வம்ச விருட்சம்

பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் ஏதோ எக்ஸிபிஷன் போட்டிருந்தார்கள். என்ன எக்ஸிபிஷன் என்று தெரியாமலேயே சுற்றிப் பார்க்க வந்துவிட்டேன். என்னவாக இருந்தால் என்ன, வாங்குபவர்களுக்குத்தானே அந்தக் கவலை. முன்பும் கூட ஒரு தியேட்டரை வாடிக்கையாக வைத்துக் கொண்டு என்ன படம் ஓடினாலும் கவுண்ட்டரில் அல்லது சீட்டில் உட்கார்ந்த பின் என்ன படம் என்று கேட்டு, பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் இருந்தது. இன்னும் இருக்கிறது. ரிடையர்ட் ஆகிப் பத்து வருசம் ஆச்சு. அவள் போயும் ஏழு வருசம் ஆச்சு. மகனும் , மருமகளும் காலையிலேயே வேலைக்குக் கிளம்பி விடுகின்றனர். பிள்ளைகளுக்கு ஒரு தெளிவான சித்திரப் பாதை வரைந்திருக்கிறார்கள். ஆறு வயதில் அரங்கேற்றம் முதல் ஐ.ஐ.டி இடையாக அமெரிக்கா கடையாக உச்சம் பச்சை அட்டையில் நிற்கிறது. அதற்கப்புறம். தெரியாது. எல்லாம் இங்கிலிஸ், இங்கிலிஸ்தான். அதே அபார்ட்மெண்ட்டில் அதன் அசோசியேசன் செகரட்டரியைப் பார்த்தேன். நல்ல பணக்காரர். இந்த அபார்ட்மெண்ட் இடம் அவருக்குச் சொந்தமாம். ஜாயின்ட் வெண்ட்சரில் சில கோடிகளும் , முப்பது வீடுகளும் கொடுத்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் நான்கு படுக்கை அறை ஃபிளாட்டை விட்டுவிட்டு மீண்டும் பழைய தெருவுக்கே போகப் போவதாய்ச் சொன்னார். காரணம். “எல்லோரும் இங்கிலீஸில் பேசுகிறார்கள்.நமக்கு ஒட்ட மாட்டேங்குது.”. நாம் எங்கே போக முடியும்? ஒரு நாள் பேரன் என்னிடம் தனியாகச் சொன்னான். தாத்தா நான் ஒரு இங்கிலீஸ்காரியைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்.

ஹா..ஹா. முடியுமா! கல்யாணம் என்றவுடன் எனக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. என் கல்யாணத்தைப் பற்றி அல்ல. எங்கள் கல்யாணங்கள் குறித்து. எங்களுக்கு தாய் மொழி தெலுங்கு. அந்தக் காலத்தில் ஆந்திராவிலிருந்து வந்திருக்கிறோம். உத்தேசமாக விசாகப்பட்டினம் பக்கத்திலிருந்து. கூடவே வேட்டைக்கு நாய்களும், கூட்டிப் பெருக்க தோட்டிகளும், சடங்கு சம்பிரதாயங்களுக்கு பிராமணர்களும். தமிழர்கள் கேட்டால் தெலுங்குக்காரர்கள் என்போம். தெலுங்குக்காரர்களிடம் பேசும்போது நூற்றுக்கணக்கான வருசங்களுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து வந்த வர்மாக்கள். கலப்பில்லாத க்ஷத்ரிய வம்சம் என்போம். நல்ல காலம், அவ்வளவாக ராஜஸ்தானியர்களிடம் பேச வாய்க்கவில்லை. கூட்டிக் கழித்துச் சொல்ல விரும்புவது இதுதான். நாங்கள் மாறுபட்டவர்கள். பசப்பல் எதற்கு? நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதைச் சொல்வதற்குதான் இத்தனை வேறுபாடுகள். எல்லா ஜாதிகளுக்கும் இருப்பதுதான். எங்களுக்கு இந்த நினைப்பு கொஞ்சம் அதிகம். அதைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

