திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு

 

 

 

தமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான். ஆதியில் தமிழக அரசுகளைப் பற்றி பொதுவாகச் சொல்லப்படுகிற செய்திகள் பலவற்றை மாற்றியெழுதி, வரலாற்றில் திருப்பமாக விளங்கியவை அவற்றில் சில. திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் அத்தகைய ஒரு வரலாற்று ஆவணம்தான். பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும்   விரிவாகக் குறித்திருக்கும். இந்தச் செப்பேடுகளும் இம்முறைக்கு விதிவிலக்கல்ல.   ராஜேந்திர சோழனின் ஆறாவது ஆட்சிக்காலத்தில் இந்தச் செப்பேடுகள் வெளியிடப்பட்ட போதிலும், இதன் தமிழ்ப்பகுதியும் சமஸ்கிருதப் பகுதியும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (திருத்தணிக்கு அருகே உள்ள) திருவாலங்காட்டு ஆலயத்திற்கு பழையனூர் கிராமத்தை ராஜேந்திர சோழன் தானம் செய்ததை சாசனம் செய்ததை இச்செப்பேடுகள் ஆவணப்படுத்துகின்றன.

சமஸ்கிருதப் பகுதி

ஶ்ரீகண்டனின் (சிவனின்) அணிகலனாக விளங்கும் நாகராஜனிடம் இருந்த ரத்தினத்தில் தன் பிம்பத்தைப் பார்த்த பவானிதேவி, மற்றொரு பெண் பெருமானிடத்தில் உள்ளாள் என்று ஊடல் கொண்டபோது, அந்த ஊடலைத் தணிக்க அவள் பாதம் தொட்ட சிவன் உங்களுக்கு தொடர்ச்சியான வளத்தைத் தரட்டும் என்ற ரசமான ஸ்லோகத்தோடு ஆரம்பிக்கும் சம்ஸ்கிருதப் பகுதியில் 137 ஸ்லோகங்கள் உள்ளன. அடுத்ததாக, சூரியனின் தொடங்கி சோழ அரசர்களின் வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. மனு, இக்ஷ்வாகு, புரஞ்செயன், ஆர்யமன் என்று பல புராண கால அரசர்களின் தீரத்தை வரிசையாகச் சொல்லிக்கொண்டுவருகிறது இந்தப் பகுதி. விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டும் காலயவனனைக் கொன்ற முசுகுந்தச் சக்கரவர்த்தியும் இவ்வரிசையில் வருகிறார். அதன்பின் புறாவுக்காக தன் சதையைத் தியாகம் செய்த சிபி குறிப்பிடப்படுகிறார். சிபிக்கு அடுத்து மருத்தன் என்ற அரசனும் அதன்பின் துஷ்யந்தன் என்ற அரசனும் ஆண்டனர். துஷ்யந்தனின் மகன் பரதன். இந்தப் பரதனுக்குப் பிறந்தவன் சோழ ராஜன். இவனுடைய பெயரை வைத்துத்தான், சோழ வம்சம் என்று இந்தப் பரம்பரை குறிப்பிடப்படுகிறது. சோழனின் மகன் ராஜகேசரி, அவனுடைய மகன் பரகேசரி. இவ்விருவருடைய பெயர்களைத்தான் தங்கள் விருதுப்பெயர்களாக மாறி மாறி பிற்காலச் சோழர்கள் சூட்டிக்கொண்டனர். அதன்பின் வருகின்ற அரசர்களின் பெயர்களில் பகீரதன், சுரகுரு, வசு, விஸ்வஜித் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் விஸ்வஜித் துவாபர யுகத்தின் இறுதியில் ஆண்டதாகக் கூறப்படுகிறது.

சோழவம்சத்தில் கலியுகத்தின் முதல் அரசனாக பெருநற்கிள்ளி குறிப்பிடப்படுகின்றான். அடுத்து காஞ்சி மாநகரைப் பொன்னால் அலங்கரித்ததாகவும் காவிரியின் இரு கரைகளிலும் அரண்களை அமைத்ததாகவுமான பெருமைகளுக்குடைய, யானைகளுக்கும் கலியுகத்திற்கும் காலன் போன்ற கலிகாலன் என்ற அரசனின் பெயர் வருகிறது. கரிகாலச்சோழனைத்தான் இச்செப்பேடுகள் இவ்வாறு குறித்திருக்கவேண்டும். அதன்பின், லோகலோக மலை என்ற இமயம் வரை தனது ஆட்சியை நீட்டித்த, நீல அல்லி மலர்களைப் போன்ற நீலக்கண்களை உடைய கோச்செங்கணானைப் பற்றி இந்தப் பகுதி விளக்குகிறது. சிலந்தியாகப் பிறந்த அவன்அவன், சம்புவின் அருளினால் அரச பதவி அடைந்ததைப் பற்றியும் இங்கே கூறப்பட்டுள்ளது. அதன்பின் பிற்காலச் சோழர் வரலாறு தொடங்குகிறது. “இந்த வம்சத்தில் தோன்றிய விஜயாலயன், குபேரனுடைய அலகாபுரியைப் போன்ற தஞ்சாபுரியை அழகான கண்களையுடைய தன் மனைவியைப் பிடிப்பதுபோல இலகுவாகப் பிடித்தான், அங்கே தேவர்களும் அசுரர்களும் வணங்கும் நிசும்பசூதனியின் ஆலயத்தை அமைத்தான்” என்கிறது இச்செப்பேடு.

