சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா

Empty_Theater_Cinema_Movie_Hall_Tamil_Nadu_India_Theatre_Films_Multiplex_Seats

ரண்டு நாட்கள் முன்பாக திடீரென்று கிளம்பி ‘டிமாண்டி காலனி’ என்கிற படத்தைப் பார்த்தேன். ‘டிக்கட் கிடைக்குமா?’ என்கிற சஸ்பென்ஸோடுதான் எல்லாம் ஆரம்பித்தது. நான் தியேட்டருக்குப் போனபோது அரங்கு நிறைந்து விட்டது. யாரோ ஒருவர் தன்னிடம் அதிகமாய் இருந்த டிக்கட்டுகளை விற்கப் போய் படம் துவங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பாக உள்ளே போனேன். படம் ஆரம்பித்ததும் முதல் 15, 20 நிமிடங்கள் “தப்பு செய்து விட்டோமே. பராபரியாக நன்றாக இருக்கிறது என்று யார் யாரோ சொன்னதையும், ஆங்கில ஹிந்துவில் நன்றாக இல்லை என்கிற மாதிரி இருந்த விமர்சனத்தையும் நம்பி வந்து விட்டோமே”  என்று சோர்ந்து போனேன். எழுந்து வந்து விடலாம் ஒன்றும் பிரச்னை இல்லை. இன்டர்நெட்டில் புக் செய்த டிக்கட் என்று சொல்லி ஒரு டிக்கட்டுக்கு ரூ. 150/- கொடுத்து வந்தது கொஞ்சம் தயக்கம் தந்தது. இப்படி இருக்கையில் படம் திடீரென்று வேறு மாதிரி ஆகி விட்டது. முழுப் படமும் இறுதி வரை ஆச்சர்யங்கள் பலவற்றை அள்ளித் தந்தது. அஜய் ஞானமுத்து, அருள் நிதி மற்றும் இதில் சம்பந்தப் பட்ட அனைவருக்கும் சந்தோஷமான வாழ்த்துகள். எங்கிருந்தும் அடிக்கப்பட்ட ஈயடிச்சான் காப்பி இல்லை எனும் பட்சத்தில் “கலக்கிட்டிங்கப்பா!” என்று நிச்சயம் சொல்ல வைக்கும் படம். இதன் ஆச்சர்யங்கள் இன்னமும் தொடர்கின்றன. இப்போதுதான் தெரிந்தது அஜய் ஞானமுத்து மொமென்டோ, சாரி, கஜினி புகழ் முருகதாசின் சீடராம். எப்படீங்க அப்புறம் இப்படி?
இதைப் பார்த்த வேகம் பல நாளாய் எழுத நினைத்து இருந்த தமிழ்  சினிமா பற்றிய கட்டுரையை முடிக்க வைத்தது.

