கலைமகள் நடனம் காண…

JM_Jeyamojhan_Arugar_Path_Ajithan_Belur_Halabedu_Temples_Jains_Sarswathy_Saraswathi

”அந்தக் கடைல ஒரு டீ அடிப்பமா?” நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சொல்லவிழ்ந்து மௌனத்தில் விழுந்த அஜிதன் இரவு ஏழு மணிக்கு பேசிய முதல் வாக்கியம். நாங்கள் காலையில் இருந்து எதுவுமே உண்ணவில்லை (மதியம் உண்ண கைவசம் உணவிருந்தும்) என்பது அப்போதுதான் உரைத்தது. பசியில் டீ என்ன டீக் கடைக்காரனையே போட்டு அடிக்கலாமா என்று தோன்றியது. அஜிதன் தேநீர் அருந்தியபடியே பின்னால் திரும்பி நாங்கள் இறங்கி வந்த குன்றை நோக்கினான். இருள் கவிந்த குன்றில், மின் ஒளி சமைத்த பாதை. சிகரத்தில் கட்புலனாகா நின்ற நெடியோனின் மோனத்தவம். மனத்தின் அசைவின்மையே உடலின் அசைவின்மை . அஜிதன் குன்றை நோக்கியவண்ணமே உறைந்திருந்தான். உடலை இயக்குவதே மனதை இயக்க வழி. ”அஜி சென்னராய பட்ணம் வரை நடந்தே போவோமா?” எனது வினாவில் அஜிதன் முகம் மலர்ந்தான். அஜிதனின் ஆதர்சம் வெர்னர் ஹெர்சாக் கையில் பைசா இல்லாமல் ஜெர்மனியை நடந்தே அறிந்தவர். ஹசனில் இருந்து பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில், சென்னராய பட்ணதிலிருந்து இடது புறம் பதினைந்து கிலோமீட்டரில் இருக்கிறது ஷிரவணபேலகோலா.வருகையில் நகரப் பேருந்தில் ஏறி நான் நடத்துனர் வசம் ஷிரவணபேலகோலா என அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க நடத்துனர் முகம் போன போக்கை அஜிதன் ரசித்துச் சிரித்தான். சென்னராய பட்ணம் நோக்கி நடக்கத் துவங்கினோம்.
கண்ணில் பட்ட முதல் இருபுரியில் நான் நேரே செல்லலாம் என்றேன், அஜிதன் அழுத்தமாக இல்ல இடதுபுறம்தான் என்று எதிரே இருந்த பெயர்ப்பலகையைக் கை காட்டினான். அதில் உதிர்ந்த கருப்பு ஜிலேபிகள் வரிசையாக அடுக்கப்பட்டுக் கீழே அம்புக்குறி இடதுபுறத்தை சுட்டியது. பத்துநிமிட நடையில் கண்ணில் பட்ட முதல் கட்டிட வாசலில் அமர்ந்து செல்போனை நிமிண்டிக் கொண்டிருந்த யுவனைக் கண்டதும் அஜி தயங்கினான். பின் விசாரித்தான். அவன் ”அல்லி ஒகி லேப்ட்லோ” என்று நாங்கள் வந்த பாதையைக் காட்டி பேசத் துவங்க அஜி அசடு வழிய என்னை நோக்கி ”இல்ல அந்த மலைய பாத்துகிட்டே வந்தமா” என்று எதோ சொல்லத் துவங்கினான். இப்படியாகத் தென்னாட்டு ஹெர்சாக்கும் நானும் இலக்கை நோக்கி கிளம்பிய கால் மணி நேரத்தில் வழியைத் தொலைத்திருந்தோம்.
மின்சார வெட்டு. அகலமான சாலையின் இருபுறமும், அடர்த்தியான மரங்கள். அவ்வவப்போது எங்கள் பின்னிருந்து வாகனங்கள் ஒளியை வாரி இறைத்துக் கடக்கையில், ஆண்டுகள் கண்ட மரங்கள் பூத உடல் கொண்டு பெருத்து, அதன் நிழல்கள் மரம் இண்டு பவர் ஆப் த்ரீ அளவில் விரிந்து வந்து எங்களைக் கெளவியது. ”அஜி முதல்லையே சொல்லிடுறேம்ப்பா எனக்கு இருட்டுன்னா பயம்” என்று ஆரம்பத்திலியே நான் ஜகா வாங்கியும் அஜி விடவில்லை. இருளுக்குள் வலது புற நாய்க் குறைப்பிலிருந்து, எங்களைக் கடந்து இரு நிழல்வெட்டுக்கால்கள் இடது புற நாய்க் குரைப்பில் இறங்கி கடந்தது கரைந்தது. அஜியும் அக் கால்களைக் கண்டதாகச் சொன்னதால் கொஞ்சம் பீதி தணிந்தது. ஆனா தலை இருந்ததா தெரியலையே என்று அஜி துவங்க, மூச்சு இறுகி மூச்சா வரும்போல இருந்தது. பயம் தெரியாமல் இருக்கப் பாட்டு பாடினேன். அந்தப் பாட்டுக்கு பயமே தேவலாம் என்றிருந்ததால், மாற்று ஏற்பாடாகப் பையில் இருந்த ரொட்டியை தின்னத் துவங்கினேன்.
நான்: அஜி ஹெர்சாக் பகல்ல நடப்பாரா இல்ல ராத்திரியா?
அஜி: தெரியல, ஆனா திகம்பரர்கள் பெரும்பாலும் ராத்திர்லதான் நடப்பாங்க. ஏன்?
”இல்ல பகல்ல எல்லாமும் பெப்பரப்பீனு கிடக்கும் எதாவது தெரியும், பகல்ல நடக்கறது சரி ராத்திரில என்ன தெரியும்?”
”பேய் எல்லாம் ராத்திரிலதானே தெரியும்”
வெளங்கீரும்.
காலமோ ஒளியோ அற்ற அந்தகார இன்மையில் கால்களால் துழாவிக்கொண்டிருந்தோம். வாயின் மொசக் மொசக்கில், அருகில் வந்துகொண்டிருந்த சரக் சரக் இல்லாமல் போனதை சற்று கழித்தே உணர்ந்தேன். எய்யா இல்லங்குடி சாஸ்தா, மாலையம்மா உம் பிள்ளைய காப்பாத்து. பின்னால் தூரத்தில் செல்போன் ஒளி தரையில் எதோ புரியாத லிபியை எழுதிக் கொண்டிருக்க அங்கே விரைந்தோடி இணைந்துகொண்டேன். அஜி தரையில் எதோ ஆராய்ந்து கொண்டிருந்தான். செத்துப்போன நாகப்பாம்பு. இயல்பாக எழுந்து ஒளியை அணைத்துவிட்டு நடக்கத் துவங்கினான். நான் இட்ட அடி உறைய, எடுத்த அடி நடுங்க , ஒவ்வொரு அடியும் அரவம் ஒன்றின் பத்தியில் வைப்பதான உணர்வில் நடந்தேன். எதிரே ஒரு வாகனம் ஒளியால் மோதி கடந்து சென்றது . மெல்ல திரும்பிப் பார்த்த அஜி ”மலையாளத்தில் பந்தம் கண்ட பெருச்சாளி அப்டின்னு ஒரு பதம் உண்டு ” என்றான்.
