதர்கள் பயன்படக் கூடியவர்களாக இருந்தனர் என்பது அப்படி எல்லாராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்தாகவும் அன்று இல்லை. அன்று, இட்டாலியிலும், பிற நாடுகளிலும், நாடோடி மதப்பிரச்சாரகர்கள் கும்பல்களைத் தூண்டி விட்டு, யூதர்களை நாடு கடத்தச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்ய வைத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் இதுவே போர்ச்சுகலிலும், ஸ்பெயினிலும் நடந்தது, சில நூறாண்டுகள் முன்பு இங்கிலாந்திலும் நடந்தது. வெனிஸ் நகரத்தின் அன்றைய மாற்றம் நடந்து ஒரு தலைமுறை கூட இன்னும் தாண்டாத கட்டத்தில், ஜெர்மனியில் மார்டின் லூதர், தன் ப்ரொடஸ்டண்டிய நம்பிக்கையாளர்களை, யூத ஸினகாகுகளை (வணக்கத் தலங்களை), பள்ளிக் கூடங்களை, வீடுகளை எல்லாம் இடிக்கும்படியும், அவர்களின் மதகுருமார்களை (பல மொழிகளில் ராபை/ ஹீப்ரூவில் ’ராவ்’) போதனை செய்வதிலிருந்து தடை செய்யவும், மீறிப் போதித்தால் மரண தண்டனை கொடுக்கவும், யூதப் பிரார்த்தனைப் புத்தகங்களையும், யூதர்களின் மரியாதைக்குரிய (தால்மூட் பற்றிய) நூல்களையும் எரிக்கவும் தூண்டினார். மூன்று வெனிஸ் நகர யூதர்களின் பேரில் சடங்குகளில் பயன்படுத்த ரத்தத்துக்காகக் கிருஸ்தவர்களை அவர்கள் கொன்றதாகப் பழி சாட்டப்பட்டு, முழுதும் கட்டுக்கதையான அந்தக் குற்றத்துக்காகத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்பதை நினைவு வைத்திருந்தவர்கள், கெட்டோ உருவான காலத்தில் இன்னமும் உயிரோடு இருந்தனர். வெனிஸ் நகரத்தில், யூதர்களை இரவு நேரத்தில் பூட்டிய கதவுகளுக்குப் பின் அடைத்து வைப்பது என்பது, பகல் நேரத்தில் அவர்கள் எந்த மனிதர்களோடு வியாபாரம் செய்தார்களோ, அவர்களுடைய காரணங்களே அற்ற பீதி உணர்விலிருந்து ஓரளவு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம். கெட்டோ என்பது ஒரு வித இடை நிலை- சமூக ஏற்பும் இல்லை, சமூகத்திலிருந்து வெளித் தள்ளப்படுதலும் இல்லை. தீவிரமான இரண்டும் கெட்டான் நிலையை, நகர நிலவரையறுப்பு வழியே வெளிப்படுத்திய முறை அது.

தன் ‘கேளிக்கை’ நாடகத்தை எழுதத் துவங்கியபோது, கெட்டோ பற்றிய தகவலை ஷேக்ஸ்பியர் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு; அப்போது கெட்டோ ஆரம்பித்து 80 வருடங்கள் ஆகி இருந்தன, வெனிஸ் நகரத்துக்கு நிறைய இங்கிலிஷ் பயணிகள் வந்து போயிருந்தனர். சொல்லப்போனால், நாடகாசிரியர் தகவல் சேகரிக்க நிறைய முயற்சி மேற்கொண்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. உதாரணமாக, பதினைந்தாம் நூற்றாண்டின் இங்கிலிஷ் நாடகாசிரியர்கள் செய்தது போல, அவர் தன் யூதப் பாத்திரத்தை முகம்மதின் பெயரில் சாட்சிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளச் செய்யவில்லை. யூதர்களின் உணவு குறித்த சமய விதிகள் பன்றி மாமிசம் உண்பதைத் தடை செய்திருந்தன என்பதையும், மேலும் சமய விதிகளைக் கடைப்பிடித்த யூதர்கள், பன்றி மாமிசத்தின் வாடை கூடப் பொறுக்க முடியாததாக இருப்பதாகக் கருதுவார்கள் என்பதையும் அவர் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தார். யூத வட்டிக்கடைக்காரர் ஒருவர், தன் லாப விகிதத்தை நியாயப்படுத்துவதற்கு, பைபிளைப் பயன்படுத்தி, நகைச்சுவை கூடிய மிட்ராஷிய விளக்கங்கள் மூலம் வழி கண்டுபிடிப்பது எப்படி நடக்கும் என்பதை ஷேக்ஸ்பியர் தன் அற்புதமான கற்பனையில் கண்டு பிடித்திருக்கிறார். ரியால்டோ என்பது செய்திகளுக்கும், வியாபாரத்திற்குமான களம் என்பதையும், ஷைலாக் (போன்றவர்கள்) அங்கேதான் தம் வியாபாரத்தைச் செய்வார் என்பதையும் அவர் கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் வெனிஸ் நகரில் யூதருக்கான ஒதுக்கிடமாக கெட்டோ ஒன்று இருப்பதை ஷேக்ஸ்பியர் புரிந்து கொள்ளவில்லை, அல்லது அதைப் பொருட்படுத்துமளவு அதில் ஈடுபாடு கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அந்த நகரைப் பற்றி அவர் எதையெல்லாம் படித்தாரோ, அல்லது கேட்டுத் தெரிந்து கொண்டாரோ, அவற்றிலெல்லாம் யூதர்களும் கிருஸ்தவர்களும் எப்படிப் பிரித்து வைக்கப்பட்டனர் என்பதை விட, அவர்களிடையே எத்தனை பரிமாற்றம் இருந்தது என்பதிலேயே அவருக்குக் கவனம் இருந்தது என்று தோன்றுகிறது. ஷைலாக், கிருஸ்தவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய மாட்டேன் என்றோ, அவர்களுடைய கோஷர் அல்லாத உணவை உண்ண மாட்டேன் என்றோ சொன்னாலும், அவர் எத்தனை விதங்களில் வழக்கமாகக் கிருஸ்தவர்களுடன் உறவாடுகிறார் என்பதையும் பட்டியலிடுகிறார்.  அவரே, “நான் உங்களோடு வாங்குவேன், பேசுவேன், சேர்ந்து நடப்பேன், இத்தியாதி… ,” என்று அறிவிக்கிறார். இங்கிலாந்தில் இருந்த பார்வையாளர்களுக்கு- 1290 ஆம் வருடத்தில், அதன் மொத்த யூத ஜனத்திரளையும் நாடு கடத்தியதோடு, பிறகு யூதர்களைத் திரும்பி வர அனுமதிக்காத நாடான அதில்- இந்த தினசரி உறவாடல்கள் முற்றிலும் நுதுனமானதாகத் தெரிந்திருக்கும்.

