ருஷ்யன் சர்க்கஸ்

Girl_Circus_Lady_Acrobat_Performer_Artists_Entertainment_Stage_Actor_Shows

பிப்லப் முகர்ஜியை நான் முதல் முறையாக சந்தித்தது ஒரு ஞாயிறு நண்பகலில், எங்கள் ஊர் கோயிலில். என்னைப்போன்ற மாணவர்கள், மற்றும் கல்யாணமாகாத தனியர்கள் வாரக்கடைசியில் கோயிலுக்கு வருவதற்கு ஸ்ரீகணபதியின் தரிசனத்தை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது கோயில் கேண்டீனில் கிடைக்கும் தென்னிந்தியச் சாப்பாடு.
என் வகுப்பில் ஒரே இந்தியன் நான் மட்டும்தான் என்பதால் இந்த ஊரில் மேற்கத்திய இசையில் பிஎச்டி படிக்கும் ஒரே ஆளும் நான் மட்டுமே. அமெரிக்கா வந்த கடந்த சில மாதங்களாகவே சனிக்கிழமைகளில் என் மத்தியானச்சாப்பாடு கோயிலில்தான். வருபவர்கள் பெரும்பாலும் கணினித்துறையின் வல்லுநர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள். அநேகமாக ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செல்வதால் என்னைப்போலவே கோயிலுக்கு (அதாவது கேண்டீனுக்கு) வரும் சிலரிடம் புன்னகைத்து ஹலோ சொல்லும்படியான அறிமுகமும் இருந்தது.
இந்தக்கதை பிப்லப் முகர்ஜியைப்பற்றியது என்பதால் அவரைச் சந்தித்ததை முதலில் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். கார் இல்லாததால் பிப்லப் தன் நண்பர்களின் காரில் கோயிலுக்கு வந்திருந்தார். அவர் நண்பர்கள் எதிர்பாராதவிதமாக திரும்பும் வழியில் திரைப்படத்திற்குச் செல்வதாக முடிவு செய்து விட்டிருந்தனர்.
ஆனால் பிப்லப்புக்கு அந்தப் படத்தில் ஆர்வமில்லை. ஆகவே அவரை வீட்டுக்கு அனுப்பும் சவாரி பற்றி அவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கையில் புளியோதரை பெட்டியோடு உணவுமேசையில் அவர்களின் எதிரில் போய் அமர்ந்தேன். அவர்களாகவே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்டதால் வழியில் பிப்லப்பை அவர் வீட்டில் இறக்கிவிடச் சம்மதித்தேன். அவர் இருப்பதும் என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட சவாரிதான் என்பதும் என் முகவரியை விசாரித்துக் கேட்டு துப்பு துலக்கி பிப்லப்பின் நண்பர்களே கண்டுபிடித்ததுதான்.
பிப்லப் நல்ல உயரம் நல்ல குண்டும் கூட. எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே உடலை ஒடுக்கி என்னுடைய சிறிய காரில் நுழைந்து அமர்ந்தது சர்க்கஸ் யானை இரும்பு உருளையில் ஏறி நிற்பதைப் போல இருந்தது.
காரைக் கிளம்பி கொஞ்ச தூரம் வந்த பிறகு தான் ஒரு விஷயத்தை நான் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன் என்பது நினைவுக்கு வந்தது.
அன்று மதியம் சர்க்கஸின் மதியக்காட்சிக்கு என் வகுப்புத்தோழி சூசனுடன் கூடப்போய் அவளின் அசைன்மெண்ட்டுக்காக முழுக்காட்சியின் நிகழ்வையும் இசையுடன் பதிந்து தருவதாக சொல்லியிருந்தேன். எங்கள் இருவரின் அனுமதிச்சீட்டுகளும் என்னிடம் இருந்தன. சர்க்கஸில் ஒலிக்கும் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து அவள் ஒரு கட்டுரை எழுதியாக வேண்டும்.
கடைசி நேரத்தில் அவளால் வர முடியாமல் ஆகிவிட்டதால் என்னை மட்டும் சென்று பதிந்து வரும்படி கேட்டிருந்தாள். சர்க்கஸ் இன்றுதான் கடைசிக்காட்சி என்பதால் கட்டாயம் போயே ஆகவேண்டும். ஆனால் பிப்லப்பை வீட்டில் இறக்கிவிட்ட பிறகு சென்றால் காட்சிக்கு நேரமாகிவிடும் என்பது உறைக்கவும் எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது.
தயங்கிக் கொண்டே பிப்லப்பிடம் மெதுவாக விஷயத்தை சொன்னேன். அவருக்கு தொந்தரவு என்றால் வீட்டில் அவரை இறக்கி விடுவதில் சிரமம் இல்லை என்றும் அவருக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் அவரும் வரலாம் என்றும் சொல்லித் தொந்தரவுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன்.
