திரைப்படம் எடுப்பதும் ஒரு வித்தை. இத்தனை வருடங்களாக இதில் இருக்கிறேன் என்பதாலோ, இத்தனை படங்கள் எடுத்திருக்கிறேன் / நடித்திருக்கிறேன் என்பதாலோ அது கை வந்து விடாது.
சீதா தமிழில் சீதையாவதைப் போல் வித்யா, வித்யையாகி உச்சரிப்பில், பழக்கத்தில் வித்தையாகிறது. வித்யா என்றால் கல்வி, கற்றல். கல்விக் கடவுள் ‘கலை’மகள். ஆனால் ‘வித்தை’ என்னும் தமிழ்ச் சொல் பல பொருட்களிலும் வருகிறது. செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை. ‘வித்தை காட்டுவது’. சினிமாவைக் கூட இப்படிச் சொல்லலாம். கண்கட்டு வித்தையால் வசனகர்த்தாக்களையும், நடிகர்களையும் முதலமைச்சர்களாக்க முடியும். தமிழில் வித்தை என்பதற்கு அதன் சம்ஸ்க்ருத பொருளையும் தாண்டி, திறன், தந்திரம், ஜாலம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.
கற்க வேண்டிய வித்தைகளிலேயே தலையாயது எது? சகல ஜீவராசிகளாலும் வேண்டப்படும் வித்தை எது?
‘சாகா வித்தை.’ இந்தப் படம் அதைப் பற்றியது.
இந்தப் படம் சாவைப் பற்றியது. இது சாவை ஆராய்கிறது; கூர்ந்து நோக்குகிறது. வாழ்வின், சாவின் மையப் புள்ளியை நோக்கி உட்புக முனைகிறது.
மனோரஞ்சன் என்னும், வயதாகிக் கொண்டிருக்கும், சினிமா சூப்பர் ஸ்டார் சற்று நாட்களில் இறக்கப் போகிறோம் என்று திடீரென்று அறிந்ததும் எஞ்சியுள்ள சின்னாட்களை என்ன செய்கிறார் என்பதுதான் படம். தொழில் ரீதியாக வெகு நாட்களாகப் பிரிந்திருக்கும் தன் குருநாதரோடு சேர்ந்து ஒரு படம்பண்ணுகிறார். அதைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே வர வேண்டும் என்று அதைக் ‘காமெடிப் படமா’கச் செய்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டப் படம். “உத்தம வில்லன்”. அந்தப் படத்தின் நாயகன், உத்தமன். அவனும் ஒரு நடிகன், கூத்துக் கலைஞன். சந்தர்ப்பவசத்தால் சாகா வரம் பெற்றவன் என்று நம்பப் படுபவன்.
நாம் பார்க்கும் படமும், அந்தப் படத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டே காட்டப்படும் படமும் என்று இரண்டு படங்கள். இரண்டும் சாவு பற்றி ஆராயும், ஊடுருவிப்பார்க்கும் அது உண்மையில் என்ன என்பதை அறியப் பயணிக்கும் படங்கள். ஒன்று, மனோரஞ்சனின் நிஜமான துக்கமும், தீவிரமும் நிரம்பிய கண்ணெதிர் வாழ்க்கை. இன்னொன்று ஃபான்டஸியான, ஒரு ஃபேரி டேல் போல் இருக்கும் சந்தோஷமான எப்போதும் முடிவிலே இன்பம் என்னும் சுப முடிவு திரைப்பட வாழ்க்கை.
மனோரஞ்சன் வாழ்க்கை தலைவலியாய் இருக்கிறது. அந்தத் தலைவலிதான் சாவின் அழைப்பு மணி. சாவது நிச்சயம். அவனுக்கு அதிருஷ்ட வசமாக வாழ்வின் உயர்வு தாழ்வுகளை, பாவ புண்ணியங்களை, உத்தம, வில்லதனச் செயல்களை சரி செய்ய, ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவன் செய்கிறான். பிரிந்த குருவோடு ஒரு படம் செய்வதிலிருந்து, மறைந்த காதலிக்குப் பிறந்த தன் குழந்தையோடு இணைவதிலிருந்து, இருக்கும் மனைவியை அணைப்பதிலிருந்து, இளம் காதலியை ஏற்பதிலிருந்து, மகனோடு இணக்கமாவதிலிருந்து, மாமனாரோடு சகஜமாவதிலிருந்து எல்லாமும் செய்கிறான்.
தமிழில் பல்வேறு வகையான படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஆன்மீகப் போராட்டம் (Spiritual struggle) பற்றிய, அக மாசை அகற்றுவது பற்றிய படங்கள் மிக மிகக் கம்மி. ‘தேவதாஸ்’ சஞ்சலப் பேய் வசப்பட்டு காதலி(பார்வதி)யைப் பறிகொடுத்த ஒருவனின் மீட்சிக்கான தொல்வியுறும் முயற்சி பற்றியது; ‘யாருக்காக அழுதான்’ குற்றம் செய்யாதவன், செய்தவனுக்காகவும் சிந்தும் கண்ணீர் பற்றியது; ‘என்னதான் முடிவு’ குற்றவாளி, வாழ்க்கையின் மூலம் அடையும் தண்டனை மற்றும் பரிகாரம் பற்றியது; ‘பூவே பூச்சூடவா’ கல் மனதையும், அது கக்கும் விஷத்தையும் கரைக்கும் அன்பு பற்றியது. அவ்வரிசையில் ‘உத்தம வில்லன்’, எல்லொருக்குமே, அவர்கள் இப்போது இருக்கும் காட்சியின் அடுத்த காட்சியாக தோளுக்குப் பின்னால் மறைந்து நிற்கும், ஒரு முறை உண்மையாகவே முன்னால் வந்துவிடும் புலி போன்ற மரணம் மற்றும் அதன் வெகு அருகாமை நேரடிப் பார்வையில் ஒருவன் செய்யும் பாவ நிவிர்த்தி பற்றியது.
சாவு பற்றி ஜனரஞ்சக சினிமாக்களில் முன்பும் படங்கள் வந்திருக்கிறன. மேலோட்டமாக, சாவை ரொமான்டிக்காக அணுகும் நீர்க்குமிழி, நீலவானம், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் போன்ற படங்கள்;
“Often by a queer process of reasoning, movement was equated with action and action with melodrama” என்பார் சத்யஜித் ராய் (Our films their films) அதை நிரூபணமாக்கும் கண்ணீர் பம்ப் காட்சிகள் கொண்ட யதார்த்தத்துடன் அறவே சம்பந்தமில்லாத கணக்கிலடங்கா மெலோ டிராமாக்கள் வெளிவந்து அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பலரின் மனதில் நீங்காத இடமும் பெற்றுள்ளன.
உலக அளவில் குரோசாவாவின் ‘இகிரு’ , பெர்க்மனின் ‘செவன்த் ஸீல்’ முதலியவை சாவின் சில நிஜப் பரிமாணங்களைக் காட்டியவை. செவெந்த் ஸீலில் சாவும், மன்னனும் சதுரங்கம் ஆடும் காட்சிகள் மிகப் பிரபலமானவை. இகிரு வில் இன்னும் சில நாட்களில் சாக இருக்கும் ஒரு மாநகராட்சி அதிகாரி தன் வாழ்வை பொருளுள்ளதாக, முழுமையாக்க செய்யும் செய்லகளைக் காட்டும் அற்புதமான படம்.
