முறுக்கேறும் உண்மைகள் – அகலிகை எதிர்கொள்ளும் உருக்குலைவும் உறைநிலையும்

இம்முறை புத்தகச் சந்தையில் ஒரு நல்ல புத்தகம் எதிர்பாராமல் கிடைத்தது, முனைவர் க.ரத்னம் “இவர்கள் பார்வையில் அகலிகை (அகலிகை பற்றிய படைப்புகளின் விமரிசனம்)” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். மிகவும் தர்மநியாயத்துடன் சரியாக ரூ.47.50 என்ற விலையில் 1998ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் சந்தையில் ரூ.25க்குக் கிடைத்தது. அகலிகையின் வாழ்க்கையைப் பேசும் இருபத்தாறு வெவ்வேறு படைப்புகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு. இதைப் பதிப்பித்ததும் புத்தகச் சந்தையில் சலுகை விலையில் தந்ததும் ஐந்திணை பதிப்பகம்.

இந்த இருபத்தாறு வெவ்வேறு அகலிகை கதைகளிலும் மாற்றத்துக்குள்ளாகும் சமூக விழுமியங்கள் அதன் வெவ்வேறு இயல்புகளுடன் வெளிப்படுகின்றன.  கௌதமரையும் ராமரையும் நோக்கி அறம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கற்பின் தன்மை குறித்த அடிப்படை கேள்விகளைக் கருத்தில் கொண்டு, அகலிகையின் சரித்திரம் வெவ்வேறு வடிவங்கள் பெறுகின்றது – சிலர் அகலிகையின் ‘பிறழ்வை’ அறியாமல் நேர்ந்ததாகவும், சிலர் பிறழ்வே ஏற்படவில்லை என்றும், சிலர் அது உடலளவில் மட்டுமே என்றும், இன்னும் சிலர் அதற்கு இந்திரனுடனான இளம்பருவத்து நட்பைக் காரணம் கூறியும், வேறு சிலர் கௌதமர் அவளை மணம் முடித்தது நேர்மையற்ற வழியில் என்று சொல்லியும் அகலிகைக்கு நியாயம் காண்கின்றனர். இதற்கு எதிர் திசையிலும் சிலர் அகலிகைக்கான நியாயங்களைப் பேசுவதைப் பார்க்கிறோம்.  அகலிகை என்ற பெண் மட்டும் உருக்குலைவதோ உறைநிலையடைவதோ இல்லை – இந்தக் கதைகளில் உண்மையும்கூட உருக்குலைவதையும் உறைநிலையடைவதையும் பார்க்கிறோம்.  அகலிகையின் வெவ்வேறு கதைகள் உண்மையின் தன்மை குறித்தே அடிப்படை கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.

இதெல்லாம் இப்போது சொல்வது.  உண்மையில், புதிதாய் என்ன இருக்கப் போகிறது என்ற அவநம்பிக்கையுடன்தான் இப்புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன், ஆனால் சில பக்கங்களிலேயே பெண்ணின் உணர்வுகளுக்கு நாம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மதிப்பு தந்து வந்திருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். தவிரவும், அவரவர் காலத்தை மீறித் தங்கள் சிந்தனையின் போக்கில் தனித்து நிற்பவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்தப் புத்தகம் உணர்த்தியது.

அகலிகை கதையின் வெவ்வேறு வடிவங்கள் குறித்த ஒரு அருமையான பட்டியல் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது. மகாபாரதத்தில் நாமறியாத ஒரு அகலிகை கதை இருக்கிறது – அதையொட்டி எம் வி வெங்கட்ராம் ஒரு சிறந்த சிறுகதை எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன் அகலிகையை வைத்து இரு வேறு கதைகள் எழுதியிருக்கிறார். ந பிச்சமூர்த்தி கவிதை வடிவில் அகலிகை கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்.இப்படி வெவ்வேறு படைப்பாளிகள் அகலிகையை எப்படி பேசுகிறார்கள் என்பதைப் பார்க்கும் முன் ஒரு அதிசய அகலிகையைப் பார்த்தாக வேண்டும் (அதற்கு முன் கவிஞர் முருகு சுந்தரம் தன் “வெள்ளை யானை” என்ற பிராய்டிய அகலிகை சரிதத்தில் கௌதம முனிவரை “பெருந்தாடி பென்ஜான்சன்” என்று அழைத்திருப்பதைக் குறிப்பிட்டுச் செல்கிறேன்- அகலிகை கதை எப்படிப்பட்ட வாசிப்புகளுக்கு உட்படுத்தப்படுகிறது பாருங்கள்).

