சவூதி அரேபியாவின் 2017ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, டிசம்பர் 2016 ல் அரசு அறிவித்தது. 890 பில்லியன் சவூதி ரியாலுக்கு செலவுக் கணக்குக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் துறை சார்ந்த வரவு(480 பில்லியன் சவூதி ரியால்கள்), கச்சா எண்ணெய்யில்லாத மற்ற துறைகள் மூலம் கிடைக்கப்பெறும் வரவு (280 பில்லியன் சவூதி ரியால்கள்) என வரவுக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 198 பில்லியன் சவூதி ரியால்கள் (7.7% of 2017 பட்ஜெட்) . செலவுக்கணக்கை ஒன்பது துறைகளாகப் பிரித்து அதன் பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கல்விக்கு 200 பில்லியன் சவூதி ரியால்களும், சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு 120 பில்லியன் சவூதி ரியால்களும், ராணுவத்திற்கு 190 பில்லியன் சவூதி ரியால்களும், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்திற்கு 52 பில்லியன் சவூதி ரியால்களும், பொதுத்துறை நிர்வாகத்திற்கு 26 பில்லியன் சவூதி ரியால்களும் மற்றவை இதர பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 36% கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கியுள்ளமைக்கு பாராட்டுகள். ராணுவத்திற்கு 21.3 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 2016 ஐக் காட்டிலும் 46% அதிக வருவாயை கச்சா எண்ணை மூலமாகக் கிடைக்கும் என அரசு பட்ஜெட் தெரிவிக்கிறது. ஆனால் இதில் சறுக்கினால் மிகப் பெரிய பாதிப்புகளை தொழில் நடத்துபவர்கள், வெளிநாட்டினர் பணியிழப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் என பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
சவூதி அராம்கோ, SABIC மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் துறை சார்ந்தவை. கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்ட MAA’DEN Phospate, MAA’DEN Gold, MAA’DEN Alumina போன்ற வெகு சில நிறுவனங்களே கச்சா எண்ணெய் சாராத தொழில் நிறுவனங்களாக விளங்குகின்றன.
வெளிநாட்டினருக்கு 2017 ல் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை என்றும் 2018 ஆம் ஆண்டில்தான் வெளிநாட்டினரைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களிடமிருந்து மாதந்தோறும் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்றும், வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாதந்தோறும் அரசுக்கு கட்டணம் செலுத்தும் முறையும் ஜூலை 2017 லிருந்து அறிமுகப்படுத்தப்படலாம். 2020 வரை தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உறுதியையும் சவூதிய அரசு அறிவித்துள்ளது.
சவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.
நான் இங்கு நிறுவனம் வைத்துள்ளவன் என்ற முறையில் அரசுக்கு நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கப் பெரும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்பாக இங்கு நிறுவனங்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, அரசுக்கு ஆண்டுக் கணக்காக எவ்வளவு தொகை செலுத்தப்படுகிறது என்பதைப் பார்த்து விடலாம். சவூதி அரேபியாவில் வெளி நாட்டு மக்கள் (வாழ் இந்தியர்) இருவகையில் நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். ஒன்று ஸாகியா. ஸாகியா என்றால் சவூதி நிறுவனமாக இல்லாமல் நேரடியாக இந்தியாவிலுள்ள உங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே தொடங்கலாம். அதற்கு உங்கள் நிறுவனம் ஏதேனும் ஒரு நாட்டில் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் வணிகம் செய்திருக்க வேண்டும். கூடுதலாக இறுதி ஐந்தாண்டுகளுக்கான வரவு செலவுக் கணக்கினை சவூதி அரசுக்குச் சமர்பிக்க வேண்டும். இம்முறையில் தொடங்கப்படும் நிறுவனங்களைத் தான் ஸாகியா என்கிறோம். மற்றது வெளி நாட்டு வாழ் இந்தியர் ஒரு சவுதியைப் பிடித்து அவரின் பெயரில் நிறுவனத்தைப் பதிவு செய்வது. இதற்கு சவூதி நிறுவனம் (local company) என்கிறோம். இரண்டிற்குமான வேறுபாடு என்ன?