oOo

யாரிப்பாளர்களிலிருந்து, விமர்சகர்கள்வரை விஷயம் தெரியாதவர்களின் கையில் சிக்கிக் கொண்டு தவிப்பதும், இலுப்பைப் பூக்களே கொண்டாடப்படும் ஆலையில்லா ஊராய் தமிழ் சினிமா உலகம் இருப்பதும் இன்று நேற்றாய் நடப்பது அல்ல. உலக அரங்கு என்று வேண்டாம் அகில இந்தியாவிலும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் நாம் பெருமையாக சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் இங்கு அதிகம் இல்லை.
பேசாத படங்கள், பேசும் என்கிற அடைமொழியோடு பாடும் படங்கள், பேசு பேசென்று பேசிய படங்கள், புராணிகப் படங்கள், சரித்திரப் படங்கள், கத்திச் சண்டை, கத்தாமல்  சண்டை போட்ட படங்கள், சமூகப் படங்கள், குடும்பப் படங்கள், காதல் படங்கள், மர்மப்படங்கள், நகைச்சுவைப் படங்கள், பிரசாரப் படங்கள் என்று வகைப் படுத்தியோ, கால கட்டங்களை வைத்தோ பார்த்தாலும்  எல்லாம் கலந்த கலவையாக யதார்த்தம் என்கிற பெயரில் யதார்த்தத்துடன் சம்பந்தப் படாத படங்களே அநேகம்.
ஒரு சமயம் ஸ்ரீதர் வந்தார். சினிமாவில் செந்தமிழும், சகஜமான தமிழும் கலந்து வந்தன. அவர் காலத்திலும், பின்னருமாக கே. பாலச்சந்தர், கே.எஸ். கோபாலக்ருஷ்ணன் போன்றவர்களும் நல்ல டைரெக்டர்கள் என்கிற அடை மொழியோடு புகழ் பெற்று இருந்தார்கள். ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லையும், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற நகைச்சுவைப் படங்களும் அவர் இடத்தைக் காப்பாற்றும் பொழுது போக்குப் படங்கள். கே. எஸ். கோபாலக்ருஷ்ணனின் ‘என்னதான் முடிவு’ ஆன்மீகப் போராட்டத்தினை சித்தரிக்க முயன்ற முக்கியமான தமிழ்ப் படம். பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி போன்ற நகைச்சுவைப் படங்களில் மிளிர்ந்த கே. பா. முயன்று முயன்று திரையில் கொண்டு வரப் பார்த்த ஆற்றல் மிகு பெண் பாத்திரம் அவரது கடைசிப் படங்களில் ஒன்றான ‘கல்கி’யில் மட்டுமே ஓரளவு கை கூடி இருந்தது.
சினிமா பற்றிய அறிவு மிக்கவர்களாலும் (ப. நீலகண்டன், அனந்து) ஒன்றும் பிரமாதமாகச் செய்துவிட முடியவில்லை.
பின்னர் பாரதிராஜா வந்ததும், செட்டியார், ரெட்டியார், ஐயரிடம் (ஏவி.எம்., நாகிரெட்டி, எஸ். எஸ்.வாசன்) மாட்டிக் கொண்டிருந்த சினிமாவுக்கு விடுதலை என்று சில விமர்சகர்கள் சொன்னார்கள். ஆனால் பாரதிராஜா பாக்யராஜ் போன்ற உதவியாளர்களை வைத்துகொண்டு ஆபாசம் இல்லமலோ, கோணல் இல்லாமலோ எடுப்பதும் கடினம். எனினும் நாடகத்துக்கும் ,சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத, துருத்தும் குறியீட்டுக் காட்சிகளாலும் (கே. பா.) வானொலி நாடகங்கள் போல் விஷுவல் என்கிற ஒரு விஷயம் இருப்பதையே மறந்து போன உரத்த குரல் நீட்டீமுழக்கும் வசனங்களாலும் (கே.எஸ்.ஜி.) படங்களைக் கெடுக்காதவர் என்கிற வகையில் பாரதிராஜா பாராட்டுக் குரியவர்.
ஜெயகாந்தன், ருத்ரைய்யா போன்றவர்களின் உயர்தர படங்களுக்கான முழு முயற்சிகள் தவிர மகேந்திரன், பாலு மஹேந்திரா – அவரது காப்பியடிப்பது, செக்ஸின் மீதான அதீத சார்பு இரண்டையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் (அப்படி எதற்காகப் பார்க்கவேண்டும்?) – படங்களில் காணப்பட்ட நல்ல காட்சிகள், ஃபாசிலின் உயிரோட்டம் மிகுந்த இயல்பான படங்கள்,  தமிழின் வணிக சினிமாக்களில் நல்ல படங்கள் என்கிற வரிசையில் முதல் ஸ்தானத்தைப் பெறுபவை.
பின்னர் வந்தவர்களில் அகில இந்தியப் புகழ் பெற்ற சில இயக்குனர்களின் படங்கள் போலித் தன்மை மிகுந்தவையாகவே உள்ளன. நுண்புலனுணர்வு உள்ளவர்கள் இவற்றின் பாசாங்கையும், mediocrity யையும், வணிக நோக்கு உந்துதல்களையும் எடுத்த எடுப்பிலேயே உணர்ந்து விடுவார்கள். வேறு சில புது முயற்சிகளும் வலிந்து வன்முறை நிரம்பியவையாகவே இருந்தன. கிராமம் பற்றிய படங்கள் பலவும் ஏமாற்றம் அளிப்பவையாக இருந்தன. சில வெறுப்புறும்படியும். கிராமத்துக் கவிதைகள் எனப் புகழப்பெற்ற படங்களில், ஜெயகாந்தன் பாரதிராஜா பற்றி சொன்ன மாதிரி ‘கிராமமும் இல்லை, கவிதையும் இல்லை’.
பெரிய நடிகர்களின், பெரிய டைரெக்டர்களின் ஒரே மாதிரியான படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.
மேலே சொன்ன இந்த மாதிரி சூழலில்தான் ஒரு புரட்சி நடக்கட்டுமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறது. புரட்சி என்றதும் ரத்தக் களறியால், அழிவால் வருவது என்று தோன்றும். நமது கத்தியின்றி ரத்தமின்றி வந்த யுத்தத்தில் கூட உயிர்ப் பலியோ, போராடியவர்களுக்கெதிரான வன்முறையோ இல்லாமல் இல்லை. ஆனால் கலைகளிலும், எழுத்திலும் புரட்சி, உரத்து, அடுக்கு மொழியில் பேசாமல், வானம் நிறம் மாறுவதைப் போல், துளி உராய்வில்லாமல் வந்ததை இவ்வுலகம் கண்டிருக்கிறது. அந்த மாதிரியில் தமிழ் சினிமாவிலும் ஒரு புரட்சி சமீபத்தில் சப்தமில்லாமல் நிகழத் துவங்கியுள்ளது.
நம்பிக்கையூட்டும் புதிய இயக்குனர்களுக்கு ஒன்றிரண்டு படங்கள்தான் வந்துள்ளன. அதற்குள் நாம் அவசரப் பட முடியாது.  நாம் நிறைய one film wonder களைப் பார்த்திருக்கிறோம். பாரதி ராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ அதன் செக்ஷுவல் வல்காரிடி தவிர ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. பிறகு அதிகம் தேறவில்லை. ஆனால் கணிசமான படங்கள் எடுத்திருக்கிறார். ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தானும்’ அப்படித்தான். அப்புறம் அவ்வளவுதான். ஆனால் இதற்குக் காரணம் அவருக்கு கிட்ட வேண்டிய அடையாளமும், ஆதரவும் கிட்டவில்லை. ஈ.எம். இப்ராஹிமின் ‘ஒரு தலை ராகம்’. ஓடவும் செய்தது. உருக்கவும் செய்தது. அவ்வளவு இயல்பான நடிப்பை (குறிப்பாக உஷா ராஜேந்தர், ஓரளவு சங்கர்) அந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. அவரது அடுத்த படம் ‘தணியாத தாகம்’ என்கிற haunting பெயரில் வந்தது. போய்ப் பார்ப்பதற்குள் ஓடி விட்டது.
இப்போதைய நல்ல படங்களைக் குறிக்க நடிகர் (விஜய் சேதுபதி நீங்கலாக) டைரெக்டர் தயாரிப்பாளர் என்று பிரித்து விசேஷமாய்ச் சொல்ல இன்னும் பல படங்கள் வர வேண்டும்.
 
