கடை நொடியில் ஈடேற்றம்

நூல் அறிமுகம் : இவானா இலியிச்சின் மரணம் / லெவ் டால்ஸ்டொய்

கட்டுரை ஆசிரியர் : Jordan Michael Smith (Wall Street Journal)

ஓப்ரா வின்ஃப்ரீ , 2004-ல், தன் புக் கிளப் தேர்வாக டால்ஸ்டொயின் “ஆன்னா கரேனினா”-வை அறிவித்ததும் , இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புதினம், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் எதிர்பாராத விற்பனை சாதனையை எட்டியது. 850-க்கும் மேல் பக்கங்களைக் கொண்ட இந்த நாவல்  சாதாரண வாசகர்களின் சிம்ம சொப்பனம். இதை விலை கொடுத்து வாங்கிய ஓப்ராவின் சீடர்களில்  பலர்  இன்னும் படித்து முடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். ஓப்ரா, இந்த நாவலைத் தவிர்த்து, 75 பக்கங்களைக்  கொண்ட The Death of Ivan Ilyich  -ஐ (குறுநாவல்)  தேர்வு செய்திருந்தால் பெருவாரியான வாசகர்கள் பலனடைந்திருப்பார்கள்.  டால்ஸ்டொயின் மாபெரும் படைப்புகளான ஆன்னா கரேனினா , வார் அண்ட் பீஸ் ஆகியனவற்றைப்  போல்  அவரது  த டெத் ஆஃப் இவானா இலியிச் பிரபல்யம் அடையவில்லை என்பது வெட்கப்படவேண்டிய விஷயம். ஏனெனில், இந்த படைப்பு அவரது பெயர்பெற்ற நாவல்களுக்கு நிகரானது. இதுவரை எழுதப்பட்டவற்றுள் மிகச் சிறந்த குறுநாவல் எனக்கருதலாம் .

எளிதில் புரிந்து கொள்ள முடிகிற  சாதாரண கதை: மரணப் படுக்கையில் இருப்பவன், தான் விரும்பத்தகாத விதமாக வாழ்ந்து வாழ்நாட்களை  வீண் விரயம் செய்து விட்டதாக உணருகிறான்.  மரணம் தழுவும் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து பேரச்சம் கொள்கிறான். இந்தக் கச்சிதமான கதைத் திட்டத்தின் மூலம், டால்ஸ்டொய், வாசகரின்  முழு கவனமும், இலியிச்சின்  வாழ்க்கை, இறுதி நோய் மற்றும் ஆன்ம நெருக்கடி(spiritual crisis ) மீது குவிய வைக்கிறார். கதைச் சொல்லாடல் பெரும்பாலும் உளச்சோர்வு தருவதாகவும்,  மரண நிழல் படிந்ததாகவும் இருந்தாலும், நாவலின் இறுதி வரிகள், இலியிச்  ஓரளவுக்கு மனதளவில் பாப விமோச்சனம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்வையும், சாவையும், தெளிவாகவும்  அழுத்தமாகவும் படம் பிடித்துக் காட்டுவதன் மூலம், டால்ஸ்டொய், தன் வாசகர்கள் பரந்த நோக்கம் கொண்ட  வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற  கருத்தை முன் வைக்கிறார்.

“இந்த கதையைப் படிக்கின்ற ஒவ்வொரு முறையும் , என் உலகம் , ஒரு வலிய, மைக்ரொஸ்கோப்பால் பரிசீலிக்கப் படுவதை உணர்கிறேன்” என்கிறார் Zade Smith  என்னும் நாவலாசிரியர். கதையில்  இலியிச் ஒரு நீதி அரசர். (ஜேம்ஸ் பாண்ட்  படங்களில் ரஷ்ய நாட்டவர்  வில்லனாகச் சித்தரிக்கப் படுவது போல, டால்ஸ்டொயின் புதினத்தில் முக்கிய பாத்திரமாக நீதியரசர் இருக்கிறார் என்றால் அது  டால்ஸ்டாய் தன் ஆன்மிக மதிப்பீட்டின் படி, வில்லனுக்கு சமமான இடத்தை நீதியரசருக்கு வழங்கியிருப்பதாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டுரையாளர் கருத்து தெரிவிக்கிறார்) அவருடைய மரணச் சேதி அலுவலக சகாக்களை  வந்தடைந்ததுதான் கதையின் தொடக்க நிகழ்வு. அந்த நிமிடமே, சகாக்கள் ஒவ்வொருவரும் இலியிச்சின்  மரணத்தால்  தங்களுக்கு உத்தியோக ரீதியில் என்னென்ன  அனுகூலங்கள் கிடைக்கும் என்று மனதுக்குள் அலசுகிறார்கள். ”இறந்தது இலியிச் மட்டுமே; தாமல்ல” என்று நன்றியுடன் உணர்ந்து நிறைவு கொள்கிறார்கள். இறந்த  நீதி அரசரின் அருமை நண்பர் சவ அடக்க நிகழ்ச்சிக்கு விரைகிறார். அங்கே நண்பரின் விதவையிடம் துக்கம் விசாரிக்கும் போது, இழப்பு தமக்கே அதிகம் என்பது போல் பாவனை செய்வதில் இருவரும் போட்டியிடுகின்றனர். அங்கே காணக் கிடைத்த  சுயநலமும்  வஞ்சகமும் கலந்த போலி அனுதாபம் அருவருக்கத்  தக்கதாக இருக்கிறதாயினும் வழக்கத்துக்கு மாறாக எளிதில் அதன் இருப்பை உணர முடிகிறது.