இவள் ஒரு மார்க்சிய அகலிகை. இவள் பெயர் கல்லிகை. இவளைப் படைத்தவர் ஞானி. மார்க்சியம் அந்நிய சிந்தனைகளுக்கு முற்றிலும் அடிமைப்படாமல் நம் வேர்களிலிருந்து கிளைத்தால் நமக்குக் கிடைக்கக்கூடிய சாத்தியங்களை வெளிப்படுத்துகிறது கல்லிகை. மார்க்சியத்தின் கொடூர சொல்லாடலைத் தவிர்த்த்தால் அது நமக்கே உரிய மனிதாபிமானமாக மட்டுமே வெளிப்படக் கூடும் என்பதற்கு கல்லிகை ஒரு காட்டு.

கல்லிகையின் முன்னுரையில் ஞானி எழுதுவது இது ; “புதுக்கவிதை, மரபின் தொடர்ச்சியாக – அதே சமயம் மரபின் விடுபடலாக – மரபின் சாரத்தோடு வலிமை பெறுமே ஒழியத் தளர்ச்சி பெறாது”. புதுக்கவிதை மட்டுமல்ல, இந்திய மார்க்சியமும் சீன ரஷ்ய கானல் வெளிகளில் ஆகாயக் கோட்டைகள் கட்டுவதைத் தவிர்த்து இந்திய மரபின் தொடர்ச்சியையும் விடுபடலையும் ஒரு சேர நிகழ்த்தியிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு முயற்சியை ஞானி தன் கல்லிகையில் செய்திருக்கிறார்.

டாக்டர் க ரத்னம் மேற்கோள் காட்டும் கல்லிகை கவிதையின் அடிகள் படிப்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றன. ஆனால் அதற்கு மார்க்சியத்தின் ஈரமற்ற சொல்லாடலை மட்டுமே குறை சொல்ல முடியும் – ஞானியின் அபரித கற்பனையைக் குற்றம் சொல்வதற்கில்லை.

கல்லிகையில் கௌதமரை சமயமாகவும் இந்திரனை முதலாளித்துவமாகவும் உருவகித்திருக்கிறார் ஞானி. அகலிகை உழைக்கும் வர்க்கத்தின் உருவகமாக இருக்கிறாள். இந்த உருவகத் தன்மைகளுக்கு ஏற்றபடி ஞானியின் அகலிகை பகலில் கௌதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கௌதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக் கொள்கிறாள் அவள். இது குறித்து க ரத்னம், “உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவத்திற்கு அடிகோலும் தொழிற்புரட்சியால் புத்துயிர் பெற்றதாக மயங்கிய மயக்கமே கல்லிகை இந்திரனிடம் கொண்ட மயக்கமாக உருவகிக்கப்பட்டுள்ளது,” என்று எழுதுகிறார்.

அகலிகையின் மயக்கத்தின் விளைவாக அவள் வயிற்றில் ஒரு கரு உருவாகிறது. இந்தப் புத்துயிர்ப்பு அவளுக்கு மகிழ்ச்சியளித்தாலும் இந்த செய்தி முதலாளித்துவ இந்திரனுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது – தன்னுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க ஆள் வந்து விட்டான் என்று அஞ்சி அவன் அகலிகையை விலக்கி விடுகிறான். அப்போது பார்த்து சமயாச்சாரப் பிரதிநிதி கௌதமர் அங்கே வந்து விடுகிறார். அறம் பேசும் சமயத்தின் முன் லாபம் பார்க்கும் முதலாளித்துவம் நிற்க முடியுமா? இந்திரன் ஓடி விடுகிறான். உழைக்கும் வர்க்கம் கல்லாய்ச் சமைந்து நிற்கிறது.