‘த்ரில்லர்’ என்கிற வகையில் படங்களை எடுத்தவர்களில் எஸ். பாலசந்தர் துருவ நட்சத்திரமாகத் தெரிகிறார். பட்ஜெட் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் அவர் நல்ல படங்களை எடுத்திருக்கக் கூடும். பின்பு ஒரளவு இத்துறையில் ராஜ் பரத் படங்கள் எடுத்தார். திருமலை மகாலிங்கத்தின் ‘சாது மிரண்டால்’ டி. ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், ஓ. ஏ. கே தேவர் ஆகியோரின் அற்புத நடிப்பாலும் ஒரே காட்சியில் வந்தாலும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மேதைகளான டி. எஸ். பாலையா, ஏ. கருணாநிதி ஆகியோரின் அசாத்திய ஆற்றலாலும் மிக சுவாரஸ்யமாக அமைந்தது.
சமீபத்திய காலகட்டத்தில் ‘யாவரும் நலம்’ (2009 – விக்ரம் குமார்) என்கிற அமானுஷ்யப் படம் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.  இன்னொரு நல்ல முயற்சியான ‘ஈரம்’ (2009 – அறிவழகன் வெங்கடாசலம்)  இன்னொரு அமானுஷ்யப் படமாக இருந்தும் வழக்கமான காதல், சாதி, மற்றும் உளவியல் வக்கிரம் போன்ற செருகல்களைக் கொண்டதாக இருந்ததால் யாவரும் நலம் எட்டிய உயரத்தை எட்ட முடியவில்லை.
பீட்ஸா (2012 – கார்திக் சுப்பராஜ்) கூட பார்க்கும் போது அமானுஷ்யமான படமாகத்தான் தெரிந்தது. ஆனால் கடைசியில், இல்லை இல்லை என்று ரொம்ப மனிதமாகத் தன் சுய ரூபத்தைக் காட்டும். அந்தப் படத்தின் விசேஷமே அந்த ட்விஸ்ட்தான்.
‘தெகிடி’ (2013 – பி. ரமேஷ்) ஒரு த்ரில்லர். இதன் கதையின் லாஜிக் பெரிதும் சரியில்லை என்று நான் நினைத்திருந்தேன். என் நண்பர் ஒருவர், என்னோடு வங்கியில் பணி புரிந்தவர், அதை விளக்கியதும் பாதி விஷயங்கள் த்யீரடிகலாக சாத்தியம்தான் என்று தெரிந்து கொண்டேன். அந்தப் படத்தில் இருந்த பிரச்னை கதை நடக்கும் சில நாட்கள் என்னும் கால அவகாசம். ஒரு வங்கிக் கணக்கைத் துவக்குவது, அதில் கோடி ரூபாயைக்கான காசோலையைப் போட்டு பணம் பண்ணுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. மேலும் சாகடிக்கத் துரத்துபவர்களுக்கு வசதியாக தன் காதலியை அவள் இடத்திலேயே விட்டு விட்டு வந்து விடும் நாயகனும் ஓர் ஆச்சர்யம்தான். இந்தக் கதையில் சொல்லப்பட்ட உளவியல் சமாச்சாரம் தர்க்க ரீதியாகவும், நிதர்சனத்திலும் திருப்தி தருவதாக இல்லை. சப்பைக் கட்டு மாதிரி இருந்தது. மேலும் உடன் நிகழ்வுகள், சுளுவாக ஒற்றை ஆளாக சாகசம் செய்யும் ஹீரோ போன்ற அதீதங்களைத் தாண்டி அந்தப் படத்தில் இருந்த நல்ல அம்சம் ஆபாசம் துளியும் இல்லாமல் எடுத்திருந்ததுதான். (ஏன் இதை இங்கே சொல்கிறேன் என்றால் இன்னொரு த்ரில்லரான ‘யாமிருக்க பயமே’ முழுக்க முழுக்க ஆபாசத்தை நம்பி எடுக்கப் பட்டிருந்தது.)  மேலும் அசோக் செல்வன் (சூது கவ்வுமில் பார்த்த பொடி இளைஞரா இவர்?) ஜனனி  ஐயர் போன்றவர்களின் நடிப்பு, attire.
தெகிடியைப் பற்றிச் சொல்கையில் அதன் தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் அட்டக்கத்தி, பீட்ஸா, சூது கவ்வும், முண்டாசுப் பட்டி மற்றும் பல படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து பெரும்பாலும் நல்ல படங்களாகத் தயாரிப்பது எதேச்சையான விஷயம் இல்லை. இவருடைய படங்கள் என்றால் இனி கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
‘அரிமா நம்பி’ (ஆனந்த் ஷங்கர்) என்னும் ‘அற்புதத் தமிழ்ப் பெயர்’ தாங்கிய படம் ஆங்கிலப் படங்களின் தாக்கத்தில் எடுக்கப் பட்ட த்ரில்லர். உளவியல் விகாரங்களை மையமாகக் கொள்ளாமல் எடுத்திருப்பதே மகிழ்ச்சியைத் தருகிறது. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த், சக்ரவர்த்தி சரியாகவும், எம். எஸ். பாஸ்கர் அட்டகாசமாகவும் நடித்திருக்கிறார்கள். பொழுது போக்குப் படம். கதா நாயகனான, சிவாஜி பேரனிடம் ‘நல்ல பையன்’ களை இருக்கிறது. இவர் அடித்தால் வாங்குபவருக்கு வலிக்கும் என்று நம்ப முடிகிறது. இயக்குனரான, கோமல் சுவாமிநாதன் பேரனிடமும் திறமை இருக்கிறது.  ஹிந்து விமர்சனத்தில் வந்தது போல் எந்தப் படத்திலும் பார்க்காத தர்க்க த்ருப்தியை இதில் மட்டும் ஏன் தேட வேண்டும்?
‘யாமிருக்க பயமே’ (2014 – டீகே) வில் கருணாகரனின், மயில்சாமியின் நடிப்பு நன்றாக இருந்தது. பாக்கிப் பேரும் பரவாயில்லை. த்ரில் நிச்சயம் இருந்தது. காமெடி த்ரில்லர் என்கிற வகைக்கு உதாரணமாக இப்படத்தைச் சொல்லலாம். கூடவே ஆபாசம் என்கிற அடைமொழியையும் அடிக்கோடிட்டுச் சேர்த்துக் கொண்டால். இதை மீண்டும் சொல்லக் காரணம் இப்படத்தைக் கோவையில் பார்க்கையில் குழந்தைகளும் வந்திருந்தார்கள். பெண்கள் கூட்டமும் இருந்தது. அவர்களில் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடும். இதற்கு A சர்டிஃபிகேட் கொடுத்து அதை கண்டிப்பாக தியேட்டர்களிலும் கடைப் பிடித்து பார்க்க வகை செய்திருந்தால் இது ஒரு செம காமெடிப் படம் என்று ஒப்புக் கொள்ளலாம். அப்போதும் சில பெண்களின் விஷுவல்கள் ஆபாசக் களஞ்சியங்கள்தாம். இதற்கெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்பதால் நான் என் எதிர்ப்பை இவ்வரிகளின் மூலம் பதிவு செய்கிறேன்.
நேற்றுப் பார்த்த ‘டிமான் டி காலனி’ இன்னொரு புத்தம் புது நல் வரவு.
இவ்வளவு இருந்தாலும் இந்த வகை த்ரில்லர்களில் நமக்கே நமக்கான ஒரு லயம், அசல் தமிழ்த்தனம் இதுவரை கிட்டவில்லை. (இவை எந்தப் படங்களிலேயுமே இல்லை என்பதும் தெரிந்த விஷயம்தான்)
 
