திருப்பாவையின் மறைபொருள்

andalஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த ‘திருப்பாவை’ ஓர் அற்புதமான நூலாகும். அது பலவித இயற்கைக் காட்சிகளைக் காட்டுகிறது. திருமாலின் பெருமைகளையும் அவரின் கல்யாண குணங்களையும் விளக்குகிறது. ஆன்மிக சிந்தனைகளுக்கு வழிவகுக்கிறது. வெள்ளி எழுந்தது, வியாழன் உறங்கிற்று” என்பதைக் காட்டிக் கால ஆய்விற்கும் வழிகாட்டுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகவும், அங்கு எழுந்தருளி உள்ள வடபத்ரசாயியை கண்ணனாகவும்  தன்னை ஓர் ஆயர் சிறுமியாகவும் கருதிக்கொண்டு ஆண்டாள் பாவை நோன்பு நோற்க ஒவ்வோர் இல்லமாகச் சென்று உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எல்லாம் “பொழுது விடிந்து விட்டது; நோன்பு நோற்க வாருங்கள்” எனச் சொல்லி எழுப்புவதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
நூலின் அமைப்பு முறை
மொத்தம் முப்பது பாசுரங்களைக் கொண்ட இந்நூலின் அமைப்பு முறை அருமையானது ஆகும். முதல் ஐந்து பாசுரங்களை முன்னுரையாகக் கருத இடமுண்டு. முதல் பாசுரம் மார்கழி நோன்பு நோற்க வேண்டிய காலத்தைக் காட்டுகிறது. இரண்டாம் பாசுரம் நோன்பின்போது கடைபிடிக்க வேண்டிய சடங்குகளைக் குறிக்கிறது. மூன்றாம் பாசுரம் நோன்பினால் கிடைக்கும் பயன்களைக் குறிக்கிறது. நான்காம் பாசுரம் இவ்வுலகத்திற்கு முக்கியமான நீராதாரத்தைக் கொடுக்கும் மழைக்கடவுளை வேண்டுகிறது. ஐந்தாம் பாசுரம் நோன்பின்போது எவ்விதத் தடங்கல்களும் வராதிருக்கக் கண்ணனின் திருநாமங்களைச் சொல்லி அவன் புகழ் பாடுகிறது.
ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் முடிய இல்லங்களில் துயின்று கொண்டிருக்கும் பெண்பிள்ளைகள் எழுப்பப்படுகிறார்கள். எல்லாரும் சேர்ந்து கண்ணனின் அரண்மனையை அடைகிறார்கள். கண்ணனின் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டிருக்கும் கோயில் காப்போன் மற்றும் வாயில் காப்போன் ஆகியோரிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டு மணிக்கதவம் திறக்க வேண்டுவது பதினாறாம் பாசுரமாகும். நந்தகோபன், யசோதைப்பிராட்டி, கண்ணபிரான், பலதேவன் ஆகியோரை எழுப்பும் பாசுரம் பதினேழாம் பாசுரமாகும்.
பதினெட்டும், பத்தொன்பதும் நப்பின்னையிடம் வேண்டுவதாகும். இருபதாம் பாசுரம் கண்ணன், நப்பின்னை இருவரும் துயிலெழுந்து எமக்கு அருள் செய்ய வேண்டுகின்றது. இருபத்தொன்றும், இருபத்திரண்டும் தங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கண்களை விழித்து ‘எம்மைப்பார்’ என்று ஆயர் சிறுமிகள் வேண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன. எம்பெருமானின் நடையழகைக் காண விரும்பி ”நீ எழுந்து நடந்து வந்து சிங்கானத்தில் அமர்ந்து எம் குறைகளைக் கேட்பாயாக” என்று இருபத்து மூன்றாம் பாசுரம் அருளப்பட்டுள்ளது.
இருபத்து நான்காம் பாசுரம் பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பாசுரமாகும். இருபத்தைந்தாம் பாசுரம் கண்ணனின் அவதாரம் பற்றிப் போற்றிப் புகழ்கிறது. இருபத்தாறும், இருபத்தேழும் நோன்புக்கான சாதனங்களை வேண்டுகின்றன.
இருபத்தெட்டு ”நாங்கள் ஒன்றும் அறியாத சிறுமிகள்” என்று கூற, இருபத்தொன்பது “எப்பிறவியிலும் உமக்கே நாங்கள் உறவு” என வேண்டுகின்றன. முப்பது திருப்பாவையைப் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பயன்களை அருளிச் செய்கிறது.
ஆழ்ந்த பொருளை நுணுகி அறிதல்
இந்த அமைப்பு முறையில் உள்ள திருப்பாவையில் ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம்வரை இல்லினுள்ளே உறங்குகின்ற பெண்பிள்ளைகளை எழுப்புவதுபோல் அமைந்துள்ளன.  பாசுரங்களுக்கு மேல்பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும், மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.

”புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்[து] அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”

இது ஆறாம் பாசுரமாகும். இப்பாசுரம் பெரியாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும். பொழுது விடிந்ததற்கு அடையாளமாக பறவைகள் எழுந்து ஒலிஎழுப்புவது “புள்ளும் சிலம்பின காண்” என்று காட்டப்பட்டுள்ளது. பறவைகள் பெரும்பாலும் செடி கொடிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நந்தவனங்கள் ஆகியவற்றில்தான் குடியிருக்கும். பெரியாழ்வாரும் அரங்கனுக்குப் பூமாலை சூட்டுவதற்காகப் பூக்கள் பறிக்க எப்பொழுதும் நந்தவனத்திலேயேதான் இருப்பார்.

