பிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன?

BrexitGraph

பிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்றும், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன? பிரிட்டனின் வெளியேற்றம் உலகின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னது பலிக்கவில்லையா ? அவை வெறும் பயமுறுத்தல்கள் மட்டும்தானா?
மேலே உள்ள கேள்விகளுக்குப் பதிலாக பொருளாதார வல்லுநர்கள் கூறும் காரணம் இதுதான். இப்போது நிலவுவது ஒரு தற்காலிகமான அமைதி. பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று ஓட்டெடுப்பு தீர்மானித்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு இல்லை. ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து பிரிட்டன் ஒன்றியத்தில் தொடரும் என்ற நம்பிக்கை இன்னும் பொய்த்துப் போகாததால்தான், சந்தைகள் அதிக வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். ஒருவேளை இது நடக்காவிட்டால், முன்பு சொன்ன நிகழ்வுகள் நடந்தே தீரும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
பிரிட்டனைப் பொருத்தவரை, பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பல மாற்றங்கள் ஓட்டெடுப்புக்குப் பின் நிகழ்ந்துள்ளன. பிரதமர் டேவிட் கேமெரனின் ராஜினாமாவை அடுத்து, அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த தெரஸா மே, பிரதமர் பதவிக்கு கன்ஸர்வேடிவ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ‘சர்ச்சிலுக்குக் கூட சவாலாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் மே பதவியேற்கிறார்’ என்று அவரைப் பற்றி கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டிருப்பது மிகவும் சரி. ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள், அதைத் தொடர்ந்து வர்த்தகத்தில் ஏற்படும் பாதகங்களைச் சமாளிப்பது, தனி நாடு கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ள ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளைச் சமாளிப்பது என்பது போன்ற பல பிரச்சனைகள் அவர் முன் நிற்கின்றன. பிரிட்டனின் வெளியேறும் முடிவால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த யூரோப்பிய ஒன்றியம், வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு அதனை வற்புறுத்துகிறது. ப்ரக்ஸிட் ஓட்டெடுப்பில், கேமெரனுடன் சேர்ந்து ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று பிரச்சாரம் செய்த மே, வெளியேறும் நடவடிக்கைகளைத் தொடங்குவதில் தாம் அவசரப்படப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம் ஓட்டெடுப்பின் முடிவை புறக்கணிக்கும் எந்த எண்ணமும் தமக்கோ தமது கட்சிக்கோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவரான யூகேஐபி கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் தமது பதவியை (மூன்றாவது முறையாக) ராஜினாமா செய்துவிட்டார். தமது இலக்கான யூரோப்பை விட்டு வெளியேறுவது என்பதைச் சாதித்த பெருமையுடன் விலகுகிறேன் என்று கூறிய அவர், பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால், பெரும் போரட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். ஆனால், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், இந்த விவகாரத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகவோ என்னவோ, தெரஸா மே தனது புதிய அமைச்சரவையில் போரிஸ் ஜான்சனை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்திருக்கிறார். யூரோப்புடனான உறவுகள் அழுத்தத்திற்கு உள்ளாகும் வேளையில் யூரோப் எதிர்ப்பாளரான ஜான்சன் வெளியுறவுத்துறையில் பொறுப்பேற்பது பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. ஆனால், இதற்கு யூரோப்பிய ஒன்றிய விவகாரம் காரணம் இல்லை, பிரதமர் பதவிக்குப் போட்டியிட முடிவுசெய்து கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்ட ஜான்சனை தனது அணியில் சேர்த்துக்கொள்ள மே செய்த தந்திரம் இது என்றும் சொல்லப்படுகிறது.   வெளியுறவுத்துறையை ஜான்சனிடம் கொடுத்தாலும், பிரக்ஸிட் விவகாரங்களுக்கும் உலக வர்த்தகத்திற்கும் தனித்தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மே தெரிவித்திருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்னொரு முக்கியமான துறையான நிதித்துறைக்கு பிலிப் ஹாமண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறையைக் கவனித்து வந்த ஹாமண்ட், முதலில் யூரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பல கருத்துகளை வெளியிட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றியம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், ஓட்டெடுப்பில் பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் இவர் கூறியிருந்தார். ஆனால், பின்னர் தன் நிலையை மாற்றிக்கொண்டு பிரிட்டன் ஒன்றியத்தில் தொடர்வதற்கான அணிக்கு ஆதரவு அளித்தார். ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக பிரிட்டனின் பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிப்பதுதான் ஹாமண்டின் முதல் மற்றும் முக்கியப் பணியாக இருக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் தெரிவிப்பது, பிரிட்டன் வெளியேறுவது என்பது முடிவுசெய்யப்பட்ட விவகாரமாக இருந்தாலும், அது உடனடியாக நடக்கப்போவதில்லை. முற்றிலுமாக யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி தங்கள் உறவைத் துண்டித்துக்கொள்ளாமல், தங்கள் வர்த்தகத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட பிரிட்டன் முயலக்கூடும்.