மீபத்தில் மிகுந்த மனக் கஷ்டங்களை வெளிக் கொணரும் படங்கள் சிலவும் கையில் பிடித்த காமராவால் படமாக்கப் பட்டு வந்து வெற்றியும் பெற்றன. ‘சுப்ரமண்யபுரம்’ (2008, சசிகுமார்) துரோகம் என்கிற ஒற்றை இழையை இரண்டு முறை சொன்னாலும் மனதில் நிற்கும்படி இருந்தது. இதே குழுவினரின் ‘நாடோடிகள்’ போன்ற படங்கள் அவற்றின் பார்வை, அவை முன்னிறுத்தும் வாழ்க்கை அவசியங்கள் காரணமாக மிகவும் அபாயகரமான மோசமான படங்களாய் ஏமாற்றி விட்டன. மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ மிக நன்றாக எடுக்கப் பட்ட படம். அதற்குப் பின் அவரது படங்கள் ஒரே மாதிரி காட்சிப்படுத்துதல்கள், நம் சூழலுக்கு அந்நியமான நடிப்பு, நல்லபடமாகத் தெரிய மெனக்கிடுதல், ஐடியாக்களின் ரிபடீஷன் ஆகியவற்றால் ஏமாற்றம் தந்தன. ஆனால் பிசாசு வித்தியாசமான பிசாசாக இருந்தது. இது ஒரிஜினல் பிசாசு என்கிற நம்பிக்கையில் சொல்வது. எந்த ஜாடியில் எந்த பூதம் இருக்குமோ?
 
