என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா புரூஸ்

stellacover2010-ஆம் வருடத்தின் புத்தகக் கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருந்தபோது விருட்சம் புத்தகக்கடையில் கண்ணில் பட்ட புத்தகம், ‘என் நண்பர் ஆத்மாநாம்’. எழுதியவர் ஸ்டெல்லா புரூஸ். இவர் பெயரில் வேறெதுவும் புத்தகத்தைப் பார்த்திருந்தால் நிற்காமல் கடந்து சென்றிருப்பேன். ‘ஆத்மாநாம்’ என்ற பெயர்தான் புத்தகத்தை வாங்கத் தூண்டியது. வீட்டுக்கு வந்து புத்தகத்தைப் பிரித்துப் பார்த்ததும் எனக்கு ஒரு சிறிய ஏமாற்றம் ஏற்பட்டது. அப்புத்தகம் முழுக்க முழுக்க ஆத்மாநாம் பற்றியது அல்ல. அதில் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே ஸ்டெல்லா புரூஸ் ஆத்மாநாம் குறித்து எழுதியது. மற்றவையெல்லாம் ஆத்மாநாமோடு தொடர்பில்லாத வேறு கட்டுரைகள்.

அந்த ஏமாற்றத்தால் சில நாட்கள் புத்தகத்தைப் படிக்காமலே வைத்திருந்தேன். ஆனால் படிக்க ஆரம்பித்தபின் அப்புத்தகம் அதுவரை நான் ஸ்டெல்லா புரூஸ் குறித்து வைத்திருந்த அத்தனை அபிப்ராயங்களையும் உடைத்தெறிந்தது. வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிய ஸ்டெல்லா புரூஸோடு சற்றும் தொடர்பில்லாததொரு ஸ்டெல்லா புரூஸ் இருந்திருக்கிறார். அந்த ஸ்டெல்லா புரூஸ் காளி-தாஸ் என்ற பெயரில் சிறுபத்திரிகைகளில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஸ்டெல்லா புரூஸ் தன் முதல் சிறுகதையை எழுதியது ஜெயகாந்தன் நடத்திய ஞானரதம் சிற்றிதழில். [அதைத் தன் இயற்பெயரான ‘ராம் மோகன்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.] தீவிரமான வாசகராகவும் இருந்த ஸ்டெல்லா புரூஸ் இலக்கிய உலகில் பெரும்பாலானோருக்கு நல்ல நண்பராக இருந்திருக்கிறார். இருபது வயதுக்குள்ளாகவே ஆங்கில இலக்கியத்தின் பல முக்கியமான ஆக்கங்களையும் படித்திருக்கிறார்.

விருதுநகரில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த ராம் மோகன், ஸ்டெல்லா புரூஸ் என்று புனைபெயர் சூட்டிக்கொண்டதன் காரணமே கூட அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. அக்காரணம், ‘என் நண்பர் ஆத்மாநாம்’ புத்தகத்தில் தேவராஜன் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து தெரியவருகிறது:

“ராம்மோகன் என்னும் பெயரை ஸ்டெல்லா புரூஸ் ஆக மாறிய கதையே அவர் யார் என்பதையும் அவரின் மன அமைப்பையும் காட்டி நிற்கிறது. திரு.ஜெயகாந்தன் நடத்திய ஞானரதத்தில்தான், ராம்மோகன் என்னும் பெயரில் அவரின் முதல் கதை 1970-இல் பிரசுரமாகியிருந்தது. அவரின் அலுவலகம் அப்போது கிண்டியில் இயங்கிவந்தது. அங்கே அறிமுகமான தோழியின் தங்கைதான் ஸ்டெல்லா புரூஸ். பின்னர் அவளும் தோழியானாள். மனநிலை பாதிக்கப்பட்டவரான ஸ்டெல்லா புரூஸை சில கயவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவே மேலும் பாதிக்கப்பட்டார் அந்த இளம்பெண். அவளின் பாதிப்பு ராம்மோகனையும் பாதித்தது. பாலியல் வன்முறைக்கு உள்ளான இளம்பெண் ஸ்டெல்லா புரூஸ் துர்மரணம் அடைய நேர்ந்தது. அவளின் நினைவாக வாழ்நாளெல்லாம் அவளின் பெயரைத் தாங்கியே வாழ்ந்தார் ராம்மோகன் என்னும் ஸ்டெல்லா புரூஸ்.”