பெரியாழ்வார்
                பெரியாழ்வார்

“பிள்ளாய் எழுந்திராய்” எனும் சொற்றொடரில் உள்ள ‘பிள்ளாய்’ என்பதும் பெரியாழ்வாரையே குறிக்கிறது. பிள்ளைகள் என்பவர்கள் ஒன்றும் அறியாதவர்கள். நாச்சியாரும் பின்னால்  “அறியாத பிள்ளைகளோம்” என்று அருளுவார்.
உயர்வு, தாழ்வு, நல்லது, கெட்டது என்பன அறியாத பருவம்தான் பிள்ளைப்பருவம். பெரியாழ்வாரும் பிள்ளைக் குணம் கொண்டு பகவானின் உயர்வையே மறந்துவிடுகிறார்!
அவர் மதுரை மாநகரில் பொற்கிழியறுத்து, நாராயணனின் பரதத்துவத்தை நிலை நாட்டினார். அதனால் மனம் மகிழ்ந்த மன்னன் பெரியாழ்வாரைத் தன் பட்டத்து யானை மீது இருத்திப் பவனி வரச் செய்தான்.
அதை காணப் பகவானே வைகுந்தத்திலிருந்து வந்துவிட்டார். அவரின் திருக்கோலத்தைக் கண்ட பெரியாழ்வார் அப்பகவானுக்குக் கண் எச்சில் பட்டுவிடப் போகிறதே என்று எண்ணிப் “பல்லாண்டு பல்லாண்டு” என்று தன்னை மறந்துப் பகவானின் உயர்வையும் மறந்து பிள்ளைக் குணத்தால் மங்களாசாசனம் செய்தார். எனவே ’பிள்ளாய்’ என்பது பெரியாழ்வாரையே குறிக்கிறது.
’புள்ளரையன் கோயில்’ என்பது பக்ஷிராஜனான கருடனின் திருக்கோயிலைக் குறிக்கும். பெரியாழ்வார் ’பெரிய திருவடி’ என்று போற்றப்படும் கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில் ”வெள்ளை விரி சங்கு” என்று அருளுகிறார். பாண்டிய பட்டர் பெரியாழ்வாரைக் கொண்டாடும் போது,

“பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத………..”

என்று காட்டுவார். அப்படிப் பெரியாழ்வார் ஈண்டிய சங்கம் எடுத்தூதியதைத்தான் ’வெள்ளை விரிசங்கம்’ என்று இப்பாசுரமும் காட்டுகிறது. மேலும் இப்பாசுரத்தில், “பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி” என்று பூதகி வதமும், சகடாசூர வதமும் காட்டப்படுகின்றன.
பெரியாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் பெரிதும் ஈடுபட்டுத் தம் பாசுரங்களில் இந்த விருத்தாந்தங்களை அனுபவிப்பவர். பெரியாழ்வார் திருமொழியில் முதன்முதலில் வருவது ‘பிறங்கிய பேச்சியை சுவைத்திட்டு’ என்பதாகும். இப்பாசுரத்தில் உள்ள ‘வெள்ளத்தரவில்’ என்பதைப் பெரியாழ்வார் அருளியுள்ள ‘அரவத்தமளியோடு’ என்பதோடு ஒப்பிட்டுச் சுவைத்து மகிழலாம்.
‘முனிவர்களும் யோகிகளும்’ என்பதும் பெரியாழ்வாரைத்தான் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏனெனில், முனிவர்கள் மற்றும் யோகிகள் ஆகியோர் பற்றற்றவர்கள். பகவானிடம் எதையும் விரும்பிக் கேட்க மாட்டார்கள். பெரியாழ்வாரும் பெருமாளிடம் எதையும் விரும்பிக் கேட்கவில்லை. பெரியாழ்வார் திருமொழியின் சாராம்சமான கடைசிப் பாசுரத்தில் கூட அவர் எதையும் வேண்டிப் பிரார்த்திக்கவில்லை.
ஆக, ஆறாம் பாசுரத்தில் இப்படிப் பெரியாழ்வார் எழுப்பப்படுகிறார் என்பது தெரிகிறது.
பேய்ப் பெண்ணை எழுப்புதல்
அடுத்துள்ள ஏழாம் பாசுரத்தில், குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கீசு கீசென்[று] எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்”

குலசேகர ஆழ்வார்
               குலசேகர ஆழ்வார்

இதில் குலசேகர ஆழ்வார் எழுப்பப்படுகிறார். பொழுது விடிந்ததற்கு அடையாளமாக ஆனைச்சாத்தன் என்ற குருவி எழுந்து பேசுவது, அதாவது ஒலிப்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனைச்சாத்தன் என்பது ‘வலியன்’ என்று வழங்கப்படும் ‘பரத்வாஜப் பக்ஷி’யாகும். இக்குருவி மலையாள மொழியில் ‘ஆனை சாதம்’ என்று வழங்கப்படும். ஆனைச்சாத்தன் என்பது மலையாள மொழிச் சொல்லின் திரிபாகும். குலசேகர ஆழ்வாரும் மலையாள தேசத்தைச் சார்ந்தவர். அவர் மலையாள நாட்டில் உள்ள வஞ்சிக்களம் எனும் ஊரில் அவதரித்தவர் ஆவர்.
’பேய்ப்பெண்ணே!” என்பதும் குலசேகர ஆழ்வாரைக் குறிப்பதாகும். அவர்