சாலையின் மத்தியில் ஒரு சிறிய கோயில். உள்ளே இரண்டடி உயரத்தில் படிமை. அகல் விளக்கொளியில் அதன் பிதுங்கிய விழியும், தொங்கிய நாவும் என அதன் உக்கிர பாவம் மட்டுமே துலங்கியது. கோவிலின் பின்னே சாலை உயர்ந்து பாலத்துடன் இணையே கீழே பிரும்மாண்ட ஏரி . பாலச் சுவரில் சாய்ந்து நின்று நோக்கினோம். நிலவு எங்கோ மறைய, நட்சத்திரங்கள் நடுங்கும் அடர் கரு நீல வானம். அடர் நீலத்துக்குள், தோடு வானின் அடர் கருப்பு மலைத் தொடர், அங்கிருந்து பிரவாகமாகக் கடந்தது இங்கு வந்து தொடும் குளிர். சாம்பல் கோடெனப் பாலச் சுவர். கீழே சலசலப்பு. இருளில் பழகிக் கிடந்தது விழி. மிக மிக மிக மெல்லிய ஒளி கசியும் இருள் வானின் கீழே, அதன் இரு மடங்கு ஒளியில் பரவிக் கிடந்தது ஏரி. பார்க்கப் பார்க்க அதன் ஒவ்வொரு துளி ஒளியும் பிரிதொன்றுடன் கூடி ஒளியாக விரிந்தது ஏரி. ஒவ்வொரு ஒளித்துளியும் எண்ணத்தைக் குளிர வைத்து, விரி ஒளி சித்தத்தை உறைய வைத்தது. இரவில் மட்டுமே காணக் கிடைக்கும் பேரின்பம். கருமுத்துக்களால் நெய்யப்பட்டு விரிக்கப்பட்ட பிரும்மாண்ட கம்பளம்.
மனமே இன்றி விலகி நடக்கத் துவங்கினோம். அக் கணமே இறந்தாலும் தகும். பெருமூச்சுகளாக விட்டபடி நடந்தேன். ஆபாச ஒளியுடன் தெரிந்தது சென்னராய பட்ணம். ஜெயமோகனாக முகத்தை வைத்துக்கொண்டு, தோளணைத்து அஜிதன் கேட்டான். ”நீங்க ஏழு மணில இருந்து நார்மலாவே இல்லையே ஏன்?” வந்த ஆத்திரத்தில் நல்ல இடமாகப் பார்த்து மூத்திரம் பெய்தேன்.
இப்படியாக நிறைந்த எங்கள் பயணமோ ரகளையாக மண்டத்திடிபல தாளம் போட துவங்கியது. சென்னையில் இருந்து கடலூருக்கு வரும் வரை எங்கள் பேருந்தில் எங்கள் இருவரைத் தவிர யாருமே இல்லை. கிழக்கு கடற்கரை சாலை காற்றை அனுபவித்தபடி நீலம் பற்றி உரையாடினோம். ஜெயம்மின் சமீபத்திய பதிவுகள் குறித்துப் பேசினோம்.
அஜி: பசுவதை என்பது குறித்து மட்டுமே இங்கு பேசப் படுகிறது. ஏன் எனில் பசு புனிதம். பல ஊர்களில் எருமைகள் கூட்டம் கூட்டமாக இன்றும் பலி தரப் படுகிறது. அந்தக் கறி உண்பதற்கு கூட இல்லை. அந்தப் பலிகளுக்கு இன்று எந்த அர்த்தமும் சாரமும் இல்லை. உண்மையில் முதலில் தடை செய்யப்பட வேண்டியது எருமைப்பலிதான். ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.
அஜி: சிறு தெய்வ வழிபாட்டில் இந்த எருமைப் பலி போல, முற்றிலும் களைய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இந்த பலிகள் ஒருவனுக்கு அளிக்கும் சாரம் எத்தனயோ தலைமுறைகளுக்கு முன்பே அறுபட்டு விட்டது. இன்று பெரும்பாலான சிறு தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. தத்துவத் சாரம் இல்லாத சடங்குகள் மனிதனை எங்கும் கொண்டு சேர்க்காது.
நான்: உங்கள் பார்வை வழியே நான் எனது வினா ஒன்றுக்கு விடை கிடைக்கப் பெறுகிறேன். பொதுவாக இன்று குலதெய்வ வழிபாடு, சாதியை இருக கட்டிவைக்கும் ஒன்றாகவே இன்று இருக்கிறது.எங்கள் சாதி சங்கம் இருக்கும் தெருவின் பெயரே நாடார் பிள்ளையார் கோவில் தெருதான். இந்தக் குல தெய்வ வழிபாடுதான் மேல்நிலை ஆக்கம் பெற்று, பெரு மதத்துடன் இணைகிறது. குலதெய்வம் மேல்நிலை ஆக்கம் பெற்றுப் பெருந்தெய்வமாக ஆகும் போது, சாதி அமைப்பும் தீவிரம் கொள்கிறது.இந்துத்துவ அரசியல் இதற்க்கு தீனி போட்டால் மட்டுமே பிழைத்துக் கிடக்கும். இங்கு அடிப்படை சிக்கல் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் இருக்கிறது. அங்கே மெய்மைத் தேட்டத்துக்கான ஒரே ஒரு பொறி இருந்தாலும் கூடப் போதும். ஒருவன் தனது சாதி அபிமானம் சார்ந்து சுய பரிசீலனைக்கு ஒரு இடம் உள்ளது.
இப்படி ஏதேதோ பேசியபடி கடலூர் வந்து இறங்கினோம். மெல்லிய உறுமலுடன் சாரல் மழை துவங்கியது. அப்படியே கடற்கரை நோக்கி ஒரு மழைப் பயணம் செய்ய முடிவெடுத்தோம். வழியில் ”அங்க பாருங்க, அதோ அந்த ஸ்லாப் மேல. அது பேரு கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது” பார்த்தேன். அது பறந்த கணம் புதிய பரவசம் ஒன்று என்னைத் தொட்டது. நல்ல மழையில் நனைந்தவாறு, ஐந்து கிலோமீட்டர் நடந்து, அல்படு பொழுதில் கடற்கரையை அடைந்தோம். கருஞ்சாம்பல் வண்ணத்தில் உறைந்து மழைக்குள் விரிந்து நின்றிருந்தன வானும் கடலும். அந்த அதிகாலையில், மழையில், மக்கள் கூட்டம். ஆங்காங்கே தழல் வளர்த்து எதோ சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருந்தது. அஜி ஒரு ப்ரோகிதரை அணுகி என்ன விசேஷம் என்று வினவ அவர் ”மாளிமாச ” என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தார். என்னைப் புரியாமல் நோக்கிய அஜிக்கு அதை மாகாளி அம்மாவாசை என்று மொழிபெயர்த்தேன்.[அது மாகாளி அம்மாவாசை அல்ல மஹாளய அம்மாவாசை என்று ஒருவர் எப்போதும் என் மண்டையில் கொட்டுவார்].
அஜி :கம்பீரமா உக்கிரமா இருக்கு .
நான்: அதோ அந்த ப்ரோகிதர் கிட்ட அத சொல்லுங்க சக்கரத் தூக்கலா கொஞ்சம் சக்கரப் பொங்கல் தருவார்
அஜி: ஏன் சக்கரப் பொங்கல் மேல அவ்ளோ கோவம்?
நான்: ஸ்ரீரங்கத்துல, [ஸ்ரீரங்கம்னு சொல்லப்பிடாது திருவரங்கம்னு சொல்லணும் என்று என் மண்டையில் தட்டும் ஒரு நண்பன் எனக்குண்டு] சக்கரைப்பொங்கல் சாப்புட எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அன்னைக்கு பண்ணாரி போய் இருந்தேன். நெத்தில புத்து மண் பூசி, சாப்புட சக்கரைப்பொங்கல் தராங்க. அங்கதான் காண்டு ஏறுது.
நல்ல மழைக்குள் கடலை நோக்கி அமர்ந்தோம். அலை வீச்சில் நண்டுகள் கரைக்கு வந்து விளையாடின. அஜி சுட்டிக் காட்டிய நண்டு ஜோடிக்குக் கண்கள் ஆண்டெனா போல இருந்தது. இது ரேரான நண்டு இனம்தான் என்றான். சாம்பல் வண்ண வானை கிழித்து வீழ்ந்தது வாடா மல்லி வண்ண மின்னல். அதன் இறுதி வால் பொட்டு பொட்டாகச் சிதறி வீழ்ந்தது. புறங்கை நரம்புகள் வடிவில் அடுத்த மின்னல். அடுத்தடுத்த மின்னலில். கண் படும் காட்சி எல்லாம் மெல்லிய செந்தூர வண்ணம் கொண்டு துடித்துச் சிதறியது. செந்தூர வானம், செந்தூரக் கடல், செந்தூர அலை, செந்தூர மணல் வெளி.
