கருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21

முதலில் ஒரு எச்சரிக்கை. பொதுவாக இந்திய மென்பொருள் வல்லுனர்கள், பெயர் போன கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்களில் பணி புரியவே விரும்புபவர்கள். மேலும், சிலர், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் போன்ற பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் தங்களுடைய கல்வியை வீணடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தக் கட்டுரையைப் படிக்கத் தேவையில்லை. ஏனென்றால், கருவி இணையத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும், மேல் சொன்ன நிறுவனங்களில் வாய்ப்புகள் மிகக் குறைவு. மிகைபடுத்தப்பட்ட தம்பட்டம் தான் இங்கு நீங்கள் காண முடியும்.

  1. தீவிரமாக இந்தத் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நிறுவனங்கள் மிகவும் பெயர் எடுத்தவை அல்ல. சின்ன நிறுவனங்கள்
  2. ராட்சச இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களை இந்தத் தொழில்நுட்பம் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் மிகப் பெரிய நிறுவனங்கள்
  3. புதிய கருவிகள், புதிய பயன்பாடுகளை உருவாக்கத் துடிக்கும் இளைஞ(ஞி)ர்கள் இந்தத் துறையில் தாராளமாக இறங்கலாம். புதிய துறையாக இருப்பதால், எதிர்காலம், சற்று சந்தேகமாகத் தோன்றலாம். ஆனால், சொந்த முயற்சிக்கு மிகவும் ஏற்ற துறை. மிக அதிக முதலீடும் தேவை இல்லை. ஸ்பெயின் இத்துறை தோன்றும் வரை மிகப் பெரிய தொழில்நுட்ப முன்னோடி ஒன்றும் இல்லை. இன்று கலக்குகிறார்கள். இந்திய இளைஞர்கள், இந்திய சேவை நிறுவனங்கள் செய்யத் தவறியதைப் பூர்த்தி செய்யலாம் – உலகில் எல்லோருக்கும் தெரிந்த இந்தியக் கணினி வியாபாரக் குறி. உங்களுக்குள் இந்த உந்துதல் இருந்தால், களத்தில் இறங்குங்கள்!

இக்கட்டுரைத் தொடரைப் படித்துவிட்டு, எப்படி இந்தத் துறையில் இறங்குவது என்று கேள்வி எழும் வாசகர்களுக்கு முதலில் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துவது அவசியம்.

  1. தெரு மூலையில் இருக்கும் கணினி நிரல் மொழிகளைச் சொல்லிக் கொடுக்கும் நிறுவனத்திடம் தயவு செய்து இந்தத் துறையில் ஏதாவது வகுப்பு இருக்கிறதா என்று கேட்காதீர்கள். அவர்களது பார்வையில், விஷுவல் பேசிக், ஆரகிள் சொல்லிக் கொடுத்துப் பணம் பண்ணுவதுதான் வியாபாரம்
  2. சரி, உள்ளூர் பல்கலைக் கழகத்தில் தொடர்கல்வி அமைப்பில் ஏதாவது வகுப்பு இருக்குமா என்றும் தேடாதீர்கள். இந்தத் துறையில் கல்வித்துறை பின்தங்கியுள்ளது. அதுவும் அதிகம் நியமங்கள் சரியாக அமையாத இந்தத் துறையைப் பல்கலைக்கழகங்கள் தொட,இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்
  3. ஏதாவது பெரிய நிறுவனம் தனிப்பட்ட வகுப்பு நடத்துகிறார்களா என்று தேடினால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இவர்கள் தங்களுடைய அணுகுமுறை மற்றும் கருவிகள்தான் உலகில் சிறந்தவை என்று விற்பனை கலந்த கல்வியால், உங்களுக்குச் சரியான கல்வி வழங்க மாட்டார்கள்

internetofthings2

சரி, என்னதான் செய்யலாம்? ஒரு ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் தெரு ஓரப் பயிற்சி மையத்திற்கு வந்து விடும், அப்புறம் பார்க்கலாம் என்று மட்டும் சும்மா இருந்து விடாதீர்கள். ஏனென்றால், இத்துறையின் வாய்ப்புகள் ஐந்து ஆண்டு காலம் காத்திருக்காது.
ஆனால், 2020 –க்குள் பல லட்சம் வல்லுனர்கள் இத்துறைக்குத் தேவை. சரியான பயிற்சியும் அணுகுமுறையும் இருந்தால், வேலை மற்றும் வெற்றிகரமான வியாபாரம் – இரண்டும் சாத்தியம்.
களத்தில் இறங்குமுன் இத்துறை உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது, உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும், சொந்த முயற்சியில் என்னவெல்லாம் கற்க வசதிகள் உள்ளன என்று விரிவாக இந்தக் கட்டுரையில் அலசுவோம். அதன் பின், பயிற்சிக்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்றும் பார்ப்போம்.
முதலில் உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

