லா.ச.ரா – காலத்தின் மொழி

lasara

அது 1993ஆம் ஆண்டின் அனல் கொதிக்கும் கோடையில் ஒரு நாள்… கல்லூரி ஆண்டு விடுமுறைக்கு பம்பாய் செல்லும் பரவசத்தில் சென்னை சென்ட்ரலின் புழுக்கத்தை புறக்கணித்து ரயிலில் அமர்ந்திருந்தேன் நான். அவசரமாக ஏறியவர்கள் ஆசுவாசம் கொள்ள, “புறப்பாடு” பேச்சுகள் அடங்கி, மின்விசிறியின் சத்தம் மிகுதியாக கேட்க, செல்போன்களினால் சேதாரம் அடையாத‌ அன்றைய சமூகத்தின் “மனிதம்”, பக்கத்து முகத்தைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டு, அளவளாவும் அளவுக்கேனும் உயிர்ப்புடன் இருந்தது. சற்று நேரத்தில், காலகாலமாக பார்த்தாலும் அலுக்காத அசைவுடன் நகரத்துவங்கியது ரயில்.

நடுத்தர வயதை கடந்தவர் என்று அனுமானிக்கக் கூடிய நிதானங்களுடன் பக்கத்து இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். நீர் கொதிக்கும் கலத்தின் வாயில் முகத்தை காட்டினால் அடிக்கும் ஆவி போல, வெளியே வீசிய அனல் காற்று வண்டிக்குள் வந்து முகத்தில்அறைந்து கொண்டிருந்தது.

ரயிலடியில் வாங்கிய “ஜனரஞ்சக” பத்திரிகைகளில் ஒன்றை புரட்டத் துவங்கினேன் நான். பக்கத்து இருக்கையில் இருந்தவர் “நியூஸ் பேப்பர்” அட்டை போட்ட புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருந்தார். நேரத்தை விழுங்கி, ஊர்களின் பெயர்களை உமிழும் விதவிதமான ரயில் நிலையங்களைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது வண்டி. புத்தகக் காதலர்களை அவர்கள் புத்தகங்களை கையாளும் பதத்தை வைத்தே அறிந்து கொள்ளலாம் இல்லையா? அப்படித்தான், புத்தகக் காதலர் என்று நினைக்கும் வண்ணம் பக்கக்குறி ஒன்றை படித்துக் கொண்டிருக்கும் பக்கத்தில் நுழைத்து, கையிலிருந்த புத்தகத்தை கவனமாக இருக்கையில் வைத்து விட்டு எழுந்து போனார் என்னருகில் இருந்தவர்.

அட்டைக்குள் இருக்கும் புத்தகம் என்ன என்றறிய ஆர்வம் இருப்பினும், அனுமதியின்றி அடுத்தவரின் புத்தகத்தை புரட்டுவது நாகரீகமா என்ற சிந்தனையில் புத்தகத்தை பார்த்தபடி இருந்தேன் நான். எனது எண்ணம் காற்றுக்குப் புரிந்ததோ என்னவோ, பக்கங்களை ஆங்காங்கே புரட்டி, “பார்” என்று எனக்குக் காட்டியபடி இருந்தது காற்று.

காற்று தன் மீது கவிழ்வதை அரைகுறை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டது போல் காகிதங்கள் முன்னும் பின்னும் மடிந்து புரண்டு அசைந்தன. அந்த அசைவுகளின் ஊடே கண்ணில் பட்ட வரிகள் பின்னாளில் என்னை எத்தனையோ அனுபவத்தேர்களில் ஏற்றி ரசனையின் ஊர்வலம் கூட்டிச் செல்லப் போகின்றன என்று அறிந்திருக்கவில்லை நான். கண்ணில் பட்ட சில வரிகள் கவனத்தை ஈர்த்து ஏதோ ஒரு நெகிழ்வை ஆர்த்தன. “நிமிஷங்களின் சிமிழிலிருந்து மையை எடுத்து இட்டுக் கொண்டு வருஷங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…”, “கடலின் அலை மதில் போல் எழுந்து மனிதனின் ஆசைக் கோட்டை போல் இடிந்து விழுந்தன” போன்றவை, அர்த்தம் முழுதாய் புரியாத போதிலும், நெல்லிக்காயின் துண்டை கடித்தபின் நாக்கிலேறும் விறுவிறுப்பு போல ஒரு பரவசத்தை கொடுத்தன. அதே நாளில் சில மணி நேரங்கள் கழித்து, அவர் மற்றொரு முறை எழுந்து போகையில், காற்று, அந்த புத்தகத்தின் முதல் பக்கத்துக்கு என்னை கூட்டிச் சென்றது. அதில் தான் “லா.ச.ரா” என்னும் பெயரை நான் முதலில் அறிந்தேன்…

