நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ஆர்.எஸ்.நாராயணன்

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்

நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்

தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்

மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்

சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம்

சிறுவயதில் நட்டு வளர்த்த ஒரு மரத்தைத் தேடி 22 வருடங்களுக்கு முன்பாகக் குடியிருந்த வீட்டைத் தேடிச் சென்று அது இப்பொழுது வானுயுர வளர்ந்து நின்ற காட்சியைக் கண்டு சிலிர்த்து நின்ற பொழுது நானும் கூட வாழ்வில் ஏதோ உருப்படியான ஒரு காரியம் செய்திருப்பதாக சற்று பெருமிதம் அடைந்தேன். உனக்குத் தெரிந்த 50 மரங்களைப் பட்டியலிடு என்றால் நம்மில் பெரும்பாலோர் வேப்ப மரம், மா மரம், கொய்யா மரம், நெல்லி மரம், அரச மரம், ஆல மரம், பலா மரம், தேக்கு மரம், வாழை மரம், தென்னை மரம், பனை மரம் என்று தொடங்கி அதிக பட்சமாக ஒரு 20 மரங்களின் பெயர்களைச் சொல்லக் கூடும். அதில் பல மரங்களை இக்காலத் தலைமுறையினர் பலரும் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். இன்னும் பல மரங்களை தினசரி நாம் நடந்து செல்லும் பாதையில் கண்டிருப்போம் ஆனால் அவற்றின் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றிருக்கக் கூட மாட்டோம். இன்னும் பல மரங்களின் பெயர்களை நாம் அடிக்கடிக் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் அது எப்படி இருக்கும் எங்கு இருக்கும் என்றுத் தேடிப் போய் அறிந்து கொண்டிருக்க மாட்டோம். மரங்கள் என்று மட்டும் இல்லை, பறவைகள், பூச்சிகள், விலங்குகள், செடிகள் என்று நம் சுற்றுச் சூழலில் நாம் உறவாடும் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் நமது எல்லைகள் மிகவும் சுருங்கியவை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் உணர்வோம். அப்படியெல்லாம் எளிதாக மறந்து போய் விடக் கூடாது அரிய வகை தாவரங்களையும், பறவைகளையும் பிற உயிரினங்களையும் நாம் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே நம் பழம் இலக்கியங்களில் அவற்றையும் சேர்த்தேதான் பதிந்து வைத்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் அடையாளம் சொல்லப் படும் பல வகை மரங்களையும், பறவைகளையும் நம்மால் இன்று துல்லியமாக அடையாளம் கண்டு சொல்லி விட முடியாது.

life_trees

‘எல்லா உயிரினங்களிலேயும் மிகச்சிறப்பானவை தாவரங்கள். ஆதவனின் ஒளிச்சக்தியை வேதிய ஆற்றலுடைய உணவுப்பொருட்களாக மாற்றும் தன்மை தாவரங்களுக்குத்தான் உண்டு. மனித இனமும், மற்ற விலங்குகளும் இந்த வேதிய ஆற்றலைப் பெறுவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளன’

என்று குறிப்பிடுவதாக தமிழரும் தாவரமும் என்னும் நூலின் அறிமுகத்தில் நாஞ்சில் நாடனின் இந்த சொல்வனம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதே நூலில் ”தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும்” குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார். நம் தலைமுறையினருக்கு எல்லாம் தாவரங்களின் பெயர்கள் கூட “பூவரசம் பூ பூத்தாச்சு” என்று பொண்ணுக்குச் சொல்லும் சேதியான திரைப்படப் பாடல்கள் மூலமாகவே அறிய வருகின்றன. பூவரச மரத்தையும் பூவையும் நேரில் பார்த்தவர்கள் குறைவாகவே இருக்கக் கூடும். பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம் என்ற சென்ற தலைமுறையினரின் சிறுபிள்ளை விளையாட்டைக் கூட இன்னொரு திரையிசைப் பாடலே அறியத் தருகிறது. ட்ரை சைக்கிள், வித் ட்ரெயினிங் வீல் எல்லாம் குழந்தைப் பருவத்து விளையாட்டுச் சாமானாக கிடைக்க வழியில்லாத அந்தக் காலத்தில் நொங்கு உண்ணப் பட்ட பின் எறியப் படும் பனம் காய்களே மானசீகமான சைக்கிள்களாகவும் கார்களாகவும் விளையாட்டுச் சாமான்களாகப் புழங்கிய இருந்த காலத்தில் நொங்கு என்பது பனை மரத்தில் இருந்து விளைவது என்ற விபரமாவது தெரிந்திருந்தது. கருப்பு சிவப்பு நிறத்தில் மின்னும் அழகிய சிறு மணிகள் ப்ளாஸ்டிக் பொருள் அல்ல அவை விளைவது குன்றி மணி மரத்தில் இருந்து என்ற விபரம் விளையாட்டுப் போக்கில்தான் தெரிய வந்தது. இக்காலத்தில் கிராமப் பகுதி சிறுவர்கள் கூட காடு, மலை, நதி என அலைந்து திரிந்து விளையாடியும் அதன் மூலமாகச் சுற்றுச் சூழலை அறிந்து கொள்ளும் அனுபவத்திற்கான நேரமில்லாமலேயே டி வி யின் முன் வளர்கிறார்கள்.