மெதுவாக உலவியபடி வீடு வந்தோம்.வழியில் கெடிலம் நதியில் நூற்று எழுபது வயதான ஆங்கிலேயர் காலத்துப் பாலம் உடைந்து சரிந்து கிடந்தது. வீடு அஜிதனைக் கொண்டாடியது. ஜெயமுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ஒரு காலத்துல நீங்களும் இளமையா இருந்துருக்கிங்க போல என்றான். தங்கை மகள் அஜிதனுக்கு அவளே ராக்கி கையிறு தயாரித்திருந்தாள்.பெரியம்மா அஜிதனுக்கு அவங்கப்பா சினிமாவுக்குப் போனபிறகு அவரது புகழ் எப்படிப் பரவி இருக்கிறது என்று வகுப்பு எடுத்தார்கள். தங்கை மகன் அன் அன் அன் அண்ணா கூடத்தான் இன்னைக்குச் சாப்புடுவேன் என்றான். சாப்பிட்டு முடித்து அம்மா அஜிதனை தட்டிலேயே கையைக் கழுவ சொன்னார்கள். அஜி கண்களால் இது ரொம்ப ஓவர் என்றான். முடித்து மதியம் மூன்று மணிக்கு ஹோய்சால தேசத்தில் கலைமகள் நடனம் காண புறப்பட்டோம்.
காலை ஒன்பதுமணி வாக்கில் பேலூர் வந்திறங்கி முதலில் சாப்பிட்டோம். பின்பு சென்னகேசவா கோவில் நோக்கி நடந்தோம். ஆயிரத்து நூற்றி எட்டில் தலைக்க்காட்டுப் போரில் சோழர்களை வென்றதன் நினைவாக விஷ்ணுவர்த்தன கட்டிய கோவில்.ஒருபக்கமாக வீங்கிய சுதை கோபுரத்துக்குப் புத்தம் புதிதாக, கைக்குழந்தையின் சீத பேதி வண்ண மஞ்சளில் வர்ணம் அடித்திருந்தார்கள். வெளியில் இருந்து உள்ளே எட்டிப் பார்த்தோம். சாரங்கள் கட்டைகள் கட்டி புனர் நிர்மாண பணிகள் நடந்து கொண்டிருந்தது. சித்தாள் பெரியாள் கொத்தனார் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். கிணறு தோண்ட என்றே குழுக்கள் உண்டு அவர்களைக் கொண்டு, அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு இருந்தது அந்தப் பணி.
முதலில் கோவிலின் வலதுபுறத்தில் சிறிய கோபுர வளைவுக்குள் நின்றிருந்த காலபைரவர் சிலையைப் பார்த்தோம். வெறும் இரண்டரை அடி உயர சிலை. ஆனால் அதற்குள் எத்தனை நுட்பங்கள். திரி சடை. நெற்றிக் கண், வீரப்பல்,காதுகளில் குழைகள் குண்டலங்கள், கழுத்தில் அட்டிகை, மண்டை ஓட்டு மாலை. வலது மேல் கையில் தமருகம், இடது மேல் கையில் திரிசூலம், இடதுகையில் கொய்த தலை இடை மேவிய ஒட்டியாணம், வலதுபுறம் இடை ஒசித்து, இடது காலில் முண்டத்தை மிதித்து, இருபுறமும் பூதகணங்கள் மத்தளம் இசைக்க, அழகு. ரௌத்ர அழகு.
தமருகத்தின் ஒவ்வொரு பிரியும் தெரியும் வண்ணம் செதுக்கல். அவர் கையில் வைத்திருக்கும் பாம்பு உடலின் வரிகள். ஒவ்வொரு மணியும் தனித்துத் தெரியும் ஆபரணங்கள்.முண்டத்தின் வலது கரம் ஏற்க்கனவே துண்டிக்கப்பட்டுப் பூதகணங்களின் காலடியில் கிடக்கிறது, கொய்யப்பட்ட தலையின் எடையை, அந்தத் தலை தொங்கும் திநிவிலிருந்தே உணர இயலும். அனைத்துக்கும் மேல் மத்தளம் இசைக்கும் பூதகணங்கள். இரண்டு அங்குல சிலையில் என்ன ஒரு பாவம். இரண்டு பக்க பூதகணங்களை நோக்கி காலபைரவரின் உடலிலிருந்து தொங்கும் மணி அசைகிறது. அந்த மணி இடித்துவிடா வண்ணம் பூதகணங்கள் பம்மியபடி வாசிக்கிறது. பூதகணங்களை அணிகளின் நுட்பங்களை உற்று நோக்குங்கால் காலபைரவர் விஸ்வரூபம் கொள்கிறார்.
நெடுநேரம் அந்த ஒரே சிலையின் முன்பு அமர்ந்திருந்தோம். பின் உடனடியாக ஒரு தேநீர் இடைவேளை எடுத்துக் கொண்டோம். தேநீர் அருந்தியபடி இந்தக் கலை வெளியை எப்படி எதிர்கொள்வது என்று வியூகம் வகுத்தோம். முதலில் பொதுவாக ஒரு சுற்று. பின் உக்கிர பாவ சிலைகளை முதலில் பார்ப்பது, அதன் பின் கன்னியர் சிலைகள், அதன்பின் சிறிய சிலைகளின் வரிசை என்று குத்து மதிப்பாக வகுத்துக் கொண்டோம்.
உக்கிரபாவ சிலைகளில் உன்னதம், பேலூர் கோவில் நரசிம்மர் சிலைகள். மடியில் கிடக்கும் ஹிரண்யன் போராடிக் கொண்டிருக்கிறான். அவனது ஆயுதம் தங்கிய கையும் கால்களும் நரசிம்மத்தின் கைகளாலும் கால்களாலும் கிடிக்கிப் பிடி வழியே செயலற்றுக் கிடக்கிறது. நரசிம்மத்தின் கைகள் யாவிலும் போர்க்கலங்கள். இரண்டு கை ஹிரண்யனின் வயிற்றைக் கிழிக்க, இரண்டு கை அவனது குடலை எடுத்து மாலையாக அணிய உயருகிறது. உள்ளிருந்து உந்தும் ஆற்றலில் பிதுங்கிய விழிகள், கர்ஜிக்கும் சிம்ம முகம்.
ஒவ்வொரு ஹிரண்யவத சிலையிலும் நுட்மனான, அதே சமயம் ஆழமான வேறுபாடுகள் காட்டி ஒவ்வொரு நரசிம்மமும் பிரிதொன்றுடன் இணை சொல்ல இயலா தனித் தன்மை கொண்ட கலை அழகுகளாக மிளிர்கிறது. இந்த நரசிம்ம சிலைகளின் சிகரம் ஒரு இடத்தில் நரசிம்மர் வாயில் ஹிரண்யனின் குடலை கிழித்து வதம் செய்யும் சிலை.
அடுத்த அழகு காலபைரவர் மற்றும் பைரவி. பைரவர் சிலைகளில் ஒன்றினில், கொய்யப்பட்ட சிரத்திலிருந்து குருதி வழிகிறது. அந்தக் குருதியை ருசிக்க நாய் இரு கால்களால் எக்குக்கிறது. அந்த நாய்க்கு அருகே ஒரு பேய். தனது குழந்தைக்கு அந்தத் தலையில் இருந்து அறுபடும் மாமிசத்தை ஊட்டுவதற்குக் கை உயர்த்தி நிற்கிறது. மற்றொரு பைரவருக்கு ருத்ராக்ஷ கொட்டைகளால் ஆன கிரீடம். ஒரு பைரவி கையில் தொங்கும் அறுந்த சிரத்தில் கண் இமை முடிகள் கூடத் துல்லியமாகச் செதுக்கப்பட்டு இருக்கிறது.