ஆனாலும் இது மார்க்சிய அரசியல் விழிப்புணர்வு பெற்ற அகலிகையல்லவா? ஆசை காட்டி மயக்கிய இந்திரனை நினைக்கும் அவளது கோபப் புலம்பலில் மார்க்ஸியப் பாடங்கள் உயிர் பெறுகின்றன.

“எனது உடலின் மூலை முடுக்குகளில்
ஊறிய இன்பத்தை ஒரு துளி விடாது
உறிஞ்சிக் குடித்த சுரண்டல் மன்னனுக்கு
என்னை நானே இழந்து விட்டது எப்படித் தெரியும்?
கொடுத்தேன் வாங்கினேன் என்ற
கொள்கைவாத வணிகப் பேய்க்கு
எனது நாட்டம் எப்படித் தெரியும்?”

கௌதமனும் போய் விடுகிறான். கல்லாய் உறைந்து தனித்து நிற்கும் கல்லிகை ஒரு கனவு காண்கிறாள்- அதில் இந்திரனும் கௌதமனும் இணைந்து ஒரு மனிதனை “நீயே இறைவன்” என்று வாழ்த்துகிறார்கள். அந்த மனிதன் அவர்களுடைய காலடியில் கிடக்கிறான். அதுவும் கழுத்து நெறிபட்டு. அந்த அனாதையின் கண்களில் அகலிகை தன்னுருவைக் காண்கிறாள். சமயமும் முதலாளித்துவமும் கைவிட்ட தங்களுக்கும் ஒரு விடியல் வரும் என்பதை இந்தக் கனவு அகலிகைக்கு உணர்த்துகிறது.

“காலம் இயங்காத காட்டு வெளியில்
பக்திப் பெருக்கிலே படகோட்டி வாழ்ந்த
வேடர் குலத்தைத் தோழமை கொண்டு –

உடமைப் போரால் உறவு குலைந்து
நாடு விட்டோடி நடைப்பிண மாகிய
பேதை மாக்களுக்கு ஆற்றல் காட்டி-

மலைகளைத் தகர்த்து கடல்களை நிரப்பி
உழைப்புக் காற்றிலே உயரப் பறக்கும்
வீரர் குலத்தை சோதரர் ஆக்கி-…:

இராமன் வருவான் என்ற கனவில் காத்திருக்கிறாள் கல்லிகை.

புதுமைப்பித்தன் தன் “சாப விமோசனம்” சிறுகதை குறித்து எழுதும்போது இது போன்ற மாற்றுப் பிரதிகளை ஜனக ராகத்திலிருந்து ஜன்ய ராகங்கள் பிறப்பதோடு ஒப்பிடுகிறார். அந்த நியாயம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அகலிகையின் ஆதார சுருதியை நாம் இழக்காமலிருக்க வேண்டுமென்றால் புதுமையான வெவ்வேறு அகலிகைகளைக் காணுமுன் அவற்றுக்கு ஆதாரமான இருவேறு அகலிகைகளை அறிந்து நினைவில் வைத்திருப்பது அவசியமாகிறது. ஒன்று ச.து.சு. யோகியார் தன் கவிதை நூலின் முன்னுரையில் காட்டும் அகலிகை. இன்னொன்று,​​ கம்ப​ராமாயணத்துக்கு முற்பட்ட வியாச பாரதத்தில் உள்ள அகலிகை.

முதலில் ச.து.சு. யோகியாரின் குறிப்பு-

“வேதத்தில் அகல்யாவை பற்றி பல சூசகமான கருத்துகள் இருக்கின்றன. அவள் ஒளி. ஆகவே குற்றமற்றவள் என்பது அவற்றுள் முக்கியமான கருத்து. பின்னர் கலப்பையால் பண்படுத்தப்படாத பூமி தேவி அகல்யா என்னும் கருத்தும் ஏற்பட்டது. பிறகு இவ்விரு கொள்கைகளும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டன. இப்பிணைப்பே இதிகாசத்தில் அகல்யாவின் கதையாக வெளிப்படுகிறது”

இந்திரன் மழைக் கடவுள் என்று சொல்லும்போது, அகலிகை கதைக்கு ஒரு புதிய வாசிப்பு கிடைக்கிறது. கற்பு, களங்கம் மனதுக்கா உடலுக்கா, பெண்ணியம், ஆசாரம், காமம் என்பன போற்ற குழப்பங்களில்லாத வாசிப்புக்கு இது உடன்படுகிறது.