“இட்டாலியின் வரலாறு” (The History of Italy, 1549) என்ற, அதைப் பற்றிய முதல் இங்கிலிஷ் புத்தகத்தில், விலியம் தாமஸ், ‘மாற்றாரின் சுதந்திரங்கள்’ என்று அவர் அழைத்த ஒன்றைப் பற்றி, அதுவும் குறிப்பாக வெனிஸ் நகரத்தைப் பற்றி எழுதுகையில், அங்குள்ள வாழ்க்கையைத் தனிப்பட்ட கவனிப்போடு விவரிக்கிறார்:

அங்கு எந்த நபரும் மற்றவரின் செயல்களைக் கண்காணிப்பதில்லை…. மற்றவரின் வாழ்வில் தலையிடுவதில்லை. நீங்கள் போப்பின் வழிப் போகிறவரானால், உங்களுக்கு எந்த விதமான மூட நம்பிக்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இராது. நீங்கள் விவிலிய நூலையே பின்பற்றுபவரானால் உங்களை எந்த ஆளும் நீர் ஏன் (கதோலிக்க) சர்ச்சுக்கு வருவதில்லை என்று கேட்க மாட்டார். நீங்கள் யூதராகவோ, துருக்கியராகவோ, அல்லது சாத்தானை நம்புபவராகவோ இருந்தால் (நீங்கள் உங்கள் கருத்துகளை வெளி உலகில் பரப்பாமல் இருக்கும் வரை) நீங்கள் எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருப்பீர்கள். … பொதுவாக, மற்றெல்லா விஷயங்களிலும், நீங்கள் எந்த மனிதனையும் தனி நபரளவில் புண்படுத்தாமல் இருந்தால், உங்களை யாரும் புண்படுத்த மாட்டார்கள், சந்தேகமின்றி இந்த ஒரு முக்கியக் காரணமே இத்தனை வேற்றார்களை இங்கு ஈர்த்திருக்கிறது.

இதிலிருந்து வேறுபாடாக, புத்தெழுச்சி காலத்து லண்டனுக்கு வந்த ஒரு வெனிஸ் நகரவாசியோ, அன்னியர் மீது இங்கிலாந்தில் இருந்த தீவிர வெறுப்பைப் பார்த்து அயர்ந்தார். “லண்டனில் அயல்நாட்டவர்கள் சிறிதும் விரும்பப்படுவதில்லை. வெறுக்கப்படுகிறார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆகவே விவரம் தெரிந்தவர்கள் இங்கிலிஷ் பாணியிலேயே ஆடை அணிவதில் கவனமாக இருக்கிறார்கள்,” தன் நாட்குறிப்பில் ஒரேஸியோ பிஸினோ என்பவர் எழுதினார், “மேலும் எவ்வளவுக்குப் பேசுவதைத் தவிர்த்து சைகைகள் மூலம் தமக்கு வேண்டுவதைத் தெரிவிக்க முடியுமோ அத்தனைக்குப் பேச்சைத் தவிர்க்கிறார்கள், அதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கிறார்கள்.”

எலிஸபெத்திய கால இங்கிலாந்துவாசிக்கு, வெனிஸ் பெரும் ஆச்சரியத்தை எழுப்பும் வகையான, அசாதாரணமான தாராள நோக்கைக் கொண்டதாகத் தெரிந்தது. அதனால், ஷேக்ஸ்பியரால் ஷைலாக்கின் வீடு தனியாக ஆக்கப்பட்டு, பூட்டிய கதவுகளுக்குப் பின்னே ஒரு கெட்டோவில் இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை; மாறாக, அது ஒரு பொதுத் தெருவில் இருந்தது என்று அவர் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார். யூதரின் மகள் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிப் பூட்டாமல் வைத்தால், அவளால் கிருஸ்தவர்கள் திருவிழாக் கேளிக்கையில் முகமூடிகளை அணிந்து அணியணியாகப் போவதைப் பார்க்கவும், “த ட்ரம்/அண்ட் த வைல் ஸ்க்வீலிங் ஆஃப் த ரை நெக்டு ஃபைஃப்,” ஆகிய ஒலிகளைக் கேட்டிருக்கவும் முடியும். மேலும், கிருஸ்தவர்களோடு இரவு உணவு உண்ண, ஷைலாக் விருப்பமின்றி வெளியே செல்வதாக நாடகம் சித்திரிக்கும்போது, நாடகாசிரியருக்கு, நிஜ வாழ்வில் அந்த யூத வட்டிக்கடைக்காரர் இரவில் வெளியே போவதானால், ஒரு தனிவகையான அனுமதிச் சீட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஒருவேளை தோன்றவே இல்லை போலிருக்கிறது. அத்தகைய அனுமதிச் சீட்டுகள் வெனிஸைப் பற்றிய இங்கிலிஷ் கற்பனையில் இடம் பெற்றிருக்கவில்லை; வெனிஸ் நகரத்தார் அன்னியர்கள் மீது தமக்குள்ள வெறுப்பைக் கையாள, ஏதோ ஒரு ஏற்பாட்டுக்கு வருவதற்காகச் செய்த முயற்சி அந்த அனுமதிச் சீட்டு.