ஒரு பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் அந்த திரைப்படம் பிடிக்காததால்தான் நண்பர்களுடன் செல்லவில்லை என்றும் சர்க்கஸ் தனக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்றார் பிப்லப். அன்றைய நாளின் பெரும் பாரம் விலகியதுபோல இருந்தது.
தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டபடி காரை சர்க்கஸ் அரங்கை நோக்கிச் செலுத்தினேன்.
அந்த சர்க்கஸை வைத்து அவ்வளவு விஷயங்கள் நடக்கும் என்று அப்போது எனக்கு தெரியாது.

oOo

குழந்தைகளின் ஆரவாரமும் பேச்சொலிகளும் நிறைந்த வழக்கமான சர்க்கஸ் அரங்கம். முன்பதிவு செய்திருந்ததால் காலி இருக்கைகளை கண்டுபிடிக்கச் சிரமம் இருக்கவில்லை.
காட்சியின் ஒலி ஒளிப்பதிவுகள் தனி உபயோகத்துக்காக மட்டுமே அவற்றை வியாபார நோக்கங்களுக்கு பயன்படுத்துவது கூடாது என்பது போன்ற அறிவிப்புகள் ஒலித்தன. நிறுத்தியை விரித்து உயர்த்தி கேம்கார்டரை அதில் பொறுத்தி தயாராக வைத்துக்கொண்டேன்.
காட்சி ஆரம்பித்ததும் கேமராவை சரி பார்த்து ஓடவிட்டேன். கால்சட்டைப் பையிலிருந்து எடுத்த சிறிய ஒரு கேமராவினால் படம் எடுத்துக்கொண்டிருந்தார் பிப்லப்.
சின்ன காமிராவின் வழி எதையோ துழாவுவது போல அவர் படம் எடுத்துக் கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிருகங்கள் வரும் எளிய காட்சிகளில் ஓரிரு படங்கள் எடுத்துக்கொண்டிருந்தவர் ஒற்றைச் சக்கர சைக்கிளில் அழகிகள் வந்ததும் புதிய வேகத்துடன் படம் எடுக்க ஆரம்பித்திருந்தார்.
கொஞ்ச நேரத்தில் காமிரா பாட்டரியில் மின்னோட்டம் தீர்ந்துவிட்டதால் என்னிடம் பாட்டரிகள் இருக்குமா என்றார். என்னிடமிருந்த மாற்று பாட்டரிகள் அவரின் காமிராவுக்கு பொருத்தமானவை அல்ல என்று தெரிந்ததும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டிருந்தார்.
சர்க்கஸ் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் வழி முழுதும் ரயில் நிலையத்துக்கு தாமதமாகி செல்வது போன்ற பாவனையில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருப்பதை கவனித்தேன்.
இறக்கிவிட அவர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியதும் உடனடியாக, ”உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும்” என்றார்.
“நீங்கள் பதிவு செய்த ஒளிப்படம் முழுதும் எனக்கு வேண்டும். தயவு செய்து தவறாக எண்ணவேண்டாம்”, என்று சொல்லிவிட்டு தீவிரம் நிறைந்த முகத்துடன் என்னைப்பார்த்தார்.
’நிச்சயமாக’ என்றதும், ”இதோ வருகிறேன்” என்று அவசரமாக இறங்கி ஓடி, பின் சில நிமிடங்களில் நிமிர்த்திய மடிக்கணினியுடன் காருக்கு வந்தார். “வெளியிலேயே நிற்க வைப்பதற்கு மன்னிக்கவேண்டும். என்னுடைய அறை படுமோசமாக இருக்கிறது. இன்னொரு சமயம் அழைக்கிறேன். இப்போது முடியுமென்றால் அந்த வீடியோவை என் மடிக்கணினியில் பதிவு செய்துகொள்கிறேன். செய்து கொள்ளலாம்தானே?” என்றார்.
என் கேம்கார்டரில் இருந்து நினைவு அட்டையை உருவி அவரிடம் கொடுத்தேன். வேகமாக வாங்கி மடிக்கணினியில் செருகிக்கொண்டார். சர்க்கஸில் முதல்முறையாக யானையைப்பார்த்த குழந்தையைப்போல பிரகாசித்தது முகம். படங்களைக் கணினிக்கு மாற்றிக்கொண்டு என் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் அவர் குறித்துக் கொள்ள விடைபெற்றுக் கொண்டேன்.

oOo

திங்கள் செவ்வாய் கிழமையில் அடுத்தடுத்து இரண்டு பெரிய தேர்வுகள் இருந்ததால் இரவில் வழக்கத்தை விடக் கூடுதலாகக் கண்விழித்துப் படிக்க வேண்டியிருந்தது. செவ்வாய் கிழமை மாலை வீட்டுக்கு வந்ததும் கைக்கு கிடைத்ததை சாப்பிட்டு படுத்ததுதான் உடனே உறங்கிவிட்டேன்.