பிரிட்டனின் முடிவை அடுத்து அவசரமாகக் கூடிய யூரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள், யூரோப்பிய ஒன்றியத்தின் மேல் தங்களுக்குள்ள நம்பிக்கையை உறுதிசெய்து, ஒன்றியத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவோம் என்று கூறினாலும், பிரிட்டனின் வெளியேற்றம் சில நாடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை. யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேறவேண்டும் என்று பிரான்ஸின் தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் மரீன் லு பென் முழக்கமிட்டிருக்கிறார். பெர்லின் சுவர் வீழ்ந்ததற்கு அடுத்ததாக யூரோப்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி பிரிட்டன் வெளியேறியதுதான் என்று கூறிய அவர், பிரிட்டனைப் போலவே பிரான்ஸ் மக்களும் ஒன்றியத்திலிருந்து வெளியேறத் துடிக்கிறார்கள் என்கிறார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, கிரீஸுக்கு அடுத்து ஒன்றியத்திற்கு எதிர்ப்பு அதிகமாக உள்ள நாடு பிரான்ஸ் என்று தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில், பிரிட்டனைப் போலவே பிரான்ஸிலும் ஒரு ஓட்டெடுப்பு நடத்தி, ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் அவர். நெதர்லாந்திலும், இத்தாலியிலும் இதைப் போன்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் ஷீர்ட் வில்டர்ஸ் என்ற உறுப்பினர் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெதர்லாந்து வெளியேறுவதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தாலும், தன்னுடைய முயற்சியை கைவிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் எடுத்த முடிவை ஜீரணிக்க முடியாத பலர், மக்கள் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்கான முக்கியக் காரணமாக அவர்கள் தெரிவிப்பது, மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்ததுதான். இது தங்களது வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர் என்கின்றனர் இவர்கள். இந்தப் பொருளாதார காரணம் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களால்   பிரிட்டனின் சமூகக் கட்டமைப்பு குலைந்திருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். அதிகரித்து வரும் தீவிரவாதத்திற்கு இது ஒரு அடிகோலாக இருக்குமோ என்ற அச்சமும் பிரிட்டிஷ் மக்களுக்கு இருக்கிறது. இதன் தாக்கங்கள் முழுமையாகத் தெரியாத நிலையில், வேலியில் இருக்கும் ஓணானை ஏன் தேவையில்லாமல் எடுத்து மடியில் விட்டுக்கொள்ளவேண்டும் என்ற முடிவையே மக்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த முடிவால் அவர்களின் வாழ்வாதாரம் உயரக்கூடுமா? அங்கு ஏற்கனவே குடியேறி பிரிட்டனோடு தங்கள் வாழ்வை ஒன்றிணைத்துக்கொண்ட மற்ற நாட்டு/ இன மக்களின் நிலை என்ன என்பதெல்லாம் இன்றைக்கு விடை காண முடியாத வினாக்கள்.