“பேய ரேயெனக்  கியாவரும், யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்,
’ஆய னே!அரங்கா! என்ற ழைக்கின்றேன்,
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே”
[பெருமாள் திருமொழி 3.8]

என்பது அவர் அருளிச் செயலாகும். எனவே நாச்சியார் அவரை ‘பேய்ப்பெண்ணே!’ என்றழைக்கிறார்.
குலசேகராழ்வாரின் அரண்மனையில் எப்பொழுதும் ஸ்ரீவைஷ்ணவர்களே நிறைந்திருப்பார்கள். அதை மந்திரிகள் விரும்பவில்லை. எனவே அவர்கள் பெருமாளின் ஆபரணங்களைத் திருடி மறைத்துவிட்டு அப்பழியைப் பாகவதர்கள் மேல் போட்டுவிட்டார்கள்.
“என்னடியார் அது செய்யார்; பாகவதர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்” என்று கூறி அதற்காகச் சத்தியம் செய்ய குலசேகராழ்வார் பாம்புள்ள குடத்திலே கையைவிட்டார். பாம்பு அவரைத் தீண்டாமல் வெளியே வந்து தலையை ஆட்டி மூன்று முறை சத்தியம் செய்து போயிற்று. பிறகு நகையை மறைத்தவர்கள் மன்னிப்பு கேட்டு நகையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இந்த வரலாற்றை நினவூட்டும் விதமாகத்தான் இப்பாசுரத்தில் ‘காசும் பிறப்பும்’ எனும் சொற்றொடர் அமைந்துள்ளது. காசு மற்றும் பிறப்பு என்பவை ஆயர் பெண்கள் அணிகின்ற அச்சுத்தாலி ஆமைத்தாலி ஆகியவற்றைக் குறிக்கின்றன. இப்படி ஆபரணங்கள் பேசப்படுவதன் மூலம் குலசேகர ஆழ்வாரே காட்டப்படுகிறார். மேலும் ’பிறப்பு’ என்பது குலசேகரர் ‘ஊனேறு செல்வத்து’ பதிகத்தில் திருமலையின் மேல் ஏதேனும் ஒரு பிறப்பை வேண்டியதையும் குறிக்கிறது.
‘நாயகப் பெண்பிள்ளாய்’ எனும் சொற்றொடரும் குலசேகர ஆழ்வாரையே காட்டும். ஆழ்வார்கள் வரிசையைப் பார்த்தால் குலசேகர ஆழ்வார் நடு நாயகமாக விளங்கிறார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் என முன்னால் ஐந்து ஆழ்வார்களும், ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் எனப் பின்னால் ஐந்து ஆழ்வார்களும் இருக்க நடுநாயகமாய் குலசேகராழ்வார் விளங்குகிறார்.
‘பெண்பிள்ளாய்’ என்பதும் இவரையே காட்டும். குலசேகராழ்வார் ‘ஏர்மலர்ப் பூங்குழல்’, ‘ஆலை நீள்கரும்பு’, மற்றும் ‘மன்னுபுகழ் கோசலை’ பதிகங்களில் தம்மைப் பெண்ணாக வைத்தே அருளிச் செய்திருக்கிறார்.
பெருமானுக்குக் ‘கேசவன்’ எனும் திருநாமம் குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அரக்கனை அழித்ததால் ஏற்பட்டது. அத்தகைய கேசி வதத்தை முதன்முதல் பேசியவர் குலசேகர ஆழ்வாரே ஆவார்.
“கேட்டே கிடத்தியோ” என்பதும் குலசேகர ஆழ்வாரையே காட்டுகிறது. ஒரு சமயம் இராமாயண உபன்யாசத்தில் ஸ்ரீஇராமன் கர தூஷணரோடு தனியாய் யுத்தம் செய்கிறான் என்று சொன்னதைக் கேட்ட குலசேகரர் உடனே அமைச்சரை அழைத்து, “இராமபிரானுக்குத் துணையாய் நம் சைன்யத்தைத் திரட்டு” என ஆணையிட்டார். அப்படி ஓடியவரே இப்போது கேட்டுகொண்டு கிடக்கலாமா? என்று அவர் எழுப்பப்படுகிறார்.
அடுத்து இப்பாசுரத்தில் “தேசமுடையாய்” என்று காட்டப்படுகிறது. தேசம் என்பது தேஜஸ், பலம், வீர்யம் பொலிவு, போன்ற பொருள்களைத்தரும் இக்குணங்கள் எல்லாம் க்ஷத்திரியருக்கே உரியன. குலசேகரர் மன்னர். அதுவும் க்ஷத்திரியர் என்பதால் அதுவும் இவருக்கே பொருந்துகிறது.
ஆக ஏழாம் பாசுரத்தில் குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார் என்பதை உணர முடிகிறது.
கூவி அழைத்தவரின் பெருமை

”கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்”

இது திருப்பாவையின் எட்டாம் பாசுரமாகும். இதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் நம்மாழ்வாரை எழுப்புவதை உணர முடிகிறது. ‘கீழ்வானம் வெள்ளென்று’ என்று முதலில் கிழக்கு வெளுத்ததை இப்பாசுரம் காட்டுகிறது.
நம்மாழ்வார் அவதரித்ததை ‘வகுள பூஷண பாஸ்கரோதயம்’  என்பார்கள். சூரியன் உதித்து இருள் அகல்வது போல, நம்மாழ்வர் அவதரித்து அஞ்ஞான இருள் அகன்றது இங்கே கூறப்படுகிறது.