சூசனின் அறையில் அமர்ந்திருக்கிறேன். அறையில் என்னயும் அவளையும் தவிர யாருமில்லை. உரையாடலின் திசையை மாற்றி புதிதாக எதையோ அவளிடம் சொல்ல யத்தனிக்கும்போது அழைப்பு மணி ஒலிக்கிறது. சில நொடிகளுக்குப்பின் என் கைபேசி ஒலிக்கிறது. சிறிது இடைவெளி விட்டுப் பிறகு திரும்பவும் அழைப்புமணி ஒலிக்கிறது. ஏன் யாருமே கதவை திறக்கவில்லை? என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே விழித்துக்கொண்டேன்.
ஒளிர்ந்து கொண்டிருந்த கைபேசியில் பிப்லப்பின் அழைப்பு தவறியிருந்தது. வேகமாக எழுந்து சப்பாத்துகளை மாட்டிக்கொண்டு ஓடிப்போய் கதவை திறந்தேன். வெளியே பிப்லப் நின்றிருந்தார்.
’மன்னிக்கவும் உறங்கிக்கொண்டிருந்ததால் நீங்கள் அழைத்ததை கவனிக்வில்லை’ என்று கதவின் கொக்கியை விடுவித்து அவரை உள்ளே வருமாறு அழைத்தேன்.
”தூக்கத்தில் எழுப்புவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்தார். நான் எதுவும் கேட்பதற்கும் முன்பாகவே ”உங்களிடம் ஒரு உதவி கேட்கவேண்டும்” என்றார் பிப்லப்.
சராசரியான குட்டையான கிராப்பின் வாரப்படாத தலைமுடி. மெல்லிய தாடி. நெருங்கிய ஒருவரை மரணத்தில் இழந்தவரைப்போல சோகமாக இருந்தார். என்னால் முடிந்தவரை நிச்சயமாக உதவுகிறேன் என்றேன்.
தேநீரை உறிஞ்சிக்கொண்டு எதுவுமே சொல்லாமல் இருந்ததால் அவர் பேசத் தயாராகும் வரை அமைதியாக இருந்தேன். குளியலறையிலிருக்கும்போதும் தேநீர் தயாரிக்கும்போதும் இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். அவரின் குடும்பத்தினர் எவராவது இறந்திருப்பார்களோ? அவசரமாக ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு போக வேண்டியிருக்கும்போல என்று நினைத்துகொண்டேன். அல்லது அவசரமாக பணம் தேவைப்படுகிறதா?
காலிக்கோப்பையை டீப்பாயில் வைத்துவிட்டு இறக்கி வைத்திருந்த தோள் பையிலிருந்து கைநிறைய புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, ”இவளைச் சந்திக்க எனக்கு நீங்கள்தான் உதவ வேண்டும்” என்றார்.
பிப்லப் சொன்னது முதலில் எனக்கு புரியவில்லை. குழப்பத்துடன் படங்களை வாங்கி ஒவ்வொன்றாக பார்த்தேன். உயரத்தில் இரும்புக் கம்பியை பற்றித் தொங்கியபடி ஊசலாடிக் கொண்டிருக்கும் சர்க்கஸ் அழகிகளின் படங்கள் சில. கடைசியாக உள்ளாடை போன்ற குட்டையான பாவாடையும் மேல்சட்டையும் அணிந்த வெள்ளை நிறப்பெண் பூனைக்கண்களுடனும் புன்னகையுடனும் நிற்கும் சற்று பெரிய படம். ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போன்ற சற்றே பரிச்சயமான முகம். யார் என்று உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
“எனக்கு வேறு யாரையும் தெரியாது, என் அறை நண்பர்களோ என்னை கேலி செய்கிறார்கள். அதனால்தான் உங்களைக் கேட்கிறேன்.” முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டிருந்தார் பிப்லப்.
படங்களை டீப்பாயில் வைத்துவிட்டு நான் குழப்பத்துடன் அவரைப்பார்த்தேன். அவரே மேற்கொண்டும் விளக்கினார்.
திக்கித்திணறி ஆங்கிலத்தில் அவர் சொன்ன விஷயம் இதுதான். கையை கோர்த்துக் கொண்டும் ஒற்றைச் சக்கர சைக்கிளை ஓட்டியும், தொங்கும் கயிற்றில் ஆடியும் சர்க்கஸில் சாகசங்கள் செய்த அழகிகளுள் ஒருவர் மீது அவருக்கு கண்டதுமே காதல் பிறந்துவிட்டது.
