இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்

வரலாறு பல ஊடுபோக்குகளைக் கொண்ட ஒரு விசித்திரமான தளம். சமூகம் மற்றும் அரசியலைக் குறித்து பேசும் புத்தகங்கள் பொதுவாக கடந்த காலத்தைப் பேசும். வரலாற்று நிகழ்வுகளையும் அதன் பின்னணி காரணங்களையும் குறித்த தகவல்கள் ஒரு சிக்கலான சித்திரத்தை வாசகர்கள் முன்வைக்கின்றன. அதிலிருந்து அரசியல் மற்றும் கோட்பாட்டு விவாதங்கள் மேலெழும். ஆனால் சமகால அரசியல் மற்றும் சமூக நிலவரங்களை கடந்த காலத்தின் பின்னணியில் மிக விரிவாக ஆராய்ந்து, அந்த ஆய்வின் முடிவுகளை முன்வைத்து ஒரு சமூகத்திற்கு நேரக்கூடிய அபாயங்களைப் பேசும் புத்தகங்கள் அரிதாக இருக்கின்றன. ‘உடையும் இந்தியா?’ அந்த வகையில் தமிழ்ச் சூழலில் வெளியாகியுள்ள முதல் புத்தகம். அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா இந்த இருவரும் இணைந்து எழுதியுள்ள இப்புத்தகம், இந்தியாவின் கடந்தகாலம், அதன் காலனிய மற்றும் தற்போதைய உலகமயச் சூழல் இவற்றை குறித்து விரிவாக ஆராய்ந்து இந்தியாவின், அதன் மக்களின் எதிர்காலம் குறித்த அச்சங்களை உள்ளார்ந்த அக்கறையுடன் விரித்துப் பேசுகிறது.

-o00o-

காலனியம் என்பதை, மேலை நாடுகள் கடல் பயண விரிவு வழியே தொடங்கிய உலகளாவிய படையெடுப்புகளுக்குப் பிறகு உலகில் பெரும் பகுதிகளில் நடந்த நிகழ்வாக மட்டும் கருதத் தேவையில்லை. ஒரு தேசம் மற்றொரு தேசத்தை அடிமைப்படுத்தி, தன் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தொடர்ந்து சுரண்டுவது தான் காலனியத்தின் நோக்கம் என்று கொண்டால், தொடர்ச்சியாக நிகழ்ந்த மேற்காசிய இஸ்லாமியக் குழுக்களின் படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்திலிருந்தே காலனியப் பிடியில் சிக்கிய தேசமாக இந்தியா ஆகியிருந்தது என்று சொல்லலாம்.
தொடர்ச்சியாக நிகழ்ந்த அன்னியரின் படையெடுப்புகள் இந்தியாவின் வளங்களை சுரண்டியபடியே, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தி, அன்னிய நாடுகளின், இனக்குழுக்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தன. ஆயிரம் சிறு வெட்டுக்களில் இரத்தமிழக்கச் செய்து பெரும் யானையையும் வீழ்த்தலாம், அதுதான் இந்தியாவுக்கும் நேர்ந்தது. இரு வேறு பண்பாடுகளின் சந்திப்புகள் இப்படி அழிவைக் கொணர்ந்தன. அடுத்து வந்த மேலைப் படையெடுப்பாளர்கள் இன்னமுமே மோசமாகச் சுரண்டிப் போனார்கள். இந்தியாவை முற்றிலும் அழித்து, உலகின் பரிதாபத்துக்குரிய நாடுகளில் ஒன்றாக ஆக்கிச் சென்றார்கள். தம்மால் நடந்த இழிவு என்பதை அங்கீகரிக்க மறுத்ததோடு, இந்தியர் காலம் காலமாக வறுமையில் சிக்கி இருந்த மக்கள், தாமே நாகரீகப்படுத்தியவர்கள் என்ற கருத்தை வேறு மேற்கிலும், உலகிலும் தொடர்ந்து பரப்பியும் வருகின்றனர்.

பண்பாடுகள் ஒவ்வொன்றும் தனக்கான தனித்தன்மை கொண்டன. விழுமியங்கள், மொழிகள், மதங்கள் என்று தனக்கான ஒரு தனித்துவமான வெளியை கொண்டவை. குறைந்தபட்சம் இந்திய பண்பாடு என்பது இத்தகைய பன்மைகளை கொண்டது என்று சொல்லலாம். தன்னுடைய பரந்த வெளிக்குள் பல்வேறு பரிமாற்றங்களையும், உள்வாங்கல்களையும் அனுமதித்து, அதன் விளைவாக புதிய முகிழ்ப்பின் சாத்தியங்களை கொண்டிருந்தது, இத்தனை அழிப்புக்குப் பிறகும் இன்னமும் அப்படியே திறந்த கையோடே உலகப் பண்பாடுகளை, மக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகின் பிற பண்பாடுகளிடம் இல்லாத ஒரு முக்கியமான தன்மை இது.

இத்தகைய பண்பாடு, ஒற்றை பரிமாண பண்பாட்டை சேர்ந்த, அதையே பிறர் மேல் சுமத்தும் தீவிர நோக்கமும் கொண்ட, அடுத்தடுத்த காலனியாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானது. காலனியாளர்கள், தங்கள் பண்பாட்டுப் பார்வையைக் கொண்டு, இந்தியப் பண்பாட்டை அறிவதற்கான கோட்பாடுகளை உருவாக்கினர். அந்த அறிதல் முயற்சி கூட ஒரு நல்லுறவை, பரிமாற்றத்தை அடைவதற்காகச் செய்யப்பட்டதா என்றால், இல்லை, அப்படி அறிந்து மேலும் நுட்பமாக, தீவிரமாக இந்தியர்களை எப்படி அடிமைப்படுத்தி, தம்முடைய இழிவான நகலாக ஆக்கலாம் என்பதே நோக்கமாக இருந்த்து.