நம்மாழ்வார்
              நம்மாழ்வார்

‘எருமை சிறுவீடு’ என்று கூறுகிறது பாசுரம். சிறு வீடு என்று ஒன்று இருந்தால் பெருவீடும் இருக்கும். சிறு வீடு என்பதைக் கைவல்யானந்தம் என்றும், பெருவீடு என்பதை மோக்ஷம் என்றும் பொருள் கூறுவார்கள். ஆத்மாவை அறிந்து ஆனந்தப்பட்டு அங்கேயே நின்றுவிடக் கூடாது; அதற்கும் மேலே மோக்ஷம் என்ற பெருவீடு ஒன்று இருக்கிறது என்று காட்டியவர் நம்மாழ்வார்.
மேலும் எம்பெருமானிடத்தில்தான் பரமானந்தம். எனவே, பெருவீட்டை ஆலோசிக்க வேண்டும்; எம்பெருமானைப் பற்றி நிற்க வேண்டும் என்று நம்மாழ்வார் ‘சூழ்ந்த’ [3775] எனும் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.
“போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்பதும் நம்மாழ்வாரைக் காட்டி எழுப்புவது போலிருக்கிறது. வடதேசத்தில் யாத்திரை போய்க்கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரைப் போகாமல் காத்துக் குருகூருக்கு வரவழைத்தது நம்மாழ்வாரின் திருவுளம் அன்றோ?
“அடுத்துக் கூவுவான்” என்பதுவும் நம்மாழ்வாரையே காட்டும். நம்மாழ்வாரைக் கூவுவதற்காகவே அதாவது எழுப்புவதற்காகவே மதுரகவி ஆழ்வார் வந்தார். மேலும், “கூவிக் கொள்ளும் காலமின்னும் குறுகாதோ?” [3323] என்றும்,
“கூவிக்கொள்ளாய் வந்தந்தோ! [3767] என்றும் கூவுதல் எனும் சொல்லை மிகுதியும் சொன்னவர் நம்மாழ்வாரே ஆவார்.
‘கோதுகலமுடையாய்’ என்பதும் நம்மாழ்வாரையே காட்டுகிறது. ஏனெனில் கிருஷ்ண குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது. நானும் அவனிடம் அவனிடம் குதூகலம் கொண்டேன்; அவனும் என்னிடம் குதூகலம் கொண்டான் என்பார் நம்மாழ்வார்.
‘பாவாய்’ என்பதன் உள்பொருளை நோக்கினால் நம்மாழ்வார் தம்மைப் பாவையாய்ச் சொன்னது விளங்கும். “சூழ்வினையாட்டியேன் பாவையே” என்றும், “என்பாவைபோய் இனித் திருக்கோளூர்க்கே” என அருளியவர் நம்மாழ்வார்.
’எழுந்திராய்’ என்று நம்மாழ்வாரைத்தான் எழுப்புகிறர்கள். உட்கார்ந்திருப்பவரைத்தானே எழுப்புவார்கள். ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வார் மட்டுமே அமர்ந்த கோலத்தில் இருப்பவர். எனவே அவர் எழுப்பப்படுகிறார்.
’தேவாதிதேவன்’ என்பதற்கு  நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் முதலிலேயே “உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்” என்பது காட்டப்படுகிறது.
“ஆவாவென்று ஆராய்ந்து”—நம்மாழ்வார் “ஆர் என்னை ஆராய்வார்” [திருவாய்மொழி—5-4-5] என்று சொன்னவர்.  “தன்னை ஆராய வேண்டும்; பகவானை ஆராய வேண்டும்; அவனை அடையும் வழியை ஆராய வேண்டும்; அடைந்தபின் ஏற்படும் பயனை ஆராய வேண்டும்; அவனை அடையவிடாமல் தடுக்கும் தடைகளை ஆராய வேண்டும்” என்ற அர்த்தபஞ்சக ஞானத்தைத்தான் நம்மாழ்வாரின் பாசுரங்கள் அருளுகின்றன.
எனவே எட்டாம் பாசுரத்தில் நம்மாழ்வார் எழுப்பப்படுகிறார்.
ஊமை மாமனை எழுப்பும் மருமகள்
ஒன்பதாம் பாசுரத்தில் எழுப்பப்படுபவர் திருமழிசை ஆழ்வார் ஆவார்.

 “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்!
மாமீர் அவளை எழுப்பீரோ! உன்மகள்தான்
ஊமையோ! அன்றிச் செவிடோ! அனந்தலோ!
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்”

தூமணி மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிகின்றன. ஒரே பிரகாசமாய் இருக்கிறது. திருமழிசை ஆழ்வார் உள்ளத்தில் பகவான் பிரகாசமாய் வீற்றிருக்கிறான்.

