பாஸ் கிடார் தில்லானா

sri-23-copy1

எந்த ஒரு இசைக்கலைஞனுக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு குறிப்பிட்ட கிருதியை அதன் சர்வலட்சணங்களோடும் முழுமையாகப் பாடிவிடவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் நண்பர்கள் பலரை நான் அறிவேன். J.S.Bach-இன் இசைக்கோர்வையை உள்ளபடியே வாசித்துவிட வேண்டும் என்பதை வாழ்க்கையில் ஒரு லட்சியமாக வைத்திருக்கும் நண்பர்களும் எனக்கு உண்டு. அப்படியொரு தனிப்பட்ட கனவு எனக்கும் சமீபத்தில் கைகூடியது. கேட்ட முதல் விநாடியிலிருந்தே என்னை ஆக்கிரமித்துவிட்ட பாடல், அறுவடை நாள் திரைப்படத்தின் “தேவனின் கோயில்” பாடல். அப்பாடலின் மெலடியையும், பாஸையும் ஒரே சமயத்தில் முழுமையாக பியானோவில் வாசிக்கவேண்டும் என்பதே அக்கனவு.

இளையராஜாவின் தனித்துவமான பாஸ் கிடார் உபயோகத்தைக் குறித்த அறிமுகம் எனக்கு என் CIT கல்லூரியின் இசைக்குழு மூலம் நிகழ்ந்தது. கல்லூரியில் சேர்ந்து, இசைக்குழுவில் பங்களிக்கத் தொடங்கிய அச்சமயத்தில்தான் பல்வேறு தனித்தனியான இசைக்கோர்வைகள் ஒன்றிணைந்து நாம் கேட்கும் பாடலின் இறுதி வடிவத்தைத் தருகின்றன என்று புரிந்துகொண்டேன். சென்ற வருடம் சொல்வனத்தில் Harmony 1995 என்ற என்னுடைய கல்லூரிக் கலைநிகழ்ச்சி மூலம் நான் கற்றுக்கொண்ட ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலின் பாஸ் கிடார் உபயோகத்தைக் குறித்தும் எழுதியிருந்தேன். அதே கலைநிகழ்ச்சியின் மூலம் என்னுள் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திய பாடல் “தேவனின் கோயில்”. அப்பாடல் பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியினரால் மேடையில் பாடப்பட்டது. அந்நிகழ்ச்சியை நடத்துவது எங்கள் கல்லூரி என்பதால், மைக் மற்றும் பிற இசைக்கருவிகளை மேடையில் இணைக்கும் பொறுப்பு எங்களுக்கு இருந்தது. ஒரு இசைக்குழுவுக்கு அதிகபட்சம் எட்டு பேர்தான் என்பதால், பெரும்பாலும் இரண்டு பேருக்கு மேல் பாடகர்களாக இருப்பது சாத்தியமில்லை. எனவே, நாங்கள் வழக்கமாக இரண்டு மைக்குகள்தான் மேடையில் இணைத்திருப்போம். ஆனால் இக்கல்லூரியின் இசைக்குழுவினர் மேடைக்கு வந்தபோது நான்கு மைக்குகள் வேண்டுமென்று கேட்டனர். நான் ட்ரம்ஸின் side base-க்கு வைத்திருந்த மைக்கையும், என் நண்பன் பிரசாந்த் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குபவரின் மைக்கையும் பிடுங்கிக்கொண்டு வந்து கொடுத்தோம்.

மேடையில் நான்கு மைக்குகள், நான்கு பாடகர்கள் சகிதம், sound check எல்லாம் முடிந்து, பாடலைத் தொடங்குவதற்கு இசைக்குழு தயாராக இருந்தது.

