இயல்வது
அந்தப் பாலத்தின் குறுக்கே
ஒருபோதும் நடந்ததில்லை நான்.
சிற்றாற்றின் குறுக்கே
அறிந்த காலந்தொட்டு
நிற்கிறது அது.
மணல் கொண்ட சிற்றாற்றை
தினம் கடக்குந் தோறும்
நீர்ப்பெருக்கெடுத்த பருவத்தை
நினைவூட்டி நிற்கிறது.
சிதைவுற்றது எப்போது
என்றறிந்தார் யாருமில்லை.
தன்னுடல் தொட்டுரசி
நதியோடிய பரவசத்தை
தான் மட்டுமேயறிந்த துரதிர்ஷ்டம்.
தொடுப்பிழந்த இரு முனைகள்
கை நீட்டி யின்னும்
கரை காத்து நிற்கின்றன.
நதியின் தடம் மறைந்து
நகர் விரையும் வெகு விரைவில்.
ராட்சத உடைப்பானின்
சிறு மோதலொன்றில்
மூப்படைந்த அதன் கிடப்பு
முடியும் ஒரு தருணம்.
அதற்கு முன்பு
ஒரு முறையாவது
நடந்து கடக்க வேண்டும்
இப் பாலத்தை…..
நிராகரிப்பின் துயரிலிருந்து
ஒரு துளி கரைத்து.
கால்பந்தாட்டக்காரனின் நிழல்
தற்செயலாகத்தான் கவனித்தேன்.
எனது நிழல்
காணாமல் போயிருந்தது.
மைதானத்தின் மஞ்சள் விளக்கொளியில்
பந்தைத் துரத்தியோடும்
நீண்ட நிழற்கால்கள்
கலைந்து பிரிந்து விரைந்தபடியிருந்தன.
ஒளியின் அண்மை சேய்மையில்
நிழல்களின் கால்பந்தாட்டம்.
விழுந்து நிமிர்ந்து
இழந்த பந்தினை
மீட்கும் வேட்கையில்
பாய்ந்த நிமிடத்தில்
நான் கண்டறிந்தேன்.
நிழலற்றுப் போயிருந்தேன் நான்.
கால்களும் நிழல்களும்
வலை பின்னி
பந்துதைத்துத் திரிய
நான் மட்டும்
அசைந்தேன், நடந்தேன், ஓடித் தவித்தேன்.
நிழல் தேடி காணாது பதைத்தேன்.
கலவரப்பட்டு கண் மூடினேன்
நிழல் இழந்த என்னுடல்
வசமின்றி வெளியில் மிதந்து
சுழன்றது.
ஒரு கணமே
ஒளியணைந்து
இருள் போர்த்திய மைதானத்தில்
என்
ஒற்றை நிழல்
கால்பந்தாடியது.
-எம். கோபாலகிருஷ்ணன்.
உறைபனி காலம்
ட்ராம் வாசலருகே உள்ள
இருக்கையில் அமராதே என்று எச்சரிக்கப்பட்டது சரிதான்.
கதவு திறக்கப்படும்போதெல்லாம்
உட்புகும் உற்சாக உறைபனிப் பஞ்சு நுரை சிதறல்கள்…
சீக்கிரம் மூடட்டுமே, தயவுசெய்து.
ஜன்னலுக்கு வெளியே சிப்பித் தலையை சிலுப்பிக்கொண்டு இருந்த குருவிக்கு
பெரும் உருண்டை உடல் பொருத்தமாகவேயில்லை.
பக்கவாட்டு ஊசி அலகைத் திறந்து கரைந்து
ஜன்னலுக்கு இந்தப்பக்கமிருந்த என்னையும் கரைத்து…
நாளையும் இதே பக்கம் வரலாமென்று இருக்கிறேன்.