ஸாகியாவாக நிறுவப்பட்ட நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 20% வரி செலுத்த வேண்டும். உள்ளூர் நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 2% செலுத்தினால் போதும். ஸாகியாவின் கீழ் பதிவு செய்வதில் உள்ள லாபம், நிறுவனம் உங்கள் கட்டுப்பாட்டில் என்றும் இருக்கும். ஆண்டு வரி மட்டும் அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதனால் உள்ளூரில் உள்ள நிறுவனங்களோடு போட்டி போடுவது என்பது மிகக் கடினமான விஷயம். பெரும்பாலும் ஸாகியாவாக பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் எவையென்றால் பொருள் உற்பத்தி (Own Product Manufacturing Companies) செய்யும் நிறுவனங்களே அவ்வாறு பதிவு செய்கின்றன. உதாரணமாக ABB, SIEMENS, SCHNEIDER போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம். அவர்களைப் பொருத்தமட்டில் சவுதியில் assembly மட்டும் வைத்துக் கொள்வார்கள். இதனால் உள்ளூர் போட்டியையும் சமாளிக்க முடியும். உள்நாட்டில் அவ்வாறான தனி தொழில் நுட்பம் இல்லாததால் இது போன்ற பெரிய நிறுவனங்கள் துணிந்து ஸாகியாவாக இயங்குகின்றன.
உள்ளூர் நிறுவனமாகத் தான் என்னைப் போன்றோர் பதிவு செய்துள்ளோம். நான் மட்டுமல்ல L&T, ETA மற்றும் கணக்கிலடங்கா நிறுவனங்கள் பலவும் அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெரும்பாலும் Contractor தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனமாகப் பதிவு செய்தால் மட்டுமே போட்டியைச் சமாளிக்க முடியும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில் வெளிநாட்டு வாழ் இந்தியரால் எங்கும் இது என்னுடைய நிறுவனம் என்று உரிமை கொண்டாட முடியாது. இரண்டாவதாக நாம் பிடிக்கும் சவூதி பார்ட்னர் நல்லவராக இருக்க வேண்டும். அவருடன் நேரடிப் பங்கு அல்லது குறிப்பிட்ட % ஒதுக்கிக் கொடுத்துவிட்டு முதலீடு உட்பட அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்தும் நிறுவனங்களும் உண்டு. உள்ளூர் நிறுவனமாகப் பதிவு செய்ய சவூதி Sponsor அவசியம் தேவைப்படும் வகையிலேயே சட்டமுள்ளது. பின்னதில் உள்ள லாபம், ஆண்டு லாபத்தில் 2% மட்டுமே செலுத்துவதால் பலன் அதிகம்.
மேற்கூறியவாறு பதிவு செய்துவிட்டால் தொழில் செய்ய தேவையான விசாவை நீங்கள் கோரிக்கையாக வைத்தால் உடனே கிடைத்து விடாது. நீங்கள் அரசிடமிருந்து பெறும் காண்ட்ராக்ட்க்கு மட்டுமே விசா பெற முடியும். விசா பெறுவதற்கு ஒரு தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. அவ்வாறானால் தனியார் கட்டடங்கள், மால்கள், தனியார் தொழிற்சாலைகளுக்கான ப்ராஜெக்ட்டிற்கு என்றெல்லாம் விண்ணப்பம் செய்தால் விசா கிடைக்காது. ஏன்? ஏனெனில் அரசு வெளிநாட்டு விசாக்களைக் கட்டுக்குள் வைக்க தனக்கான ப்ராஜெக்ட்டில் மட்டுமே விசாவை வழங்குகிறது. இன்னொரு முறையிலும் விசாவை சட்ட ரீதியாக அரசின் அனுமதியோடு மாற்றிக் கொள்ளலாம். மெயின் காண்ட்ராக்டர் அரசின் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் பட்சத்தில் அவரே தனது sub contractor க்கு சில விசாக்களை அரசின் அனுமதியோடு ஒதுக்கலாம். அதற்கும் ஒரு தொகையுள்ளது. இவையெல்லாம் நேரடியான விதிகள்.