மேற்காசியாவிலிருந்து மக்கள் அலை அலையாக யூரோப் முழுவதும் குடியேறி வருவதை, பிரிட்டன் மட்டுமல்லாது மற்ற பல நாடுகளின் மக்களும் எதிர்க்கத்தொடங்கியிருக்கின்றன. “யூரோப்பின் தலைவர்கள் ஆயிரக்கணக்கான யூரோக்களைச் செலவழித்து அகதிகளை வரவேற்கும் அதே வேளையில், துபாய், சவுதி அரேபியா போன்ற செல்வம் கொழிக்கும் மற்ற மத்தியக் கிழக்கு நாடுகள் ஏன் அவர்களுக்கு புகலிடம் தர மறுக்கின்றன? ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தைச் சேர்ந்த அவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவ மறுக்கின்றனர்?” என்று கேள்வி எழுப்புகிறார் ஷீர்ட் வில்டர்ஸ். இது இனவாதக் கருத்தாக இருந்தாலும், கேள்வியிலுள்ள நியாயம் மக்களை இது போன்ற இனவெறுப்புக் கட்சிகளின் பக்கம் சாய வைத்துவிட்டது.
இந்தப் பிரச்சனைகளையெல்லாம் யூரோப்பிய ஒன்றியம் எப்படி சமாளிக்கப்போகிறது? பிரிட்டன் வெளியேறுவதுடன் இவையெல்லாம் நின்றுவிடப்போவதில்லை. ஒன்றியம் செயல்படும் விதத்தில் சில சீர்திருத்தங்களை உடனடியாகச் செய்தாலன்றி, ஒன்றியத்தின் கட்டமைப்பை நிலைநிறுத்த முடியாது என்று யூரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் பல தடைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். ஜெர்மனி போன்ற சில நாடுகள் அதிகாரங்களை இன்னும் மையத்தில் குவிக்கவேண்டும் என்று விரும்புகின்றன. மற்ற சில நாடுகள், அதிகாரப் பகிர்வுகளை முன்வைக்கின்றன. பிரான்ஸ், யூரோப்பிய ஒன்றியம் முழுவதற்குமான குறைந்த பட்ச சம்பள விகிதத்தையும் பணியாளர்கள் பாதுகாப்பையும் வலியுறுத்துகிறது. இதை ஜெர்மனி எதிர்க்கிறது. யூரோப்பின் பொருளாதாரக் கொள்கைகள் நிதி அடிப்படையிலும் சரி, பணவியல் அடிப்படையிலும் சரி, மையத்தில் வகுப்பட்டு செயல்படுத்தவேண்டும் என்று ஜெர்மனி விரும்புகிறது. தனிப்பட்ட நாடுகள் கண்டபடி செலவினங்களை அதிகரித்து, அதை ஈடுகட்ட வேண்டிய பொறுப்பை தன் மீது சுமத்துவதை இது தடுக்கும் என்று அது நினைக்கிறது. ஆனால், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகள் இந்தக் கொள்கையை எதிர்க்கின்றன. இந்த முரண்பாடுகளையெல்லாம் சமாளித்து உறுதியாகவும் உடனடியாகவும் செயல்படுத்தக்கூடிய சில சீர்திருத்தங்களைச் செய்தாலன்றி ஒன்றியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிய பல கேள்விகளையும் பிரிட்டனின் வெளியேற்றம் உலக அரங்கில் எழுப்பியிருக்கிறது. உலகமயமாக்கல், திறந்த சந்தைகள் போன்றவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கூறினாலும், அதன் தாக்கம் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் உள்ள மக்களைச் சென்று சேரவில்லை. பொருளாதார ரீதியாக ஒன்று சேர்வது தங்கள் நிலையை பல மடங்கு உயர்த்தும் என்ற ஆசையில் ஒன்றியத்தை உருவாக்க ஆதரவளித்த யூரோப்பிய நாடுகளின் மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர் என்பது தெளிவு.   கிரீஸ் போன்ற நாடுகளின் ‘மக்கள் நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் செய்யப்பட்ட அபரிமிதமான செலவுகளுக்கு யூரோப்பிலுள்ள மற்ற நாடுகள் ஈடுகட்ட வேண்டியிருந்தது. இதனால் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது, சாதாரண மக்களையே பெருமளவில் பாதித்தது. சீனா போன்ற நாடுகளோடு அதிகரித்த யூரோப்பின் வர்த்தகம், பிரிட்டன் உட்பட்ட யூரோப்பிய நாடுகளில் உள்ள   தொழிற்சாலைகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்ததையும் மக்கள் விரும்பவில்லை.