ஸ்டெல்லா புரூஸ் இது போன்ற மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களை எப்போதும் மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. பல வருடங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த ஸ்டெல்லா புரூஸ், தன் தோழியும், வாசகியுமான ஹேமாவைத் திருமணம் செய்துகொண்டது ஜனவரி 18-ஆம் தேதி. அது மறைந்துவிட்ட நண்பர் ஆத்மாநாமின் பிறந்தநாள். ஆத்மாநாமுக்கும், ஸ்டெல்லா புரூஸுக்குமிடையே அப்படியொரு ஆத்மார்த்தமான நட்பு நிலவியிருந்திருக்கிறது. அந்த நட்பைப் பற்றிய விரிவான கட்டுரைதான், ‘என் நண்பர் ஆத்மாநாம்’.

எனக்குப் பொதுவாகவே எழுத்தாளர்களைக் குறித்து, பிற எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகளும், புத்தகங்களும் மிகவும் பிடித்தமானவை. ரேமண்ட் கார்வர் மறைவுக்குப் பின் அவருடனான நட்பைக் குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான எழுத்தாளர் டோபியாஸ் வுல்ஃப் எழுதிய கட்டுரையைத் தற்செயலாக ஒரு அலுவலகத்து வரவேற்பரையில் கிடந்த நாளிதழில் படித்தேன். நம் இந்திய செய்தித்தாள்களில் ஒன்று அதை மறுபிரசுரம் செய்திருந்தது. (இணையத்தில் கிடைக்கும் இக்கட்டுரை, நான் படித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் என நினைக்கிறேன்.) பொதுவாக, எழுத்தாளர்களின் மனநிலையை, தனிப்பட்ட ஆளுமையைத் தெரிந்துகொள்வதில் ஒரு குறுகுறுப்பான ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இத்தனைக்கும் பல எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், எழுத்து வெளிப்பாட்டுக்கும் தொடர்பிருப்பதில்லை. ஆனாலும் சிறந்த புனைவிலக்கியங்கள் உருவாவதன் பின்னணியைக் கொஞ்சமாவது தொட்டுத் தீண்டிவிட முடியாதா என்ற எதிர்பார்ப்பு எப்போதும் குறைவதில்லை. ஜான் ஸ்டைன்பெக் தன் நண்பர்களைக் குறித்து எழுதிய புத்தகமான ‘Of Men and their making’ மிகவும் சுவாரசியமான ஒன்று. தமிழில் சுந்தர ராமசாமி எழுத்தாளர்களுடான தன் நட்பைக் குறித்து எழுதிய ‘நினைவோடை’ புத்தகங்கள் சிறப்பானவை. கிருஷ்ணன் நம்பியைக் குறித்து அவர் எழுதிய புத்தகத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என நினைவில்லை. ஜெயமோகன் சுந்தர ராமசாமியின் மறைவுக்குப் பின் அவரைக் குறித்து எழுதிய ‘நினைவின் நதியில்’ புத்தகமும் எப்போதும் என் விருப்பப்பட்டியலில் இருக்கும் ஒன்று. ‘கு.அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை’ புத்தகமும் முக்கியமான ஒன்று. தி.ஜானகிராமன் மறைவுக்குப் பின் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்ற அவருடைய நெருக்கமான நண்பர்கள் எழுதியவை கட்டுரைகள் என்ற வகையில் மிக முக்கியமானவை.