ஷேக்ஸ்பியர் கெட்டோவைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றாலும், அவரும் கூட, தன் காலப் பாரம்பரியமான அன்னியர் மீது வெறுப்பு என்பதோடு, ஏதோ ஒரு ஏற்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். கதைக் கட்டமைப்பு என்ற அளவில், சட்டத்தின் முன்பு சம நிலை என்ற கருத்தை அவர் தொடர முயல்கிறார். வெனிஸ், பரந்த அளவு வியாபாரக் கூட்டாளிகளைக் கொண்ட ஏற்றுமதி/இறக்குமதி/விற்பனைக்கான துறைமுகம் என்பதால், ‘வேற்றார்களின் முழுச் சுதந்திரத்தை’ அவசியமாகக் கொண்டிருந்த நகரம். சொத்துரிமைகளைக் காப்பாற்றவும், நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதன் சட்ட அமைப்பு எல்லா ஒப்பந்தங்களும் கிருஸ்தவர்களையும், மற்றவர்களையும், குடிமக்களையும் பிறரையும், ஒரே மாதிரியே கட்டுப்படுத்தும் என்று நடத்தப்பட வேண்டி இருந்தது. மீறப்பட்ட ஒப்பந்தப் பத்திரம் குறித்த அந்த வழக்கில், நாம் பார்க்கிற மாதிரி, யூதரும் முறைப்படியாக நீதிமன்றத்தின் பார்வையில் முழு உரிமைகளும் கொண்டவராகவே பாவிக்கப்பட வேண்டி இருக்கிறது. அந்தோணியோவுக்கும், ஷைலாக்குக்கும் இடையே உள்ள வழக்கைத் தீர்மானிக்க, நீதிமன்றத்துள் நுழையும் போர்ஷியா, அனுபவசாலியான நீதிபதியாக மாறுவேடம் அணிந்திருக்கிறாள், வழக்கைத் துவங்கும்போது கேட்கிறாள், “இங்கு யார் வியாபாரி? யார் யூதர்?” இந்த வரி அனேக நேரம் சிரிப்பைத் தூண்டினாலும், சட்டத்தின் பார்வையில் இது நீதிமன்றத்தின் நடுநிலை தவறாமையை வலியுறுத்துகிறது.

ஷைலாக் தன் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். “உங்களிடையே பல வாங்கப்பட்ட அடிமைகள் இருக்கிறார்கள்,” என்று வழக்காடும் காட்சியில் அவர் வாதிடுகிறார், [மக்களிடம் இருக்கும் கழுதைகள், கோவேறு கழுதைகள் மேலும் நாய்களோடு ஒப்பிட்டு] நீங்கள் வாங்கியவர்கள் என்பதால், அவற்றை நீங்கள் மிருகங்களைப் போல நடத்துகிறீர்கள். இந்த இடத்தில் அடிமை முறையை ஒழிக்க முற்படும் கொள்கை விளக்கம் போல இது தெரிய ஆரம்பிக்கிறது, ஒரு சிறு கணம் அந்த நிலைக்குப் போகவிருக்கும் பாதை விளிம்பில் தத்தளிக்கிறது:

 “shall I say to you,
Let them be free, marry them to your heirs?
Why sweat they under burdens? let their beds
Be made as soft as yours.”

சரிதான், நவீன காலத்து ரசிகர்கள் இந்த இடத்தில் உரக்கக் கூவி ஆமோதிக்க விரும்புவார்கள்- ‘ஆமாம், அப்படியே நடக்கட்டும்.’ ஆனால் இந்த இடத்தில் கருத்து அடிமை முறையிலிருந்து விடுதலை பெறுவது பற்றி இல்லை.

You will answer
‘The slaves are ours:’ so do I answer you:
The pound of flesh, which I demand of him,
Is dearly bought; ’tis mine and I will have it.

ஷைலாக் வற்புறுத்தும் சட்டக் கொள்கைக்கும், சகிப்புத்தன்மை அல்லது மனித உரிமைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அது சொத்துரிமைக்கான கறாரான தற்காப்பு முயற்சி/ வாதம்.

