தோல்விக்கு மருந்து: எண் 76

எழுத்தாளர் பானு கபில், வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கோட்டார்ட் கல்லூரியில் MFAW  பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை
போர்ட் டௌன்ஸெண்ட், வாஷிங்டன் மாநிலம், கோடை 2016.

உங்களுக்குக் கொடுக்க நான் கொண்டு வந்திருப்பது எல்லாம் இதுதான்: தோல்வியைப் பற்றிய ஒரு சின்னக் கதை, அதுவும், இது பட்டமளிப்பு விழா என்பதால், நல்லபடியாக முடியும் கதைதான். அது நல்லபடியாக முடிகிறது என்பது என் நினைப்பு. அது ஒரு குடும்பத்தின் கதை, குடியேறியின் கதை, கோட்டார்ட் கல்லூரியில் என் மாணவர்களுக்கு, இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது முறை கூட அவர்களின் படைப்பு ஒன்றையோ அல்லது விமர்சன எழுத்தையோ திருத்த வேண்டி இருக்கும் என்ற நிலை எழும்போது, அவர்கள் அச்சப்பட்டாலோ, கவலைப்பட்டாலோ அல்லது நிலைமை தம் சக்தியை மீறி இருப்பதாக நினைத்தாலோ, அவர்களிடம் நான் பல முறை சொன்ன கதைதான் இது. எனவே, ஒருவேளை அதை இங்கே நான் திரும்பவும்தான் சொல்கிறேனோ என்னவோ, அதுவும் சில குறிப்புகளைச் சேர்த்துச் சொல்கிறேன், எந்தக் குழந்தையின் கதை இதுவோ -அந்த உடல் இருக்கிற நிலையிலும், அது காலப்போக்கில் என்னவாயிற்றோ அந்த நிலையிலும் – அந்தக் குழந்தையின் உடலிடம்   சொல்கிறேன்.

~oOo~

bhanu-kapil                                                                                                        பானு கபில்/ Bhanu Kapil

என் அப்பா 1939 -லோ, அல்லது 1937 -லோ அல்லது 1935 -லோ அல்லது 1940 -லோ, சாலையோரத்தில் பிறந்தார்.  அவருக்கு பிறப்புச் சான்றிதழ் ஏதும் ஒருநாளிலும் இருந்ததில்லை, ஆனால் பொதுவாக அவர் வசந்தகாலத்தின் இறுதியில் பிறந்தாரென்று நம்பப்படுகிறது, சூரிய ஒளி போன்ற கூர்மையான மஞ்சள் ஒளியை நிலமெங்கும் வீசிய பூக்களால் கடுகுப் பயிர் நிரம்பிய வயல்கள் மூடப்பட்டிருந்த பருவம் அது. அவருடைய அம்மாவுக்கு அப்போது வயது 13. 24 வயது ஆவதற்குள் விதவையாகி விட்ட அந்தப் பெண்ணுக்கு ஆறு மகன்களும், ஒரு பெண்ணும் பிறந்து இருந்தனர். தவிர, தண்ணீர் மூலம் உற்ற நோய்களால் பிறந்த உடனேயோ அல்லது சற்றுப் பிறகோ இறந்த நான்கு குழந்தைகளும் பிறந்திருந்தன. இரண்டாவது குழந்தையாகப் பிறந்திருந்த என் அப்பா, தன் 12 ஆவது வயதிலோ அல்லது பத்தாவது வயதிலோ, தன் மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. வளர்ந்தவரான பின் அவரது பழுப்பு நிற உடல் முழுதும் வெள்ளி நிறத்தில், புரதச் சத்து நிரம்பிய தழும்புகள் குழிகளாக மின்னின. அந்தத் தழும்புகள் எப்படி அவருக்கு வாய்த்தன? குச்சி போலவிருந்த இடையனாகவிருந்த அவர், பால் கறப்பதற்காக, விடியுமுன் ஆடுகளையும், பிறகு எருமைகளையும் கிராமத்துக்குக் கொணர வேண்டி இருந்தது. வெறுங்காலோடு நடந்த அவரது பாதங்கள் ஆட்டுடைய பாதங்களைப் போலவிருந்தன: கடினமாகி, சொரசொரப்பாகவும், கருப்பாகவும் இருந்தன, குளம்புகளைப் போல.