  • சம்பந்தமே இல்லாத துறைகளில், எப்படிக் கருவிகளில் புதிய பயன்பாடுகளை உருவாக்கி, அவற்றைப் பயனுள்ள தோழராக மாற்ற முடியும் என்று சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு சக்கர நாற்காலியில் உள்ள நோயாளிக்கு என்ன செய்தால், நோயாளி பயனுறுவார் என்று இதுவரை எந்த நிரலரும்/பொறியாளரும் சிந்தித்ததில்லை. இன்றைய கருவி இணைய வல்லுனர்கள் சிந்திக்கிறார்கள். எந்த ஒரு பயன்பாட்டு உலகையும் துச்சமாக நினைக்காதீர்கள். உதாரணத்திற்கு, சேற்றில் இறங்கி உங்களது உணர்விகளை நிறுவ வேண்டும் என்றால், முகம் சுளிக்கக் கூடாது – ஏனென்றால், உங்களது களம், விவசாயக் கருவி இணையத் துறையாக இருக்கலாம்
  • உங்களுடைய பயிற்சித் துறையைத் தாண்டி பல வேறுதுறை வல்லுனர்களுடன் ஆலோசித்து ஒரு பயனுள்ள கருவி இணையப் பயன்பாட்டை உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, சக்தி உருவாக்கத் துறைக்கு ஒரு பயனுள்ள கருவியை உருவாக்க நீங்கள் அத்துறையின் வல்லுனராக இருக்கத் தேவையில்லை. ஆனால், அத்துறை வல்லுனர் ஒருவர் மூலம், எங்கு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று அறிந்து, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வல்லமை உங்களிடம் இருக்க வேண்டும்
  • உங்களுடைய துறையில் – அது நிரலுவது, அல்லது கருவி வடிவமைப்பு, அல்லது, இணையத் தொடர்பு, அல்லது கருவி இணையப் பாதுகாப்பு, உங்களிடம் ஏராளமான வல்லமை இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் வல்லமை இருந்தால் மட்டும் போதாது என்பதே இத்துறையின் சிறப்பு. தொழில்நுட்பக் கல்வித்துறை அதிகமாக மென்பொருள் பயன்பாட்டு இடைத்தளத்தைப் (user interface) பற்றி சொல்லித் தரவில்லை. அதையும் தாண்டி, இந்தத் துறையில் மிகவும் தேவையான பயிற்சி, பயன்பாட்டு அனுபவத்தைச் சார்ந்தது (user experience). பல நுகர்வோர் கருவி இணையப் பயன்பாடுகளில், திறன்பேசி போன்ற திரை வசதிகள் இருக்காது. வித்தியாசமாகச் சிந்தித்தல் அவசியம்
  • விடாமுயற்சி மிகவும் தேவை. இத்துறையில் தோல்விகள், வெற்றிகளை விட ஏராளம். உங்களுடைய ஐடியாவைத் துறக்க நீங்கள் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தயாராக இருந்தால், களத்தில் இறங்காதீர்கள். பல தோல்வி முயற்சிகளுக்குத் தயாராகுங்கள். இந்தத் துறையில் தொழில் தொடங்க விழைபவர்கள் ஆரம்பத் தோல்விகள் ஏராளம் என்பதை அறிய வேண்டும். முதலில் அருமையான ஐடியா என்று தோன்றுவதை பயன்பாட்டிற்கேற்ப மாற்றியமைக்கத் தயாராகவும் இருக்க வேண்டும்
  • முழு வீச்சுப் புரிதல் – பாதுகாப்பு பற்றிய கட்டுரைகளில் இதைப் பற்றி அலசினோம். பயன்பாடு என்பது ஒன்று; ஆனால், தகாத பயன்பாடு என்பது முற்றிலும் வேறுபட்டது. கருவி இணைய வடிவமைப்பாளர்கள் தகாத பயன்பாடு பற்றியும் சிந்திக்கும் திறனாளியாக இருக்க வேண்டும். இல்லயேல் உங்களது அருமையான ஐடியா எப்படியோ சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சக்தியைப் படைத்துவிடும். தகாத பயன்பாட்டைத் தவிர்த்தீர்களானால், உங்களது கருவி இணைய முயற்சிக்கு நெடுங்கால வாழ்விருக்கும். இல்லையேல், வந்த வேகத்தில் மறைந்துவிடும்