முதலில் குறிப்பிட்ட ரொமான்டிக் மற்றும் டியர் ஜெர்கர்ஸ் ஆன நடுவாந்திரப் படங்கள் போலல்லாது, ஒரு புதிய அணுகு முறையில் உத்தம வில்லன் எடுக்கப் பட்டுள்ளது, அதன் பல குறை நிறைகளுடன்.
‘ராஜ பார்வை’ கமல்ஹாசனை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதில் சில காட்சிகள் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறாக இருந்தன; இன்னமும் நினைவில் இருக்கின்றன.
சிறுவன் மேலே பார் (Bar) கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் விளையாட ஏற்றிவிட்ட தகப்பனார் மாரடைப்பு வந்து சாவார். அந்தச் சிறுவன் கை நழுவி அடியற்ற பள்ளத்துக்குள் கீழே விழுந்து கொண்டே இருப்பான்.
‘அந்தி மழை’ப் பாடலைக் காட்சிப் படுத்திய விதம், ‘ரிடிக்யுலஸ்’,என்று சொல்லிக் கொண்டே எப்போதும் எரிச்சலில் இருக்கும் மாதவியின் தந்தை, சித்தியின் கூச்சமுற வைக்கும் பொய்ப்பாசம், அற்புதமான தாத்தா-பேத்தி உறவு – இவை போல், வேறு எந்த கமலஹாசன் படத்திலும் பாசாங்கு இல்லாத, திணிக்கப்படாத, செல்ஃப் கான்ஷியசாக இல்லாத, இயல்பாகவே எழுந்த காட்சிகள் எனக்குக் கிடைத்ததில்லை.
முக்கியமாகப் பலரும் போற்றும் ‘நாயகன்’ என்னும் ஆழமேயில்லாத பாசாங்குப் படம், அதை விட நல்லதே என்றாலும் திசை தெரியாத, வன்முறையைப் பெரிதும் நம்பி எடுக்கப்பட்ட, மிகச் சிறந்த கடவுள் எதிர்ப்புப் படமாக வந்திருக்க வேண்டிய ‘மகாநதி’.
‘குருதிப் புனல்’ மற்றும் ‘உன்னைப் போல் ஒருவன்’ இரண்டும் ஹிந்திப் படங்களின் தமிழ் ஆக்கங்கள். ‘த்ரோகாலி’ல் இருக்கும் ஆன்மீகப் போராட்டத்தை கமல்ஹாசன் என்னும் நட்சத்திர பிம்பத்தால் முழுதாய் ஸ்வீகரிக்க முடியவில்லை. அதனால்தான் துரோகி, (ஒருவேளை ‘துரோகி கமலஹாசன்’ என்னும் பெயர் வந்து விட வாய்ப்பு இருந்ததால்) என்னும் சரியான பெயர் குருதிப் புனலாய் மாற்றப் பட்டு வந்தது. உன்னைப் போல் ஒருவனில் அசலிலிருந்து மாற்றப்பட்ட விஷயங்கள் பிழை மிகுந்து, படத்தின் தீவிரத் தன்மையைப் பெரிதும் குலைத்து இருந்தன. ‘எ வெட்னஸ்டே’யில் ஷாவின் நடிப்பை வேறு முதலிலேயே பார்த்து விட்டதால் நிலைமை அவருக்கு சாதகமாய்ப் போய் விட்டது.
‘தேவர்மகன்’ வணிக வெற்றியை மட்டுமே நோக்கி எடுக்கப்பட்ட நல்ல படமே போன்ற நடுவாந்திரப் படம். ‘அன்பே சிவம்’ அதை விட அபாயமானது. நல்ல படம் என்று சொல்லி, நல்ல படம் என்று நம்பப் படுகிற மோசமான படம் என்பதால். ஃப்ளாஷ் பேக் ஆரம்பிக்கும் வரையிலான முதல் பகுதி நன்றாகவே இருக்க அப்புறம் முற்போக்குவாதி கமல் வந்து விடுவார். படம் செயற்கையான, திணிக்கப்பட்ட இடது சாரி சிந்தனைகள், நம்ப முடியா சம்பவங்கள், மனிதச் சித்தரிப்புகள், பாசாங்கான நெகிழ்சித் தருணங்கள் என்று எதிர் பார்க்கிற திசையில் கண்றாவியாகப் பயணிக்கும், மெனக்கெட்டு கட்டப் பட்ட செத்த படமாகி விடும். திருடன் யூகி சேதுவிடம், “சம்ஸ்க்ருதம் தெரியுமா” என்று மரியாதை கலந்த ஆச்சர்யத்தோடு எந்த அன்பரசு கேட்பாராம் என்று கமலைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.
‘ஹே ராமி’ல் ராணி முகர்ஜி வந்து விட்டு இறந்ததும் நடக்கும் நிகழ்வுகளும், நிலையும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஆச்சர்யமாகத் தீவிரமாக இருக்கும். அப்புறம் கமல், அவரது கொள்கைகள், வலிய புகுத்தப்பட்ட உடன் நிகழ்வுகள், செயற்கைத்தனங்கள் எல்லாம் படத்தை ஆக்ரமிக்கும். குணா, ஆளவந்தான் Disasters. நம்மவரில் நாகேஷ் மட்டும்தான்.
நகைச்சுவைப் படங்கள் பலதிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் கமலஹாசன், ஒப்பனை மற்றும் தோற்ற மாறுபாடுகளின் உதவியில்லாமல் சாமான்ய மனிதராகவே வந்து நன்றாக நடித்திருந்தது மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களில். மூன்றாம் பிறையிலும் கடைசி மெலோடிராமா காட்சி படத்தின் பொதுவான லயத்தோடு பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும்.
இவற்றையெல்லாம் போலலல்லாது உத்தம வில்லன் படத்தில்தான் இயல்பான தீவிரமான காட்சிகள் மற்றும் நடிப்பு, குறிப்பாக கமலஹாசனின் நடிப்பு யதார்தமாக மலர்ந்துள்ளன.
அப்போதுதான் அக்கா தம்பி என்று தெரிந்து கொண்ட கமலஹாசனின் மகளும், மகனும் அணைத்துக் கொள்ளும் உணர்ச்சி மிகு தருணத்தில் அங்கு உள்ளே வரும் அந்தப் பையனின் கேர்ல் ஃப்ரெண்ட் அதைத் தப்பாய் எடுத்துக் கொள்ள, விவரம் சொல்லி அவளிடம் விளக்க முற்படும் மகனுக்கு ஓர் உதவியும் செய்யாமல் அவனுடைய தர்ம சங்கடத்தைப் பார்த்து தந்தை கமலஹாசன் சிரிப்பை அடக்க முடியாமல், கையைத் தட்டிக் கொண்டே அறைக்கு வெளியே செல்வதும், உள்ளே நுழையும் ‘என்ன” என்று கேட்கும் ஜெயராமிடம் “போய்ப் பாருங்கள்” என்று சொல்லி சிரிப்பை நிறுத்தாமலே போவதும்.. .. .. இது போன்ற காட்சியைக் கடைசியாக தமிழ்ப் படத்தில் எப்போது பார்த்தோம் என்பதே நினைவில் இல்லை.