அப்படி நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய இந்த நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை நாம் தற்காலத்தில் அறிவோம்? எத்தனை மரங்கள் இன்னும் உயிர்ப்புடன் வாழுகின்றன. எத்தனை அழிந்து போயின என்ற விபரங்கள் அரசாங்கத்தின் தோட்டக் கலை/வனத் துறை அலுவலர்கள் கூட அறிந்திருப்பார்களா என்பது தெரியாது. மதுரையைக் கடம்ப வனம் என்கிறார்கள் ஆனால் அந்த கடம்ப மரத்தை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே வணங்கப் படும் ஒரு மரமாக அன்றி நான் மதுரைப் பகுதியில் வேறு எங்கும் கண்டிலேன். அப்படியே கண்டிருந்தாலும் இது கடம்ப மரம் என்ற விபரமே தெரிந்திருக்காது. நமக்கு ஏற்கனவே பரிச்சியமான ஒரு பத்திருபது மரங்களுக்கு அப்பால் எந்தவொரு தாவர இனத்தையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதே உண்மை நிலமை. அந்த அளவுக் குறைந்த பட்ச தேவைக்கு மட்டுமே தெரிந்து கொள்ளும் அறிவுடனேயே நாம் வளர்க்கப் படுகிறோம். நம்மை வளர்த்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அந்த நிலையில்தான் பெரும்பாலும் இருந்தார்கள். ஒரு வேளை தாவரவியல் படித்த மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு பத்து மரங்கள் தெரிந்திருக்கலாம். இப்பொழுது சிக்குன் குனியா, டெங்கு போன்ற வினோத நோய்கள் நாடு முழுவதும் பரவுகின்றன. உடனே அவற்றிற்கான மருந்துகள் அலோபதி துறையில் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை ஆகவே சித்த மருத்துவம் பரிந்துரைத்த மூலிகைக் கஷாயத்தையே நாங்களும் பரிந்துரைக்கிறோம் என்கிறார்கள் எம் டி, படித்த ஆங்கில மருத்துவர்கள். நில வேம்பு கஷாயம் குடித்தால் அந்த நோய் குணமாகிறது என்கிறார்கள். அந்த நிலவேம்புச் சூரணத்தையும் கஷாயத்தையும் தேடி மக்கள் ஓடுகிறார்கள். ஆனால் அந்த நில வேம்பு என்பது செடியா, மரமா என்பதைத் தெரிந்து கொள்வதில் எவருக்கும் ஆர்வமில்லை. நானும் வேம்பு என்றால் அது ஒரு வகை வேப்ப மரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை வளர்ப்பதற்காக கன்றுகளைத் தேடிச் சென்ற பொழுதுதான் ஒரு குறுஞ்செடி என்ற விபரம் தெரிய வந்தது. சில இலைகளைப் பறித்து சுவைத்தால் கடுமையான கொடும் கசப்பு நாக்கில் நீண்ட நேரம் தங்குகிறது. அது விஷ முறிவு மூலிகையும் கூட என்கிறார்கள். இவை போன்ற தகவல்கள் பாரம்பரியமாக செவி வழி அனுபவத்தின் மூலமாகக் கடத்தப் படும் செய்தியாக மட்டுமே கிராம மக்களின் அனுபவ அறிவாகவே நின்று விடுகின்றன. புற்று நோய் சிகிச்சையான கீமோதெரப்பிக்குப் பதிலாக ஒரு வகைப் பழத்தை உண்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். அதைத் தேடிய பொழுது அந்த மரத்தின் தமிழ் அல்லது வட்டாரப் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அது சீத்தாப் பழத்தின் ஒரு வகை என்பது மட்டுமே தெரிந்தது. பின்னர் அதைத் தேடி கர்நாடக மாநிலத்தில் ஒரு பண்ணையில் வளர்க்கப் படுவதாக அறிந்தேன். இணையத்தில் ஒவ்வொரு தாவரத்தையும் தேடிக் கண்டறிவதற்குப் பதிலாக தாவரங்கள் குறித்த எளிய சுவாரசியமான புத்தகங்கள் இருந்தால் அவை ஆர்வமுள்ளவர்களிடம் எளிதில் சென்றடையக் கூடும். ஆனால் அவை போன்ற நூல்கள் அபூர்வமாகவே எழுதப் படுகின்றன, பதிப்பிக்கப் படுகின்றன.