thirumazhisai_azhwAr
   திருமழிசை ஆழ்வார்

திருப்பெரும்புலியூர் அக்ரகாரத்தில் ஒரு யாகம் நடக்கிறது. அந்த யாகத்தில் அக்ர பூஜையை திருமழிசையாழ்வாருக்கு அளிக்கும்போது  அனைவரும் எள்ளி நகையாடினர். தம் பெருமையை எல்லாம் அவர் மறைத்துக் கொண்டு இருந்ததால் அவர் பெருமை யாருக்கும் தெரியவில்லை. அவர் மிகவும் சாமான்யமாக இருந்ததால் அவரைப் பற்றித் தப்பாகப் பேசினார்கள். உடனே திருமழிசையாழ்வார் தம் உள்ளே குடிகொண்டிருந்த பரமாத்மாவைக் காட்டினார்.
‘சுற்றும் விளக்கெரிய’ என்பது சாக்கியம், சைவம், சமணம் எல்லாம் சென்று பின்னர் ஸ்ரீவைஷ்ணவமே பெரிது என்று இந்த ஆழ்வார் ஞான விளக்கம் பெற்றதைக் குறிக்கும்.
திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாளின் சயனக் கோலத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதைத்தான் இங்கு ‘துயிலணை மேல் கண் வளர’ என்று காட்டுகிறார்கள். அவன் படுத்திருக்கும் திவ்யதேசங்கள் எல்லாவற்றையும் இவர் ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

“நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்—நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்”
[நான்முகன் திருவந்தாதி—36]

‘மாமான் மகளே’ என்பது திருமழிசையாழ்வாருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் உள்ள திருமேனி சம்பந்தம் சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் உறவுமுறை உண்டு. மகாலட்சுமியின் திருஉருவமே ஆண்டாள் ஆவார். மகாலட்சுமி பிருகு வம்சத்தில் தோன்றியவர்; இந்த ஆழ்வாரும் பிருகு வம்சத்தவர். எனவே இருவருக்கும் உள்ள உறவு முறை இங்கு மறைமுகமாய்க் காட்டப்பட்டுள்ளது.
ஊமைகள் சைகைகளால் சாடைகாட்டிப் பேசிக் கொள்வார்கள். திருமழிசையாழ்வாரும் ஒருமுறை சைகையாலே கருத்தறிவித்தார்.
அதாவது திருப்பெரும்புலியூரில் வேதபாராயணம் நடக்கும்போது இந்த ஆழ்வார் அங்கு வந்தார். உடனே அவர்கள் பாராயணத்தை நிறுத்தி விட்டார்கள். ஆழ்வாரை வரவேற்ற பிறகு தொடர நிறுத்திய இடம் அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை.
உடனே ஆழ்வார் கீழே கிடந்த கருகிய நெல்லை எடுத்து நகத்தால் கிள்ளிக் காண்பித்தார். உடன் அவர்கள் முதல் காண்டத்தில் “க்ருஷ்ணாநாம் வ்ரீஹீணாம்” என வருவதை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.
இப்படி வாயால் பேசாமல் ஊமைபோல சைகையால் காண்பித்ததால் ‘ஊமையோ’ என்பது திருமழைசையாழ்வார்ருக்குப் பொருந்தும்.
மேலும் அந்தப் பெரும்புலியூரில் ஆழ்வாரை அனைவரும் ஏசினார்கள். ஆனால் திருமழிசையாழ்வாரோ காதில் ஏச்சினை விடாத செவிடாய் எதையுமே செவி மடுக்கவில்லை. எனவே ’செவிடோ’ என்பது இவரையே குறிக்கும்.
‘அனந்தலோ’ என்பது தூக்கத்தை அதாவது பிற விஷயங்களில் நெஞ்சு செல்லாமல் இருப்பதைக் காட்டும். திருமழிசையாழ்வாரும்,
“தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்திப்பொழுது எனக்கு மற்றவைபோதும்” என்று வாழ்ந்தவர்.
எனவே ஒன்பதாம் பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எழுப்பப்படுகிறார்.
வாசல் திறக்காதவரை வர்ணித்து எழுப்புதல்
அடுத்துப் பத்தாவது பாசுரம்:

”நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்”

இப்பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார். “மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்” என்பதன் மறைமுக விளக்கமே பேயாழ்வாராகும்.

pEyAzhvAr
            பேயாழ்வார்

திருக்கோவிலூர் திவ்யதேசத்தில் சிறியதோர் இடத்தில் மழையின் பொருட்டு பொய்கையாழ்வார் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டார். பின்னர் பூதத்தாழ்வார் வந்து கதவைத் தட்டப் பொய்கையாழ்வார் திறந்தார். அடுத்துப் பேயாழ்வார் வந்து தட்டினார். பூதத்தாழ்வார் திறந்தார். பின்னர் யாரும் வரவில்லை; கதவைத் தட்டவில்லை. யாருக்கும் கதவைத் தட்ட வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே வாசல்திறவாதார் ஆகிறார் பேயாழ்வார்.
‘நாற்றத் துழாய்’ எனப்படும் திருத்துழாய் மீது அதிகமான பாசுரங்கள் அருளிச் செய்தவர் பேயாழ்வாரே ஆவார்.

“இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்
பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய்”
[மூன்றாந்திருவந்தாதி—2]

 

“மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன்”
[மூன்றாந்திருவந்தாதி—3]