இவ்வாறாக விசா கிடைத்தவர்களுக்கு Residence Permit (தங்குவதற்கான குடியுரிமை, நாட்டு பிரஜையாக அல்ல ) க்கான அடையாள அட்டையாக Iqama என்ற ஒன்று வழங்கப்படுகிறது. அதற்கு ஆண்டு தோறும் ஒரு தொகையை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். கூடுதலாக labor card பெற வேண்டும். அதற்கும் ஒரு தொகையை அரசுக்கு நிறுவனம் செலுத்த வேண்டும். மேலும் நம்மூரில் ESI என்று சொல்வது போல மாதந்தோறும் அரசிற்கு Insurance என்பது GOSI payment என்ற பெயரில் தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 2% மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
மேற்கூறிய விஷயத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே அரசிற்கு மாத வருமானமாக நிறுவனங்கள் செலுத்தும் தொகை பற்றிய புரிதல் கிடைக்கும். Skilled Profession ல் உள்ளவர்கள் உதாரணமாக பொறியாளர்கள், டாக்டர்கள் போன்ற துறையில் உள்ளவர்கள் இங்கு அதற்கென ஒரு membership அமைப்பினை அரசு உருவாக்கியுள்ளது. அங்கும் நீங்கள் கட்டாயமாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் எதிர்காலமும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நிலையும்
இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் மட்டுமே தொழிலாளர்களாகப் பணி புரிகிறார்கள். கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் அரசுகள் வெளி நாட்டு நிறுவனங்கள் தொடங்கி உள்ளூர் நிறுவனங்கள் வரை அனைவரையும் தொழில் தொடங்க ஊக்குவிக்கிறது. இந்தியாவிலுள்ள சேவை வரி உற்பத்தி வரி அதிகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்திய அரசிற்கும் சவூதி அரசிற்குமான வருவாய் விஷயத்தில் இந்திய அரசைக் காட்டிலும் சவூதி அரசு அதிக வருமானத்தைப் பெறுகிறது. எப்படி? நிறுவனங்களின் ஆண்டு லாபத்தில் செலுத்தும் வரி என்று பார்த்தால் இந்தியா அதிகமாக வசூலிக்கிறது என்று தோன்றும். தனி நபர் income tax செலுத்துவது என்பதை அத்தனிநபரே கணக்குக் காண்பித்தால் போதும் என்று இந்திய அரசு சொல்கிறது. இதனால் தான் இந்தியாவில் தனி நபர் வரி வருமானத்தை அரசால் முறையாகப் பெற இயலவில்லை. ஆனால் சவூதி தனி நபர் வரி என்று சொல்லாமல் சராசரியாக மாதத்திற்கு எவ்வளவு வருமானத்தைப் பெறுகிறது என்று பார்த்தால் புரியும். அதாவது விசா, இக்காமா, தொழிலாளர் அட்டை, இகாமா ஆண்டிற்கொருமுறை renewal, Exit/ Re entry, Membership Registration for Skilled Profession, Sponsor Transfership, Change of Profession என பலவகையில் அரசிற்கான வருமானத்தைப் பெறுகிறது.