இந்தியாவின் சமூக/கலாச்சாரப் போக்குகளை முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளவும், தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்தவும் இக்கோட்பாடுகள் காலனியாளர்களுக்கு உதவின. மேலும், இந்தியப் பண்பாடு ‘குழப்பமான’, ‘பிறழ்ந்த’, ‘திரிந்த’ ’இருண்ட’ ‘காடு போன்ற’ ‘நாகரீகமற்ற’ ஒன்றாகவே பார்க்கப்பட்டது. தகவல்கள் இல்லாததாலோ, இங்கு அவர்களுக்கு எந்தச் செல்வமும் சுரண்டக் கிட்டாததலோ இப்படி ஒரு கருத்தை அவர்கள் கொண்டும், பரப்பியும் இருக்கவில்லை. மாறாகத் தகவல்கள் எத்தனை எதிர்மாறாக இருந்த போதும், எத்தனை வளங்கள் இங்கு காணவும், திரட்டவும் கிட்டிய போதும், அவற்றைத் திரித்து அர்த்தத்தை மறைத்து மலினப்படுத்துவதையும், தம் சுரண்டலை மறைத்து வறுமை இங்கு பன்னெடுங்காலமாக வேரூன்றியிருந்தது என்று ஒரு நம்பிக்கையை இந்தியரின் புரிதலில் விதைக்கவுமே அன்றும், இன்றும் பிரச்சாரம் நடத்தியிருக்கின்றனர்.

இதில் விசித்திரம் என்னவென்றால், நம் போலவே மேலைச் சக்திகளால் சுரண்டப்பட்டு, உலகப் பெரும் சக்தியாக இருந்த நிலையில் இருந்து தரை மட்டத்துக்குக் கொணரப்பட்ட அரபு நாட்டினரும், இதர மேற்காசியரும் கூட இந்தியாவை, இந்தியரை, இந்திய நாகரீகத்தைக் குறித்து இதே போன்ற இழிவுணர்வையும், இழி கருத்தையும் கொண்டு இன்றும் இருப்பதுதான். தாமே காலனியாளர்களாக முன்பிருந்த நிலையில் கொண்ட ஆணவ நோக்கைக் கைவிட அவர்களுக்கு அவசியம் இருக்கவில்லை, ஏனெனில் அப்படி ஒரு காலனியப் பார்வையை இந்தியரே தம் நாகரீகம், சமூக அமைப்புகள் குறித்துக் கொள்ளுமாறு இரு காலனியங்களும் சாதித்திருக்கின்றன.

குறிப்பாக இந்திய சமூகத்தை, அதன் சாதி முறையை மேற்குலகம் அணுகிய விதத்தை இங்கு ஒரு நல்ல உதாரணமாக சுட்டமுடியும். தாம் ஆள்கிற பெரும் மக்கள் கூட்டத்திலிருந்து மிகச் செலவு குறைந்த முறையில் லாபம் பெறவும் (சொத்து நிர்வாகம் மற்றும் வரி விதிப்பு), அவர்களை மேன்மேலும் ஊடுருவி எளிதே அடக்கி ஆளுவதற்குண்டான வழிகளை தெரிந்து கொள்ளவும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. இதுவும் அவர்களுடைய புதுக் கண்டுபிடிப்பு அல்ல. பிரிட்டிஷ் ஆளும் கூட்டங்கள் துவக்கத்திலிருந்தே தமது லட்சிய நாடாக கிரேக்க/ ரோம சாம்ராஜ்யங்களை, பண்டை உலகின் இரு ரத்தக் காட்டேரி அரசமைப்புகளையே கொண்டிருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களில் இந்தியாவுக்கு அனுப்ப்ப்பட்ட நிர்வாகிகள் பலரும் ரோம சாம்ராஜ்ய வரலாற்றை ஆழ்ந்து படித்திருந்தனர்.

எப்படி ரோம் தாம் ஆண்ட மக்களைப் பல குழுக்களாகக் கண்டு பரஸ்பரம் தம்மிடையே தொடர்ந்து போரிடும் குழுக்களாகவும் மாற்றி இருந்ததோ, அதே நடைமுறையை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்றென்றும் நிலைக்கும், சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள நிலப்பரப்பில் நீடித்தாளும் என்ற கனவும், குறிக்கோளும் கொண்ட நிர்வாகிகள் , தாம் ஆண்ட பல நிலப்பரப்புகளிலும், இந்தியாவிலும், கடைப்பிடித்தனர். குறிப்பாக 1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போரைத் தொடர்ந்து இந்தியாவின் நேரடியான நிர்வாகத்தை ஏற்றிருந்த பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் உறுதியுடன் இருந்தது. இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் இந்திய சாதி முறை முக்கிய பங்கு வகித்தது என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஆரம்பமான கணக்கெடுப்புப் பணி தன்னளவிலேயே ஏராளமான குழப்பங்களுடன் துவங்கியது.[1]

இந்தக் கணக்கெடுப்பு செயல்திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ரிஸ்லே(H.H.Risley). இவரது வழிகாட்டுதலின் படி பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் மனு தர்மத்தின் வர்ணப் பிரிவுகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, அந்தப் பிரிவுகளை இந்திய சமூகத்தில் தேடி அலைந்தனர். ஆனால் நிதர்சனம் வேறு விதமாக இருந்தது. மனு தர்மத்தில் சொல்லப்பட்ட பிரிவுகளை அவர்களால் இந்திய சமூகத்தில் காணமுடியவில்லை. மாறாக அவர்களுக்கு ‘சாதி’ என்ற வார்த்தையுடனான பரிச்சயம் ஏற்பட்டது. இந்திய சமூகத்தில் ‘சாதி’ என்ற வார்த்தைக்கு ’குழு’ என்ற அர்த்தமே பொருந்தும். இந்தக் ‘குழு’ தொழில் சார்ந்து, மொழி சார்ந்து, மதம் சார்ந்து, பாலினம் சார்ந்து இப்படி பல தளங்களில் அர்த்தம் கொள்ளத்தக்கது. மேலும், எந்த ஒரு ‘சாதி’ என்ற வகையும் இந்தியா முழுமைக்குமாக பொருந்தாது. உதாரணமாக, ஒரு ஊரில் ஒரு ’குழு’வை(‘சாதி’யை) சேர்ந்த மக்கள் பொற்கொல்லராக இருந்தால், இந்தியா முழுவதும் பொற்கொல்லாராக உள்ள அனைவரும் அந்த சாதியை சேர்ந்தவராக கருத முடியாது. அது ஒவ்வொரு இடம் சார்ந்து மாறக்கூடியது. ஆனால், இந்தியர்களை ‘அறிய’ வேண்டிய அவசியத்தில் இருந்த காலனியாளர்கள், இந்த அமைப்பை தங்களுக்கு பரிச்சயமான வகையில் புரிந்து கொள்ள முயன்றனர். ஆகவே ‘சாதி’ என்ற முறையை விளக்க தங்களுக்கு வெகு பரிச்சயமான ‘Caste’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அடிப்படையிலேயே ‘Caste’ என்ற வார்த்தையும், ‘சாதி’ என்ற வார்த்தையும் முற்றிலும் தொடர்பற்றவை.

