டபுள் டாக்டர்

விடுமுறைக்குப் பிந்தைய வெயில் முடியா காலத்தின் காலைப்பொழுது. நாங்கள் புதிதாய்க் கல்லூரி வந்தது போல் உணர்ந்தோம். பொதுவாக இத்தகைய நல்ல நேரங்களில் பாடத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்பது மரபு. இன்றும் அவ்வாறே. மாட்டுக்கு முன் குலை காட்டி நகரச் செய்வது போலச் சில நாட்களைச் சற்றுத் தளர்வாக விட்டுப் பின் இறுக்குவது கல்லூரியின் வழி . புது உடைகளும் , புதிய காதல்களும் , கலைந்த காதல்களும் விரிவாகப் பேசப்பட்டன. இந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. பாட அட்டவணையைத் துறையின் அலுவலக உதவியாளர் வந்து கதவில் உள்ள கண்ணாடிப் பலகையைத் திறந்து சொருகினார். அதாவது எங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்று அவர்கள் வசதிப்படி தீர்மானித்து விட்டார்கள். அதை வெறுப்புடனும் ஆனால் எந்தப் பாடத்தை யார் எடுக்கிறார்கள் என்ற ஆர்வத்துடனும் பார்க்க முண்டியடித்தோம். ஆசிரியர்களில் பாதிப்பேர் புது முகங்கள்.

ஒரு பெயர் ரொம்பவே வித்யாசமாக இருந்தது. டாக்டர் பிரவீண் டண்டன். டண்டன் ஓ! பட்டப் பெயர் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. டாக்டர் என்பது தான் எங்களை ஆச்சர்யப் படுத்தியது. வறண்ட , உள்ளடங்கிய கிராமத்தில் உள்ள இந்தக் கல்லூரிக்கு பி.ஹெச்.டிக்கள் வருவதில்லை. இன்று வரை பிரின்சிபால் மட்டுமே பி.ஹெச்.டி. சிலர் வந்தது போல்ப் போனார்கள். பி.ஹெச்.டி முடித்தவர்களை நினைத்தாலே பயமாய் இருக்கிறது . எங்களளவில் அவர்கள் அரைக் கிறுக்குகள். பிரின்சிபால் அதன் உச்சம். ஒன்று அடிப்படையையே விரிவாக எடுத்துக் கொண்டே இருப்பார். உடனே தாவி அதன் உச்சத்தை புரியாத மொழியில் பேசிக்கொண்டிருப்பார் போர்டுடன். மாணவர்களை விட போர்டு அவருக்கு நண்பன். அதனுடன் தானே சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நல்லவேளை பிரின்ஸிபாலுக்கு ஒரு சப்ஜெக்ட்தான். அதையும் வெளியில் ட்யூசன் படித்துதான் பாஸானோம். இன்னொரு டாக்டரா ?

இப்படிப் புதிதாக வந்த ஆசிரியரைப் பற்றி விசாரிப்புகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம். பாடம் எப்படி நடத்துவார் ? குடும்பம் எப்படி ? மாணவிகளுக்குச் சலுகைகள் கொடுப்பவரா ? உடைகள் எப்படி ? இதற்கு முன் எங்கு வேலை பார்த்தார் ? பிட் அடிப்பதை கண்டும் காணாமல் இருப்பாரா? இண்டெர்னல் மதிப்பெண்கள் நன்றாகப் போடுவாரா ? பிராக்டிக்கல்ஸில் போட்டுப் பார்ப்பாரா ? இப்படிப் பல கேள்விகள். அதை எப்போது எதற்குப் பயன்படுத்த வேண்டும் எங்களுக்குத் தெரியும். இந்தப் பி.ஹெச்.டிக்களின் பிரச்சனையே பெரும்பாலும் முசுடுகள். இவற்றைப் பற்றி மூன்றாம் மனிதர்களிடமிருந்து தான் அறிய முடியும். குறிப்பாக பியூன்களிடமிருந்து.