அட்டவணையைப் பார்த்தால் அரசிற்கு மாதந்தோறும் கிடைக்கும் வருமானம் என்ன என்பது புரியும். மாதச் சம்பளமாக 2000 SAR, 7000 SAR, 10,000 SAR என்ற பிரிவினரை அடிப்படையாக் கொண்டு வகைப்படுத்தியுள்ளேன். இதில் 2000 SAR அல்லது அதை விடக் குறைவாக உள்ள தொழிலாளிகள் தான் வெளிநாட்டு மக்களில் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள முறை
ஆண்டு 2016 & 2017 | |||
Salary | 2000 | ||
Single Status | |||
Visa Cost – one time – 5 years | 400 | ||
Labor Card | 2500 | ||
Iqama Issuance | 650 | ||
Exit re-entry | 200 | ||
GOSI | 480 | ||
Total | 352.5 | ||
Percentage | 17.63% | ||
ஆண்டு 2016: | |||
Salary | 7000 | ||
Single Status | Family Status | ||
Visa Cost – one time – 5 years | 400 | 800 | |
Labor Card | 2500 | 2500 | |
Iqama Issuance | 650 | 2600 | |
Exit re-entry | 200 | 800 | |
GOSI | 1680 | 1680 | |
SCE | 875 | 875 | |
Total | 525.4 | 771.3 | |
Percentage | 7.51% | 11.02% |
ஆண்டு 2016
Salary | 10000 | |
Single Status | Family Status | |
Visa Cost – one time – 5 years | 400 | 800 |
Labor Card | 2500 | 2500 |
Iqama Issuance | 650 | 2600 |
Exit re-entry | 200 | 800 |
GOSI | 2400 | 2400 |
SCE | 875 | 875 |
Total | 585.4 | 831.3 |
Percentage | 5.85% | 8.31% |
மேற்கூறிய கட்டண அமைப்பு முறை ஒரு விஷயத்தைச் சொல்கிறது. நாட்டில் பணி புரியும் மிகக் குறைந்த மாத வருமானம் பெறுபவர்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் மாதத்தொகை அதிகமானது. இதில் GOSI என்பதைத் தவிர வேறெதையும் இந்தியாவில் உள்ள அரசுகள் பெறுவதில்லை. சவுதிய அரசு நிறுவனங்களிடம் நேரடியாகப் பெற்றுக் கொள்கிறது. அவ்வளவே!!!
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி 2014 லிருந்து உலகளவில் வீழ்ந்துள்ளது. பேரலுக்கு 30 டாலர் வரை வீழ்ந்ததிலிருந்து தற்போதுதான் 55 டாலர் என்ற அளவைத் தொட்டுள்ளது. இங்குள்ள பொருளாதார நிபுணர்கள் குறைந்த பட்சம் 70 டாலர் என்ற சராசரியைத் தொட்டால்தான் அரசின் பட்ஜெட்டில் கூறியுள்ளது போல கச்சா எண்ணெய் மூலம் வருமானம் கிடைக்கப்பெறும் என்கிறார்கள். கச்சா எண்ணெய் மூலமான வருவாயாவது கிடைக்க வழிகள் உண்டு. ஆனால் இன்னமும் முழுமையான அளவில் கச்சா எண்ணெயற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வரவு தான் அரசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதைச் சமாளிக்கத் தான் அரசு வெளிநாட்டு வாழ் மக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுவதற்கான திட்டங்களை அமல்படுத்தலாம் என்ற செய்திகள் வந்துள்ளன.
வெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 100 SAR/Month என்ற அளவில் அவர் அரசுக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது iqama renewal போது செலுத்த வேண்டி வரும். இதை 2017 ஜூலையிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று செய்திகள் சொல்கின்றன. கூடுதலாக நிதிச் சுமையைச் சமாளிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு இந்தியருக்கும் கூடுதலாக 400 SAR/Month செலுத்த வேண்டும் என்றும், இது 2018 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படும் என பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. அவை 2020 வரை படிப்படையாக உயர்த்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இவ்வாறு நிறுவனங்களும், வெளிநாட்டு மக்களும் செலுத்த வேண்டியது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். இதை உறுதியாக அமல்படுத்தினால் தொழில் செய்வது மிகக் கடினமாக இருக்கும். நிறைய குடும்பங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டி இருக்கும். அரசின் இந்தத் திட்டம் சவுதிய அரசின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவு உதவாமல் போகக்கூடும். பெரும்பாலோரின் குடும்பங்கள் வெளியேறினால் பொருட்களை வாங்கும் சக்தியும் குறையும். கச்சா எண்ணெய் வருமானத்தை மட்டும் சார்ந்திராமல் கச்சா எண்ணையற்ற தொழில்களில் வரும் வருமானத்தைப் பெருக்குவதுதான் தனது எதிர்காலத் திட்டமென அரசே Vision 2030 ல் தெரிவித்துள்ளது. ஆனால் இடைப்பட்ட காலத்தைச் சமாளிக்கவே அரசு நிறுவனங்கள் மூலமாகவும், வெளிநாட்டு மக்கள் மூலமாகவும் தனது வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது. அரசின் கணக்கு வேறு விதமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். சொற்ப லாபம் என்றாலும் அவர்கள் வணிகத்தைக் கைவிடப்போவதில்லை. வெளிநாட்டுவாழ் மக்களும் அதிகமாக தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதன் மூலமாக சேமிக்கிறார்கள். இங்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கூட, வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்த சேமிப்பை அடைய இயலாது என்பதால் பெரும்பாலான குடும்பங்கள் அரசு செலுத்தும் தொகையைச் செலுத்திவிட்டு சவுதியில் பணியைத் தொடரும் என்று கணக்கிடுகிறது. நடைமுறைக்கு வந்த பின்னரே வெளிநாட்டு மக்கள் தொகை எந்த அளவிற்குக் குறைந்துள்ளது, சவுதிய பொருளாதாரம் சரிவைச் சந்திக்கிறதா அல்லது தற்போதைய பொருளாதாரச் சிக்கலை சமாளிக்கிறதா என்பதைக் கணக்கிட இயலும்.