அதன்பின் வந்த அரசர்களின் பெருமைகளை பின்வருமாறு விவரிக்கிறது இந்தப் பகுதி “அவனுடைய மகனான ஆதித்த சோழன் பிரகஸ்பதியைப் போன்று அறிவு படைத்தவன், பெரும்படையைத் தன்னிடத்திலே கொண்டிருந்தவனும் பெயருக்கு ஏற்ப வெல்ல முடியாதவனாக விளங்கிய அபராஜித பல்லவனைப் போரில் வென்று தான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டவன். அவனை அடுத்து புராந்தகனின் (சிவனின்) தாமரைப் பாதங்களைத் தேனீயைப் போன்று வலம் வரும் பராந்தகன் அரசாண்டான். அவனுடைய நெருப்பு போன்ற வீரத்தைத் தாங்காமல் பாண்டியன் நீரில் (இலங்கையில்) சரணடைந்தான். பராந்தகனின் கோபத்தீ இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அவனால் கொல்லப்பட்ட சிங்கள அரசனின் மனைவிகளின் கண்ணீரைப் பார்த்தபிறகு அது சற்றி அடங்கிற்று. அவனுடைய மகனான ராஜாதித்தன் போரில் கிருஷ்ணராஜாவைத் தோற்கடித்து சொர்க்கம் புகுந்தான்.” இங்கே ராஷ்ட்ரகூட அரசனான கிருஷ்ணனிடம் ராஜாதிராஜன் தோற்று போரில் கொல்லப்பட்டதை சுற்றிவளைத்துச் சொல்கிறது இந்தச் செப்பேடு. அதற்குப் பிறகு ஆட்சி செய்த கண்டாரத்தித்தர், அரிந்தமன் ஆகிய அரசர்களைப் பற்றிக் கூறிவிட்டு, அரிந்தமனின் மகனான பராந்தகனின் ஆட்சியைப் பற்றி எடுத்துரைக்கிறது. சுந்தர சோழன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகனின் ஆட்சியில் ‘ஹா’ என்ற சப்தம் மக்கள் ‘ஹர’ என்று கூறும்போது மட்டுமே கேட்டது என்று சமத்காரமாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு மகனாகப் பிறந்த அருள்மொழிவர்மனின் கைகளில் சங்கம், சக்கரம் ஆகிய சின்னங்கள் இருந்ததைப் பற்றியும் இச்செப்பேடுதான் குறிப்பிடுகிறது. அவன் பிறந்த போது நாக குலத்துப் பெண்கள், தங்கள் கணவரான ஆதிசேஷனின் பாரத்தை இவன் குறைத்துவிடுவான் என்று எண்ணி மகிழ்ச்சியில் நாட்டியமாடினராம். சுந்தர சோழனுக்குப் பின் அவனுடைய மகனான ஆதித்தன் அரசாண்டான் என்று இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. வரலாற்றுச் செய்திகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது இது சற்று முரணாகத் தோன்றலாம். சுந்தர சோழர் இருக்கும்போதே கொலைசெய்யப்பட்டு மாண்டவன் என்றுதான் நாம் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம். ஆனால் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கும் செய்தி வேறு. பாண்டியனின் தலைகொண்ட பிறகு, விண்ணுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் இவ்வுலகை விட்டு மறைந்தான் என்று மட்டும் குறிப்பிடுகிறது இந்தச் செப்பேடு.