அவளை அவர் மிகவும் நேசிக்கிறார். அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை இனி அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அவளை எப்படியாவது சந்தித்தே ஆக வேண்டும் அதற்கு நான்தான் அவரை அழைத்துச்செல்ல வேண்டும். மோசமான உடைந்த ஆங்கிலத்தில் அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளவே எனக்கு சற்று நேரம் பிடித்தது.
முழுக்கப் புரிந்ததும் அவரின் மூடத்தனத்தை எண்ணி அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. முன்பின் அறிமுகமில்லாத வெள்ளைக்காரியுடன் குடும்பம் நடத்த கனவு காணும் இந்திய ஆண்மகனுக்கு அதுவும் நண்பன் என்று கூட சொல்ல முடியாத, அறிமுகம் மட்டுமே உள்ள ஒரு சக இந்தியனுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் பதிலாக எதைச் சொல்வது?
வழியும் தொந்தியை சட்டையில் சுருட்டி வைத்துக்கொண்டு கோமாளியைப் போல நடந்து திக்கித் திணறி ஆங்கிலம் பேசும் நடுவயது ஆண் மகனுக்கு உடலை வில்லைப்போல வளைத்து சாகசம் செய்யும் இளவயசு வெள்ளைக்காரியுடன் வாழ ஆசை.
இவ்வளவு முட்டாள்தனம், துணிச்சல் முதலில் ஒரு மனிதனுக்கு எங்கிருந்து வருகிறது? அதுவும் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்து அறிமுகம் மட்டுமே உள்ள இன்னொருவனிடம் இதைச்சொல்லி அவனிடம் உதவி கேட்க நினைப்பது எவ்வளவு பெரிய மொண்ணைத்தனம்?
கோபத்தில் சுவாசம் வேகமாகி இதயத்துடிப்பு அதிகமாகி கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
கடுமையாக திட்டி அவரை வெளியேற போகச் சொல்ல வேண்டும்போல ஆவேசம் எழுந்தது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே சிந்தனையை நிதானப்படுத்துவதற்காக முகத்தை தாழ்த்திக் கொண்டு கோப்பையில் மீதியிருந்த தேநீரை இன்னும் சில மிடறுகள் குடித்தேன்.
ஆனால் அதற்குப்பிறகு அவர் சொன்ன விஷயம்தான் என்னை நிதானப்படுத்தியது.
”நான் வாழ்க்கையில் எதையும் பெரிதாக ஆசைப்பட்டதில்லை தம்பீ. எனக்கு மிகவும் பிடித்தமானது என்றெல்லாம் இதுவரைக்கும் எதுவுமே இல்லை. எனக்குப்பிடித்த ஒரு பெண்ணை சந்திப்பதையாவது எனக்கு விருப்பமானதாக, என் வாழ்க்கையின் நோக்கமாக, சவாலாக இருக்கட்டுமே என்று பார்க்கிறேன்”
“என் வாழ்க்கை மிகவும் சராசரியானது தம்பி. கல்கத்தாவின் அழுக்குப்பிடித்த ஒரு ஒற்றை வீட்டில் பிறந்து வளர்ந்து படித்து வேலைக்குப்போனேன். அவ்வளவுதான் என் வாழ்க்கை.”
சொல்லிவிட்டு நான் ஏதாவது சொல்கிறேனா என்று என்னைப்பார்த்தார். எனக்கு எதிர்பாராமல் திடீரென ஆற்றுக்குள் இறங்கி விட்டதைப்போல இருந்தது.
மீதியிருந்த தேநீரை ஒரே மடக்கில் குடித்து காலிக்கோப்பை கையில் வைத்துக் கொண்டே என்னை கவனித்துவிட்டு முகத்தை தாழ்த்திக்கொண்டார்.
அப்போது அவரைப்பார்க்க மிகப் பெரிய உடலுடன் மிதமிஞ்சி வளர்ந்துவிட்ட குழந்தையைப்போல இருந்தது. கோபம் முழுக்க தணிந்தவுடன் ஏற்படும் வெற்றுணர்வில் திடீரென பரிவும் கருணையும் மேலிட்டதன் வேகத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தேன்.
ஒரேமுறை மட்டுமே பேசி அறிமுகமான என்னிடம் புதன் கிழமை காலை ஆறுமணிக்கு கதவைத்தட்டி தூக்கத்திலிருந்து எழுப்பி தன் காதல் ரகசியத்தை சொல்லி உதவி கேட்க ஒரு மனிதரால் முடியும் என்பது எனக்கு இன்னும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.
அதேசமயம் என்னை இதைப்போன்ற ஒரு விஷயத்தை சொல்லி உதவி கேட்கும் அளவுக்கு தனக்கு நெருங்கிய ஒருவனாக என்னை அவரால் நினைக்க முடிந்ததை ஒருகணம் எண்ணிக்கொண்டபோது, என்னைப்பற்றி நானே உயரிய வகையில் எண்ணத்தோன்றியதில் கொஞ்சம் சந்தோஷமாகக் கூட இருந்தது.