அப்பட்டியலில் ஆத்மாநாம் குறித்து ஸ்டெல்லா புரூஸ் எழுதியிருக்கும் கட்டுரையையும் சேர்க்கவேண்டும். இக்கட்டுரையில் ஆத்மாநாமின் இலக்கிய உலகம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் ஆத்மாநாமுக்கும், ஸ்டெல்லா புரூஸுக்குமிடையே நிலவிய நட்பைக் குறித்து செயற்கைத்தனமோ, வலிந்து திணிக்கப்பட்ட உணர்ச்சிப்பெருக்கோ இல்லாமல் வெகு அமைதியாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆத்மாநாமின் விசித்திரமான பழக்கங்களையும், மனோநிலையையும் குறித்து கொச்சைப்படுத்தாமல் பதிவு செய்திருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.

“ஆத்மாநாம் இறந்து சில மாதங்களுக்குப் பின் கவிஞர் பிரம்மராஜன் ஆத்மாநாமை நினைவு கூர்ந்தும், ஓர் அஞ்சலியாகவும் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார். ஆத்மாநாம் பற்றி குறிப்பும் ஒன்றும் அதில் எழுதியிருந்தார். ஆத்மாநாம் வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இன்றி தற்கொலை செய்துகொண்டார் என பிரம்மராஜன் கருத்துச் சொல்லி இருந்தார் – அது பிழையான கருத்து. ஆத்மாநாமின் தற்கொலைதான் வாழ்க்கையைப் பற்றிய அவரின் கடுமையான புகார். கடைசிப்புகார்.” என்று சொல்லும் ஸ்டெல்லா புரூஸ், “எதனால் அவருக்கு (ஆத்மாநாமுக்கு) அத்தனை கடுமையான மனச்சிதைவு ஏற்பட்டது; எந்தக் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் – இன்றுவரை நான் மட்டுமே அறிந்தவை. இதில் எனக்கு இரண்டாவது அபிப்ராயம் கிடையாது. என்னிடம் மட்டுமே ஆத்மாநாம் அவரின் மிக மிக அந்தரங்க வாழ்வின் சில சம்பவங்களை வெளியிட்டுப் பகிர்ந்துகொண்டார்,” என்றும் சொல்கிறார். அக்காரணங்களை தவறிப்போயும் எங்கேயும் குறிப்பிட்டுவிடாத நாகரிகம் கொண்டவராகவும் இருக்கிறார்.

athmanam_thumb3
ஆத்மாநாம்

ஆத்மாநாமுக்கு மனச்சிதைவு ஏற்படும் அதே நேரத்தில், ஸ்டெல்லா புரூஸின் மிக நெருங்கிய உறவுக்காரப் பையன் ஒருவனும் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அவன் ஸ்டெல்லா புரூஸ் ஒருவருக்கு மட்டும்தான் கொஞ்சம் கட்டுப்படுவான் என்பதால், விருதுநகரில் அப்பையனோடு தங்கவேண்டியிருக்கிறது ஸ்டெல்லா புரூஸ். அவர் ஒரு மாதம் அப்பையனோடு இருந்துவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்தால், நெருங்கிய நண்பரான ஆத்மாநாம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அவரைச் சென்று பார்க்கும் ஸ்டெல்லா புரூஸ் உடைந்து போகிறார். அந்த வேதனையைத் தாங்க முடியாமல் உடைந்துபோகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்குப்பின் ஆத்மாநாமை மருத்துவமனையில் சென்று பார்க்கவேயில்லை. ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகித்த உறவுக்காரப் பையன், ஆத்மாநாம் இருவருமே அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகிறார்கள்.

“ ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்…” என்று கட்டுரையை முடிக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.

இக்கட்டுரை முழுதுமே, ஆத்மாநாம் மீதான பிரியமும், அவர் தற்கொலை செய்துகொண்டதன் மீதான ஆதங்கமும் நிரம்பி வழிந்தபடியே இருக்கிறது. ஸ்டெல்லா புரூஸ் சந்தித்த இம்மரணங்களுக்குப் பின், அவர் மீளாமல் வீழ்ந்துவிட்ட மேலும் மூன்று மரணங்களைப் பற்றிய கட்டுரை, ‘மரணங்கள்’ என்ற கட்டுரை.

