நிலையாட்டம்

Neem1

தெருமுக்கைத் தாண்டியதும் அலையென முகத்தில் அறைந்தது தாத்தா வீட்டு முன் நின்றிருக்கும் வேப்பமரத்தின் காற்று. வீட்டின் இடமுனையோரத்தில் நீளும் கையென கழிவுநீர் வெளியேற அமைத்த சிறிய கால்வாய் நீண்டு இறுதியில் வட்டமாக முடிய மையத்தில் அதன் சாமரமென நின்றிருந்தது. இத்தனை நாள் தன்னை அப்பூமியில் நிறுத்தியிருந்த வைராக்கியத்தை இழந்து ஆணி மாத பகற்காற்றுக்குத் தன் இலைகளையும் ஒப்புக் கொடுத்துக் கூத்தாடிக்கொண்டிருந்தது. அந்த மண்ணில் இருக்க விரும்பாதது போல. அங்கேயே இருந்து சலித்ததினால் வெளியேற விரும்புவது போல.

தாத்தா நட்டுத் துவக்கிய மரமது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு வரும்போதும் இந்த மரத்தின் கீழ்தான் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக்கொண்டிருப்பார். பின்பக்க முற்றத்திலிருந்து நொங்கு வண்டிகள் உருட்டிக் கொண்டு கூச்சலோடு ஓடிவரும் அண்ணங்கள் அனைவரும் வாசலை நெருங்கியதும் ஒரு கணம் தயங்கி மரத்தைக் கடப்பார்கள்.

ஒரு முறை சுப்பையா அண்ணன் கையில் கிட்டிப்புள்ளுடன் வாசலைத் தாவிக் கடக்கையில் தாத்தாவிடம் சிக்கிக்கொண்டார். கையில் வைத்திருந்த நாளிதழைக் கொடுத்துப் படிக்கச் சொல்ல அண்ணன் கண்ணில் தெரிந்த தவிப்பு தாத்தாவின் காலடியில் சிறுவர்மலர் படித்துக் கொண்டிருந்த என்னிடம் அப்படியே தங்கிவிட்டது.

உள்ளே நுழைந்தவுடன் “வர்றாம்பாரு. எல்லாத்தையும் தூக்கி நட்டமா நிறுத்துற மாரி”. கோபி பாவா தான். உள்திண்ணையில் காலாட்டிக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். யாரையோ நோக்கி சொல்வதுபோல. முகத்தில் குடிக்களை. முன்னெற்றியில் வேர்வை திட்டுதிட்டாகப் படிந்திருக்கப் பற்களை இடைவிடாமல் அரைப்பதனால் இடக்காதுக்கு மேலிருக்கும் நரம்பு மேலெழுந்து எழுந்து உள்சென்றது.

“இல்ல பாவா. ஆபீசுல ஆன் ட்யூடியில இருந்தேன். அதான் முடிஞ்சு கெளம்பி வாரேன்”
“இங்க எவனுக்கும் வேல இல்ல பாரு. இன்னக்கி மட்டும் ஏன் வந்த? எட்டாந்நாள் காரியமும் முடிஞ்சப்பறம் வரவேண்டியதான”
பேசப்பேச பாவா முகம் தெளிந்து கொண்டே வந்தது. நன்றாகக் கூர்தீட்டி வைத்திருந்த புலியின் நகங்களில் சிக்கிய முயல் போல. உள்ளே கழுத்து வரை நிரப்பியிருக்கும் தழல் பசியுடன் நாற்திசையும் தவித்தலைய இறுதியில் இரையைக் கண்டு கொண்ட உவகை.
“பாசம்னு இருந்தா தான. ஏசி ரூம்ல ஒக்காந்து கிட்டு ஆயிரக்கணக்குல சம்பாரிக்கைல, நாங்கள்ளாம் எதுக்கு?”
ஒன்றும் சொல்லாமல் தாத்தாவின் படத்தருகே சென்று அமர்ந்தேன். அமைதி பரவிய முகம். பத்துப்பிள்ளைகளை வளர்த்து நிறைந்த வாழ்க்கை. எப்போதும் எதாவது ஒரு குழந்தை தவழ்ந்து தாவி உருண்டு கொண்டிருந்த இந்தப் பெரிய திண்ணையில் இப்போது மரச்சட்டகத்தில் அடைபட்டு அனைவரையும் நோக்கியிருக்கிறார்.