என்னை அவர் தம்பி என்று அழைத்தது எனக்கு பிடித்திருந்தது என்பதை ஆச்சரியத்துடன் நினைவு கூர்ந்தேன். அமெரிக்கா வந்த ஆறுமாதத்தில் இங்கு யாரும் என்னை அப்படி அழைத்ததில்லை. எனக்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் இருக்குமா என்று நினைத்துகொண்டேன்.
பெருமிதத்தின் எழுச்சியில் உடனடியாக அவருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற வேகம் எழுந்தது. ”நிச்சயம் என்னாலான உதவியை செய்கிறேன்,” என்றேன்.
”இன்று மாலையே செல்ல முடியுமா?” என்றார் பிப்லப்.
அந்தவாரம் இன்னும் சில தேர்வுகள் இருக்கின்றன என்பதை நிதானத்துடன் நினைவுபடுத்தி “சனிக்கிழமை செல்லலாமே,” என்றேன்.
பிப்லப் அமைதியாக அமர்ந்திருந்தார். ”நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் அந்தப்பெண்மணியை நிச்சயமா கண்டுபிடித்துவிடலாம்,” என்றேன்.
அப்படிச் சொன்னேனே தவிர சொல்லி முடித்ததும் அப்படி சொல்லி விட்டது ஒருபுறம் எனக்கே ஆச்சரியமாகவும் இருந்தது.
பிப்லப் நன்றி கூறி விடைபெற்றுச் சென்ற விதம் ஒருவேளை அன்றே உடனடியாக சென்றிருந்தால் அதை அவர் மிகவும் விரும்பியிருப்பாரோ என்று என்னை எண்ணச்செய்தது.
அவர் சென்றதும் நடந்ததை எல்லாம் நிதானமாக யோசித்துப் பார்த்து ஆசுவாசமாகியபின் என்னை நானே கடிந்து கொள்ளவும் செய்தேன். இதைப்போன்ற ஒரு மடத்தனமான விஷயத்தில் உதவ நான் எப்படி சம்மதித்தேன்?
நானாக வலியச் சென்று எதையும் செய்யவில்லை. என்னத்தேடி வந்து உதவி என்ற கேட்டதனால் ஒரு மனிதருக்கு உதவப்போகிறேன். அதற்குப்பின் எதுவானாலும் நடப்பது நடக்கட்டும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

oOo

னிக்கிழமை காலை ஏழு மணிக்கே வந்து விட்டார் பிப்லப். இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்ட முள்தாடியில் ஒரு சுற்று இளைத்துவிட்டது போல இருந்தார். கதவைத்திறந்ததும் முகமன் சொல்லிவிட்டு ஒடிய தீவிரத்தை மட்டுப்படுத்திக் கொண்டு முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொள்ள முயன்றபடி அமர்ந்திருந்தார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த ரொட்டியை வேகமாக விழுங்கிவிட்டு காலணிகளை அணிந்து கொண்டு கிளம்பினேன். சர்க்கஸ் அரங்கின் கார் நிறுத்தும் இடத்தை அடைந்தபோது அந்த இடமே காலியாக இருந்தது. மிகப்பெரிய மைதானத்தில் எங்களைத்தவிர யாருமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில கார்கள் நின்றன.
காரை நிறுத்திவிட்டு வரவேற்பறையின் முகப்பில் நின்றதும் கணணித்திரைக்கு பின்னால் இருந்து எட்டிப் பார்த்த குட்டை முடி மூதாட்டியிடம் புகைப்படத்தைக்காட்டி, ”இந்தப்பெண்மணியைச் சந்திக்கவேண்டும்” என்றேன்.
சர்க்கஸ் காட்சிகள் முடிந்துவிட்டதால் கம்பெனிக்காரர்கள் அனைவரும் அறைகளைக் காலி செய்து சென்று விட்டார்கள். அங்கே சந்திக்க யாருமில்லை என்றார் பாட்டி. புகைப்படத்தில் இருப்பவரின் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டது என்பதால் முக்கியமான விஷயம். அவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்றும் எங்களுக்கு தயவு செய்து உதவ வேண்டும் என்றும் சொன்னேன்.