இசைக்குழுவினருக்கு உதவியாக நாங்கள் சிலர் மேடையின் பின்னணியில் நின்று கொண்டிருப்போம். அதனால் மொத்த நிகழ்ச்சியையும் நேரடியாக, சில மீட்டர் தொலைவிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கிருந்தது. அது மட்டுமில்லாமல், ஒரு புறம் இசைக்குழுவினரின் குரலையும், இசைக்கருவிகளின் இயற்கையான ஒலியையும் (acoustic sound) நேரடியாகக் கேட்க முடியும். மறுபுறம் இவ்வொலிகளை stage monitor-களின் சேர்க்கை வழியாகவும் சேர்த்து ஒரு வித்தியாசமான கலவையொலியாக கேட்க முடியும். எனவே நான்கு மைக்குகளை வைத்து அப்படி என்ன பாடப்போகிறார்கள் என்று ஆர்வமாகக் காத்திருந்தோம்.

அப்போது ஸொப்ரானோ-ஆல்டோ-டெனர்-பாஸ் என்ற அமைப்பில் நான்கு குரல்களோடு அந்த பாடல் தொடங்கியது…

கேட்ட மாத்திரத்தில் புல்லரித்தது இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. இந்திய ஸ்லோகம் போன்ற வரிகளை, மேற்கத்திய செவ்வியல் ஸ்டைலில் அமைத்துப் பாடிய அந்த இசைக்கோர்வை மனதையும், உடலையும் என்னவோ செய்தது. அத்துவக்கத்தைத் தவிரவும், அப்பாடல் இயல்பிலே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் பொதுவாக சந்தோஷப்பாடல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்கேலிலும், தாளத்திலும் அப்பாடல் அமைக்கப்பட்டிருந்தாலும் பாடலின் மெலடி, வரிகள், இசைக்கோர்வை எல்லாம் சேர்ந்து ஏனோ ஆழ்ந்த சோகத்தைக் கொடுத்தது.

பாடல் பாடப்பட்டுக்கொண்டிருந்தபோதே, அக்குழுவின் பாடகர்களில் ஒருவர் என்னிடம் வந்து, “இரண்டாம் இடையிசையில் பாடகர் குரலுக்கு மட்டும் echo effect சேர்க்கச் சொல்லுங்கள்” என்றார். நான் வேகமாக மிக்ஸிங் மானிட்டருக்கு ஓடினேன். ஒலிச்சேர்க்கையைச் செய்து கொண்டிருந்தது ஈரோடு ஸ்டீபன்ஸ் ஆர்கெஸ்ட்ராவின் “பாய்”. எப்போதும் ஒரு கையில் பீடியை இழுத்துக்கொண்டே அடுத்த கையில் வெவ்வேறு கருவிகளின் ஒலி நிலையை காரை ஓட்டுவதுபோல கட்டுப்படுத்துவார். இன்றளவும் அவரின் நிஜப்பெயர் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு அவர் எப்போதும் ‘பாய்’தான்.

