முகப்பு » ஆளுமை, இலக்கியம்

நா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும் ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை வந்த மாலையே எடுத்துச் சென்று, படித்துத் திரும்ப மறு நாள் மாலை கொடுக்கச் செல்லும் ராய் புக் செண்டர் வரை செல்லும் ரோடு அது. வழியில் ஒரு இடத்தில் இடது பக்கம் திரும்பினால் நாயர் மெஸ் வலது பக்கம் திரும்பினால் வைத்தியநாத அய்யர் மெஸ். இவையெல்லாம் இன்று மறைந்து விட்ட புராதன சரித்திரச் சின்னங்கள். அந்த ரோடில் 1962-ல் ஒரு நாள் மாலை ஒரு பஞ்சாபி கடையில் வாங்கியது தான் ரசிகன் கதைகள் – நா ரகுநாதன் என் நினைவில் இது தான் முதல் அறிமுகம். பின்னர் சில வருடங்கள் கழிந்து ரசிகன் நாடகங்கள் – நா ரகுநாதன். 1965-ல் வெளிவந்தது. அது பின்னர் எழுத்து பத்திரிகையிலும், தினமணி, சுதேசமித்திரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் மெயில், ஹிந்து, ஸ்வராஜ்யா போன்ற பத்திரிகைகளிலும் மதிப்புரைகளில் கண்டு கொள்ளப் பட்டுள்ளன என்று ரசிகன் நாடகங்கள் புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ புத்தகங்கள் மதிப்புரை பெறுகின்றன, அவை மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால் ரசிகன் என்னும் சிறுகதைக்காரர், பேசப் படவே இல்லை. அதற்கான காரணங்களை இது பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவராயும் என்னுடன் சினேகபாவத்துடனும் ஒரு கால கட்டத்தில் இருந்த வல்லிக்கண்ணனிடம் கேட்டேன். ”ஆமாம் அப்படித் தான் ஆயிற்று. ஆனால் நான் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. க.நா.சு. விடம் பல விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் அவர் சொன்ன விஷயங்கள் ஒரு சில இப்போது நினைவுக்கு வருகின்றன. ஒன்று ”அவர் தொடர்ந்து எழுதியவர் இல்லை. அவர் எழுதிய பத்திரிகை அவ்வளவாக வெளித்தெரிந்த ஒன்று அல்ல. எதுவும் தொகுப்பாக வெளி வந்தால் தான் ஒரு மதிப்பீடு எந்த எழுத்து பற்றியும் சாத்தியம்” என்றும் சொன்னார். ”அதற்காகத் தான் மௌனியின் கதைகளை முதலில் கிடைத்ததை யெல்லாம் தொகுத்து வெளியிட்ட பின் தான் மௌனி பற்றி பேசவே தொடங்கினார்கள். அது தெரிந்தது தானே”. என்றார். ரசிகன் தொடர்ந்து எழுதியிருந்தால் நிலமை மாறியிருக்கலாம். ஆனால் அவர் எங்கோ யார்கண்ணிலும் படாத பத்திரிகையில் கொஞ்ச காலம் எழுதி பின்னர் விட்டு விட்டார். ஆனால் அவர் நிகழ் கால எழுத்துக்களையெல்லாம் படித்து வந்தவர். எழுத்து மாத்திரம் இல்லை. அவரை நாடகங்களிலும் பார்த்திருக்கிறேன். ஒர் முறை சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் ஜானகிராமனை நாடகம் எழுதச் சொல்லி நாடகம் போட்டார். அதில் ஒன்றில் ரகுநாதனும் வந்திருந்தார். அவருக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “இவன் நன்னா எழுதீண்டு இருந்தானில்லையோ?” என்று கேட்டாராம். அவ்வளவு தான். அதுவே ஜானகிராமனின் இரண்டு முகங்களையும் பற்றிய அவரது கருத்தைச் சொல்லிவிட்டது. எழுத்து பத்திரிகையின் இரண்டாம் வருஷ இதழ் ஒன்றில் நா. ரகுநாதன், மைசூர் அரசர் ஜெய சாமராஜ வாடையார் இருவரின் ஏதோ பிரசங்கங்கள் இரண்டை மொழிபெயர்த்துப் போட்டிருந்தது. இரண்டுமே இலக்கியம் பற்றிய பொதுவான ஆழமும் தத்துவார்த்தப் பார்வையும் கொண்ட பேச்சுக்கள். அனேகமாக ஏதோ எழுத்தாளர் கூட்டத்தில் பேசியவை என்று நினைவு.