தன் மகளும் தன் மகனும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அப்போது நியாயமான, ஆனால் அந்தத் தருணத்தில் அபத்தமான, மன உடைவோடு பையனின் சிநேகிதி. இன்னும் சில நொடிகளில் அவள் சந்தேகம் நிவர்த்தியாகப் போகிறது. அதை சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவகாசமோ, அவசியமோ தந்தைக்கு இல்லை. தன் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். மனம் ஒன்றி விட்டார்கள். எந்த சிறுபிள்ளைத்தனமான உராய்வுகளும், வஞ்சிக்கப்பட்டு விட்ட உணர்வுகளும் இல்லை. தன் வாழ்வின் கடைசித் தருணங்கள்தாம். இருந்தாலும் என்ன? என் மகளும் மகனும் சேர்ந்து விட்டார்கள். அந்த சிநேகிதி, இன்னொரு சிறுமி, அவள் சந்தேகம், நியாயமான சந்தேகம் இதோ நிவர்த்தியாகப் போகிறது. இடையில் விளங்கி அவள் சந்தேகத்தை முடிக்கும் வரை கொஞ்ச நேரம் திண்டாடப் போகும் தன் மகன். ஆம் வாழ்வு முடியப் போகும் நேரம். அதுவே துயரம், அதுவே இந்த ஆனந்தம் நிகழக் காரணமும்.
அந்தக் குழந்தைகளும் என்னமாய் நடித்திருக்கிறார்கள். கமலஹாசனின் 50 + வருட அனுபவத்தில் அவர் சீரியஸாக நடித்ததில் இது முதன்மையான காட்சி.
தன் வாழ்வு சாச்வதம் என்கிற அனைவருக்கும் பொதுவான மயக்கத்தில், புகழின் உச்சியில், போதைகளில் வாழும் மனோரஞ்சனின் அந்த ‘ப்ளாக் மெயிலரை’ ஒழிக்கச் சொல்லும் அகம்பாவம், நிலையாமை என்னும் நிதர்சனத்தின் முன் நீங்கி ஜெயராமுடன் முதல் தரம் உட்கார்ந்து உரையாடும் காட்சி. அந்த சதை தொங்கும் கிழ முகத்தின் பரந்த கண்களில்தான் எத்தனை நினைவுகளின் வாசனை சுமக்கும் உணர்ச்சிகள். இந்த மாதிரி க்ளோசப்பில் தைரியமாக நடிக்க இன்று தமிழில் யார் இருக்கிறார்கள்? எவ்வளவு அளவான, தீவிரமான, மிகை எட்டியே பார்க்காத, சப்ட்யூட் என்ற பெயரில் சறுக்கி விழாத கச்சிதமான, அடர்த்தியான, நுட்பமான நடிப்பு. ஜெயராமும் இணையாக நடித்திருக்கிறார்.
கையில் பந்துடன் அப்பாவும், பிள்ளையும் வாழ்க்கையின் உக்கிர கணத்தை நெருங்குகிறார்கள் என்கையில் ஐயோ பாலச்சந்தர் போல நல்ல தருணங்களை ‘டைரக்டோரியல் டச்’ என்று கொலை செய்து விடப் போகிறார்களே என்று நினைத்து பயந்தேன். நல்ல வேளையாகக் க்ளீஷேவாக ஆரம்பிக்கும் கட்சி தன் க்ளீஷே தனத்தைக் களைந்து இயல்பாகி அருமையாக மலர்ந்து விட்டது. மனோகராக வரும் அந்தப் பையன் யார்? நடிக்கவே இல்லை. நம் பக்கத்துத் தெரு பணக்காரப் பையன் போல் இருக்கிறான்.
மரணம் அணைத்துக் கொள்ள அருகில் நிற்கிறது. பகுத்தறிவு வக்கிரங்களும், மரபு, சரி தப்பு போன்ற பாரச் சுமைகளும் பனி போல் மறைந்து பகா அறிவும், அச்சமற்ற பேரன்பும் நிரம்பி ஒரு காட்சியில் மகன், மகளை அணைத்துக் கொள்ளும் மனோரஞ்சனிடம் மனைவியும் வருவார். அவரையும் அவரால் அணைத்துக் கொள்ள முடிகிறது; அணைத்துக் கொள்வார். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும் மன நிலைக்குப் போயிருப்பார். இன்னும் அர்பணா, சொக்கு, மார்க்க தரிசி, கார் டிரைவர், ஜேகப், மாமனார் எல்லோருக்கும் அவர் அரவணைப்பில் இடம் இருக்கிறது. அருகில் வந்திருந்தால் அவர்களையும், நம்மையுமே கூட அணைத்துக் கொண்டிருப்பார்.
இறுதி ஷூட்டிங் முடிந்ததும் ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அது’ என்று சொல்லி விட்டேன், மீண்டும் நடிக்கவா என்று புது மாணவனைப் போல் குற்ற உணர்வுடன், மரியாதை மிகக் கேட்கும் கமலஹாசன், பாலச் சந்தர் ‘வேண்டாம் சரி செய்து கொள்ளலாம்’ என்கையில் மீண்டும் பரவாயில்லையா என்று அதற்கு ஒப்புக் கொள்ளத் தயங்கி தான் செய்த தவறை மீண்டும் சொல்ல முற்படுகையில் வாய் லேசாகாக் குழறும். நாம் முதலில் அதைக் கவனிக்க மாட்டோம். ஒரு புறத்துக் கன்னம் மற்றும் தாடையில் ஒரு மிக நுண்ணிய அசைவுடன் அந்தக் குழறலை அவரிடம் மீண்டும் கவனிக்கும் போது மனம் துணுக்குறும். ஐயோ என்ன ஆச்சு என்று. அந்த வசன உச்சரிப்பையும், அந்த சின்னஞ்சிறு குழறலையும் அதி அற்புதமான இயல்புத் தன்மையோடு கொண்டு வந்திருப்பார்.
ஊர்வசி மார்வலி வந்து படுக்கையில் கணவனிடமும் அருகில் உள்ள ஆண்ட்ரியாவிடமும் பேசும் காட்சி. அவரது க்ளோஸ் அப்கள்.
கடைசிக் காட்சியில் சற்றுத் தொலைவில் டாக்டர் ஆண்ட்ரியா எல்லாம் முடிந்து விட்டது என்பதைப் போல நிற்பதைப் பார்த்து கமலஹாசனின் மகளும், மகனும் அவரிடம் செல்ல அவர் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொள்வார். மனோரஞ்சனின் இறப்பைவேறு எந்த விதத்திலும் காட்டி கோரமாக்காமல் செய்திருக்கிறார்கள்.
பாலச்சந்தர் நெடுநாள் தொழில் விரோதி விஸ்வநாத்திடம் சாரி சொல்லும் காட்சி. மனோவின் மாமியாரின் வெகு யதார்த்தமான நடமாட்டங்கள்.
கார் காட்சி இன்னொரு அற்புதமான காட்சியாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நினைத்த அளவு நன்றாக வர வில்லை என்று தோன்றுகிறது. ஆண்ட்ரியாவை அவர் தன் மடியில் கிடத்திக் கொண்டிருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.
மனோரஞ்சனின் காதலி யாமினிக்குப் பிறந்த, ஆனால் பட்டம் பெறும் வயது வரை, யாமினி இறக்கும் வரை அப்படி ஒரு மகள் இருப்பதே மனோரஞ்சனுக்குத் தெரியாத, மகள் மனோன்மணியாக வரும் பார்வதி மேனன் என்னமாய் நடித்திருக்கிறார். ஓர் இளம் நடிகை இவ்வளவு கூர்மையாக, இவ்வளவு பவர்ஃபுல்லாக நடித்திருப்பதும் தமிழ் சினிமாவில் வெகு காலத்துக்குப் பின் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் அவர் வருவது வெகு சில காட்சிகளில்தான், பேசுவது இரண்டே காட்சிகளில்தான். அந்த இளமைக்கே உரித்த நேர்மை, சுய மரியாதை. அடடா !