மேடை வாசிப்புக் கலைஞர்களுக்கு சாமி வரம் குடுத்தாலும் இந்த மாதிரி பூசாரிகளின் அருள் ரொம்ப முக்கியம். நேரடிக்கச்சேரிகளில் எந்தக் கருவியின் ஒலி அளவைக் கூட்ட அல்லது குறைக்க வேண்டும் என்பதை கணப்பொழுதில் சுதாரித்து மானிட்டரின் பொத்தானில் இவர் கைவரிசையைக் காட்ட வேண்டும். இல்லையென்றால் என்னதான் மாங்கு மாங்கு என மேடையில் வாசித்திருந்தாலும் கீழிருந்து அது ஊமைப் படமாகத்தான் தெரியும். டிஸ்கொதேக் டீ ஜே – க்களை எல்லாம் அலட்டாமல் தூக்கி சாப்பிடும் இசை சேர்க்கை நுணுக்கங்களை அறிந்த இது போன்ற டெக்னீஷியன்களை கோவை, சேலம், வேலூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருக்கும் தலை சிறந்த ஆர்கெஸ்ட்ராக்களில் தவறாமல் பார்க்கலாம். இசைத் தொழில்நுட்பம் தவிர ஆர்கெஸ்ட்ரா இசைக்கும் அனைத்து பாடல்களின் வாத்திய இசைப் பகுதிகளும் இவர்களுக்கு மனதில் அத்துபடியாக இருந்தாக வேண்டும். இரண்டு வருடங்களுக்குப் பின் (நான் மூன்றாமாண்டு படிக்கும்போது) நாங்கள் இசைத்த “நான் தேடும் செவ்வந்தி பூவிது” பாடலை, அதில் இருக்கும் ஏகப்பட்ட வாத்திய ட்ராக்குகளை தனித்தனியாக மிக்ஸிங்கில் பிரித்து, லீட் கிடாரின் தனிப்பகுதிகளுக்கு சரியாக ஒலியைத் தூக்கி அதுவே பின்னர் ரிதம் கிடாரக மாறும்போது அப்படியே அதை மென்மையாக்கி, மிக்ஸிங்கில் அவர் காட்டிய வித்தை, எங்கள் இசைப்பை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் செய்தது என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அப்பேர்ப்பட்டவரிடம் போய் கத்துக்குட்டியான நான், “பாய், இப்போ செகண்ட் இன்டர்லூடுல…” என்னைப் பாதியில் நிறுத்தி, “வோக்கல் ஹம்மிங்குக்கு எக்கோ குடுக்கணும், அதானே? தெரியும்யா… பாட்டைக் கேக்க விடு… டிஸ்டர்ப் பண்ணாதே” என்றார். எக்கோவை ஏற்றியபடியே என் முகத்தில் அவர் புகை விட்ட அத்தருணத்தில் பாடகர், “தந்தன தந்தன தந்தனா…” என்று பாட ஆரம்பித்தார். இப்போது நான் மேடையின் முன்னே ஆடியன்ஸ் தரப்பில் நின்று கொண்டிருந்தேன். பாட்டின் அந்த பகுதியில் நிலைத்துக் கேட்கும் இரண்டு ட்ராக்குகள் பாடகரின் குரலும் பாஸ் கிடாரும் மட்டுமே. அந்த “தந்தனா…” வரிசையாக இடைவெளியில் வைக்கப்பட்டிருந்த தூண் போன்ற ஸ்பீக்கர்கள் மூலம் பரவி, எக்கோ நிரம்பிய 12000 வாட் ஒலியலைகளாகக் காற்றில் கரைந்தது. ஹம்மிங் முடியவும் தொடங்கிய புல்லாங்குழலை பாஸ் கிடாரின் ஆதார சுருதி ஒம்காரமாய் அடக்கி இன்டர்லூடை முடித்தது. மீண்டும் புல்லரித்தது…

அந்த தருணத்தில் நான் எடுத்த முடிவு: “என்னைக்காவது இந்த பாட்டை மெலடி, பாஸ் இரண்டையும் சேத்து ஒண்ணா வாசிக்கனும்டா…”

அந்தக் கனவுதான் சமீபத்தில் நிறைவேறியது.

“இளையராஜாவின் பாஸ்கிடார் தனித்துவம் வாய்ந்தது” என்று சொல்வது ரொம்பவும் ‘அடக்கிவாசித்துச்’ சொல்லப்படும் ஸ்டேட்மெண்ட். பாடல்களில் கேட்பதற்கு கனமான ஒரு ‘fill effect’ ஆகவே பொதுவாக திரையிசையில் பாஸ்கிடார் பயன்படுத்தப்படும். அப்படி உபயோகப்படுத்தப்பட்ட பாஸ் கிடார் கோர்வைகளும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய வடிவங்களில் அடங்கிவிடும். அதை மாற்றி, பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.

raaja-murali-shashi-and-viji

[இசைக்கலைஞர்கள் முரளி, சசி, விஜி மானுவேலுடன் இளையராஜா]