அது வாஸ்தவம் தான். கே.சி வெங்கட ரமணியும் நா.ரகுநாதனும் காலேஜில் படித்த காலத்திலிருந்து அன்னியோன்ய நண்பர்கள். 1938-ல் கே.சி. வெங்கடரமணி பாரத தேவி பத்திரிகை தொடங்கியதும் அதில் ரகுநாதன் கட்டுரைகள் எழுதி வந்தவர் நண்பரின் வற்புறுத்தலுக்கு இணங்க சில கதைகளும் எழுதினார். காலேஜ் பத்திரிகையில் ஆங்கிலத்தில் கதைகள் எழுதி வந்தது தெரிந்து வந்த வற்புறுத்தல் அது. ஆங்கிலத்தில் எழுத்தாளராகும் கனவுகள் சிலகாலம் இருந்து மறைந்தது. அது போலத் தான் தமிழில் கதைகள் எழுதியதும். சில கதைகள் எழுதியதோடு அதை மறந்தாயிற்று. 1941 வரை எழுதியவை அவை. பின்னர் அவையெல்லாம் தொகுத்து ரசிகன் கதைகள் என்று தொகுக்கப்பட்டு வெளியானது, ரகுநாதனே தொடங்கிய விக்னேஸ்வரா பதிப்பகம் வெளியிட்டது. ரகுநாதன் ஹிந்துவிலிருந்து ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆன பிறகு. முதலில் பதிப்பகம் தொடங்கியது பாகவதம் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட. பின் மற்றவையும். ஆக, தன்னை ஆங்கிலத்திலோ, தமிழிலோ அவ்வப்போது குறுகிய காலத்துக்கு எழுத நேர்ந்தாலும் தன்னிச்சையாகவோ, சினேகித நிர்ப்பந்தத்தாலோ, எழுத்தாளராக ஸ்தாபித்துக்கொள்ளும் எண்ணம் இருந்ததில்லை. ஏன் இப்படி என்று கேட்டால், ரிம்போ (rimbaud)-க்கு என்ன ஆச்சு என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? என்ற கேள்வி அவரிடமிருந்து வரும். மனித மனத்தில் ஆழ்ந்த ரகசியங்கள் யாரும் சுலபமாக புரிந்து கொள்ள முடியுமா என்ன?

எழுத்தின் மீது அவரது பிடிப்பு எத்தகையதாக இருப்பினும் அவர் எழுத்து தொடங்கிய உடனேயே ஒரு தேர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஏதோ நண்பர் கேட்டதற்காக எழுத முயற்சித்த தான குணம் அதில் இல்லை. அவர் எழுதும் காலத்திய, முப்பது நாற்பதுகளின் காலத்திய தமிழ் கிராமம், சென்னையின் சூழலை மிக நேர்த்தியாக வெகு லாவகமாக அவரால் நம் முன் கொணர்ந்து விட முடிகிறது. கிராமத்து வாழ்க்கை, நம்பிக்கைகள், தர்மங்கள், அதர்மங்கள், எல்லாம் நம் முன் வந்து காட்சி தரத் தொடங்கிவிடுகின்றன. அக்காலத்திய சென்னையின். திருவல்லிக்கேணியின் சித்திரம் நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஒரு வேளை இன்றும் அதன் சில சந்துகள் அப்படித்தானோ என்னவோ. அந்த முப்பதுக்கள் கால மனிதர்கள் எந்த குணத்தவராக இருந்தாலும் சுவாரஸ்யமான மனிதர்கள். இன்று அதே குணங்கள் வேறு ரூபத்தில் காட்சி தரும்.