பக்கங்களின் எண்ணிக்கையில் சிறியதாக தோன்றிய அந்தப் புத்தகத்தை பம்பாய் செல்லும் வரை அவர் படித்த வண்ணமே இருந்தார். லா.ச.ராவின் ஒரு பக்கத்தை “படிப்பதற்கு” பல வருடங்கள் கூட ஆகலாம் என்று நான் அன்று உணர்ந்திருக்கவில்லை.

ஊர் சென்று மதுரை திரும்பிய பின், “நாக்கின் விறுவிறுப்பு” அவ்வப்பொழுது ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. நூலகங்களிலும் கடைகளிலும் தொடங்கியது எனது லா.ச.ரா தேடல். “சமூக நாவல்கள்” என்ற போர்வையில் பல குப்பைகள் பரவிக் கொண்டிருந்த காலம் அது. குப்பைகளுக்கு அடியில் கற்பூரம் இருந்தால், அதன் மணம் எளிதில் நம்மை எட்டுமா என்ன?…அப்படித்தான் லா.ச.ராவின் கதைகள் எளிதாக கிடைப்பதாக இல்லை. தமிழ் புத்தகங்கள் படிப்போரை சந்திக்க நேர்ந்தால், “லா.ச.ரா கதைகள் உங்களிடம் இருக்கிறதா?” என்ற கேள்வியை தவறாது கேட்கும் பழக்கம் அன்று என்னிடம் இருந்தது. அதற்கான பதில்களோ எனக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தின. ஒருவர், “லா.ச.ரா வா? சொல்ல வந்ததையே திருப்பி திருப்பி நீட்டி வளைத்து எழுதுவாரே…” என்றார். இன்னொருவர், “நடையில் என்னமோ மயக்கம் இருக்கும் ஆனால் புரிந்ததா என்றே புரியாது” என்றார். தமிழ் மூலம் நமக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வாசிப்பு அனுபவத்தை தவற விட்டவர்களாகவே இவர்களை இன்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

“செலவுக்கு வைத்துக் கொள்” என்று வீட்டில் அவ்வப்பொழுது கொடுக்கப்படும் பணத்தை சேமித்து மதுரை வெளி வீதியில் உள்ள சர்வோதைய இலக்கிய பண்ணையில் தான் எனது முதல் “லா.ச.ரா புத்தகம்” வாங்கினேன். அன்றிரவு எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து அந்தப் புத்தகத்தைப் பிரித்த போது வீசிய மணம் இப்போதும் என்னருகில் வீசுவது போல இருக்கிறது. வாசனையின் நினைவு எப்படி இருக்கும்? அல்லது நினைவில் வாசனையை மீட்டு வருவது சாத்தியமா? அது சாத்தியமென்றாலும் வாசனையின் நினைவை வார்த்தைகளில் எவ்வாறு வெளிப்படுத்த இயலும்? லா.ச.ரா எழுத்துக்களில் அவை இரண்டுமே சாத்தியப்படும்.

காலத்தை, அதன் அடிக்கூறான நொடிகளை, அது ஒன்றுடன் ஒன்று ஒட்டி கனமான வ்டிவம் பெற்று வழிந்தோடும் வருடங்களை, அது தரும் பல்வேறு உணர்வுகளை, உணர்வுகளாய் இருந்து கெட்டித்துப் போன நினைவுகளை, மனதில் ஊற வைத்து உண்டு திளைப்பதே வாழ்க்கை என்னும் ரசனையின் முதல் சொட்டை என் நாக்கில் தேன் போல அன்றிரவு தடவினார் லா.ச.ரா [மாலையும் இரவும் இணையும் பொழுதை விவரித்து, காலம் ஏன் நொடிக்கொரு முறை தன் பூச்சை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பி,, “சமயத்திற்கு அதன் அமைதலன்றி நேரம் கணக்கேது?” என்று முடிக்கும் “ராஜகுமாரி” கதை அது].