பூவே இளையபூவே பாடலின் ஆரம்பத்தில் ‘காமாட்சி… இந்தத் தோட்டத்துல இருக்கற பூவையெல்லாம் பார்க்கும்போது எனக்கு உன் ஞாபமாகவே இருக்கு’ என்று மலேஷியா வாசுதேவன் பேசும்போது பின்னணியில் உற்றுக் கேட்டுப் பாருங்கள், அங்கே பாஸ்கிடார். ‘அட மச்சமுள்ள மச்சான்’ பாடலின் இண்டர்லூடில் வரும் ஒரு சிறு ட்ரம்ஸ் வாசிப்பின் பின்னணியில் அதை அப்படியே திருப்பி வாசித்திருக்கும்… பாஸ்கிடார். முறையான மேற்கத்திய செவ்வியல் கூற்றுக்களையும் ஜனரஞ்சகமாக இளையராஜா வெளிப்படுத்தியது பாஸ் கிடாரைக் கொண்டுதான். பாலு மகேந்திரா இயக்கத்தில் “ஓலங்கள்” என்கிற மலையாளப்படத்தில் ராஜா முதன் முதலில் மெட்டமைத்த “தும்பி வா” என்கிற பாடலின் பல்லவியில் வரும் பாஸ் கிட்டார் அமைப்பு கௌண்ட்டர்பாயிண்ட் வகையை சார்ந்தது. இதில் இன்னும் இசையமைக்க சவாலான இன்வெர்டிபிள் கௌண்ட்டர்பாயிண்ட் (Invertible Counterpoint) என்கிற உட்பிரிவு உள்ளது. பாக் இசையமைத்த இந்த ஃப்யுக் இசையை இந்த இசையின் தலையாய உதாரணமாக சொல்லலாம். “பன்னீர் புஷ்பங்கள்” படத்தின் ‘பூந்தளிர் ஆட’ பாடலின் இரண்டாம் இடை இசையில் லீட் கிட்டாருடன் உரையாடிகொள்ளும் பாஸ் கிட்டாரும் இதே இன்வெர்டிபிள் கௌண்ட்டர்பாயிண்ட் வகையை சார்ந்தது.

“நெஞ்சத்தைக் கிள்ளாதே” படத்தின் க்ளைமாக்ஸ். மோகனை மனதில் நினைத்து பிரதாப்பை மணமுடித்து தர்ம சங்கடமாய் வாழும் சுஹாசினி. “கே.டீ.குஞ்சுமோன் வழங்கும் ஜென்டில்மேன்” ஆக அவரை மேலும் வதைக்காமல் ஊரை விட்டுக் கிளம்பும் பிரதாப். கடைசி தருணத்தில் தன் தவறை உணர்ந்து விமான நிலையம் வரும் சுஹாசினி, பிரதாப்பைத் தடுத்து இருவரும் ஒன்று சேர்கிறார்கள். சுப முடிவு. இதுதான் சிச்சுவேஷன். இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு இசையமைப்பாளன் எந்த மாதிரி ஒரு இசையை கொடுத்திருக்க முடியும்?

தில்லானா என்பது கர்னாடக சங்கீதத்தில் பாரத நாட்டியத்தில் அனைவரையும் கவரக்கூடிய ஒரு இசை வடிவம். நீண்ட ராகமோ, ஆலபனையோ, நிரவலோ, கல்பனா ஸ்வரமோ இல்லாமல் முத்தாய்ப்பாய் ஜதி சொற்களை கொண்டு பாடப்படுவது. நீண்ட கச்சேரி முடிந்து வெளியேறும் ரசிகனை வீட்டுக்கு போகும் போது நிறைவாய் வழியனுப்பிவைக்கும் துணைப்பாடல். தனஸ்ரீ ராகத்தில் அமைந்த சுவாதி திருநாள் மகராஜாவின் “கீது நதிக்கு தக தீம்” என்கிற தில்லானா மிக பிரபலமான ஒன்று. அப்பேர்ப்பட்ட தில்லானா ஒன்று இளையராஜாவிற்கு உதிக்கிறது. சாமானிய திரைப்படத்தின் சுப முடிவு “தர திர ணா .. தரண திரண.. தர திர ணா” என பின்னணி இசை போடுகிறார். முடிவில் இசைக்கப்படவேண்டும் என்கிற மரபிலக்கணம் மாறாமல் இசைக்கப்படும் இந்த தில்லானாவிற்கு நவீன வடிவம் கொடுப்பது பாஸ் கிடார்.