“ஏலெய்! வேலு. போய் பட்டியில நாராயணமாமா கிட்ட தாக்கல சொல்லிட்டு வாறப்ப ரெங்கா காப்பிப்பொடி ப்யூரு நூறு வாங்கியாந்துரு” அம்மா பின்பக்க சமையலறையிலிருந்து சொல்லிக்கொண்டே வெளிவந்தாள்.

நான் திரும்பி பார்த்தவுடன், “இப்பதான் வாறியா? இரு காப்பி எடுத்தாறென்” என மீண்டும் உள்சென்றாள். பின்னால் மச்சானின் நறநறசத்தம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. இருக்க முடியவில்லை. எழுந்து வீட்டைக் கடந்து பின்பக்க முற்றத்துக்குச் சென்றேன். கூரைக்குக் கீழ் சேர்கள் கலைசலாகப் பரவியிருக்க அங்கங்கு குவியலாக உறவினர்களும் ஊர்க்காரர்களும் அமர்ந்திருந்தனர்.
பின்பக்க ஓரத்தில் திடீரென ஒரு வெடிப்பொலி சிரிப்பு எழுந்தது. “அந்த சின்னத்தாயோளி பல்லக் காட்டிக்கிட்டு நின்னான். ஏண்டா ரெண்டு மிஷினு வச்சிருந்தா நீ பெரிய புளுத்தியா? போனவருஷம் என்டெ எச்சக்குடி குடிச்சவன் இன்னைக்கு வெள்ளசட்ட போட்டு சுத்துற'” ராமராஜ் மாமாவை சுத்தி என் நாலைந்து அண்ணன்கள் அமர்ந்தும் நின்றும் கொண்டிருந்தனர்.

அவ்வப்போது கடைவாய்ப் பற்களில் சிக்கிக் கொண்ட சாந்திப் பாக்கை நாக்கால் நெம்பி எடுத்துக்கொண்டே முக்கால் வாசி மூடிய இடக்கண்ணுடன் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்தவுடன் “டேய்! வாடா! வாடா! என்ன யூஸ் பண்றீயா?” கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ப வடிவில் மடித்து கேட்டார்.
“வேண்டாம் மாமா”
“ஏலேய்! முனியா. விருட்டுனு போய் நம்ம பயில்வான் கடையில ஒரு ஆஃப் வாங்கிட்டு வா”
வலதோரத்தில் பந்தல் கம்பத்தருகே நின்றிருந்த முனிவேல் லுங்கியை சிறிதளவு தூக்கி இரு கால்களுக்கிடையில் செருகிக்கொண்டே வந்தார். மாமா நாலு அறுப்பு மிஷின் வைத்திருந்த காலத்திலிருந்து டிரைவராக இருப்பவர்.
“இல்ல மாமா, வேண்டாம்”
மாமா என்னைப் பொறுட்டென மதிக்காமல் தன் பையிலிருந்து கசங்கிய இரண்டு நூறுரூபாய்களை எடுத்துக்கொடுத்தார். நான் குடிக்கவில்லையென்றாலென்ன? அவர் முடிவு செய்து விட்டார்.

“பார்த்திபா” அம்மா கூப்பிட நான் திரும்பியதும், பின்பக்கம் “அந்தத் தாயோளி இன்னைக்கு நம்மள பாத்தா மதிக்கமாட்றான்” மாமா தொடர்ந்தார்.

“அண்ணெங்கூட கடைக்குப் போய்ட்டு வந்துருடா” என்றார் அம்மா. ரகு அண்ணா வண்டியில் தயாராக அமர்ந்திருந்தார். அதுவரை இருந்த இறுக்கம் விலகி முகம் மலர ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.
“டிஸ்ட்ரிக்ட் மேட்ச் என்னெண்ணெ ஆச்சு”
“செமிஃபைனல்ஸ் வரைய போய்ட்டோம். பசங்க நல்லாத்தான் ஆடுனாங்க. செட்டர் ஆட்டம் தான் கொஞ்சம் பிசிறுதட்டுச்சு. நம்ம முனிவேலு பையன் சபரிநாதன் நல்லா ஸ்பைக் ஆடுனான். பசங்க மட்டும் சரியான நேரத்தில ட்ராப் போட்டு ஆடியிருந்தாங்கனா ஜெயிச்சுருக்கலாம். டிசைடிங் செட்லதான் தோத்துட்டோம்.”