போர்த்துகீசிய மொழியின் ’Casta’ என்ற வார்த்தையிலிருந்து ‘Caste’ என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தையை இப்படி அர்த்தம் கொள்ளலாம் : அகமண முறை உடைய, பல்லடுக்கு கொண்ட, இனம்(race) சார்ந்த ஒரு பிரிவு. இந்திய அமைப்பில் ‘சாதி’ என்ற வார்த்தைக்கு இத்தகைய அர்த்தமே கிடையாது. இந்திய ’சாதி’ அகமண முறையை கொண்டதல்ல. அது இயல்பாகவே வேறு பல குழுக்களுடன் கலந்து தன்னை விரித்துக் கொண்டும், மாறுபட்டும் வளரக்கூடியது. உதாரணமாக, தமிழர்களின் பெருமிதமான சோழ வம்சத்தின் அரசனான குலோத்துங்க சோழன் ஆந்திராவின் தெலுங்கு மொழி பேசும் ஒரு குழுவுடன் மணவுறவு கொண்டதால், தெலுங்கு சோழ அரச வம்சம் ஒன்றை உருவானது குறித்த தகவலை நாம் வரலாற்றில் காணமுடியும்.[2] மேலும், சாதி முறையில் நிலவிய ஏற்றத்தாழ்வை இந்தியா முழுமைக்கும் பொருத்தமுடியாது. மேலும், அந்த ஏற்றத்தாழ்வு நிலையானதல்ல. ஒவ்வொரு சூழலுக்கும் தகுந்தபடி ஒவ்வொரு சாதியும் சமூக அடுக்கின் மேலே செல்வதும், கீழிறங்கவதும் உண்டு. இதை ரிஸ்லேவும் அறிந்திருந்தார். மக்கள் கணக்கெடுப்பு முடிந்தவுடன் ரிஸ்லே தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் :

“Caste can be classified on the basis of social precedence. No scheme of classification can be framed for the whole of India”[3]

ஆக, ’சாதி’ என்ற அமைப்பிற்குள் வெவ்வேறு குழுக்கள் இணைந்தும், வெளியேறியும் இருந்த நிலையை மாற்றி, சில குழுக்களை இன்ன ‘சாதி’ என்ற வகைப்படுத்தும் ஒரு பெரிய அட்டவணையை தயார்செய்தது பிரிட்டிஷ் அரசு. அவர்களை வலுக்கட்டாயமாக அந்தப் பிரிவுக்குள்ளேயே வைத்திருந்தது. இதனால் இந்திய சமூகத்தின் இயல்பான பல ஜாதிப் பரிமாற்றப் இயக்கம் முடங்கிப் போய் முற்றிலும் உறைந்து போனது.

மேலும், ஒவ்வொரு ‘சாதி’யும், ’மொழி’யின் அடிப்படையிலும் ஒருங்கிணைக்கப்பட்டு வெவ்வேறு இனமாக வகைப்படுத்தப்பட்டது. அதனால் மொழி அடிப்படையில் இனங்கள், இனங்களுக்கான மதங்கள் ஆகியவை செயற்கையாக உருவாக்கப்பட்டன. ஆரியர், ஆரியரல்லாதோர், இந்துக்கள், இந்துக்கள் அல்லாத மலைக் குடிகள் என்று ஒரு பண்பாட்டின் அடிப்படையை கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் இந்திய சமூகம் துண்டாடப்பட்டது.

இந்த இனங்களை மேலும் சரியாக வகுக்க ரிஸ்லே(Risley) ஒரு படி மேலே சென்று மக்களின் மூக்கின் அளவை அளந்து(nasal index) அதனடிப்படையிலான இனப்பாகுபாடும் நடைபெற்றது. ஆக, காலனியச் சூழலில் நடைபெற்ற ஆய்வுகளை செலுத்தியது ஒரு வகை ‘இனவாத கோட்பாடு’ தான்.

மேலும், nation-state என்ற தனது கருதுகோளை முன்வைத்து பிரிட்டிஷ் அரசு ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனி வரலாற்றையும், இனங்களுக்கிடையேயான மோதல்கள் குறித்த புனைவுகளையும் உருவாக்கத் தவறவில்லை. ஆக, தனக்கு முற்றிலும் அந்நியமான ஒரு பண்பாட்டை புரிந்து கொள்ள மேற்குலகம் தன் சூழலிருந்து கருவிகளை எடுத்துக் கொண்டு, இந்திய சூழலை புரிந்து கொள்வதற்கான கோட்பாடுகளை உருவாக்கியது. காலனிய சூழலில் இந்தியா குறித்து நடத்தப்பட்ட அனைத்து ஆய்வுகளுக்கும் இதே கோட்பாடுகள் தான் முன்வைக்கப்பட்டன. ஆக இந்தியப் பண்பாடு குறித்த காலனியப் பார்வை என்பது ஒரே அடிப்படையில் தான் உருவாகி வளர்ந்தது. மாறாக, இந்த அடிப்படையை மறுத்து எழுந்த குரல்கள் நசுக்கப்பட்டன. உலகம் முழுமைக்கும் இந்தியா குறித்த இத்தகைய காலனியத்தால் ’உருவாக்கப்பட்ட’ கருத்துக்களே ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த வாதங்களை முன்வைப்பதன் நோக்கம் இந்தியாவின் ‘களங்கமில்லா’ கடந்தகாலத்தை குறித்த ஏக்கமோ, அதன் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் எண்ணமோ அல்ல. மாறாக, ஒரு பண்பாட்டை அதற்கு அந்நியமான ஒரு கோட்பாடின் மூலம் எப்படி திரிக்க முடியும் என்பதைச் சுட்டவே இந்த வாதங்கள்.

