பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி?

 

UKIP_Brexit_supporters_ap_img

 
ஒரு வழியாக யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் எடுத்துவிட்டது. உலகப் பொருளாதார அரங்கில் பெரும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தினாலும், ஓரளவுக்கு இது எதிர்பார்க்கப்பட்டது என்றே சொல்லவேண்டும். இந்த ஓட்டெடுப்புக்கு முன்னால் நடந்த கருத்துக் கணிப்புகள், முடிவு இழுபறியாக இருக்கும் என்று தெரிவித்த போதிலும், ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவுக்கான கை ஓங்கியிருந்தது என்பதையும் குறிப்பிட்டன. இருந்தாலும், ஒன்றியத்திலேயே தொடர்வது என்ற அணியை ஆதரித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமெரனும் அவரது சகாக்களும், வெளியேறுவது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், மக்கள் அதற்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். இதே நம்பிக்கைதான் ஒன்றியத்தின் மற்ற நாட்டு தலைவர்களுக்கும், ஒபாமா உட்பட்ட உலகின் பல முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கும் இருந்தது. முடிவில் மக்கள் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்துவிட்டது.
யூரோப்பிய ஒன்றியத்தில் 1973ம் ஆண்டு பிரிட்டன் சேர்ந்த போது (அப்போது அது யூரோப்பியன் எகனாமிக் கம்யூனிட்டி – EEC என்ற பெயரில் இயங்கி வந்தது) பிரிட்டனின் பொருளாதாரம் அவ்வளவு சிலாக்கியமான நிலையில் இல்லை. மாறாக ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருந்தன. இதன் காரணமாகவே 1975ம் ஆண்டு நடைபெற்ற ஓட்டெடுப்பில் ஒன்றியத்தில் சேரும் முடிவுக்கு 67% பிரிட்டிஷ் மக்கள் ஆதரவு அளித்தனர். பின்னர் 1993ம் ஆண்டு தனி நாடாளுமன்றம், பொதுவான நாணயம், தனி நீதிமன்றம் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு யூரோப்பிய யூனியன் ஒப்பந்தம் எட்டப்பட்ட போது, பிரிட்டனும் அதில் கையெழுத்திட்டாலும் பொது நாணயம் என்பதிலிருந்து விலக்கு பெற்று, தனிப்பட்ட பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்துடனேயே ஒன்றியத்தில் தொடர்ந்தது. ஆனால் புத்தாயிரத்திற்குப் பிறகு நிலைமை மாற்றமடைந்து பிரிட்டனின் பொருளாதாரம் சீரடைந்தது. மாறாக யூரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கநிலை காரணமாக ஒன்றியத்தின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதனால் ஒன்றியத்தில் தொடர்வது தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று பிரிட்டனில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.
இப்போது யூரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பிரதமர் டேவிட்கேமெரன்தான், பிரிட்டன் வெளியேறுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது ஒரு நகைமுரண். பிரிட்டனின் பிரதான கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வந்த   வலதுசாரிகளான யூகேஐபி (UK Independence Party) கட்சி உள்ளூர் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வந்தது.   யூகேஐபி,  பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த கட்சி. இது ஒருபுறமிருக்க 2013ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், பிரிட்டன் பொதுத்தேர்தலில் கேமெரனின் கன்சர்வேட்டிவ் கட்சியை விட, தொழிற்கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமது கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்ந்த   டேவிட் கேமெரன், ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்தார். 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றால் ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படும் என்றும், அதைத் தொடர்ந்து பிரிட்டன் ஒன்றியத்தில் தொடரவேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி ஒரு பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்படும் என்று அறிவித்தார் அவர்.
இந்த அறிவிப்பை அவரது கட்சியிலேயே பலர் ரசிக்கவில்லை. இது குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். அதற்கேற்றாற்போல் அந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கே மக்கள் ஆதரவு இருந்தது. எனவே, இது ஒரு அபாயகரமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்று எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் இந்த அறிவிப்பு பற்றிய தங்களது கவலைகளை வெளியிட்டனர். இதை வரவேற்ற ஒரே கட்சி யூகேஐபிதான். பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால், பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக அக்கட்சியின் தலைவர் நிஜல் ஃபராஜ் அறிவித்தார். ஆனால் கேமெரன் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஒன்றியத்தின் கடன் சிக்கல் அதிகரித்துவிட்டதாகவும் அதைச் சமாளிக்கும் செயல்திட்டத்தை