இவர் விசயத்தில் அதுவும் முடியவில்லை. எப்பொழுதும் நூலகத்தில் இருந்தார். பிரின்ஸிபால் நேரடியாக வேலைக்குச் சேர்த்தாராம். இரண்டு பி.ஹெச்.டிக்கள் முடித்திருக்கிறாராம். ஐயோ ! செத்தோம். அப்படியானால் முழுக் கிறுக்காகத்தான் இருக்க முடியும். நிறைய தொழில் நுட்ப இதழ்களில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறாராம். இத்துறையில் வட இந்தியாவில் பிரபலமானவராம். ஏதாவது சொல்லிக் கொடுக்கத் தெரியுமா ? தெரியாவிட்டால் கூடப் பரவாயில்லை. வந்து குழப்பாமல் இருந்தால் போதும். நாங்களே படித்துக் கொள்வோம்.

அந்த நாளும் வந்தது. எதிர்பார்த்தது போலவே கவனமற்ற உடைகள் . கலைந்த தலை. கண்ணாடி. ஆனால்…

college-prof

நன்றாகப் புரியும்படியே சொல்லிக் கொடுத்தார். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதில் ஆரம்பித்து என்ன தெரியவேண்டும் என்பதில் முடிக்க வேண்டும் என்பது தெரியாது. சிலர் ஆற்றுவெள்ளம் போல் பொங்கி முடிப்பர். மாணவர்கள் தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இவர் அப்படி இல்லை என்பது எவ்வளவு பெரிய ஆறுதல். நிச்சயம் ஆறுதல் தான். என்ன நம் மொழி பேசத் தெரியவில்லை. இடையிடையே அசட்டு ஜோக்குகள் அடிக்க வில்லை. ஆனால் தெளிவான படங்கள். திருத்தமான, சரளமான, கச்சிதமான விளக்கம். எளிய ஆங்கிலம். மாணவர்களின் வருகைப் பதிவேடு குறித்து கவலைப் படுவதில்லை. அப்பாவைக் கூப்பிட்டு வரச்சொல்வதில்லை. வருகிறார். பாடம் எடுக்கிறார். போகிறார். பிடித்த மாணவர்கள் என்று லிஸ்ட் வைத்துக் கொள்ளவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மாணவர்களுக்குப் பிடித்திருந்தது. பிற ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை.

சில புதிர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் அவரைப் பற்றிய எங்கள் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் யார்? எங்கிருந்து வந்தார்? பிள்ளைகள் உண்டா? தம் அடிப்பாரா? ஏன் டிபார்ட்மெண்ட் ஆசிரியர் அறையில் போய் உட்கார்வதில்லை. எப்பொழுது பார்த்தாலும் லைப்ரரிக்கே போய் விடுகிறார். ஏன் டூருக்கு வரமாட்டேங்குறார். ஏன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படி முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம் தான். இருக்கட்டும் . பாடம் நன்றாக எடுக்கிறார் அல்லவா ?

என் வகுப்பு மாணவிகளுக்கு ஒரு சந்தேகம். இவர் ஒரே பேண்ட்டைத் தான் வாரம் முழுக்க அணிகிறாரா அல்லது ஒரே மாதிரியாகச் சில பேண்ட்களை அணிகிறாரா என்று. ஒருத்தி தன் நெற்றி ஸ்டிக்கர் பொட்டை எடுத்து அவரது பேண்ட்டில் ஒட்டி விட்டாள். ஒரு நாள் போனது. இரண்டு நாள் போனது. ஒரு வாரமும் போனது. மறு வாரத் துவக்கத்திலும் பொட்டு பேண்ட்டில் இருந்த இடத்திலேயே இருந்தது. மாணவிகள் மட்டும் அரைச் ஜாண் உள்ளடங்கி உட்கார்ந்தார்கள். டபுள் டாக்டர் டண்டண் என்று பெயர் வைத்தோம். அவ்வப்பொழுது டபுள் டாக்டர் டண்டண் அதர் ப்ரொஃபெஸர்ஸ் டவுண் டவுண் என்றும் சொல்லிக் கொண்டோம்.