சின்னவயசுல அண்ணன் எனக்கும் கைப்பந்து சொல்லிக்கொடுத்திருக்கிறார். கண்ணும் காலும் கையும் ஒத்திசைந்து விளையாடவேண்டிய ஆட்டம். ஏனோ அந்த ஒத்திசைவு என்னில் கூடவே இல்லை. கண்ணும் காலும் ஒத்திசைந்தால் கைகள் சரியான கோணத்தில் இருக்காது. இல்லையென்றால் கால்கள் செட்டரை நோக்கி திரும்பி இருக்காது அல்லது கண்கள் கடைசி வரை பந்தைத் தொடராது. ஒவ்வொரு முறையும் பிரயத்தனப்பட்டு சரி செய்ய முயற்சிக்க ஆட்டம் என்னைவிட்டு விலகிச் சென்று கொண்டே இருந்தது. புத்தியால் ஈடுபடாமல் உடலை ஆட்டத்துக்கு ஒப்புக்கொடுத்திருந்தால் ஆட்டம் வந்திருக்குமோ என்னவோ?

ஆனால் ரகு அண்ணா அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் பந்து அவரிடம் வந்து முத்தம் வாங்கிக் கொண்டு மேலெழும். காதலியின் சேலை நுனியை துரத்திப்பிடிக்கும் காதலனென பந்தைநோக்கிச் செல்வார். ஒவ்வொரு பொங்கல் விளையாட்டுப்போட்டியின் போதும் அவரது ஆட்டத்தைக் காணவே ஜனங்கள் கூடும்.

“ராமராஜ் மாமா இன்னைக்கு ஆட்டம் பாக்கவருவாராண்ணெ?”

“இல்லடா. வந்தா ரமணா நெனப்பு வரும். பாவம் மனுசன் அவன் நெனப்புலயே புழுங்குறாரு. நான் சின்னவனா இருக்குறப்ப அவரு ஆட்டத்த பாக்கணுமே. ஸ்பைக் ஏறுனாருனா நெஞ்சு நெட்டுக்கு மேல வரும். அடி செட்டர் காலுக்கு பக்கத்துலயே விழும். பந்து தரையில அடிச்சு தென்னமரம் ஒசரம் பறக்கும். கையில இருந்து சும்மா வெண்ண மாரி பாஸு செட்டருக்கு போகும்”

“ரமணா இன்னும் குடிக்கிறானா?”

“ஊர்ப்பட்ட குடி. அப்பனும் மகனும் போட்டி போட்டுல்ல குடிக்கிறாங்க. இந்த மனுசனும் பத்தாவது ஃபெயிலானுதுக்கு இந்த அடி அடிக்கக் கூடாது. மேக்க அர்ச்சுனாபுரம் வரயில்ல தொரத்தி தொரத்தி அடிச்சாரு. வீம்புக்கு ஆரம்பிச்சான். யார என்ன சொல்ல முடியும்? ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க, சாக்கடையிலெயே முங்கிறதுன்னு. அவரு குடும்பத்துக்குக் கெட்ட காலம் படிப்பு மூலமா வந்துருக்கு”

வத்றாப் கடையில் அம்மா குடுத்தனுப்பிய சீட்டிலுள்ள  பலசரக்குகளனைத்தையும் வாங்கித் திரும்பும் வழியில் ஒரு பையன் இரு மாடுகளை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“வணக்கம் சார்”

“எங்கடா? பெரிய ஏரி பக்கம் மேச்சுட்டு வாறீயா? சாயந்தரம் ஆட்டத்துக்கு வந்துருடா. உங்கப்பன் கேட்டா தமிழ் வாத்தியார் வரசொன்னாருன்னு சொல்லிரு”

“சரிங்க சார்” எனச் சொல்லியபடியே விறு விறுவென மாடுகளை விரைந்து ஓட்டிக் கொண்டு போனான்.

“யாரு சபரியா? நெடுனெடுன்னு வளந்துட்டான். போன வருசம் பாக்குரப்போ குச்சியாட்ட இருந்தான். இப்ப நல்லா சதப்புடிச்சு இறுகியிருக்கான்”

“ஆமா! இந்த வருசம் பத்தாவது. இவங்க தெரு பயங்க ஒருத்தனுக்கும் தப்பில்லாம நாலு வார்த்த எழுதத் தெரியாது. பய மட்டும் நல்லாப் படிக்கான். இவங்கக் குடும்பம் இவனப் புடுச்சு தான் மேலேறி வரணும். இவெங்கப்பனுக்குத்தான் புரிய மாட்டிக்கி. மிஷினுக்குப் போறப்போ அடிக்கடி கூடக் கூட்டிட்டு போயிடுறான்.”