பாரதக் கதையும் குழப்பமே இல்லாத ஒன்றுதான். “சாந்தி பர்வத்தில் தர்மருக்கு பீஷ்மர் உபதேசம் செய்யும் பீஷ்ம கீதையில் வரும் கதைகளுள் ஒன்றாக அகலிகை வரலாறு இருநூற்றெழுபத்து இரண்டாவது அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது,” என்று குறிப்பிடுகிறார் க. ரத்னம். தர்மர், எந்தக் காரியத்தை விரைந்து முடிக்க வேண்டும், எதைத் தாமதிக்க வேண்டும். என்ற தர்மத்தை உணர்த்தும்படி பீஷ்மரிடம் கேட்கிறார். அப்போது பீஷமர் சொல்லும் கதைதான் அகலிகை கதை.

இந்தக் கதையில் அகலிகைக்கும் கௌதமருக்கும் சிரகாரி என்று ஒரு மகன் இருக்கிறான். அவன் பாரத காலத்து ஹாம்லட்டாக இருக்கிறான்- ‘உறுதிப்பாட்டின் உத்தம நோக்கம் சிந்தனையின் வெளிர் நிழல் படர்ந்து தொய்வுற்று, அர்த்தம் பொதிந்த அவசர காரியங்கள் திசைதடுமாறித் தம் செயல்தன்மை இழக்கின்றன’ என்று அவனும் தனித்துரையாடல் செய்யக் கூடியவன். யோசித்து யோசித்து யோசனையில் தாமதித்து செயல்கள் அனைத்தும் முடங்கிப் போவது அவனுக்கு வாடிக்கையாக இருக்கிறது. இந்த சிரகாரியிடம்தான் கௌதமர் காரணம் சொல்லாமல், “உன் தாயைக் கொல்” என்று உத்தரவிட்டுவிட்டு காட்டுக்குப் போவதாகத் தொடங்குகிறது பாரத அகலிகையின் கதை.

சிரகாரிக்கு அப்பா ஏன் அப்படி சொல்கிறார் என்பது புரிவதில்லை. அப்பா சொன்னதைச் செய்வது சரியா தவறா, தர்மத்துக்குத் தக்கபடி இருக்கலாமா கூடாதா, எது தர்மம் என்று பல்வகைப்பட்ட சிந்தனைகளில் காலம் தாழ்த்த நேரிடுகிறது- ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் சொல்வதுபோல், மனசாட்சி நம்மைப் போல் அவனையும் கோழையாக்கி விடுகிறது.

காட்டுக்குச் சென்ற கௌதமரின் கோபம் தணிகிறது. அவர் நடந்ததை நினைத்துப் பார்க்கிறார்- ‘அதிதியாக வந்த இந்திரனிடம், ‘நான் உன்னைச் சேர்ந்தவன்.’ என்று நான் சொன்னதால்தானே இவ்வளவும் நேர்ந்தது?- பாவம் இந்திரன்தான் என்ன செய்வான், அகலிகைதான் என்ன செய்வாள், எல்லாரையும் மன்னித்துவிட வேண்டியதுதான்,” என்று முடிவெடுக்கிறார் அவர்.

எதையும் தள்ளிப் போடும் சிரகாரி இதையும் தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கத்துடன் வீடு திரும்பிய கௌதமரின் காலடியில் கோடாலியை போட்டு விட்டு நமஸ்கரிக்கிறான் சிரகாரி. எல்லாம் நல்லபடியே முடிந்தது என்று கௌதமர் தன் மகனை வாரியணைத்து வாழ்த்துகள் கூறி, தேவைப்பட்ட காரியங்களைத் தாமதித்துச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு சில சுலோகங்கள் அருளுகிறார்.