பாடம் எடுப்பதைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு நாள் கடினமான பாடம். எங்கு பார்த்தாலும் செமி லாக் சீட்டைப் பயன்படுத்தி தோராயமான முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அளக்க முடியும் சப்ஜெக்டை நடத்திக் கொண்டிருந்தார். அன்றைக்கு பெல் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது. அவ்வப்பொழுது மணி ஒலிப்பதும் நீண்டு ஒலிப்பதும் நின்று விடுவதுமாக இருந்தது. மனுசன் மணி ஒலிப்பதையும் நிற்பதையும் கூட தொடர்பு படுத்திப் பாடம் நடத்தினார். வகைப் படுத்துதல் வந்த பொழுது கல்லூரியின் ட்ரஸ்ட் ஆஃபீசை ஒப்பிட்டுப் பாடம் நடத்தினார். எவ்வளவு அழுந்த உள்வாங்கி இருந்தால் காணும் பொருளில் எல்லாம் , கேட்கும் ஓசையில் எல்லாம் சப்ஜெக்டைத் தொட்டு பாடம் எடுக்க முடியும். அப்பப்பா..கொஞ்சம் கூட அசட்டுத்தனம் இல்லை. தாவல் இல்லை. சுருக்கம் இல்லை. கச்சிதம்! கச்சிதம்!

வகுப்புகள் முடிந்தன. தேர்வுகள் முடிந்தன. அடுத்த விடுமுறையும் முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக முதல் நாளே முடிவுகளும் வெளிவந்தது. கஸ்டமான டண்டண் பாடத்தில் தொன்னூறு சதவீதத்திற்கும் அதிகமானோர் பாஸ் செய்திருந்தோம். பொதுவாக இப்படி நடந்தால் ஆசிரியர்கள் தங்களால் தான் இப்படி என்று சொல்லிக் கொள்வார்கள். அந்த வராண்டாவிலேயே குறுக்கும் மறுக்குமாக நடப்பார்கள். பெருமிதத்தைக் காட்டிக் கொள்ள. மோசமான ரிசல்ட் வந்தால் மாணவர்கள் திறமை மோசம் என்பதில் ஆரம்பித்து வினாத்தாள் கடினம் என்பது வரைக் காரணம் சொல்வார்கள். இவர் என்னடாவென்றால் ஆளையே காணோம். என்ன அடக்கம். ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

ஆளைக் காணோம். லைப்ரரியிலும் காணோம். அடுத்த செமஸ்டருக்கு அட்டவணையை ஒட்டினார்கள். அவர் பெயர் இல்லை. எங்களுக்குப் புதிர் அதிகமானது. எல்லோரும் அவரவருக்குத் தெரிந்த ஆசிரியர்களிடம் விசாரித்தோம் . பலருக்கும் தெரியவில்லையா ? அல்லது தெரிந்து கொண்டே சொல்ல மறுக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணன் தான் உதவ முடியும்.

அவன் மேனேஜ்மெண்ட்டில் நல்ல செல்வாக்கு உள்ளவன். எம்.டிக்கு உறவினன். மெஸ்ஸில் இரண்டு வடை வைப்பார்கள். ஆனாலும் அவன் அளவுக்கு மீறி டம்பமடித்துக் கொள்வதில்லை. விசாரித்துச் சொல்வதாகச் சொன்னான். மறுநாள் பத்து பதினைந்து பேரை ரூமுக்குக் கூப்பிட்டான்.

‘மாப்பிள்ள நான் சொல்ற செய்தியக் கேட்டு யாரும் அதிர்ச்சியடைந்து மயக்கம் போட்டு விடக் கூடாதுன்னு சத்தியம் செஞ்சாத்தான் மேற்கொண்டு சொல்வேன்’ என்றான் பீடிகையுடன். முகம் முழுக்கக் குறும்புப் புன்னகை.