கதை எப்படிச் செல்கிறதென்றால், ஒரு நாள், வயலில் பசுக்களை வீடு நோக்கி அழைத்து வருகையில், என் 11 அல்லது 12 அல்லது 13 வயது ஆன அப்பா, பதப்படாத புகையிலையால் தானே சுருட்டிய சிகரெட்டில் ஒரு இழு இழுத்திருந்தார்.  இந்து மதத்தைச் சார்ந்தவர் அவர், அந்த மதத்தில் ஏஞ்சல்கள் (கிருஸ்தவ மதத்துத் தேவதைகள்) எல்லாம் இல்லை என்ற போதும், அவர் ஒரு குரலைக் கேட்டாராம். அந்தக் குரல் சொன்னதாம்: “நீ இங்கிலாந்துக்குப் போவாய், இங்கிலிஷ்காரர்களுக்கு இங்கிலிஷைச் சொல்லிக் கொடுப்பாய்.”
இங்கிருந்து கதை காலனியத்துக்குப் பிந்தைய காலத்துக் கதைகளைப் போலவே முன்னேறுகிறது. என் அப்பா தன்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புமாறு தன் அம்மாவை எப்படியோ மனம் மாற்றுகிறார், தினசரி ஒரு வழியில் நான்கு மைல்கள் நடந்து பள்ளி செல்கிறார், இத்தியாதி. ஒரு நாள், தன் இருக்கையில் அவர் உறங்கி விடுகிறார், அந்த வகுப்பு ஆசிரியர் அவரை மூங்கில் பிரம்பால் அடித்து ரத்த விளாரியாக்கி விடுகிறார் இத்தியாதி.  அவருடைய சகோதரி ஒரு நாள் இறந்து விடுகிறாள், வீட்டுக் கூரை மீதிருந்து விளையாடும்போது இன்னொரு சகோதரன் அவளைத் தள்ளி விட்டிருக்கிறான். அவள் கீழே விழும்போது, அவள் விட்டுக் கொண்டிருந்த பட்டத்தின் நூல் அவளுடைய மெல்லிய மணிக்கட்டைச் சுற்றி இரண்டு சுற்று சுற்றி இருந்தது. அவருடைய அம்மா துக்கத்தால் செயலற்றுப் போய் விடுகிறாள். அப்பா இதற்குள் இறந்திருக்கிறார், அல்லது இது நடந்து முடிந்த பின் சீக்கிரமே இறக்கிறார், அவர் அபினை அளவுக்கதிகமாக அருந்தி இறந்திருக்கிறார். குடும்பம் இப்போது வீடற்றுப் போயிருக்கிறது, மண்ணாலும், தகரத்தாலும் நிறுவப்பட்ட வறிய குடிசையில் சில காலம் வாழ்கிறது. நான் இதுவரை இன்னும் பிறந்திருக்கவில்லை, ஆனால், இருபது வருடங்கள் கழித்துப் பிறக்கிறேன்.
ஆனால் இதுவோ இப்போது. அவர் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது, என்னால் கேட்கவும் முடியாது, ஏனெனில் அவர் இங்கு இல்லை, ஆனால் அந்தக் குரலை அவர் கேட்ட பிறகு எட்டு வருடங்கள் கழித்து, அவர் பஞ்சாப் பல்கலையில் தட்டி முட்டி பட்டப் படிப்பில் எப்படியோ தேர்வு பெறுகிறார். எப்படியோ இங்கிலிஷில் முதுகலைப் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார், அவருடைய கல்லூரியிலேயே இடமும் கிடைக்கிறது. அங்கும், தேர்ச்சி பெற எது மிகக் கீழான அளவு மதிப்பெண்களோ அதை மட்டும் பெற்று அவர் தேர்வு பெறுகிறார். அப்போது 1962 ஆம் ஆண்டு. காமன்வெல்த் விஸா ஒன்றைத் தட்டி விடுகிறார், இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குக் குடியேறுகிறார். அப்போது