அதே கதையின் பிற்பகுதியில், “ஒடுற தண்ணீர் ஓடிண்டே இருக்கு. என்னிடம் இருப்பது என் ஆழம் மட்டும்தான். அதுவும் எவ்வளவு என்று எனக்குத் தெரியாது” என்றொரு வரி! வரியா அது? நம் அனைவரின் வாழ்க்கை இல்லையா? சுள்ளென்று முதுகில் ஏதோ சுட்டது போல இருந்தது அன்று.சுடுதலுக்கான காரணம் பாதி புரிந்தது போல இருக்கிறது இன்று. ஒரு வேளை, புரிந்ததா என்று தெளிவதற்கு முதுமை தேவைப்படுமோ?

அந்த‌ இரவில் என் மீது படியத் துவங்கி, பல்கிப் பெருகி நீண்டு, எறும்பின் வரிசை போல் என் மீது ஊர்ந்து, பல இரவுகளில் லா.ச.ராவின் எழுத்துக்கள் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இறங்கியிருக்கிறது, என்னுடன் உறங்கியிருக்கிறது.

அதே மொட்டை மாடியில்தான் முதல் முறையாக “தாஷாயணி” படித்தேன். முதல் முறை என்பது “பல முறை” என்றானதும் அங்கேதான். இந்தக் கதையில் ஒரு அற்புதமான பத்தி உள்ளது. படித்து யோசித்து, யோசித்த பின் மீண்டும் படித்து, வருடக்கணக்கில் இப்படியே படித்துப் படித்துப் பாடமாகி மனதில் படிமமாய் இறங்கி இறுகிப் போன ஒரு பத்தி:

“சில விஷயங்கள் சில சமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்தவிதமல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது. நேர்ந்த சமயத்தில் நேர்ந்தபடி அவை நேர்வது அல்லாமலும் முடியாது.நேர்ந்தமையால், அதனாலே நேர வேண்டியவையாவும் ஆகி விடுகின்றன. அப்படி நேர வேண்டியவையாய் ஆனதால் அவை நேர்ந்ததால் அவைகளில் ஒரு நேர்மையும் உண்டு. அந்த நேர்மை தவிர அவை நேர்ந்ததற்கு வேறு ஆதாரம் இல்லை. வேண்டவும் வேண்டாம். அவைகளின் ஸ்வரங்களே அவ்வளவு தான்.”

படிப்போம்…இதை மீண்டும் படித்துப் பார்ப்போம்…காலத்தை பாகு திரளக் காய்ச்சி, அதன் நவரசம் சொட்டச் சொட்ட மூளைக்கும் மனதுக்கும் அபிஷேகம் செய்வது போன்ற சிலிர்ப்பு பரவுகிறது இல்லையா?

சில வருடங்களுக்கு முன், அம்மா என்ற சொல்லின் அனுபவ உருவை சாம்பலாய் அள்ளி சமுத்திரத்தில் கரைத்து வீடு திரும்பிய இரவில், கொட்டித் தீர்த்த பெருமழையில் குளித்திருந்த‌ அதே மொட்டை மாடியில் விண் பார்த்து படுத்து விழிமூடிக் கிடந்திருந்தேன் நான். காலி செய்யப்பட்ட வீட்டை கழுவி விட்டது போல வெறிச்டோடித் தெரிந்தது காலம். நினைவுத் தோட்டத்தில் அம்மாவின் வாசனைகளை நுகர்ந்தபடி அலைந்து கொண்டிருந்தது மனது. ஏதோ ஒரு வாசனையின் நொடியில் மெதுவாக என்னருகில் வந்து மேலேறி அமர்ந்தது மேற்சொன்ன “தாஷாயணி” வரிகள். வலிமையான வரிகள் வாசிக்கப்படும் போது அவை புத்தகத்தை விட்டிறங்கி அந்த இடத்தில் குடிபுகுந்து வசிக்கத் துவங்கி விடுமோ? அவ்வாறு வசித்த வரிகள் தான் வருடங்கள் கழித்து அன்றிரவு என்னருகில் வந்தமர்ந்தனவோ?