‘சொல்லுடா மாமா. இங்க எத்தனை அதிர்ச்சிகளப் பாத்தாச்சு. ‘

‘இதெல்லாம் நடந்தது நம்ம லீவுல. என்னிக்கும் இல்லாத படி நம்ம புரெஃபெசர் ரங்கநாதனுக்கு ஒரு ஆய்வுக்கட்டுரை வட இந்தியாவுல செலக்ட் ஆகி இருக்கு. புகழ் பெற்ற அந்தக் கல்லூரிக் கருத்தரங்கில் கலந்து கொள்வதே பெருமையாம். போயிருக்கிறார். சமர்ப்பித்திருக்கிறார். அந்தக் கல்லூரியில் ராப்பகலாகப் பணியாற்றி, பணியாற்றும் போதே உயிரிழந்த ஆசிரிய மேதை ஒருவருக்குச் சிலை வைத்திருக்கிறார்களாம். வாத்யாருக்குச் செலை வைக்குறளவுக்கு நல்ல காலேஜ் போல. நல்ல வாத்யாராவும் இருக்கலாம். அதைச் சிலர் புகழ்ந்து, புரஃபெசரிடம். காட்டி இருக்கிறார்கள். போட்டாவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆசிரிய மேதையின் பெயர்தான் டாக்டர் பிரவீண் டண்டண் .டண்டண். டண்டண். டண்டண் ‘ .

‘என்னதூஊஊ!!!அப்ப இந்த டண்டண் ‘

‘டுபாக்கூர் டண்டண். ரக்சியமாகத் தோண்டித் துருவி விசாரித்துப் பார்த்ததில் இவர் அந்தக் கல்லூரியில் லைப்ரரியில் வேலை பார்த்தாராம். புரஃபெசர் பண்ணிய முதல் வேலை இதைப் மேனேஜ்மெண்ட்டில் போட்டுக் கொடுத்தது தான் .
மிகப்பிரபலமான அவரிடம் எப்படி ஒரிஜினல் சர்ட்டிபிகேட்ஸைக் கேட்பது . இவர் வேலை பார்ப்பதே நம் கல்லூரிக்குப் பெருமை அல்லவா என்று நினைத்து பிரின்ஸிபால் திங்க் பண்ணிக் கொண்டிருந்த போதெ ஒரு செமஸ்டர் முடிந்திருக்க்கிறது. ‘

‘சரி. இப்ப எங்க அவர். ‘

‘அது இன்னும் சூப்பர் ஸ்டோரி. ஏதோ ஃபாரின்ல பேப்பர் செலக்ட் ஆயிருக்குன்னு சொல்லி ஒரு லட்சம் வாங்கிட்டு ஆளு எஸ்கேப்பாம். எப்படியோ தகவல் தெரிஞ்சிருக்கு. பட்சி பறந்துருச்சி. அதற்குதான் அந்த ஆளு விவரமா எந்த போட்டாவுலயும் இருக்கக் கூடாதுன்னு ஒட்டாம வாழ்ந்திருக்கிறார். எல்லாப் பணத்தையும் பிரின்ஸிபால் சம்பளத்துல பிடிச்சிட்டாங்களாம். போலீஸ்ல சொன்னாக் கண்டுபிடிக்கலாம்.வெளில சொல்ல முடியுமா? பேப்பரல வந்தா ஒரு பய மேனேஜ்மெண்ட்ல கோட்டால சேருவானா ? வெளியே சொன்னால் எல்லோருக்கும் வெட்கக்கேடு இல்லியா ‘

போயும் போயும் லைப்ரரியண்ட்ட சப்ஜெக்ட் படிச்சீங்களே என்று பிற மாணவர்கள் எங்களைக் கிண்டலுடன் பார்த்தார்கள். நாங்கள் பிற ஆசிரியர்களைக் கிண்டலுடன் பார்த்ததற்கான காரணம் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.