உடனே வகுக்காவிட்டால், உறுப்பு நாடுகள் அனைத்தையும் அது பாதிக்கும் என்று தெரிவித்தார் அவர். உறுப்பு நாடுகளிடையே ஆரோக்கியமான வர்த்தகப் போட்டி ஒன்றிற்கான சூழலையும் யூரோப்பிய ஒன்றியம் உருவாக்கத் தவறிவிட்டது என்று கூறிய அவர், உடனடிச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தவிர்க்க முடியாத ஒன்று என்று தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை மறு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கான முக்கிய காரணம் பொருளாதாரமாக இருந்தபோதிலும், மக்கள் மத்தியில் அதற்கான தலையாய காரணம் வேலைவாய்ப்பும், பிரிட்டனில் அதைப் பாதித்து வந்த அயல்நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோரும்தான். ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நுழைவுக் கட்டுப்பாடுகள் (விசா) இல்லாத காரணத்தால் பெருமளவில் யூரோப்பாவில் இருந்து, குறிப்பாக கிழக்கு யூரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டது என்னவோ உண்மை. போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் கீழ்மட்டத்து வேலைகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். இது பிரிட்டிஷ் மக்கள் இடையில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியது. அண்மைக்காலத்தில் சிரியா, எகிப்து போன்ற மேற்காசிய நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக யூரோப்பிய நாடுகளுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளின் மூலமாக யூரோப்பாவில் நுழைந்த பிறகு இவர்கள் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி போன்ற பொருளாதார வளம் மிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இது தீவிரவாதத்தைப் பற்றிய அச்சத்தை இந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆதரவு அதிகரித்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில், 2015ம் ஆண்டு   பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, தமது வாக்குறுதியில் குறிப்பிட்டபடி ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளை கேமெரன் தொடங்கினார். பொருளாதார சீர்திருத்தங்கள், குடியேற்றக் கட்டுப்பாடுகள், ஒன்றியம் விதிக்கும் சட்டங்களை உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் தடுப்பதிகாரம் (veto) முறையில் நிராகரிக்கும் உரிமை போன்ற ஷரத்துக்களின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. பிரிட்டனுக்கு மேலும் அதிக உரிமைகளை விட்டுக்கொடுப்பது, ஒன்றியத்தின் ஒற்றுமையை நிலைகுலையச் செய்யும் என்ற காரணத்தால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தக் கோரிக்கைகளை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் எட்டப்பட்ட ஒப்பந்தம் பிரிட்டனின் கோரிக்கைகளின் நீர்க்கப்பட்ட வடிவமாகவே இருந்தது. தவிர, இந்தப் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் நிபந்தனையாக பிரிட்டன் பொதுவாக்கெடுப்பில் ஒன்றியத்துடன் இணைந்திருப்பதை ஏற்று வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புதிய நடைமுறைகளினால் பிரிட்டனுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை என்று கூறிய ஒன்றிய எதிர்ப்பாளர்கள், வாக்களிப்பை விரைந்து நடத்துமாறு வலியுறுத்தினர்.          இதையெடுத்து ஜூன் 9ம் தேதி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜூன் 23ம் தேதி வாக்கெடுப்பு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. வாக்கெடுப்பிற்கு முன் ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்ற அணியினரும் அதிலிருந்து விலக வேண்டும் என்ற அணியினரும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். கட்சி வேறுபாடுகளின்றி எல்லாக் கட்சியிலும் இரு தரப்பையும் ஆதரிப்போர் இருந்தனர். கேமெரன் ஒன்றியத்தில் தொடர்வதை விரும்பினாலும், சர் ஜெரால்ட் ஹோவர்த் போன்ற அவரது கட்சி எம்பிக்கள் ஒன்றியத்திலிருந்து விலகும் அணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர்.
வாக்கெடுப்புக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், முடிவு எந்தப் பக்கமும் சாயலாம் என்று கணித்திருந்தன. அதே போலவே மக்களின் தீர்ப்பு இருந்தாலும், 51.9% பேர் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48.1% பேர் ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தனர். பிரிட்டனின் பகுதிகளைப் பொருத்தவரை, லண்டனும், ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால், வெளியேறவேண்டும் என்ற அணிக்கு மற்ற பகுதிகளில் அதிக வித்தியாசத்தில் விழுந்த வாக்குகள் இந்தப் பகுதிகளில் விழுந்த வாக்குகளை மிஞ்சிவிட்டன.

