நான் முதலில் வேலைக்குச் சேர்ந்த போது, என் மேலாளரின் பெயர் ராஜேஷ் கன்னா-வாக இல்லாமல் இருந்தது என்னை அறியாமலேயே எனக்கு ஒருவித ஏமாற்றமாக இருந்தது. அந்தப் பெயர் ஏன் என் நினைவிற்கு வந்தது என்பது வியப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, அப்படி ஒரு பிரபலமான ஹிந்தி நடிகர் இருந்தார் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால், நான் பழைய ஹிந்தி படங்கள் அதிகம் பார்த்ததும் இல்லை, அதோடு அந்த காலத்து ஹிந்தி நடிகர்களின் பெயரையும் முகத்தையும் என்னால் சட்டென்று பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்ததில்லை. ஆனால், என் மேலாளரின் பெயர் ராஜேஷ் கன்னாவாக இருக்க வேண்டும் என்று நான் ஏதோ காரணத்தினால் எதிர்பார்த்திருந்தேன். அது தான் எனக்குப் புரியவில்லை. பின், ஒரு மாலை அலுவலகத்திலிருந்து தாமதமாகப் புறப்படும்போது, அதன் காரணம் மெல்ல நினைவிற்கு வந்தது. அன்று என் காபில், ஓட்டுனருடன் வந்துகொண்டிருந்த செக்யூரிட்டியின் பெயர் ராஜேஷ் கன்னாவாக இருந்தது. அதே சிறிய உருவமும், கரும்புள்ளிகள் நிறைந்த மாநிறத் தோற்றமும், முகமே சந்தோஷத்தில் வெடித்துவிடும் போன்ற சிரிப்பும்….
ராஜேஷ் கன்னாவைப் பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் நான் முதலில் கவனித்தேன். இத்தனைக்கும் எனக்கு உடனே முன்னால் இருந்த வரிசையில்தான் இருந்தான். மூன்று நாற்காலிகளும் மூன்று பெஞ்சுகளுமாக ஒவ்வொரு வரிசையும் இருக்கும். நான் நடைபாதையை ஒட்டிய நாற்காலி என்றால், அவன் என் முன் வரிசையில் சுவரை ஒட்டிய நாற்காலி. எங்கள் வரிசைகளே வகுப்பின் ஓரத்தில் இருந்தன. அவனுக்கும் இரு பெஞ்சுகள் முன்னாடிதான் ஜன்னல் இருந்தது என்றாலும், அங்கு பார்க்கும்போது கூட அவனைக் கவனித்தது இல்லை. அதுமட்டுமல்லாது, பள்ளியில் சேர்ந்ததிலிருந்து ஒன்றாகப் படித்துக்கொண்டிருந்த நண்பர் குழு, ஐந்தாம் வகுப்பில் முதன்முறையாக பிரிந்து விட்டிருந்தோம். எங்களை வெவ்வேறு செக்ஷன்களில் போட்டுவிட்டார்கள். எனவே, வகுப்பில் பொதுவாகவே எல்லாரும் புதியவர்களாய் இருந்தோம்.
பல வகுப்புகளிலிருந்தும் முதல் ஐந்து ராங்க் வாங்குபவர்கள், எங்கள் செக்ஷனில் ஒன்றாக போடப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களில் ஒரு சிலரையாவது தெரிந்திருந்தது. வகுப்புகள் தொடங்கும் போது எப்படியும் துடிப்பான, படிக்கும் மாணவர்கள் தாமாக வெளிப்பட்டுவிடுவார்கள். ஒரு கால் பரீட்சை முடிந்ததும் மற்றவர்களும் தெரிய தொடங்குவார்கள். பின், வகுப்பில் தாமாகவே ஒரு பிரிவினை உருவாகியிருக்கும். எங்களுக்குளான நட்பு வட்டமே அந்த பரீட்சை மதிப்பெண்களுடன் ஒத்திருக்கும். முதல் பத்து ராங்குகள் ஒரு வட்டம். அடுத்த சில ராங்குகள் இன்னொரு வட்டம். பின், பரீட்சையில் தேறாதவர்கள் ஒரு வட்டம் என்று.