ஏதோ பத்து டாலர் கடன் கேட்டுவிட்டதைப்போன்ற பாவனையில் என்னைப்பார்த்துக்கொண்டே யாருடனோ தொலைபேசியில் பேசிய பின் ’அறை ஐநூற்று நாற்பது, ஐந்தாவது மாடி’ என்று சொல்லிவிட்டு கணினியின் திரைக்குப் பின்னால் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
அது ஒரு புகழ்பெற்ற உள்விளையாட்டுக் கூடமும் கூட. விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளேயே இருந்தன. எங்களைத்தவிர அப்போது அரங்கத்தில் வேறு யாருமில்லை. அரங்கில் நிகழ்ச்சிகள் இல்லாத நாள் என்பதால் மின்படிகளும் பெரும்பாலான விளக்குகளும் இயங்காமல் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்த விளக்குகளின் மங்கிய வெளிச்சம். சப்பாத்து சத்தம் ஒலிக்க இருண்ட படிகளின் வழி ஐந்தாவது மாடிக்கு ஏறிச்சென்றோம்.
எதிரெதிராக இருபுறமும் வரிசையாக அமைந்த அறைகளின் நடுக்கூடம் நடமாட்டமின்றி காலியாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இடது வலது மூலைகளில் மட்டும் விளக்குகள் எரிந்தன. அவ்வப்போது முழங்கால்களில் கையை ஊன்றி நின்று துருத்தியைபோல மூச்சுவாங்கியபடி பிப்லப் பின்னால் வந்து கொண்டிருந்தார்.
சில முறைகள் அழைப்பு மணியை அழுத்திய பிறகு ஒரு பெரிய உருவம் கதவை திறந்தது. பிப்லப்பை விட அதிக உயரம். பழைய கசங்கிய கோமாளியின் உடை, கையில் உயரமான பியர் மதுப்புட்டி. தீட்டிய வண்ணம் முழுக்கவும் அழியாத முகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த புட்டியைப்போன்ற மூக்கு.
புகைப்படத்தை வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு கரகரப்பான குரலில் “நாத்தாலியா” என்று எங்கள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தார். மிகவும் குறைவான ஒப்பனைகளை வைத்தே பிப்லப்பையும் அவரைப்போன்ற ஒரு கோமாளியாக மிக எளிதில் மாற்றி விட முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.
அவர் சொல்லிய தகவல்கள் எங்களை இருவரையும் ஒருசேர ஏமாற்றமடையச் செய்தது. முதலாவது, சர்கஸ் கமபெனி தற்போது டெக்ஸாசில் ஒரு ஊரில் முகாமிட்டிருக்கிறது. இரண்டாவது, நாத்தாலியா இந்த சர்க்கஸ் கம்பனியைச் சேர்ந்தவள் அல்ல. சாகசக்காரர்களை பணிக்கு அமர்த்தும் ஒரு முகவர் வழியாக இங்கு பணிக்கு வந்திருந்த்தால் அவளைப் பற்றி மேற்கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்றார் அவர். அவரும் சர்க்கஸ் தொழிலில் பலவருடமாக இருப்பதால் இருவரும் பல முறை சேர்ந்து ஒரே சர்க்கஸ் காட்சிகளில் பணியாற்றியிருக்கிறோம், மிகவும் நல்ல பெண் என்றார்.
நான் ஒரு நாடக உதவி ஆசிரியன் என்றும் நாடகம் ஒன்றில் முக்கியப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஆள் தேடிக்கொண்டிருப்பதாகவும் பொருத்தமாக இருப்பாள் என்று சர்க்கஸில் நாத்தாலியாவைப் பார்த்த இயக்குனர் கருதியதன் பேரில் அவளைத்தேடி வந்திருப்பதாகவும் சொன்னேன்.
அப்படி ஒரு பொய் சொல்ல முடிந்ததில் என் சாதுர்யத்தின் தைரியத்தை ரசித்து என்னை நானே வியந்து உள்ளூர பாராட்டிக்கொள்ளவும் செய்தேன். என் ஆளுமையின் திறமைகளுள் ஒன்று சிறந்த முறையில் வெளிப்பட்டதைக் கண்டுகொண்ட நிறைவில் என்மீதே எனக்கிருந்த நம்பிக்கை சற்று உயர்ந்து விட்டதைப்போல இருந்தது.
ஒரு வழியாக நாத்தாலியாவின் முகவரியை வாங்கிக்கொண்டு சந்தோஷத்தில் நன்றி சொன்னோம். ஆனால் முகவரியில் இருந்ததோ அரிஸோனாவின் மூலையில் உள்ள ஒரு ஊர். எங்கள் ஊரிலிருந்து சுமார் நாலே முக்கால் மணி விமானப்பயண தூரம் என்று நினைவு வந்ததும் சலிப்பாக இருந்தது.
அந்த ஊருக்கு எப்படியும் இரண்டு விமானச்சீட்டுகளை வாங்கிவிடுவதாக சொல்லிக்கொண்டு பிப்லப் முகவரிச்சீட்டை வாங்கிக்கொண்டார்.