அவரிடம் இருந்தது, நீல நிறத்தில் K என்ற எழுத்து பின்னப்பட்ட வெள்ளைக் கைக்குட்டையில், முடிபோடப்பட்டு இருந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றுதான். போர்ட்ஸ்மௌத்தில் கப்பலை விட்டு இறங்குகிறவர், லண்டனில் உள்ள கோல்டர்ஸ் க்ரீன் என்ற பகுதிக்கு இரந்து பெற்ற பயண வாய்ப்புகளைப் பயன்படுத்தி வந்து சேர்கிறார். அங்கு யூதக் குடும்பங்கள், வெள்ளையரல்லாதவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். அது முதல் நாளின் இரவு நேரம். அவர் பசியில் வாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய வீட்டு எஜமானி அம்மாள், திருமதி. கோல்ட்பெர்க், தேநீர் வேளைக்கு வெல்ஷ் முயல் தரப் போவதாகச் சொல்கிறார். என் அப்பா, இந்தக் கதையைச் சொல்லும்போது, தன் வயற்றைத் தட்டிக் கொள்வார், பிறகு சீஸ் துண்டை மேலே சுமந்த வறுத்த பிரெட் துண்டு வந்த போது, அது முக்கியச் சாப்பாடான முயல் வருவதற்கு முன் கொடுக்கப்படும் சிறு திண்டி என்று நினைத்து வேகமாக அதைத் தின்றதையும், பின் மிஸர்ஸ்.கோல்ட்பெர்க் புன்னகைத்து, குட்நைட் சொன்னபோது- “நைட், நைட், டக்ஸ்”- பிறகு இரவுக்கான காலணிகளோடு மாடிப்படிகளில் ஏறிப் போய் விட்டதைப் பார்த்துக் குழம்பி நின்றதையும் வருணித்துச் சொல்வார்.
போருக்குப் பிறகு யு.கே -இல் இருந்த ஆசிரியர் பற்றாக்குறையால், என் அப்பாவுக்கு வெல்வின் தோட்ட நகரத்துத் துவக்கப் பள்ளியில் ஒரு வேலை கிட்டியது. எனக்கு இருபது வயதானபோது, அவருடைய ஆவணங்களில் நான் அந்தக் காலகட்டத்திலிருந்து பல ஆசிரியருக்கான அறிக்கைகளைக் கண்டேன். என் வயிறு வெட்கத்தால் அப்படியே குறுகியது அதைப் படிக்கையில்: “மிஸ்டர் கபிலின் இங்கிலிஷ் சிறிதும் நன்றாக இல்லை.” “மிஸ்டர் கபிலின் இங்கிலிஷ் மேம்படும் வரை தற்காலிக நிலையில் வைக்கப்படுகிறார்.” “இதை நாங்கள் வருத்தத்துடன் சொல்கிறோம்….” ஆனால் வருத்தமும், வெட்கமும் கடந்து விட்ட நிலை இப்போது, அவர்கள் கடந்து போய்விடும் அந்தத் தருணத்தில் நாம் நம் பெற்றோர்களின் எல்லாப் பிழைகளையும் மன்னித்து விடுகிறோம். ஆனால், அதற்கு முன்பாக, இப்போது, எனக்குத் தெரிய வேண்டியிருப்பது என்னவென்றால், என் அப்பா இவற்றை எல்லாம் எப்படித் தாங்கிக் கொண்டார் என்பதுதான். ஒரு மனிதர் ஒரு வித வாழ்விலிருந்து தம்மை அழித்துக் கொண்டு, இன்னொரு வித வாழ்வுக்கு எப்படி நகர்கிறார் என்பது எனக்குத் தெரியவேண்டும். அவர் எப்படி இதைச் சாதித்தார்? படிப்பறிவில்லாத, நிகோடினுக்கு அடிமையான ஒரு சிறுவனாகவும், நடைமுறையில் படிப்பறிவில்லாத குடியேறியாகவும் இருந்தவர் எப்படி- இங்கிலாந்தின் முதல் தலைமை ஆசிரியராக- உருமாறினார்?