இதற்குபிறகு முக்கியமான பகுதி ஒன்று வருகிறது. கலியுகத்தின் இருளை அழிக்கத் தகுந்தவன் என்று அருள்மொழிவர்மனை அரசாள மக்கள் வேண்டியபோதும், ராஜ தர்மத்தை மதித்து அரசனாக விரும்பிய தனது சிற்றப்பனை அரியணையில் அருள்மொழி வர்மன் அமர்த்தினான் என்ற செய்தியை இது கூறுகிறது. இதிலிருந்து, கண்டாரத்தனின் மகனான மதுராந்தகன் அரச பதவியை விரும்பினான் என்பதும், முறையை மதித்து அவனுக்கு பதவியை அருள்மொழி வர்மன் விட்டுக்கொடுத்ததும் இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சொந்தத் தந்தையையே பதவிக்காகக் கொலை செய்யும் அரசர்கள் இருந்த காலத்தில் அருள்மொழி வர்மனின் இச்செயல் பெரும் ஆச்சரியத்திற்குரியது. அதனாலோ என்னவோ, மதுராந்தகன் அடுத்த பட்டத்திற்குரியவனாக அருள்மொழிவர்மனையே நியமித்ததாக இச்செப்பேடு சொல்கிறது. அதன் படி மதுராந்தகனுக்குப் பின் ராஜராஜன் என்ற பெயருடன் அரியணையில் அமர்ந்த அருள்வர்மனின் வீரச்செயல்களை ஒவ்வொன்றாகக் கூறுகிறது அடுத்து வரும் பகுதிகள். ஆனால், ராஜராஜனுடைய மெய்க்கீர்த்திக்கு மாறாக, ‘காந்தாளூர்ச்சாலை’ கலமறுத்த செய்தி முதலில் குறிப்பிடப்பெறாமல், அவன் பாண்டியன் அமரபுஜங்கனை வென்ற செய்தியே முதலில் காணப்படுகிறது. அடுத்து இலங்கை, சாளுக்கிய, ஆந்திர, கேரள வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன. அதன்பின் அவனுக்கு மன்மதனைப் போன்ற அழகுடைய மதுராந்தகன் பிறந்த செய்தி கூறப்படுகிறது. இந்த மதுராந்தகனே ராஜேந்திரன் என்ற பெயருடன் அரியணை ஏறியவன். ராஜேந்திரனின் பெருமைகளையும் வீரத்தையும் பலவாறு எடுத்துச்சொல்கிறது இந்தச் செப்பேடு. பாண்டிய, கேரள வெற்றிகளுடன் துவங்கி சாளுக்கிய அரசன் ஜெயசிம்மனுடன் ராஜேந்திரன் நடத்திய போர்களை விரிவாகத் தருகிறது இந்தச் செப்பேடு. அதன்பின், தனது தளபதிகள் மூலம் கங்கைக் படையெடுப்பை ராஜேந்திரன் மேற்கொண்ட செய்திகளைத் தெரிவிக்கிறது. வழியில் வெல்லப்பட்ட நாடுகளின் விவரத்தை அவன் மெய்க்கீர்த்தியைப் போலல்லாமல் ஓரளவுதான் கோடிகாட்டுக்கிறது இந்தச் செப்பேடு. கங்கைப் படையை வரவேற்க ராஜேந்திரன் கோதாவரி நதிதீரத்தை அடைந்ததாகவும் இது கூறுகிறது. கங்கை நதியைக் கொண்டு வந்து சோழகங்கம் என்ற ஏரியை வெட்டியதாக ராஜேந்திரனைச் சிறப்பித்துவிட்டு சாசன விவரங்களுக்கு வருகின்றது இந்தப் பகுதி.

“இத்தனை பெருமைகளை உடைய மதுராந்தகன், ஶ்ரீ முடிகொண்டசோழபுரம் என்ற ஊரில் தங்கியிருந்த போது தனது ஆறாம் ஆட்சியாண்டில் ராமனுடைய மகனான ஜனநாதன் என்பவனை அழைத்து வளமிக்க பழையனுர் என்ற கிராமத்தை சிவனுக்குத் தேவதானமாகக் கொடுக்க ஆணையிட்டான். ஜனநாதன் மதுராந்தகனின் அமைச்சன். இந்திரனுக்குப் பிரகஸ்பதி போல மதுராந்தகனுக்கு ஜனநாதன்” என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதி, இந்த அரசாணையை எழுதியது உத்தமச்சோழ தமிழ் ஆதரையன், நிலத்தை தானமாக அளிப்பதற்கான விண்ணப்பத்தை அளித்தவன் திருக்காளத்திப் பிச்சை, சங்கரனின் மகனான நாராயணன் இந்தச் செப்பேட்டை எழுதியவன் என்ற விவரங்களோடு நிறைவடைகிறது.

