இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1

ganapathy

இந்து சமயம் ஒற்றைப் பெருமதம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு சிந்தனை முறைமை. ஏராளமான மதங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள், மொழி மரபுகளை தன்னுள்ளடக்கியதாய், வட்டாரம் சார்ந்து பல்வகைப்பட்ட நியமங்களும் ஆதார நம்பிக்கைகளும் கொண்டதாய், மானுட சமுதாயங்கள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய உலகளாவிய அடிப்படை விழுமியங்களை முன்னிருத்துவதாய் உள்ள சிந்தனை முறைமை. இது போக இந்து சமயங்கள் குறித்து இன்னும் சொல்ல இருக்கிறது.
சிந்து என்ற சொல், நதி, அகண்ட நீர்பரப்பு, கடல் என்றும் பொருள்படும். இந்தியாவின்மீது படை தொடுத்துக் கொண்டிருந்த பாரசீகர்கள், சிந்து என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல் இந்து என்று அழைத்தனர். இதுவே பின்னர் இந்தியா என்று மறுவிற்று.
எனவே, பரவலான ஒரு பார்வையில் இந்து சமயத்தை மகத்தான ஒரு நியமத்தொகையாகக் கொள்ளலாம், அது மிகப்பெரிய ஒரு சிந்தனை முறைமை- இந்திய துணைக்கண்டத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் தோன்றிய அத்தனை மதங்களும் சம்பிரதாயங்களும், விதிமுறைகளும், பழக்க வழக்கங்களும், பண்பாட்டு, மொழி மரபுகளும் இந்து சமயத்தின் உள்ளடக்கம். எனவேதான் வேதங்களை ஆதாரமாகக் கொண்ட, வேத மரபின் விதிமுறைகளைப் பின்பற்றும் மதங்கள் பல [वेदसम्मत – Vedasammata] இந்து சமயத்தில் குவிந்திருப்பதைப் பார்க்கும்போதே வேதங்களை உயர்வாய்க் கொள்ளாத நடைமுறைகளும் இந்து சமயத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். அதே போல், இந்து சமயத்தில் உள்ள சில மதங்களும் சம்பிரதாயங்களும் அக்னி வழிபாட்டையும் அது சார்ந்த சடங்குகளையும் முக்கியமாய் கருதுகின்றன என்றால், அக்னி வழிபாடு செய்யாத மரபுகளும் அதனுள் இருக்கின்றன. பரவலாக வழிபடப்படும் இந்திய கடவுளரைவிட, தத்தம் தெய்வங்களையே சில வழிபாட்டு மரபுகள் உயர்வாய்க் கருதுகின்றன என்றால், வேறு சில வழிபாட்டு மரபுகள் நதிகள், மலைகள், மரங்கள், மிருகங்கள் என்று இயற்கை வழிபாட்டை வலியுறுத்துகின்றன. எனவே, இந்திய மதங்களையும் நம்பிக்கைகளையும் எளிமைப்படுத்த மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளும் முட்டாள்தனமானவை – நம் கண் முன் உள்ள உண்மைகளுக்கும் ஆதாரங்களுக்கும் முரணானவை.
இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய அத்தனை சிந்தனை முறைமைகளுக்கும் பொதுவாய், தனித்தன்மை கொண்ட சில பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன. இவற்றுள் சில பிற பண்பாடுகளிலும் சமயங்களிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. வேறு சில பண்பாட்டுக் கூறுகள், இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே இருந்த கலாசாரக் குழுக்களுக்கு உரியவை என்று சில வரலாற்றாய்வாளர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.
முதலில் இந்து சமயங்களின் மைய நோக்கு எது என்ற விஷயம். இந்த மதங்களின் பனிமூட்டம் போன்ற, கனவுத்தன்மை கொண்ட, உலகுக்கு உதவாத, நடைமுறைப்படுத்த முடியாத இயல்பு பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டு விட்டன. ஆனால் இப்படிப்பட்ட முடிவைவிட உண்மைக்குப் புறம்பானது எதுவும் இருக்க முடியாது. உண்மையில், இந்து மதங்கள் மிகப் பெரிய அளவில் மனிதனைத் தம் மையத்தில் கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் மதங்களானாலும் சரி, தமிழக மதங்களானாலும் சரி, இந்து பெருமதங்களுக்கு முதலான பெருமதங்களின் எதிர்வினையாய்த் தோன்றிய சமணம், பௌத்தம் முதலான வேறு பல மதங்களானாலும் சரி, இந்தியாவில் உள்ள அத்தனை மதங்களையும் தத்துவச் சம்பிரதாயங்களையும் ஒருங்கிணைக்கும் விஷயம் ஒன்றுண்டு- அது சங்கிலித் தொடராய்த் தொடரும் ஜனன மரணச் சுழற்சியிலிருந்து உயிரை விடுவிப்பதுதான்.