காலப் போக்கில் மறைந்து விட்ட அல்லது அபூர்வமாகி விட்ட , ஓரளவுக்கு அதிகம் அறியப் பட்டிராத பல்வேறு பலன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அது காரணமாக அரிய வகை மரங்கள் சிலவற்றை அறிய விழைந்த பொழுது தமிழ் நாட்டின் முக்கியமான மரங்கள் குறித்தான முழுமையான ஒரு நூலைத் தேடிக் கொண்டேயிருந்தேன். ஏற்கனவே நாஞ்சில் நாடன் அறிமுகம் செய்திருந்த நூல் மறு பதிப்பைக் காணவில்லை என்று அறிந்தேன். மதுரைக்குச் செல்லும் பொழுது தவறாமல் டவுன் ஹால் ரோடு சென்ட்ரல் சினிமா அருகே அமைந்துள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸுக்கு செல்வதுண்டு. அவர்களின் பிரசார நெடி வீசும் புத்தகங்களையும் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை பல உருப்படியான நூல்களும் அங்கு கிடைப்பதுண்டு. சோவியத் யூனியன் செல்வச் செழிப்பாக இருந்த காலத்தில் கன்னம் சிவந்த குழந்தைகளும் மிருகங்களும் வெண் பனியில் விளையாடும் அழகான பனி மூடிய ஓவியங்களுடன் கூடிய சிறுவர் நூல்களை அங்கு சல்லிசான விலையில் என் அப்பா வாங்கித் தரப் படித்ததுண்டு. பின்னர் ஓம்ஸ் அருணாச்சலம் எழுதிய ரேடியோ ரிப்பேரிங், டிரான்ஸிஸ்டர் மெக்கானிசம், வீட்டு வயரிங் போன்ற பல அரிய நூல்களையும் என் சி பி எச் மூலமாகவே குறைந்த விலையில் வாங்கிப் படித்துப் பயனடைய முடிந்தது. அதே பழைய நினைவுகளில் இந்த டிசம்பரில் அங்கு சென்றிருந்த பொழுது நான் தேடிக் கொண்டிருந்த தலைப்பில் ஒரு நூலைக் கண்டு உடனடியாக வாங்கி விட்டேன். அது அரிஸ்டாடில் என்னும் திரு.ஆர். எஸ்.நாராயணன் அவர்கள் எழுதிய ”வாழ்வு தரும் மரங்கள்” என்ற நூல்.

banyan-tree

நாராயணன் எனக்கு ஏற்கனவே சொல்வனம் ஆசிரியர் பிரக்ஞை ரவிஷங்கர் மூலமாக அறிமுகம் ஆனவர். நான் மரம் வளர்ப்புத் தொடர்பான தகவல்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது சொல்வனத்தில் இயற்கை வேளாண்மை குறித்தும், சூழலியல் குறித்தும் தொடர் கட்டுரைகள் எழுதி வரும் நாராயணன் அவர்களை ரவி அறிமுகப் படுத்தியிருந்தார். அவரது ஆலோசனைகளுக்காக ஒரு முறை தொடர்பும் கொண்டிருந்தேன். மரங்கள் வளர்ப்பது குறித்தும் இயற்கை விஞ்ஞானம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். காந்தி கிராமம் அருகேயுள்ள அம்பாத்துறையில் வசிக்கிறார். மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இயற்கை வேளாண்மையிலும், சூழலியலிலும் ஆர்வம் செலுத்தி ஆராய்ச்சிகளிலும் நூல்கள் எழுதுவதிலும் இயற்கை வேளாண் குறித்த பிரசாரங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார். வீட்டு மாடியில் தோட்டம் வளர்க்கும் முறையை பிரபலப் படுத்தி வருகிறார். இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், மாடியிலும் தோட்டமிடலாம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம் என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அவர் தினமணி நாளிதழில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுக்காக எழுதிய ”வாரம் ஒரு மரம்” என்ற கட்டுரைகளின் முதல் தொகுப்பாகவே “வாழ்வு தரும் மரங்கள்” வெளி வந்துள்ளது.