அந்த வருடம், நான் முதல் முறையாக கிளாஸ் லீடராக தேர்வு செய்யப்பட்டேன். ஜன நாயக முறையில் இல்லை. எங்கள் வகுப்பு ஆசிரியைச் சொல்ல சொல்ல நான் பேசிக்கொண்டே இருந்தது அதற்கு ஒரு காரணம். இருந்தும் அப்படி ஒரு அதிகாரத்தின் ருசி யாருக்கும் பிடிக்காமல் இருக்கமுடியாது. வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது, நான் மட்டுமே இங்கும் அங்கும் நடக்கலாம். நான் மட்டுமே பேசலாம். அதெல்லாம், என் பிரத்யேக உரிமைகள். ஆனால், அந்த உரிமைகளை பிரத்யேகமாகவே நீட்டித்திருப்பதுதான் என் வேலை. அதற்கான சலுகைகளும் இருந்தன. அதில் ஒன்று, கரும்பலகையில் சாக் பீஸ் வைத்து எழுத முடிவது. யார் பேசினாலும் அவர்கள் பெயரை போர்டில் எழுதலாம். ரொம்பப் பிடிக்காதவர்கள் என்றால், அவர்கள் பேசாத போதும் எழுதலாம். சில சமயம், ஆசிரியை வரும் போது அதைப் பார்ப்பார்கள். பெரும்பாலும், ஆசிரியை வரும் சத்தம் கேட்டதுமே, ஒரு பரபரப்பில் நானே போர்ட்டை முழுமையாய் அழித்து விடுவேன். வகுப்பு தன் போக்கில் அமைதிக்குத் திரும்பும். அதனால் எல்லாம், என்னுடைய அதிகாரம் பற்றிய சந்தேகம் யாருக்கும் எழுந்துவிடவில்லை. வகுப்பில் பலரும் என்னுடன் நல்லுறவு கொள்ளத்தான் நினைத்தார்கள். நானும் அந்த பேரங்களை சாதகமாகத் தான் ஆக்கிக்கொண்டிருந்தேன்.
மற்றபடி, இந்த பதவியின் உதவியால், புதிய வகுப்பில் பலரும் எனக்கு வெகு எளிதில் அறிமுகமானார்கள். மதிய உணவு இடைவேளை சண்டைகளில் எனக்குப் பிரத்தியேக ஆதரவுக் கூட்டமும் பெருகியது. அதே அளவு தீவிரமான எதிரிகளும் உருவானார்கள். அதில் மிகுந்த மோசமான எதிரி, சந்தியா என் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள். அந்த வகுப்பிற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, உன் அரசியல் சல்லித்தனங்களெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல, எப்போதும் தன் நாற்காலியிருந்து நகராது, ஒரு இளக்காரச் சிரிப்புடன் இருப்பாள். அப்படிப்பட்ட சொங்கித்தனத்தை என்னால் சகித்துக் கொள்ளவே முடிந்ததில்லை. எல்லா விஷயங்களையும் வீரமாக சண்டைக் களத்தில் வந்து தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அவளுடைய அந்த எதையும் சட்டை செய்யாத நிலைப்பாடு என்னை எப்போதும் சவாலுக்கு இழுத்துக் கொண்டிருந்தது. சற்றே கூன் போட்டது போல, தலையில் ரிப்பன் அவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் கைகள் துடித்தன. நரம்புகள் புடைத்தன.
இத்தனைக் கலவரங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், முதலில் ராஜேஷ் கன்னாவைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. சுவரோரமான நாற்காலியில் அவன் தன்னை ஒரு பக்கம் திருப்பி, சுவருடன் தன் முதுகை வைத்து வகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்த போது பற்கள் தெரியச் சிரித்தான்.அப்போது அவன் முகமே ஒரு சிவந்த, சிரிப்புப் பந்தாக மாறியிருக்கும். அவன் பற்களில் சற்றே காவி ஏறி இருந்தது. மாநிறம், தோலில் அங்கங்கு கரும்புள்ளிகள் போன்ற தோற்றம். பழைய யூனிபார்ம் அழுத்தப்பட்ட இஸ்திரியில் சாயம் மங்கி இருந்தது. அப்போது தான் முதல் டெர்ம் பரீட்சை முடிந்திருந்தது. நான் என் தாளுக்காக காத்திருந்தேன். நான் எழுபதுக்குப் பக்கம் தான் மார்க் வாங்கியிருந்தேன். என் அருகில் இருந்த சந்தியா தொண்ணூற்றி ஆறு வாங்கியிருந்தாள், வகுப்பிலேயே முதல் மதிப்பெண். நான் தாளை அவள் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப் பார்த்தபோது, ராஜேஷ் கன்னாவின் தாளை மிஸ் அவன் பெஞ்சு மீது வைத்து சென்றார். அதில் ஒரு பெரிய ரெக்கை விரித்த முட்டை எழுதப்பட்டிருந்தது. அந்த தாளை அவன் மிக பதவிசாக எடுத்து மடித்துத் தன் பைக்குள் போட்டுக்கொண்டான்.