அந்தவாரம் இன்னுமொரு அசைன்மென்ட் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆகவே புதன் கிழமை காலை விடுப்பு எடுத்துக்கொண்டு அவருடன் வருவதாக ஒத்துக்கொண்டு அவரை வீட்டில் இறக்கிவிட்டேன்.
அடுத்த இரு நாள்களும் பல்கலை நூலகத்திலிருந்து கொண்டுவந்திருந்த ஷோபேனின் குறுந்தட்டுகளை இடைவிடாமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். ஷோபேனின் இரவுப்பாடல்களில் காதல் உணர்வு என்பது நான் எழுதவேண்டிய அசைன்மென்டின் தலைப்பு.
முதுகைக காட்டிக்கொண்டு தன் புகழ்பெற்ற இரவுப்பாடல் ஒன்றை இசைத்து முடித்த ஷோபேன் பியானோவின் கட்டையிலிருந்து விரல்களை விடுவித்துக்கொண்டு திரும்புகிறார். கண்களில் தேங்கி நிரம்பியிருந்த கண்ணீர் உடைந்து கன்னங்களில் வழிகிறது. கறுப்பு அங்கி அணிந்த நெடிய உருவம் ஆனால் முகச்சாயல் வேறு யாரோ போல இருக்கிறது. ஷோபேனின் நெடிய முகமோ நீளமான தலைமுடியோ இல்லை… அது நிச்சயம் ஷோபேன் இல்லை. தடித்த வட்டமான முகம் சராசரியான குட்டையான கிராப்பின் வாரப்படாத தலைமுடி முகத்தில் முள்தாடி.
திடீரென விழித்துக்கொண்டேன். இசைப்பட்டையுடனேயே மேசையில் கவிழ்ந்து தூங்கியிருந்ததில் நசுங்கி இடதுபக்கத்து கன்னத்துச்சதை வலித்தது. காது மடல்களிலும் வலி. இசைப்பட்டையை கழற்றி விட்டு எழுந்தேன்.

oOo

பிப்லப்பும் நானும் அரிஸோனா ஃபீனிக்ஸ் விமான நிலையத்தில் இறங்கி அங்கேயே வாடகைக்கு எடுத்த காரில் நாத்தாலியாவின் ஊரை வந்தடைந்தபோது மணி மாலை ஐந்தரை. சிறியதும் இல்லாத பெரியதும் இல்லாத நடுவாந்திரமான் ஊர். முகவரியை கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு படியில் ஏறிச்சென்று கதவைத்தட்டினேன்.
நாத்தாலியா கதவைத்திறக்கவும் அவராகவே அறிமுகம் செய்து கொண்டு உடைந்த ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்திருந்தார் பிப்லப். அவரின் திடீர் தைரியத்தை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு எது நடக்குமோ நடக்கட்டும் என்று காருக்கு வந்து பதட்டத்தை மறைப்பதற்காக ரேடியோவில் எதையோ கேட்க முயன்றபடி உட்கார்ந்திருந்தேன்.
சுமார் ஒருமணிநேரம் கழித்து நாதாலியாவின் அறையிலிருந்து திரும்பிய பிப்லப் என்னிடம் எதுவுமே சொல்லாமல் காருக்குள் வந்து அமர்ந்தபடி ’போகலாம்’ என்றதும் காரைக்கிளப்பினேன். அவர் முகத்தில் எந்த மாறுதலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் என்ன நடந்தது என்று யூகிக்க முடியவில்லை. சரி அவராகவே சொல்லட்டும் என்று நானும் எதையும் கேட்கவும் இல்லை.
நல்லவேளை விபரீதமாக எதுவும் நடக்கவில்லையே என்று ஒருவகையில் நிம்மதியாகவும் இருந்தது. பயணம் முழுக்க ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே அமைதியாக வந்தார் பிப்லப். விமானமேறி இறங்கி என் காரை எடுத்துக்கொண்டு அவர் வீட்டில் இறக்கிவிடும் வரை பயணம் நெடுக இருவரும் ஒரு சொல்கூட பேசிக்கொள்ளவில்லை.
இறங்கிச்செல்லும்போது, கையை இறுகப்பற்றிக்கொண்டு கண்கலங்க, “இந்த உதவியை எந்தப் பிறவியிலும் மறக்க மாட்டேன்,” என்று மட்டும் சொல்லி விட்டுப்போனார்.
நாங்கள் திரும்பியிருந்த மூன்றாம் நாள் என் வாழ்நாளின் நம்ப முடியாத, மாபெரும் அதிசய சம்பவம் ஒன்று நடந்தது.
ஃபீனிக்ஸிலிருந்து ஒரே ஒரு பெட்டியுடன் மட்டும் விமானத்திலிருந்து இறங்கிய நாத்தாலியாவை பிப்லப்புடன் போய் காரில் அழைத்துகொண்டு வந்தேன். அன்று மாலையே பக்கத்திலிருந்த கத்தோலிக்க தேவாலயத்தில் பிப்லப்புக்கும் நாத்தாலியாவுக்கும் நடந்த திருமணத்திற்குச் சாட்சியாக நானும் சூசனும் கையெழுத்திட்டோம்.
