இவ்வாண்டின் ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசை ‘நீர்த்துளி’ நாவலுக்காக (உயிர்மை வெளியீடு) சுப்ரபாரதிமணியன் பெற்றபோது ஆற்றிய ஏற்புரை.
அமரர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும் சிறந்த நாவலுக்கான இந்த பரிசை எனது “நீர்த்துளி” நாவலுக்குப் பெறுவதில் அவரின் தீவிர வாசகன், நண்பன் என்ற வகையில் பெருமைப்படுகிறேன். எழுத்தாளன் வாழும் காலத்தில் அங்க்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர் ஜெயந்தன். அவரது காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை என்ற வருத்தம் எனக்குமுண்டு.
எழுபத்தேழில் திருப்பூரில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டில் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அப்போது ஜெயகாந்தன் ஓரளவு ஓய்ந்து போயிருந்த காலம். அந்த சாயல் பெயர் கொண்ட ஜெயந்தனை வெகுஜன இதழ்கள் முன்னிருத்தியதற்கு காரணங்கள் இருந்திருக்கக் கூடும். அவரின் வெகு ஜன இதழில் வந்தக் கதைகள், கணையாழி படைப்புகள் மூலம் அவரின் தீவிர வாசகர்களாக குறிஞ்சி இலக்கிய வட்ட நண்பர்கள் இருந்தோம். எனது முதல் கதை “சுதந்திர வீதிகள்” திருப்பூரிலிருந்து வந்த விழிப்பு இதழில் அந்த மாதம் தான் வெளியாகியிருந்தது. மாநாட்டினர் தங்கியிருந்த ஒரு விடுதியில் ஜெயந்தனைத் தேடிப் போய் ஒரு அறையில் ஜெயகாந்தனைக் கண்டேன். ஜெயகாந்தனிடமே “ஜெயந்தன் உள்ளாரா?” என்று கேட்டேன். “அப்படி யாரும் இங்கில்லை” என்று அந்த சிங்கம் கர்ஜித்தித்தது.
அந்த மாநாட்டில் ஜெயந்தனின் “ இயக்க விதிகள் 3” என்ற நாடகத்திற்கு ஒத்திகை நட்த்தினோம். பேராசிரியர் ராமானுஜம் பயிற்சியின் போது கூட இருந்தார்.அது முதல் திருப்பூரில் நண்பர்கள் நடத்திய “அயணஸ்கோவின் தலைவர்”, அறந்தை நாராயணின் “மூர்மார்கெட்”, ஞானராஜசேகரனின் “வயிறு”, சங்கரப்பிள்ளையின் “கழுதையும் கிழவனும்”, சி.ஆர்.ரவீந்திரனின் “பசு’’ ,பாலகிருஸ்ணனின் நாடகங்கள், வீதி நாடகங்கள், ஜெயந்தனின் “நினைக்கப்படும் ஒரு பகுதி” ஆகியவற்றின் நிகழ்தலின் போது ஜெயந்தனின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றோம். அந்தக் கால கட்டத்தில் வெகுஜன இதழ்களில் அவரின் படைப்புகள் வெகுவாக வந்தன என்பது பலமாகும். அதுவே அவரின் பலவீனமாகி பின்னால் அவர் கதைகளை வெகுஜன இதழ்கள் நிராகரித்தபோது சிற்றிதழ்களில் எழுதுவது ஆயாசம் தருவது போல் ஒதுங்கியிருந்தார். அவரின் நியாயமான கோபம் அவரை ஒதுங்கச் செய்திருந்தது உண்மை.
அவரின் சமூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது. மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டுபவர். அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய திசையை சரியாகவே சுட்டிக்காட்டியவர். அவர்களுக்கு வாசிப்பு மிக அவசியம் என்று வலியுறுத்தியவர்.அவர்களுக்கான சிறுகதை வகுப்புகளை நட்த்தியவர். சிற்றிதழின் அடையாளமாக வெகு எளிமையாக அவரின் “கோடு” இதழ் இருந்திருக்கிறது.
எனது முதல் நாவல் “மற்றும் சிலர்” 1988ல் வந்த போது அதை வெகுவாக சிலாகித்துப் பேசினார். “புதிய தலைமுறை வெகுபாய்ச்சலாக தாண்டிக்குதித்து முன்னேறுகிறது. பொறாமையுடன் இந்த நாவலைப் பார்க்கிறேன். அதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன். அவர்களுடன் போட்டி போட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெகுவாக ஒதுங்கி நின்று விட்டார் என்று பல கோணங்களில் தென்பட்டிருக்கிறது.அவரின் நாடகத்திற்கான ஒரு அமைப்போ, திரைப்பட முயற்சிகளோ கைகூடவில்லை. கடைசி நான்காண்டுகள் அவருடனான எனது தொடர்பு முழுமையாக அறுந்து போயிருந்தாலும், சொந்த ஊர் மணப்பாறைக்கு வந்து அவர் இலக்கிய கூட்ட செயல்பாடுகளில் இருந்தார் என்பது ஆறுதலாக இருக்கிறது.ஆனாலும் அவை வெளியுலகிற்கு தெரியாத்தாகவும், அவர் அந்நியப்பட்டதாகவுமே இருந்திருக்கிறது. ஆனால் படைப்பிலக்கியத்தில் ஒதுங்கியது போல் இருந்து விட்டார் என்று தோன்றுகிறது.,அவரின் நாவல் முயற்சி முழுமையடையாமல் நின்று விட்டிருக்கிறது.
எனது எட்டாவது நாவல் “நீர்த்துளி”க்கு அவரின் பெயரிலான விருது பெறுவது என்பது ஆறுதலான விசயமாகவே இருக்கிறது. சமீபத்தில் அவரின் மொத்தச் சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் ஆகியவை முழுமையாக தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன.அவை மூலம் அவர் நினைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் அவர் பெயரிலான படைப்பிலக்கிய விருதுகள் மூலம் நினைக்கப்படுகிறார்.இதை அவரது மகன் சீராளனும் அவரது குடும்பத்தாரும் , மண்ப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதுவே அவரின் தார்மீக கோபத்தை புதிய தலைமுறை படைப்பாளிகளுக்குக் கொண்டு செல்வதாக அமையும்.இன்றைய சூழலில் அது அவசியமானது கூட.இந்தச் சூழ்லை அவர் பெரும அபாயமாக கணித்திருக்கிறார். அந்த அபாயத்தை எதிர் கொள்ள வேண்டிய கோபம் அவர் எழுத்தில் இருந்திருக்கிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