இந்தக் குறுக்கல் முக்கியமானது. தெளிவாக வரையறுக்கப்பட்ட இந்தச் சிறு வட்டத்தைத் தாண்டி வேறெங்கும், அடிப்படையான பரஸ்பர நம்பிக்கை, இரு புறமும் பகிரப்பட்ட மதிப்பீடுகள், மேலும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்ட சமத்துவம் என்பன ஏதும் அங்கு இல்லை. முறைப்படியான சட்ட அடிப்படையிலான வழக்கு திடீரென்று குடியியலிலிருந்து (சிவில்) குற்றவியலுக்கு (க்ரிமினல்) மாறியதும்- அதாவது, ஒரு யூதர், வெனிஸ் நகரத்துக் கிருஸ்தவர் ஒருவரின் உயிரைப் பறிக்க முயன்றதாக ஆனதும் – நீதிமன்றத்தின் பார்வையில் ஷைலாக் இனிமேல் அந்தோணியோவுக்குச் சமமானவராகப் பார்க்கப்படுவதில்லை. மாறாக, அவர், அந்த நாடகத்தில் அதிகாரத்தில் உள்ள சமூகம் எப்போதும் அவரைப் பார்க்கிற மாதிரியே, சிறிதும் மாற்ற முடியாதபடி ஓர் அன்னியராகவே இருக்கிறார்.

இந்தக் கோணத்தில், ‘த மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகம், பரஸ்பரம் சகிப்புடைமை என்பது இருக்கும் சாத்தியத்தைப் பற்றி நம்பிக்கை இல்லாத செய்தியைத்தான் தருகிறது என்று தோன்றுகிறது. நகரத் தெருக்களிலோ, விதிகளின்படி இயங்கும் அரங்கான குற்றவியல் நீதி மன்றத்திலோ, இரு நம்பிக்கைகளும் சாகும் வரை எதிரிகள். ஷைலாக் ஒப்பந்தத்தை எழுத்து மாற்றாமல் நிறைவேற்ற வற்புறுத்துவதன் மூலம், தன் கிருஸ்தவ எதிரியைச் சட்டத்தின் வழியே அழிக்க முனைகிறார்; போர்ஷியா தனது யூத எதிரியின் முடி பிளக்கும் வாத முறையையே அவருக்கு எதிராகத் திருப்பி, அவரைச் சாதுரியத்தால் தோற்கடித்து, அழிப்பதில் வெற்றி பெறுகிறாள். அவள் அவரைக் கத்தியால் குத்தவில்லை என்பது உண்மை என்பதால், குறிப்பாக, அந்த நாடகத்தில் உள்ள கற்பனை உலகுக்கும் சரி, நாடகங்களின் வகையில் அந்த நாடகத்தின் தன்மையைக் காப்பாற்றுவதற்கும் சரி, அது முக்கியமான விவரம்தான். இன்ப முடிவு கொண்ட நாடகங்களின் எதிர்பார்ப்பு, நேரடி வன்முறையை விட, பணம், பாலுறவுத் தேட்டை, ஆழ்ந்த சட்டப் பிரச்சினையின் அழுத்தம் போன்றன இறுதியில் சமூகத்திலிருந்து விலகி நிற்கும் அன்னியர்களைச் சமூகத்துக்குள் ஈர்க்கப் போதுமானவையாக இருக்கும் என்பதுதான். எல்லாரையும் ஈர்க்காவிடிலும் அவர்களில் கணிசமான எண்ணிக்கை கொண்டவர்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்துக்குள் சேர்த்து விட முடிய வேண்டும். மதமாற்றம் மட்டுமே- ஷைலாக்கின் மகளைப் பொருத்தவரை, செல்வத்தை அடையக் காதலிக்கும் ஒரு கிருஸ்தவனை மணம் புரிவதன் மூலம்; ஷைலாக்குக்கோ மரண தண்டனை எனும் அச்சுறுத்தலைக் கொண்டு மதமாற்றம்- வெறுப்பைக் கரைத்து, நாடகத்தை ரத்தக் களரியிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. “த மர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்” மதியொளி யுகத்துக்குள் அதைக் கொணரும் முயற்சிகளை மறுதலிக்கிறது, பிறகல்லவோ பல நூறாண்டுகளாக நிலவும் இனவெறுப்புடைய, மத வெறுப்புடைய துயரம் நிரம்பிய பெரும் பாரத்தை அது அங்கீகரிக்க? அதன் வடிவமைப்பு முறையில், அது உறுதியாக ஒரு இன்பவியல் நாடகமாக நீடிக்கிறது.

இந்த வடிவமைப்புக்கேற்ற முடிபு- இப்போதோ, நான் புதுமுக மாணவனாகக் கல்லூரியில் இந்நாடகத்தைப் படித்தபோதோ, அல்லது ஒருவேளை ஷேக்ஸ்பியரின் காலத்திலேயே கூட- இந்த நாடகத்தின் தாக்கத்தை வரையறுக்கவில்லை. பதினேழு வயதில் இந்த நாடகத்தைப் படிப்பதில் எனக்கேற்பட்ட சங்கடம் -இந்த நாடகத்தின் இன்பவியல் கதையமைப்பில் நான் மிக்க சந்தோஷம் பெற்றேன் என்ற போதும், அந்த அனுபவத்தின் இடையே, இதன் தீமையை நாடும் பாத்திரத்தோடு சார்ந்தவனாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டதில் எனக்கு ஏற்பட்ட துன்பம்- இறுதியில் என்னுடைய தனிநபர் அடையாளத்தையோ, என் வரலாற்றையோ சார்ந்து எழவில்லை என்பதை, ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் ஒரு வாழ்நாள் பூராவுமான முக்குளிப்புக்குப் பிறகு இப்போது நான் அந்தச் சங்கடமான அனுபவத்தை மேலும் முழுமையாகக் கைப்பற்றுகையில் அறிகிறேன். இந்த நாடகத்தின் சூழ்ச்சித் திறன் மிக்க ஜாலம், ஒவ்வொருவரிடமும் அது எழுப்பும் மனத் துன்பத்தில்தான் உள்ளது. ஷைலாக் ஒழுங்கு முறையாக நடந்து கொண்டிருந்தால், (நாயகனிடமிருந்து) வேறுபாட்டையும், வெறும் நகைச்சுவையையும் கொடுக்கும் பாத்திரமாக இருந்திருப்பார்- டான் ஜான் த பாஸ்டர்ட் எனும் பாத்திரம் “மச் அடூ அபௌட் நத்திங்” நாடகத்தில் இருப்பது போல- அப்போது பார்வையாளரிடம் (வாசகரிடம்) எந்த அசௌகரியமும் எழுந்திராது. ஆனால் ஷேக்ஸ்பியர் அந்த யூத வட்டிக் கடைக்காரரின் பாத்திரத்திற்கு கொடுத்திருக்கும் கவனம் நிறைய என்பதால், அது உள்ளூரார் எதிர் அயலார், நம்மவர் எதிர் மற்றவர் என்ற எல்லைப் பிரிப்புகளை முழுமையாக விட்டு வைப்பதில்லை.