நிர்வாணம், மோட்சம், முக்தி என்று எப்பெயரிட்டு அழைத்தாலும் இந்து மதச்சம்பிரதாயங்களின் நோக்கம் ஒன்றுதான் – புட்டியில் சிக்கிக் கொண்ட விட்டிலுக்கு வெளியேற வழி காட்டுவது எப்படி? (அடிக்குறிப்பு: தன் தத்துவத்தின் நோக்கம், “Der Fliege den Ausweg aus dem Fliegenglas zeigen”—to show the fly the way out of the fly bottle, என்றார் விட்கென்ஷ்டைன்). சிலர் இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். சொர்க்கம் என்று ஒன்று உண்டு என்றும் வைகுண்டம், கைலாயம் போன்ற தெய்வ உலகங்கள் உண்டு என்றும் இந்து மதங்கள் சொல்வதையும் அவற்றின் தொன்மங்களை நியாயப்படுத்தவுமே இந்து மதங்களில் ‘விடுதலை’ வேட்கை, வலியுறுத்தப்படுகிறது என்கின்றனர் இவர்கள். இது உண்மையாய் இருக்குமென்றால், தெய்வத்தை விடுங்கள், ஆன்மா என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக் கொள்ளாத பௌத்தம் போன்ற சமயங்கள் ஏன் சம்சாரத்துக்கு முடிவு கட்டுவதைத் தம் லட்சியமாகக் கொள்ள வேண்டும்? வேதங்கள், உபநிடதங்கள் தொடங்கி பின்னர் வந்த சம்ஸ்கிருத நீதி நூல்கள், தமிழகம் மற்றும் காஷ்மீர சைவ சித்தாந்தங்கள், இந்தியாவெங்கும் பரவலாய் உள்ள வைணவ சம்பிரதாயங்கள், இந்து சமயத்தின் ஷண்மதங்கள், ஏன் சமணம் உட்பட, அனைத்துமே மானுட பிறப்பின் துயர அனுபவத்தினின்று விடுபடுவதையே ஏன் தம் சமய உலகின் மையமாக கொள்ள வேண்டும்? இந்த ‘மாறுபட்ட புரிதல்’ என்பது பிழைபட்ட அறிவாக இருக்க வேண்டியதில்லை. உண்மையைச் சொன்னால், புராணங்களும் அவற்றின் துணைக்குறிப்புகளாக அளிக்கப்படும் மறைநூல்களும் அபரிதமான அளவில் கடவுளர்களின் உலகங்களைக் கொண்டிருக்கின்றன. இது பற்றி பிறகு எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால், மனிதனை மையத்தில் நிறுத்திய முதல் ‘எக்ஸிஸ்டென்ஷலிஸ்ட்’ பிலாசபி எது என்று கேட்டால், அது இந்து மதம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
அடுத்து பேசப்பட வேண்டியது காலமும் மனித அனுபவத்துக்கு உட்பட்ட வஸ்துக்களின் பருண்மத் தன்மையும். இந்து சமயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த இரண்டையும் புரிந்து கொள்வது அவசியம். விதிவிலக்குகள் என்று ஒன்றுகூட இல்லாமல், இந்து சமயங்கள் அனைத்தும் காலம் சுழற்சித்தன்மை கொண்டது என்றே சொல்கின்றன. இந்து அண்டவியலில், ஒரு கணம் முதல் ஒரு யுகம் வரை கால இடைவெளிகள் துல்லியமாக வரையறை செய்யப்பட்டு பகுக்கப்பட்டிருக்கின்றன. படைக்கப்பட்ட பூமியின் காலம் மட்டுமல்ல, தெய்வ உலகங்களின் காலமும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்களின் உலகுக்கும் காலம் உண்டா? இருப்பது எதுவானாலும் அனுபவத்துகோ அறிவுக்கோ சிந்தனைக்கோ உட்பட்டது எனில், அது பௌதிகத் தன்மை கொண்டதே. இந்து சமயங்கள் பௌதிக இருப்பை இருவகையில் பிரிக்கின்றன- தூலமாய்ப் புலப்படுபவை, சூக்குமமாய் விளங்குபவை. இந்தப் புரிதலில், மனம், எண்ணங்கள், ஜீவன் (மனித ஆன்மா), உலகம், கர்மா, இறைவர்கள், இறைவியர், படைப்புத் தொழிலை நிகழ்த்தும் பிரமன் என்று மானுட அனுபவத்துக்கு உட்பட்ட அனைத்துமே பௌதிக உலகைச் சார்ந்தவையே.