அது இப்படித்தான்:
17 வயதில் நான் இருக்கும்போது, ’ஏ’ நிலைப் பரீட்சைகளில் நான் தோல்வி அடைந்திருந்தேன், அது பிரிட்டிஷ் முறையில் பல்கலைப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை. படிக்கட்டுகளில் அமர்ந்து அழுது கொண்டிருந்த என்னைக் கண்ட என் அப்பா, தன் பற்களை அரைத்தார், அதுதான் ஆழ்ந்த உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தும் விதம், சொன்னார், “என்னோடு வா.” முன் அமர்வு அறையில் சுவற்றருகே இருந்த பச்சை சோஃபாவை இழுத்து அகற்றி, அவருடைய கோப்புகளைச் சேகரிக்கும் முறையைக் காட்டினார்: ஸெயின்ஸ்பரி கடையின் ப்ளாஸ்டிக் பைகளில் முட்ட முட்டத் திணிக்கப்பட்டிருந்த பல கட்டணக் கோரிக்கைகள், ரசீதுகள் மற்றும் ஏதேதோ காகிதத் துண்டுகள். அவற்றிலிருந்து ஒரு பையை எடுத்து என் மடியில் வைத்தார். “அதைத் திற.” உள்ளே இருந்தவை கடிதங்களைப் போலவிருந்தன, தட்டச்சப்பட்டு, பிரதிகளுக்கான கத்தரிப்பூ நிறத்து மசிப் பிசிறலோடு இருந்தன. நான் படித்தேன்: “அன்புள்ள மிஸ்டர். கபில், நீங்கள் வலுவான ஒரு விண்ணப்பதாரராக இருந்தீர்கள் என்றாலும்….” “ அன்புள்ள மிஸ்டர்.கபில், நான் வருத்தத்தோடு….”
ஆனால் எனக்குத் தெரிந்தவரை, மிஸ்டர்.கபில், எதற்கும் வருந்தவில்லை. நான் பிறப்பதற்கு முன்பிருந்தும், நான் கல்லூரிக்குப் போகும் வரையிலும், “மிஸ்டர்.கபில்”, இருபது வருடங்களாக பிரிட்டிஷ் பள்ளிகளின் அமைப்பினூடாக வேலை செய்த வண்ணம் இருந்தார், இரவுப் பள்ளிகளில் படித்தார், அபத்தமாக, வர்ஜீனியா உல்ஃபின் புத்தகங்களைப் படித்தார், தனக்குக் கிட்டுவனவற்றிலேயே மிகக் கடினமான புத்தகங்களைப் படித்தார், தன் இலக்கணத்தை மேம்படுத்திக் கொள்ளவும், உருவகங்களை நன்கு புரிந்து கொள்ளவும், ஒரு வாக்கியம் என்பது எதற்காக இருக்கிறது என்பதை அறியவும், இன்னும் பலவற்றுக்காகவும் படித்தார். ஒரு தடவை   த வேவ்ஸ் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியில் செருகப்பட்டிருந்த ஒரு மருந்துச் சீட்டை நான் பார்த்தேன், அதில் மருந்து விலை ஷில்லிங்கில் கொடுக்கப்பட்டிருந்தது, அன்று புழக்கத்தில் இருந்த அந்த நாணயம் 1960களின் இறுதியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்த மருந்துச் சீட்டு தூக்க மருந்துக்கானது.
அவர் தொடர்ந்து வேலை செய்து அந்த அமைப்பில் மேலே ஏறி, ‘ஆக்டிங் ஹெட்’ என்று அழைக்கப்பட்ட பதவியை எட்டினார். தோல்வியுற்ற நிலையில் இருக்கும் பள்ளிக்கூடங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு பள்ளி மேம்பட்ட நிலையை அடைந்தவுடன், அங்கே நிரந்தர வேலைக்கு அவர் விண்ணப்பிப்பார், ஆனால் ஒருபோதும் அவருக்கு அது கிட்டாது. இரவில் வெகு நேரம் கழித்து, வேலைக்கான பேட்டிகளிலிருந்து அவர் வீடு திரும்புவதை நான் நினைவில் வைத்திருக்கிறேன், மேலே அணியும் கோட்-ஐ உதறிக் கழற்றி மாடிப்படிகளின் கைப்பிடியில் போடுவார், எரிவாயு உலையின் முன் சோர்ந்து அமர்வார், என் அம்மாவிடம் ஏதாவது