அந்த ஓய்வுக்குப் பின்னான வருடங்களில் தான் காஸா சுப்பா ராவ் ஆசிரியத்வத்தில் ஸ்வராஜ்யா என்ற ஒரு வாரப்பத்திரிகை தில்லியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அது ராஜாஜிக்கு ஒரு மேடையாக இருந்தது. ராஜாஜியும், sotto voce என்ற தலைப்பில் விக்னேஸ்வரர் வரைசித்திரத்தோடு விக்னேஸ்வரா வும் அதில் எழுதி வந்தார்கள். விக்னேஸ்வரா என்பது ஹிந்து பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நா.ரகுநாதன் என்று சொன்னார்கள். அப்போது தான் ரசிகனும் எனக்கு அறிமுகமானார். ஸ்வராஜ்யா என்னும் அரசியல் பத்திரிகை என் கண்ணில் படக்காரணம் அதில் என் நண்பர் வட்டத்திலிருந்த கரோல்பாக் வாசி, மத்திய அரசு ஊழியர் கே.என். ஸ்ரீவத்சன் என்ற பெயரில் அரசுக் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களை எழுதி வந்தார். ராஜாஜி தில்லி வந்திருந்த போது அவரைப் பார்க்கப் போன ஸ்ரீனிவாசனை சாதாரணமாக விசாரித்திருக்கிறார் ராஜாஜி, “என் பெயர் ஸ்ரீவத்சன்னு இருக்கமுடியாது”ன்னு ராஜாஜி கண்டு பிடிச்சுட்டார் என்றார் வியப்புடனும் சந்தோஷத்துடனும். ஸ்ரீனிவாசனின் ஊரோ, இல்லை கோத்திரமோ இல்லை, வேறு ஏதோ ஒன்று ஸ்ரீவத்சன் என்ற பெயரோடு ஒட்டவில்லையே அப்படியெல்லாம் பேர் வச்சுக்க மாட்டாளே!” என்று ராஜாஜி கேட்டாராம்.

எனக்கு அவர் தான் எழுதிய கட்டுரைகளைப் படிக்கத் தரும்போது ராஜாஜி எழுதியதையும் விக்னேஸ்வராவின் sotto voce கட்டுரைகளையும் நான் படிப்பேன். சும்மா கிடைப்பதை விடுவானேன். அனேகமாக எல்லாம் நேருவின் தேசீய மயமாக்கலையும் socialistic pattern of society யையும் கடுமையாக விமர்சிப்பதாக இருக்கும். இடையிடையே விக்னேஸ்வராவின் கட்டுரைகள், சங்கீதம், நாடகம், தத்துவம் பற்றியும் அரசியல் வேலியைத் தாண்டி கொஞ்சம் உலா வரும். அவை எனக்கு மிகவும் பிடித்துப் போயின. நா.ரகுநாதன் வகித்த ஹிந்துவின் ஆசிரியத்வ நாட்களில் பத்திரிகைக்குத் தலையங்கம் எழுதியது ரகுநாதன் தான். அவற்றில் அரசியல் தவிர்த்த தலையங்கங்கள் மிகவும் பிரமாதமானவை என்றும் ஆனந்த குமாரஸ்வாமி இறந்த போது ஹிந்துவில் அவர் எழுதிய தலையங்கத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைக்கவில்லை” என்று சச்சிதானந்தம் சொன்னார். இது எழுபதுகளில் சச்சிதானந்தம் ஆனந்த குமாரஸ்வாமியின் எழுத்துக்களை யெல்லாம் சேகரித்து வந்து கொண்டிருந்த போது. எழுதியது ரகுநாதன் தான் என்றாலும் தலையங்கமாக பெயரற்று எழுதியதை இப்போது பெயரோடு பிரசுரித்துக் கொள்ள முடியாது போலும்.

எழுபதுகளின் கடைசியில் தான் யாத்ரா பத்திரிகை நடந்து கொண்டிருந்த போது ஹிந்துவில் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் பாகவதம் பற்றிய மதிப்புரை வெளிவந்திருந்தது. அத்துடன் விக்னேஸ்வராவின் Sotto Voce தொகுப்பும் மூன்று வால்யூம்களாக. எல்லாமே விக்னேஸ்வரா பதிப்பகம் பங்களூர் என்ற முகவரியிலிருந்து. முன்னர் வெளியான ரகுநாதன் கதைகள், ரகுநாதன் நாடகங்கள் போல இவையும் அவரது சொந்த பதிப்பக வெளியீடுகளாகத் தான் பிரசுரமாகியிருந்தன ஹிந்து பத்திரிகை ஆசிரியத்வத்திலிருந்து ஓய்வு பெற்று இருபத்தைந்து முப்பது வருடங்களாகியிருந்தன. எவ்வளவு தலைமுறைக் காலமாக அவர் ஹிந்து பத்திரிகையின் ஆசிரியராக இருந்தாரோ சரியாகத் தெரியாது. தென்னகம் முழுதும் பத்திரிகை உலகில் தெரிந்த பெயர் அவரது. இருப்பினும் அவர் புத்தகங்களை அவரே தான் வெளியிட வேண்டி வந்திருக்கிறது.

அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

எனக்கு அவரது பாகவதம் மொழிபெயர்ப்பும் Sotto Voce தொகுப்பு மூன்றும்.தேவை என்றும் சலுகை விலையில் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்றும் எழுதினேன். மேலும், அவரது எழுத்துக்களுடன், குறிப்பாக அவ்வப்போது விக்னேஸ்வராக அவர் இலக்கியம், சங்கீதம், தத்துவம் பற்றி எழுதியனவும் ரசிகன் கதைகள் நாடகங்களை நான் அறுபதுக்களிலேயே படித்திருப்பதாகவும், அவரது ஒன்றியைந்த பலதுறை ஈடுபாடும் என்னை ஈர்த்துள்ளதாகவும் எழுதி யாத்ராவில் நாங்கள் முயன்று வருவதும் அப்பார்வையிலேயே தான் என்றும் ஆனால் அதை தமிழில் ஏற்றுக்கொள்ளச் செய்வது கஷ்டமான காரியமாக விருப்பதாகவும் அதை நம் பாரம்பரியத் திலிருந்தே பெற்ற கொடையாக அவரது எழுத்துக்களில் காணக் கிடைப்பது சந்தோஷமாக இருப்பதாகவும், இப்படித்தான் ஏதோ எழுதியிருந்தேன். அத்தோடு யாத்ரா இதழ்களும் அன்று வரை வெளியாகியிருந்த என் புத்தகங்களையும் வெளியீட்டார்கள் அவருக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

நான் என் ஆர்வ மிகுதியில் எழுதியது பெரிதல்ல. ஆனால் அந்த சமயத்தில் 88 வயதின் மூப்பில், தன் கையாலேயே ராமாயணம் முழுதையும் மொழி பெயர்த்து அதை அச்சுக்குக் கொடுத்து ப்ரூஃப் பார்த்து வரும் நிலையில் எனக்கு (யாரோ ஒரு சாமிநாதனுக்கு) தன் கையால் இவ்வளவு நீண்ட பதில் எழுதி அதை டைப் செய்யக் கொடுத்து, டைப் செய்த உதவியாளர அவர் கையெழுத்து புரியாது இடம் விட்டு அதை ரகுநாதன் நிரப்பி, திருத்த வேண்டியவற்றைத் திருத்தி சென்னையில் உள்ளவர்களுக்கு புத்தகங்களை (பழைய பதிப்புகளை எனக்கு அனுப்பச் சொல்லி- அதுவும் நான் கேட்ட சலுகை விலையில்…!) இவ்வளவு காரியங்களை சிரமமெடுத்து ரகுநாதன் செய்தது போல, அன்றைய அவரது வயதை விட இன்று பத்து வயது குறைந்த நான் செய்வேனா தெரியாது. செய்ய முடியாது என்று தான் நினைக்கிறேன். அவர் எப்பவோ கதைகளும் நாடகங்களும் எழுத ஆரம்பித்து பின்னர் விட்டு விட்டதும், அவர் பற்றி அவரது எழுத்தின் சிறப்பு பற்றி யாரும் பேசாததும், அவரும் அதில் அக்கறை காட்டாது போனதுமான காரணங்கள் எனக்குப் புரியவில்லை என்றும் நான் கேட்டிருந்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்ள வில்லை என்பது ஒரு பெரிய விஷயம். அல்லது அவர் அதைக் காட்டிக் கொள்ளாது இருந்த பெருந்தன்மையோ தெரிய வில்லை. அவரது எழுத்துக்களில் என்னால் முடிந்தவற்றை நான் யாத்ராவில் மொழிபெயர்த்து பிரசுரித்துக்கொள்ளலாமா, அவரது பிரசுரமாகாத கதைகள், கட்டுரைகள் நாடகங்கள் இருப்பின் அவற்றை அனுப்பி வைத்தால் யாத்ராவில் பிரசுரித்துக்கொள்வேன் என்றும் எழுதியிருந்தேன்.