ஷேக்ஸ்பியர் ஷைலாக்கின் ஊசிபோலக் குத்தும் நகைச்சுவையை, அவருடைய தீய எண்ணத்தின் பின்னே நிழலாக இருக்கும் அவருடைய வாழ்வின் வலிகளை, தன் புத்திக் கூர்மை குறித்து அவருக்கு இருக்கும் கர்வத்தை, வீட்டுக்குள் அவர் கடைப்பிடிக்கும் சிக்கனமான பழக்கங்களை, மற்றும் அவரைப் பீடித்திருக்கும் தனிமையை எல்லாம், எப்படியோ நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். இந்தக் குணாம்சங்களை நாமே தெரிந்து கொள்கிறோம், வெறும் கோட்பாடுகளாக அல்ல, ஆனால் நம் சொந்த அனுபவங்களின் கூறுகளாக அறிகிறோம். அனேக மனிதர்கள் இந்த நாடகத்தின் தலைப்பில் உள்ள வியாபாரி என்பது இந்த யூதரைக் குறிக்கிறது என்று நினைக்கிறார்கள் என்றால் அதற்கு நல்ல காரணம் இருக்கிறது.

ஒரே நேரத்தில் தாக்குவதாகவும், தற்காப்பு நோக்குடையதாகவும் இருப்பதாகவும், தண்டிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் இருப்பதாகத் தோன்றிய வெனிஸ் நகரத்து கெட்டோ, குறிப்பிடத்தக்க வகையில் நீடித்து நிலைத்திருந்தது- 1797 இல் செரனிஸ்ஸிமா வீழ்ந்தபின்- நெபோலியனால் அது ஒழிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இருந்த வரையிலும், இட்டாலி, யூரோப்பின் இதர நாடுகள், மேலும் உலகுக்கே அது செங்கல்லும், சாந்தும் பூசி எழுப்பப்பட்ட, சக்திவாய்ந்த ஒரு முன்மாதிரியாக இருந்தது. இது கடைசியில் இடிக்கப்பட்டபோது, இரு தரப்பினரின் கருத்திலும், இதயத்திலும் கற்பனையில் எழுப்பப்பட்டு விட்ட மிக உயரமான சுவர்களாக உருமாறி நீடித்தது. என் பெற்றோர்கள் இந்தச் சுவர்களின் பின்னேதான் தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தனர். ஒன்றை நான் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும், அப்படிச் சுவர்களின் பின்னே பத்திரமாக இருக்கும்போதுதான் அவர்கள் மகிழ்வாகவும் இருந்தார்கள். அதே நேரம் வெனிஸில் இருந்த கெட்டோவைப் பற்றி ஏதும் புரிந்து கொள்ளாத ஷேக்ஸ்பியருக்கு எந்தச் சுவர்களும் ஏற்கக் கூடியனவாக இல்லை, நிஜமானதோ, கற்பனையானதோ. மதம் மற்றும் இனக்குழு விரோதங்கள் நிறைந்த ஒரு நாடகத்தில் கூட அவர் அந்தச் சுவர்களை இடித்துத் தள்ளத்தான் முனைந்திருக்கிறார்.

இப்படி இடிப்பதை, நாம் விரும்பக் கூடிய இனியரான அன்னியரைக் கொண்டு முயலவில்லை- அவருடைய யூதர் ஒரு தீயரான பாத்திரம், சட்ட பூர்வமாகக் கொலை செய்யச் சதி செய்கிற பாத்திரம்- ஆனால் அவர் தன் உலகில் இருக்கும் வேறெந்த மனிதரின் வாழ்வையும் விட, ஷைலாக்குக்கு நாடக பூர்வமாக நிறைய உயிரோட்டத்தையும், எளிமையாகச் சொன்னால் நேரடித்தன்மை கொண்டதும், [நம்மிடம் கவனிப்பை] கட்டாயப்படுத்துவதுமான ஒரு வாழ்வைக் கொடுப்பதன் மூலம் சாதித்திருக்கிறார். நாடக வரிகள் பல நூறாண்டுகளுக்கு அப்பாலும் ரீங்கரிக்கின்றன:

“You call me misbeliever, cut-throat dog,
And spit upon my Jewish gaberdine,
And all for use of that which is mine own.

…..

The patch is kind enough, but a huge feeder,

Snail-slow in profit, and he sleeps by day

More than the wildcat.

….

Hath
not a Jew eyes? hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions?

…..

 If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh?

….

I would my daughter
were dead at my foot, and the jewels in her ear!