வீடு திரும்பும் போது பின்பக்க பந்தலில் ஒரே சத்தமாக இருந்தது. தெரு நாயொன்று கல் பட்டு வீல் என்றது. ராமராஜ் மாமா வேட்டியை உருவி நாய் முதுகில் சட் சட்டென அடித்தார். நாய் மிரண்டு ஓட சுற்றியிருந்த தன் மாப்பிள்ளைகளிடம் ஏதோ சொல்லி சத்தமாகச் சிரித்தார். வண்டி முன்னால் மாட்டியிருந்த பையை எடுத்துக் கொண்டே ரகு அண்ணன் “யாருக்காக இப்படி இருக்கார்னு தெரியல. ஒண்ணு மானாவாரியா திட்டறது, இல்ல இப்படிச் சிரிக்கறது” என்றார்.

ஏதோ நினைப்பில் மீண்டும் வாசல் நோக்கி ஓடி வர துருத்தியிருந்த சிறு மேட்டில் இடறி வேப்ப மர அடியில் ஊறித்தேங்கியிருந்த கழிவு நீரில் விழுந்தார். ஒரு நிமிடம் அமைதியாகி தன் கறைபட்ட சட்டையைப் பார்த்து உரக்க சிரித்து “சின்னத் தேவடியா” எனக் கூவி கொண்டே நாயை பிடிக்க ஓடினார். சுற்றி இருந்த அனைவரும் சிறிய மௌன இடைவெளிக்குப் பின் தங்கள் இயல்புக்குத் திரும்பினர்.

காரிய சாப்பாடான பச்சரிசி சாதமும், பருப்பும் தாத்தாவின் படத்திற்குப் படைத்து விட்டு, குலப் பங்காளிகளுக்கு முதல் பந்தியில் அமர வைத்துப் பின் அனைவரையும் அழைத்துப் பரிமாறினோம்.

சாயந்திரம் பள்ளிகூடத் திடலில் ஆட்டம் துவங்கியது. எங்களூர்ப் பள்ளிக்கும் சுந்தரபாண்டியம் அரசுப் பள்ளிக்கும் போட்டி. துவங்கிய ஐந்து நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது எளிதான ஆட்டமென. சபரி நாதன் ஒவ்வொரு முறையும் முழுவிசையில் வரும் பந்தை வண்ண நீர்க்குமிழியை ஊதி மேலெழுப்பது போல் எழுப்பினான். கால்களும் கைகளும் உச்ச விரைவில் அசைய காற்றில் ஊன்றி நிறுத்திய தண்டென நிலைத்திருந்தது அவன் தலை. ஒரு தலைகீழ் மரத்தைப் போல்.

ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன். அதே உஸ்ஸ்ஸ் சத்தம். பள்ளியின் நுழைவாயிலில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் முனிவேல் நின்று ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மரம் தன் அத்தனை இலைகளாலும் காற்றின் தழுவலால் கூசி சிரித்துக் கொண்டிருந்தது.

One Reply to “நிலையாட்டம்”

  1. அன்புடையீர்,
    வணக்கம். 22.03.2016 ந்தேதி சொல்வனம் இதழில் இடம்பெற்ற நிலையாட்டம் என்ற சிறுகதையினைப் படித்தேன். சொல்வனம் ஆண்கள் பெண்கள் மாணவர்கள் மாணவிகள் என பலபேர் படிக்கக்கூடியது என்பதை கதாசிரியர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தாங்கள் எழுதிய நிலையாட்டம் சிறுகதையில் “பின்பக்க ஓரத்தில்……. என்ற பத்தியில் இடம்பெற்ற அநாகரிகமான வார்த்தைகளைத்தான் வருத்தத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன்..இனி வருங்காலங்களில் இதுபோன்று அநாகரிகமான வார்த்தைகளை கதாசிரியர் எழுதுவதைத் தவிர்க்கவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சொல்வனம் ஆசிரியரின் மேலான கவனத்திற்கும் இதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    பூ. சுப்பிரமணியன், பள்ளிக்கரணை, சென்னை .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.