என்பன அவர் அருளிச் செயல்களாகும்.
முந்தைய பாசுரத்தில் ‘அனந்தலோ’ என்று திருமழிசையாழ்வார் எழுப்பப்பட்டார். இதில் ‘ஆற்ற அனந்தலுடையாய்’ என்பது திருமழிசை ஆழ்வாரின் ஆச்சாரியரான பேயாழ்வாரைக் குறிக்கிறது.
திருமழிசையாழ்வார் பகவானின் பெருமை உணராமல் மனம் போன போக்கில் சுற்றி வந்தார். அப்போது பேயாழ்வார் ஒரு செடியை வெளியில் வேர் தெரியும்படி நுனிப்பாகத்தைப் பூமியில் நட்டார். அதுவும் இல்லாமல் ஓட்டைக் குடத்தைக் கயிற்றில் கட்டிக் கிணற்றில் நீர் எடுத்தார். இதைக் கண்ட பேயாழ்வார் “இது என்ன பைத்தியக் காரத்தனம்?” என்று கேட்க, “பெருமாளின் பெருமை உணராத நீயன்றோ பைத்தியக்காரத்தனம் செய்கிறீர்” என்று அவரைத் திருத்தினார் பேயாழ்வார்.
கும்பகருணன் இப்பாசுரத்தில் பேசப்படுகிறான். ’கும்ப’ என்பது கலசத்தைக்குறிக்கும்; ‘கரணம்’ என்பது காரணமாகும். கலசத்தைக் காரணமாகக் கொண்டு பிறந்தவர் அகத்திய முனிவர் ஆவார். அகத்திய முனியே தோற்றுப் போகும்படியான நாவன்மை, புலமை கொண்டவர் பேயாழ்வார். எனவே அகத்தியர் தோற்று உனக்குத் தன் தமிழ்ப் புலமையைத் தந்துவிட்டாரோ என்றும் பொருள் கொள்ளப்பட்டு அதுவும் பேயாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
”தேற்றமாய் வந்து கதவைத் திற” என்று வேண்டப்படுகிறது. அதாவது,  ‘அழகாய் வா’ என்றழைக்கிறது. உன் பெயரே பேயாழ்வார் என்பதால் அச்சப்படப் போகிறார்கள்.  ‘அழகாய் வா’ என்று பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
இவ்வாறு பத்தாவது பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
மயிலும் கொடியுமானவரே எழுந்திரும் !
அடுத்த பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்”

bhutattAzhwArஇப்பாசுரத்தில் “பொற்கொடியே” என்று பூதத்தாழ்வார் குறிப்பிடப்படுகிறார். அவர்தான் தம்மைப் பொற்கொடியாகக் கூறிக் கொள்வார். “கோல்தேடி ஓடும் கொழுந்து அதே போன்றதே மால்தேடி ஓடும் மனம்” என்பது அவர் அருள் வாக்காகும்.
மேலும் ‘புனமயிலே’ என்பதும் பூதத்தாழ்வாரையே காட்டும்; பூதத்தாழ்வார் கடற்கரையில் இருக்கும் திருக்கடல்மல்லை [மகாபலிபுரம்] என்னும் திவ்யதேசத்தில் அவதரித்தவர். கடற்கரையில் சோலைகள் இருக்கும். “கடிபொழில்சூழ் கடல் மல்லை” என்பது அருள்வாக்கு. சோலைகளில் மயில் குடியிருக்கும். மேலும் மயில் மேகத்தைக் கண்டால் தோகை விரித்து ஆடும். மேகம் நீர் முகந்து கொள்ள கடலுக்குத்தான் வரும். அப்போதும் மயில் ஆடும். எனவே ‘புனமயிலே’ என்பது பூதத்தாழ்வாரையே காட்டும்.
மற்றும் பூதத்தாழ்வார் மேக வண்ணன் என்று பெருமானைக் காட்டுவார். “உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் ஏத்தும் என் நெஞ்சு” என்பது அவர் அருளிச் செயலாகும். இப்பாசுரத்திலும் முகில்வண்ணன் எனும் திருநாமம் கூறப்படுகிறது.
“சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்” என்பதன் மூலம் பேயாழ்வார் காட்டப்படுகிறார். எப்படியெனில், பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் இவருக்குச் சுற்றமாவார்கள்; மற்ற ஆழ்வார்கள் எல்லாரும் தோழிகள் ஆவர்.
இவ்வாறு பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.
தாயாரின் தனயனே எழுந்திரும் !
அடுத்துப் பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்”

இப்பாசுரத்தில் ஆழ்வார்களில் முதலாழ்வாராகக் கருதப்படும் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார். ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு முதல் பாசுரம் பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரமே ஆகும்.

poygaiyAzhwAr
பொய்கையாழ்வார்

‘கனைத்து’ என்ற சொல்லின் மூலம் இங்கு பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார். முதலில் பேசத்தொடங்கும் முன்னர் தொண்டையைக் கனைப்பது வழக்கமன்றோ?
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் திருவெஃகா எனும் திவ்யதேசத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர். “வாசமலர்க்கருவதனில் வந்த மைந்தா வாழியே” என்பது இவரின் வாழித் திருநாமங்களில் ஒன்றாகும்.
தாயார் மகாலட்சுமி தோன்றியதும் தாமரை மலரில்தானே? எனவே மகாலட்சுமி ஆழ்வாருக்குத் தங்கை முறையாகிறார். எனவேதான் நற்செல்வன் தங்காய் என்று அழைப்பதன் மூலம் பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.
இவர் பொய்கையில் அவதரித்தார். பனி போன்று குளிர்ச்சியானது பொய்கை.  ‘பனித்தலை வீழ’  என்று காட்டிப் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார். ‘இளங்கற்றெருமை’ என்று இப்பாசுரத்தில் பேசப்படுகிறது. இளமையான கன்று என இதற்குப் பொருள் ஆகும்.  இந்த ஆழ்வார் ஆழ்வார்களுக்குள் முதல்வர், இளையவர் என்பது இங்கு இந்தச் சொல் மூலம் கூறப்படுகிறது.
இவ்வாறு பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப் படுகிறார்.
ஏகாந்தியே எழுந்திரும் !
அடுத்தப் பதின்மூன்றாவது பாசுரத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

