ஜெயந்தி சங்கரின் நெடுங்கதைகள்…..

விளம்பரங்கள், கவைக்குதவா. பொய்கள் மட்டுமே ஒரு பொருளின் விற்பனைக்கான தகுதியை உயர்த்திவிட முடியாது, வாடிக்கையாளர் நம்பிக்கையை நிரந்தரமாகப் பெற பொருளுக்கான தரமும், உண்மையும் தவிர்க்கவியலாத காரணிகள். ஓரு எழுத்தாளனின் வெற்றிக்கும் இது பொருந்தும். பொதுவாக கலை என்பது கற்று வருவதல்ல, அது வரம். உதிரிப் பேச்சாளர்களாக மேடையேறுகிறவர்கள் அடுத்த ஐந்தாவது மாதத்தில் சிறப்பு பேச்சாளர்களாக மேடையில் சவால் விடுவதைப் பார்க்கிறோம். எதிரில் அமர்ந்திருப்பவர்கள், மேதைமைக்கேற்ப இணங்கிப்போகவேண்டியது பேச்சாளர்களுக்கான தலை விதி. அவனுக்கான மேடையையும், ரசிகர்களையும் அவன்தான் தேடி அலைகிறான். எழுத்தாளன் எந்தத் தளைகளுக்கும் கட்டுண்டவனல்ல, அவன் எழுத்தைத் தேடி வாசகர்கள் வருகிறார்கள், மேடைப்பேச்சில், பேசுபவருக்கும் கேட்பவருக்குமான இடைவெளி அதிகம். எழுத்தில் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான நெருக்கம் அதிகம். எழுத்தில் ஜெயிக்க, 75 சதவீதம் உழைப்பு என்றால் இருபத்தைந்து விழுக்காடு இயற்கையிலமைந்த கொடை அல்லது கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் சொல்வதுபோல இறைவன் கொடுத்த வரம். அவ்வரம் எழுத்தாளர் ஜெயந்திசங்கருக்கும் வஞ்சனையில்லாமல் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடைய படைப்புகளை வாசித்து வந்திருக்கிறேன். அவர் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நெடுங்கதைகளென படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பரிச்சயமானவர், குணம் நாடி சக எழுத்தாளனுக்கேயுரிய காழ்ப்பில் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக்கொண்டதில் அவரது நெடுங்கதைகளின் குணங்களைப் பேசவேண்டுமென தோன்றியது. நெடுங்கதைகளுக்கென மனதிற்கொள்ளவேண்டிய சூத்திரங்கள், கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளென்று நிறைய சொல்கிறார்கள். எந்த ஒரு நல்ல எழுத்தாளனும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு எழுத உட்காரமாட்டான், அப்படி எழுதுவது, பிரம்புடன் அருகில் ஆசிரியர் நிற்க மாணவன் வியாசம் எழுதுவதுபோன்றது, அதாவது யாப்பிலக்கண விதிகளின்படி எழுதுகிறேனென்று சக்கைகளைத் துப்புகிறவர்களைப் பார்க்கிறோமில்லையா? அவ்வாறான ஆபத்து உரைநடைக்கும் வந்துவிடபோகிறதென்கிற அச்சத்தில் இப்படி எழுதவேண்டியிருக்கிறது. பொதுவாகச் சிறுகதை என்பது உண்மைக்கு வெகு அண்மையில் நின்று கால மயக்கமின்றி, ஒற்றைச் சம்பவத்தை சொல்பவன் கேட்பவனின் நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சொல்லமுற்படுவதெனில், நெடுங்கதையில் மாறாக எல்லாமே இரட்டிப்பாக இடம்பெறுகின்றன. இங்கே சொல்பவனுக்கான நேரத்தைபொறுத்து, கதை நகர்த்தப்படுகிறது. சிறுகதையில் கணநேர கேள்விக்குள்ளாகும் சமூகம், இங்கே கதை சொல்லியின் கால நேர வர்த்தமானங்களுக்குரிய எழுதுபொருளாகிறது. சிறப்பு கதைமாந்தர்களோடு, துணைமாந்தர்கள் இணைந்துகொள்கிறார்கள். கதையூடாக படைப்பாளியை அவன் மனதைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் நெடுங்கதையில் வாசகர்களுக்கு அதிகம். நெடுங்கதைகளில் கதைசொல்லல் எப்படித் தீர்மானிக்கபட்டிருக்கிறது என்பது முக்கியம். படைப்பாளியும் கதைக்கலாம், கதையில் வருகிற பாத்திரமும் பேசலாம். கதைமாந்தர்களும் வாழ்வெளியும் நெடுங்கதைகளில் கவனிக்கத் தக்க இரண்டாவது குணம். மூன்றாவதென்று கதையை நகர்த்த கையாளும் உரையாடல்களை எடுத்துக்கொள்ளலாம். ஜெயந்தி சங்கருடைய நான்கு நாவல்களை இதுவரை வாசித்திருக்கிறேன்:வாழ்ந்து பார்க்கலாம் வா, நெய்தல், மனப்பிரிகை கடைசியாக குவியம்.