“இவானா  இலியிச்சின் வாழ்க்கை மிக எளியது; மிகச் சாதாரணமானது ; அதனாலேயே மிகக் கொடுமையானது”- கதையின்  இரண்டாம் பகுதியின் தொடக்க வாக்கியம் இது. அபாரமான சொற்சிக்கனத்தோடும், திடுக்கிடச் செய்யும் வார்த்தைப் பிரயோகங்களுடனும் பாத்திரங்களை உருவாக்குவதில் வல்லவரான டால்ஸ்டாயின் ஒப்பற்ற எழுத்தாற்றல் முழுமையாக வெளிவரும் அரிய சில வரிகளில் இதுவும் ஒன்று. இலியிச் பிரியமானவர்; திறமையானவர். பிரியமாகவும்  திறமையாகவும் வாழ்க்கை நடத்தினார். நோயில் விழுவதற்கு முந்தைய 45 ஆண்டுகள் மேட்டுக்குடியினரின் திருப்தியே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதினார். அவ்வாறே வாழ்ந்து சமூகத்தின் மேலடுக்கை அடைந்தார். சுகபோக வாழ்வும் சமூக அந்தஸ்தும் பெறுவதற்காக, இலியிச் அவற்றிற்கு மாற்றாக  சான்றாண்மை தவறினார்;  உறவுகளை ஒதுக்கினார்.

இந்தப் பரிமாற்றம் அவர் மனதில் உண்டாக்கிய ஆன்ம வறட்சி, அவரை ‘மனிதன் இறக்கக் கூடியவன்’ என்ற கருதுகோளை மனதளவில் ஏற்கவும் ,  மரணபயத்தை சமாளிக்கவும் வலுவில்லாதவராக ஆக்கி இருந்தது. பின்பொருநாள் ஒரு  தீராத நோய் அவரைப் படுக்கையில் வீழ்த்தியபோது , தான் இறக்கக் கூடியவன் என்பதை ஏற்க மறுத்தார். மரணம் சாமான்யர்களுக்கு மட்டுமே விதிக்கப் பட்டிருக்கிற தண்டனை என்று  அவரும்  தன் அலுவலக சகாக்களைப் போலவே கருதியிருந்தார்.  இப்போது அது தவிர்க்க முடியாதது என்று அறிந்து கடும் அவதிக்குள்ளானார் . ‘நான் ஆசாபாசங்களும் சிந்தனைகளையும் கொண்டவன். சாதாரணன் அல்ல . எல்லோரும் இறக்கக் கூடியவரே என்ற கருத்து எனக்குப் பொருந்தாது. ஏற்க முடியாதது. அது கொடிது,’ என்று புலம்பினார்.

பொதுவாக மரணத்தைப் பற்றிய விவாதங்கள் மனச்சோர்வை உண்டாக்குவதால் வாசகர்கள் அவற்றைப் படிக்க விரும்புவதில்லை. எனினும்  நிஜ வாழ்க்கையைப்  பிரதிபலிக்கும் பாத்திரங்களையும்  நிகழ்வுகளையும் உள்ளடக்கி அற்புதமான கதை எழுதும் தன் ஒப்பற்ற திறமையால் , டால்ஸ்டொய் , எல்லா  வாசகர்களையும் ஈர்த்து ஆழ்ந்த ஆன்ம பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்.