சரி, பிற துறைகளில் வல்லுனர்களுடன் வேலை செய்யத் தெரிந்த விடாமுயற்சியுள்ள ஒருவருக்கு, டெக்னிகலாக இத்துறையில் எப்படிப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

  1. இணையப் பொறியாளர்கள் – இவர்கள் பலவித கருவிகளை இணையத்துடன் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாறி வரும் கருவி இணைய நியமங்கள், இணைய வேகம், மற்றும் பின்னணி வன்பொருள் விஷயங்களில் வல்லுனர்களாக இருக்க வேண்டியது அவசியம்
  2. MEMS பொறியாளர்கள் – எல்லா நிறுவனங்களிலும் இவர்களுக்கு வேலை இல்லையென்றாலும், (பெரும்பாலான நிறுவனங்கள் உணர்விகளைப் பயன்படுத்தவே செய்கிறார்கள், உருவாக்குவதில்லை) இது ஒரு விசேடமான திறன். Instrumentation, microelectronics, mechatronics போன்ற படிப்புகள் படிப்போர்களுக்கு மிகச் சிறந்த ஒரு துறை
  3. வணிகத் திறனாளர்கள் மற்றும் செயற்கைத் திறனாளர்கள் (business and artificial intelligence specialists) – கருவிகள், மனிதர்களைப் போல இயங்குவதில்லை. இத்துறைகளில் உள்ள நெடுங்காலக் கனவு, சீராக உருவாக்கப்பட்ட தரவுகள். மனிதர்கள், குறைகள் நிறைந்த தரவுகளை உற்பத்தி செய்பவர்கள். அத்தோடு, மனிதர்கள் அரசியல் கைதிகள் – தரவுகள் சொல்வதையும் மீறிச் செயல்படுபவர்கள். இத்தனைக் காலம், மனிதர்களை ஒட்டியே உருவாகிய இத்துறைகள், எந்திரங்கள் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்க வேண்டும். அரசல் புரசலான முன்வைப்புகள் ஒத்து வராது. வழக்கமான கல்வி முறைகள், இங்கு உதவாது. மிகச் சிறிய முடிவுகளைக் கருவிகளிடம் விட வேண்டும். படம் வரைந்து 60 வயது மக்கு வைஸ் பிரஸிடெண்ட்டிற்கு விளக்கத் தேவையில்லை. கருவிகளுக்குச், சின்ன விதிகள், சின்னத் தரவுகள் போதும். முன்வைக்கப்பட்ட முடிவுகள் எப்பொழுதும் நிறைவேற்றப்படும். முடிவுகளை நிறைவேற்ற துல்லியமான விதிகள் மட்டுமே தேவை. கருவிகளிலிருந்து வரும் தரவுகள் எப்பொழுதும் ஒரே பாணியில் இருக்கும்
  4. தகவல் பாதுகாப்பு வல்லுனர்கள் – பாதுகாப்புப் பற்றிய கட்டுரைகளில் பார்த்தது போல, இவர்கள் மாறி வரும் மறைகுறியாக்க முறைகள் எப்படி கருவி இணைய உலகில் பல்வேறு தளங்களில் பயன்படுத்தி இணைய விஷமிகளின் தாக்கல்களைச் சமாளிப்பது என்பதில் குறியாக இருக்க வேண்டியவர்கள். ஊடுருவல் என்பது ஒரு பூனை, எலி சமாச்சாரம். இன்றைய பிரமாதமான பாதுகாப்பு, நாளைய பாதுகாப்பு ஓட்டை. கணித அறிவும், கணினி மென்பொருள் அறிவும் கைகோர்த்து எதையும் சந்தேகத்துடன் அணுகும் இவர்கள் கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமானவர்கள்
  5. பயன்பாட்டு இடைத்தள மற்றும் அனுபவ வல்லுனர்கள் – புதிய கருவிகளுடன் தொடர்பு என்பது திரைத் தடவல் வடிவில் இருக்க வேண்டியதில்லை. சிறிய கருவிகளுக்கு புதிய அணுகுமுறைகள் தேவை. இதுவரை திறன்பேசி, மற்றும் கணினி பயன்பாட்டு இடைத்தள வீரர்கள், தங்களை மாற்றிக் கொண்டால்தான் இத்துறையில் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு, எங்கோ ஒரு காட்டுப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் ஒரு சுற்றுச்சூழல் கருவியுடன் எப்படித் தொடர்பு கொள்வது?
  6. திறன் கருவி மென்பொருள் நிபுணர்கள் (smart devices software engineers) – இவர்கள் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் என்று நின்று விடாமல், பல புதிய தொழில்நுட்பங்களோடு சமாளிக்க வேண்டும். மாறி வரும் புதிய நியமக் கருவிகளுடன் தொடர்பு, மற்றும் பாதுகாப்பு என்று இவர்களது பங்கு விரிவானது. சில நிறுவனங்களில் இவர்களே பாதுகாப்பு வல்லுனர்கள். இவர்களது பங்கு பயன்பாட்டோடு நின்றுவிடாமல், கருவிகளை தொலைதூரத்திலிருந்து பராமரிப்பது எப்படி என்பது வரை விரியும். ஜாவா, பைத்தான் மற்றும் பேர்ல் போன்ற புதிய கணினி நிரல்மொழிகள் இந்தப் பயணத்தில் உதவும்
  7. வலையமைப்பு நிபுணர்கள் (networking specialists) – குறிப்பாக, Zigbee, 6LowPAN, Bluetooth LE, WiFi, போன்ற விஷயங்களில் இவர்கள் தேர்ந்திருத்தல் அவசியம். எந்த ஒரு வலையமைப்பும், ஒரே தொழில்நுட்பத்தோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு வரப் போவதில்லை. இந்த விதவிதமான நியமங்களுடன் ஒரு கருவி இணைய அமைப்பு வேலை செய்வது அவசியம். அத்துடன் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்