தன் மனைவி ஹேமா, தன் மகளைப் போல நினைத்திருந்த மனைவியின் தங்கை பிரேமா, தோழி கவிஞர் சதாரா மாலதி இம்மூவரின் மரணங்களைக் குறித்து இக்கட்டுரை விரிவாகவே பேசுகிறது. ஸ்டெல்லா புரூஸின் வலி மிகுந்த பக்கங்கள் இவை. ஸ்டெல்லா புரூஸின் வாசகியாக அறிமுகமாகும் ஹேமா, அவரையே மணந்துகொள்கிறார். நல்ல இலக்கிய வாசகியாக மட்டுமில்லாமல், உலக சினிமா ஆர்வலராகவும் இருந்த ஹேமா ஒரு கவிஞரும் கூட. ‘இரவுணவுக்குப் பின் நீண்ட நேரம் இலக்கியம், சினிமா, ஆன்மிகம் இவற்றைக் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம்’ என்று குறிப்பிடுகிறார் ஸ்டெல்லா புரூஸ்.

வெகுஜன எழுத்தாளராக மட்டுமே நான் அறிந்திருந்த ஸ்டெல்லா புரூஸின் தீவிர இலக்கிய வாசிப்பும், ரசனையும் வியக்கவைக்கிறது. ஸ்டெல்லா புரூஸும், ஹேமாவும் நவீன இலக்கியவாதிகள், கவிஞர்களைக் குறித்து உரையாடியபடியே இருக்கிறார்கள். [ ‘ஹேமாவுக்கு தமிழில் கவிஞர் பெருந்தேவியை மிகவும் பிடிக்கும்.’ என்று குறிப்பிடுகிறார் ஸ்டெல்லா புரூஸ்.] சென்னைக்கு வந்து தீவிர இலக்கியவாதிகளைச் சந்திக்கும் முன்பு விருதுநகரிலேயே பல முக்கியமான ஆங்கில இலக்கிய ஆக்கங்களைப் படித்துவிடுகிறார் ஸ்டெல்லா புரூஸ். தான் சிறுவயதில் மிகவும் ரசித்துப் படித்த விளாடிமிர் நபகோவ் எழுதிய நாவலான ‘லோலிடா’வின் திரைவடிவம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டபோது கொதித்துப்போய், தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதுகிறார்.

எழுத்தாளர் செல்லப்பாவைக் குறித்து ஸ்டெல்லா புரூஸ் எழுதும் ஒரு குறிப்பு, அவர் மனதில் தீவிர இலக்கியங்களுக்கு இருந்த இடத்தைக் காட்டுகிறது: “சி.சு.செல்லப்பாவின் மரணம் குறித்து எனக்குள் இருக்கும் ஆதங்கம் ஒன்றை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். மொத்த வாழ்க்கையையும் இலக்கியத்திற்கு அர்ப்பணித்த இலக்கிய யாத்ரீகனின் மரணம் அதற்கான மாபெரும் அஞ்சலியைப் பெறவில்லை. அந்த இலக்கியவாதியை நினைவு கூறும் இலக்கியக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படவில்லை. என்ன காரணம்? அதற்கான நிறுவனபலம் செல்லப்பாவிற்குப் பின்னால் இல்லை. அவருக்குக் கொடிகட்டுவதற்கான வலைப்பின்னல் அமைப்புகள் உலகம் பூராவும் விரிந்து கிடக்கவில்லை.”