இலியிச்சின் கதையின் சாரம், வாசகரின்  வாழ்வோடு பொருந்திப் போவதால் அவரை  அதைரியப்படுத்துகிறது. மரணம் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளைத் தவிர்த்து நுனிப்புல் மேயும் குறைபாடு பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய நீதியரசர்களுக்கே உரித்தானதல்ல. மரணம் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகள் தூண்டிவிடும் நிஜ அச்சம் அனைவர்க்கும் இயல்பானது .அது மற்ற நூல்களில்  பதிவாகி இருப்பதை  விடத் தெளிவாக இங்கே பதிவாகியுள்ளது.

மனிதருக்கு வரி விதிப்பு போலவே மரணமும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் மனநிறைவளிக்காத வாழ்க்கையைத் தேடிக்கொள்வது  தவிர்க்க முடியாததல்ல. இலியிச் வாழ்ந்திருந்த குறுகிய காலம், அற்பத் தேடல்களில் வீணடிக்கப் பட்டதாலேயே, அவரது இறுதி நாட்கள் வெகுவாகச் சீர்குலைந்தன. அவருடைய மேலோட்டமான வாழ்க்கையும், மரணப் படுக்கையில் அவருக்கு பணிவிடை செய்த கெராஸிம் என்னும் வீட்டு வேலையாளின் எளிய  வாழ்க்கையும்  எவ்வளவு வேறுபட்டிருந்தது என்று கதை சுட்டிக் காட்டுகிறது. கெராஸிம், இலியிச்சுக்கு  முற்றிலும் வேறுபட்டவன்.  பணிவானவன்; ஏழை; உண்மையானவன்;  தன்னலமில்லாதவன். பரம ஏழையாயினும், அவனிடம் ஆன்மிகச்  செல்வம் அபரிமிதமாக இருந்தது. கெராஸிம்மின் உடனிருப்பில் ஆறுதல் பெறும் இலியிச், இறுதி மூச்சு வரை அவனிடம் வாழ்வாங்கு  வாழும் நெறிமுறைகளைக் கற்றறிந்து நிம்மதியாக உயிர் பிரிகிறார் .

கதைச் சொல்லாடலில் காணப்படும் நேர்மையும், ஆழ்ந்த சிந்தனையும், எளிமையும், ‘இலியிச்சின் மரணம்’ ஒரு கிறிஸ்தவ நீதிக் கதை போன்ற  தோற்றம்  கொள்ள வைக்கிறது. ஒருவேளை, குறுநாவலில் கூர்மையான உளவியல் சிந்தனைகளும், கதை நிகழக்கூடிய சாத்தியங்களும் போதிய அளவில் வெளிப்படாதிருந்தால், அது நீதி போதனை நூலாகக் கருதப்பட்டிருக்கும்; தீவிர இலக்கிய ரசிகர்களுக்கு திருப்தி அளித்திருக்காது போயிருக்கும். இந்தக் கால கட்டத்தில், டால்ஸ்டாய் பெரும்பாலும் நீதிக் கதைகளும் கட்டுரைகளுமே எழுதினார். 1869-ல் ‘போரும் சமாதானமும்’, 1877-ல்  ‘ஆன்னா கரேனினா’ என்ற பெருநாவல்களை எழுதிய டால்ஸ்டாய், அதன் பின்னர் ஏசுநாதரின் போதனைகளைப் பரப்பவே தாம் இனி எழுதப்போவதாகவும், பிற அற்ப இலக்கியங்கள்  படைக்கப் போவதில்லை என்றும் முடிவுசெய்திருந்தார்.  1886-ன்  ‘த டெத் ஆஃப் இவானா இலியிச்’ ஒரு விதிவிலக்கு . அதையும்   மதம் சார்ந்த நீதி நூலாக வகைப்படுத்த முடியும். ஏனெனில் , அவர் எழுதிய ‘How Much Land Does a Man Need ‘-(1886) போன்ற நீதிக் கதைகளை விட அதிகப் பயன் தரும் கருத்துகளை இக்கதை வழங்கி வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்ள உதவுகிறது.

குறுநாவலில் இலியிச்சின் வாழ்க்கை  நாடக பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் ஆரம்ப வரிகளிலேயே வாசகர்   இலியிச்சின் மரணம் பற்றி அறிந்திருந்தாலும், வாழ்க்கை ஓட்டத்தின் விவரிப்பும் கதையின் முடிவும் திகைப்பூட்டுவதாகவே இருக்கிறது. இலியிச்சின் மரணம் ஒரு மகத்தான படைப்பாக விளங்க அதுவே காரணம். ஏனெனில் இலியிச்சின் மீட்சி நம்முடையதாகக் கூட இருக்கலாம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.