இந்தியக் கவிதைகள் – ஹேமந்த் திவதே (மராத்தி)

h_dஹேமந்த் திவதே, ஒரு கவிஞர், பதிப்பாசிரியர் மற்றும் ஒரு விளம்பர நிறுவனத்தின் துணைத் தலைவரும் ஆவார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு, புகழ் பெற்ற மராத்திய கவிஞரான திலிப் சித்ரே-வால் மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. உலகமயமாதல் மற்றும் அதை சார்ந்த மும்பை நகர வாழ்வு பற்றிய கவித்துவ எதிர்வினைகளாக இவர் கவிதைகள் மராத்திய நவீன கவிதைக்கு ஒரு புதிய துவக்கத்தை அளித்தது. 1998-இல் மராத்திய சிறு பத்திரிகை மரபின் தொடர்ச்சியாக இவர் தொடங்கிய ‘அபிதானந்தர்’ என்ற இலக்கிய இதழ், பல புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியதுடன் நவீன மராத்திய கவிதைக்கு ஒரு புது பாய்ச்சலை அளித்ததாக குறிப்பிடப்படுகிறது.

y_b

பட்டாம்பூச்சிகள்
காம்ப்ளக்ஸின் தோட்டத்தில் உலாவியபடி
சகஜமாக நண்பனிடம் சொன்னேன்,
இப்போதெல்லாம் அந்த சிறிய
மஞ்சள் நிற பட்டாம்பூச்சிகளைக்
காணமுடிவதில்லையென,
அவன் சாதாரணமாக சொன்னான்,
அந்த பிராண்டு வருவது
நின்றுவிட்டது என.

நான் மெயில் பார்க்கும்போது

mu

நான் மெயில் பார்க்கும்போது
என் மனைவி ‘கோயி அப்னாஸா’ பார்ப்பாள்
என் மகன் ஜிகாஸோ விளையாடுவான்
அப்பா கூடத்தில் தொலைகாட்சியில் ஈ-டிவி பார்ப்பார்
அம்மா கதவின் பீப்-ஹோல் வழியாக ஓரக்கண்ணால்
லிஃப்டிலிருந்து யார் போகிறார்கள் வருகிறார்கள் என்று பார்ப்பாள்.

நான் பேப்பர் படிக்கும்போது
என் மனைவி மொபைலில் பேசுவாள்
என் மகன் டிவியில் கார்டூன் நெட்வர்க்கை
வெறித்துப் பார்ப்பான்
அப்பா, பக்கெட்டில் கழுத்தை நீட்டி
வேவு பிடிப்பார்
அம்மா, சமையலறை ஜன்னலருகே நின்று
வேலைக்காரிக்காக காத்திருப்பாள்

நான் வீட்டிலில்லாதபோது
என் மகன் என்னை அழைத்து கேட்கிறான்,
‘அப்பா, நீங்க என்ன செய்யறீங்க? வீட்டுக்கு வாங்க”
என் மனைவி எனக்கு எஸ் எம் எஸ் அனுப்புகிறாள்: “I miss u”
அம்மா அப்பா ஒருவரோடொருவர் போட்ட சண்டைப் பற்றி
தெரிந்துகொள்வேன்,
நான் வீடு திரும்பும்போது,
வாயாடி வேலைக்காரி வேலையிலிருந்து
நின்றுவிட்டதைப் பற்றியும்.

mb

தமிழில் : ச.அனுக்ரஹா