சாப்பிடக் கொண்டு வரச்சொல்லிக் கூவுவார். “ஜல்தி, ஜல்தி.” சீக்கிரம். சிறுவயது வறுமைக்கும், அழுத்தம் நிரம்பிய வாழ்வுக்கும், நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு உண்டு என்று நான் சிலநேரம் யோசிக்கிறேன். அது வேறு விஷயம். ஒரு நாள் என் அப்பா வீடு திரும்பினார், அழுதார், எங்களுக்கெல்லாம் பெரும் கிலி பிடித்தது, அதற்கு முன் அவர் அழுததில்லை, பின்பும் அழவில்லை, ஆனால் அது அன்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையே. “ஆஷா,” என்று கத்தினார். என் அம்மா அந்த அறைக்குள் ஜானி வாக்கர் ப்ளாக் ஒரு கோப்பையில், கோழிக்கறி ஒரு கிண்ணத்தில் வைத்த தட்டை எடுத்துக் கொண்டு வந்தார். “ஆஷா,” என்றவர், “அந்த நாய்ப் பயல்கள்… “
அவர் மேலும் சொன்னார், அல்லது அம்மா எங்களிடம் சொன்னார், அல்லது நான் ஒட்டுக் கேட்டேன். தனக்கு இந்த வேலை ஏன் கிடைக்கவில்லை, தன்னை விடவும் குறைவாகவே கல்வித் தகுதி பெற்றவரும், இளையவருமான ஒரு வெள்ளையருக்கு ஏன் அது கொடுக்கப்பட்டது என்று என் அப்பா நேராகவே கேட்டபோது, சோதனையாளர் அன்று இரவு அவரிடம் சொன்னாராம்: “மிஸ்டர் கபில், மிஸ்டர் கபில், எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. நிஜமாகவே எனக்குப் பிடிக்கும். இந்த கட்டத்தில் இருப்பதில் நீங்கள்தான் மிகுந்த தகுதி உள்ளவர். ஆனால் மிஸ்டர். கபில், உங்களுக்கு இது நிஜமாகவே புரிய வேண்டும்- நிர்வாகிகளின் குழு ஒரு நாளும் ஒரு கருப்பர் தங்கள் பள்ளியை நடத்த விட மாட்டார்கள்.”
இது உங்களுடைய பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கான உரை, 1980களில் இருந்த பிரிட்டிஷ் இனவெறி எப்படி அமைப்பு மயமானது என்பதையோ, பிரெக்ஸிட் கருத்துக் கணிப்பால் குடியேறிகளுக்கு எதிரான உணர்ச்சிகளும், அயலார் மீதுள்ள வெறுப்பும் மீண்டும் உயர்ந்தெழுந்திருக்கும் – “உன் நாட்டுக்குத் திரும்பிப் போ!” என்று சொல்லும் அஞ்சல் அட்டைகள் அடுத்த அலையாக வந்திருக்கும் கிழக்கு யூரோப்பிய- போலிஷ் – குடியேறிகளின் மெயில்பாக்ஸ்களில் போடப்படும்- இந்தக் காலகட்டத்தையோ பற்றிய விவரணை அல்ல, அதனால் என் கதையை ஒரு அடிப்படையான, தவிர்க்கவியலாத நிஜத் தகவலோடு முடிக்கிறேன்: என் அப்பா முயற்சியைக் கை விடவில்லை. அந்த ஸெயின்ஸ்பரி மளிகைப் பையில், 1979 இலிருந்து பல வேலைகளுக்கு என் அப்பா விண்ணப்பித்த இடங்களிலிருந்து வந்த 75 மறுப்புக் கடிதங்கள் இருந்தன. அவர் வேலை தேடி வேலைச் சந்தையில் இருந்த ஒவ்வொரு வருடத்துக்கும் 3 அல்லது 4 கடிதங்களாகும். என் அப்பா சொன்னார், “அதெல்லாம் எத்தனைன்னு எண்ணு.” அவருடைய  76ஆவது முயற்சியில், நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் வேலைக்குப் பேட்டிக்குச் சென்ற போது, கடைசியில் ஒரு வழியாக, பிரிட்டிஷ் காலக் கணக்கில் நிர்வாகிகளின் குழுவினர் ஒரு செடுக்கான கூட்டமாக, பல இனங்களும், அடையாளக்குழுக்களுமாக நிரம்பி விட்ட நிலையில், என் அப்பாவுக்கு அந்த வேலை கிடைத்தது.