மேலே குறிப்பிட்ட நான்கு நெடுங்கதைகளுக்கென்றும், கதை சொல்லலில் ஒரு சுதந்திரம் தெரிகிறது. நெடுங்கதைகளில் தன்மைக்கேற்ப கதைசொல்லும் போக்கினை ஆசிரியர் தீர்மானித்திருக்கவேண்டும். அதனாற் சொல்லப்படுகிற கதைக்கு அழுத்தமான நம்பகத் தன்மைக்கிடைக்கிறது. வாசகனைக் படைப்புடன் ஒன்றவைக்க கதைக்கேற்ற சொல்லல்முறையை கையாளுவது அவசியம் அதில் ஜெயந்தி தேர்ந்திருக்கிறார். முதலாவது “நாவலான வாழ்ந்து பார்க்கலாம் வா” என்ற நெடுங்கதையில் வசந்த்தின் தந்தை, வெங்கட்டுவின் தந்தை, உமாவின் தாய், வெங்கட்டுவின் சிநேகிதன், சிநேகிதி, அவுன்ஸ் மாமா, ஷீலாவென்று கதையை நகர்த்திக்கொண்டுபோகிறவர்கள் அனவருமே துணைமாந்தர்கள், வெங்கட்டுவைத் தவிர. நடுத்தர வைதீக குடும்பத்துக்கேயுரிய பொருளற்ற நெறிகளில் சிக்கித் தவிக்கும் பெண்ணுக்கான நெருக்கடிகளும், மீட்சியும், அவளைச்சுற்றியிருக்கும் மனிதர்களால் தன்மையில் நமக்குச் சொல்லபடுகின்றன. மாறாக நெய்தல், மனப்பிரிகை, குவியம் மூன்றிலும் கதையாடல் படர்க்கையில் எழுதப்பட்டிருக்கிறது. இம்மூன்று நெடுங்கதைகளையும் கால அட்டவணைக்கு உட்படுத்தினால், சொல்லாடல், கதைமாந்தர், சொல்லும் திறன் ஆகியவற்றில் ஒருவித படி நிலை வளர்ச்சியும் தெரிகிறது.

சிங்கப்பூர் பற்றிய தெளிவான பிம்பத்தை ஜெயந்தியின் எழுத்துகள் நமக்கு வழங்குகின்றன. நகரம், மக்கள், இளைஞர்கள், சமூகம், உள்ளூர் தமிழர்கள், ஊர் தமிழர்கள், புலம்பெயர்ந்த இடத்திலும் ஊர், சொந்தம், பெற்றவர்கள், பிள்ளைகளை சதா எண்ணி உழைத்து வாழும் கூட்டத்தின் ஏக்கங்கள், எஸ் பாஸ் கனவுகள், வீட்டுவேலைக்கென போகும் பெண்களின் வாழ்க்கைமுறைகள், சஞ்சலங்கள், உள்ளூர் எழுத்தாளர் பெருமக்களின் நிறங்கள் என ஆசிரியர் பார்வைக்கு எதுவும் தப்புவதில்லை