மறு நாள் நண்பர்கள் அனைவருக்குமாக எங்கள் ஊர் இந்திய உணவு விடுதியில் சிறு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் பிப்லப். என்னைத் தம்பி என்று விளித்து எனக்குச் சில முறைகள் நன்றி சொல்லிக் கொண்டு கண்கலங்கினார். அவரின் அறை நண்பர்கள், அலுவலக நண்பர்கள் உடன் இருந்ததால் அவருடன் அதிகமும் பேச முடியவில்லை.

oOo

டுத்த வாரத்தில் இன்னுமொரு நம்ப முடியாத சம்பவம் நடந்தேறியது. அங்கேயே ஒரேயடியாக செட்டிலாகிவிடுவது என்று முடிவெடுத்து நாத்தாலியாவுடன் அவள் சொந்த ஊருக்குக் கிளம்பத் தயாராகி விட்டார் பிப்லப்.
இவை எதையுமே என்னால் துளியும் நம்பமுடியவில்லை. ஏதோ ஒரு மர்மப்படத்தின் நம்பமுடியாத முடிவுக்குப்பிறகு அரங்கை விட்டு வெளியேறி விட்டதைப்போலத்தான் கழிந்தது கடந்த இரு வாரங்களும்.
கடந்த இரு வாரங்களில் பலமுறை விமான நிலையம் வந்துவிட்டேன். இம்முறை குரோவேஷியாவுக்குக் கிளம்பிச் செல்லும் பிப்லப் நாத்தாலியாவை வழியனுப்புவதற்காக வந்திருந்தேன்.
பிப்லப்பை ஏறக்குறைய வேறொரு ஆளைப்போல இருந்தார். அவரின் நடையில் ஏதோ ஒரு மிடுக்கு கூடி விட்டிருந்தது. ஒட்ட வெட்டப்பட்ட கிராப், சரியாகப் பொருந்தும் அளவிலான உடை. அவரின் ஆங்கிலம் கூட சற்று மேம்பட்டு விட்டதைப்போல இருந்தது.
நான் கூட கொஞ்சம் மாறிவிட்டேன் என்று நினைக்க தோன்றியது. முன்னெப்போதையும் விட தைரியமும் தீவிரமும் எனக்குள் கூடிவிட்டதோ என நினைத்துக்கொண்டேன்.
வந்திருந்த அவரின் அலுவலக நண்பர்களை சிலர் கைகுலுக்கி விடைபெற்று சென்றனர். பிப்லப்பிடம் கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்ததை கேட்க இதுதான் நல்ல சமயம் என்று நினைத்துக்கொண்டேன். நாத்தாலியாவும் பக்கத்தில் இல்லை. தூரத்தில் கடையில் எதையோ வாங்கிக்கொண்டிருந்தாள்.
”பீனிக்ஸில் நாத்தாலியாவை முதல் முறையாக சந்தித்தபோது அவளிடம் அப்படி என்னதான் பேசினீர்கள்? பெட்டியுடன் கிளம்பி வந்து விட்டாளே,” என்றேன். என் குரலில் வழிந்த ஆச்சரியத்தை கட்டுப்படுத்தாமலேயே.
”நாத்தாலியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் இனி நினைத்துக்கூடப்பார்க்க முடியாது. உன்னிடம் சொன்னேன் அல்லவா, அதேயேதான் அவளிடமும் சொன்னேன்!”
என்று சாதாரணமான குரலில் சொல்லிவிட்டு குழந்தையைப்போலப் புன்னகைத்தார் பிப்லப். ஒன்றுமே நடக்காததைப்போல முகத்தை மிகவும் சாதாரணமாக வைத்துக்கொண்டிருந்தார். சில நொடிகள் கழிந்த பின் என் கைகளைப்பற்றிக்கொண்டு ”மிக மிக நன்றி,” என்றார்.
என்னிடம் உண்மையைத்தான் சொன்னார் என்றாலும். இப்படியெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்பது இன்னும் கூட எனக்கு நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது. சில விநாடிகள் என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிறகு நிதானித்து ‘இன்ஸ்பயரிங் பிப்லப், வெரி வெல்டன்,” என்றேன்.
பிப்லப்பின் பெட்டிகளை அவரும் நானும் டிராலியில் ஏற்றிய பிறகு யாரோ அழைக்கும் ஒலி கேட்டு திரும்பனேன். கையசைத்துச் சிரித்துக்கொண்டே நாத்தாலியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
எனக்கு சூசனின் ஞாபகம் வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.