அரை நூற்றாண்டு கண்ட ‘காதலிக்க நேரமில்லை’

 • திருமணத்துக்கு முன் காதல் தோல்விகளைக் ‘காவிய'(!) மாக்கிய ஸ்ரீதர், தேவசேனாவைக் காதலித்து மணந்த பின் ரசிகர்களுக்கு அளித்த ‘கல்யாண பரிசு’ (ராசி கருதி ஸ்ரீதர் ‘ப்’ பை விட்டு விட்டார்)ம், ரசிகர்களை அழைத்துச் சென்ற ‘தேன்நிலவு’ம் ‘காதலிக்க நேரமில்லை.’
 • 27.2.1964 அன்று காஸினோ, க்ருஷ்ணா, உமா ஆகிய தியேட்டர்களில் அன்றைய மதறாஸில் வெளியான காதலிக்க நேரமில்லை கோடையைக் குளுமையாக்கியது;
 • எந்த எதிர்பார்ப்புகளுக்கும் ஆளாகாத அன்றைய தமிழ்த் திரை மூவேந்தர்கள் இல்லாத, பிரபல காமெடியன்களோ, வில்லன்களோ, கதாநாயகிகளோ நடிக்காத காதலிக்க நேரமில்லை வெள்ளி விழா கொண்டாடியது.
 • மிகுந்த முதல் போட்டுத் தயாரிக்கப் பட்ட பிரும்மாண்டப் படமும் இல்லை. ஆனால் பல ‘முதல்’கள் அப்படத்திற்கு உண்டு. ரவிச் சந்திரன், காஞ்சனாவுக்கு முதல் படம். அவர்கள் நடிப்பதைப் பார்த்தால் அதை நம்ப முடியாது. கதாநாயகி குமாரி சச்சுவை முழுநீள நகைச்சுவை பாத்திரமாக்கியது. ராஜஸ்ரீயின் கதாநாயகி அந்தஸ்து. அதுவரை வில்லன், குணச்சித்திர வேடங்களில் பெரும்பாலும் நடித்து வந்த டி.எஸ். பாலையா என்னும் மேதையின் நகைச்சுவைப் பரிமாணத்தை முழு நீளத்தில் வெளிக்காட்டியது. ஜெமினி கலர் லாப்பில் ப்ராசஸ் செய்யப் பட்ட முதல் வண்ணப்படம். ஜெமினி, விஜயகுமாரி போன்றவர்களுக்கு அண்ணனாக சோக மற்றும் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்த முத்துராமனுக்கு பதவி உயர்வு தந்து ரவிச்சந்திரனின் அப்பாவாக்கி (வேஷம் போடுவதில்தான்) ஜாலியான கதாநாயகனாக ஆக்கியது.