கீழுள்ள அட்டவணை புதிதாக கொண்டு வரப்போகும் அறிவிப்பால் மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி வரும்.
ஆண்டு 2018
After new regulation- for Employee (additional HRA – starts from Jan 2018) | |
Salary | 2000 |
Single Status | |
Visa Cost – one time – 5 years | 400 |
Labor Card | 2500 |
Iqama Issuance | 650 |
Exit re-entry | 200 |
GOSI | 480 |
Employee HRA Charges(400 SAR per month) | 4800 |
Total | 752.5 |
Percentage | 37.63% |
After new regulation- for Employee (additional HRA – starts from Jan 2018); for Dependent – starts from July 2018 | ||
Salary | 7000 | |
Single Status | Family Status | |
Visa Cost – one time – 5 years | 400 | 800 |
Labor Card | 2500 | 2500 |
Iqama Issuance | 650 | 2600 |
Exit re-entry | 200 | 800 |
GOSI | 1680 | 1680 |
SCE | 875 | 875 |
Dependent Charges(200 SAR per person Per month) | – | 7200 |
Employee HRA Charges(400 SAR per month) | 4800 | 4800 |
Total | 925.4 | 1771.3 |
Percentage | 13.22% | 25.30% |
After new regulation- for Employee (additional HRA – starts from Jan 2018); for Dependent – starts from July 2018 | ||
Salary | 10000 | |
Single Status | Family Status | |
Visa Cost – one time – 5 years | 400 | 800 |
Labor Card | 2500 | 2500 |
Iqama Issuance | 650 | 2600 |
Exit re-entry | 200 | 800 |
GOSI | 2400 | 2400 |
SCE | 875 | 875 |
Dependent Charges(200 SAR per person Per month) | – | 7200 |
Employee HRA Charges(400 SAR per month) | 4800 | 4800 |
Total | 985.4 | 1831.3 |
Percentage | 9.85% | 18.31% |
2016 லிருந்து 2020 வரை ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாத வருமானம் பெறுபவர்களுக்கு எத்தனை சதவீதம் அவர்களின் சம்பளத்தில் செலுத்த வேண்டியுள்ளது என்று பார்க்கலாம்.