…..

 a diamond gone,
cost me two thousand ducats in Frankfort! The curse
never fell upon our nation till now; I never felt it
till now:

….

Some men there are love not a gaping pig,
Some that are mad if they behold a cat,
And others when the bagpipe sings i’th’ nose
Cannot contain their urine.”

இங்கு மேடையில் விரியும் வாழ்வில் உள்ளடங்கியவற்றில் சில, கதையமைப்பால் கொணரப்படாதவையும் கூடத்தான். தன் மகள், நீலப்பச்சைக் கல் மோதிரத்தை ஒரு குரங்கைப் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாகக் கொடுத்து விட்டாள் என்றறியும் ஷைலாக்கின் வேதனை- இறந்து விட்ட அவருடைய மனைவி, லியா, அவருக்குப் பரிசாகக் கொடுத்த அந்த மோதிரத்தை அம்மகள் அவரிடமிருந்து திருடி இருக்கிறாள் – நாம் கவனிக்கத் தவற முடியாததாக உள்ளது.  “நீ என்னைச் சித்திரவதை செய்கிறாய்,” என்று தனக்கு அந்தச் செய்தியைக் கொண்டு வரும் நண்பரிடம் அவர் சொல்கிறார். “It was my torquoise; I had it of Leah when I was a bachelor. I would not have given it for a wilderness of monkeys.” இப்படிச் சில காட்சிகள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை அகற்றப் போதுமானவையா? நிச்சயம் இல்லை. ஆனால் அவை உள்ளிருந்து நம்மைத் தொந்தரவு செய்யத் துவங்குகின்றன.  இப்போது கூட, நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாடகம் நம்முள் தூண்டும் கலக்க உணர்வு, அழகான ஆனால் துன்பமூட்டும் ஓர் அனுபவமாக இருக்கிறது.

ஷேக்ஸ்பியரே கூட, இதை ஒரு கலக்கமான அனுபவமாக உணர்ந்திருக்கலாம். ஜியொவானி ஃபியாரெண்டினோவின் “இல் பெகாரொனே” (பெரிய ஆடு) என்ற குறு நாவலிலிருந்து கதை மூலத்தைக் கடன் பெற்று, நேரானதோர் இன்பவியல் நாடகத்தை எழுதத் துவங்கியவர், வரவர, வெறுக்கப்படும் மாற்றானின் ஆன்மாவுக்குள் இழுக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறார். ஷைலாக் கிட்டத்தட்ட அந்த நாடகத்தின் இன்பவியல் அமைப்பையே நொறுக்குமளவு உருவாகி விட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர் அந்த நாடகத்தின் இயல்பைக் காப்பாற்றுவதற்கென, அந்த வட்டிக்கடைக்காரரை, நாடகத்தின் நான்காவது அங்கத்தின் இறுதியோடு காணாமல் அடிக்க வேண்டியதாகிறது.

அவருடைய படைப்புகளில், இப்படி நிஜ வாழ்வின் மிகை வெளிப்படுவது, இதென்னவோ ஒரே தடவை அல்ல. “ரோமியோ அண்ட் ஜூலியட்” நாடகத்தில் ஒரு பாத்திரமான மெர்க்யூஷியோ அந்த நாடகத்தைக் கொல்லுமுன், தான் மெர்க்யூஷியோவின் பாத்திரத்தைக் கொல்ல வேண்டி வந்ததாக, அந்த நாடகாசிரியர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இதே போன்ற நிலை, ஜாக் கேட், ஏரன் த மூர், மால்வாலியோ, மற்றும் காலிபான் போன்ற பாத்திரங்களிற்கும் ஏற்பட்டிருக்கிறது. இப்படி அவர் படைத்த ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் ஆழமாகப் புகும் தன்மை, சில நேரம் கதைக்கருவுக்குத் தேவை என்பதை விடக் கூடுதலாக ஆழமாகப் புகுவது என்பது, அவருடைய முத்திரையாகக் கூட ஆகி விட்டிருக்கிறது.  “த காமெடி ஆஃப் எர்ரர்ஸ்” நாடகத்தில் அலட்சியம் செய்யப்பட்ட மனைவியாக வரும் அட்ரியானா; “அ மிட்ஸம்மர் நைட்ஸ் ட்ரீம்” நாடகத்தில் பாட்டம் த வீவர்; “ஹாம்லெட்” நாடகத்தில் ராஸன்க்ராண்ட்ஸும் கில்டன்ஸ்டெர்னும்; “கிங் லியர்” நாடகத்தில் கார்ன்வாலுடைய  தைரியசாலியான வேலையாள்; மேலும் இதர பாத்திரங்கள் இப்படிப்பட்டவை. இது, அவருடைய நாடகங்களில் தோன்றும் சில பாத்திரங்களுக்கு நாடகத்துக்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருப்பது போலத் தோன்றும் ஒரு விசித்திரமான பிரமைக்குக் காரணமாக இருக்கலாம். அவருடைய பல நாடகங்களில் காணப்படும் ஒழுக்கம் மற்றும் அழகியல் செறிவுக்கு இந்த உணர்வு மேலும் செழுமை அளிக்கிறது. உதாரணமாக இதைக் கருதுங்கள், பல நூறாண்டுகளாக, “ஜூலியஸ் ஸீஸர்” நாடகத்தில் வரும் ப்ரூடஸ் பாத்திரம் வில்லனா அல்லது நாயகனா என்று சர்ச்சித்து வருகிறார்கள். சென்ற மாதம், நியூயார்க் நகரின் மையத்தில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தின் சர்ச்சைக்குரிய ஒரு வடிவத்தை அரங்கேற்றியவர் ஆஸ்கர் யூஸ்டிஸ். அந்த நாடகத்தில் ட்ரம்பைப் போன்ற ஒரு எதேச்சாதிகாரியின் பாத்திரத்தைப் பார்த்து பார்வையாளர்கள் கிளர்ச்சி ஒலியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால் நேர்மையுணர்வால் உந்தப்பட்டு, தன்னை இறுக்கிக் கொள்வதன் விளைவாக ஏற்படும் படுகொலைகளாலும், அந்தப் பாத்திரத்துக்கு நிகழும் பயங்கர விளைவுகளாலும் அவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். என்ன நேர்கிறதென்றால், ப்ரூடஸ், ஜூலியஸ் ஸீஸரை ஒரு மனிதனாகவே பார்க்காமல், கருத்தியலால் மட்டுமே பார்த்து, அவரை “பாம்பின் முட்டை” என்றும், ஆகவே அவரை “ஓட்டுக்குள்ளேயே கொல்ல வேண்டும்” என்றும் முடிவு கட்டுவதால் அத்தனை பயங்கரங்களும் விளைகின்றன.