Kadhalikka_Neram_Illai_Maadi_Mela_Maadi_Katti_Ravichandran

 • படத்தில் எடுத்த எடுப்பில் அக்கால அழகான மெரீனாவின் காதலர் பாதையில் ‘என்ன பார்வை’ டூயட்டில் முத்துராமன், காஞ்சனாவோடு காங்கிரஸ் பிரமுகர் ‘ஜோதி வெங்கடசெல்லத்தின்’ காரும் நடித்திருக்கும்.
 • இசையமைத்த எம். எஸ். விஸ்வநாதன் (ராமமூர்த்தி) வீடு கட்டி க்ரஹப்ரவேசம் செய்ய 10 நாட்கள் விடுமுறையில் செல்ல, கண்ணதாசன் அப்படத்திற்குப் பாட்டெழுதும் வேலையைத் தற்காலிகமாக இழந்தார். விஸ்வநாதன் திரும்பி வந்ததும், கண்ணதாசன் “விஸ்வநாதன் வேலை வேண்டும்” என்று பாடி “மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே” என்று அவரைக் கிண்டல் செய்திருக்கிறார். உடனே முடிவு செய்யப்பட்டு அந்த வரிகளே அப்படத்தின் பாடலாகின. அதற்காக பாலையா பாத்திரத்தின் பெயரையே விஸ்வநாதன் என்று மாற்றியிருக்கிறார்கள்.
 • கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு “நாளாம் நாளாம் திருநாளாம்’ பாடலை ஸ்ருதி சுத்தமாக ட்யூன் செய்யப்பட்ட ‘மெலடி’ என்று தரப்படுத்தியுள்ளார்.
 • மற்ற பாடல்களிலிருந்து வித்தியாசமான சீர்காழியின் ‘காதலிக்க நேரமில்லை” ‘யதுகுல காம்போதி’யில் அமைந்த ‘குத்து’ப் பாட்டு.
 • ’அனுபவம் புதுமை’ பாடலின் இறுதியில் ஒரு தலையணையைக் காண்பிப்பார்கள். அதில் இதழ்களின் லிப்ஸ்டிக் முத்திரை இருக்கும். ரொம்ப அத்து மீறிய காட்சி என்று கருதப்பட்டது. பின்னர் வந்த படங்களின் காட்சிகளோடு பார்க்கையில் அது ஜுஜுபீ. ஆனால் ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் தணிக்கைக் குழுவினரால் அப்பாடல் தடை செய்யப் பட்டிருந்தது. இந்தப் பாடல் “பேஸாமே மூச்சொ” என்கிற ஆங்கில ஹிட் டின் தழுவல்.
 • தங்கப்பன் மாஸ்டரின் நடன அசைவுகள், குறிப்பாக ‘நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா’ மற்றும் ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாடல்களில், அக்காலத்தில் முற்றிலும் புதுப்பாணியில் அமைந்து படத்தை நவீனமாக்கியதில் பெரும் பங்கு வகித்தன.
 • ரங்க சாமி ஒலிப்பதிவு, வின்சென்ட் தலைமையில் ஒளிப்பதிவு, கலை கங்கா.
 • கதைக் களம் பரம்பிக் குளம் அளியார் திட்டம் – பொதுப்பணித் துறை தங்கும் விடுதி.