எம். எஸ். பாஸ்கர் நன்றாக நடித்திருப்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்; அப்படியும் அது நன்றாக இருந்தது. இவரைப் போல் அருமையான நடிகர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பயன்படுத்தும் கமலஹாசனுக்குப் பாராட்டு.
கே. பாலசந்தர் பேசுவது – “படவா ராஸ்கல், லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ” போன்றவை நாகேஷ் பேசுவது மாதிரியே இருந்து நாகேஷ் இந்தப் படத்தில் இல்லையே என்கிற குறையைத் தீர்த்து விட்டது. இவர் சொல்லிக் கொடுத்துதான் அவர் பேசினாரா அல்லது அவர் தாக்கத்தால் இவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் கே. விஸ்வநாத்தை ‘ராவ்ஜி’ என்று அழைப்பது நாகேஷ் நினைப்பால்தானோ என்னவோ? கே. பி. யின் நடிப்பை அவர் படங்களில் பல நடிக, நடிகைகளிடம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சிவாஜியைப் போல் தோற்றுப் போன பந்தயக்காரர். 83 வயதில் நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆனால் பாலச்சந்தரை விட ஓரளவு நன்றாக படம் எடுத்திருக்கும் கே. விஸ்வநாத் அவரை விட நன்றாக நடித்தும் விட்டார். கே. பாலச்சந்தருக்கு மிக உயர்வான வேடம். அவராகவே (ஆனால் வேறு பெயரில்) வருகிறார், ஓர் உத்தமராக. ஆனால் கே. விஸ்வநாத்துக்கு வில்லன் வேடம். அதைச் செய்ய மிகவும் துணிவு வேண்டும். அதற்காகவும், இத்தனை இயல்பாக நடித்திருப்பற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.
அன்பே சிவத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் முதலில் வரும் படத்தின் தரத்தைக் குலைத்து விடும். உத்தம வில்லனில் படத்துக்குள் வரும் படமான உத்தமனின் உத்தம வில்லன் வெளியில் வரும் மனோரஞ்சனின் உத்தம வில்லன் படத்துக்கு சமானமான ஆழத்தோடு, நுட்பத்தோடு, முற்றிலும் கான்ட்ராஸ்டான வெளிப்பாட்டில், கற்பனை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் எடுத்த விதத்தில் முதல் 10 நிமிடங்கள் செட்டில் ஆகவேயில்லை. வெகு சீரியசாகப் போய்க் கொண்டிருந்த படம் தொய்ந்து விடுகிறது. ஆனால் அதன் பின் முற்றிலும் புதிய நகைச்சுவைப் பாணியில் (க்ரேஸி மோஹன் நினைவு வராத வண்ணம்) போனாலும் அதிலுள்ள சில விஷயங்கள் தமிழ்ப் பார்வையாளர்களை அந்நியப் படுத்துகிறது.
‘தெய்யம்’ என்கிற பாணியில் எடுத்தது மீசைக்கு பதிலாக வண்ணக் கோடுகளில் நரசிம்மமே நரபூனை ஆகி விடுகிறார். இது ஒரு மாதிரி சீப் ப்ரொடக்ஷன் என்கிற இம்ப்ரெஷனைத் தருகின்றது.
தைரியமாக அமெடியஸ் படத்தில் வரும் ஆபரா காட்சிகளைப் போலவோ, நமக்குப் பரிச்சயமான தெருக் கூத்துப் பாணியில் முற்றிலுமோ எடுத்திருக்கலாம்.
அதே போல் இசை. இந்த பின்னணிக்கு, இம்மாதிரி நாட்டார் கலைக்கு ஒரு கே.வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் சரியாக இருந்திருப்பார்கள். முன்னவர் இல்லை. பின்னவர் இசையமத்துக் கொண்டில்லை. அதுதான் இளைய ராஜா இருக்கிறாரே. அவரை வைத்திருந்தால் வேண்டிய மட்டும் செய்திருப்பாரே. கிப்ரான் மோசமில்லை. ஆனால் உத்தமன் கதையின் நகைச்சுவை இசையில் வெளியாக வில்லை. இது என் இசை நுணுக்கங்கள் அறியா பாமரக் கருத்து
ராஜேஷ் கன்னா, நாகேஷ், சிவாஜி போன்றவர்களை ஆரம்ப கால கமலஹசன் நடிப்பில் காணலாம். இன்னொரு மாபெரும் நடிகனான வடிவேலுவையும் உத்தமனில் காண முடிந்தது. நாசர் இருப்பது வேறு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறது.
நாசருக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் போன்றவர்களைப் போட்டிருந்தால் இது ஒருவேளை தவிர்க்கப் பட்டிருக்குமோ என்னவோ?
ஒப்பனை, குடுமி, பஞ்சகச்சம், மேக்கப் எல்லாம் தெலுங்கு, கன்னட சாயல். ரேலங்கி காலத்திலிருந்து பிரம்மானந்தம் வரை நினைவுக்கு வருகிறார்கள்.
காட்சிகளும் ப்ரும்மாண்டமாகத் தோன்றவில்லை. கூத்து காட்சிகளைத்தவிர இதர காட்சிகளும் மேடை நாடகம்போலவே உள்ளன. கே. பி. நாடகத்துக்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் முதலில் எல்லாம் படம் எடுத்தாரே, அந்த Terrible habit of theatre ரை நினைவூட்டவோ?
திருவிளையாடல் போன்ற சாதாரண வணிகப் படத்தில் கூட அந்தக் காலத்திலேயே அவ்வளவாக தொழில் நுட்பத்துக்காக பெயர் பெற்றிராத ஏபிஎன் ஒரு பிரும்மாண்டத்தைக் கொண்டு வந்திருப்பார். ஸூம் வசதிகளோ இதர வசதிகளோ இல்லாத காலத்திலேயே ‘ஒருநாள் போதுமா’ காட்சியிலும், திறந்த வெளிக் காட்சிகளிலும் நிறைய ஸ்பேஸ் இருப்பது போல் காட்டியிருப்பார்.
படத்தில் முக்கியமாக வந்திருக்க வேண்டிய இந்தப் பகுதியே ஏதோ பையன்கள் கரியால் சுவரில் ஸ்டம்ப் வரைந்து ஆடும் க்ரிகெட் மாதிரி ஆகி விட்டது. அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கும். ஆடியன்ஸுக்கு?
பேராசிரியர் கு. ஞான சம்பந்தம் அமைச்சராகவே தெரிந்தார். இல்லாவிட்டால் நாசரின் நடு சீட்டைப் பிடித்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராகி விடுவாரோ என்கிற பயம் வந்திருக்கும். அமைச்சர் கட்சி மாறுவதும், இருக்கும் வலக்காதைப் பொத்திக் கொண்டு நாசர் பூஜா குமாரை காமத்தோடு அணுகுவதும், அவருக்கு கமல் ஊட்டுவதும், அவரது வயிற்று உபாதையும் அப்போது வரும் அருவருப்பூட்டிவிடக் கூடிய ஆனால் ஊட்டாத வசனங்களும் கமல் மற்றும் இதரர் நடிப்பும் என்று நன்றாகவே போகிறது. ஆனால் முக்கால்வாசிக்கு மேல் காதில் வசனங்கள் சரியாக விழவில்லை. பாடல்கள் சுத்தமாகக் கேட்கவில்லை. அதில் கமலஹாசன் தன் கொள்கைகளைப் புகுத்தியிருந்தாலும் நல்ல வேளையாக எனக்கு அவை கேட்கவில்லை; ஒருவேளை நன்றாகவே எழுதியிருந்தால் படத்துக்கு இப்படி கேட்காமல் இருப்பது பெரிய அநீதி. சென்னையில் படம் பார்த்த என் நண்பர்களும் இதையே சொன்னார்கள்.