ஜெயந்தி சங்கர் கதைமாந்தர்கள் அநேகமாக நாம் தினசரி சந்திக்கிறவர்கள். சாலையில் நம்மைக்கடந்து செல்கிறவர்கள், பயனத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்து அவ்வப்போது புன்னகைக்கிறவர்கள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டருக்குண்டான கதைகளில்கூட அம்முகங்களை இடைவேளைக்குப் பிறகு சந்தித்ததுபோல நினைவு, செய்தி பத்திரிகைகளின் தினசரி சம்பவங்களில் கூட வாசிக்கப்படுகிற மனிதர்கள்தான். ஜெயந்தியின் கதைகளில் காலெடுத்துவைத்ததும் நிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களை தமது நெடுங்கதைகளில் சரியான தருணங்களில் உபயோகித்துக்கொள்ள ஆசிரியருக்குக் கைவந்திருக்கிறது. அவர்கள் மேட்டுக்குடி மக்களல்ல, எளிமையானவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், நம்மைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய மகிழ்ச்சியும், துன்பமும் நம்மவைபோல தெரிகின்றன அல்லது நமது அண்டை வீட்டாரதுபோலுள்ளன. குறிப்பாக பெண்கள் பட்டைத் தீட்டப்பட்ட வைரம்போல ஜொலிக்கிறார்கள், எனினும் அவர்களின் நிலை பரிதாபமானது. எழுத்தாளர் ஜெயந்தி அறிமுகப்படுத்தும் பெண்கள் மெத்தப்படித்திருந்தாலும் அவர்கள் நெருக்கடிகளைத் தேடி அலைகிறார்கள், விரும்பி பாழுங்கிணற்றில் விழுகிறார்கள், உண்மையும் அதுதானே.

தேர்வு செய்யும் கதை, கதை சொல்லும் நேர்த்தி, சொல்லாடல், கதைக் களம், கதைமாந்தர்கள் என்பவை மரபணுபோல. எழுத்தாளனை அடையாளப்படுத்தும் குரோமொசோம்களென்று இவைகளைச் சொல்லலாம். எழுத்தாளர் ஒரு பெண், சிங்கப்பூர்காரர், புலம்பெயர்ந்தவர், படித்த நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தவர் என்பதை அவரது நெடுங்கதைகள் நமக்குச் சொல்கின்றன. எழுதுபொருள், கதைக்களன், சொற்கள், மனிதர்கள் என அனைத்துமே இப்பின்புலத்திலிருந்து பிறப்பவை அல்லது பிறக்கின்றவர்களென சொல்வதற்கான உதாரணங்கள் நிறைய உண்டு. வாழ்ந்து பார்க்கலாம்வா கதை நாயகி, வாழ்க்கைச்சுழலில் சிக்குண்டு தவிப்பவள். அவள் கரைசேர்ந்துவிடக்கூடாதென்றே ஒருகூட்டம். அவர்கள் கைகளில் மரபு, பண்பாடு, பாசம் என்ற ஆயுதங்கள் உண்டு, எதை எப்படி உபயோகிப்பதென்கிற கலையில் அவர்கள் தேர்ந்தவர்கள். நெய்தல் நாயகி, இன்றைய இளைஞர்கள் வாய்ச்சொல்லில் வீரரென அவள் அறியாததும், நவீன உலகில் சொல்லும் செயலும் இருவேறு திசைகளில் பயணிப்பவையென அறியாமல் அவள் தடுமாறுகிறபோது நமக்கு அனுதாபம் பிறக்கவில்லை, மாறாக எரிச்சலும் கோபமும் வருகிறது. அதைத்தான் வாசகர்களிடம் ஆசிரியர் எதிர்பார்க்கிறாரோ என்ற ஐயம். குவியம் நாயகி சுவாதியும் நாம் அன்றாடம் சந்திக்கிற நடுத்தரவர்க்கத்து பெண்மணிதான். பெண்குழந்தை என்று பிறந்தால் அது திருமணமென்ற ஒரே நோக்கத்திற்காக என்று கண்மூடித்தனமான நம்பிக்கைக்கொண்டிருந்த சிந்தனைத் தலைமுறையைக் கடந்தே வந்திருந்த அம்மாவிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும் என்று ஆதங்கப்படும் அவளே வலமும் போகாமல் இடமும் போகாமல் அவதிபடும் அவளை என்னென்று சொல்வது. இம்மூன்று பெண்களிலும் பார்க்க மனப்பிரிகை நாயகி பெண்ணியத்தின் பிம்பமெனலாம். தனது சிந்தனையிலும், செயல்பாடுகளிலும் தெளிவாக இருப்பவள். என்னைப்பெரிதும் கவர்ந்த முதன்மைப் பெண்.