முக்கியமாகப் பண்ணியது பெண்களைப் படிக்க அனுப்பாமல் இருந்ததுதான். அங்கேதான் பிள்ளைகள் கெட்டுப்போகின்றன என்று உறுதியான நினைப்பு இருந்தது. பெண்களைப் படிக்க வைப்பதுதான் உயர்குடித்தன்மை என்றான பின்பு வேறு வழியில்லாமல் எங்களுக்காகவே ஒரு காலேஜ் கட்டிக் கொண்டோம். எங்கள் ஜாதியில் படித்த பெண் என்றாலே கே.எம்.எல். காலேஜில் எந்த செட் என்று கேட்டுவிடலாம். பள்ளிகளில் நன்கு படித்த பிள்ளைகளுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டாலும் முடிந்தவரை அனுப்பாமல் இருப்போம். ஒரு சிலர் பதினாறு வயது வித்யாசம் கூட பார்க்காமல் தாய் மாமனுக்கு நிச்சயம் செய்துவிட்டு அனுப்பியதும் உண்டு. பிள்ளைகளுக்கு மூன்று நாட்களாவது அறிவுரை நடக்கும். நம்ம கலருக்கு பையனுக வளைய வருவானுக. மானம்தான் முக்கியம். அப்படி இப்படி நடந்தது, உயிரோடு பார்க்க முடியாது என்று தூக்குக் கயிறு, பூச்சி மருந்து போன்ற படிமங்கள் காட்டப்படும்.

என் அண்ணன் ஒருத்தன் இலக்கியம் என்று ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான் அவனிடம் கற்றுக் கொண்டதுதான் இந்த வார்த்தை. பஞ்சு மில்லோடு சேர்த்து வைத்து எரித்து விடுவேன் என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்னொன்று, முக்கியமாக எந்த விசேசங்களுக்கும் கல்யாணமாகாத பெண்களைக் கூப்பிட்டுப் போகவே மாட்டோம்.

பையன்கள் அப்படி இப்படி இருக்கதான் செய்தார்கள். ஆனால் கல்யாணம் என்று வரும்போது கண்ணுக்கு மை போட்டு, வேஷ்டியில் ரோஸ் சாயம் நனைத்து, பின்னால் எருக்கஞ்செடி சொருகி, ஓலைப் பெட்டிக்குள் காலை நுழைத்து ரெட்டைத்தாலி கட்டினார்கள். எங்கள் உறவினரின் கல்யாணத்துக்கு வந்திருந்த இலக்கிய நண்பர்களிடம் எனக்கு இந்த வேசம் எல்லாம் போட்டுக் கல்யாணம் நடக்காது என்று எங்கள் அண்ணன் சொல்லிவிட்டான். ஒரு நொடி, அதிர்ச்சிதான். எத்தனை பேரை இப்படிப் பார்த்திருப்போம், இவனை வழிக்குக் கொண்டு வரவா, என்று நினைத்திருந்தோம். ஆனால் பெரும் பிடிவாதக்காரனாய் இருந்த அவனைப் பற்றிப் பயந்து கொண்டே இருந்தது கடைசியில் உண்மையாகிப் போச்சு

இன்னொரு முக்கியமான விசயம் மாமியாரும், மருமகனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள். பல ஜாதிகளில் லேசுபாசாக இருப்பதுதான். ஆனால் எங்களில் உறுதியான விதி. ஆகவே மகளின் கல்யாணத்துக்கு தாயார் வரமாட்டார். மருமகன் வீட்டிற்கு வரும்போதும் அவர் மாடியிலோ, வேறு அறையிலோதான் இருப்பார். வாங்க, என்றுகூடச் சொல்லக் கூடாது.

ஓ.. இது பில்டிங் எக்ஸிபிசன். சிரித்துக் கொண்டேன். எல்லா விலைகளும் பயமுறுத்தின.

“இங்க இருப்பதிலேயே காஸ்ட்லியானது எது” என்று கேட்டு ஒரு டாய்லெட் பேசினை புதுப்பணக்காரி வாங்கிப் போனாள். என்ன சிறப்பம்சங்களுடன் வேண்டும் என்று கேட்கத் தெரியவில்லை. விலை அதிகமானது: சிறப்பானது கொள்கை போலும். அதில் என்ன ஸ்பெசல் என்று கடைக்காரரிடம் கேட்டேன். அவர் சிரித்தார். நானும் சிரித்துக் கொண்டேன். கை நிறைய விளம்பரத்தாள்கள். கிட்டத்தட்ட அநாவசியப் பொருட்கள் அநியாய விலையில். கதவையும் , டைல்ஸ்ஸையும் விற்பதற்கு லிப்ஸ்டிக் பெண்கள்.