ஜெயகாந்தன் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துவிட்டு “எனக்குப் படம் பிடித்தது; அதுதான் பயமாய் இருக்கிறது’ என்றாராம். அது போல் இந்த உள் படத்தின் காமெடி வேறு திசையில், வேறு தளத்தில் இருக்கிறது. எனக்குப் பிடிக்கிறது; அதுதான் பயமாகவும் இருக்கிறது.
புலி, பூஜா குமார், அப்பாவி உத்தமன், ம்ருத்யுஞ்ச்ய மந்திரம், அரசன், அமைச்சர்கள், சூழ்ச்சி, இறுதியில் ஒரு ட்விஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தும், புது மாதிரியான நகைச்சுவை இருந்தும், ஏதோ பஞ்சத்தில் அடிபட்டு படம் எடுத்த மாதிரி இருக்கிறது.
ஒரு நல்ல படம் எடுக்க முயன்றிருப்பதால் வேறு சிலதும் சொல்ல வேண்டியிருக்கிறது.
இரண்டு நாள் ஜுரம் அடித்தாலே கண்கள் கருவளையம் சூழ்ந்து, தாடைகள் தொங்கி களைப்பு முகத்தில் குடிகொள்கையில் இவ்வளவு சீரியஸான வியாதிக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களாக சில காட்சிகளைக் காட்டி களைப்புற்ற, கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்து கொண்டிருக்கும் மனோரஞ்சனைக் காட்டியிருக்கலாம்.
ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலக் குறைவு என்றால் ஒரு மருத்துவர்களின் பட்டாளமே வந்து விடாதா? இரண்டே மருத்துவர்கள்தான் வருகிறார்கள். வெளி நாடு போக மாட்டாரா? படம் எடுக்கிறேன் என்று இங்குதான் இருப்பாரா?
மனோரஞ்சனின் உத்தம வில்லனிலும் ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்வில் சாதாரணமாகச் சூழ்ந்திருக்கும் ப்ரும்மாண்டம் இல்லை. வீடு, படுக்கை அறை, தோட்டம், ஆஸ்பத்ரி முதற்கொண்டு எல்லாமே ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் அமைப்பு போல் உள்ளன.
இதற்கா 80 கோடி செலவு?
ஹிரண்ய வதம் நாடகத்தில் “ஹரி ஹரி” என்கையில் “சொறி சொறி” என்று கேலி செய்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு கமலஹாசனது தீவிர ரசிகைகள் இந்தப் படத்தைப் பார்க்க வரவில்லை. அவர்கள் கமலஹாசனை விட ம்ருத்யுஞ்சயனான நரசிம்மனுக்கு அதிகம் ரசிகைகள். இன்னும் பல கமல் ப்ராண்ட் பிராமண ஜாதி, ஹிந்து மத தாழ்ச்சிகள், பிற மத உயற்சிகள் படத்தில் உண்டு. ஒரு வேளை இவை வேறு யாராவது நடித்திருக்கும் படத்தில் கவனிக்கப் படாமலே பொயிருக்கும். ஆனால், வெண்மணியில் பலிகளின் மீதே குற்றம் கண்டுபிடித்து, திண்ணியம், உத்தபுரத்தில் காட்டும் எதிர்ப்பு முணுமுணுப்பில் கண்ணியத்தை(!)க் கடைபிடித்து, திருப்பித் தாக்க இயலாத ‘சாஃப்ட் டார்கெட்’களை மட்டும் தொடர்ந்து அவமானப் படுத்தும் தமிழக மாவீரர்களின் வரிசையில் வந்த, இவரது கடந்த கால செயல்பாடுகள் இவருக்கு எதிராகவே உள்ளன.
மிகக் கட்டுக் கோப்பாகப் போய்க் கொண்டிருக்கும் மனோரஞ்சனின் கதையில் ஒரு சில வசனங்கள் சற்று பொருந்தாமல் வந்து விழுந்து காட்சிகளின் தீவிரத் தன்மையைத் திசை திருப்புகின்றன. ஊர்வசி மாரடைப்புக்குப் பின் வரும் காட்சியில் கணவனின் நிலையைச் சற்று முன்தான் அறிந்திருப்பவர், வெகு சீக்கிரம் சாகவிருக்கும் தன் கணவர் தன் கண்ணெதிரே எப்போதும் இருக்க வேண்டும் என்கிறவர் நடுவில் தன் உடல் குண்டானதைப் பற்றி புலம்புவது, மனோரஞ்சன் திடீரென்று கமலஹாசனாகி “ஆத்மாவுக்கு காது கேட்காது” என்கையில், தன் பாய் ஃபிரெண்ட் இன்னொரு பெண்ணை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பதின் வயது இளம் பெண் (குழந்தை) அதிர்ச்சியால், அருவருப்பால் தாக்கப் பட்ட இடத்தில் ‘உனக்காகத்தான் தலை மயிரை குறைத்துக் கொண்டேன்” என்பது எல்லாமே இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் பழைய கெட்ட கற்றதும், பெற்றதுமான பழக்கங்கள் இவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
நிறைய பொடி வைத்து எழுதப் பட்ட வசனங்கள். கொஞ்சம் ஓவர் லோட். அதே போல் காட்சி மற்றும் கதை அமைப்பு. உதாரணமாக மனோரஞ்சன் கான்சல் செய்யும் படம் ஆதி சங்கரர். அதை நிறுத்தி விட்டுத்தான் உத்தமனைப் பற்றிய உத்தம வில்லனை எடுக்கிறான்.
“புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்றிருக்கிற கடக்க முடியாத இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க எனக்கு உதவுவாய்” என்று இறைவனை இரைஞ்சிய, “ப்ரம்மமே ஆன ஆத்மாவாகிய உனக்கு பிறப்புமில்லை; இறப்புமில்லை” என்று மரணமிலாப் பெருவாழ்வு பற்றி உலகுக்கு அறிவித்த மஹா ஞானி சங்கரன். அறுதியான இறுதி உறுதியான சாவே அற்ற பிரம்மத்தை உலகுக்கு எடுத்து உணர்த்திய ஆதி சங்கரனை தவிர்த்து விட்டு அதைவிட சிரமமான ஆனால் அதனோடு ஒப்பிடுகையில் அல்பமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தைத் தேடி அலைகிறான் மனோ.
ம்ருத்யுஞ்சய மந்திரம் உண்டா கிடையாதா என்பதில் தன் நேரடிப் பொருளில் அது இல்லை என்கிற நிலைப்பாட்டை மிருதுவாகத் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் அதன் எதிரிடையான அது உண்டு என்பதையும் காட்டியிருக்கிறார். (“a truth in art is that whose opposite is also true” –Oscar wilde) மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் (பாரதி) சொற்கள் மந்திரம் அல்ல. மந்திரம் சொல்லாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. சொற்களில் சில மந்திரம் ஆகையில் கற்களில் சில தெய்வமும் ஆகலாம். சொற்கள் எவை அதில் மந்திரம் எவை கற்கள் எவை அதில் தெய்வம் எவை என உணரும் சுத்த அறிவே சிவம். அந்த சிவமே அன்பு. அன்பே ம்ருத்யுஞ்ச்ய மந்திரம்.