விஜயவாடாவில் வசிக்கும் நண்பர் ஹரிக்ரிஷ்ணா மோகன் ஒரு நல்ல கீ போர்ட் ப்ளேயர். ராஜாவின் எந்தப் பாடலையும் மெலடி தனியாக, பாஸ் தனியாக வாசிக்கும் வரம் பெற்றவர். இந்தத் தில்லானாவை வாசித்து எனக்கு அனுப்பினார். அவரின் உந்துதல் பேரில் நான் இசைத்த வடிவம் இங்கே:

பாஸ் கிடார் வாத்திய அமைப்பில் மிகவும் முக்கியமான விஷயம் தாளக் கட்டமைப்பு. அதாவது ஒவ்வொரு ஆவர்தனத்திலும் அது ஒரே மாதிரியான தாள அமைப்பில் இருக்கும். ஆனால் மெட்டைப் பொருத்து அதற்கான கார்டுகளின் சஞ்சரிப்பில் முதுகேறிக்கொள்ளும். ஆங்கிலத்தில் இதைத்தான் பாஸ் கிடார் riffs என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட இளையராஜாவின் பாடலிலும், இந்த பாஸ் கிடாரின் patterns புது விதமாக உருவாக்கப்படுவதுதான் அவரின் படைப்பூக்கத்தின் சிறப்பு. இதற்கு உதாரணமாக “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” என்கிற பாடலைச் சொல்லலாம். பல்லவியில் சீராக வரும் பாட்டின் சந்தங்களை பாஸ் கிடார் மானாவாரியாக வெட்டி ஏற்கனவே பல முறை கேட்ட ராஜாவின் கீரவாணியாக இல்லாமல் ஒரு புத்தம்புது பாடலாக தருகிறது. ஜானகி, மலேசியா வாசுதேவன் போன்ற மகா கலைஞர்கள் இந்தப் பாட்டை மெருகேற்றி இருந்தாலும், இந்தப் பாட்டின் நாயகர் இதன் பாஸ் கிடார் கலைஞர்தான்.

வரிசை வரிசையாக இளையராஜாவிற்கு அம்சமான பாஸ் கிடாரிஸ்டுக்கள் கிடைத்துள்ளனர். அவரின் முதன்மை தளபதி, இந்தியாவிலேயே மிகச்சிறந்த கீபோர்டிஸ்டுகளில் ஒருவரான விஜி இம்மானுவேல் ஒரு சிறந்த பாஸ் கிடார் கலைஞரும் கூட. இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டீரியோ முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘ப்ரியா’ படத்தில் “டார்லிங் டார்லிங்” என்ற பாடலில் “ஐ லவ் யூ…” என்று அனுபல்லவி முடியும்போது, பாஸ் கிட்டாரின் கடைசித் தந்தியில் “ட் ட் ட் ட் ட் டூம்” எனப் பிடித்து மேலே கொண்டுவந்திருப்பார். முறையான ராக் இசைநிகழ்ச்சிகளில் வாசிக்கும் பாஸ் கிடார் கலைஞருக்குமே சவாலான வாசிப்பு இது.

viji_with-arr-as-assistant

[கீபோர்டில் விஜி மானுவேல், பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான்]

இதே பாணியில் கொஞ்சம் கனமாக வாசிப்பவர் வசந்த் என்ற மற்றுமொரு அருமையான இசைக்கலைஞர். ‘ஷிக்காரி’ என்ற கன்னடப்படத்தின் “கன வரிசூ” என்கிற பாடலின் துள்ளலுக்கு முக்கியமான காரணம் இவர் வாசித்த பாஸ் கிடாரகத்தான் இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இவர் இப்போது உயிரோடு இல்லை.