முந்தைய தினம் மூட்டிய தீயின் கங்குகளின் மீதம் என் நெஞ்சில் தனலாய் தகிக்க, ஒரு மலரின் இதழைக் கொண்டு கங்கினை குளிர்விப்பது போல ஒரு அர்த்தத்தை அவிழ்த்துப் போனது அந்த வரிகள். இறப்பு என்பதே பிறப்பின் நேர்தலா? இரண்டிற்கும் இடைப்பட்ட இருப்பு என்பதே அந்த நேர்தலுக்கான நேர்மையா? அப்படியென்றால், பிறப்பு‍——- இருப்பு இறப்பு ஆகிவைகளுக்கு அவை நேர்ந்தமை அன்றி வேறு ஆதாரம் இல்லையோ அல்லது தேவையில்லையோ? அவற்றின் ஸ்வரங்களே அவ்வளவுதானோ?

புதுப்புது வயதுகள்…புதுப்புதுப் பொழுதுகள்…விதவிதமான இதழ்கள்…விதவிதமான குளிர்விப்புகள்…நேர்தல்களின் நேர்மைகள் குறித்த ஆதாரங்களை நம்மை தேட வைத்து விட்டு ஸ்வரங்களை மட்டும் தன் போக்கில் மீட்டிக் கொண்டிருக்கிறது காலம்….

லா.ச.ரா நமக்கு சுவைக்கக் கொடுத்தவை கதைகள் அல்ல. “உணர்வு” என்ற ஒற்றைச் சொல்லின் பொருளை அணுஅணுவாய் பிளந்து கொண்டே போய், அது பிளக்கும் கனங்களின் ஆன்ம ஒலியை காலத்தில் வடிகட்டி, சொற்களுக்குள் திணித்துக் கொண்டே போய், அதிலேயெ வார்க்கப்படும் வரிகளுக்கு வடிவம் செதுக்கி…காகிதக் கூழில் எடுத்த நம் ஞாபகப் பிரதிகள்!

இவரின் வார்த்தை அடுக்குகள் நம் மனதின் இடுக்குகள் வழியே நுழைந்த பின், அது உதிரம் போல நம்முள் ஊறிக் கொண்டே இருக்கும். ஏதேனும் ஒரு நிகழ்விலோ அல்லது கடந்து போன நிகழ்வு பற்றிய நினைவிலோ சட்டென்று பீறிடும். அந்த நொடியில், அந்த வரிக்கான பொருள், அவருடையதல்லதாகி நம்முடையதாக மாறி நம் சிந்தனையின் மேலேறி அர்த்தம் காட்டும். நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து அவரின் கதைகளை மீண்டும் மீண்டும் படிக்கையில் நம் மனதின் கண்ணாடி முன் நாம் நிற்பது போல அந்த சொற்கள், அந்தப் பொழுதிற்கான நம் இருப்பின் வடிவத்தை பிம்பம் போலக் காட்டுவது நமக்குப் புரிகையில்…

இப்பொழுதும் மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம் லா.ச.ராவின் புத்தகம் ஒன்றை மறக்காமல் எடுத்துப் போகிறேன். மொட்டை மாடியில் மற்றுமொரு இரவு. சிறுவயது முதல் நாளும் பொழுதும் திறந்து பழகிய மொட்டை மாடியின் பழைய கதவுதான்…ஆனால் திறந்த பின் கண் முன் விரியும் மொட்டை மாடி என்றைக்குமே பழையதாக இருந்ததில்லை. வருடங்களின் நினைப்பை நம் மூச்சுடன் உள்ளிழுக்கச் செய்யும் வசீகரம் மொட்டை மாடிக்கு உண்டு.

முன்னரே தீர்மானித்து வடிவமைக்கப்பட்ட நொடிகளை, அந்த நொடிக்கான செயலை, நாமே அறியாது, நமது விருப்பம் அல்லது விருப்பமின்மை போல நம்மை நினைக்க வைத்து, அந்த நினைப்பினால் நம்மை அதை செய்ய அல்லது செய்யாமல் வைப்பது தானே காலத்தின் சூட்சமம்? இந்த சூட்சமத்தில் இயங்க வைக்கப்படும் நானும், எனது விருப்பம் என்று நினைக்கும் ஒரு லா.ச.ராவின் கதையை அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் நொடியில் படிக்கத் துவங்குகிறேன்… என் காலத்தின் விள்ளலில் இருந்து ஒரு துகளை எடுத்து, புது அர்த்தத்துடன் என் மீது எறியக் காத்திருக்கிறது இரவு.