இவ்வாறு, பல புதிய வாய்ப்புகளும், இன்றைய வாய்ப்புகளின் சற்று மாறுபட்ட வாய்ப்புகளும் இத்துறையில் உள்ளன. ஆனால், இதுவரை கணினித் துறையில் இல்லாத அளவு, மாறுபட்ட சிந்தனையுடன் அணுக வேண்டிய வாய்ப்புகள் இவை – நீங்கள் புதுத் தொழில் தொடங்க விழைபவரோ அல்லது, புதிய வேலை தேடுபவரோ எப்படி இருந்தாலும் சரி.
கல்லூரிகள் இன்னும் இந்தத் துறைக்குத் தேவையான கல்வி முறையை இன்னும் அமைக்கவில்லை. ஓரளவிற்கு நிரலுவதில் தேர்ந்தவர்கள், இத்துறையில் முன்னேற பல கருவிகள் உள்ளன. சிலவற்றை இங்கு பார்ப்போம்: Top 49 Tools For The Internet of Things | ProfitBricks Blog
அடிப்படையான விஷயங்களைச் செய்து புரிந்து கொள்ள விழைபவர்களுக்கு, இங்கு ஆர்டினோ என்ற ஒரு நிரல் மொழி தாங்கிய ஒரு கருவிகள் கூட்டு. சில சின்ன பிராஜட்டுகளைச் செய்து நீங்கள் நன்றாக தேறியவுடன் உங்களது கற்கும் முறைகளில் நீங்கள் முன்னேறலாம். இது போன்ற பல கருவிகளின் கூட்டு கிடைக்கிறது: Gikfun Starter Learning Kit with Power Supply 9V 1A for Arduino EK8412: Amazon.ca: Electronics
ஆர்டினோ பிராஜக்ட்டுகள் செய்ய பல புத்தகங்களும் கிடைக்கின்றன: Amazon.ca: arduino project book
இந்த கருவிகள் கூட்டு பயன்படுத்த உங்களுக்கு இந்தத் துறை எப்படி வேலை செய்கிறது என்று ஓரளவு புரியவரும். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப தொழில்நுட்பம் கற்பவர்கள் அவசியம் இது போன்ற கருவிகளின் கூட்டு கொண்டு கற்றால், எதிர்காலத்தில் மேலும் பயின்று இந்தத் துறையில் முன்னேறலாம்.
***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.