ம்ருத்யுஞ்சய மந்திரம் வெறுமனே சொற்களாலான ஒரு மந்திரம் அல்ல என்று உத்தமனே விளக்குகிறான். அந்த வழி முறைகளில் முதல் இரண்டும் கடினமானவையாக இருக்க மூன்றாவதான காலத்தால் அழியாத கலைஞனாக ஆக நாசர் விழைகிறார். ஆம். மிகச் சிறந்த கலைச் செயலால் “பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்டீர்” என்கிறான் உத்தமன். அதாவது மனோரஞ்சன். கமலஹாசன் செய்யத் துணிவதும், இது மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதுதானே? ஆக அது – ம்ருத்யுஞ்சய மந்திரம் – உள்ளது.
இறுதியில் உத்தமன் வாழ்கிறான். மனோரஞ்சன் இறக்கிறான். எனினும் அவன் நடித்த உத்தமன் பாத்திரம் மூலம் அவனும் சாகாமல் வாழலாம். ம்ருத்யுஞ்சய மந்திரம் அப்படியும் உண்மையாகி விடுகிறது.
உத்தம வில்லன் பார்க்கையில் சத்யஜித் ராயின் ‘நாயக்’, ‘கூபி கய்ன் பாகா பய்ன்’ படங்கள் இரண்டும் ஞாபகம் வந்தன. ஒன்று சொஃபிஸ்டிகேடட் தருணங்களாலான, வசதி நிறைந்த வாழ்வு கிடைத்த மனிதர்களைப் பற்றியது. ஒரு ரயில் பயணம், ஒரு நடிகன், ஒரு பெண் நிரூபர். காதல் கத்தரிக்காய் எல்லாம் கிடையாது. மிகச் சிறந்த அகப் போராட்டங்கள் கொண்ட படம். இரண்டாவது ஃபேரி டேல். ராஜா காலத்து ஃபாண்டஸி. உத்தமன் கதையைப் போல. சங்கீதமே வராத கிராமிய சாமானிய பதின் வயது இளைஞர்கள். அதன் காரணமாகவே நாடு கடத்தப் பட்டு காட்டில் ஒரு தேவதை தந்த வரங்களால் போர்களையும், பஞ்சங்களையும், பசியையும் தீர்த்து மனிதர்களை ஆனந்தமாக்கும் படம். படத்தின் இசை. அதன் வெகுளித் தனம். அதன் அன்பு. அதன் நோக்கம்.
நாயக் மாதிரி மனோரஞ்சனின் சொஃபிஸ்டிகேடட் வாழ்க்கை, எல்லா குழப்பங்களுடனும், ஆத்ம ஹத்தியுடனும் கொந்தளிக்கும் affluence. கூபி கய்ன் மாதிரி இன்னொசென்ஸை மட்டுமே கருவியாய்க் கொண்ட ஒரு அப்பாவியின் கதை. ( இதில் அந்த அப்பாவித்தனம் ஒரு புத்திசாலி அரசனுடைய வேடம் என்று உத்தமனின் கதை முடிகிறது)
அந்தத் தளத்துக்கு இந்தப் படத்தைக் கொண்டு போயிருக்லாம். தவற விட்டு விட்டார்கள். அப்போது ஒருவேளை படம் ஓடியிருக்காது. இப்போதும் நிலைமை என்னவென்று நிச்சயமாகத் தெரியவில்லை.
குணம் குற்றம் இரண்டையும், பிறதையும் நாடியாயிற்று. அவற்றுள் மிகை நாடுதல் கீழே:-
50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் கமலஹாசன் நடிப்பார்; விதவிதமாக வருவார்; ஆடுவார்; பாடுவார்; முத்தமிடுவார், யுத்தமிடுவார். எனவே அப்ளாஸ் காட்சிகளை மனதில் வைத்து நரைகூடிக் கிழப்பருவம் எய்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகன் இளமையாகவே என்றும் தெரிவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், இயற்கைக்கும் அவன் முயற்சிகளுக்குமான போராட்டத்தையும் கூட எடுத்திருக்கலாம்.
ஆனால் அதை ஏற்கனவே நம் காலத்திய சில இந்திய நட்சத்திரங்கள் வாழ்ந்து காட்டி விட்டார்கள்; அமோல் பாலேகர், அனில் சாடர்ஜியை வைத்து நகாப் (Naquab) டி.வி.சீரியல் எடுத்து விட்டார். அந்தப் பேராசையின் உச்ச கட்ட நிர்மூலத்தை ‘ஃபெடொரா’வில் ‘பில்லி வைல்டர்’ காட்டிவிட்டார். சிவாஜி டைரெக்டராக வரும் ‘எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி’ படம் எடுப்பதாகச் சொன்ன திரு ஏ.எஸ். பிரகாசம் ‘சாதனை’யில் மிகப்பெரிய வாய்ப்பைக் தவற விட்டிருப்பார். அதுபோலவும் ஆகியிருந்திருக்கும். நன்றாக எடுக்கப் பட்டிருந்தால் அவர் ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் திருப்திப் படுத்தியிருக்கும். பத்தோடு பதினொன்றாய்ப் போயிருக்கும். நல்ல வேளையாக அதைச் செய்யாததற்காக.. ..
ஒரு நாவலாக எழுதப் பட்டிருந்தால் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக இருந்திருக்கும். அந்த நாவலைத் திரையில் கடத்துகையில் முழுதாக வெற்றி பெறா விட்டாலும் அந்த முயற்சியை எடுத்ததற்காக.. ..
படத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..
(முன்பெல்லாம், எஸ்.வி. ரங்காராவ், சிவாஜி கணேசன், டி. எஸ். பாலையா, நாகேஷ், ஜெமினி கணேசன், பானுமதி, சாவித்திரி என்று இப்படி தைரியமாக பெருமளவான காட்சிகளில் எமோட் பண்ணுவதற்கு இருந்தார்கள். இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஒரு கொழுந்து கமலஹாசன்தான்.
தொழில் நுட்பம் மற்றும் உட்பொருள் பற்றிய விவாதம் உலகளாவியது. மிகச் சிறந்த திரைப்படங்களை எடுத்தவர்கள் உட்பொருளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்தவர்கள். “it is just because a director has something to say that he finds the form, the skill, the technique to bring it out. If you are concerned only with how you say something without having anything to say then even the way you say something won’t come to anything – Techniques do not enlarge a director. They limit him” – அகிரா குரோசாவா.
தொழில் நுட்பத்திலும் பணம் காரணமாக நாம் நமக்கு எட்டக் கூடிய அரிய உயரங்களை எட்ட முடிவதில்லை. தொழில் நுட்பம் அன்றி உட்பொருளுக்குத் (Content)தான் நல்ல சினிமாவில் முதல் இடம் என்பதை தமிழ் ஜாம்பவான்கள் (!) உணர்ந்ததே இல்லை. ஜாம்பவான்கள் என்று விதந்தோதப் படுபவர்களில் ஒருவர் தங்கத் தாம்பாளத்தில் அரிசியை வைத்து, மலைகா அரோராவையோ, மல்லிகா ஷராவத்தையோ விட்டு “இதுதான் ஐயா சாப்பாடு, சாப்பிடுங்கள்” என்று கொடுக்க வைப்பவர். இன்னொருவர் அதே அரிசியை சேற்றில் புரட்டி எல்லோரும் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்று ஜோதி லட்சுமியையோ, சிம்ரனையோ ஆட வைத்துக் கொடுப்பவர். நல்ல வேளையாக, அவலை நினைத்து எது எதையோ இடித்துக் கொண்டிருந்த கமலஹாசன், அவர்களைப் போலெல்லாம் இல்லாமல், content டின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார். இது எதேச்சையா இல்லை நிரந்தரப் புரிதலா என்பதை அவரது இனி வரும் படங்கள் காட்டிவிடும்.