வரலாற்றை நுட்பமாக அணுகும் எந்தவொரு வாசகனுக்கும் இந்த தகவல்களை வாசிக்கும் போது ஒரு சில கேள்விகள் மனதில் எழும் : ’ரிஸ்லே உபயோகித்த இந்த கோட்பாடுகள் உண்மையில் எங்கிருந்து வந்ததன? அதை உருவாக்கி அளித்தவர்களின் பின்னணி எத்தகையது? அவர்களின் நோக்கம் என்ன?’. இந்த கேள்விகளுக்கான விடையை வரலாற்றாய்வின் மையங்களில் நிகழும் விவாதங்களில் ஒருவரால் நிச்சயம் காணமுடியாது. பொதுவாக, வரலாற்றாய்வுகள் ஒரு சமூகத்தின் மீது மதம் மற்றும் அதன் இறையியலின் தாக்கத்தை பொருட்படுத்துவதில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக, மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை, மேற்குலகின் மதம் மற்றும் விவிலிய இறையியலிலிருந்து நாம் பெறமுடியும். இந்த விவிலிய நூல் சார்ந்த பார்வை எத்தனைக்கு மேற்கின் வரலாற்றாய்வுப் பார்வையை இன்னமும் செலுத்துகிறது என்று நாம் அறிந்தால் எந்தப் பார்வை உலகுக்கு இந்தியாவின் சமூகங்கள் குறித்த வக்கிரமானதொரு வருணனையை மேற்கின் வரலாற்றாய்வாளர் அளிக்கக் காரணமாக இருந்தது என்பது நமக்குப் புரியும். இதைச் சொல்லவும் ஒரு மாற்று வரலாற்றாய்வு தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு விரிவான, வரலாற்று பார்வையை ‘உடையும் இந்தியா?‘ புத்தகம் வாசகருக்கு அளிக்கிறது.

‘மோசேவிய இனவியல்’ எனும் கருத்தியல் குறித்து இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ஒரு விவிலிய தொன்மத்தின் அடிப்படையில் எழுந்த இந்த இனவியல் கோட்பாடு உலகத்தின் அனைத்து பண்பாடுகளும் மோசேவின் வாரிசுகளிடமிருந்தே தோன்றிய சாத்தியத்தை முன்வைக்கிறது. இந்த தொன்மத்தின் படி மோசேவால் சபிக்கப்பட்ட ஹாமின்(மோசேவின் மூன்று மகன்களில் ஒருவன்) வாரிசுகள் தான் இந்தியர்கள். ஹாம் போன்ற சபிக்கப்பட்ட ஒருவனிடமிருந்து தோன்றிய வாரிசுகள் பிற மனித சமூகங்களை விட தாழ்ந்தவர்களே. ஆனால் இந்தியப் பண்பாடுகளின் மேன்மையை எப்படி விளக்குவது? அதற்கு மொழி மற்றும் நிறம் குறித்த விவிலியத்தின் கோட்பாடு மீண்டும் முன்வைக்கப்படுகிறது. கறுப்பு நிறத்தவர்கள் காட்டுமிராண்டிகள் என விவிலியம் சித்திரிக்கிறது. இதனடிப்படியில் அவர்கள் பேசும் மொழியும் தாழ்ந்த மொழியே என்று முடிவிற்கு மேற்குலகம் செல்கிறது. இந்தக் கருத்து இன்றளவும் மேலைச் சமுதாயத்திலும், மதிப்பீடுகளிலும், அரசியலமைப்பிலும், அரசு நிர்வாகக் கொள்கைகளிலும் பல விதங்களில் மேலாட்சி செய்வதை நாம் எளிதே காணமுடியும்.


விவிலியத்தில் நோவா, தன் மகன் ஹாமுக்கு ஒரு சாபம் கொடுப்பார். ஹாமின் சந்ததிகள் என்றென்றைக்கும் நோவாவின் பிற மகன்களின் சந்ததியினருக்கு அடிமைகளாக இருக்கவேண்டும். இந்த ஐதீகம் அனைத்தும் ஐரோப்பியரால் நிரூபிக்கப்பட்ட ஒரு வரலாற்று உண்மையாகவும் அதுவே ஆப்பிரிக்க மக்களின் தோல் நிறத்தை விளக்கும் காரணமாகவும் காட்டப்பட்டது. இதனால், அடிமை அமைப்பு நியாயப்படுத்தப்பட்டது. இந்த ஹாம் ஐதீகப் புனைவு, ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளுடன் கலக்கப்பட்டு, இந்திய இனப் பன்மைக்கான முதன்மையான காரணமாகவும் விளக்கப்பட்டது.
– அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா(பக்கம் 58)