மூன்றாவது அழகி, மகிஷாசுரமர்த்தினி. கோவிலின் இடதுபுறம் இலங்கும் சிறிய கோவிலுக்குள் இருக்கும் மகிஷாசுர மர்த்தினிதான் பேரழகி. ஒவ்வொரு மர்த்தினியும் ஒவ்வொரு விதம். மர்த்தினி என்ன மாடு கூட ஒவ்வொரு விதம். ஒரு சிலையில் மாடே கொண்டு அசுரனை மர்த்தினி வசம் ஒப்படைக்கிறது. மற்றொரு மாடு மர்த்தினியின் பாதம் பணிந்து நிற்கிறது. மற்றொரு மாடு கால் உடைந்து நாக்கு தள்ளி கிடக்கிறது.
மகிஷா சுர மர்தினி ஆகட்டும், காலபைரவர் ஆகட்டும் அவர்களின் முகத்தில் உளமயக்கோ என்று ஐயுறும் வண்ணம் ஒரு மெல்லிய குறுஞ்சிரிப்பு இழைகிறது, ஆனால் இந்த நரசிம்மமும், பூவராகனும் மானுடம் அடைந்த குரோத உச்சத்தின் உன்னதக் கலை வடிவம். அதிலும் பூவராகன் சில்லறை அடியாட்களை அடித்துப் பறக்கவிட்டு, மிதித்துத் துவம்சம் செய்தது முன்னேறுகிறார், அவர் அணிந்திருக்கும் மணிமாலைகள் பின்னால் இழுபட்டு அவரது உடலின் விரைவைக் காட்டுகிறது, சிறிய விழிகளும், வான் நோக்கி உயர்ந்த வராக முகத்தில், உறுமும் வாயில் உயர்ந்த தந்தங்களும், உக்கிரம் உக்கிரம் . ஆனால் இடது கையில் பூதேவியை மட்டும் வசதியாக [சோபாவில் அமர்ந்திருப்பவர்போல] அலுங்காமல் நலுங்காமல் வைத்திருக்கிறார்.
அடுத்ததாக இந்தக் கலை வெளியின் இணையற்ற தனித்துவமான நடனமாடும் சரஸ்வதியை நோக்கி நடந்தோம். கோவிலில் அந்தப் படிமைக்கு எதிரே. இளம்இணைகள் ஒன்று, ஆலிங்கணம் கொண்டு, உதடுகளை உதடுகளால் அறிந்துகொண்டிருந்தார்கள். அஜி கொஞ்சம் வெட்கப்பட்டான். ஆனால் எந்தக் காதலனை விடவும், இங்குக் கலா ரசிகன் ஒரு படி மேலானவன், ஆகவே நான் முன்னேறினேன். அஜி பின்தொடர்ந்தான். மிக அழகான கற்பனை. வெண்முரசில் ஒரு வரி வியாசனை பறக்கும் யானை என்று இயம்பும், அது போன்றதொரு உச்சக் கற்பனை. கஞ்ச மலர் மேல் கலைமகள் நாட்டியம். ஆம் பண்டிதனின் சரஸ்வதி இல்லை இவள். இவள் வாக் தேவி. இலக்கிய ஆக்கங்கள் தருபவள். இரு கொங்கை கொடும்பகை வென்றன என்று குழைந்து குழைந்தாட நடம் புரிபவள். மலர்ப் பங்கயமான எழுத்துக் கலைஞசனின் மனதில் ஏறி ஆடல் புரிபவள். பூவில் இடம் கொள்ளப் போதாமல், கலைஞன் நாவில் குடியேறும் பத்தினி.
மதிய உணவில், இந்தப் படிமைகள் குறித்தே பேசிக் கொண்டிருந்தோம்.
அஜி: இப்டி எல்லாத்தையும் அடக்கி இந்ததக் கோவில் இருக்கே, அப்போ அங்க கம்ப ராமாயணம் மாதிரி இங்க ஒரு கிளாசிக் இருக்கணுமே. அப்டி இருக்கா?
நான்: தெரியல, உங்க அப்பா நித்யா கிட்ட கேக்குறார . கம்பராமாயணம் மாதிரி ஒன்னு உருவான சூழல்ல ஏன் ஒப்ரா உருவாகல அப்டின்னு.
அஜி: யோசிக்கணும் அனைத்தையும் உள்ளடக்கும் கோவில், இலக்கியம் இதைஎல்லாம் ஆக்கிய காரணியான தத்துவம் ஒப்ரா உருவாகும் அளவு உள்விரிவு இல்லாததா இருக்கலாம். தெரியல.
தொடர்ந்து வாக்னரின் ஒப்ரா அது உருவாகி வரும் தத்துவப் பின்புலம். ஒப்ரா வுடன் ஒப்பு நோக்க இங்கிருக்கும் இசைவெளியின் போதாமை என்று தொட்டு தொட்டு அஜி பேசிக்கொண்டே போனனான். சப்பாத்தி வந்தது. இது உள்ள மட்டும்தான் போகும். வெளிய வராதுன்னு நினைக்கிறேன் அன்றான் அஜி. நரசிம்மம் வந்தால் மட்டுமே அந்தச் சப்பாத்தியை கிழிக்க இயலும்.
மதியம் கன்னியர் சிலைகளை, கண்களால் அள்ளி அகத்தில் நிறைத்துக் களித்தோம். கையுடன் எடுத்துச் சென்றிருந்த தூர தரிசினியால், ஒவ்வொரு கன்னியின் ஒவ்வொரு வனப்பையும், செழுமையையும், பாவனையையும் நெருங்கி அனுபவித்தோம். ஒருவள் முகத்தில் விவரம் அறிந்த சிரிப்பு, ஒருவள் முகத்தில் எப்படி எனது பதம் என்பதான பெருமிதம், ஒருவள் முகத்தில் தன்னில் தான் நிறைந்து காத்திருக்கும் உவகை, வித விதமான அணிகள், வித விதமான கேச அலங்காரங்கள், பெண் சருமமே போன்று மயக்கம் தரும் கல் சருமம். சாமுந்திரிக்கா லக்ஷன ஸ்தனங்கள், தத்ரூப அடி வயிறு மடிப்பு, மூட்டுக்கள் அற்ற மொழு மொழுப்பான கால்கள், கோவிலுக்குள் நுழைந்தோம், உச்சபட்ச சுழற்சியில் உறைந்து நிற்பதான பாவனையில் நின்றிருந்த உருக்கு இரும்பால் வார்க்கப்பட்டது போலத் தோற்றமளித்த ஒவ்வொரு தூணையும் வருடிப் பார்த்தோம். சல்லடை அடுக்காகச் செதுக்கப்பட்டிருந்த தூண் முன் திகைத்து நின்றோம். கருவறை முன்னிருக்கும் மண்டப விதானத்தை, கைடு அசந்த நேரம் பார்த்து, ரகசியமாகக் குவி விளக்கை ஏற்றி பார்த்தோம். கிண்ணமாகக் கவிழ்ந்த விதானத்தில் கல்லால் ஆன சிற்பக்காடு.பைனாக்குலர் கொண்டு இலை இலையாக ரசித்தோம் விதானத்தைத் தாங்கும் தூண்களின் உச்சியில் கன்னியரகளை. கருவறை முன்பு உயர்ந்தது நிறைத்த துவார பாலகர்களைப் பாதாதி கேசம், பிரக்ன்ஜையை நிறுத்தி அணுஅணுவாகத் தியானித்தோம். எல்படு பொழுதுவரை கலைகளில் கிறங்கித் திளைத்தோம். கலவியைத் துவங்கி ,உச்சம் தொடுவதற்குள் இடை புகும்இடர் போலப் பார்வையாளர்கள் நேரம் முடிந்தாக அறிவித்தனர். எதுவுமே பார்க்கவில்லை எனும் ஏக்கத்துடன் வெளியில் வந்தோம்.
காலையில் அறையைக் காலி செய்தோம். மேனேஜர் எங்கோ சென்றிருந்ததால் கோவிலை சுற்றி ஒரு நடை சென்றோம். எனது வழக்கமாகக் கோவிலை அப்பிரக்தக்ஷனமாகச் சுற்றினேன். அஜி அதைக் கவனித்திருந்தான். ஏன் இப்படி என்று கேட்டான். அது ஒன்றும்மில்லை. பொதுவாக வழக்கமாக நடை செல்கையில், எண்ணங்கள் எழுந்து பரவி பார்வைப் புலனை மழுப்பி விடும். எதிர் நடையில் மனம் சொல்லெடுபதை விடுத்து கான்பவற்றில் கவனம் கொள்ளும்.என்றேன். அஜி அங்கிருந்து ஹெர்சாக் எடுத்த ஆவணப்படத்துக்குச் சென்றான்.