பௌதிகத் தன்மை கொண்டிருத்தலால், இவை படைப்பு, இருப்பு, அழிவு என்ற இயற்கை விதிகளுக்குக் கட்டுப்படுகின்றன. இந்து சமயங்களில் வெவ்வேறு உயிர்களுக்கும் உலகங்களுக்கும் வெவ்வேறு வகையில் முடிவு காலம் நிர்ணயிக்கபடுகிறது. பிரளயம் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கப் போகிறோம். ஆனால் இந்து சமயங்களில் வெவ்வேறு கல்பங்களுக்கு வெவ்வேறு பிரமன்களும், ரிஷிகளும் உலகங்களும் இருப்பதற்கான காரணம் இதுதான்- அனைத்தும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவை. இதில் கர்மவினை பௌதிகத்தன்மை கொண்டது என்பதைக் கண்டறிந்தது சமணம்தான் என்று சொல்ல வேண்டும்
இந்து சமயங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் காட்டிலும் தனி மனித வளர்ச்சி, பரிணாம மாற்றம், வீடுபேறு ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. சடங்குகள் முக்கியம்தான், ஆனால் தனிமனித வளர்ச்சியை நோக்கி சிரத்தையுடன் சாதனை செய்வது அவசியம் என்று கருதப்படுகிறது. தனி மனித பரிணாம மாற்றத்துக்கு எட்டு ஆன்ம குணங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்த சமயங்கள் நம்புகின்றன. சமயத்தையும் சம்பத்தையும்விட இந்த எட்டு குணங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. அடுத்தவன் பொருளில் ஒரு கையும், ஆண்டவன் உலகில் ஒரு காலும் வைத்திருக்க முடியாது என்பதுதான் விஷயம்.
ஒவ்வொரு மனிதனும் பிறரைக் காட்டிலும் வேறுபடுகிறான். ஒவ்வொருவனையும் உருவாக்கிய பௌதிகக் கூறுகளும் பண்பாட்டுப் பயிற்சிகளும் பல்வகைப்படவை என்பதைப் பார்க்கும்போது, மானுட உலகில் எண்ணற்ற வகைகளில் மாறுபடும் ஈடுபாடுகள், இயல்புகள், நடத்தைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதால் அது பிறருக்கும் முக்கியமாக இருக்க வேண்டியதில்லை. இந்த அடிப்படை உண்மையை ஆன்மிக தளத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்து சமயங்கள் எண்ணற்ற தெய்வங்கள், தேவியர்கள், இயற்கை அம்சங்களை வழிபாட்டுக்குரியனவாய் முன்னிறுத்தி, தன் விருப்பத்துக்குரிய வழிபாட்டுப் பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் அளிக்கிறன. சிலர் தங்கள் உடலை பல்வகைப்பட்ட ஆடை அணிகலன்கள் கொண்டு அலங்கரித்துக் கொள்கின்றனர். சிலர், பிறருக்கு அருவெறுப்பாக இருக்கக்கூடியவற்றை வழிபடுகின்றனர். இந்த விஷயத்திலும் இந்து சமயங்கள் நம்மையே தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்கின்றன- வேண்டுமானால் அவர்கள் உருவமற்ற வழிபாட்டைப் பின்பற்றலாம். சிலர் எல்லாருடனும் கலகலப்பாகப் பழகுகின்றனர், சிலர் தனித்து ஒதுங்கி இருக்கின்றனர். எப்போதும் எதையாவது செய்து கொண்டு மக்களோடு மக்களாய் கூடியிருக்க விரும்புபவர்களுக்கு இந்து சமயங்கள் கோயில்கள், தல யாத்திரைகள், சடங்குகள் என்று இன்னும் பல வழிகளைத் திறந்து கொடுக்கிறன. எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற உத்வேகம் இல்லாதவர்கள் அமைதியான, தம் சுபாவத்துக்கு ஏற்ற வழிமுறைகளைப் பின்பற்றி வீடுபேற்றைப் பெறலாம்.