தமிழ்ப்பகுதி

தானமாக அளிக்கப்பட்ட நிலப்பகுதி பற்றிய விவரங்களையும் அதனை நிர்வகிக்கும் முறைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்குகிறது தமிழ்ப்பகுதி. கோ நேரின்மை கொண்டான் என்று தன்னை சிறப்பித்துக்கொள்ளும் ராஜேந்திரன், தன்னுடைய ஆணை மாவட்டத்தலைவர்களான நாட்டார், பிரம்மதேயங்களுடைய தலைவர்கள், ஊர்களில் (கிராமங்களில்) உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள், கோவில் நிலங்களைப் பாதுகாப்போர், சமண, பௌத்தப் பள்ளிகளுக்கான சந்தங்களை வசூல் செய்வோர் ஆகியவர்களை கட்டுப்படுத்தும் என்று கூறுகிறார். பழையனூர் கிராமத்தைப் பிரித்து திருவாலங்காட்டுக்கோவிலுக்கு தேவதானமாக அளிக்கவும் அந்தக் கிராமம் இனிமேல் வரி ஏதும் செலுத்தவேண்டியதில்லை என்றும் அந்த ஆணை தெரிவிக்கிறது. இங்கே பார்க்கவேண்டிய குறிப்பிடத்தக்க செய்தி, இந்தப் பழையனூர் கிராமம் அதுவரை பிரம்ம தேயமாக, பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட கிராமமாக இருந்ததுதான். இப்போது அதை தேவதானமாக மாற்றி, அந்தக் கிராமம் பிராமணர்களுக்குச் சொந்தமானதில்லை என்றும் இனிமேல் அது வேளாண் வகை, அதாவது உழுபவர்களுக்குச் சொந்தமானது என்றும் இந்தச் செப்பேட்டின் ஆணை தெரிவிக்கிறது. ஆக, சோழர்கள் ஆட்சியில் உழுபவர்கள் நிலம் மட்டுமே பிராமணர்களுக்குத் தரப்பட்டது என்ற பிரச்சாரத்தை பொய்யாக்கி, இதுபோன்ற பல நிலப் பரிமாற்றங்கள் சமூகத்தில் பல பிரிவினரிடையே நடந்தது வழக்கமானதுதான் என்பதைத் தெளிவாக்குகிறது.

அடுத்து, இந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள், ஓலை நாயகங்கள், சாட்சிக் கையொப்பமிட்டவர்கள் ஆகியோரின் பெயர்ப்பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆணை அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்த அதிகாரிகளில் விவரங்களும் காணப்படுகின்றன. எனவே, பத்திரப்பதிவு போன்ற நிலப்பதிவு முறை அக்காலத்தில் இருந்தமையை இச்செப்பேட்டின்மூலம் அறிகிறோம். கிட்டத்தட்ட 169 ஏக்கர் நிலம் இப்படித் தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி வாய்மொழி உத்தரவுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒரு பெண் யானையைக் கூட்டிச் சென்று நிலங்களை அளந்து காண்பிக்கவும் அதற்கான அதிகாரிகள் யார் யார் என்றும் அரசனுடைய ஆணை தெரிவிக்கின்றது. அதன்படி உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான் என்ற பெருமான் அம்பலக்குடி, அரஏறு பட்டன், சேந்தன் பிரான் பட்டன் ஆகியோர் இதற்கான அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அதன்பின் இந்தச் செப்பேடுகள், பெண் யானை நடந்து போன பாதையை மிக விரிவாக, குழப்பத்திற்கிடமில்லாமல் குறிப்பிடுகிறது. உதாரணமாக “நரைப்பாடி கிராமத்தின் மேற்கு எல்லையில் தொடர்ந்து நடந்தால் பழையனூர் நாட்டின் மங்கலம் கிராமத்தின் வடகிழக்கு எல்லை வருகிறது. இங்கு ஒரு பள்ளமும் உகா மரமும் உள்ளது. மேலும் நடந்தால் மங்கலத்தின் வடக்கு எல்லை வருகிறது. இங்கு குருந்துரை என்ற பெயருடைய குளம் உள்ளது. இங்கிருந்துதான் பழையனூர், பெருமூர், மங்கலம் கிராமங்களின் நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. பிறகு மேற்குப் பக்கமாக நடந்தால், இந்தக் குளத்தின் கிழக்குப் பக்கம் வரும். இங்கு ஒரு கரையான் புற்று உள்ளது. இதை விட்டுவிட்டு வலப்பக்கமாகத் திரும்பி, தெற்குப்பக்கம் நடந்தால் குளத்தின் கிழக்குக் கரையில் கடம்பமரம் உள்ளது. பின்பு வடகிழக்குத் திசையில் மாமரமும், கரையான் புற்றும் வரும். வலதுபுறம் திரும்பினால் பிரைமரம் நிற்கும் இடம் வரை சென்று குளத்தின் கிழக்குக் கரையை அடையலாம். பின் தெற்குப்பக்கம் சென்று உகாமரத்தை அடையலாம். இந்த இடம் மங்கலம் கிராமத்தின் தெற்கு எல்லை…..” இப்படி எல்லா இடங்களும் தெளிவாக விவரணை செய்யப்பட்டுள்ளன. எல்லைகளை அடையாளம் காண்பிக்க தற்காலத்தில் வேலிகள் பயன்படுவதுபோல, அப்போது கற்களும் கள்ளிச்செடிகளும் பயன்பட்டதாக செப்பேடு தெரிவிக்கிறது.