” ஹெர்சாக் கைலாஷ் வலம் வரும் குழுக்கள் இடையே இருந்து ஒரு ஆவணப் படம் எடுத்திருக்கிறார். பௌத்த துறவிகள் தொடர்ந்து, ஒருவர் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தது இமையம் தரிசிக்க வருகிறார். வரும் முறைதான் ராட்சசம். நெற்றி நிலம் பட நெடுஞ்சான் கிடையாக வணங்குகிறார். பின் எழுந்து நெற்றி பதிந்த இடத்தில் பாதம் படிய நின்று வணங்குகிறார். பின் அதிலிருந்து நெடுஞ்சான்கிடையாக விழுகிறார். இப்படியே பல்லாயிரம் மைல் கடந்து வந்து, இப்படியே மலையை வலம் வருகிறார். இப்படிப் பல குழுக்கள் மலையை வலம் வருகிறது. ஒரே ஒரு இனக் குழு மட்டும், மலையை எதிர் நடையாகச் சுற்றுகிறது. அவர்களை ஹெர்சாக் பேட்டி காண்கிறார். அவர்கள் சொல்லும் பதில், நீங்கள் சொன்ன பதிலிலிருந்தே துவங்குகிறது”
அங்கிருந்து துவங்கி விழிப்புணர்வுக்கும் புலன்களுக்குமான தொடர்பு குறித்து உரையாடல் திரும்பியது. அஜிக்கு புரியும் என்பதால், தியான கணத்தில் புலன்களை ஒருங்கிணைத்து அறிதலை அளிக்கும் மையம் செயல் இழப்பதால் நிகழும் குழப்பங்களை விவரித்தேன். அஜி அது குறித்து ஷோவனா எனும் அறிஞர் முன்வைப்பதை தொகுத்துச் சொன்னான். குறிப்பாகத் தொடுகை. கையால் தொடும் சுவரும், காலால் தொடும் சுவரும், ஒன்று என்று உணரவைக்கும் அமைப்பு மாயையானது. உண்மையில் தொடு உணர்ச்சிக்கும், இந்த இணைப்பு செயல்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மற்றொரு எல்லையில் இந்த மாயைஅமைப்பு செயல்படா விட்டால் விழும் அருவி வெறும் படிமமாகவும், அதன் ஓசை அதனுடன் இணைந்து எந்தப் பொருளும் அளிக்காமலும், வெறும் குழப்பமாகவே காண்பவை யாவும் எஞ்சும். ஆக இந்த யதார்த்தத்தில் வாழ இந்த இணைக்கும் மாயை இன்றி அமையாதது. என்று துவங்கி அவரது பார்வையை விளக்கிச் சென்றான்.ஜெயம் போலவே நின்று, கையசைத்து, ஒரு கணம் என் ஆசான் ஜெயமோகனுடன் நின்றிருப்பதாகவே பட்டது.
அறையைக் காலி செய்து, ஹளபேடு நோக்கி பயணித்தோம். கோவிலின் பெயர் துவார சமுத்திரம் விஷ்ணு வர்த்தணனின் மகனோ பேராண்டியோ கட்டியது. வழமை போலக் கோவிலை வெளி வட்டத்தில் சுற்றினோம். கோவிலின் இடதுபுறம் ஒரு அருங்காட்சியகம். அருகே நெடு நிற்கும் மகாவீரர் சிலை. கோவிலை சுற்றி வந்தோம். பின் அங்கிருந்து சில கிலோமீட்டர் தள்ளி இருந்த கேதாரேஸ்வரர் கோவில் சென்றோம். கோவில் நடை திறந்திருந்து, உள்ளே மூல கோவில் மூடி இருந்தது. ஒருவருமே இல்லாத கோவிலில், அணில்கள் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது, தனித்த கிளையில் ஒற்றைக் காகம் ஒன்று சிறகுகளைச் சூரியனுக்குக் காட்டி உலர்த்திக் கொண்டிருந்தது. காலம் கடந்ததால் இப்போதது நரசிம்மர் உக்கிரம் தணிந்திருந்தார். இங்கே லட்சுமி நரசிம்மராக வீற்றிருந்தார். ஒரு வேளை லட்சுமியை கண்டதால்தான் உக்கிரம் தணிந்தாரோ என்னவோ. மகத்தான சிற்பிகள் தங்கள் துரியத்தை உளியால் தொட்டு மீட்டிய கலை வெளியில் நானும் அஜிதனும் மட்டுமே தனித்திருந்து பிரக்ஞ்சயால் வருடி வருடி சிலைகளை அறிந்தோம். பின் அங்கிருந்து அருகிலிருந்த பார்ஸ்வநாதர் ஆலயம் சென்றோம். இருண்டு குளிர்ந்து கிடந்த கருவறையில் ஐந்துதலை அரவம் குடை பிடிக்க இருபதடி உயர பார்ஸ்வ நாதர் நின்றிருந்தார். சூழலோ அவரது இருப்போ சட்டென மனதை மௌனம் கெளவியது. தப்பு பண்ணிட்டோம். கலைகளின் சிகரத்தில் ஞானம் இருக்கணும். இதைக் கடைசீல பாத்திருக்கணும். வைப்புமுறை தவறிப்போச்சு என்றான்அஜி. விடுங்க கடைசீலையும் இதைப் பார்த்துடுவோம் அவ்ளோதானே என்றேன். படிமையைக் கண்டு நெடுநேரம் மௌனத்தில் உறைந்திருந்த அஜி சட்டென்று உத்வேகம் கொண்டு பேசினான்.
” யோசிச்சு பாருங்க இந்தியாவுல பழங்குடி மரபு, துவங்கி அது பெருமதங்கள் ஆவது வரை எத்தனை ரத்த பலி? வண்ணக் கடலில் பாசுபத மார்க்கிகள் தங்கள் அக விடுதலையை எய்தும் சித்திரத்தை உதாரணமாகக் கொள்ளலாம். நிற்கும் சூலத்தில் செருக்கபடும் கொய்த தலை, எலுமிச்சம்பழம்ஆக மாறஉவதர்க்குள் எத்தனை உயிர் பலி நிகழ்ந்திருக்கும். உண்மையில் நமது இந்து மதம், இத்தகு போக்குகளால் நிறைந்த தொகுப்பே. பௌத்தமும் சமணமும் தனது தரிசனத்தால் இந்து மதத்தைத் துளைத்தது நமது நல்லூழ். இந்துமதம் தாய். பௌத்த சமணத் தரிசனங்கள் தந்தை, அந்த விதை இங்கு விழுந்ததால் நிகழ்ந்ததே இங்கு நாம் காணும் சிறப்பு எல்லாம்.”
எனக்குப் பதிலளிக்க எதோ இருந்தது, சொல்லோ தர்க்கமோ கூடவில்லை. மதியம் இரண்டைக் கடந்திருந்தது. ஊரை நோக்கி நடந்தோம். நடையில் காமப் பிறழ்வுகள் நோக்கி உரையாடல் நகர்ந்தது. பிட்டிஷ் வகைமை குறித்து இருவரும் அவரவர் எல்லையில் நின்றிருந்தோம்.
அஜி ” காமம் நம்மிடம் இருக்கும் ஒரே ஆற்றல், அதை இன்னொரு ஆற்றலாக மாற்ற, உயர்த்த முடியும், கலைகளும் ஆத்மீகமும் அதுதான். இந்த மாற்ற செயல்பாட்டில் நிகழும் குழப்பமே பிட்டிஷ் என்று வரையறை செய்கிறீர்கள். இந்த வரையறை பலவீனமானது,அல்லது பிழையானது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். இதைக் கொண்டு பிட்டிஷை நியாயப்படுத்தி விட முடியாது. நேரடியா சொல்லுங்க அந்த எல்லையில் எதற்காகப் பரிவு காட்ட வேண்டும்?”