எம் வி வெங்கட்ராம் மட்டுமே பாரதக் கதையையொட்டி தன் படைப்பைச் செய்திருக்கிறார். ஏனைய அனைவருக்கும் ராமாயணத்தில் வரும் அகலிகையின் கதையே மீளுருவாக்கத்துக்குத் தேவையான உந்துதல் தருவதாக இருந்திருக்கிறது. பாரதத்தில் வரும் அகலிகை கதையில் தர்மம் என்பது குறித்த கேள்விகளோ, அதனால் ஏற்படும் உளச் சிக்கல்களோ குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படவில்லை. இந்திரன் – அகலிகை நடத்தை சற்று உறுத்தலாக இருந்தாலும் அது இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுகிறது. இவர்களுக்கோ கௌதமருக்கோ அந்த பின்னிரவின் சம்பவம் எந்த ஒரு குற்ற உணர்வையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பாபம் சாபம் விமோசனம் என்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய் விடுகிறது.

ராமாயணத்தில் வரும் அகலிகை கதையில் பேசப்படும் பிழைக்குக் காரணமாக இருப்பது அகலிகையோ இந்திரனோ கௌதமனோ அல்ல – பாரதத்திலும் ஏறத்தாழ இது போன்ற நிகழ்வே நடக்கிறது, ஆனால் அங்கு தனி மனிதர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை : ஏதோ ஒரு தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள். அதில் தெரிந்தோ தெரியாமலோ பிழை ஏற்படுகிறது, இந்தப் பிழை உணர்ச்சிப் பெருக்காலோ அறிவின் மயக்கத்தாலோ ஏற்பட்டதாக உணரப்படுவதில்லை – ஒரு சூழலின் தவிர்க்க முடியாத கருவிகளாக இவர்கள் இருக்கிறார்கள். அதை உணர்ந்து தங்கள் செயல்களைத் திருத்திக் கொண்டு விடுகிறார்கள். இன்னும் பொதுமைப்படுத்திப் பேசினால், ஏன் இதைச் செய்கிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதே முக்கியமாக இருக்கிறது.

பாரத அகலிகையின் விழுமியங்கள் சூழ்நிலை சார்ந்ததாகவும் ராமாயண அகலிகையின் விழுமியங்கள் அறநிலை சார்ந்ததாகவும் உள்ளது என்பதை இவ்விரு கதைகளையும் ஒப்பிடும்போது காண்கிறோம் .

பரவலாக ஏற்கப்பட்ட அன்றாட நிகழ்வுலக உண்மையின் போலி மேற்பூச்சு உடைபடும் கட்டங்கள் நிரந்தர உண்மையைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அறம் உடையும் நிகழ்வுகள் மூலம் உண்மையின் தற்காலிக ஜாலங்களும், அவற்றின் மாற்றங்களால் உண்டாகும் பல்லிளிப்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.  சூழ்நிலை சார்ந்த முரண்கள் மூலம் உண்மையின் பிளவுகளில் கசியும் தோற்றமயக்கங்களுடன் சிற்சில நிரந்தர உண்மைகளும் வெளிப்படத்தான் செய்கின்றன. தற்காலிக உண்மை தன்னுள்ளடக்கமாய் கொண்டுள்ள அதன் நிரந்தரத் தன்மைகள் பாரதத்தில் நம்பிக்கைக்குரியனவாக இருக்கின்றன. கௌதமரின் தீர்வும் அகலிகையின் குற்றவுணர்வற்ற ஏற்பும் வெளிப்படுத்தும் பாரத தர்ம சூழலானது இப்படிப்பட்டதாக இருக்கிறது.  ஆனால் ராமாயண அகலிகையில் இந்த உண்மையின் இயல்பு இறுகி விடுகிறது –  பொதுமறைக்குரிய இயல்புகள் கொண்ட நிரந்தரத் தன்மையை இந்த அற விழுமியங்கள் அடைந்து விட்டிருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் அகலிகையின் இருபத்தாறு வெவ்வேறு படைப்பாக்கங்கள் பேசப்படுகின்றன – ஆனால் பாரதத்தில் வரும் அகலிகை கதைக்கு மிக நெருக்கமாக உணர்வளவில் புதுமைப்பித்தன் ஒருவரே இருக்கிறார். அவரும் ராமாயண அகலிகையின் கதையைப் பின்பற்றியிருந்தாலும் அவர் முன் நின்ற கேள்விகள் உணர்வளவில் பாரதத்துக்கே உரியவை. அவரது “அகல்யை” சிறுகதையில், “அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்றே சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?”என்று கேட்டுவிட்டு, “கண்ணே அகல்யா! அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்றக் கல்லாய் சமைந்து விட்டது?” என்று அகல்யாவின் தலையைத் தடவிக் கொடுக்கிறாராம் கௌதமர். பாபம் சாபம் விமோசனம் என்ற நாடகீய தருணங்களைத் தவிர்த்த இந்த இயல்பான கதைசொல்லல் ராமாயணத்தைவிட பாரதத்தையே ஒட்டிய ஒன்று, இல்லையா?