ம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி (2006, சிம்பு தேவன்), தமிழ்ப்படம் (2010 – சி. எஸ். அமுதன்) போன்ற ‘கேலி’ப் படங்கள் (spoof), வந்தன. இருபத்து மூன்றாம் புலிகேசி வடிவேலு என்கிற நகைச்சுவை சக்ரவர்த்தியின் மணி மகுடம். சிம்பு தேவனின் பார்வை, கண்ணியம், சமூகப் பிரக்ஞை போன்றவையும் இப்படத்திற்கு வலு சேர்த்தன. சமீபத்தில் வரிசையாகப் படங்கள் வருகின்றன. வெறும் நகைச்சுவைப் படங்கள் சும்மா சிரிக்கலாம் என்கிற அளவில் வருகின்றன. விமல், சிவ கார்த்திகேயன் முதலிய பக்கத்து வீடுகளில் பார்க்கக் கிடைக்கும் இளைஞர்கள் நாயகர்களாக வருகிறார்கள். வணிக வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப் படும் இன்னொரு வழக்கமான பாதுகாப்பான படங்கள்.
‘பசங்க’ (2009 – பாண்டிராஜ்) போன்ற யதார்த்தமான படங்களும் வந்தன. இதில் நடித்த, பின்னர் தொடர்ந்து களவாணியாகவே நடிக்கும் விமலின் ‘வாகை சூடவா’ (2011 – சற்குணம்) என்கிற படம் சில சீரியஸ் விஷயங்களோடு அமைந்து அதே சமயம் ‘இதுதாண்டா சீரியஸ்’ என்று கண்ணில் மண்ணை வைத்துத் தேய்க்காத படமாக இருந்தது. மேலும் ‘பொய் சொல்லப் போறோம்’ (2008 – ஏ. எல். விஜய் ஹிந்தியில் கோஸ்லா கா கோஸ்லா),  என்கிற  தொலைக் காட்சியில் காண்பதற்கேற்ற படம் சுவாரஸ்யமாய் இருந்தது. தரமாகவும் இருந்தது. இந்த இயக்குனரின் இதர படங்கள் வெகு சராசரியாக இருந்தன.
இவற்றுக்கிடையில் ‘பீட்ஸா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ (2012 – பாலாஜி தரணீதரன்), ‘சூது கவ்வும்’ (2013 – நலன் குமாரசாமி), ‘இதற்குத்தானே ஆசைப்படாய் பாலகுமாரா’ (2013 – கோகுல்), ‘நேரம்’ (2013 – அல்ஃபோன்ஸ் புதரென்) போன்ற படங்கள் வித்தியாசமாக வந்தன. வெற்றியும் பெற்றன. ‘தேசிங்கு ராஜா’ (2013 – எழில்) என்கிற படம் எப்போது தொலைக் காட்சியில் வந்தாலும் பார்த்துப் பார்த்து, விடாது சிரிக்க வைக்கிறது. இதன் க்ளைமாக்ஸ்ஸும் ஒரு ஹைலைட். இதைக் காட்டிலும் சிறந்த அட்டகாசமான க்ளைமாக்ஸ் இருந்த சமீபத்தியப் படம் ‘முண்டாசுப் பட்டி’ (2014 ராம்) மட்டுமே.
இப்படங்களின் சிறப்பு அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால் நடிப்பு, வசனம், வழக்கமாக இடம் பெற்றே ஆகவேண்டும் என்று விதிக்கப் பட்ட காட்சிகள் இல்லாமை, எளிமை, ஏதேனும் புதுமை. கதை என்பது நேரடியாகவும் இருக்கிறது, சிலவற்றில் கவனத்துடன் ஒரு புதிர் மாதிரி தொடங்கி பின் ஒருமையோடு முடிகின்றது.  இவை நட்சத்திர நடிகர்ககளின் படங்களை விட எதார்த்தமாக வாழ்க்கைக்கு அருகாமையில் இருக்கின்றன. ஆட்களின் முகங்கள் நாம் தினசரி சந்திக்கும்  முகங்களாக இருக்கின்றன. ஹீரோயின்கள் இன்னமும் நம்மூர்ப் பெண்கள் போல் முழுதாக வரவில்லை, ‘வாகை சூட வா’ ஒரு விதிவிலக்கு. இன்னும் நான் பார்க்காத எத்தனையோ நல்ல படங்கள் இருக்கக் கூடும்.
பிட்ஸா படத்தின் கதை சொல்லல், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தின் நடிப்பு, காட்சி அமைப்பு, வசனம் போன்றவற்றில் இருந்த இயல்புத்தன்மை அவற்றின் தர்க்கமற்ற தன்மையை மறக்கடிக்கச் செய்யும். அதுவும் கல்யாண வரவேற்பில் தன் காதலியையே (சமீபத்திய சம்பவங்களின் நினைவை இழந்து விட்ட ) விஜய் சேதுபதி திரும்பிப் பார்த்து விட்டு ‘ப்பா ! யாருடா இது? பேய் மாதிரி’ என்கிற காட்சிகள் அட்டகாசம். ‘சூது கவ்வும்’ படத்தின் திருப்பங்கள், மிக அமைதியான முறையில் சொல்லப்பட்ட வெடிச் சிரிப்புக் காட்சிகள். “வீரம் அறவே கூடாது என்கிற ‘k’e’dnapping’ வகுப்பின் அடிப்படை விதிகளில் கடைசி விதி போன்றவை. நடிகர்கள் அனைவரும் பிரமாதமாக நடித்திருப்பார்கள். எதிர்பாராத விதமாக, ஒரே மாதிரி அமைக்கப்படாத கேலிக் காட்சிகள் இப்படத்தை நுணுக்கமாக முந்தைய படங்களிலிருந்து வேறு படுத்துகின்றன.