இத்தகைய காட்டுமிராண்டிக் கூட்டம் ஒரு உன்னத பண்பாட்டை உருவாக்க முடியாது. இத்தகைய ஒரு உயர்ந்த பண்பாட்டை ஒரு ‘வெள்ளை’ இனத்தால் தான் உருவாக்க முடியும். அதனால் நிற அடிப்படையில் இந்திய மக்கள் கூட்டத்திலிருந்தே ஒரு பிரிவினரை தனியாக பிரித்து, அவர்களை ‘ஆரிய’ இனமாக முன்னிருத்தும் முயற்சி நடக்கிறது. கீழைத்தேய நாடுகள் குறித்த ஆராய்ச்சியின் முன்னோடிகளாக கருதப்படும் வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்ற பலர் இதே கோட்பாட்டை மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். இக்கோட்பாட்டைத் தான் ரிஸ்லே கையில் எடுத்தார். இதன் தொடர்ச்சியாக வருவது தான் இன்று வரை நடந்துவரும் நம் ஆராய்ச்சியாளர்களின் கதையாடல் : ஆரிய படையெடுப்பு, ஆரியல்லாதோரின் தோல்வி, ஜாதி எனும் அமைப்பின் தோற்றம், அதனுள் சிக்கும் திராவிடர்கள், இப்படி இந்தக் கோட்பாடு விரிகிறது. இது தான் இந்தியவின் கடந்தகாலத்தை ஆராய மேற்குலகம் அளித்த சட்டகம். இந்தச் சட்டகத்தின் அடிப்படையில் தான் ‘சாதி’களை ‘இனம்’ என்று முன்வைக்கும் ‘அறிவியல் பூர்வ’மான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. ரிஸ்லேயின் இந்த காலாவதியான கோட்பாடுகள் தான் இன்றளவும் நம் பல்கலைக்கழக ஆய்வுப் பார்வையை தீர்மானிக்கின்றன. இன்றும் ரிஸ்லேயின் ஆவி மறையவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியவியல் அறிவு என்பது, இந்தியப் பண்பாட்டைக் கீழ்மைப்படுத்தவும் பிரிட்டிஷ் மேன்மையை நிலைநாட்டவும் மிக நல்ல கருவி என்பது காலனிய அதிகார அமைப்புக்குத் தெளிவானது. காலனியப் பார்வையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த அறிவை இந்தியாவில் பெரிய அளவில் மக்களிடையே பரப்ப கல்வி நிறுவனங்களின் பெரும் வலை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் சுதேசி இந்தியர்களே. இந்திய இலக்கியங்களைப் படித்து ஐரோப்பிய காலனியவாதிகளுக்குத் தரவுகளை அளிக்கும் உளவாளிகளாக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்திய இலக்கியங்களும் சமஸ்கிருதப் பதங்களும் ஐரோப்பியச் சட்டகத்துக்குள்ளாக அமைக்கப்பட்டன. இந்த இந்திய ஒத்துழைப்பாளர்கள், இந்த காலனியப் பார்வையை சக இந்தியர்களிடம் பரப்பவும் பயன்படுத்தப்பட்டனர். சுதேசக் கல்வியையும் பண்பாட்டுப் பார்வையையும் வருங்காலத்தில் பெரிய அளவில் மாற்ற இடைப்பட்ட விசைகளாக இவர்கள் பயன்பட்டனர்.அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா(பக்கம் 71)

இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். ரிஸ்லேயின் இந்த ‘அறிவியல்பூர்வ’ ஆராய்ச்சிகளை தற்கால நவீன விஞ்ஞானம் முற்றிலும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. ஆனால், ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் கூட, மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் ரிஸ்லேயின் இதே கோட்பாட்டை ருவாண்டாவில் செயல்படுத்த, அதன் விளைவாக ஒரு சில நாட்களிலேயே 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அழித்தொழிக்கப்பட்ட பெரும் மானுட சோகம் அரங்கேறியது. இனம் குறித்த வரையறைகளை துல்லியமாக வகுக்க முடியாது என்று தற்கால நவீன அறிவியல் சொல்கிறது. நவீன அறிவியலின் கேந்திரங்களாக விளங்கும் மேற்குலக அரசும், சிந்தனைக் குழுக்களும் அமைதியாக அதை வேடிக்கை பார்த்தன. இது ஏன் நிகழ்ந்தது?

-o00o-

ஒரு பண்பாட்டின் கடந்தகாலம் குறித்த ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் வெவ்வேறு சித்திரங்களும், அதை முன்வைத்து நிகழும் விவாதங்களின் எதிரொலிகளும் அந்தந்த நாட்டின் நிகழ்காலத்திலும் ஒலிக்கும். மேலும் அந்நாட்டின் தன்மையையும், போக்கையும் நிச்சயம் பாதிக்கும். அந்நாடுகளில் சமூக/அரசியல் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய பெருவலிமை இந்த ’எதிரொலி’களுக்கு நிச்சயம் உண்டு. ஆக, தற்போதைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள். அதற்கிருக்கும் ஊடுருவல், தன்னியல்பாக உலக நாடுகளில் கிட்டும் தலைமை, மேலும் அதன் அணுகுமுறைகளுக்கு உலகப் பல்கலைகளிலும் ஊடகங்களிலும் கிட்டும் கேள்வியோ, விமர்சனமோ அதிகம் அற்ற அங்கீகாரம்.

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து உலகின் பெரும் பகுதிகளில் காலனியம் முடிவிற்கு வந்ததும், காலனியத்தின் எச்சங்களால் அப்பகுதிகளில் நிகழ்ந்த உள்நாட்டு கலவரங்களும், அரசியல் நிலவரங்களும், சமூக இயக்கமும் வரலாற்றின் பக்கங்களில் திரும்பத் திரும்ப பேசப்படும் விஷயங்கள். காலனிய நாடுகள் குறித்த ஆக்கிரமிப்பாளர்களின் குறிப்புகளை நிராகரித்தும், மீள்-வாசிப்பை நிகழ்த்தியும் புதிய சில போக்குகள் கல்வி/ஆராய்ச்சித் துறையில் எழுத்துவங்கின. உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பின்-காலனியப் பார்வையில் இத்தகைய ஆய்வுகள் நடைபெற்றன. பின்-காலனியப் போக்கென்பது காலனியாளர்களின் ஆய்வுக் கோட்பாடுகளை மறுத்து, அந்த மண் சார்ந்த கோட்பாடுகளை உருவாக்கி, அதிலிருந்து ஒரு நாட்டின் வரலாற்றை ஆராய்வது தான். ஆனால், பின்-காலனிய ஆய்வுக்கான புதிய கோட்பாடுகள் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் காலனியாளர்கள் உருவாக்கிய கோட்பாடுகளே முன்வைக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான சமயங்களில், காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட சட்டகங்களை மறுத்து செயல்பட வேண்டிய பின்-காலனிய ஆய்வுகள், காலனிய பார்வையின் நீட்சியாகவே அமைகின்றன. இது எப்படி நிகழ்கிறது? அதற்கான விடையையும் இப்புத்தகம் முன்வைக்கிறது. அந்த விடை மேற்குலகத்தினரின் உளவியலை நமக்கு நன்கு உணர்த்துகிறது.