நான்: ” காமத் தவறு மனிதனில் துவங்கி, மனிதனில் முடிந்துவிடும் ஒன்றாக நான் நினைக்கவில்லை. மனிதனாகிய நாம் முதல் உயிரான அமீபாவின் பேரன்கள்தான். நமது காமப் பிறழ்வுகள் எல்லாம், அந்த முதல் அமீபா தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டபோதே துவங்கிவிட்டது. இதற்குமேல் என்னால் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என் அகம் அறிந்து ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மனிதனால் முற்ற முழுதான முடிவான தீமை ஒன்றினை செய்துவிட முடியாது”
அஜி ”புரியுது” என்றுவிட்டு நான் பார்த்ததிலேயே அழகான புன்னகை ஒன்றை எனக்களித்தான். பேசியபடியே நடந்ததில் எதோ கூட்டம் ஒன்றினில் சிக்கி நின்றிருந்தோம். என்ன என்று பார்த்தோம். ஹளபேடு வார சந்தை. சுற்றுப்பட்டுப் பதினெட்டு பட்டியும் வந்து குவிந்திருந்தது. முழுதாக அலங்கரிக்கப்பட்ட பூம் பூம் மாடு போல அலங்கரிக்கப்பட்ட கருப்பு ஆட்டோக்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. சந்தைக்குள் நுழைந்தோம், விதவிதமான கிராமத்துப் பெண் ஆண் இளைய முதிய முகங்கள். நாட்டுக் கன்னடத்தில் பொருட்களை விற்கும் கூவல்கள், ஒரு பக்கம் செம்மறி ஆடு, கோழிகள், காளை மாடுகள் விற்பனைக்குக் காத்திருந்தன. மாடுகள் கைக்கு அடக்கமாகக் குட்டியாக இருந்தன. அதில் ஒரு காளை உடலில் ஒரு புள்ளி இடம் இல்லாமல் முற்றிலும் மை கருப்பாக இருந்ததை அஜி அதிசயமாகப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான். மாடுகளைக் கட்டும் கயிறுகள்,கழுத்து மணிகள், கலப்பை, (இன்னுமா இதெல்லாம் உசுரோட கிடக்கு?) நுகம் இவை எல்லாம், ஒரு பக்கம், வண்ண வண்ண துணிகள், வாட்சுகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஒரு வரிசை, பண்ட பாத்திரங்கள் ஒரு பக்கம் (மூன்றடி நீள ராட்சச தேங்காய் துருவி ஒன்று கண்டேன்) அழகு சாதனகடைகள் ஒரு புறம், அடி நீள குளிக்கும் துவைக்கும் சோப்புகள் மட்டுமே வெட்டி வெட்டி விற்கும் கடை, பலகாரக் கடை. தழல் வண்ண ஜிலேபி, குருதி வண்ண ஹல்வா, மஞ்சள் வண்ண காரா சேவு, அணையா அடுப்பின் மண்ணெண்ணெய் வாடை, பச்சை தோசை போல வெற்றிலைகள். ஆறு வகைப் பேத பாக்குகள், சுண்ணாம்பு கட்டிகள், உப்பு மூட்டைகள், லவங்கம், தேன், ரொட்டிக் கடை ஒன்றினில் முந்திரிப்பருப்பு வடிவ பிஸ்கெட்டுகள் சிகப்பு மிளகாய்ப்பொடி தூவி குவிக்கப் பட்டிருந்தது. நரசிம்மர் சாப்புடறதுக்கு போல என்றேன். சர்தான் நரசிம்மர் அவ்ளோ நெருக்கமா ஆகிட்டாரா உங்களுக்கு அங்க பாருங்க எவ்ளோ அழகா செதுக்கி இருக்காங்க, அஜி காட்டிய இடத்தில் கிளிப்பச்சை செதில்களுடன், பச்சையாகப் பாவக்காய்கள் கிடந்தது, காய்கறி மார்க்கெட் கடந்து, துடைப்பக் கடைகள் கடந்து, [நம்மூர் பூந்தொடப்பம் தென்னன் தொடப்பம் இரண்டுக்கும் இடையிலான ஒரு வகைக் காய்ந்த புல்லை தொடுத்துச் செய்யப்பட்ட துடைப்பம்] சந்தைக்குப் பின்னல் இருந்த ஏரிக்கரையை அடைந்தோம், நான் கொஞ்சம் மிமிக்ரியில் ஏறிக் கரையின் மேலே போறவளே பொன் மயிலே என்று எட்டுக் கட்டையில் துவங்கினேன் .
அஜி: கொஞ்சம் இருங்க உங்க பொன் மயில், ஏறிக்கரையின் இந்தப் பக்கமா , அந்தப் பக்கமா, எதப்பக்கம் போறா?
நான்: [சற்று யோசித்து நினைவில் படத்தை ஓட்டி சிவாஜியைக் கண்டு பீதி அடைந்து] ”இந்தப் பக்கம்தான் ”
அஜி: சும்மா போற பிள்ளைய ரவுசு பண்ண எதுக்கு எட்டு கட்ட? பாடுரதுலையே எல்லாம் போச்சுன்னா மிச்சத்துக்கு என்ன பண்ணுவீங்க?
சர்தான் என்று பாட்டை ஏறைகட்டிவிட்டு பாதையைக் கண்டுபிடித்து மீண்டும் துவாரகச் சமுத்திரத்தை அடைந்து இருளும் வரை சுற்றித் திரிந்தோம்.
இரவு சல்லிசா சிக்கும் என்று நினைத்து கர்நாடக கவர்மென்ட் எய்டட் தங்கும் விடுதி சென்று அறை வாடகை விசாரித்தோம் அவன் கேட்ட தொகையைக் கொண்டு ஹளபேடு கோவிலில் இருந்து ஒரு நரசிம்மர் சிலையையேவாங்கி விடலாம். வேறொரு நல்ல லாட்ஜில் இடம் கிடைத்தது. எனது வாய் ரங்கீலா படத்தின் ஹே ராமா பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது, அஜி அதில் துவங்கி காம வர்த்தினி ராகத்தில் அமைந்த பாடல்களை எப்படி அடையாளம் காண்பது என்று சொல்லித் தந்தான். கொஞ்சம் ரஹ்மான் கொஞ்சம் வாக்னர் என்று பேசிவிட்டு உறங்கிப் போனோம்.
துவாரக சமுத்திரம் காலை ஆறு முதல் மாலை ஆறு வரை திறந்திருக்கும் . நாங்கள் காலையில் முதல் ஆளாகக் கோவிலுக்குள் நுழைந்தோம். அருங்காட்சியகத்தில் ஆரம்பத்திலேயே நடமிடும் சரஸ்வதி நின்றிருந்தாள். உள்ளே ஒரு மூலையில் சப்த கன்னியர் . மீதம் உள்ள சிலைகளைத் தலைப்பிட்டு வரிசையாக வைத்திருந்தார்கள். பார்த்துவிட்டு கோவிலை சுற்றக் கிளம்பினோம். முதலில் நந்தியை பார்த்தோம். பொதுவாக நந்தி ஒரு காலை நிற்க வைத்து இதோ இப்போது எழுந்து விடுவேன் எனும் பாவனயில்தான் நிற்கும். ஆனால் இங்கே நந்தி முற்றிலும் சொகுசாக இப்போ என்னா எனும் தோரணையில் அமர்ந்திருக்கிறது. அதிலும் முதல் நந்தி பேரழகு. நேத்துதான் பிறந்து அம்மான்னு கத்துச்சி, அதுக்குள்ளே வளந்துடுச்சே என்று பார்ப்பவர் எவருக்கும், காருண்யம் தோன்றும் குழந்தை முகம். உதய ஒளியில், பொன்னால் செய்த படிமை போல ஒளிர்ந்தது. அடுத்த நந்தி முகத்தில் என்னாங்கடா டாய் எனும் தோரணை. பெருத்த பின்னழகில் யாரோ தங்கள் பெயரை பொறித்திருந்தார்கள். பின்பு ஒவ்வொரு துவார பாலகர்களாகக் கண்டோம். ஒவ்வொரு படிமையிஎளும் எதைக் காண்கிறோமோ, கண்கள் அங்கயே சிக்கிக் கொள்ளும் அழகு. தோள் கண்டார் தோளே கண்டார் நிலைதான். விதானத்தை அண்ணாந்து கன்னியரை எதிர்நோக்கி ஏமாந்தேன். ஒரு சிற்பம் கூட இல்லை. அவை இருந்ததற்கு அடையாளமாகத் துளைகள் மட்டும் இருந்தன.