ஆனால், புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்” பாபத்தின் விளைவுகளோ சாப விமோசனமோ மகிழ்ச்சியானவையல்ல என்றுதானே சொல்கிறது என்று கேட்கலாம். ஆனால், அந்தச் சிறுகதையின் மிக முக்கியமான சரடை முனைவர் க. ரத்னம் குறிப்பிடுகிறார் –

“உலகத்தின் தன்மை என்ன இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது! மனசுக்கும் காரண சக்தியின் நிதானத்திற்கும் கட்டுப்படாமல் நிகழ்ந்த ஒரு காரியத்துக்காக பாத்திரத்தின் மீது தண்டனை? “அம்மா!” என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணன்குகின்றான் ராமன்,”

என்று புதுமைப்பித்தன் எழுதுவதாக மேற்கோள் காட்டியிருக்கிறார் க. ரத்னம். ராமனின் சங்கடமே புதுமைப்பித்தனுக்கும் கதையின் மைய உணர்வாக இருக்கிறது- சாப விமோசனத்தை உண்மையின் முறுக்கேறிய தன்மைக்கு எதிரான விமரிசனமாகவும் வாசிக்க இடமுண்டு.

இந்தத் தொகுதியில் தனித்து நிற்கும் புதுமைப்பித்தனைத் தவிர ஏறத்தாழ அனைவரும் ராமாயண அகலிகையின் நிலையால் உருவாகும் கேள்விகளுக்கு தங்களுக்குத் தகுந்த விடை காணவே முற்பட்டிருக்கின்றனர். சிலவற்றைச் சொல்வதானால், இந்திரன் சேவலாகவே கூவினானா, பூனையாகவே வெளியேறினானா? அல்லது அவை வெறும் உருவகங்களா? அகலிகையின் குற்றம் உடளளவு மட்டுமா அல்லது அவள் தன் நெஞ்சினாலும் பிழை செய்தவளா? அவற்றுக்கான நியாயங்கள் என்னவாக இருக்க முடியும்? இந்திரனுக்கு அளிக்கப்பட்ட சாபம் என்ன? அதைத் தர்க்கத்துக்குப் பொருத்தமாக எப்படி மாற்றி எழுத முடியும்? மூவரில் யார் குற்றவாளி, யாருக்கு எப்படிப்பட்ட தண்டனைகள் பொருத்தமாக இருக்கும்? இது போன்ற கேள்விகள்.

கேள்விகள், அவற்றுக்கு வெவ்வேறு ஆசிரியர்கள் காணும் விடைகள் – அதன்வழி அவர்கள் முன்வைக்கும் சமூக விமரிசனங்கள் : ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன, இவை அகலிகை கதை, அதன் மையத்தில் இருக்கும் கற்பு குறித்த விழுமியங்கள், நமக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருந்து வந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

இன்றுள்ள நிலையில் அகலிகையை நினைத்துப் பார்க்கும்போது ஒரு நண்பர் பேச்சு வாக்கில் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது : காலம்தோறும் பெண்ணின் இல்லற வாழ்க்கை கடும் நெருக்கடிக்குள்ளான ஒன்றாகவே இருந்திருக்கிறது – அவளது மணவாழ்வில் ஒரு நிச்சயமின்மை எப்போதும் இருக்கும் ஒன்றாகத் தொடர்ந்து வந்திருக்கிறது. இன்று பெண் ஓரளவு தனித்து வாழக் கூடிய நிலைக்கு வந்து விட்டதால் ஆண்களின் வாழ்வையும் இப்போது அந்த நிச்சயமின்மை அச்சுறுத்தத் துவங்கிவிட்டது, என்றார் அவர். இன்று அகலிகை கதை எழுதப்பட்டால் அதன் வடிவம் நிச்சயம் வேறாக இருக்கும். கௌதமனுக்கு சபிக்கும் உரிமை இருக்கிறதா என்பதே கேள்விக்குரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது போன்ற தொகுப்புகளின் அவசியத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு சமூகம் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படிப்பட்ட விழுமியங்களைப் பேசியிருக்கின்றன என்ற ஆவணபடுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று. அதை முனைவர் க. ரத்னத்தின் இந்த நூல் தன்னளவில் சிறப்பாகவே செய்திருக்கிறது.