அடுத்தடுத்து எல்லா பரீட்சையிலும் அவன் ஒரு இலக்க மதிப்பெண்களே பெற்றுக்கொண்டிருந்தான். பின், அந்த தேர்வு முடிந்த ஒரு வாரத்திற்குள், அவன் வகுப்பின் பிரபலமான முட்டாளாகி விட்டான். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியையும் ‘ராஜேஷ் கன்னா’வைப் பற்றி ஏதாவது சொல்லாமல் இருக்கமாட்டார்கள். அவன் ஒரு நாளில் இரண்டு முறையாவது வகுப்பில் எழுந்து நிற்க வைக்கப் படுவான். மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட அவனுடைய அந்த வித்தியாசமான பெயர் எனக்கு அப்போது வித்தியாசமாகவே ஒலிக்கவில்லை. எங்கள் வகுப்பில் ஓரிரு மார்வாரிகள் தான் இருந்தார்கள். அவன் மற்ற மார்வாரிகளைப்போல இருக்கவில்லை. வெளுப்பாக இருக்கவில்லை. கொழுகொழுவென்று இருக்கவில்லை. ஹோலி சமயம் முகத்தில் கலர் கூட அப்பி வந்ததுதில்லை. அவர்களைப் போல சளசளவென்று பேசிக் கொண்டிருக்கவும் இல்லை. ஒரு விஷயம், அவன் பேசியதே இல்லை. அதனாலோ என்னவோ, அவன் ஊர் பற்றிய சந்தேகங்களே எனக்கு உருவாகவில்லை. அவன் பெயர் அவனாகவே ஆகிவிட்டிருந்தது. சற்றே மழுங்கலாக, ஒரு சுவரோரமாக, ஒரு சிரிப்புடன், பதிலே இல்லாத பார்வையுடன்.
ஒவ்வொரு பரீட்சை முடிவிலும், ஆசிரியைகள் அவனை தனியாகக் கவனித்துக்கொண்டனர். “என்னடா மார்க் இது! போய் வீட்டுல காட்டுனயா?!”, “இந்தத் தடவையும் ஃபெயிலா!”, “ரொம்ப மோசம்..தேறாது!”.ஆனால், இது எப்போதும் பரீட்சைகள் முடிந்ததும் தான். அவனோ, எல்லாவற்றிற்கும் ஏதோ பரிசு கிடைத்தாற்போல முகம் சிவக்கச் சிரித்துக்கொண்டு தாளை எடுத்து பைக்குள் வைத்துக்கொள்வான். எப்போதும் அவன் பேசுவது போல வாய் சிறிது திறந்தே இருக்கும். ஆனால், அவன் பேசி நான் கேட்டதே இல்லை. அவன் நோட்டுகளில் என்றுமே வீட்டுப் பாடம் பூர்த்தியாகி இருக்காது. அவன் வகுப்பில் எழுதிப் போடுவதைக் கூட எழுதிக் கொண்டிருக்க மாட்டான். எங்காவது யாரையாவது பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பான். எழுதிய ஒரு சில வாக்கியங்களும் கோழியின் கிறுக்கல்கள் போல இருக்கும். ஆசிரியர்கள் அவனை அடிக்க வரும்போது, அவர்கள் தன்னுடன் விளையாட வருவது போல ஒரு துள்ளல் அவன் கண்ணில் மின்னும். அந்த மெல்லிய மந்தகாசத்துடனே, அவன் கைகளை தன் முகத்தருகில் உயர்த்தி தன் உடம்பைக் குறுக்கிக் கொள்வான். மழைச் சாரல் விழுவது போல, கைகளை அவ்வப்போது தளர்த்தி, ஆசிரியையின் முகத்தைப் பார்த்துச் சிரிப்பான். அதனால், இன்னும் கோபம் அதிகமாகி ஆசிரியை அவனை இன்னும் வேகமாக அடிக்க வருவார்கள்.