நான் பிரஸ்தாபித்திருந்த ஒவ்வொன்றுக்கும், எதையும் தவறவிடாமல் வெகு சிரத்தையோடு பதில் தந்திருந்தது இன்றும் அவர் கடிதங்கள் இரண்டையும் படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது. சாதாரணமாக யாருக்கும் இது ஆச்சரியம் தரும். அதிலும் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மத்திய அரசுப் பணியில் வாழ்வைக் கழித்தவனுக்கு யாரும் அக்கறை எடுத்து ஒரு கடிதத்துக்கு பதில் தருவது, அதிலும் பரிச்சயமில்லாத, பிரதி பலனில்லாத ஒரு அன்னியனின் விசாரணக்கு 88 வயது முதியவர் இத்தனை சிரத்தை எடுத்துக்கொள்வது ஆச்சரியம் தரும் தான்.

மூன்று வருடங்களாக ஜெயலலிதா எழுதும் எந்த ஒரு கடிதத்திற்கும் நூற்றுக் கணக்கானவர் உள்ள ஒரு பெரிய அலுவலகமே உதவி செய்ய இருக்க, மன் மோகன் சிங்கிடமிருந்து ஒரு கடிதத்திற்குக்கூட பதில் இதுகாறும் வரவில்லை என்பது நாம் அறிந்தது.

அவர் எழுதியதும் எனக்கு இன்னம் சிலவிஷயங்கள் பற்றி இவ்வளவு கால அறிவும் அனுபவமும் கொண்ட ஒருவரிடம் கேட்க தோன்றியது. அதிலும் யக்ஷகான நாடகங்கள் என்று தஞ்சாவூர் நூலகம் சிலநூற்றாண்டுகள் முந்தைய இசை நாடகத் தொகுப்புக்கள் இரண்டை வெளியிட்டிருந்தது. அவை ஆந்திர தேசத்திலிருந்து பெறப்பட்டவை. அது தமிழ்நாட்டில் தெலுங்கு மேலாண்மை கொண்டிருந்த காலம். பாகவத மேளா நாடகங்கள் இசை நாடகங்கள். ஆனால் அவை யக்ஷகானம் என்று குறிப்பிடப்படுவதில்லை. கர்நாடகத்தில் மாத்திரமே யக்ஷகான மரபு இருந்து வருகிறது. அவை நம் தெருக்கூத்து போன்ற நாட்டுப் புற நாடக வடிவம் கொண்ட ஒரு மாதிரியான கலவை.

இது எப்படி நிகழ்ந்துள்ளது என்று ஒரு கேள்வி. சமஸ்கிருதக் கல்வி ஏன் பிராமணர்களோடு மாத்திரம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில் மொழியிலாளர், அக்கால தமிழ்ப் பண்டிதர்கள் (மறைமலை அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்றோர்) சமஸ்கிருத வல்லுனர்களாக இருந்திருக்கிறார்களே. என்று ஒரு கேள்வி. இசை வேளாளர்கள் உருவானது பற்றி ஒன்று. இப்படி ஒரு சில கேள்விகள் அவர் அனுபவமும் ஞானமும் தெரிந்திருக்கக் கூடியவை என்று நான் நினைத்துக் கேட்டவற்றிற்கு பதில் தந்தது இப்போது படிக்கும் போது அவர் பொறுமையும் சிரத்தையும் கண்டு நான் மனம் நெகிழ்ந்தாலும் அன்று அவரது சிரமமும் மூப்பும் பற்றிக் கவலையே இல்லாது இப்படிக் கேட்டுவிட்டேனே என்று வேதனையாகத் தான் இருக்கிறது. இந்த வேதனை முப்பது வருடங்கள் கழித்து அதைப் படிக்கும் போது நானும் அவரது அன்றைய முதுமையைத் தொட்டுக்கொண்டிருக்கும் போது படும் வேதனை தான். இதற்கு அர்த்தமில்லை. கடைசியாக அவர் எழுதும் வரிகள் சில.

முதல் கடிதத்தில்

(1) Your general observations on the artist are so acute and pertinent that I would like to comment on them But I am so tired these days, so it must wait for a later day.,

2) I would like to read your published works. If you send me copies, I must pay for them.

*முழு கடிதத்தைப் படிக்க, கீழுள்ள படங்களின் மீது க்ளிக் செய்யவும். அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்ல ‘->’ Arrow button-களைப் பயன்படுத்தவும்.