வாழ்நாள் பூராவும் ஷேக்ஸ்பியரை நான் படித்து வந்திருக்கிறேன் என்றாலும், அவர் எப்படி வாழ்வே போன்ற, இத்தகைய அபாரமான நாடகப் பாத்திரங்களை உருவாக்குகிறார் என்பதை எல்லாத் தடவைகளும் கச்சிதமாக என்னால் விளக்க முடியாது. சில நேரங்களில், அவர் தன் பாத்திரங்களைத் தன் கரங்களின் மீது அட்டைகளைப் போல ஒட்டிக் கொள்ள விட்டுவிட்டு, அவை தன் வாழ்வின் குருதியை உறிஞ்ச அனுமதித்திருப்பார் போலத் தோன்றுகிறது. ஷைலாக்கின் விஷயத்தில், ஷேக்ஸ்பியர் தன் வாழ்வில் எப்போதாவது ஒரு யூத வட்டிக்கடைக்காரரைச் சந்தித்திருப்பாரா என்பது மிகவும் ஐயத்துக்குரியது, ஆனால் தன் அப்பா நடத்திய வட்டி வியாபாரத்தின் அனுபவத்திலிருந்து நிறையப் பெற்றிருப்பார் என்று நாம் கருதலாம், அல்லது இன்னும் குறிப்பாகச் சொன்னால், தன்னுடைய வட்டி வியாபாரத்திலிருந்தே அனுபவத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம். இன்னும் ஊகிப்பதானால், அவருடைய குடும்பத்திலேயே இன்னமும் முழு ஏற்பைப் பெறாத, சமீபத்திய, துன்பம் மிக்க, மதமாற்ற அனுபவம் இருந்திருக்கலாம். கதோலிக்கத்திலிருந்து ப்ரொடஸ்டண்டியத்துக்கு மாறிய அந்த அனுபவம், அவருடைய பாத்திரத்தின் அவதியை அவருக்கு ஆழமாக உணர்த்தியிருக்கலாம்: “Art thou contented, Jew? What dost thou say?” “I am content.”

இப்படி வாழ்வளிப்பது என்பது மனிதக் கற்பனையின் அவசியமான குணங்களில் ஒன்று. நம்மில் மிகச் சிலருக்கே பெரும் மேதைத் தன்மை என்னும் வளம் கிட்டுகிறது என்பதால், நான் சுட்டுகிற குணம் என்பது நம்மில் பெரும்பாலாருக்கு ஓரளவாவது கிட்டுகிறது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. பற்பல கருத்தியல்களும் பிறருடைய அனுபவங்களுக்குள் நாம் நுழைவதை ஏதேதோ தந்திரங்களைச் செய்து தடுக்க முயல்கின்றன. இந்தத் தந்திரங்களோடு ஒத்துழைத்து அப்படித் தடைகளை உருவாக்கும் கலைப் படைப்புகளும் இருக்கின்றன. ஆனால் தாராள குணமுடைய கலைப்படைப்புகள், இந்தப் பகிரும் நாட்டத்தைத் தூண்டி, ஒழுங்கமைக்க உதவி செய்து, அதன் சக்தியை மேம்படுத்துகின்றன. ஷேக்ஸ்பியரின் படைப்புகள் இத்தகைய மேம்படுத்தும் குணத்துக்கு வாழும் உதாரணங்கள் என்று சொல்லக் காரணம், நாம் எதிர்கொள்ளும் எதார்த்த வாழ்வின் இருதலைக் கொள்ளிப் பிரச்சினைகளை இந்தப் படைப்புகள் மிகத் திறமையோடு ஊடுருவிக் காட்டுகின்றன என்றாலும், அவற்றுக்கு நடைமுறை சாத்தியமுள்ள விடைகளைக் கொடுக்கின்றன என்பதால் அல்ல, மாறாக இப்படைப்புகள், மனித உயிர்கள் என்ன வகை ஆபத்தைச் சந்திக்கவிருக்கின்றன என்ற விழிப்புணர்வை நமக்குள் தூண்டுகின்றன என்பதால்தான்.