கால் வலித்தது. மீண்டும் ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். அந்தப் பளபள பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கோமே? ஆம், வசுந்தரா தாஸ். கட்டடப் பொருள் காட்சியில் இவர் என்ன வாங்க வந்திருக்கிறார்? ஹே ராம் படத்தில் “பிடாதுன்னுட்டாளா” என்று கேட்டது ஞாபகம் வந்தது. அப்படியெ கமல் நடித்த இன்னொரு படம் எங்கள் ஊரில் சிறிய பிரச்சனையைக் கிளப்பியது .

அந்தப் படத்தில் கமல் ஆந்திராவில் இருந்து ஒரு பெண்ணை கூப்பிட்டு வந்து கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், அந்தப் பெண் ஆந்திராவின் ஜாதிகளில் தமக்கு இணையான ஜாதிதான் என்றும் சொல்வார். ஒண்ணும் தப்பாச் சொல்லிடலை. ஆனால் அந்த ஜாதி மக்கள் மிகக் குறைந்த அளவில் தமிழகத்தில் வாழ்ந்து வருவதும், அவர்கள் அப்படிக் கமல் கதாபாத்திரத்தின் ஜாதியை இணையாகக் கருதாமல் இருப்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அப்படம் வெளியான தியேட்டர் எங்காள்கள் கையில்தானே இருந்தது. வசனத்தைக் கட் பண்ணியாச்சு. நமக்கு அவர்கள் இணை என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ? ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் ஜாஸ்தி. பிரச்சனை பண்ணி வசனத்தை மீண்டும் ஒட்டவைத்து விட்டார்கள். என்னமோ சம்பந்தமே பண்ணியது போல் துள்ளிக் குதித்தார்கள்.

இத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி ஓடிப்போனவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருக்க முடிவதில்லை. ஓடிப்போகிறார்கள். அவர்களை என்ன செய்ய! ஆனால் அப்படி விட்டுவிட முடியுமா? பெத்தவுங்களைப் பிடித்து தலைவர் வீட்டுத் தூணில் கட்டி வைத்து விடுவோம். எனக்கும், பிள்ளைக்கும் உறவு அந்து போச்சு என்று எழுதிக் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுவோம். ஓடிப்போனவர்களுக்கு மட்டும் வம்ச விருட்சத்தில் ஒரு கரும்புள்ளி . இல்லாவிட்டால் அந்தக் குடும்பத்துக்கே ஒரு கரும்புள்ளி. யாரும் பேசக் கூடாது. யாரும் தண்ணி குடிக்கக் கூடாது. நல்லது பொல்லாததுகளுக்குப் போகக் கூடாது. போனால் அவர்களுக்கும் தண்டம் உண்டு.

“வாட் கரும்புள்ளி?” யாரோ கேட்கிறார்கள். ச்சே ஏதோ உளறி இருக்கிறேன். தன்னையறியாமலே பேசுகிறோமோ என்ற எண்ணம் உறுதியானாலும் எனக்கு நானே நம்ப மறுத்தேன்.

மீண்டும் மனம் வம்ச விருட்சத்தைச் சுற்றி வந்தது. பேரன் இங்கிலீஸ்காரியைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாய்ச் சொன்னபோது சிரிப்பு வந்தது. அப்படி நினைத்தது போல் திருமணம் செய்துகொள்ள முடியுமா என்ன? ஒரே ஜாதியில் கூட யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியாது. தமிழ்க்காரர்களுக்கு அவ்வளவாகக் குடும்பப் பெயர்கள் இல்லை. ஆனால் எங்களுக்கு குடும்பப் பெயர் ரெம்ப ரெம்ப முக்கியமானது. ஒரே குடும்பப் பெயர் உள்ளவர்கள் கூடப் பிறந்தவர்களுக்குச் சமம். கல்யாணம் பேச ஆரம்பித்தலில் முதல் அடியே குடும்பப் பெயர்களைச் சரி பார்த்தல்தான். என் தாத்தாவின் குடும்பப் பெயர்தான் அப்பாவுக்கும் எனக்கும், என் பையுனுக்கும் பேரனுக்கும் கொள்ளுப்பேரனுக்கும். ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே தொடரும். பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் வரை எங்கள் குடும்பப் பெயர். பின் கணவனின் வீட்டுப் பெயர். இப்படி இருபது இருபத்தைந்து தலைமுறைகளாக எங்கள் முன்னோர்களின் பட்டியலைப் படம் வரைந்து வைத்திருக்கிறோம். தலைமுறைகள் – வம்சங்கள் வாழையடி வாழையாய். முதல் தலைமுறை மரத்திலிருந்து வந்த கனிகளாய் அடுத்த தலைமுறை, அக்கனிகளில் இருந்து மீண்டும் மரங்களாய் அடுத்த தலைமுறை. இப்படி தொடர்ந்து தொடர்ந்து வம்சங்கள் வம்ச விருட்சங்களாய்ப் படம் பண்ணி வைத்திருக்கிறோம்.