பின்-காலனிய ஆய்வுகளைப் பொறுத்தவரை மேற்குலகின் பல்கலைக்கழகங்களே இன்றளவும் இந்த ஆய்வுகளின் மையமாக செயல்படுகின்றன. இந்த ஆய்வுகளின் தலைமைப் பொறுப்பிலும் மேற்குலகை சேர்ந்தவர்களே. இவர்கள் சித்தாந்த ரீதியாக தங்களை இடது சாரி எனவும், தாராளவாதிகள்(liberal) என்று அழைத்துக்கொண்டாலாம், இவர்களின் அடிப்படை கருத்தியலும் உளவியலும் தங்கள் சொந்த மதமான விவிலியத்திலிருந்து பெரிதும் விலகவில்லை என்று இந்தப் புத்தகம் சொல்கிறது.

இந்தப் புத்தகம் வைக்கும் இக்கருத்தை நாம் ஒரு வித காழ்ப்பு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், உலகளவிலும், ’நவீன சிந்தனைகள்’என்று இதுவரை நம்முன் முன்வைக்கப்பட்ட அனைத்தையும் சில வரலாற்றாய்வாளர்கள் கேள்விக்குட்படுத்த துவங்கியிருக்கிறார்கள். மேற்குலக சமூகத்தின் அரசு மற்றும் சர்ச்(church) இரண்டுக்குமிடையே வித்தியாசம் இல்லாத நிலை, அறிவொளி(enlightenment) காலத்திற்கு பிறகு மாறியது. ஆனால், அரசியல் மட்டத்தில் இந்த மாறுதல் இருந்தாலும், சமூகத்தின் பொது சிந்தனையில் விவிலியத்தின் தாக்கத்தை அது எந்தவகையிலும் மாற்றவில்லை. விவிலியம் போதிக்கும் வகையான ’அன்பும், கருணையும்’ மானுட கலாச்சாரத்தின் உச்சமாக முன்வைக்கப்பட்டது. மேலும், அறிவொளி யுக சிந்தனைகள் பலவும் ஏதோ ஒரு வகையில் விவிலியத்தின் சிந்தனைகளில் வேர் கொண்டிருந்தன. அக்கால சிந்தனையாளர்கள் மாற்றுச் சிந்தனையை முன்வைத்த போதும், அவையாவும் விவிலியத்தின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருந்தன. ஒருவகையில், விவிலிய சிந்தனைகளே வேறு ஒரு புதிய மொந்தையில் அறிவொளி யுகச் சிந்தனையாக உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்கிறார் அறிஞர் பாலகங்காதரா[4]. இந்த அறிவொளி யுகச் சிந்தனைகளே இன்றளவும் கல்வித் துறைகளில் (வரலாறு, சமூகவியல்,…) பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்தத்தில், அறிவொளி யுகத்தால் மதமும் அதன் பீடமும் நிராகரிக்கப்பட்ட போதும், அது முன்வைத்த கலாச்சார விழுமியங்கள் மிக உயர்வானவையாக போற்றப்பட்டன.

இதனடிப்படையில், அறிவியில் ரீதியாக இனம் குறித்த வரையறையை விஞ்ஞானிகள் ஏற்காதபோதும், கல்வித் துறைகளில் ‘இனம்’ குறித்த கருத்தியல் செலுத்தும் அபிரிதமான ஆதிக்கத்தை இந்தப் பின்னணியில் நம்மால் புரிந்து கொள்ளமுடியும். மேலும், மேற்குலகின் இடது சாரிகள் மற்றும் தாராளவாதிகளும், இத்தகைய ஒரு அடிப்படைவாதக் கருத்தை ஏற்றுக் கொள்ளத் அவர்கள் ஏன் தயாராகவே இருக்கின்றனர் என்ற கேள்விக்கும் நமக்கு பதில் கிடைக்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் மதங்களை நிராகரித்தாலும், அம்மதம் வழங்கிய கலாச்சார விழுமியங்களை மிக உயர்வானதாகக் கருதுகிறார்கள். மானுடத்தின் உச்சமாக விவிலியத்தின் விழுமியங்கள் அவர்களால் தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. இவ்வளவு ஏன், நம் சமகால சிந்தனையாளரும், மத நிராகரிப்பாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூட கலாச்சார ரீதியால் தன்னை கிறித்துவன் என்றே அடையாளப்படுத்துகிறார்[5].

ஆக, மேற்குலகில் நடைபெறும் ’விஞ்ஞான பூர்வமான’ பெரும்பாலான பின்-காலனிய ஆய்வுகள், இன்றும் எந்தவித பெரிய மாற்றமும் இல்லாத, காலனியச் சூழலில் உபயோகிக்கப்பட்ட அதே ‘இனவியல் கோட்பாட்டை’ முன்வைத்துத் தான் தனது ஆராய்ச்சிகளை தொடர்கின்றன.