‘இ.ஆ.பா.கு.” ஒரு சென்னை கீழ் மத்யதர வாலிபனின் காதல் மற்றும் ஒரு மார்கெடிங் தொழிலில் உள்ள மத்யதர நவீன வாலிபனின் காதல் இரண்டும் கலந்தது. சென்னைக்காரனான எனக்கு அதில் வரும் பலரை நான் சந்தித்திருப்பதாகவே தோன்றுகிறது. இள வயதில் என் நண்பர்களிலே விஜய் சேதுபதி மாதிரி காதல் வயப்பட்டவர்களை நான் கண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் உத்தி பெரிய டைரெக்டர்கள் முன்பு எடுத்துத் தோற்ற ஒன்று. ‘ஆயுத எழுத்து’ படத்தில் மூன்று கதையோட்டங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும். இதிலும். ஆனால் சரியாக, துல்லியமாக முன்னாலும், பின்னாலும் நிகழ்பவை அமைந்து இப்படத்தை எங்கோ எடுத்துச் சென்று விட்டன. விஜய் சேதுபதி தவிர, ஒரே காட்சியில் வரும் பசுபதி, சூரி அவர் அண்ணியாக வருபவர் (ஒவ்வொரு முறை சூரி கற்பனைக் கத்தியை அவர் வயிற்றில் சொருகும் போதும் அவர் பயந்து முனகும் முனகல்) கொலையாளிகள் இருவர் என்று படம் நெடுக நடிப்புக் கொடி உயரே பறக்கும்.
ஜிகிர்தண்டா (2014 கார்திக் சுப்புராஜ்) ஒரு புது மாதிரியான படம். முற்றிலும் புதிதான அணுகுமுறை, வழங்கு முறை. படம் பார்த்துக் கொண்டே வருகையில் ஒரு சமயம் நாமும் உள்ளே மழையில் நனைந்து கொண்டு இருப்போம். அப்புறம்தான் கதையில் ட்விஸ்ட். அற்புதமான கற்பனை. காட்சியமைப்புகள். புத்திசாலித்தனம். ஆனாலும் இதில் சில பிரச்னைகளும் இருந்தன. மிகவும் வன்முறையாகக் கொலைகளைச் செய்யும் ஒருவன் கடைசியில் காமடிப் பீசாவதால் படம் ஒரு அபாயகரமான நுண்ணுணர்வுக் குறைபாட்டுக்கு சமூகத்தை இட்டுச் செல்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், நிரபராதிகள் தப்புவதும் எப்போதும் நடக்கிற விஷயம் இல்லை என்பது வாழ்க்கையில் உள்ள நிதர்சனம். ஆனால் ஒரு வன்முறையாளனை காமடி பீசாக்கி சாதாரணமாக உலவ விடுவது – அதுவும் அவ்வளவு விலாவாரியாக அவன் வன்முறைகளைக் காட்டியபின் – ஒரு பொறுப்பற்றதனம். ரோமன் பொலான்ஸ்கி படங்களிலும் எப்போதும் சாத்தானே வெல்லும். ஆனால் அந்த வெற்றியின் சோகம் உங்கள் மேல் கனமாகக் கவிந்து கொள்ளும்.
தோனியும், கோலியும் கோலொச்சும் மைதானத்தில் விஜய் மஞ்ச்ரேகர் வந்து விளையாடுவதைப் போல ‘உத்தம வில்லன்’ என்னும் புது மாதிரிப் படத்தை கமலஹாசன் எடுத்திருகிறார். அதைப் பற்றிய விரிவான கட்டுரை – விமர்சனமல்ல; ‘அனுபவப் பரிமாற்றம்’ (இப்பிரயோகத்தின் கொடை : ஜெயகாந்தன்)
முன்பெல்லாம் நல்ல படங்கள், இயக்குனர்கள் கூடவெல்லாம் பெரும்பாலும் இளைய ராஜா இருப்பார்.
எம்.எஸ்.வி., கே.வி.எம்., இளையராஜா, ரஹ்மான், சிவாஜி, எம்ஜியார், கமல், ரஜினி, டி.எமெஸ், சுசீலா, எஸ்பிபி ஜானகி காலம் போய் இப்போது பல இசையமைபாளர்கள், நடிகர்கள், பின்னணிப் பாடகர்கள். ஒரு விதமாக அதீதமான பெரிய ஆளுமைகள் காலம் முடிந்த மாதிரி இருக்கிறது. தனி மனித ஆதிக்கம் குறைந்து, படங்கள் முன்னிறுத்தப் படுகின்றன.
இவற்றுக்கிடையில் ‘இமான்’, ‘சந்தோஷ் நாராயணன்’ இசையமைத்த பாடல்கள்  பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளன. ஜனரஞ்சகமான ஹிட்களாக உள்ளன. அதே போல் எத்தனை நல்ல நடிகர்கள், சின்னச் சின்ன பாத்திரங்களில் வந்து என்னமாய் நடிக்கிறார்கள். கதை, வசனம், இயக்கம், தொழில் நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் புது ரத்தம் பாய்ந்துகொண்டிருக்கிறது. புதுக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
மேலே சொன்னவற்றில் பல படங்களில் ‘விஜய் சேதுபதி’ சம்பந்தப்பட்டுள்ளார். நடித்துள்ளார்.  மேலும் பல நல்ல நடிகர்கள் இப்படங்கள் பலதிலும் வருகிறார்கள். விஜய் சேதுபதி டைரெக்ட் செய்வதில்லை. எனினும் அவரை தமிழனின் அடிப்படை இயல்பான உயர்வு நவிற்சியின் படி, பாடாத பிரபுதேவாவை மைக்கேல் ஜாக்ஸன் என்பது போல், தமிழ் நாட்டின் ‘மெல் ப்ரூக்ஸ்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