ஒவ்வொரு சிற்பமாகக் கண்டு களித்துக் கடந்தோம். குழல் ஊதும் கண்ணன். குழல் பேஸ்ப்ளூட் எனப்படும் ஆழ்ந்த ஒலி எழுப்பும் குழல். கோவர்த்தனன், காளிங்க நர்த்தனன். கேசினி கிளியை வீழ்த்தும் அர்ஜுனன். சிவபார்வதி. அதிலிலும் கோவிலில் வெளி மூலை மடங்கும் இடத்தில், வலதுபுறமாக இருக்கும் சிவபார்வதி இணையற்ற எழில் வடிவம். சிவன் தோளில் கை போட்டிருப்பதை உடலால் உணர்ந்து அனுபவிக்கும் முகத்தோற்றம். வித விதமான கஜ சம்ஹார மூர்த்தி. ஒவ்வொன்றிலும் நந்தி காட்டும் பாவத்தை மட்டுமே ஒரு நாள் முழுக்கக் கண்டு களிக்கலாம். ஒன்றினில் சிவன் யானையைக் கிழிக்க நந்தியும் உதவுகிறது, ஒன்றினில் சிவன் கஜத்தை கிழிக்கத் துள்ளி வெளியில் வரும் முதல் ஜீவனாக நந்தி இருக்கிறது, பிரிதொன்றினில் சாவகாசமாக அமர்ந்து என்னா பண்ணிக்கிட்டு இருக்கான் இந்தாளு என்று பார்க்கும் நந்தி. ஒவ்வொன்றிலும் சிவனின் விதவிதமான நடன பாவம். ஒரு கஜசம்ஹார மூர்த்தியின் காலடியில் படைக்கலம் ஏந்திய நிதம்பச் சூதினி. பிரிதொன்றினில் அதே படிமை விஸ்வரூபம் கொண்டு எழுகிறது. இடது கை சுண்டுவிரல் நகத்தைக் கடித்து, சிங்கார இளிப்புடன் எழும் நிதம்பச் சூதினி. எண்ணற்ற வடிவில் காதல் பொங்கும் ரதி மன்மதன். பத்து தலைகளிலும் பத்துப் பாவம் காட்டி கைலாயத்தைப் பெயர்க்கும் ராவணன். எதிரே இருந்த பெண் சிலையைச் சுட்டி அஜிதன் சீரியஸாகச் சூர்ப்பனகை என்றான். [அவளது மூக்கு உடைந்திருந்தது]. மீண்டும் கோவிலை சுற்றி வந்து அதே சிலைகளைக் கண்டு களித்தோம். அடுத்து அறை அடிக்கு அறை அடியில் செய்யப்பட்ட மினியேச்சர் சிலைகளைப் பார்க்க தீர்மானித்தோம். கோவிலின் அடி வரிசை முழுக்க யானை வரிசை. அஜி பேலூர் கோவிலில் பார்த்த இந்த அடி வரிசை யானைகளுக்கும், இங்கு உள்ள யானைகளுக்கும் என்ன வித்யாசம் சொல்லுங்க என்றான். அவனே தொடர்ந்தான் அங்க உள்ளது கொம்பு இல்லாத யானைகள். அத்தனை யானையும் குறும்பு செய்துகொண்டு இருக்கிறது. இங்கு உள்ளவை தந்தம் கொண்ட போர் யானைகள், மேலே அங்குசத்துடன் பாகர்கள் இருக்கிறார்கள். ஆம் ஒவ்வொரு யானையும் போரில் தனது பங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. ஒருவன் காலடியில் குவிந்து கிடக்கிறான். ஒருவன் கொம்பில் இறந்து தொங்குகிறான். பலப் பல நிலைகள். அதற்கு மேல் வரிசை யாளிப் படையும், குதிரைப் படையும் பெரும்பாலும் உடைந்திருந்தது. அதற்கும் மேலே வித விதமான மிகச் சிறிய சிற்பங்கள். இரு பெண்கள் உலக்கை குத்துகிருரார்கள், இருவர் ஸ்ட்ரா பொட்டு இளநீர் அருந்துகிறார்கள். ஒருவள் தூர தரிசினி, அல்லது கலைடா ஸ்கோப் கொண்டு பார்க்கிறாள், மனிதனால் செய்யமுடியாது எனும் நிலையில் வித விதமான நிலையில் காம சிற்பங்கள், போர் காட்சிகள். பீமன் தன்னெதிரில் இருக்கும் யானைப் படையைக் கதையால் அடித்துத் தனது பின்புறம் குவித்து வைத்திருக்கிறான், பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கிறார், அபிமன்யு சக்கர வியுகத்தைத் துளைத்து முன்னேறுகிறான். பூதனை கிருஷ்ணருக்கு முலையமுதளிக்கிறாள். ராமன் விடும் பானம் ஏழு மரத்தை துளைத்து வாலியை சென்று தைக்கிறது, ராமனும் தசமுகனும் அம்புகள் பறக்க இறுதிப் போரில் எதிர் நிற்கிறார்கள். மகா வீரர் தவத்துக்கு நாகங்கள் [இச்சை] இடையூறு தருகின்றன, மகாவீரர் வணங்கி அமர்ந்திருக்கிறார். [ஆம் அது வணங்கப்பட வேண்டிய தீமையே] மற்றொன்றினில் மகாவீரர் தவத்திலிருக்க இரு யானைகள் மத்தகம் மோத எதிர் எதிர் வலிவில் உறைந்து நிற்கிறது. வானர சேனை இலங்கையை அடைய பாலம் சமைக்கிறது. அஜி சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு நிர்வாணப் பெண்ணை ஒருவன் அணைத்திருந்தான். பெண்ணுக்கு குதிரை [அல்லது கழுதை] முகம்.
அஜி: ஹெர்சாக் ஆவணப் படத்தில் ஒரு சித்திரம் வருகிறது. ஹெர்சாக் முப்பது ஆயிரம் வருடம் கொண்ட குகை ஓவியங்களைக் குறித்துப் படம் செய்திருக்கிறார். அதில் ஒரு ஓவியம் குதிரை முகம் கொண்ட நிர்வாணப் பெண். இன்று இவற்றை வைத்துக் கொண்டு மனிதத் தன்னிலை குறித்து ஆராய ஒருவர் நுழைந்தால், இன்று அவருக்கு உலகில் மிச்சமிருக்கும் ஒரே ஒரு புகலிடம் இந்து மதம் மட்டுமே. அந்த எல்லையில் சக்கரைப் பொங்கல் இது எதையும் மாற்றி வைக்குமே தவிர அழிய விடாது. மாறாகப் பகுத்தறிவும் , இறைவார்த்தையும் ஊடுருவிய இடம் எல்லாம் அழிவு மட்டுமே மிஞ்சுகிறது. நமது வேர்களை இழந்து விட்டால், மீண்டும் நாம் மந்தைகள் ஆவதன்றி வேறு வழி இல்லை.
நான் சிரியாவில் போரின் பெயரால் அழிக்கப்பட்டுவரும் இரண்டாயிரம் வருட வரலாற்றுச் சின்னங்களை நினைத்துக் கொண்டேன்.