அதே சமயம், இந்தக் கோட்பாடுகளை முற்றிலும் மறுக்கும் போக்கும் அங்கு நிலவுகின்றது. ஆனால் அவை ஆராய்ச்சிகளின் மையத்தில் இயங்குவதில்லை. விளிம்புகளில் ஈன ஸ்வரத்தில் ஒலிக்கும் குரல்களாக மட்டுமே இந்த எதிர்ப்புகள் அமைகின்றன. உதாரணமாக, மேலே பேசப்பட்ட இந்திய சாதி குறித்த மேற்கத்திய பார்வையில் உள்ள பிழைகளையும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் நடந்த குளறுபடிகளையும் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் நிகோலஸ் டர்க்ஸ்(Nicoholas B. Dirks), பர்டன் ஷ்டைன் (Burton Stein), அஷீஸ் நந்தி(Ashish Nandy) போன்ற பல அறிஞர்கள் பேசுகின்றனர். ஆனால் இவர்களின் குரலை விட காலனிய இனவாதத்தை முன்வைக்கும் மார்த்தா நூஸ்பௌம், ரொமிலா தாப்பார், விட்ஸெல் போன்றோரின் குரலை தான் உலகரங்கில் அதிகமாக கேட்க முடியும். இவர்களின் மேற்கத்திய ஆய்வுகள் காலனியவாதிகளால் சொல்லப்பட்ட அதே விஷயத்தை தான் இன்றும் திரும்பத் திரும்ப பல்வேறு வார்த்தைகளில் சொல்கிறது : “இந்தியாவில் இருப்பது பல்வேறு இனங்கள்; ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தேசியம்; இந்திய அரசென்பதே மற்ற எல்லா இனங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட இனம் நடத்தும் அடக்குமுறையே.” இந்த ஆய்வு முடிவுகளால் இந்தியாவிற்கு நேரும் ஆபத்து தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடையாக இந்தப் புத்தகம் அளிக்கும் சித்திரம் அச்சமூட்டுவது.

மேற்குலக பல்கலைக்கழகங்கள் இந்த இனவாத ’ஆய்வு முடிவு’களை தக்க முறையில் புத்தகங்களாக வெளியிடுவார்கள். இந்த புத்தகங்கள் உலகரங்கில் விவாதிக்கப்படும். இந்த விவாதங்களிலிருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் உள்ளூர் அறிவுஜீவிகள் இதை தங்கள் நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்வார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தவிர்க்கமுடியாத ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இன ரீதியான ஒரு திரிபை அளிக்க இங்குள்ள அறிவுஜீவிகள் எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் என்ற போர்வையில் திரியும், வல்லாதிக்க போக்குள்ள அரசியல்/மத/பொருளாதார அமைப்புகளில் இந்தியாவிற்கு எதிராக வாக்குமூலங்கள் அளிப்பார்கள். இத்தகைய வாக்குமூலங்களை வைத்து உலகரங்களில் இந்தியாவை தனிமைப்படுத்த முடியும். மேலும், இந்திய மக்களை நாகரீகமற்றவர்களாக முன்னிருத்த முடியும். அதே சமயம், இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை இன்னும் பெரிதாக்கி அதன் இறையான்மையை குலைக்க முடியும். இத்தகைய சூழலை ஏற்படுத்தமுடிந்தால், இந்தியாவின் அரசு மேலும் பலவீனப்படும்.

இந்திய அரசு பலவீனமடைந்தால் மேற்குலக நாடுகளுக்கு இரட்டை லாபம் :

1. இயற்கை வளம் நிரம்பிய இந்தியா போன்ற நாட்டின் அரசு பலவீனமடைந்தால், தன்னுடைய நலனுக்கேற்ற அனைத்தையும் மேற்குலகால் மிக எளிதாக சாதிக்க முடியும். இதற்கான அமைப்புகளை(IMF,UN போன்றவை) அது கைவசம் வைத்திருக்கிறது. மேலும், தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை வளங்களை சுரண்ட மேற்குலகிற்கு எந்தத் தடையும் இருக்காது.

2. பிரிவினைவாதம் வலுப்பெற்றால் இந்தியாவில் வன்முறைக் கும்பல்களும், உள்நாட்டு கலவரங்களும் பெருகும். இத்தகைய வன்முறைக் கும்பல்களுக்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆயுதம் விற்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இன்றைய அமெரிக்க நிர்வாகக் கல்லூரிகளில் இந்தியா குறித்த ஒரு நேர் சொல்லாட்சி உருவாகத் தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு பண்பாடற்ற எல்லைப்பிரதேசம் என்ற கருத்து மாறிவருகிறது. பாம்பாட்டிகளில் தொடங்கி சாதிக்கொடுமைகள் வரையிலான மோசமான இந்தியா அல்ல இது; மாறாக, அதன் காலம் பிறந்துவிட்ட ஒரு தேசம் என்று அவர்கள் இந்தியாவைக் காண்கிறார்கள். இந்தியா தொடர்ந்து வலிமையடையும்போது அதுவும் சீனா போல அல்லது அதைவிட வலிமை வாய்ந்த ஒரு போட்டியாளாராக, அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துவிடக்கூடும். ஒரு சீனாவே போதுமான தலைவலி. அதற்கிடையில் ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மற்றொரு தலைவலியா? இந்தியா வலிமையாக இருப்பது அமெரிக்காவுக்கு ஏற்றதே. ஆனால் மிகவும் வலிமையாக இருந்துவிடக்கூடாது. – அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா(பக்கம் 541)

இத்தகைய ஒரு சித்திரத்தை முன்வைப்பதன் மூலம், இப்புத்தகம் வாசகருக்கு ஒரு ‘conspiracy theory’ ஒன்றை முன்வைக்கிறதோ என்ற எண்ணம் எழலாம். ஆனால் உலக முழுமைக்கும் விரியும் மேற்குலகின் ராட்சத வலைப்பின்னலையும், அதன் பல்லடுக்குச் செயல்பாடுகள் குறித்து விரிவான ஒரு பார்வையையும், அதன் ஒவ்வொரு கண்ணியையும் தகுந்த ஆதாரத்துடன் முன்வைக்கிறது இந்நூல். இந்த விரிவான தரவுகளும், ஆதாரங்களும் இப்படியொரு சாத்தியத்தை மறுக்கமுடியாதபடி நிறுவுகின்றன. மேலும், ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் தற்போது நிலை குறித்து அறிந்திருக்கும் எவரும் இப்புத்தகம் முன்வைக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது.