Nagesh_Balaiah_Kathalikka_Neramillai_Tamil_Movies_Sridhar_comedy

 • படம் தூய நகைச்சுவையை அடிப்படையாகவும், வெளிப்பாடாகவும் கொண்டது. இரட்டை அர்த்த வசனங்கள், அங்க அசைவுகள், ஆபாசம் மற்றும் அசிங்க, வக்கிர த்வனிகள் கூட முற்றிலும் இல்லாத நகைச்சுவைப் படம்.
 • இந்தப் படத்தைப் பார்க்கையில் ஹிந்தியில் ஷம்மி கபூர் நடித்த ‘ப்ரொஃபெஸ்ஸர்’ நினைவுக்கு வரும். அதில் ஷம்மி கபூரே கிழவன் வேடம் போட்டவராகவும்,இளஞராகவும் வருவார். ‘குலி பலக்குசே ஜூட்டா குஸ்தா பந்து பலக்கு ஹை ப்யார்’ பாடல் ‘பொன்னான கைகளை’ நினைவு படுத்தும். கதாநாயகி கல்பனாவின் சிகை, உடையலங்காரங்கள் காஞ்சனா, ராஜஸ்ரீயிடமும் தென்படும்.
 • வாசு-அசோக் (முத்துராமன்-ரவிச்சந்திரன்) விசு-சச்சி (பாலையா- வி.எஸ்.ராகவன்) இரு தலைமுறைகளின் இயல்பான நட்பின் பிரதிநிதிகள்.
 • சச்சுவுடைய அப்பாவாக நடித்த பிரபாகர், ரவிச்சந்திரனுடைய அப்பாவாக நடித்த வீராசாமி என்று சின்ன ரோல்களில் வந்தவர்களெல்லாம் வெகு இயல்பாக நடித்திருப்பார்கள்.
 • முதல் நாள் முதல் ஷோ படம் பர்த்த திரு. ஜே. ஸ்ரீநிவாசன் என்னும் நண்பர் சொல்கிறார். “இஞ்சினீரிங் காலெஜ் கட் அடித்துவிட்டுப் பார்த்தோம். இவ்வளவு அட்டகாசமாக இருக்கும் என்று எதிரே பார்க்கவில்லை. பரவசமாகிவிட்டது. தியேடருக்குள்ளே ஒரே டான்ஸ்தான். தியேட்டர் வெளியே ஆடியன்ஸ் ரிஆக்ஷன் தெரிந்துகொள்ளக் காத்திருந்த ஸ்ரீதர், கோபு, ராஜேந்திரன் ஆகியோர் ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். படத்தில் வந்த கார், ஜீப் பையெல்லாம் தியேட்டர் வாசலில் வைத்து இருந்தார்கள். ஒரு மாசத்துக்குள் மூன்று தடவைப் பார்த்து விட்டேன்.”
 • படத்தின் ஹை-லைட்டாக அமைந்த நாகேஷ் பாலையாவிற்குக் கதை சொல்லும் காட்சி போல் அதற்கு முன்போ, பின்போ வந்ததில்லை. திரு கோபு, ஒரு பேட்டியில் அக்காட்சிக்கு இன்ஸ்பைரேஷன் ‘புதிய பறவை’ படத்ததை இயக்கிய திரு. தாதா மிராசி என்று சொல்லியிருந்தார். சிவாஜி ஃபிலிம்ஸ் அழைப்பின் பேரில் புதிய பறவை கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட கோபு, அங்கு தாதா மிராசி படத்தின் முதல் காட்சியை ரீ-ரிகாட்டிங் இசையுடன் சேர்த்துச் சொன்னதைக் கேட்டு ரசித்திருக்கிறார். பின் இந்த விபரத்தை நாகேஷிடம் பகிர்ந்துகொள்ள நாகேஷ் காதலிக்க நேரமில்லையில் இந்தக் காட்சியை வேறு உயரத்துக்குக் கொண்டு போய் விட்டார். பாலையாவும் வெறும் ரிஆக்ஷனாலேயே காட்சியை எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.
 • தன்னால் மறக்க முடியாத இரண்டு பாத்திரங்களில் ஒன்றான செல்லப்பா பாத்திரம் (இன்னொன்று திருவிளையாடல் ‘தருமி’) பற்றி கமலஹாசனிடம் நாகேஷ் ஒருமுறை சொன்னாராம்: “செல்லப்பா பாத்திரத்தை திரையில் இவ்வளவு சிறப்பாகச் சித்தரித்தற்குக் காரணம் சடகோபன்தான் (கோபு) அவர் சொன்ன மாதிரியேதான் ‘செல்லப்பா’ ‘மீனா’ என்கிற பெயரையெல்லாம் உச்சரித்து நடித்தேன்”

Muthuraman_Kanchana_Kaathalikka_Neramillai_Films_Tamil_Cinema_Movies_Srithar_Nagesh_Chachu

 • இன்னொரு வெற்றிகரமான நகைச்சுவை கதை, வசனகர்த்தவான க்ரேஸி மோகன் “இந்த சிரிப்புப் படத்தில் ஒரே ஒரு சோகமும் உண்டு; ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் செல்லப்பா (நாகேஷ்) ஒரு காட்சியைக் கூட ஷூட் பண்ணியிருக்க மாட்டார்.”என்று சொல்லியிருந்தார். இதை சச்சுவின் தகப்பனாரும் படத்தில் கேட்பார். “எம் மகளை ஒரு ஃபோட்டோவாவது எடுத்தியாய்யா?” என்று.
 • ஒருவிதத்தில் செல்லப்பாவும் அவர் தந்தை விஸ்வநாதனும் ஓஹோ ப்ரொடக்ஷன்ஸுக்காக எடுத்த படம்தானே காதலிக்க நேரமில்லை?

0 Replies to “அரை நூற்றாண்டு கண்ட ‘காதலிக்க நேரமில்லை’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.