 “புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளை களெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்”

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இப்பாசுரத்தின் முதல் அடி கண்ணனையும், அடுத்த அடி இராமபிரானையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. தொண்டரடிப்பொடியாழ்வாரும் ‘திருமாலை’ முடிவில்,

“வளவெழுந்த வளமாட மதுரைமா நகரந்தன்னுள்
கவளமால் யானைகொன்ற கண்ணனை அரங்கமாலை”

என்று கண்ணனைக் காட்டினார்.
அடுத்து திருப்பள்ளியெழுச்சியில்,

“மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய
வடுதிறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா”

என்று இராமபிரானையும் போற்றுகிறார். “வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று” என்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,

“கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனைரு ளகன்றது காலையம் பொழுதால்”

என்று காட்டியுள்ளார்.
“புள்ளும் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஒலி காட்டப்பட்டுள்ளது. இவரும் பறவைகள் வாழும் சோலைகளிலேயே தங்கி பூப்பறித்து வந்தார்.
‘பாவாய்’ எனும் சொல் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் குறிப்பதாகும். “பாவாய்” என்பதற்குப் பரம ஏகாந்தி என்பது பொருளாகும். இவர் மட்டுமே ஆழ்வார்களில் ஏகாந்தியாவார். வேறு தேசத்துப் பெருமாள் எவரையும் பாடாததால் பரம ஏகாந்தியாவார். அதாவது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ள அரங்கனைத் தவிர வேறு எந்தத் திவ்ய தேசத்துப் பெருமாளையும் இவர் மங்களாசாசனம் செய்யவில்லை.
இப்பாசுரத்தில் வரும் “நன்னாளால்” எனும் சொல் முதல் பாசுரத்தில் “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்று ஆளப்பட்டிருக்கும். மார்கழிதான் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த மாதமாகும்.
”பள்ளிக்கிடத்தியோ” என்பதும் இந்த ஆழ்வாருக்குப் பொருத்தமே. இவர் சில காலம் தேவதேவி எனும் தாசியிடம் மயங்கி நீராட்டம், விரதம் மறந்து பள்ளிக்கிடந்தார். இவ்வாறு இப்பாசுரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.
வெட்கமில்லாதவரே, எழுந்து அருளும் !
அடுத்துப் பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியில்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்பவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கன்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்”

‘நங்காய்’ என்பதற்குச் சிறந்த குணம் உடையவள் என்பது பொருளாகும். இவரும் உலோக சாரங்க முனிவர் மேல் ஏறி வர உடன்பட்ட குணபூர்த்தி உடையவர்.

paanaazvaar
திருப்பாணாழ்வார்

‘நாணாதாய்’ என்பதற்கு வெட்கமில்லையா? என்று பொருள். ஏனெனில் திருப்பாணாழ்வார் அடியார்க்கு என்னை ஆட்படுத்தவேண்டும் என்று வேண்டியவர். “உம்மைப் போய் அடியவர்க்கு ஆட்படுத்தக் கேட்கிறீர்களே? வெட்கமில்லையா” என்று கேட்பது போன்றதாகும். மேலும் ஒரு தவ முனிவரின் தோள்கள் மேல் ஏறி வர வெட்கம் இல்லையா என்றும் பொருளாகும்.
அடுத்து ‘நாவுடையாய்’. இதற்கு நாவன்மை படைத்தவர்; சிறந்த நாவீறு மிக்கவர் என்பது பொருள். தொண்டரடிப்பொடியாழ்வார் பத்தே பாசுரங்கள்தாம் அருளிச் செய்துள்ளார். ஆனால் இவற்றை ஒரு தட்டில் வைத்து, மீதி ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தால் இவர் பாசுரங்கள்தாம் கனமாக இருக்கும். “பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்து பழமறையின் பொருளென்று பரவுமின்கள்” என்பார் தேசிகன்.
‘சங்கொடு சக்கரம் ஏந்தும்’ என்பதில் ‘கையினார் சுரி சங்கனல்’ என்பதான ஆழ்வார் பாசுரத்தையே நினைவுபடுத்தி ஆண்டாள் இவரை எழுப்புகிறார். ’பங்கயக் கண்ணானை’ என்பதன் மூலம் இந்த ஆழ்வார்தாம் எம்பெருமானின் கண்ணழகில் அதிகமாக ஈடுபட்டுப் பாடியது காட்டப்படுகிறது.

“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே”

என்பது அவர் அருளிச் செயலாகும். ‘செங்கல்பொடிக் கூறை’ என்பது முனிவர்களைக் குறிப்பாக இந்த ஆழ்வாரைத் தம் தோளில் ஏற்றிய சாரங்க முனிவரைக் காட்டுகிறது.
’எங்களை முன்னம் எழுப்புவான்’ என்பது “அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்” என்று  பாடியதால்  நீர் பாகவதரைத் தோளில் ஏற்றிவருவீர் என எண்ணினோம். ஆனால், நீர் முனிவர் தோள் மீது வருகிறீர் முன்பு சொன்னது என்னவாயிற்று” என வினவுவது போல் உள்ளது.
இவ்விதமாக பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணழ்வார் எழுப்பப்படுகிறார்.
மற்ற எல்லாரையும் எழுப்பியாயிற்றா ?
அடுத்துப் பதினைந்தாவது பாசுரத்தில் திருமங்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்ற ழையேன்மின் நங்கையீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்”