ஸ்டெல்லா புரூஸுக்கும், ஹேமாவுக்கும் பொதுவான புள்ளி ஸ்டெல்லா புரூஸின் எழுத்து மட்டுமில்லாமல், ஜே.கிருஷ்ணமூர்த்தி மீதான ஸ்டெல்லா புரூஸின் பற்றுதலுமாகும். ஜே.கிருஷ்ணமூர்த்தி மீது அளவுகடந்த அபிமானமும், பிடிப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ். ‘ஒரு கட்டத்தில் பொழுதுபோக்குக்காகக் கூட ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர வேறு யாரையும் படிக்காதவனாக இருந்தேன்’ என்று குறிப்பிடுகிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தி மீதான ஸ்டெல்லா புரூஸின் ஆர்வம் அவர் தந்தையையும் தொற்றிக்கொள்கிறது. சென்னையில் நடக்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கூட்டத்துக்கு தன் தந்தையையும் அழைத்துச் செல்கிறார். ஸ்டெல்லா புரூஸுக்கும், அவர் தந்தைக்குமிடையே மிக அன்னியோன்யமானதொரு நட்பு நிலவியிருக்கிறது. அரசியல், இலக்கியம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என எல்லாவற்றைக் குறித்தும் இருவரும் பேசிக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

ஸ்டெல்லா புரூஸின் தந்தை பரம்பரை செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரஸில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். அசைவத்தைத் தவிர வேறெதையும் உண்ணாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும், காந்தியின் புலால் மறுப்புக் கொள்கைக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியவர். தனக்குப் பிறந்த குழந்தைகளில் ஸ்டெல்லா புரூஸை மட்டும் சைவம் சாப்பிடுபவராக வளர்க்கிறார். (ஸ்டெல்லா புரூஸின் இயற்பெயரான ராம் மோகன், ராஜா ராம் மோகன் ராயின் மீதான மரியாதையில் வைக்கப்பட்டது.) விருதுநகரில் ஸ்டெல்லா புரூஸின் குடும்பத்தினரும், உறவினர்களும் அசைவம் சாப்பிடுவதைக் குறித்ததொரு சுவாரசியமான கட்டுரையும் இப்புத்தகத்தில் இருக்கிறது.

ஸ்டெல்லா புரூஸின் தந்தை காமராஜரின் நெருங்கிய நண்பர். ஸ்டெல்லா புரூஸின் தந்தையும், காமராஜரும் வெகு தீவிரமாக அரசியல் குறித்து வாதிட்டுக் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்திராகாந்தியை காங்கிரஸ் முன்னிறுத்துவது அழிவில் முடியும் என காமராஜரிடம் மன்றாடிச் சொல்கிறார் ஸ்டெல்லா புரூஸின் தந்தை. தந்தையின் காங்கிரஸ் அபிமானம் ஸ்டெல்லா புரூஸையும் வெகுவாக பாதித்திருக்கிறது. நேருவின் மீது தீவிரமான அபிமானமும், பற்றும் ஸ்டெல்லா புரூஸுக்கு இருந்திருக்கிறது. நேருவின் மரணம் சூ-என்-லாயின் துரோகத்தின் காரணமாகவே நிகழ்ந்தது என்று உறுதியாக எழுதுகிறார் ஸ்டெல்லா புரூஸ்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி இறந்த செய்தியை நாளிதழில் படிக்கும் அவர் தந்தை, ஸ்டெல்லா புரூஸுக்குத் தெரிவிக்கவில்லை. சாவகாசமாக நாளிதழைப் படிக்கும்போது விஷயம் தெரிந்து அதிர்ச்சியடையும் ஸ்டெல்லா புரூஸ், ஏன் அந்தச் செய்தியைத் தன்னிடம் கூறவில்லை என்று கோபமாகத் தன் தந்தையிடம் கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில்:

“இந்த ந்யூஸ உன்கிட்ட என் வாயால சொல்ல முடியாது. அதான் சொல்லல…”