எண்பதுகளின் தொடக்கத்தில் பல பாடல்களின் வெற்றிக்கு பாஸ் கிடாரின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். இளையநிலா, நீதானே எந்தன் பொன் வசந்தம் போன்ற அன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப வந்த அனைத்து பாடல்களிலும் இந்த வாத்தியம் கோலோச்சியது. இக்காலகட்டத்தில் ராஜாவின் ஆஸ்தான பாஸ் கலைஞராக உருவெடுத்தவர்தான், திரு.சசிதரன் அவர்கள். இவர் இளையராஜாவின் மைத்துனர்தான். இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு பாஸ்கிடார் வாசித்தவர் இவர்தான். (இளையநிலா பாடலின் மிகப் பிரபலமான லீட் கிடாரை வாசித்தவர் திரு.சந்திரசேகர். அதற்கு ஈடு கொடுத்து அந்த பாடலின் பாஸ் கிட்டார் வாசித்தவர் சசி அவர்களே.)

sada_shashi_viji

[லீட் கிடாரிஸ்ட் சதானந்தம், பாஸ் கிடாரிஸ்ட் சசிதரன், பின்னணியில் விஜி]

ஒருமுறை “கோடை கால காற்றே” பாடலின் பாஸ் ட்ராக்கை மட்டும் தனியே எடுத்து வாசித்திருந்தேன்.

அதைக் கேட்ட ஒருவர், “இதை ரெக்கார்டிங்கில் வாசித்தவர் பெயர் ‘சத்ய நாராயணா’. அவர் வேறு யாருமல்ல, என்னுடைய தந்தைதான். அவரை கௌரவிக்கும் விதமாக பாஸ் கிடாருக்கு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் வாசித்ததற்கு நன்றி” என எழுதினார். இப்படித் தற்செயலாகப் பெரிய இசைக்கலைஞர்களைக் குறித்துத் தெரியவரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்த வாசு ராவ், ராஜாவிடம் பாஸ் கிட்டார் கலைஞராக வேலை பார்த்தவரே.

vasurao_bassguitarist

[வாசுராவ்]

ஏற்கனவே இந்த வாத்தியத்தின் மேல் எனக்குப் பிடித்திருந்த கோட்டி, பின்னாளில் சென்னையில் பாஸ் கிடாரிஸ்டாக இருக்கும் நண்பர் எட்டி தினேஷின் அறிமுகம் கிடைத்தபிறகு இன்னும் அதிகரித்தது. நாங்கள் எப்போது பேசினாலும் அவர் சமீபமாக வாசித்து அதில் தொலைந்துபோன ஏதாவது ஒரு ராஜாவின் பாட்டைப் பற்றி பேசுவார். அவர் தவறாமல் என்னிடம் புலம்பும் பாடல்களின் பட்டியலில் “தங்கச் சங்கிலி” நிச்சயமாக இருக்கும். இல்லையென்றால் “இன்று நீ நாளை நான்” படத்தில் வரும் “பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்” பாட்டைப் பற்றி சொல்வார். “இந்த மாதிரி எல்லாம் பாஸ் கிடார் அமைக்க அவருக்கு எப்படித் தோணுது? ரொம்ப யுனிக்கா இருக்கு… ஆனா கேட்க அவ்வளவு சுகமா இருக்கு” என்பார். “ஆமாம் எட்டி… நல்லா இருக்கனும்கற விஷயம் கஷ்டமா இருக்க வேண்டியதில்லங்குறத ராஜா கிட்டேருந்து நாம எல்லாம் கத்துக்கணும்” என்பேன்.