அவனுக்கு நண்பர்கள் என்று வகுப்பில் ஒருவரும் இருக்கவில்லை. மற்ற மோசமாக படிக்கும் பையன்கள் கூட அவனை அவர்கள் வட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. அடிதடிகளிலும் குத்து சண்டைகளிலும் அவனுக்கு ஆர்வமில்லாமல் இருந்ததும் ஒரு காரணம். வகுப்பில் ஒரு சண்டை நடந்தால், யார் பக்கமும் இருக்கமாட்டான். அவன் உண்டு அவன் பெஞ்சு ஓரம் உண்டு என்று இருப்பான். அதனால், வகுப்பில் பலரும் அவனை கவனிக்காது போனார்கள். இருந்தும், கவனம் அவனைத் தேடி வந்தது. மோசமான கையெழுத்து, கலைந்த தலை, அழுக்கு யூனிபார்ம், முட்டை மார்க்குகள் என்று அவனுக்கென்று ஒரு பிரபல்யம் தேடிக் கொண்டு வந்தது. இதையெல்லாம் விட, இன்னும் ஒரு விஷயத்திற்கு அவன் மிகவும் பிரபலமாக ஆகத் தொடங்கியிருந்தான். அவன் பெஞ்சு நண்பர்களே இதைப் பெரிதும் பகிரங்கப் படுத்தத் தொடங்கினார்கள்.
வகுப்பில் ஆசிரியை இருக்கும் போதே ஒரு முறை, அவனருகில் இருந்த இருவரும் ஒரே நேரத்தில், ‘ஆஆ..ஊஸ்’ என்று சொல்லி மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். தூக்கத்தில் சற்றே மயங்கியிருந்த ராஜேஷ் கன்னா, சிறிய புன்னகையுடன் அவர்களைத் திரும்பிப் பார்த்தான். அவர்கள் மீண்டும் வேகமாக தங்கள் வலது கையை முகத்தின் முன் எடுத்து வேகமாக வீசத் தொடங்கினார்கள். கொஞ்ச நேரத்தில் வகுப்பே அவர்கள் செய்வதை செய்யத் தொடங்கியது. எல்லாரும் ஒரே போல ‘புஸ்ஸ்ஸ்ஸ்…..’ என்று பாடினார்கள். இது போன்ற கிண்டல்கள் நாளுக்கு நாள், அதன் போக்கில் பெருகிக் கொண்டே போனது. வகுப்பைக் கடத்த பையன்கள் இதை ஒரு உத்தியாகவே பயன்படுத்தத் தொடங்கினார்கள்.வகுப்பு இடைவேளைகளில், அவனைப் பார்க்கும் எல்லாரும் ‘புர்ர்ர்ர்…’ ‘புஸ்ஸ்ஸ்…’ என்று தங்கள் பின் புறத்தை ஆட்டிக் காட்டிவிட்டுச் செல்வார்கள்.ஆனால் அவன் ஒரு முறையேனும் கோபப்பட்டதே இல்லை. ஒவ்வொரு தடவையும், எதாவது ஒரு பையன் அப்படி வந்து செய்தால், வெட்கிச் சிரிப்பான். அது ஒரு விதத்தில், அந்த பையன் தன் மீது கொண்ட கவனத்திற்கும், அவனது முதிரா நடிப்பு முயற்ச்சிக்கும் ஒரு சிறு பாராட்டு போலவும் இருக்கும்.