ஜே.கிருஷ்ணமூர்த்தி மீதான ஆர்வத்திலிருந்து மெல்ல மெல்ல பாண்டிச்சேரி அரவிந்தர், அன்னை இருவர் மீதும் தீவிர அபிமானம் கொண்டவர்களாக மாறுகிறார்கள், ஸ்டெல்லா புரூஸும், ஹேமாவும். ஹேமாவின் இழப்பு ஸ்டெல்லா புரூஸால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை அவர் கட்டுரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இறுதி நாட்களில் ஹேமாவுக்குப் பல ஆன்மிகமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறக்கப்போகும் ஒருவருக்கு அப்படிப்பட்ட அனுபவங்கள் நேரிடுவது சாத்தியமில்லை என்று நம்பும் ஸ்டெல்லா புரூஸ், ஹேமா நிச்சயம் உயிர் பிழைத்துவிடுவார் என்று உறுதியாக நம்பத் தொடங்கிவிடுகிறார். அதனால் அவர் தன் மனதை ஹேமாவின் இழப்பை எதிர்கொள்வதற்காகத் தயார்செய்துகொள்ளவேயில்லை. அந்த ஏமாற்றமும் சேர்ந்து அவரை முற்றாகச் சிதைத்துவிட்டது.

முதல்முறை தற்கொலை முயற்சியிலிருந்து தப்பிவிட்ட ஆத்மாநாமிடம், மீண்டும் அவர் தற்கொலை முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார் ஸ்டெல்லா புரூஸ். “தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்துக்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும்,” என்று ஆத்மாநாம் குறித்த கட்டுரையில் எழுதும் ஸ்டெல்லா புரூஸ், ஹேமாவின் இழப்பைத் தாங்க முடியாமல் தானும் அதே முடிவைத் தேடிக் கொள்வது வாழ்வின் குரூரங்களில் ஒன்று.

nnn4

[மனைவி ஹேமாவுடன் ஸ்டெல்லா புரூஸ்]

‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கட்டுரைகளில் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரணம் வந்து போகிறது. தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல், நேரடியாகச் சொல்லிச் செல்லும் எளிமையும், ஆன்மிக நாட்டமும், தீவிர இலக்கிய வாசிப்பும், வெகுஜன இலக்கியவாதிகளிடம் நாம் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள். ஒருவேளை ஸ்டெல்லா புரூஸ் வெகுஜன இதழ்கள் பக்கம் செல்லாமல், தீவிர இலக்கியம் பக்கமே நின்றிருந்தால், தமிழுக்கு ஒரு சிறந்த இலக்கியவாதி கிடைத்திருப்பாரோ என எண்ண வைக்கிறது இப்புத்தகம். இதைத் தொகுத்துப் பதிப்பித்து நமக்குத் தந்திருக்கும் விருட்சம் பதிப்பகத்துக்கு நம்முடைய நன்றிகள்.

இதுவரை நான் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கட்டுரைகளைக் காட்டிலும் என்னை அதிகம் பாதித்தது வேறொரு கட்டுரை. ‘கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள்’ என்ற அந்தக் கட்டுரை பேசுவது ஒரு புனிதமான ‘உறவின்’ மரணத்தைக் குறித்து. செல்வந்தரான தன் சித்தப்பாவை மணந்துகொண்டதால் பள்ளிப்படிப்பை விட்டுவிடும் ஸ்டெல்லா புரூஸின் சித்திக்கும், அவருக்கும் இடையே ஏற்படும் புனிதமான நட்பைக் குறித்துப் பேசுகிறது அக்கட்டுரை. சித்தப்பா வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர், பணம் பண்ணுவதே குறியாக இருப்பவர்; கோபக்காரர் வேறு. கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் அந்த சித்தி மிகவும் தனிமையாக உணர்கிறார். அப்போது அவருக்கு ஸ்டெல்லா புரூஸின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் கதைகளைப் பற்றி ஆர்வமாகப் பேசிக்கொள்ளும் நண்பர்களாகிறார்கள். இருவரும் தினமும் சந்தித்து சித்தி வீட்டு சமையலறையில் அமர்ந்தபடி புத்தகங்களைக் குறித்து பேசிக்கொள்கிறார்கள். ஸ்டெல்லா புரூஸின் வழிகாட்டுதல் காரணமாக மெல்ல மெல்ல சித்தியின் வாசிப்பு விரிவடைகிறது. அவருக்கு எழுதுவதிலும் ஆர்வம் ஏற்படுகிறது. சமையலறையில் மாட்டியிருக்கும் காலண்டரின் பின்பகுதியில் ஒரு சிறுகதை எழுதி அதை ஸ்டெல்லா புரூஸிடம் கொடுக்கிறார்.