மரங்கள் குறித்த நூல் என்றால் ஏதோ நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் படித்த பாட்டனி பாட நூல்கள் போல கடினமாகவும் வறட்சியாகவும் இல்லாமல் மிகவும் சுவாரசியமான நடையில் ஒவ்வொரு மரம் குறித்தும் முழுமையான தகவல்களுடனும் ஏராளமான சுவாரசியமான உப தகவல்களுடனும் இந்த நூலை எழுதியுள்ளார். அரச மரம், ஆல மரம் துவங்கி கோங்கு மரம் வரையிலான 78 மரங்கள் குறித்தான முழு விபரங்கள் அடங்கிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே வாழ்வு தரும் மரங்கள். ஒவ்வொரு மரம் குறித்தும் அவற்றின் தாவரவியல் பெயர், சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியங்களில் அவற்றிற்கு வழங்கப் பட்ட பெயர், ஹிந்தியில் அதன் பெயர், ஆங்கிலப் பெயர் ஆகிய தகவல்களுடன் ஒவ்வொரு மரம் குறித்தான கட்டுரையையும் துவக்குகிறார். பின்னர் அந்த மரம் குறித்தான் புராணத் தொடர்புடைய செய்திகள், அந்த மரம் எந்த ஆலயங்களின் தல விருட்சம் போன்ற விபரங்கள், மரம் தொடர்பான இலக்கியக் குறிப்புகள், மரத்தின் மருத்துவப் பயன் பாடுகள், சமூகப் பயன் பாடுகள், மரம் வளரத் தேவையான இடம், மண், தட்ப வெட்ப நிலை குறித்த விபரங்கள், அந்த மரத்தினால் விளையும் சுற்றுச் சூழல் பயன்பாடுகள், அந்த மரம் குறித்த சுவாரசிய செய்திகள், அந்த மரக் கன்று எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள், மரம் வளர்ப்பதற்குத் தேவையான குறிப்புகள், மரத்தின் உணவு பயன்பாடுகள் அந்த மரத்தினால் ஏற்படும் சூழலியல் தாக்கங்கள்,அந்த மரம் தோன்றிய நாடுகள் அல்லது இடங்கள், அந்த மரத்தினால் பயனடையும் பறவைகள், விலங்குகள், மரத்தின் உயர, அகல அளவுகள் போன்ற எண்ணற்றச் செய்திகளை ஒவ்வொரு கட்டுரையிலும் அடர்த்தியாகத் தந்து செல்கிறார். மரத்தைப் பற்றிய சித்தர்களின் குறிப்புகளையும், ரசாயனக் குறிப்புகளையும் பரத கண்டத்தின் பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து விளக்குகிறார். ஒவ்வொரு மரம் குறித்து படித்து முடிக்கும் பொழுதும் அந்த மரம் மீது நமக்கு பிரமிப்பும் பக்தியும் பாசமும் ஏற்பட்டு விடுகின்றன. நாம் இது வரையிலும் கேள்விப்பட்டிராத கண்டிராத ஏராளமான மரங்கள் குறித்த தகவல்களையும் அள்ளித் தருகிறார். ஒவ்வொரு தாவரமும் இயற்கையின் எண்ணிலடங்காத அதிசயங்களைத் தன்னுள் கொண்டு இந்த பூவுலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை ஒவ்வொரு மரத்தின் தகவல்கள் மூலமாகவும் ஆசிரியர் விளக்குகிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவரும் உடனடியாக ஒரு மரக்கன்றையாவது நட்டு விட்டே அடுத்த வேலைக்குச் செல்வார் என்பது உறுதி. சில மரங்களின் பயன்பாடுகளைப் படிக்கும் பொழுது அதை நம் சூழல்களில் கண்டிருந்தாலும் அதன் அருமை தெரியாமல் வளர்ந்திருக்கிறோமே என்ற வெட்கமே ஏற்படுகிறது.

கீழ்க்கண்டவை போல ஏராளமான தகவல்கள் அடர்ந்த மரத்தின் இலைகள் போலச் செறிவுடன் நூல் முழுவதும் காணக் கிடைக்கின்றன.

‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறார்.

ஒரு அரச மரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்க லோக பதவி கிட்டும் என்று விருஷ ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.

பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதன் மருத்துவ காரணங்கள் உள்ளன.

அரச மரத்தின் அதிக பிராணவாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே என்றும் அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கினார்கள்.

ஆல மரம் வாக்கின் அடையாளம் என்றும் அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான பனியாக்கள் அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும் அதன் காரணமாகவே அது ஆங்கிலத்தில் பான்யன் ட்ரீ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டியவை.