உலகெங்கும் மரபு சார்ந்த சமூகங்களில் நாத்திகர்கள் தீயவர்களாகவும், கேடு செய்பவர்களாகவும், எதிர்மறைச் சிந்தனையாளர்களாகவும் கருதப்படுகின்றனர். ஆனால் இந்திய தத்துவ நெறிமுறைக் கோட்பாடுகளில், தெய்வங்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதோ, தெய்வங்களை நிராகரிப்பதோ, கண்ணுக்குப் புலப்படும் உலகுக்கு அப்பால் எதுவும் இல்லை என்று மறுக்கும் தூய பௌதிகச் சிந்தனையோ, எதுவானாலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்த ஒரு சமூகத்துக்கும் சமநிலை மிக அவசியமாகிறது. சமய அமைப்பில், நாத்திகமே சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்திய தத்துவ நெறிமுறைக் கோட்பாடுகள் நாத்திகத்தை ஏற்றுக் கொள்கின்றன, உண்மையில் சமயத்தின் பெயராலும் தெய்வத்தின் பெயராலும் தொடர்ந்து அநீதிகள் இழைக்கப்படுவதைத் தடுத்து நிற்கும் மனச்சாட்சியாய் நாத்திகம் இயங்குகிறது என்பதை இந்திய தத்துவ நெறிமுறைக் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்கின்றன, அவற்றின் சிந்தனை மரபை அங்கீகரிக்கவும் செய்கின்றன. சார்வாகம் மற்றும் பிற தத்துவச் சம்பிரதாயங்களைப் பற்றி இன்னும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
மானுடர்க்கு மறுபிறவி உண்டு என்பதும், தெய்வங்கள் அவதரிக்கின்றன என்பன இந்து சமயங்களுக்கே உரிய மற்றொரு முக்கியமான, தனித்தன்மை கொண்ட நம்பிக்கைகள். பிற சமயங்கள் போலன்றி, இந்து சமயங்கள் பல நூல்களைப் புனித நூல்களாய் ஏற்றுக் கொள்கின்றன. தொன்மங்கள் துவங்கி மீமெய்யியல் நூல்கள், வட்டாரம் சார்ந்த தொல்கதைகள், நதிகள், நகரங்கள், கோவில்களின் தலபுராணங்கள் என்று இந்து சமயங்களின் புனித நூல்கள் விரிவாக நீள்கின்றன. இந்து சமயங்களுக்கே உரிய மற்றொரு தனித்தன்மை குரு சம்பிரதாயம். குரு என்பவர் ஆச்சாரியர், வழிகாட்டி, ஆசிரியர் என்பதற்கெல்லாம் மேலே- தன்னை அணுகுபவர்கள் உள்ளத்தை சூழ்ந்திருக்கும் இருளைப் போக்க வல்லவர் என்றே அவர் அறியப்படுகிறார். எதையும் கற்றுத் தருவதோ, சீடர்களைச் சேர்த்துக் கொள்வதோ, நிறுவனங்களை உருவாக்குவதோ குருவின் கடமையல்ல- தன்னை அணுகுபவர்கள் அனைவரையும் மேம்படுத்துவதுதான் அவரது பணி.
இவற்றையும் இன்னும் பலவற்றையும் இந்தத் தொடரில் இன்னும் விரிவாக எழுத இருக்கிறேன். ஒரு சிலர் இதை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்றும் நம்புகிறேன். மானுட வரலாற்றில் ஈடு இணையற்ற உயர்வு கொண்ட சிந்தனைகள் பலவற்றை இந்து சமயங்கள் தம்முள் தேக்கி வைத்திருக்கின்றன. மிக உயர்ந்த தத்துவங்களைப் பேசுவதால் கீழினும் கீழானவனாய், எளியேனிலும் எளியவனாய், கடையனுக்கும் கடையனாய் உள்ளவர்களைக் கண்டு கொள்ளக்கூடாது என்றோ அவர்களுக்கு அன்பு செலுத்தக்கூடாது என்றோ இந்து சமயங்கள் சொல்வதில்லை. கண்டிக்கத்தக்க அத்தகைய நம்பிக்கைகள் காலவழு. ஆனால் இங்கு பேசப்படுவதோ, இந்து மதத்தையும் அதைச் சார்ந்த சமயங்களையும் சரியான வகையில் புரிந்து கொள்ள உதவக்கூடிய ஓர் அறிமுகம். அதன் அடிப்படை தத்துவங்களையும் மீமெய்யியல் உண்மைகளையும் சரியானபடி அறிமுகப்படுத்திக் கொள்வது இந்து சமயங்கள் குறித்த பிழைபுரிதல்களையும் அதையொட்டி எழக்கூடிய கீழ்மை உணர்வுகளையும் மிகைப் பெருமிதங்களையும் தவிர்க்க இன்று அவசியமாகிறது.
(அடுத்து- எட்டு ஆன்ம குணங்கள்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.