-சிவா கிருஷ்ணமூர்த்தி
மதுரை
முகம்
இந்திரன் கோபத்தால் இறங்கிய மாமழையை
இங்கிருந்த அரசன் ஈசனிடம் வேண்டியதால்
நகரத்தின் நாற்திசையும் மேகத்தால் கூரையிட்டு
சேதத்தை தவிர்த்திட்ட சரித்திரம் பெற்றதனால்
நான்மாடக்கூடல் என்று நாமறிந்த ஊர் மதுரை.
ஊர் சிறப்பு
மூன்றாம் ஜாமத்திலும் முருகன் திறந்திருக்கும்
தெருவோர கடைகளிலே தேநீர் அழைப்பிருக்கும்.
கோவில்
கடவுளைக் கண்டபின் சுடுகடலை சாப்பிடவும்
உறவுகளின் சண்டைகளை உட்கார்ந்து பேசிடவும்
வசதியாக இருக்கிறது வற்றாத பொற்றாமரை
நதி
அசுத்தங்கள் நடுவிலே அழகரும் வந்திறங்கி
பச்சைப் பட்டுடுத்தி பக்தர்களை பாதுகாக்கும்
ஆலவாய் நகரத்தின் அடையாளம் வைகை.
மரபொழுக்கம்
“இன உணர்வு கொள்” என்னும் கரித்துண்டு வாசகங்கள்
கால் நூற்றாண்டு காலமாக கல்பாலம் சுவர்களிலே.
“காண வந்த கண்களுக்கு” நன்றி சொல்லும் போஸ்டர்கள்
சாலையெங்கும் ஒட்டும் வேலையற்ற கூட்டம்.
கடவுள் உலாவோ கட்சி விழாவோ
ஒலிப்பெருக்கி அலற களிப்பதில் நாட்டம்.
பொது ஒழுக்கம்
பொழுதுபோக்க இடங்களற்று வருந்திடும் மக்களுக்குப்
பொது இடத்துச் சண்டைகள் போக்கிடும் குறையை.
சமத்துவச் சான்றுகளாய் சாலைகளில்
மாடுகளும் மனிதர்களும்…
முன்னேற்றங்கள்
அலெப்பர செய்த அன்றைய தலைமுறை
பிழைப்பைத் தேடிப் பிற ஊர்கள் சென்ற பின்
இன்றைய இளமை இரைச்சலாய் திரிந்தபடி
இங்கே வளர்கிறது இங்கிதம் மங்கி.
ஞாபகம்
ஊறுகாய் குடுவைக்குள் உறைந்து விட்ட வாசம் போல்
உள்ளூர் முழுதும் நிறைந்து விட்ட ஞாபகங்கள்
எனினும்…
மதுரைக்குச் சென்றாலே மனதுக்கு மகிழ்ச்சிதான்
அம்மாவின் மடியில் அமர்கின்ற உண்ர்ச்சிதான்.
-குமரன் கிருஷ்ணன்
நாகதாளி பூமணம்
பெருமணல் வீசும் காற்றில்
பாலைத்தீ அமிழ்த்திய பெயரால் விரிகிறது
நாகதாளி வனக்கூடு..
வனவெதுப்பினும் மிஞ்சி
உயிர்த்தெழுந்த கோடுகளாய்,
கிளையிடத் துவங்கும் முறையே
மீள்கணம் நீள்வதைக் குறிப்பெடுக்க
என்றுதான் இயல்கிறது?
வெளியோடு உழன்றாடும்
சிற்றிலை ஊன்றி
மெல்ல மெல்ல வார்த்து
வண்ணமாய் நிறைகிறது
நிறம்சூடுகனி..
மணலோடும் காற்றோடும் கிளர்ந்து
வெளிக்கொணர்ந்த நிறங்களில்
உச்சிமீது வானிடியும்
காலநேரங்கள் நிழல்
துளியும் இருக்கிறதில்லை..
நிறம் மாறிய நெருப்புக்கனியின் நுனியில்
பூவாளியின் துளைகளாய் இன்னமும்
தூவிக் கொண்டிருக்கிறது முள்மழை..
– தேனு