கோவிலுக்குள் நுழைந்தோம். அதே நேரம் ஒரு அம்மாள் வெளியே வந்தார். இடதுபுறம் நின்றிருந்த துவாரகப் பாலனைக் கண்டு ஹக் ஒலி எழுப்பி நின்று திகைத்தார். இல்லி நோடுமா என்று கிட்ட தட்ட குளறினார். இல்லி நோடு இல்லி நோடு என்று அவரது வாய் தன்னிச்சையாகப் புலம்பியது, அந்தப் படிமையின் சிரசை தொட்டுச் சென்னியில் சூடினார், தோள்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றினார், குனிந்து பாதத்தைத் தொட்டு, தொட்ட கையில் மாறி மாறி முத்தினார்.
கண்ட கணம் என் கண்கள் கலங்கி நீர் திரை இட்டது. என் அகம் அறியும்.இது பக்தி அல்ல. கலை முன் பூர்ண சமர்ப்பணம். அவள் ஈந்த முத்தமெல்லாம் அந்தச் சிற்பியின் விரல்களுக்கன்றோ. நீர் திரை இட்ட விழிகள் ஊடே துவார பாலகருக்கு மேல் ஆடிக் கொண்டிருந்த நர்த்தன கணபதி எனக்குமட்டுமேயான புதிய நடம் ஒன்று காட்டினார்.
இரவில் அறையில் அஜிதன் கேட்டான். நாம் பார்த்த பாவங்கள் யாவும் உண்மைதானா அல்லது நமது மனம் உருவாக்கிக் கொண்ட மாயையா? ” அது குறித்தெல்லாம் எனக்குக் கவலை இல்லை. கலையை வைத்துக் கொண்டு சாத்தியமான தர்க்க எல்லை வரை கற்பனை செய்யக் கலா ரசிகனுக்கு உரிமை உண்டு அது என்னளவில் பொது ரசனையில் சேர்ந்தாகவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றேன்.
மனம் அமையாமல் அருகிலிருந்த ஏறிக் கரைக்கு நடந்தோம். மின்சார விளக்குகளின் ஒளி தீண்டாத எல்லைக்கு நடந்தோம். ஏரிக்குள் ஒரு கைபிடி அற்ற மூன்றடி அகல பாலம் பாதி வரை சென்று நின்றிருந்தது. அதில் நடந்து முனையில் அமர்ந்தோம் . மேலே நடுங்கும் நட்சத்திரங்கள் மத்தியில் பிறை நிலா. கீழே இருளில் கண்ணாடி மின்னல் போல நீர் ஒழுக்கு . அதில் பிரதிபலித்த நிலவை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அறைக்கு வந்ததும் அஜி கேட்டான். இது வரை இங்கு வந்தவர்களில். நிச்சயம் ஒரு படி மேலாக நாம் ரசித்திருப்போம் இல்லையா? முகத்தில் அப்படி ஒரு குழந்தைமை .
நான்: அந்த அம்மாள பாத்தீங்க இல்ல? அவங்க இங்க இருக்குற எதையுமே பார்க்கவேண்டிய தேவை இல்லை. யாருக்கு தெரியும் அந்தக் கலை வெளியின் ஆகச் சிறந்த கலா ரசிகை அவர்களாகவும் இருக்கக் கூடும்.
மறுநாள் காலை ஷிரவணபேலகோலா நோக்கி பயணித்தோம். பேருந்து முழுக்க இளம் பெண்களால் நிறைந்திருந்தது. இளம் யுவதிகள் அஜியை ஓரக் கண்ணால் பார்த்து எனது வயிற்றில் க்ரியோஜனிக் என்ஜினை இயக்கினார்கள். வெளியில் வெண் பனிக் குளிரை, உஷையின் பொன்வாள் விரையும் மரங்களின் இடைவெளி வழியே மாறி மாறி விழுந்து வெட்டியது.
முதலில் சந்திர கிரி அடைந்து மேலே ஏறினோம். அங்கிருந்த அருகர்களின் காலடி சுவடில் நீ நேரம் அமர்ந்திருந்தோம். அங்கிருந்த பஸ்திகளைப் பார்த்துவிட்டு கீழே வந்து காலை உணவு முடித்து, மதியத்துக்கு ,ப்ரெட் பாக்கெட் வாங்கிக் கொண்டு பாகுபலியை நோக்கி உயர்ந்தோம். உயரே கோமதீஸ்வரர் சன்னதியில் ஐயப்ப மந்தைகள்[ மன்னிக்க, பக்தர்கள்] குவிந்து கோமதீஸ்வரருடன் புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மெல்ல சுற்றி வந்து இருபத்து நான்கு தீர்த்தன்காரர்களையும் தரிசித்தோம். பின்பு வந்து பாகுபலியின் இடதுபுறம் அமர்ந்தோம். அஜி இயல்பாக ஓடிக் கொண்டிருந்த கருப்பு எறும்பு ஒன்றினை நசுக்கினான்.
நான்: போச்சி. என்ன அஜி நீங்க, இப்டி பண்ணிட்டீங்க, அதுவும் கொல்லாமையைப் போதித்த அருகனின் சன்னதியில், எறும்புகள் எல்லாம் நக்கோடா அதாவது சிறிய ஆன்மா. ஒரு ஆன்மாவ இப்டி அளிச்சிட்டீன்களே, அதுவும் கடி இரும்பா இருந்தா கூடப் பரவா இல்ல, கருப்பு எறும்பு, புள்ளையார் எறும்பு ,சாது அதுக்குக் கடிக்கக் கூடத் தெரியாது அதப் பொய்….
அஜி: போதும் இன்னும் ஒரு வார்த்தை பேசுனீங்க அப்டினா, நான் வடக்கிருக்க ஆரம்பிச்சிடுவேன்.
கூட்டம் கரைய நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்தோம். மனம் காலையை நோக்கி விரைந்தது. காலையில் சந்த்ரகிரியில் அஜிதன் வசம் சொன்னேன் அருகர்களின் பாதை பயணத்தில் உங்க அப்பா இதோ இதே இடத்தில் நின்று அசதோமா சத் கமைய ஸ்லோகம் அதன் தத்துவப் பின்புலம் குறித்து எனக்குச் சொல்லித் தந்தார். அந்தப் பிரார்த்தனை வரிகள்செய்த மனம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. வேதங்களும் பழங்குடி இனங்கள் கண்டடைந்த செல்வங்கள்தான். சிவசங்கல்ப்ப சூக்தம் ஐம்புலனையும், சுவாசத்தையும் ஆளும் மனம் பொலிக என்கிறது, மறை பாடல்களின் சாரமும், அறிதல்கள் யாவும் சக்கரத்தின் ஆறம் போல மனதை மையமாகக் கொண்டு இணைகிறது அந்த மனம் பொலிக என்று பிரார்த்திக்கிறது. ஸ்ருஷ்டி கீதம் அப்போது சத்தும் இல்லை,அசத்தும் இல்லை, ஒளிந்திருந்தது என்ன? எங்கே? யாருடைய ஆட்சியில் என்று வினவுகிறது. அனைத்துக்கும் மேல் அணைத்து பிரார்த்தனைகளும் சாந்தி சாந்தி சாந்தி என்றே நிறைகிறது. ஆகப் பௌத்தம் சமணம் இங்கே விதையாக விழவில்லை. இங்கே இயங்கிக் கொண்டிருந்த அடி நீரோட்டம் ஒன்றினை, பாதாள சரஸ்வதியை பிலம், கிளர்த்தி வெளியே கொண்டுவந்தது. அஜி எதுவும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு எதிர் மலையில்தெரிந்த பாகுபலியையே நோக்கிக் கொண்டிருந்தான்.
நேரம் நண்பகல் பன்னிரண்டு. ஞானம் கண்டு, மோனம் கொண்டு உயர்ந்து நின்ற வலிய தோளன் சிரசில் பரிதியை சூடி நின்றான். உயரே உச்சியில் யாரும் தீண்ட இயலா உச்சியில் ஒரு பறவை மௌனமாக மிதந்துகொண்டு இருந்தது.
ஓம் , மெய்யின்மையில் இருந்து மெய்மைக்கு,
இருளிலிருந்து ஒளிக்கு,
மரணத்திலிருந்து அமிழ்துக்கு
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.