இன்னுமொன்று சொல்ல வேண்டும். தெரிதா போன்றவர்கள் எழுத்தை வாய் மொழி வார்த்தைகளின் குறியீடாகக் கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை எழுதும்போது அது தான் குறிப்பிடும் அந்த ஒரு ஒரு அர்த்தத்தைத் தவிர மற்ற அனைத்தையும் நிராகரிக்கிறது. பேச்சில் எப்போதும் மறுத்து, அல்லது கேள்வி கேட்டு அதன் மாற்றுப் பொருளை நிறுவ இடமிருக்கிறது. ஆனால் எழுத்து, தன்னியல்பில் இருமையை உருவாக்குவதாக இருக்கிறது என்று அவர்கள் சொல்வதாகத் தெரிகிறது. பேச்சின் தற்காலிகத்தன்மை எழுதும்போது உறைந்து விடுகிறது. எனவே எழுத்துப் பிரதிகள் ஒரு புனைவுலகை மட்டுமே உருவாக்குகின்றன- அதற்கு மெய்நிகர் உலகின் மெய்ம்மைதான் உள்ளது. என்றலும், தான் எழுத்தில் இருப்பதால் எழுத்தில் சொல்லப்பட்டவை தமக்கென்று ஒரு தனி முறுக்கு பெற்று விடுகின்றன.

நிகழ் உண்மை மிக மென்மையானது, தற்காலிகத் தன்மை கொண்டது. அது எழுத்தின் முறுக்கேறிய உண்மையை உரசும்போது இரண்டாகச் சிதைவது தவிர்க்க முடியாத ஒன்று என்கிறார்கள். ஆனால் இது போன்ற தொகுதிகளில் நமக்குக் கிடைக்கும் அகலிகைகள், அவர்கள் வெளிப்படுத்தும் வெவ்வேறு உண்மைகள், பேச்சைப் போலவே எழுத்தும் உரையாடலின் தன்மை கொண்டதுதான் என்பதை உணர்த்துகின்றன. நவீனத்துவத்தின் சிதைவுற்ற உண்மைக்கு மாற்றாக இவை இயங்க முடியும்.

இதை ஒப்புக்கொள்ளும்போதே நாம் இந்த மாற்று வாசிப்புகளின் இன்னொரு சிக்கலையும் மறக்கக் கூடாது. கௌதமனை ‘பெருந்தாடி பென்ஜான்சன்’ என்றழைப்பது, அகலிகையை “வரண்ட வயலைச் சாசனமாகப் பெற்ற நான் வளத்தைப் பக்கத்துக்கு வயல்களில் தேடினேன்,” என்று சொல்லக்கூடியவளாகச் சித்தரிப்பது, போன்ற அசாத்திய கற்பனைகள் பெயரளவில் மட்டுமே அகலிகையின் கதைகளாக இருக்க முடியும் – அதே கதையைச் சொன்னாலும், அகலிகையின் ஜீவனை இப்படிப்பட்ட பிறழ்வாசிப்புகள் தொலைத்து விடுகின்றன. இந்த உருக்குலைந்த உண்மைகள் பாராட்டப்படும் சூழலில் உண்மை தன் உய்வண்ணம் இழக்கிறது.

(“இவர்கள் பார்வையில் அகலிகை – (அகலிகை பற்றிய படைப்புகளின் விமர்சனம்)” – டாக்டர் க. ரத்னம், 1998 பதிப்பு, 208 பக்கங்கள், ரூ.47.50, ஐந்திணை பதிப்பகம்)