நம் புதிய இளம் இயக்குனர்களுக்கு உட்பொருள்தான் திரைப்படத்தின் உயிர் என்பது intuitive வாக வாவது புரிந்திருக்கிறது. நலன் குமாரசாமிகளும், கார்த்திக் சுப்பராஜ்களும், கோகுல்களும், விக்ரம் குமார்களும், விஜய் சேதுபதிகளும் இன்று மலர்ந்துள்ள இளம் பட்டாளத்தில் சீரியஸான திறமை மிகு சிலரும் குழுமி நவ தமிழ் சினிமாவின் உதயத்தைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று என்னைப் போன்றவர்கள் ஆவலோடும், ஆன்க்ஸைடியோடும் காத்துக் கிடக்கையில் பல காலம் முன்பே சுஜாதா எதிர்பார்த்த கமலஹாசன் எவ்வளவோ முறை ஏமாற்றிய பின்னும் கூட இன்னமும் பந்தயத்தில் இருக்கிறார் என்பதற்காக.. ..
கே. விஸ்வநாத், மனோகராக நடித்த பையன், பார்வதி மேனன், எம். எஸ். பாஸ்கர், பாலசந்தர், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர் என்று எல்லோருக்குமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஸ்பேஸ் இருக்கிறது. நடிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த எல்லாப் பாத்திரங்களுமே ஒற்றைப் பரிமாண கேரக்டர்களாக இல்லாமல் ஒரு ஆழத்தோடு இருப்பதற்காக.. ..
இப்போதெல்லாம் கமலஹாசன் படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும் படத்தின் குறை நிறைகளுக்கு கமலஹாசனே காரணம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். இந்த விமர்சனமும் அந்த விதத்திலேயே அமைந்துள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களிலும் அவரது ஒப்புதல் இல்லாமல் எதுவும் வர முடியாது என்றே நினைக்கிறோம். ஒரு வேளை ரமேஷ் அரவிந்த்தின் பங்கு நிறைய இருந்தால் நடிப்பு, காட்சியமைப்பு மற்றும் க்ளோஸ் அப்புகளுக்காக அவருக்கும் பாராட்டுகள்.
சாவு, வாழ்வு இரண்டைப் பற்றியும் பலதும் யோசிக்க வைக்கும் ஒரு படம் யோசிக்கவே விடாத தமிழ்ப் பட சூழலில் எடுத்திருப்பதற்காக, 20+ வயதுப் பெண்ணுக்குத் தந்தையாகக் குறைகளும், குற்றங்களும் நிரம்பிய நடிகனாகக் கமலஹாசன் நடிக்கத் துணிந்தமைக்காக.
இதுகாறும் தீவிரமான உணர்ச்சி மிகு நடிப்பு என்றால் இதுதான் என்று இருந்த – அவரே உருவாக்கியவை உட்பட – அனைத்து வரையறைகளையும் கமலஹாசன் தகர்த்து எறிந்ததற்காக, புதிய ஒரு உயரத்தைப் பிற்காலச் சாதனையாளர்களுக்காக ஏற்படுத்தியதற்காக,
உத்தம வில்லனை அவசியம் பார்க்கலாம்.
பாசாங்கு குறைந்திருக்கிறது. கமலஹாசன் இதே திசையில் பயணித்தால், தன் தனிப்பட்ட சாய்வுகளை, சார்புகளை, காழ்ப்புகளை மெனக்கெட்டு கதையில், சம்பவங்களில், வசனங்களில், பாத்திரங்களில் புகுத்தாமல், கதையின், பாத்திரங்களின் மனோ தர்மமும், மனோ தத்துவமும் கெடாமல் படங்களை எடுத்தால் உண்மையிலேயே அவர் மூலம் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.
அது நிகழ, ஓரு சிறிய ஆலோசனை : சினிமா வித்தையில் சீரியஸ் மாணவரான கமலஹாசனுக்கு மகத்தான திரைக் கலைஞன் ராபர்ட் ப்ரெஸ்ஸான் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட இந்த வார்த்தைகள் முன்பே தெரிந்திருக்கும். இது ஒரு நினைவூட்டல்தான்:
“Rid myself of the accumulated errors and untruths. Get to know my resources, make sure of them.”
oOo
நன்றி: இந்தக் கட்டுரைக்குத் தேவையான சில தகவல்களைச் சொன்ன திரு. எஸ். பார்த்தசாரதி அவர்களுக்கு.
கமல்ஹாசனையும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நம்பிக்கை, கொள்கைகள் போன்றவற்றைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் கமல் படங்களை ஒரு திரைப்படம் என்ற அளவில் பார்க்கவே முடியாத சில விநோத சிக்கல்கள் நம்மிடையே தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் உத்தம வில்லைன் இவ்வளவு பாராட்டீனீர்கள் என்பதால் தன்யனானேன். வாழ்த்துகள். நன்றி.
An excellent review about a good movie.
அன்புள்ள திரு சூர்யா,
கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒரு வரி கூட இவ்விமர்சனத்தில் இல்லை. கட்டுரையின் தலைப்பு ‘உத்தம வில்லனும், கமலஹாசனும்’. எனவே கமலஹாசன் என்னும் திரைக் கலைஞன் பற்றிய விமர்சனமும் இதில் உள்ளது. கமலஹாசன் படங்களில், அவசியமே இல்லாமல், கதைக்குத் தேவையே இல்லாத போதும், அவரது பாத்திரங்களும், கதைகளும், சம்பவங்களும் அவரது தனிப்பட்ட நம்பிக்கை, கொள்கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கையில் அந்தத் தொங்கல் பற்றி விமர்சித்து எழுதுவது அவசியமாகிறது. இது பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். சுருக்கமாக : விக்ரமில் தேசத்துரோகி ஏன் ஒரு பிராமண மாமியின் கணவனாக இருக்க வேண்டும்? தேவர் மகனில் மதன் பாப் ஏற்ற வக்கீல் பாத்திரம், அவ்வை சண்முகியில் ரவிக்கை அவிழ்ப்புக் காட்சி, அன்பே சிவத்தில் வரும் ரயில் திருடன் மற்றும் அவன் குரு பந்துலு, திருநீறணிந்த ‘போற்றி, போற்றி’ படையாச்சி, மன்மதன் அம்புவில் தாயார் உஷா உதூப் மகன் மாதவன் உறவு, விஸ்வரூபத்தில் சற்றும் அவசியமில்லாமல் சிக்கன் சாப்பிட அழைக்கப்படும் பாப்பாத்தியம்மா, எல்லாம் இன்ப மயம் முதலியார், காதலா காதலாவில் காட்டப் படும் முருகர், பம்மல் சம்பந்தம் பரமசிவன், சிம்ரன், இப்போது நரசிம்மர்… – இவற்றுக்கு எதிராக புடம் போட்ட தங்கங்களாகவே வரும் இதர மதப் பாத்திரங்கள். இப்போது உத்தம வில்லனில் கூட ‘யா அல்லா’ என்னும் பூஜா குமார், கத்தோலிக்கராக இருப்பதால் பரந்த மனதோடு இருக்கும் ஜேகப் ஜெயராம். இவை அனைத்துமே இப்படங்களுக்குத் தேவையானவை அல்ல. இவை தவிர்க்கப் பட்டிருந்தால் ஒரு சிறு மாற்றமும் கதைக்கோ, பாத்திரங்களுக்கோ ஏற்பட்டிருக்காது. முழுக்க முழுக்க கமலஹாசன் தன் துவேஷத்தின் தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளவை. எனவே விமர்சனத்துக்குரியவை.