ஷேக்ஸ்பியர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் பாரம்பரியச் சொத்து, நம்மில் அனேகர் குடியிருக்கும் மனவுலக கெட்டோக்களிருந்து நாம் தப்பித்து வெளியேற ஒரு வழியைக் காட்டுகிறது. அவருடைய உலகிலேயே கூட, அவரது கற்பனை அவரை ஆச்சரியமூட்டும் திசைகளில் இழுத்துச் சென்றிருப்பதாக நமக்குப் புலனாகிறது. கலகக் கருத்துகளை துப்புக் கண்டறிய மதுக்கடைகளிலும், தங்கும் விடுதிகளிலும் உளவாளிகள் உலவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு நாடகாசிரியர் பொது மேடைகளில், மனநோய் பீடித்த ஒரு வக்கிரமான மனிதன் பொய்களை அள்ளி வீசி அவற்றின் மூலம் அதிகாரத்தின் உச்சத்துக்கு எழுவதை நாடகமாக நடத்திக் காட்டியிருக்கிறார். தன் நாடகத்தில், பார்வையாளர்கள் முன்னே ஒரு பாத்திரம் நின்று இப்படி அறிவிக்கும்படி- “அதிகாரத்திலிருக்கும் ஒரு நாய் கூட அடிபணிவைப் பெறும்.” (“a dog’s obeyed in office.”) – செய்த நாடகாசிரியர் இவர். தேசப் பாதுகாப்புச் சட்டம் என்பதன் பெயரில் ஆட்சி செய்யும் ஒரு நபர், ஒரு கைதியைப் படுமோசமாகக் காயப்படுத்துவதை நிறுத்துவதற்காக, ஒரு வேலையாள் அந்த ஆட்சியாளரைத் தாக்கிக் காயப்படுத்துவதைச் சித்திரிக்க முடிந்த நாடகாசிரியர் இவர். இறுதியாக, பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கும் நாடகத்தின் பிரதி ஒன்றில், சர். தாமஸ் மோரைப் பற்றிய எலிஸபெத் அரசி காலத்து நாடகத்தில் பாதுகாக்கப்பட்டதால், இன்று நாம் காணக் கூடிய விமர்சன பூர்வமான வரிகளை எழுதியவரும் இவரே என்று நாம் உறுதியாகக் கருதலாம். அந்த வரிகள் தற்காலத்தின் மிக அவசரமான சங்கடங்களில் முக்கியமான ஒன்றைப் பற்றி மனதைத் தொடும்படிப் பேசுகின்றன. ஷேக்ஸ்பியர், தாமஸ் மோர் ஆத்திரம் கொண்ட கும்பல் ஒன்றை எதிர் கொள்கிறதைச் சித்திரிக்கிறார். கும்பல் “வேற்றார்களை” – அன்னியநாட்டினரை- இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தும்படி ஆர்ப்பரிக்கிறது. “அவர்களைக் கடத்தி விட்டோமென்றே வைத்துக் கொள்வோம்” மோர் கும்பலிடம் சொல்கிறார்:

Imagine that you see the wretched strangers,
Their babies at their backs and their poor luggage,
Plodding to the ports and coasts for transportation,
And that you sit as kings in your desires,
Authority quite silent by your brawl,
And you in ruff of your opinions clothed;
What had you got? I’ll tell you: you had taught
How insolence and strong hand should prevail,
How order should be quelled; and by this pattern
Not one of you should live an aged man,
For other ruffians, as their fancies wrought,
With self same hand, self reasons, and self right,
Would shark on you, and men like ravenous fishes
Would feed on one another….”   [i]


இத்தகைய மொழி, ஒரு நல்ல முறையில் ஒருங்குபட்ட, பாதுகாப்பான, மனிதாபிமானம் மிக்க அகதிகள் நலனுக்கான பன்னாட்டுத் திட்டத்துக்குப் பதிலாக நிற்கக் கூடியதல்ல; அதற்கு நமக்குத் தேவை, சட்ட அமைப்பில் தேர்ச்சி உள்ள வழக்கறிஞர்கள், சாதுரியமிக்க பன்னாட்டுத் தூதுவர்கள், மேலும் விவேகமுள்ள, நன்மை நாடும் குணமுள்ள அரசியல் தலைவர்கள். ஆனாலும், இந்த வகை படைப்புகள் செய்வது என்னவென்றால், அவை நம் பார்வைக்கு முன்னால், “நொந்து அழிந்திருக்கும் அந்நியர்கள், அவர்கள் முதுகில் இருக்கும் குழந்தைகளும் அவர்களின் வறிய சுமைகளும், துறைமுகங்களுக்கும், கடல்கரைகளுக்கும் தளர்ச்சியோடு போகும்” காட்சியை நிறுத்துகின்றன. நாடகத்தின் நேரத்தில் மிக நீண்ட கணங்களுக்கு, உள்ளூர் வாசிகளுக்கும், அன்னியர்களுக்கும் இடையே உள்ள தூரம் அழிகிறது, சுவர்கள் ஆடி வீழ்கின்றன; கெட்டோ தரை மட்டமாக்கப்படுகிறது.

—————————————–

தமிழாக்கம்: மைத்ரேயன்

கட்டுரையின் இங்கிலிஷ் மூலம், நியுயார்க்கர் பத்திரிகையில் ஜூலை 10-17, ஆம் தேதி இதழில் 2017 ஆம் ஆண்டு வெளியானது.  ‘If You Prick Us’ by Stephen Greenblatt. (pgs34-39)

[i]  சமீபத்திய அகதிகள் பிரச்சினையில் உலகரங்கில் அகதிகளுக்கான புகலிட உரிமைகளை முன்னிறுத்த இந்த நாடக வரிகள் இப்போது பொது அரங்கில் எடுத்துரைக்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு வலைப் பக்கம் இங்கே:

https://qz.com/786163/the-banned-400-year-old-shakespearean-speech-being-used-for-refugee-rights-today/

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.