பெண் பிள்ளைகள் வம்சத்தைத் தொடர்வதில்லை. முழுவதும் பெண் குழந்தைகளாலான குடும்பத்திற்கு வம்ச விருட்சத்தில் ஒரு புள்ளி வைக்கப்படும். அவ்வளவுதான். அக்குடும்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. சந்ததி இல்லாமல் போனாலும் புள்ளிதான். வேறு ஜாதியில் கல்யாணம் முடித்தாலும் வம்ச விருட்சத்தில் புள்ளி வைத்து முடிவுக்கு வந்துவிடும். பின் தொடரும் தலைமுறைகளைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது. இவை எல்லாம் தலைவரின் வீட்டில் வைத்துப் பராமரிக்கப் படும். எந்த ஊரில் இருந்தாலும், பிள்ளை பிறந்தாலும் இறந்தாலும், கல்யாணம் செய்து கொண்டாலும் ஓடிப் போனாலும், தலைவர் வீட்டில், அவர் வீட்டு முற்றத்தில் உள்ள சாவடிக்குச் சொல்லியாக வேண்டும். அங்கு பதிவு செய்து வம்ச விருட்சத்தில் இடம் பிடிக்க வேண்டும். வம்ச விருட்சத்தில் இடம் பிடிக்க முடியாதது படு கேவலம். புள்ளியிலிருந்து வந்தக் குடும்பக்காரனே என்று சொல்லும்படி இருக்கிற தெலுங்கு வசைச் சொல் படு பிரபலம்.

இப்படிப்பட்ட தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும், அப்பாவையும் கட்டி வைத்து விட்டார்கள். அண்ணன், சொன்னது மாதிரி செய்து விட்டான்.அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம். இலக்கியம் தெருநாடகம் என்று திரிந்தான். கூட நடித்த வாத்யார் பொண்ணைக் கல்யாணம் பண்ணப் போவதாய் வீட்டில் சொன்னான். வீடும் உறவினர்களும் செய்த சதிகள் சொல்லில் அடங்காது. அண்ணன் வேலை பார்க்கும் கவர்ன்மெண்ட் ஆபீசுக்கே போய் வேலையை விட்டுத் தூக்க ஏற்பாடு செய்தார்கள். யாருக்கும் தெரியாமல் பண்ணவில்லை.

எல்லோருக்கும் சொல்லி , அலையவிட்டு பதட்டப்பட வைத்து , அதை ரசித்து உங்களால் என்னை எதுவும் பண்ணமுடியாது பார் என்று சொல்கிற மாதிரி கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டான்.

தூணில் கட்டி வைப்பது ஒரு சடங்கு மாதிரிதான். அவன் எனக்குப் பிள்ளையே இல்லை என்று சும்மாகூட எழுதி வாங்கலாம். ஆனால் இதை ஒரு விதி அல்லது சடங்கு மாதிரி கட்டி வைத்து விட்டார்கள். வம்ச விருட்சத்தில் கரும் புள்ளி வைக்கப்பட்டது. இனி அண்ணன் எங்கள் ஜாதியில்லை. எங்கள் குடும்பம் இல்லை. யார் கல்யாணத்துக்கும் வர முடியாது. யார் சாவுக்கும் வர முடியாது. ஏன் அப்பா அம்மா செத்தால்கூட வர முடியாது .. அம்மாவுக்கு அவன் மேல் பாசம் அதிகம். ஏங்கி ஏங்கி உயிர் விட்டாள். சாவுக்கு வந்தான். மூணாவது மனுசன் போலச் சந்தியில் பார்த்தான். அழுத மாதிரிதான் தெரிந்தது. ஏனோ சுடுகாட்டுக்கு வரவில்லை. அவன் போட வேண்டிய கொள்ளியைப் போட முடியாததைச் சகித்துக் கொள்ள முடியவில்லையோ என்னவோ. அவன் சந்ததிகளைப் பற்றி எங்கள் சந்ததியினர் சாவடியில் தெரிந்து கொள்ளவே முடியாது. வம்ச விருட்சத்தில் எத்தனை கரும்புள்ளிகள். ஒவ்வொரு புள்ளியும் மூடி வைத்திருக்கும் துயரங்கள் எத்தனையோ. இதுவரை வெறும் புள்ளிகள். இன்று கடக்க முடியாத துன்பமாகிப் போனது . புள்ளி வராமலிருக்க எத்தனை பேர் எத்தனை துன்பங்களைச் சந்தித்தார்களோ ?