Dear Mr.Srinivasan,
I watched Uthama Villain in New York on May/02/2015.
After this movie was released, I have been reading so many excellent reviews about it. Yours is one of the best reviews. As a paying customer to watch many different movies, we all have the right to critique the crew members involved in creating those movies. You expressed your personal views very well and no complaints from me. I’m 50 years old now and I have grown up watching movies for the past 40 years (almost all the movies by the two gifted artists Kamal and Rajini). Kamal is a very rare artist in the Indian cinema. He is very dedicated to his profession. Unlike many actors, he has not used the cinema medium to accumulate personal wealth. As Mr.K.B mentioned in his letter, Kamal lost more wealth than what he gained in his profession. But, his desire to keep experimenting to elevate the standard of his profession is very inspiring. If all of us can learn to emulate even a small percentage of his sincerity, love and dedication for the chosen task, that would help us tremendously in our own personal growth and satisfaction. For him to keep learning and improving at the age of 60 is hard to do by anyone else. Variety, breadth and depth of the roles he does is simply beyond reach by any of his current colleagues in the industry. He can do many things tirelessly with a total effort to achieve perfection in his line of work: Act, write [screenplay, dialogs, lyrics], direct, sing, dance (extremely well), teach/mentor others and more. Just imagine what would have happened to the Tamil film industry if Kamal had chosen a different profession (a bank officer, an engineer, a teacher etc.). Indian cinema is lucky that he chose to do what he is doing now. Hopefully, his amazing past and present work on the celluloid will reach beyond India to the world stage in the years to come. I truly wish he gets “Saagaa Varam”. Since that is not going to happen in reality, let us keep giving our support and appreciation to this wonderful master of movies named Dr.Kamal Haasan (A rightfully earned doctorate purely through his talents and his tangible contributions to his industry).
Regards,
SN.
மூன்றாம்பிறை – ஸ்ரீதேவி தொலைந்தபின்னர் தேடும்போது சாமி கும்பிடுதல்,
தேவர்மகன் – மாசறு பொன்னே வருக அம்மன் பாடல்
விருமாண்டி – சிறுதெய்வ வழிபாடு
ஹேராம் – வைஷ்ணவ ஜனதோ
குணா – அபிராம பட்டர் உருவகம், அபிராமி அந்தாதி பாடல், டைட்டிலேயே க்ரெடிட் கொடுத்தது
மகாநதி – ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்த பாடல், காட்சி
தசாவதாரம் – கணக்கில்லா வைணவ போற்றல் பாடல் வரிகள், காட்சிகள். படமே விஷ்ணுவின் 10 அவதாரங்களுடன் ஒப்பிடப்பட்டது. என்னப்பா கமல் திடீர்னு ஆத்திகரா மாறிட்டாரா என ஒரு சாராரும், நான் அப்பவே சொல்லல! கமலுக்குள்ள ரொம்பநாளா ஒரு வைணவ ஆத்திகர் ஒளிஞ்சிட்டிருக்கார்னு என சிலர் சொன்னது.
“எல்லாரையும் அந்த அல்லா தான் காப்பாத்தினார்” என கலிஃபுல்லா சொல்லும்போது, “இல்லை இல்லை, காப்பாத்தினது பல்ரம் நாயுடுவின் முட்டாள்தனம் தான்” என சொல்லாமல் சொல்வதுபோல், பல்ராம் நாயுடு பறக்கும் ஹெலிகாப்டரை அப்போது காட்டுவது…
விஸ்வரூபம் – முதல் பாடலில் ஆண்டால்/கண்ணன் போற்றி வரிகள்,
உத்தமவில்லன் – முதல் தெய்யம் பாடலில் – சிவமே தவமே, இன்னும் சில சிவன் போற்றி வரிகள், அர்ஜுனன் தவம், பாசுபதாஸ்திரம் வாங்கும் காட்சி. கடைசி இரணியன் பாடலில், ப்ரகலாதன் மூலம் ஹரி போற்றும் வரிகள்.
இப்படி கமல் தன் படத்தில், இந்து கடவுள்கள் போற்றும் வரிகளும் குறைவில்லாமல் தான் வைத்திருக்கிறார். இன்னும் கூட விடுபட்டவை ஏதாவது இருக்கும். சொல்லப்போனால் கமல் ரஜினியைவிட அதிகமாக இந்துத்துவ போற்றி காட்சிகள் வசனங்கள் கதைகள் தன் படத்தில் வைத்திருக்கிறார். ஆனால், கமலை குறை சொல்லும் இந்து ஆத்திகர்கள் இதையெல்லாம் கணக்கிலெடுக்கமாட்டார்கள்!
கமலஹாசன் நடிக்கும் படங்களில் இருக்கும் ஹிந்துமத துவேஷத்தை பட்டியலிட்டிருந்தார் ஸ்ரீநிவாசன். அதுதான் உண்மையான கமல். இன்றைக்கு ஹிந்து மதத்தை இழிவு செய்பவன் மட்டுமே முற்போக்குவாதி. அது ஹிந்து ராமாகட்டும், ”சட்டைக்குள் நெளியும் பூணூல்” அணிந்த ஞாநியாகட்டும் எல்லோருக்கும் ஹிந்துமதத்தை இழிவு செய்வதன் மூலம் ஒரு முற்போக்கு முகமூடியை பெற விரும்பி கேவலப்படுகின்றனர்.
கமலஹாசன் இனி அவரே நினைத்தாலும் உருப்படியான படமெடுக்க அவருக்குள் இருக்கும் கோணப்புத்தி கமல் விடமாட்டார்.
அரைகுறை படைப்புகளை மட்டுமே அளித்த ஒரு திரைப்பட நடிகராகவே எதிர்காலத்தில் நினைக்கப்படுவார். எந்த எழுத்தாளரோ எழுதினார்கள், கமல் – நிகழ மறுத்த ஓர் அற்புதம் என. நூற்றில் ஒரு வார்த்தை.
தொன்றுதொட்டு நமது சமுதாய சீரழிவிற்கான காரணங்களின் ஒன்றாக இருப்பது – தேவையில்லா பழங்கால நம்பிக்கைகளை குருட்டுத்தனமாக நம்புவது. சங்கரர் முதல் பாரதி வரை அவரவர் காலகட்டங்களில் இவற்றை எதிர்த்தும், சீரமைப்பிற்கான குரல் கொடுத்தும் இருப்பது அவசியமான ஒன்றாகும். கமல் உள்ளே இருந்துகொண்டு எதிர்பவர் இல்லாவிட்டாலும் எதிர்ப்புகள் இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்தால் – எதிர்ப்புகளின் அவசியத்தினையும் அவற்றின் இன்றியமையாமையினையும் அறியலாம்.
“ஹரி ஹரி” என்கையில் “சொறி சொறி” – இதனை கேலி என்று கொண்டாலும் – ஹரி என்னும் நாமத்தினை எளிதாக உச்சரிக்கச் செய்யும் உக்தியாகவும் கொள்ளலாம். ஆன்மிகத்தில் ஒரு வகை உபாசனையான – நிந்தா ஸ்துதியாகவும் கொள்ளலாம்.
மற்றபடி தங்களின் ‘பாசாங்கு குறைந்திருக்கிறது’ என்கிற வார்த்தைகள் ஆறுதலாக இருக்கிறது – படத்தினை பார்ப்பதற்கான உந்துதலை ஏற்படுத்துகிறது, நன்றிகள்!