/wp-content/uploads/2013/05/120981letter_1_page_1.jpg

கடிதம் 1
/wp-content/uploads/2013/05/120981letter_1_page_1.jpg

கடிதம் 2

பின் குறிப்புகள்:

இதன் பின் வருடங்கள் ஒன்றில் ரகுநாதனின் மருமகன்களில் ஒருவர் தில்லி வந்திருந்த போது அவர் ரகுநாதனின் ராமாயண மொழிபெயர்ப்புகள் மூன்று பாகங்களையும் கொணர்ந்திருந்தார். எனக்கும் Dr செ.ரவீந்திரனுக்குமாக.

மெலட்டூர் பாகவத மேளா பற்றி ஒரு தனி இதழாக யாத்ரா வெளிவந்த போது அதில் விக்னேஸ்வராவாக, என்.கே.ரகுநாதன் எழுதிய மெலட்டூர் பாகவத மேளாவை அவர் 1954-ல் பார்த்த அனுபவத்தை எழுதியிருந்த கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

ரகுநாதன் மறைந்த போது (எண்பதுகளின் ஆரம்ப வருடங்கள் ஒன்றில் தான்) யாத்ரா அவரைப் பற்றி தலையங்கம் வெளியிட்டது.

(1) இவை அத்தனையும் நினைவிலிருந்து எழுதியது. சரி பார்க்க எதுவும் கைக்கெட்டும் இடத்தில் வசதியில் இல்லை.

(2) ரகுநாதன் சங்கப் பாடல்கள் சிலவற்றை நெடுநல் வாடை போன்ற நீண்ட பாடல்களை Six long poems of Tamil என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பின் எப்போதாவது அவை கைக்குக் கிடைக்குமானால் அதிலிருந்தும், அவர் கதைகளிலிருந்தும் சங்கீதம் நாடகம் பற்றிய கட்டுரைகளிலிருந்தும் சில வற்றை மாதிரிக்குத் தரலாம் என்று என் எண்ணம். பார்ப்போம்.

4 Comments »

 • Anonymous said:

  Dear Sir,

  Rasikan Kathaigal was republished by Vasanthakumar,Tamilini, Chennai.

  regards

  # 2 June 2013 at 9:27 pm
 • Venkat Swaminathan said:

  இந்த விவரம் கொடுத்ததற்கு நன்றி. ஆனால் அந்த விவரத்தை முழுமையாகக் கொடுக்கக் கூடாதா? புத்தகத்தின் தலைப்பு, பிரசுரத்தின் முழு முகவரி, விலை, இப்போது புத்தகம் கிடைக்குமா என்பது போன்ற விவரங்களையும் கொடுத்தால் தெரியாதவர்களுக்கு உபயோகமாகும். வெளியிட்டவர்களுக்கும் உதவியதாகும். ரசிகன் கதைகளைப் படிக்க விரும்புகிறவரகளுக்கும் உதவியதாகும்.

  அடுத்து இந்த விவரம் கொடுப்பது கூட தன் பெயரை மறைக்கவேண்டிய அவசியம் என்னவோ. நமக்கு ஒன்றுமில்லாததற்குக் கூட பயங்கள், கணக்குகள், ஏன் இபபடி இருக்கிறோம்?

  # 3 June 2013 at 3:47 am
 • Geetha said:

  A wonderful specimen of meaningful letter writing that existed in those days. The pains they took to keep in touch, the meticulousness and the detail. Thanks for sharing it with us sir!

  # 3 June 2013 at 8:20 am
 • ushadeepan said:

  ரசிகன் கதைகள் என்ற தலைப்பில் ரா.ரகுநாதன் அவர்களின் சிறுகதைகளின் தொகுப்பு யுனைடெட் ரைட்டர்ஸ்,63, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14 பதிப்பகத்தால் 2006 முதல் பதிப்பு என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ.240. இப்புத்தகத்தில் கால வரிசையில் அவரது சிறுகதைகளும், நாடகங்களும் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு, தொகுக்கப்பட்டுள்ளன. தொலைபேசி எண் இல்லை சொல்வதற்கு. – அன்பன், உஷாதீபன் (இத்தொகுப்பைத்தான் மேற்குறிப்பிட்ட அன்பர் (பெயர் சொல்லாதவர்) தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். காரணம் இப்புத்தகத்தின் அச்சும் அசலும் அப்படியே தமிழினி பதிப்பகம் வெளியிட்டதுபோலவே இருக்கும்)

  # 10 June 2013 at 11:45 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.