2,000 SAR Salaried Employees Category:
Year | Single Status |
2016 | 17.63% |
2017 | 17.63% |
2018 | 37.63% |
2019 | 47.63% |
2020 | 57.63% |
7,000 SAR Salaried Employees Category:
Year | Single Status | Family Status |
2016 | 7.51% | 11.02% |
2017 | 7.51% | 15.30% |
2018 | 13.22% | 25.30% |
2019 | 16.08% | 32.45% |
2020 | 18.93% | 39.59% |
10,000 SAR Salaried Employees Category:
Year | Single Status | Family Status |
2016 | 5.85% | 8.31% |
2017 | 5.85% | 11.31% |
2018 | 9.85% | 18.31% |
2019 | 11.85% | 23.31% |
2020 | 13.85% | 28.31% |
இதுவரையில் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட கேட்டகரியில் கொண்டு வரும் தொழிலாளிக்கு நேரடியாக அரசுக்குச் செலுத்தினால் என்ன வருமானம் கிடைக்கும் என்பதைப் பற்றியது மட்டுமே. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? பெரும்பாலான சிறு நிறுவனங்கள் நேரடியாக அரசின் காண்ட்ராக்ட் கிடைக்கப்பெறுபவர்கள் அல்லர். அவர்கள் மற்ற நிறுவனங்களிடம் எந்த category யில் விசா கிடைத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். அதாவது labor category கிடைத்தால் அதை வாங்கிக் கொண்டு பின்னர் Transfer of Sponsorship + Change of Occupation from labor to Engineer or other grade க்கு மாற்றுகிறார்கள். இதில் Transfer of Sponsorship க்கு 2000 SAR செலுத்த வேண்டும். Change of Occupation from labor to Engineer or other grade க்கு 1000 SAR செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு வரையில் ஒரு குடும்ப உறுப்பினரை அல்லது தொழிலாளிகளை விசிட் விசாவில் அழைத்து வர எந்தக் கட்டணமும் கிடையாது. தற்போது 3 மாத விசாவிற்கு 2000 SAR ; 6 மாத விசிட் விசாவிற்கு 3000 SAR செலுத்தியே விசா பெற இயலும். முன்பெல்லாம் ஒரு வருடத்திற்கு Exit/Re Entry அடித்தால் 200 SAR செலுத்தினால் போதும். தற்போது முதல் இரு மாதத்திற்கு 200 SAR என்றும், கூடுதலாக மாதத்திற்கு 200 SAR/Month என்றும் மாற்றி விட்டது அரசு. சவூதி பின்லேடன் நிறுவனத்திலிருந்து 70,000 தொழிலாளிகள் பணியை இழந்துள்ளனர். மிகப்பெரிய கட்டுமான மற்றும் காண்ட்ராக்டர் நிறுவனமே தாக்குப்பிடிக்க இயலாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். இந்தியாவில் அரசுகள் 2,50,000 Rs வரை மாதச் சம்பளம் பெறுபவர்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சவூதி அரேபியாவோ அதிக எண்ணிக்கையிலுள்ள குறைந்த சம்பளம் பெறுபவர்களிடமிருந்து கூட விகிதாச்சாரத்தை வைத்துப் பார்த்தால் அதிக அளவிலான வருமானத்தைப் பெறுகிறது. சவூதி அரேபியா வரியில்லை என்று சொல்வது ஆகப்பெரிய பொய். இதையெல்லாம் தாண்டி VAT கொண்டு வரவும் GULF நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதையும் கொண்டு வந்தால் பெருமளவு இந்தியர்கள் சேமிப்பை மட்டுமல்லாது வேலை வாய்ப்பைக் கூட இழக்க வேண்டி வரலாம். இது சவுதிக்கும் நல்லதல்ல. இந்தியத் தொழிலாளிகளுக்கும் நல்லதல்ல.
மேலும்:
- http://www.arabnews.com/node/1028596/saudi-arabia
- https://www.bloomberg.com/news/articles/2016-12-25/expat-fee-subsidy-cuts-what-s-in-saudi-fiscal-balance-document
- http://saudigazette.com.sa/saudi-arabia/visa-fees-revised/
- http://saudigazette.com.sa/saudi-arabia/no-tax-expat-remittances/
- http://www.arabnews.com/node/1028321/saudi-arabia
- http://economictimes.indiatimes.com/nri/nris-in-news/good-times-over-for-expats-in-saudi-arabia/articleshow/57328166.cms
Very good article.
Instead of attracting Labour and business people KSA is marching to least liked country.
KSA has to reduce defence budget and reduce all these unwanted taxes.
Exit and re-entry visa is a age old and time consuming, troublesome programme.
Thanks to Lakshmana Perumal for the real status of Saudi life.
Achuthanandam, Mumbai.