கதையைப் பாதி படித்திருக்கும்போது, அவர் சித்தப்பா அங்கே வந்து அதைப் பிடுங்கி அடுப்பில் போட்டு எறித்துவிடுகிறார். ஸ்டெல்லா புரூஸுக்கும், சித்திக்கும் இடையே இருக்கும் உறவைக் கொச்சைப்படுத்திப் பேசி ஸ்டெல்லா புரூஸை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். அதற்குப்பின் ஸ்டெல்லா புரூஸும், அவர் சித்திக்குமிடையே நட்பு முறிந்துபோகிறது. இருவரும் சந்தித்துக் கொள்வதேயில்லை. பல வருடங்கள் கழித்து இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது:

என் மனதில் 1964-இல் வேல்சாமி சித்தப்பா உதிர்த்த அநாகரீகமான வார்த்தைகள் ஞாபகத்தில் வந்து போயின. நான் சின்னம்மாவிடம் கேட்டேன். “அன்னைக்கி சித்தப்பா அப்படிப் பேசின அப்புறம் என்னிக்காவது கதை எதுவும் எழுதிப் பார்த்தீங்களா சின்னம்மா?”

“நல்லா எழுதப் பாப்பேனே… அவர் அன்னிக்கு அப்பிடி பேசினதுக்கு பெறகு நான் மாச காலண்டர்ல ஷீட்டை கூட கிழிக்கிறது கிடையாது. பேனாவையும் தொட்டதில்லை. ஆனாயென்ன – மனசுக்குள்ள ஏதாச்சும் அப்பப்ப கதைங்க தோணத்தான் செய்யும். அதையெல்லாம் மனசுக்குள்ளேயே எழுதிப் பாத்துப்பேன் – அவ்வளவுதேன்…”

சின்னம்மா இதை அவருக்கே உரித்தான மெல்லிய சிரிப்போடும், மிருதுவான குரலோடும்தான் சொன்னார். சில வினாடிகள் இடைவெளி விட்டு தொடர்ந்து சின்னம்மா சொன்னார். “ஆனா என்னோட அடுத்த ஜென்மத்ல கண்டிப்பா கதை எழுதுவேன்…”

ஆனால் இதைச் சொன்ன அடுத்த கணம் சரோஜினி சின்னம்மாவின் கண்கள் சற்றே சுருங்கின. அவருடைய முகத்தின் கனிவு சட்டென மறைந்தது. மனதிற்குள் தெரிகிற ஏதோ ஒரு காட்சியை கண்களால் பார்க்கிற பாவனை அவருடைய முகத்தில் இருந்தது. சிரிப்பு இல்லாமல், கனிவு இல்லாமல், களைத்துப்போன தொனியில் சின்னம்மா சொன்னார்: “ஆனா என் அடுத்த ஜென்மத்திலும் ஒன் சித்தப்பாவே புருஷனா வந்திட்டா – அப்பவும் என்னால கதை எழுத முடியாமத்தான் போகும்…”

ஸ்டெல்லா புரூஸ், ஆத்மாநாம் இருவருக்குமிடையே நிலவிய நட்புணர்வையும், இசை ரசனையையும் காட்டும் ‘பர்வீன் சுல்தானாவின் ஆட்டோகிராஃப்’ கட்டுரையையும், ஆத்மாநாம் எழுதிய மூன்று கவிதைகளையையும் இதே இதழில் படிக்கலாம்.

புத்தக விபரங்கள்:

என் நண்பர் ஆத்மாநாம்
ஸ்டெல்லா புரூஸ்,
விருட்சம் பதிப்பகம்,
6/5, போஸ்டல் காலனி முதல் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 33
152 பக்கங்கள், 100 ரூபாய்