கதை நாயகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் குடிபெயர்ந்து ஆசிரியருக்குச் சொந்தமண்ணில் மரபென்றபேரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சொல்ல உமாபோன்ற ஒருத்தி தேவை. அவள் தனது உணர்வைக்கொன்று, தனக்கென்று இல்லாமல் பெற்றோருக்கும், சமூகத்திற்கென்றும் வாழ்க்கையைத் தேர்வு செய்கிறவள். பெண்ணுக்குத் திருமண வயதென்றாலும் பெற்றோருக்குக் ‘கொழந்த’. “மாப்ள அமெரிக்கால இருக்கான். நெறைய சம்பாத்யம், போட்டோல பார்க்க ராஜாவா இருக்கான். அவா குடும்பம் எப்பிடியாபட்ட குடும்பம் தெரியுமா?….நாளைக்கி பொண் பார்க்க வரா.” என்றதும், இவளும் விதியே என்று சம்மதிக்கிறவள், மாப்பிள்ளை முன்னால், நானொரு விளையாட்டு பொம்மையா? என்று பாடத்தெரிந்த படித்த அசடு. நெய்தல் நாயகி மாலா வேறு ரகம், பிறந்ததும் வளர்ந்ததும் சிங்கப்பூர், “தோள்வரை வெட்டி விடப்பட்டிருந்தக் கூந்தலை அலட்சியமாகப் பின்னுக்குத் தள்ளிக்கொள்வதனூடாக தன்னம்பிக்கையை வெளிப்படுத்துபவள், கவிதைகளை ஆராய்வதில் திறமையும் அவளுக்கு உண்டு, ஆனால் செந்தில் போன்ற சுய நலமிகளை இனங்காணப் போதாமல், ” எனக்கு செந்தில் மேலே ஒரு கோபமுமில்லை. இப்பவும் ஒருஃப்ரண்டாதான் பார்க்கறேன். ப்ரியா அவருக்கேற்ற மாதிரி க்யூடா இருக்கா. எனக்கு என்ன தோணிச்சின்னா, நா ரிஸெப்ஷனுக்கு வந்தா, என்னப் பார்க்கும்போது அவருக்கு அசௌகரியமாயிருக்குமே அதான் அவாயிட் பண்றேன்” என சமாதானம் தேடிக்கொள்ளும் ரகம். மனப்பிரிகை சந்தியா அறிவு பூர்வமாக சிந்திப்பவள் என்றாலும், தணல் அரிதாரம்பூசிய மெழுகு உ.ம்: “உனக்கிருக்கும் அழகுக்கும் அந்தஸ்த்துக்கும் பொருத்தமானவள் கிடைப்பாளே கோபி”, என்ற குரலில் அவளுக்குள்ளும் பெண்ணியம் விழிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. குவியம் நாயகி சுவாதிக்கு அமையும் வாழ்க்கையும் வேறானதல்ல. கையாலாத கணவனையும் நோயுற்ற குழந்தையையும் பராமரிக்க வேறுவழியின்றி சிங்கப்பூர் வரும் நாயகி, காலம்காலமாக நாமறிந்த நளாயினியின் இருபத்தோராம் நூற்றாண்டு வார்ப்பு.

நாயகிகள் நால்வருக்கும் நாம் அறிந்த எதார்த்த உலகின் அம்மாக்கள் துணைக்கு படைக்கப்பட்டிருக்கிறார்கள். பெற்ற மகள்களின் தலைவிதியை எண்ணி எப்போதும்போல அவர்கள் கண்கலங்குகிறார்கள். “ஒருபெண்ணுக்குப் பாதுகாப்பு என்பது என்ன? பெற்றோரா? கணவனா? திருமணமா? அவள் இதிலொன்றைச் சார்ந்தே இருக்க வேண்டியதுதானா?… பெண் என்றால் ரத்தமும் சதையுமாகச் சகமனுஷியாக நினைக்காமல், ஒரு போகப்பொருளாக நினைப்பதால் வந்த வினையோ இதெல்லாம். நினைக்க நினைக்க என் மன ஆறவேயில்லை.” என்று சினங்கொள்கிற வாழ்ந்து பார்க்கலாம் வா நாவல் ஷீலா, அவுன்ஸ் மாமா; நெய்தல் நாவலில் வருகிற பவானி, குமார், சிறிது நேரமே அறிமுகமாகும் கவிஞர் குழந்தைசாமி, “கல்யாணச் சந்தையில் தான் சந்தித்த தோல்விகளையும், குடும்பம் குடும்பம் சார்ந்த வாழ்க்கை முறைகளையெல்லாம் காணும்போது, எப்போதேனும் தலை தூக்கும் சிந்தனைகளைக் கிளைவிடாது ஒடுக்கவும், ஆசைகளையெல்லாம் பொசுக்கி விடவும்.. கடையும் கடையில் உழைப்பதும் அத்தைக்குப் பேருதவியாகின. அத்தை கிட்டத்தட்ட தான் ஒரு பெண் என்பதையே மறக்கவுங்கூட”, என்று ஆசிரியர் மீண்டும் தன் பெண்குலத்துக்கு குரலெடுக்க படைக்கப்பட்ட மனப்பிரிகை நெடுங்கதையின் அத்தை, பெண்கள் எடுக்கும் முடிவு தப்பானதாகத்தான் இருக்குமென்கிற கருதுகோள் அப்பாக்களின் வரிசையில் வந்த சந்தியாவின் அப்பா, கோபி, ரம்யா; குவியம் துணை கதைமாந்தர்கள் மணி அண்ணா, பத்மா, சுவாதியின் கணவனாக நாம் சந்திக்கிற மோகனுங்கூட அந்நியமனிதர்களல்ல என்றே தோன்றுகிறது.