அன்று இரவு, எங்கள் வீடு அப்பாவின் நண்பர்களும், அவர்களின் மனைவிமார்களுமாக நிரம்பி இருந்தது. எங்கள் சமூகத்தில் ஒரு பெரும் சந்தோஷ முழக்கம் கேட்டது. பெண்கள் எங்களுடைய சமையலறையில் இரவு பூராவும் தங்கி இருந்து, எங்களின் சிறிய நீல நிற அடுப்பில் முடிவே இல்லாத சுழற்சியில் ரொட்டிகளையும், கறியையும் தயார் செய்த வண்ணம் இருந்தனர். நொய்வான உலோகக் குவளைகளில் கின்னெஸ்ஸை ஆண்கள் குடித்தனர். காலையில் நான் எழுந்த பின், கீழே சென்றால், அங்கே சோஃபாவில் இது வரை நான் பார்த்திராத ஒரு ஆண் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் தன் ரோஜா நிறத் தலைப்பாகையை எடுத்து விட்டிருந்தார், அவருடைய நீண்ட நரைத்த முடி அதன் முடிச்சவிழ்ந்து அவருடைய இடுப்பு வரை தொங்கியது- எண்ணெய்ப் பூச்சால் இறுகியும் இருந்தது.  எனவே, நான் வளர்ந்த பின், தோல்வி அடைந்த போது, நிஜ உலகில் அடியெடுத்து வைக்க நான் செய்த முதல் முயற்சியில் கண்ட தோல்வியால் என் இதயம் நொறுங்கி விடும்போலிருந்த போது, என் அப்பா சொன்னார், “வாயைப் பொத்து.” அவர் சொன்னார்: “அழுவதை இப்போதே நிறுத்து. இது ஒன்றுமேயில்லை.” பஞ்சாபி மொழியில் அவர் சொன்னார்: “நம் குடும்பத்தில் நாம் முயற்சியைக் கைவிடுமுன் ஒன்றை 76 தடவைகளாவது செய்து பார்ப்போம்.”
அப்படியேதான், நான் ஒரு கவிஞராக ஆவதற்காக அமெரிக்காவுக்கு வந்த போது, என் முதல் புத்தகத்தை நான் அனுப்பிய மூன்று பிரசுர நிறுவனங்கள் மறுதலித்த போது- FC2, காஃபி ஹௌஸ், மேலும் வெஸ்லியன் பல்கலைப் பிரசுரம் என்று நினைவு வருகிறது- நான் மனம் தளரவில்லை. என் மூன்றாவது புத்தகத்தைப் பிரசுரிக்க ஒன்பது வருடங்கள் ஆனபோது, இருபது தடவைகளுக்கு மேல் அதில் திருத்தங்கள் தேவைப்பட்டன, 4 சுழற்சிகளில் அது திரும்பத் திரும்ப மறுதலிக்கப்பட்டுப் பிறகே வெளி வந்தது, நான் அதையெல்லாம் குறைகள் என்றே நினைக்கவில்லை. என் எழுத்து ஏதோ மிக அருமையானது, அதைத் தொடர்ந்து வெளியே அனுப்பிக் கொண்டே இருந்தால் அற்புத நிகழ்வுக்கான 76 ஆவது தடவையை எட்டியதும் அது பிரசுரமாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் குலையாது, நிலைத்து இருப்பதை நம்பத் தொடங்கி இருந்தேன். (அதோடு) விவரணையே எப்படி காலப்போக்கில் நிஜமாகிறது என்பதை. செயலின்மையும், ஊக்கமுள்ள வெளிப்பாடும் சுழற்சிகளாக எப்படி நம்பமுடியாத வகையில் ஊட்டச் சத்தாகின்றன என்பதை. தோல்வியே எப்படி சாத்தியப்பாட்டின் களமாகிறது என்பதை: வாய்ப்புக்கு ஒரு திறப்பாகிறது என்பதை; ஒரு படைப்பு துவங்கிய காலத்தைக் கடந்து அது வெளிவருவதற்கான வேறொரு காலத்தில் எப்படி வந்து சேர்கிறது என்பதை. நான் தொடர்ந்து செல்வதை, முன்னேறிச் சென்று கொண்டிருப்பதை, எழுதுவதின் விளைவுகள் கண்ணுக்குப் புலப்படுகின்றனவோ, தட்டுப்படுகின்றனவோ இல்லையோ, எழுதிக் கொண்டே இருப்பதைக் கற்றுக் கொண்டேன். என் படைப்பை முதலில் எழுதும்போது எத்தனை உணர்ச்சிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும், அறியும் ஆர்வத்தோடும் இருந்தேனோ, அதே அளவோடு அவற்றைக் கொண்டு அதை மறுபடி திருத்தி எழுதுகையில் இருக்கக் கற்றுக்கொண்டேன். நான் இப்படி ஒரு ஜபத்தைக் கூடக் கண்டு பிடித்திருந்தேன்: ’திருத்தி எழுதுதல் எழுதுவதுதான். எழுதுவதே திருத்தி எழுதுவதுதான்.’