மிழ் சினிமா சத்தமில்லாமல், குடும்பங்களில் சிறுவர்கள் / சிறுமியர்கள் பெரியவர்களாகி வீட்டு, வெளிப் பொறுப்புகளை அனாயாசமாக பூரண நம்பிக்கையோடு, புன்னகையோடு ஏற்றுச் செய்வது போல், திடீரென்று மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி சினிமாத் தொழிலை ஓரளவு பணச் சார்பின் அதீதப் பிடியிலிருந்து விடுதலை செய்திருக்கிறது.
‘கசடதபற’ துவங்கிய போது ஞானக் கூத்தன் சொன்னார், “புதர்களைக் களைந்தோம்; பூமி தெரிகிறது”
இப்போதும் தமிழ் சினிமா உலகில் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் இவர்கள் தடித்த சோடா புட்டிக் கண்ணாடியோடு, ஜோல்னாப் பையோடு, ஹிப்பி முடியோடு, உதட்டில் தொங்கும் சிகரெட்டோடு உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்கிற உதாசீனப் பார்வையோடு இதைச் செய்யவில்லை. இயல்பாக, போகிற போக்கில் அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.
சாதி, துவேஷம், ஆபாசம், வன்முறை (சூது கவ்வும்மில் சில காட்சிகள் விதி விலக்கு) சிக்கலான நம்பமுடியாத கதை, மேதாவித்தனம் போன்ற பிணிகள் இல்லாத யௌவனமும், புத்துணர்வும், தைரியமும் மிக்க இளைஞர்கள் சிலர் தலை தூக்கியிருக்கிறார்கள். இவர்களில் பலரும் குறும்படங்களில் சம்பந்தப் பட்டு புகழ் பெற்றவர்கள். முக்கியமாக பெரும்பாலானவர்கள் சினிமா குடும்பப் பின்னணி இல்லாதவர்கள். இவர்களது வரவு நல் வரவாகுக!
சிறிய பட்ஜட் படங்கள் நிறைய வரத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இப்போதும் மலையாளத்தைக் காட்டிலும் இங்கு படங்கள் பெரிய அளவிலேயே எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். அந்த முதலீட்டிற்கு ஏற்றதுபோன்ற சமரசங்களுடன். தமிழ் சினிமா மீது இன்றுவரை எனக்கு இருக்கும் பயம், அவற்றின் ரிஷிமூலங்கள் பெரும்பாலும் நமக்குத் தெரியப்படுத்தப் படுவதே இல்லை. நம்மை அறியாமல் நம் மீது ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானிய, கொரிய (இன்னும் எத்தனை?) சினிமா அலைகளின் சாரல் தெறிக்கப்படுவதுதான். நாம் இதுவரை தமிழின் ‘கல்ட்’ படங்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில சினிமாக்களே இப்படி வடிவமோ களமோ களவாடபட்டு எடுக்கப்பட்டவை என்று தெரியவரும்போது வருத்தமாக இருக்கிறது.
இப்போது வந்துகொண்டிருக்கும் படங்கள் கொஞ்சம் ஒரே போன்றவையாகவும் (பகடி, த்ரில்லர், கிராமம்) கொஞ்சம் சிக்கலற்ற திரைக்கதைகளாகவும் கொஞ்சம் மறு ஆக்கங்களாகவும் இருந்தாலும், இந்த ‘சிறிய’ படங்களின் வருகை சந்தோஷமாகதான் இருக்கிறது.
இந்தப் புதிய அலைக்கு கலைஞர் தொலைக் காட்சியின் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சி பெரிய உந்துதலாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. வரும் புதிய இயக்குனர்கள் பலரும் அங்கிருந்து வந்திருக்கிறார்கள்.
பெரிய அதிபர்களிடமும், ஆபாசர்களிடமும் , பிரசாரகர்களிடமும், நட்சத்திர அதிமனிதர்களிடமும் இருந்த தமிழ் சினிமா உலகில் விடுதலை தென்படுகிறது. சரியாகச் சொன்னால் இப்போதுதான் ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது.
இது ஆபாசக் குட்டையிலோ, வன்முறை சாக்கடையிலோ விழலாம். விழுந்து அல்லது விழாது  மறுபடி மறுபடி செக்கு மாடு போல் இங்கேயே சுற்றி நின்று போகலாம். ஒருவேளை .. ஒருவேளை. . . நாம் வெட்கப் படாமல் “ இதுதாங்க எங்க சினிமா” என்று நம்பிக்கையோடு, குற்றவுணர்ச்சியோ, மிகையுணர்வோ இன்றி உலகத்துக்குக் காட்டக் கூடிய ‘நவ தமிழ் சினிமா’ வின் உதயத்துக்கும் வழி கோலலாம்.