சாஸ்திர முறைப் படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் ஒரு இடமும் கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பார்கள் என்றும் விருஷ ஆயுர்வேதம் நூல் சொல்கிறது.
மேலோகத்தில் கன்னியர் கிடைப்பதற்காக எவரும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க வேண்டியதில்லை இரண்டு ஆல மரத்தை மட்டும் நட்டாலே போதும் போலிருக்கிறது. ஆலம்பால் வயேகரா போலப் பயன் பட்டதே அந்த கன்னியர்கள் கிட்டும் ரகசியம்.

மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக இலுப்பை மரத்தையும் அது ஏன் ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது என்பதைப் பற்றியும் கூறுகிறார். தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.

அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி ரைட்ஸ் உருவானது.

நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.

நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் அசோக மரங்களாக கருதப் படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.

இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும், பிரமிப்பையும் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம் என்கிறார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாட்டு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.

ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களையும் நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருஷ ஆயுர்வேதம் சுட்டுகிறதாம். அந்தக் காலத்தில் இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்று இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லையம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார் ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது என்று மறைந்து விட்ட தில்லை மரத்தின் அருமைகளை அடுக்குகிறார். தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி மரம் என்றும் அவற்றை அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும் என்கிறார். செஞ்சந்தன மரம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் மோசஸ் சினாய் ஏரியில் வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத் தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும் என்கிறார். கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம் என்ற யோசனையையும் அளிக்கிறார் நாராயணன். மகிழ மரத்தை பூர்வீக வயேகரா என்றழைக்கிறார்.

நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம்,வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி,வேள்வேல்,தழுதாழை,ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, எட்டி, இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின் மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத்துவங்களை விளக்கி அவற்றை நாம் அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார். மரங்களின் தலைப்பிலேயே அதன் தன்மையை சுருக்கமாக விளக்கி விடுகிறார்.

நெல்லி-இந்தியாவின் எதிர்காலம்,

மருதம்-இதய நோய் நீக்கி,

வெப்பாலை-பல நோய் நிவாரணி,

முருங்கை-தாதுபுஷ்டி மரம்,

வேள்வேல்-மேக நிவாரணி,

கொய்யா-ஏழைகளின் ஆப்பிள்,

கருங்காலி-கருப்பு வைரம்

போன்ற தலைப்புகளே அந்தந்த மரங்களின் மேன்மையை விளக்கி விடுகின்றன. சில மரங்களை வளர்ப்பதன் வணிகப் பயன்பாடுகளையும் அவற்றின் மூலமாக ஈட்டப் படும் லாபத்தினையும் குறிப்பிட்டு அந்த வகை பணங்காய்ச்சி மரங்களை வளர்ப்பதையும் ஊக்குவிக்கிறார்.

நூலின் பின் இணைப்பாக மரங்களின் படங்கள், மரங்களின் மருத்துவக் குறிப்புகள், அவரவர் ராசி/நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள், மரக் கன்றுகளைப் பெறும் விபரங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார். இந்த நூலைப் படித்த பின்னர் தேடிப் பிடித்து மருதம், கடம்பு, செஞ்சந்தனம், எட்டி, மகோகனி, சந்தன வேம்பு, சரக் கொன்றை போன்ற அரிய வகை மரங்களாக 25 மரங்களை எனது தோட்டத்தில் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தேன். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நட்டு நம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே ஆசிரியரின் விருப்பமாக வைக்கிறார். மரங்களை வாழ்வியல் கண்ணோட்டத்தில் அணுகி அவற்றின் நுட்பமான மேன்மைகளை மிக எளிய அழகான சுவாரசிய்மான நடையில் தருகிறார் ஆசிரியர் நாராயணன். வாழ்வு தரும் மரங்கள் நூல் சுற்றுச் சூழலில், இயற்கை வேளாண்மையில், இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும். நான் எவருக்கேனும் பரிசாக ஒரு நூலை அளிக்க விரும்பினால் இந்த நூலையும் கூடவே ஒரு மரக்கன்றையும் அளிக்கவே விரும்புவேன். இந்த நூலைப் படிப்பவர் நிச்சயமாக அந்தக் கன்றை தன் கண் போலப் பாவித்து ஒரு மரமாக வளர்த்து விடுவார் என்று உறுதியாக நம்புகிறேன். வாழ்வு தரும் மரங்களைப் படித்து, அறிந்து கொள்வதோடு நின்று விடாமல் அவற்றை வளர்ப்பதும் நம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.

தாமரை பப்ளிக்கேஷன்ஸ் பதிப்பான இந்த ”வாழ்வு தரும் மரங்கள்” நூலின் இரண்டாம் பதிப்பு என் சி பி எச் நிறுவனத்தாரின் கடைகளில் விற்பனை செய்யப் படுகிறது. விலை ரூ.160.