மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்
நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை
உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன
திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது
தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி
வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்
அடையாளம் தந்திருக்கும் மரத்தை
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை
சமையலறை ஜன்னல் காற்று
உன்னிடம் சேர்க்கிறது
மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் – பிறகும்
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