வகுப்பில் இன்னும் கொஞ்சம் ராஜேஷ் கன்னா கதைகள் பரவத் தொடங்கின. அவனுடைய அப்பா பெரிய ஜெய்லர் என்று பேசிக்கொண்டார்கள். வீட்டிற்கு வந்து அவனை நிறைய அடிப்பாராம். அதனால் தான் அவன் உடம்பில் அத்தனைத் தழும்புகள் இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். நானும் சந்தியாவும் சண்டை போடும் போது, அவன் தன் இருக்கையிலிருந்து திரும்பி எங்களைப் பார்த்து சிரிப்பான். அவள், சும்மாவே தன் இடத்தில் கூனி அமர்ந்திருப்பாள். அந்த ஒரு உடல் மொழியே என்னைத் தூண்டிவிடும். நான் பெஞ்சை நகர்த்துவது போல அவள் மீது பெஞ்சை மோதுவேன். அவள் என் அதிகாரத் திமிரைக் கண்டு துணுக்குறுவாள். சில நிமிடங்களில் இருவரும் ஒருவர் குடுமியை மற்றொருவர் பிடித்துக்கொண்டிருப்போம். வகுப்பே எங்களை சுற்றிக் கூடி விடும். மதிய இடைவேளை முடிந்ததும் வகுப்பு தொடங்கும் போது, இருவரும் அருகில் சீறிக்கொண்டிருக்கும் மூச்சுடன் அமர்ந்திருப்போம். இத்தகைய கலவரங்களில், ராஜேஷ் கன்னா எப்போதும் என் பக்கம் இருப்பது போல எனக்குப் பட்டது. அவன் இயல்பாகத் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அவ்வப்போது என்னைப் பார்த்து சிரிப்பான். இது எனக்கு பெரிய சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே கூட, நான் சந்தியாவுடன் சண்டை போடுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்தேன். நான் அவனுடன் பேசியது இல்லை. ஆனால், மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு அவனை நேரடியாக கிண்டல் செய்ததும் இல்லை. அதனால் கூட அவனுக்கு என்னிடம் ஒரு நல்லெண்ணம் இருந்திருக்கலாம்.
காலை இடைவேளைகளில் வெளியே செல்லும்போதோ, விளையாட்டு வகுப்பின் போது மைதானத்திற்கு செல்லும்போதோ, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதோ, அவன் என்னைத் தொடர்ந்து வருவது போல இருக்கும். நான் திரும்பிப் பார்த்தால், அந்த இடத்திலேயே உறைந்து நின்றிருப்பான். அவன் சற்றே சிரிக்க முயலும் போது நான் முறைப்பதைக் கண்டு ஒரு கால் பின் வைப்பது போல நகர்வான். மீண்டும் என்னைத் தொடர்ந்தே வருவான். வகுப்பில் அத்தனை பேர் இருந்தும், அவன் என்னை மட்டும் இப்படி தொடர்ந்து வந்தது என்னை மிகவும் சங்கடப் படுத்தியது. நான் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பிப்பேன். அவனும் வேகமாக சில அடிகள் முன்னாடி குதித்து வருவான். திரும்பிப் பார்த்தால் முகம் முழுவதும் சிரிப்பாக நிற்பான். அவன் என்னை அழைக்காமலேயே, என்னுடைய சம்மதம் இல்லாமலேயே என்னுடன் இப்படி விளையாடுவது குறித்து எனக்கு மிகப்பெரிய கோபம் வந்தது. அவனை மனதிலேயே அடித்து துவைத்து துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்த கற்பனைக் குரோதம், நான் சந்தியாவுடன் போடும் சண்டைகளையும் ஈடு செய்துவிட்டிருந்தது. மெதுவாக நான் வெளிப்படையாகப் போடும் சண்டைகளே குறையத் தொடங்கின.