ஏன் தலைவர் வீட்டில் ரெண்டாவது பையன் மஞ்சள் மஞ்சேளென்று கர்நாடகாவிலிருந்து ஒரு பெண்ணைக் கட்டிக்கொண்டு அமெரிக்கா போய்விட்டானே, தூணிலா கட்டி வைத்தார்கள்? ஒரேயடியாக அந்த காலத்தில் கர்நாடகாவில் போய் செட்டிலான நம் ஜாதிதான் என்று சாதித்து விட்டார்களே. ஏ.ஜி.எம் ஃபைனான்ஸ் ஆரம்பித்து அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டுப் போனவன் நம்ம சாதிதானே. அவன் வம்சத்துக்கு ஒரு புள்ளி வைக்கலாம் இல்லியா? இது மட்டும் தான் குற்றமா?

“ராகவேந்திரா.”

யாரது நம்மளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது.

“ராகவேந்திரா.என்னைத் தெரியலியா? ஒம் மதினி.”

தூக்கி வாரிப் போட்ட்து . அண்ணன் போனது தெரியும். ஆனால் வதின இப்படி அழுதழுது ஓய்ந்த கண்ணோடு இருப்பார்கள் என்று கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லையே.

வதின அங்கேயே அழுதார். எனக்கும் கூட கண்ணீர் திரண்டது . ஏனோ அழவில்லை.

சிறு பையன் பேரனாக இருக்க வேண்டும். புரிந்தோ புரியாமலோ சிரித்தான்.

“வீட்டுக்கு வாப்பா.மாரத்த ஹள்ளியில வீடு. ஃப்ளாட்டுத்தான். ஊர் அப்படியேதான் இருக்குதா”

சாயந்திரமே போனேன். மனம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“எல்லாம் நல்லபடியாதான் போச்சு. அவருக்கும் வருத்தம்தான் இப்பிடிக் குடும்பம் விட்டுப்போச்சேன்னு. ஆனா அவரு பண்ணினது தப்புன்னு கடைசி வரை நெனைக்கவே இல்ல.என்னாலதான் இப்படி ஆச்சோன்னு சில சமயம் அழுவேன். அதெல்லாம் முடிஞ்சு போச்சு. என்னைக்கு வம்ச விருட்சத்துல ஒரு புள்ளி வச்சு முடிச்சாங்களோ அன்னிக்கே இன்னொரு வம்சம், இன்னொரு வம்ச விருட்சம் இங்க தொடங்கியாச்சு. ”

பேரன் கம்ப்யூட்டரில் வம்ச விருட்சத்தைக் காட்டினான். ஃபேமிலி ஹிஸ்ட்ரி சார்ட் என்றான். நான் என்னைத் தேடி ஏமாந்தேன். அண்ணன் வதினவிலிருந்து துவங்கியிருந்தது.

“புள்ளியே கெடையாது” என்றார் வதின சிரித்துக் கொண்டே.

“தெலுங்கு தெரியுமாப்பா?” பேரனைக் கேட்டேன், பேச்சை மாற்ற.
“ஏற்கனவே கன்னடம், இங்கிலீஸ், ஹிந்தின்னு மூணு படிக்கிறான். நாங்க பேசுறதுனால தமிழும் பேசுறான். அவன் அப்பா வரைக்கும் தெலுங்கும் சொல்லிக் கொடுத்தோம். இப்ப முடியல”.

புதிய வம்ச விருட்சத்தை மெயில் பண்ணச் சொல்லிவிட்டு வந்தேன்.