இப்பாசுரம் இருவர் உரையாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கை மன்னனும் இதேபோல் பாசுரங்கள் அமைத்துள்ளார். “மானமரு மென்னோக்கி” என்று தொடங்கும் திருச்சாழல் பாசுரங்கள் பாசுரங்களில் இதைப் பார்க்கலாம்.
‘இளங்கிளியே’ எனும் சொல் இந்த ஆழ்வாரைத்தான் குறிக்கிறது. ஆழ்வார்களில் இவர்தான் கடைகோடி. இளமையானவர். மேலும் இவர் தம்மைக் கிளி என்றே சொல்லிக் கொள்வார். “மென்கிளி போல மிக மிழற்றுமென் பேதையே” என்பது அவர் வாக்கு. ’கிளி போல் மிழற்றி நடந்து’ என்றும் பாடி உள்ளார்.

thirumangai-alzhwar
திருமங்கையாழ்வார்

கிளியானது பிறர் சொன்னதையே தானும் சொல்லும். திருமங்கை ஆழ்வாரும் இவருக்கு முன்னால் நம்மாழ்வார் சொன்னதையே சொல்லியிருக்கிறார். நம்மாழ்வார் நான்கு மறைகளை நான்கு பிரபந்தங்களில் அருளிச் செய்திருக்கிறார். அந்த நான்கு பிரபந்தங்களையும் திருமங்கையாழ்வார் ஆறு அங்கங்களாகப் பாடியுள்ளார்.
“மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற” என்பது நினைவு கூறத்தக்கது.
“எல்லாரும் போந்தாரோ?” என்பது நோன்பு நோற்க எல்லாரும் போய்விட்டார்களா? எனப் பொருள்தரும். ஆனால் எல்லா ஆழ்வார்களும் போய்விட்டார்களா என்று கேட்டால், ஆமாம் இவர்தான் கடைசியில் எழுப்பப்படுகிறார் என்பதுதான் விடையாகும்.
”மாற்றாரை மாற்றழிக்க வல்லானை” என்பது செருக்கழித்தலைக் காட்டும். ஆழ்வாரும் இந்திரன் செருக்கழித்தலைப் பாடுவார்.
“குன்றமெடுத்து ஆநிரை காத்தவன்” என்பது அவர் அருளிச் செயலாகும். திருநெடுந்தாண்டகம் நிறைவுபெறுகையில், ”குன்றெடுத்த தோளினான்” என்பார்.
இவர் வாக்கில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஆண்டாள் நாச்சியார் “வல்லீர்கள் நீங்களே” என்கிறார். திருமங்கைஆழ்வார் நாவன்மை படைத்தவர். “உனக்கென்ன வேறுடையை” என்பது இந்த ஆழ்வார் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதைக் கேட்கிறது.
இவர் மட்டுமே மடல் பாடியவர். மேலும் இவர் நீர் மேல் நடப்பது போன்ற பல விசித்திரங்கள் செய்து காட்டியவர். எனவேதான் ‘எல்லே’ (என்ன ஆச்சரியம் !) என்று நாச்சியார் வியந்து பாடுகிறர்.
இவ்வாறு ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரையில் உள்ளே இருக்கும் பாடல்கள் பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும், ஆழ்வார் பெருமக்கள்தாம் எழுப்பப்பட்டு அவர்களின் அருள் வேண்டப்படுகிறது எனக் கூறலாம்.

4 Replies to “திருப்பாவையின் மறைபொருள்”

  1. கட்டுரையை இத்தனை ஆழ்வார்களின் சிலைகளின் படங்களோடு வெளியிட்டது சிறப்பாக இருந்தது.
    வாசகர்கள் தம் அனுபவத்தைச் சொல்கையில் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதுவது படிக்கவே கொடுமையாக இருக்கிறது. தமிழில் வலையில் பல தளங்களில் ஆங்கிலத்தில் எழுதினாலும் அதைத் தமிழாக்கிக் கொடுக்க வசதி இப்போது இருக்கிறது. அதைப் பயன்படுத்தினால் என்ன?
    nallapaththar vazhumoor என்று எழுதினால் அதை வழுமூர் என்று படித்தால் எப்படி இருக்கும்?
    vEdakkOnoor padanga = இதை அனுபவத்தால் வேதக் என்பது வரை படிக்க முடிகிறது. கோனூர் என்றால் என்ன பொருள் கிட்டும். படங்கள் என்று படித்தால் எப்படி இருக்கும்?
    வாசகர்கள் தம் அணுகலை மாற்றுவது உதவும். அல்லேல் மறுவினைக்குப் பயனில்லாது போகும்.
    மண்டனா

  2. அன்புள்ள…
    வணக்கம். மிக அழகாக. அற்புதமாகப் படங்களுடன் மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் சுவைபட திரு வளவதுரையன் அவர்கள் விளக்கிப்போகிறார்கள். பாடங்கேட்பதுபோல உள்ளது அவரின் எழுத்தாற்றல். இதுபோன்ற பதிவுகளைத் தொகுத்து சொல்வனம் மின்னிதழ் ஆண்டுக்கொருமுறை புத்தகமாக வெளியிடலாம். பயனாகவும் அமையும்.
    வாழ்த்துகள் திரு வளவதுரையன் ஐயா. வெளியிட்ட சொல்வனம் இதழுக்கும்.
    அன்புடன்
    ஹரணி.

Leave a Reply to ஹரணிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.