இப்படி எல்லைகள் வகுக்கப்பட்ட பின், அதற்குள் அடங்கியுள்ள நஞ்சை, புஞ்சை, வீடுகள், தோட்டங்கள், தரிசு நிலங்கள், கால்வாய்கள், ஆறுகள், தேனீக்கள் அடையும் பாறைகள், மேல்நோக்கி வளரும் மரங்கள், கீழ்நோக்கித் தோண்டிய கிணறுகள், ஆமைகள் ஊர்ந்துசெல்லும் நிலம், பல்லிகள் வாழும் நிலங்கள் ஆகிய அனைத்தும் தேவதானமாகக் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. தவிர எந்தெந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “நாடாட்சி வரி, ஊராட்சி வரி, கூடைகளுக்கு விதிக்கப்படும் நாழிவரி, திருமண வரி, குயவர்கள் மீதான வரி, ஆட்டு இடையர்கள் மீதான வரி, பொற்கொல்லர்கள் மீதான வரி, விற்படு, ஊடுபோக்கு, தண்ணீர் வரி, பரிசல் வரி, மற்றும் வருங்காலத்தில் அரசனால் விதிக்கப்படும் எந்த வரியும் விதிக்கப்படவேண்டியதில்லை”   இப்படிப்பட்ட பல வரிகள் இருந்தன என்பதும் இதன்மூலம் தெரியவருகிறது. தவிர பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில “ஏற்கனவே இக்கிராமத்திற்கு வரும் கால்வாய்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும், தண்ணீரை வீணடிக்கக்கூடாது, தண்ணீர் வரத்துக்குறைவான காலத்தில் தண்ணீர் முறை வைத்துப் பாய்ச்சவேண்டும், ஈழவர்கள் தென்னை, பனை மரங்களில் கள் இறக்கக்கூடாது, பெரிய மாடிவீடுகளை சுட்ட ஓட்டினால் கட்டிக்கொள்ளலாம்’ . அதற்குப் பின் பெண் யானை சுற்றிவந்து அடையாளம் காட்டியபோது நாங்கள் உடனிருந்தோம் என்று பல்வேறு அதிகாரிகளும், கிராம சபையினரும், பொதுமக்களும் கையொப்பமிட்டுள்ளனர். நிறைவாக, செப்பேட்டைப் பொறித்த காஞ்சியைச் சேர்ந்த நான்கு ஆசாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் அவர்களின் நகைச்சுவை உணர்ச்சியும் வெளிப்படுகிறது. உதாரணமாக ‘கிருஷ்ணனின் மகனும் நற்குணமுடையவனுமான ஆசாரி ஆரவமூர்த்தன். இவன் கிருஷ்ணனைப் போல லீலைகள் புரியாதவன்” என்று காணப்படுகிறது.

இப்படிச் சோழர்களின் வரலாற்றைத் தெளிவாக அடையாளம் காட்டியும், பல புதிய செய்திகளைத் தந்தும், நிலங்கள் அளவு முறை, ஆவணப்படுத்தும் முறைகள், வரிகள், முக்கிய அதிகாரிகளின் பதவிகள், ஆணைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புடையோர், ஆணையைப் பொறித்தவர்கள் என்று பலரையும் பற்றிய தகவல்களை அளித்தும் தமிழக வரலாற்றின் ஒரு பகுதியில் ஒளிவீசச்செய்திருக்கும் இந்தச் செப்பேடுகள் சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

உசாத்துணை

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/no_205_aditya_ii_karikala.html

One Reply to “திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு”

  1. மிக அருமையான தகவல்கள்.ஆதித்ய கரிகாலன் மறைவு பற்றிய சரியான தகவல்.சோழர்கால வாழ்வு முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் ஆர்வமஊட்டும் நடையில் எழுதப்பட்டுள்ளது.இத்தகைய கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடுங்கள்.

    வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.