9 Replies to “சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா”

  1. ஜிகர்தண்டாவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்ற கோணம் சரியே. ஆனால், அதை மக்கள் மனதில் தோன்றாமல் ஆரமப்த்திலிருந்தே காமெடிப்பீஸ்தானோ இவன் என கடைசியில் நினைக்க வைக்கிறார்.
    மற்றபடி விஜய் சேதுபதியும், கார்த்திக் சுப்புராஜும், உண்மையில் நிறைய நம்பிக்கைகளை தருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் வித்யாசமாக செய்கிறேன் பேர்வழி என கமல்தனமாக போய்விடக்கூடாது என்பதும், விஜய் சேதுபதியும் ஏய் எனக் கத்திக்கொண்டே முதுகில் இருந்து அருவாள் உருவும் படங்களுக்கு போய்விடக்கூடாது என்பதே எனது விருப்பமும்.
    நல்ல அலசல்.

  2. படித்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும் கட்டுரை.
    “தமிழ் சினிமா சத்தமில்லாமல், குடும்பங்களில் சிறுவர்கள் / சிறுமியர்கள் பெரியவர்களாகி வீட்டு, வெளிப் பொறுப்புகளை அனாயாசமாக பூரண நம்பிக்கையோடு, புன்னகையோடு ஏற்றுச் செய்வது போல், திடீரென்று மாறி விட்டது.” அருமையான வரிகள்.
    “ஆங்கில ஹிந்துவில் நன்றாக இல்லை என்கிற மாதிரி இருந்த விமர்சனத்தையும் நம்பி வந்து விட்டோமே” – 🙂
    மைனா, கும்கி போன்ற திரைப்படங்களும் ஒரு புது பாணியில் இருந்தன. மைனாவில் வந்த குடும்பச் சண்டை காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.
    நீங்கள் சொல்லும் overall point நான் ஒத்துக் கொள்கிறேன். இந்த மாற்றத்தைப் போன்ற ஒன்று இந்தியிலும் உருவாகி வருவதாகத் தோன்றுகிறது – சில சமயம் ஒரு பரந்த இந்திய பாணியில் மிக அருமையாக அவர்கள் திரைப்படங்கள் இருக்கின்றன.
    இன்னும் இதில் சொல்லப்படாத பல படங்களில் சில காட்சிகள் அற்புதமாக அமைந்து விடுவதும் நம்பிக்கை தருகின்றது. மொத்தமாகப் படம் சரியில்லை என்றாலும் சிற்சில இடங்களில் brilliance தெரிகிறது, மேலே சொன்ன மைனாவைப் போல.
    தமிழ் படங்களில் உள்ள பெரிய பிரச்சினை என்று எனக்குத் தோன்றுவது பல இயக்குனர்களிடம் தெரியும் misogyny – பெண்கள் மேல் வரும் வெறுப்பு. முக்கியமாக இயக்குனர் சசிகுமார் மற்றும் செல்வராகவனுக்கு என்ன உள்ளே பிரச்சினையோ தெரியவில்லை.
    நீங்கள் சொன்ன அனைத்துப் படங்களிலுமே இந்த பெண் வெறுப்பு இல்லை – அதனால் தான் அவை நன்றாக இருக்கின்றன.
    அடுத்த முறை சினிமா இசையைப் பற்றியும் தங்கள் கருத்துக்களை இதே போல எழுதுங்கள்.

    1. “அடுத்த முறை சினிமா இசையைப் பற்றியும் தங்கள் கருத்துக்களை..”
      நான் அந்த சிகப்பு சேர் தியேட்டர் படத்தைப் பார்த்ததும், ஹே!!…. இது “மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்”னு தோணித்து!! ட்ராமா, கச்சேரிகள் நடக்கர இடம் அது.

  3. அன்புள்ள திரு. ஜெயக்குமார்,
    தங்கள் மறுமொழிக்கு நன்றி. விஜய் சேதுபதியும், கார்த்திக் சுப்புராஜும் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க நானும் காத்திருக்கிறேன்.
    ‘ஜிகிர்தண்டா’ பற்றி வேறொரு நண்பர் சொன்னார் : “இது யதார்த்த படம் அல்ல. ஒரு மாதிரி சர்ரியலிஸ்ட் படம், ஒரு காரிகேச்சர் மாதிரி. எல்லாம் ஒரு கனவு மாதிரி. அதனால் இப்படி முடிவது தவறில்லை.” நானும் இதை உணார்ந்துதான் இருந்தேன். கனவில் நனவு வாழ்க்கையின் விதிகள் செல்லுபடியாகா. எனவேதான் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்துவது முதலிய காட்சிகளில் காண்பிக்கப்பட்ட வன்முறை, யதார்த்த நனவுக் களத்தில் அமைந்து இந்தக் கனவுத் தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டு இருக்கிறது. அதனால்தான் அப்படி எழுத வேண்டி வந்தது. Of course Jigirdhanda is a brilliant film.

  4. அன்புள்ள திரு. ராமையா அரியா,
    உங்கள் மறுமொழிக்கு நன்றி. மைனா, கும்கி படங்களை நான் முழுவதும் பார்க்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமே பார்த்திருந்ததால் அவை பற்றி எழுதவில்லை.
    misogyny பற்றி நீங்கள் சொன்னது ரொம்ப சரி. எம்ஜியார், சிவாஜி காலத்துக்கும் முன்பிருந்தே இது இருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த வகையில் தமிழ் சினிமா சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.
    இந்தி சினிமா பற்றி நீங்கள் எழுதலாமே?
    இசை பற்றி நான் எழுத வாய்ப்பேயில்லை. “ஒரு வேளை ஒரு வருடத்தில் குதிரையே பறந்தாலும் பறக்கலாம்” என்கிற கதை மாதிரி வேண்டுமானால் எழுதுகிறேன் என்று சொல்லலாம். 🙂

  5. டி மான்டி காலனி திரைப்படம் பற்றிய தங்கள் விமர்சனம் படித்தேன்.தங்கள் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது..சினிமாவின் வரலாறு பற்றி ஒரு பயணம் செய்து விட்டீர்கள்.என்னைப் போன்ற சினிமா பற்றி அறியாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது. தங்களின் எழுத்து அனுபவமும் ஆழ்ந்த படிப்பும் திறனாய்வுத் திறனும் இக்கட்டுரையின் மூலம் தெரிகிறது நன்றி

  6. ஆஹா … இது தமிழ் சினிமாவின் ஒரு குறுகிய வரலாறு! “கத்தி சண்டை, கத்தாத சண்டை” என்ற சொற்றொடர் திருப்பத்தை (turn of phrase) நான் ரசித்தேன் – கிட்டத்தட்ட அவ்வையாரின் “சுட்ட பழம்-சுடாத பழம்” போன்ற சொற்றொடர்.

Leave a Reply to ஜெயக்குமார்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.