அருமை எழுத்தாளர்களே,
அருமைப் பட்டதாரிகளே,
இன்று ஆசிகளோடு இன்றைய தினத்தை முடிக்க விரும்புகிறேன்: உங்கள் வாழ்வுகளுக்கும்,  இனி வரப்போகும் படைப்புகளுக்கும்;உலகத்தில் எழுத்தாளர்களாக நீங்கள் செல்லப் போகும் பயணங்களுக்கும் அவை சேரட்டும்.
அது கிட்டியபோது எனக்கு அதன் அருமை தெரிந்திருந்ததோ இல்லையோ, என் குடும்பம் எனக்கு அளித்த அந்த அன்பிலிருந்து.
என் நாடே அல்லாத ஒரு நாட்டின் இங்கிலிஷை, தீவிரமான இங்கிலிஷைப் பேசவும், எழுதவும் வேண்டும் என்று எனக்கிருந்த ஆசையிலிருந்து.  (நான் சொல்வது இது)
அன்பார்ந்த எழுத்தாளர்களே.
உங்களுக்கு நான் எண் 76 ஐக் கொடுக்கிறேன். எதையும் 76 தடவைகளாவது முயன்று பார்க்காதவரை கைவிடாமல் இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன், அது வேலைக்கு விண்ணப்பிப்பதானாலும் சரி, ஒரு படைப்பைத் திருத்தி எழுதுவதானாலும் சரி அல்லது வெளியே அனுப்பி வைப்பதானாலும் சரி. தன்னை இழந்தும், சலியாத உறுதியோடும் எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுக்கிறேன்.
நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் தோல்வி அடையும் விதத்தால், முதலில் துவங்குகையில் எத்தனை ஒளியோடு நீங்கள் இருந்தீர்களோ அத்தனை ஒளியோடு நீங்கள் பளிச்சிடத் துவங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

~oOo~

இந்த உரையை நிகழ்த்திய பானு கபில் அவர்களின் அனுமதியோடு இந்தக் கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழி பெயர்க்க அனுமதி கொடுத்ததற்கு பானு கபில் அவர்களுக்கு சொல்வனத்தின் நன்றி.
தமிழாக்கம்: மைத்ரேயன்
[Solvanam magazine thanks Ms.Bhanu Kapil for granting us permission to translate her commencement speech at Goddard College, Washington.]
பானு கபில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர். பிரிட்டனில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவுக்குக் குடியேறியாக வந்திருக்கிறார். தற்போது மேற்குக் கரையில் உள்ள மாநிலமான வாஷிங்டன் மாநிலத்தில், கோட்டார்ட் கல்லூரி எனப்படும் பெயர் பெற்ற ஓர் கல்லூரியில் படைப்பிலக்கியத்தை எழுதுவது எப்படி என்று போதிக்கிறார். இவர் ஒரு கவிஞர். கதைகளும் எழுதுகிறார். இவருடைய வலைத்தளத்தை இங்கே காணலாம்:
இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட தளத்திலிருந்து கிட்டியது:
http://thewriterintheworld.com/2016/08/15/bhanu-kapils-goddard-college-mfaw-commencement-speech/
கோட்டார்ட் கல்லூரியின் தளத்திலிருந்து கிட்டிய வாழ்வுக் குறிப்பு இது:

naropa_bhanu_kapil_poet_indian_speechபானு கபில் நான்கு முழு நீள் புனைவு/கவிதை ஆக்கங்களை எழுதியவர்: The Vertical Interrogation of Strangers (Kelsey Street Press, 2001), Incubation: a space of monsters (Leon Works, 2006), humanimal [a project for future children] (Kelsey Street Press, 2009), and Schizophrene (Nightboat Books, 2011). அவரின் வலைப்பதிவு, “Was Jack Kerouac A Punjabi?: a day in the life of a Naropa University Writing Professor

 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.