-o00o-

ஒரு நெடிய வரலாற்றுப் பின்புலத்தில், இந்தியாவின் நிகழ்காலம் குறித்தும், அதன் இருண்ட எதிர்காலத்தின் சாத்தியம் குறித்த விரிவான சித்திரத்தை எழுதிய இந்நூலின் ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா ஆகியோர் எழுதி, கடந்த வருடம் வெளியான ‘Breaking India’ என்ற புத்தகத்தின் மொழியாக்கம் தான் ‘உடையும் இந்தியா?‘. புத்தகத்தில் இருக்கும் சின்னஞ்சிறு தகவல் பிழைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இப்புத்தகத்திற்கு ஆசிரியர்கள் அளித்துள்ள உழைப்பு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக தற்கால தமிழ்நாட்டு அரசியல், சமூகம் குறித்தும், அதைச் சுற்றிப் பின்னப்படும் வலை குறித்தும் விரிவான சித்திரத்தை அளிக்கும் இப்புத்தகத்தின் இணை-ஆசிரியரான அரவிந்தன் நீலகண்டன், தன்னுடைய சரளமான மொழிபெயர்ப்பின் மூலம் வாசகர்களுடன் இன்னும் நெருக்கமாக உரையாடுகிறார்.

-o00o-

கடந்த ஐம்பது ஆண்டுகளாக மேற்குலக நாடுகளைச் சுற்றியே உலக நடவடிக்கைகள் நடைபெற்றன. தன்னை ஒற்றை-மையமாக நிலைநிறுத்தக் கொள்ள இந்நாடுகள் வெறும் பொருளாதாரத்தையும், ராணுவ பலத்தையும் மட்டுமே செயல்படுத்தவில்லை. தன் நலனை பாதுகாக்கவும், தனக்கு ஆபத்தான விஷயங்களை இனங்கண்டு அதை முறியடிக்கவும் உலகெங்கும் தன் நலனுக்கென செயல்படக்கூடிய வலுவான பல அமைப்புகளை அவை நிறுவியிருந்தன. இந்த அமைப்புகள் மேற்குலக மதம் சார்ந்தோ, பொருளாதாரம் சார்ந்தோ இயங்குபவையாக இருக்கலாம். மேற்குலகின் கைப்பாவைகளான IMF, உலக வங்கி போன்ற பொருளாதார அமைப்புகள் குறித்து பெருமளவு பேசப்படுகின்றது. ஆனால், மேற்குலகம் ஒரு நாட்டை என்றென்றைக்குமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தன்னுடைய மதத்தை எப்படி பயன்படுத்தியது என்பதைக் குறித்த ஆய்வுகள் பெருமளவில் நடைபெறவில்லை. காலனியச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிய வரலாற்றாய்வளரான கே.எம்.பணிக்கர் விரிவாக பதிவுசெய்துள்ளார்[6]. ஆனால் அதை தொடர்ந்து காலனியம் குறித்த ஆய்வுகளில் மதம், பண்பாடு போன்றவற்றின் பங்களிப்பு குறித்த எந்த ஆய்வும் செய்யப்படவில்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், இந்த நூல் நம் காலத்திலேயே இத்தகைய நடவடிக்கைகள் எப்படி செயல்படுத்தப் படுகின்றன என்பதைக் குறித்து விரிவான சித்திரத்தை முன்வைக்கிறது. இச்சித்திரங்களை புரிந்துக் கொள்வதன் மூலம், எந்த ஒரு வளரும் நாடும், அதன் குடிமக்களும் தங்களை சுற்றி பின்னப்படும் ஒரு தந்திர வலையை புரிந்துக் கொள்ள இந்த நூல் உதவும். மேற்குலகின் இத்தகைய ஏதேச்சதிகாரத்தை சாத்தியப்படுத்தும் மத மற்றும் பண்பாட்டு அமைப்புகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகளை கண்டடைய இந்த நூல் உதவும். அந்த வகையில் தமிழ்ச் சூழலில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

குறிப்புகள் :

1. ‘Census in Colonial India and the Birth of Caste’ – Padmanabha Samarendra
EPW இதழில் வெளியான இந்த ஆய்வுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம் : http://solvanam.com/wp-content/uploads/2011/12/Census%20in%20Colonial%20India%20and%20the%20Birth%20of%20Caste.pdf

2. ‘வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’(பக்கம் 7) – எஸ்.இராமச்சந்திரன்

3. Census of India, 1901, Vol 1: India, Part 1: The Report – H.H.Risley

4. உலகின் பல்வேறு மதங்களை குறித்து ஆராய்ந்த எஸ்.என்.பாலகங்காதரா இத்தகைய ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவரைக் குறித்து காலச்சுவடில் வெளியான ஒரு கட்டுரையில் இருந்து ஒரு சில வரிகள் : “கத்தோலிக்கச் சடங்குகளில் முடங்கிப்போயிருந்த கிறிஸ்தவத்தை விடுவித்து அது மேலும் பரவிப் பெருக ப்ரொடஸ்டன்ட் சீர்திருத்தக் கருத்துகள் வழிசெய்ததுபோலவே அறிவொளி இயக்கம் கிறிஸ்தவ இறைமையியலானது ‘செக்குலர்’ கருத்துகளாக, சமூகவியல், மானுடவியல், மனோவியல் தத்துவங்களாக, ‘வரலாறு’ என்ற புதிய துறையாக மற்ற பிற அறிவியல் விளக்கங்களாக உலகெங்கும் பரவிப்பெருக வழிசெய்துள்ளது என்கிறார் பாலகங்காதரா.”
http://www.kalachuvadu.com/issue-126/page51.asp

5. http://news.bbc.co.uk/2/hi/uk_news/politics/7136682.stm

6. Asia And Western Dominance A Survey Of The Vasco Da Gama Epoch Of Asian History – K.M.Panikkar. இப்புத்தகத்தை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20805083&format=print&edition_id=20080508

இப்புத்தகத்தின் ஒரு பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது : உடையும் இந்தியா?