ஏழு மாத்திரைகள் கொண்ட மிஸ்ர சாப்பு தாளத்தில் அமைந்த பாடல் இது. ஆனால் தொடக்க இசையில் அதை 28 மாத்திரையாக அல்லது நான்கு ஆவர்தனங்களாக (4x 7 = 28) கணக்கில் எடுத்துக்கொண்டு, சதுஸ்ரம் போல பாஸ் கிடார் பதினான்கு முறை ரெவ்வெண்டு மாத்திரைகளாக (14 x 2 = 28) பிரிந்து வந்து விளையாடும். அதே போல் முதல் இடையிசையில் பாஸ் கிடார் அரை இடம் தள்ளி 6 மாத்திரைகளை ரூபகம் போல வாசிக்கும். எஸ்.ஜானகி தன் வாழ்நாளில் பாடிய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றைப் பற்றி, அவர் பாடிய விதம் பற்றிப் பேசாமல், ஏதோ பாஸ் கிடாரைப் பற்றி புலம்புகிறேன் என உங்களுக்குத் தோணலாம். ஏனென்றால், தேர்ந்த கர்னாடக சங்கீத மிருதங்க வித்வான்களுக்கு லபிக்கும் லயம் இளையராஜாவின் பாஸ் கிடாரிஸ்ட்டுகளுக்கு வேண்டியிருந்திக்கிறது. இந்தப் பாடல் முழுதுமே காணப்படும் தாளத்தின் பயன்பாடு என்னைப் பொருத்தவரை திரையிசையின் படைப்புத்தரத்திற்கு ஒரு மைல் கல்.

இதைப்போலவே, பாஸ்கிடார் உபயோகம் குறித்து நண்பர் எட்டியை தவறாமல் பிதற்ற வைக்கும் இன்னொரு பாடல், தேவனின் கோவில்…!

இப்பாடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது பாஸ் கிடார். மிக அழகாக உருவாக்கப்பட்ட crotchetகளுடன் இந்தப் பாடலுக்கு நல்ல ஒரு ரிதம் சேர்க்கிறது பாஸ் கிடார். அதே சமயம் இன்டர்லூட்களில் அவை தனியாக ஒரு counter melodyயை இசைக்கிறது. சரணங்களின் நீண்ட ஸ்வரங்களில் உள்ள வெற்றிடத்தை பாஸ் கிடாரின் நளினமான grooveகள் நிரப்புகின்றன. நாம் பொதுவாகக் கேட்டு ரசிக்கும் ‘தேவனின் கோயில் மூடிய நேரம்…’ என்ற மெலடிக்கு ஈடாக, மறைந்திருந்திருந்து இன்னொரு குட்டி ராஜாங்கத்தையே நடத்துகிறது இப்பாடலின் பாஸ்கிடார். இப்பாடலின் மெலடி, பாஸ் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தி வெளியே வரும்போதுதான் அது முழுமையானதொன்றாக, இளையராஜாவால் மட்டுமே செய்யக்கூடிய சாதனைகளில் ஒன்றாக மாறுகிறது.

எந்த அளவிற்கு இந்தப் பாடல் ஒருவரை பாதிக்க முடியும் என்பதை சுகா தன்னுடைய கட்டுரையில் சொல்லியிருந்தார். என்னைப் பொருத்தவரை என் இசைக்கனவை நிறைவேற்றிக் கொள்ள என்னைப் பதினேழு வருடங்கள் காத்திருக்க வைத்தது இந்தப் பாடல். அந்தப் பதினேழு வருடங்களும் இப்பாடலைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஒரு கையில் மெலடியும், இன்னொரு கையில் பாஸும் வாசித்தபடிதான் இருந்தேன். என்னைப் போல், சுகாவைப் போல் இன்னும் எத்தனை பேரோ!

2 Replies to “பாஸ் கிடார் தில்லானா”

Comments are closed.