இடதுசாரிகளும் இந்தக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தவறவில்லை. உலகமயமாக்கல், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வைத்தான் அதிகரித்துள்ளது என்ற வாதத்தை மீண்டும் முன்வைக்கும் அவர்கள், பணம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தை மென்மேலும் அதிகரித்துக் கொள்ளத்தான் இது உதவி செய்திருக்கின்றது என்கின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு உலகமயமாக்கத்தினால் எந்தவிதப் பயனும் இல்லை, சொல்லப்போனால் அதில் குறிப்பிட்ட சில சதவிகிதத்தினர் தங்கள் வாழ்வாதாரங்களை இதனால் இழந்திருக்கின்றனர், தடையற்ற வர்த்தகத்தின் தாக்கத்தினால் தங்கள் வேலைகளை இழந்த பணியாளர்களை அரசாங்கங்கள் பாதுகாக்கத் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள். பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலமே இந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய முடியும். செல்வந்தர்கள் மேல் அதிக வரிகளை விதிப்பது, அதைக்கொண்டு, சமூகத்தின் மற்ற தளங்களில் உள்ளவர்களுக்காக, மக்கள் நலத்திட்டங்களில் செலவு செய்வது, கல்வி, ஆரோக்கியம் போன்ற சேவைகளை அரசாங்கமே ஏற்று நடத்துவது, உட்கட்டமைப்பைச் சீர்செய்து வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கங்கள் உதவி செய்வது போன்றவைதான் இந்தப் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு என்பது (வழக்கமான) அவர்கள் தரப்பு.
எப்போதெல்லாம், சம்பள விகிதங்கள் குறைந்து தனிப்பட்ட முறையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், இனவாதமும் குழு மனப்பான்மையும் அதிகரிக்கின்றன. ஆளுவோருக்கு எதிராக மக்கள் திரளுகிறார்கள் என்று ஒரு நிபுணர் குறிப்பிட்டிருக்கிறார். இன்று உலகின் பல பகுதிகளில் நாம் காணுவது இந்த மனப்பான்மையைத்தான். தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தின் சின்னமாக பலரால் வர்ணிக்கப்படும் அமெரிக்காவில், டனால்ட் ட்ரம்பின் எழுச்சி உணர்த்துவது மக்கள் தங்கள் தனிப்பட்ட பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணத்தைத்தான். அதுதான் அவர்களை குடியேற்றத்திற்கு எதிராகவும், உலகம் தழுவிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் அணிதிரள வைக்கிறது. அந்த வகையில், பிரிட்டனின் வெளியேற்றம் கடந்த இரு தசாப்தங்களாக உலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வாக பொருளாதார நிபுணர்கள் அளித்துவந்த உலகமயமாக்கல், தடையற்ற வர்த்தகம், திறன்மிக்க பணியாளர்கள் எங்கும் செல்லும் வாய்ப்பு போன்ற கொள்கைகளுக்கு சவால் விட்டிருக்கிறது என்பது ஒரு தரப்பு வாதம்.
அப்படியெல்லாம் இல்லை. இது போன்ற பிரச்சனைகள் தற்காலிகமானவைதான். உலகமயமாக்கலுக்குத்தான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று வாதிடுவோரும் உண்டு. பிரிட்டனின் ஓட்டெடுப்பையே அடிப்படையாக எடுத்துக்கொண்டு தங்கள் தரப்பை முன்வைக்கும் இவர்கள், படித்தவர்கள், இளம் வயதினர், நகரத்தில் உள்ளோர் ஆகியோர் பிரிட்டன் ஒன்றியத்தில் தொடர்வதற்கே ஆதரவாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். வருங்காலங்களில் இவர்களுடைய எண்ணிக்கைதான் அதிகரிக்கும் என்பதை ஆதாரமாகக் கொண்டு தடையற்ற பொருளாதாரம்தான் உலகின் எதிர்காலம் என்று உறுதியளிக்கின்றனர் இந்தத் தரப்பினர்.
இவை இரண்டில் எந்தப் பாதையை உலகப் பொருளாதாரம் தேர்ந்தெடுக்கும்? நாடுகளின் பொருளாதாரங்கள் உலகமயமாக்குதலை நோக்கி மேலும் முன்னேறுமா அல்லது பழைய, கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதரச் சூழலுக்குத் திரும்புமா? இவை இரண்டையும் தவிர்த்து புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு வழிவகுக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.