United_Kingdom_EU_referendum_2016_area_results_2-tone.svg

படம் : ஆதரவும் எதிர்ப்பும் (மஞ்சள் – தொடரவேண்டும்; நீலம் – வெளியேறவேண்டும்)

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், இளம் வாக்காளர்கள் ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்ற அணிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வயதானவர்கள் வெளியேறவேண்டும் என்று ஓட்டுப் போட்டிருந்தனர். இதைத் தவிர, தெற்காசியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் வெளியேறவேண்டும் என்றே வாக்களித்திருந்தனர். ஒன்றியத்திலிருந்து வரும் மக்கள் குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், அந்த வேலைகள் தங்களுக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் இவ்வாறு வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ‘வெளியேறு’ அணியினர் இந்த வாதத்தை நிராகரித்து விட்டனர். பிரிட்டிஷருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதுதான் தங்கள் கோரிக்கை எனவே தெற்காசியர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.
‘வெளியேறு’ என்ற அணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தோர், ஒன்றியத்திலிருந்து வந்து குடியேறுபவர்களால் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்ற வாதத்தை நன்கு உபயோகப்படுத்திக்கொண்டனர். 2015ம் ஆண்டு மட்டும் சுமார் 130,000 பேர் பிரிட்டனில் குடியேறியிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் இதற்கு மேலும் வலு சேர்த்தது. கடந்த பொதுத்தேர்தலின் போது, குடியேற்றத்தை பத்தாயிரங்களாகக் குறைப்போம் என்ற கன்சேர்வேட்டிவ் கட்சியினரின் வாக்குறுதி பொய்த்துப் போனது மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு மாறாக, ஒன்றியத்தில் சேர்வதின் நன்மைகளைப் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல், சேராவிட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களை முன்வைத்தே ‘தொடரவேண்டும்’ என்ற அணியினர் பிரச்சாரம் செய்தனர். இந்த எதிர்மறையான பிரச்சாரம் எடுபடவில்லை.   வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்த பல பகுதிகளில் குடியேற்றம் அதிக அளவில் நிகழவில்லையென்றாலும், ஒப்பீட்டளவில் அவை ஏழ்மையான பகுதிகளாக இருந்தன. ஒருபுறம், லண்டனும் அதன் சுற்றுப்புறங்களும் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் ஏழ்மை அதிகரித்துக்கொண்டிருந்தது. இப்படி பிரிட்டனில் அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தேசிய உடல்நல சேவை (NHS) போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவினங்களை, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசு குறைத்தது, அடித்தட்டு மக்களையே பெரிதும் பாதித்திருந்தது. பொருளாதார ரீதியில் மிகப் பலவீனமாக இருந்த இவர்களிடம் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற கோஷம் எடுபடவில்லை.
சரி, அடுத்து என்ன நடக்கும்? இந்தப் பொது வாக்கெடுப்பின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். நாடாளுமன்றத்தில் விவாதித்து, இதற்கு மாறான முடிவை அவர்கள் எடுக்கலாம். ஆனால், மக்களின் தீர்ப்பை எதிர்த்துச் செயல்பட எந்த ஒரு அரசும் விரும்புவதில்லை அல்லவா?
அதன்படியே ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஆயத்தங்கள் ஆரம்பித்துவிட்டன. ‘தொடரவேண்டும்’ என்ற அணிக்கு ஆதரவளித்த பிரதமர் கேமெரன் தனது பதவியை உடனே ராஜினாமா செய்து விட்டார். ஏற்கனவே தெரிவித்திருந்தபடி லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50வது ஷரத்தைப் பயன்படுத்தி ‘வெளியேறும்’ நடைமுறைகளை வரையறுக்க ஒன்றியத்துடன் பேச்சுநடத்தப் போவதாகவும், அதனால் அக்டோபர் மாதம் வரை இந்தப் பதவியில் தொடரப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
லிஸ்பன் ஒப்பந்தம், யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒரு உறுப்பு நாடு வெளியேறும் நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும் தனிப்பட்ட ஒரு நாடு இதுவரை அந்த நடைமுறைகளைப் பயன்படுத்தியதில்லை. டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தும் பிரான்ஸின் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான செயிண்ட் பார்த்தலேமியும் மட்டும்தான் இதுவரை வெளியேறி உள்ளன. அந்த வகையில் ஒன்றியத்துக்கும் இது ஒரு புது அனுபவம்தான்.
பொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, இதனை எதிர்த்து வரும் உலக நாடுகளின் தலைவர்களும் (டானல்ட் ட்ரம்ப் போன்ற ஒரு சிலர் விதிவிலக்கு), பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தது போல், உலகின் பொருளாதாரம் சிறிது அதிர்ச்சியும் ஆட்டமும் கண்டிருக்கிறது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்திருக்கின்றன. பிரிட்டனின் நாணயமான பவுண்ட் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான், தற்காலிகமான எதிர்வினைகள்தான் என்று ‘வெளியேறு’ அணியினர் சமாளித்தாலும், இன்னும் சில விளைவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இதுவரை தடையில்லா வர்த்தகம் என்ற அடிப்படையில் யூரோப்பிய நாடுகளுடன் செய்துவந்த வணிகத்தை உலக வர்த்தக நிறுவன விதிகளின் அடிப்படையில் பிரிட்டன் தொடர வேண்டியிருக்கலாம். எனவே எந்த விதச் சிறப்பு சலுகைகளையும் பிரிட்டன் யூரோப்பிய நாடுகளிலிருந்து பெறப்போவதில்லை. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிரிட்டன் வெளியேறுவதை விரும்பவில்லை என்ற போதிலும், போவது என்று முடிவெடுத்தவுடன் பிரிட்டன் அதிகச் சலுகைகள் பெற்றுச் செல்வதை விரும்பாது. பொருளாதாரத்தைப் பொருத்த வரை, இந்த வருடம் பிரிட்டனின் பொருளாதாரம் ஏற்கனவே 2% தேக்கமடைந்துவிட்டது. ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவு இதனை மேலும் பாதிக்கக்கூடும்.
ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பெரும் ஆதரவு மக்களிடமிருந்து வந்ததற்குக் காரணம் ‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை’ என்ற கோஷம்தான். எனவே பிரிட்டன் தன் குடியுரிமை விதிகளை மேலும் கடுமையாக்க நேரிடும். ஒன்றியமும் இதற்குச் சமமான விதிகளை அறிமுகப்படுத்த நேரிடலாம். இது திறன் மிக்க பணியாளர்கள் இரு பக்கங்களிலும் சுதந்தரமாகச் செல்வதைத் தடுத்துவிடும்.
சில மாதங்கள் முன்னால்தான் கிரேட் பிரிட்டனில் தொடர்வதா வேண்டாமா என்று ஓட்டெடுப்பு நடத்தி, தொடர்வது என்று ஸ்காட்லாந்து மக்கள் தீர்மானித்திருந்தனர். இப்போதும் ஒன்றியத்தில் தொடர்வது என்ற தரப்புக்கே அவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்த பிரிட்டன் வெளியேறுவது என்ற முடிவை எடுத்ததால், பிரிட்டனில் தொடர்வதா வேண்டாமா என்ற தீர்மானத்தை மீண்டும் பொது வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை எழுப்பியிருக்கின்றனர். இது போன்ற கோரிக்கை வட அயர்லாந்திலும் எழுந்திருக்கின்றது. பொருளாதாரச் சிக்கல்கள் போதாதென்று இதுபோன்ற அரசியல் சிக்கல்களையும் பிரிட்டன் சமாளிக்கவேண்டும்.
பிரிட்டனின் இந்த வெளியேற்றத்தால் ஒன்றியத்தின் நிலையும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே உறுப்பு நாடுகள் சிலவற்றின் கடன் தொல்லையால் ஆட்டம் கண்டிருக்கும் அதன் பொருளாதாரம் மேலும் சரியக்கூடும். வெளியேறுவதாகப் பாய்ச்சுக் காட்டிக்கொண்டிருக்கும் கிரீஸ் ஒரு வழியாக ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள ஒன்றிய எதிர்ப்பாளர்கள் இது போன்ற கோரிக்கைகளை எழுப்பம் சாத்தியக்கூறும் உண்டு. ஏற்கனவே மேற்காசியக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில், குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கக்கோரும் குரல்கள் வலுவாக எழக்கூடும்.
இது போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, அந்தத் துறையில் நிபுணத்துவம் தேவைப்படும் முடிவுகளை சாமானியர்கள் தீர்மானிக்கும்படி விடவேண்டுமா என்ற கேள்வியையும் இந்த வாக்கெடுப்பு எழுப்பியிருக்கிறது. மக்களின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கு இடம் கொடுக்காத வண்ணம் நடத்தப்படும் இது போன்ற வாக்கெடுப்புகள் எது மாதிரியான விளைவுகளை உள்நாட்டிலும் உலக அளவிலும் ஏற்படுத்தக்கூடும் என்பதை கூடிய விரைவில் நாம் காணப்போகிறோம்.

2 Replies to “பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி?”

Leave a Reply to BanumATHYCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.