ஆனால், அவனை நான் மனதில் ஒவ்வொரு விதமாக அடிப்பதாய் கற்பனை செய்துகொண்டே இருந்தேன். எதைப் பற்றிய கோபமென்றாலும், யார் மீது கோபம் என்றாலும் அவன் மீது காட்ட முடிந்தது. ஆனால், நான் வெளியில் இன்னும் அமைதியாக மாறிக்கொண்டிருததால், அவன் என்னுடன் இன்னும் கொஞ்சம் சகஜமாக விளையாடத் தொடங்கினான். அன்று, என் பின்னாலேயே தொடர்ந்து வந்துகொண்டிருந்தவன், வேகமாக என் தோளை வந்து தொட்டுவிட்டு ஒரேடியாக பின்னால் திரும்பி ஓடிச்சென்று, கடைசி வகுப்பிற்கு பின் ஒளிந்து கொண்டான். நான் திரும்பிய போது, சுவருக்கு பின்னால் இருந்து முகம் மட்டும் காட்டி சிரித்தான். அவன் இரண்டு கைகளும் சுவரைப் பற்றியிருந்தன. நான் வேகமாக அவனை நோக்கி ஓட, அவன் பின்னால் ஓட தயாரானான். வகுப்பு முன் இருந்த திண்ணையிலிருந்து அவன் குதிக்கும் போது நான் அவனைப் பிடித்துவிட்டேன். அதுவரை மனதில் அமுக்கப் பட்ட கோபம் எல்லாம் திமிற, அவனை இரு கைகளாலும் அடிக்கத் துவங்கினேன். அவன் கொஞ்சம் கூட எதிர்க்காமல், ஆசிரியை அவனை அடிக்க வரும் போது தன்னைக் குறுக்கிக் கொள்வது போல குனிந்தான். நான் கைகள் வலிக்க அடிக்கும்போது, அவன் மௌனமாக முனகிக்கொண்டிருந்தான். அவன் உடலே சூடாக மாறியிருந்தது. அவன் முதுகின் ரத்தவோட்டத்தை என்னால் என் கைகளில் உணர முடிந்தது. முதன்முறையாக அவனிடமிருந்து வரும் அந்த முனகல் சத்தத்தை கேட்ட அதிர்ச்சியில் நான் ஒன்றும் பேசாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவன் முகம் வலியில் சிறிது கோணியிருந்தது. அவன் சிறு ஓட்டமாக வகுப்பிற்குச் சென்றுவிட்டான்.
அன்று முழுவதும் என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அதை மறுபடி அவனை அடிப்பது போல கற்பனை செய்து ஈடு செய்யவும் முடியவில்லை. அது ஒருவகையில் என் மேலே திரும்பிவிட்டது போல இருந்தது. அன்று அம்மா சாதம் எடுத்துக்கொண்டு வந்த போது, அவள் மீது பாய்ந்தது. ‘வேண்டாம் போ!’ என்று நான் கையை வீச அது தட்டை கீழே தட்டிவிட்டது. சாதம் தரையெங்கும் சிந்தியிருந்தது. “சனியனே, கோபத்த அன்ன இலட்சுமி மேல காட்டினா, அடுத்த ஜன்மத்துல லச்சுமி மா போலத் தான் பொறப்ப” என்று திட்டினாள். லச்சுமி மா எங்கள் வீட்டில் வேலை செய்பவர். அடுத்த ஜன்மம் என்றெல்லாமல் ஒன்றில்லாமல், ஒரே வாழ் நாளில் நான் லச்சுமி மா போல ஆகிவிட்டால்? நான் விபரீதமான ஒரு தவறைச் செய்திருப்பதாக எனக்கு தோன்றியது. இது எல்லாம் எங்காவது குறித்து வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை மறு நாள் காலை நான் எழுந்ததும், லச்சுமி மா வீட்டில் எழுந்துகொள்ள போகிறேன் என்று நம்பிவிட்டேன்.
ஆனால், மறு நாள் காலை மீண்டும் பள்ளிக்குத் தான் சென்றேன்.இருந்தாலும், அடுத்தடுத்து வரப்போகும் நாளைகளைக் குறித்த பதட்டம் மறைந்திருக்கவில்லை. வகுப்பிற்குச் சென்றதும், எப்போதும் சுவரில் சாய்ந்து வகுப்பைப் பார்த்துக்கொண்டிருக்கும் ராஜேஷ் கன்னா, முன்னால் திரும்பி தன் பெஞ்சு மீது தலை வைத்து படுத்திருந்தான். அன்று முழுவதும் அவன் என்னைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அன்று நினைத்துக்கொண்டேன், நாங்கள் பெரியவர்களாக வளர்ந்ததும் அவன் பெரிய படிப்பு படித்துவிட்டு, கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கொண்டிருக்கப் போகிறான். நான் அதிகம் படிக்காமல் அவனிடம் வேலை தேடிப் போகத்தான் போகிறேன் என. பின், அந்த உறுதியுடன் அவனைப் பார்த்துச் சிரிக்க முயன்றேன். அவன் அதை கவனித்தானா என்று சரியாக நினைவில் இல்லை.