ஜெயந்தியின் நாவல்களில் உரையாடல்களின் பங்களிப்பும் முக்கியமானது. பல நேரங்களில் வெகு எளிதாக கதையை முன் நகர்த்த அவை உதவுகின்றன. அக்கறையோடு செவிமடுத்தால் சொற்களின் தொனி தெளிவாக, இயல்பாக கேட்கின்றன. வாசிக்கிறவர்களுக்கு கதைக்கான களமெது, உரையாடுபவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள், அவர்களது பின்புலமென்ன என்பதை துல்லியமாக உணர்த்தும் வசனங்கள் நாவல்கள் நெடுக வருகின்றன. குரல்களூடாக, சொற்களைக்கொண்டு பேசுவது ரம்யாவா சந்தியாவா; குமாரா செந்திலா; அவுன்ஸ் மாமாவா அத்தையாவென சட்டென்று சொல்லிவிடலாம். கதைகளிலிருந்து வசனத்தை தனியே பிரித்து எடுத்தாலும் வாசகர்களால் சுட்ட முடியும். படர்க்கையில் கதைமாந்தர்களின் குணத்தை விவரிக்க உபயோகிக்கும் சொற்களைக் காட்டிலும் உரையாடல்களில் அடங்கிய சொற்கள் கூடுதலாக மதைமாந்தர்களின் குணத்தைப் புரிந்துகொள்ள இங்கே உதவுகின்றன.

“- உங்க ஆட்டியூட் ரொம்ப ஏமாற்றமா இருக்கு எனக்குப் பிடிக்கல்ல. ப்ரியாவையாவது சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. அடுத்த வாரம் அவங்கக்கிட்டே இப்படிப் போயி பேசிடாம.”

– என்ன என்னோட ஆட்டிட்யூட்ல கொறகண்டீங்க?

– இந்தக் கேள்வியக் கேக்க உங்களுக்கு வெக்கமாயில்லை?

– மாலா கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசலாம். எனக்கு அப்போ வேலை கெடைக்கல்ல. எஸ் பாஸுக்கும் வழியில்ல. சரி, உள்ளூர் பெண்ணைக் கட்டினா, சீக்கிரமே பீ ஆர் கெடச்சுரும்னு..”(பக்கம்-131 நெய்தல்)

“-கோபி கொழந்தை பெத்துக்கிற பேச்சு இப்போதைக்கி விட்டுடு, நம்ம கல்யாணத்தைப் பத்திபேசுவோம்.

– எங்கம்மாதான் அங்க கல்யாணப்பேச்சு எடுத்து நச்சரிச்சு என்னைய கோபபடுத்தினாங்கன்னா.. இப்ப நீ..

– ஓஹோ அதான் அய்யா மூஞ்சி டல்லாயிடுச்சா?

– ப்ச டோண்ட் டீஸ் மீ சந்தியா
– சரி அதவிடு கல்யாணம் பண்ணிப்போமா கோபி?

– கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்ப?

– அவசரமா? ஒருவருஷம் போதாதா? அதான் ஆகப்போகுதே ஒரு வருஷம். ஒரு வருஷமானதும் கல்யாணம்னு பேசிட்டுத்தானே இங்கே வந்து நாம சேர்ந்திருக்கோம். இப்ப என்ன அவசரம்னா?

-இல்ல எனக்கு கல்யாணமே வேணாம்.(பக்கம் 195- மனப்பிரிகை)”

இன்றைய தலைமுறை பெண் எழுத்தாளர் என்பதால் ஜெயந்தி எதார்த்தத்தை எழுதுகிறபோதும், பெண்சார்ந்த அவள் நலம் சார்ந்த குரல்களை தவறாமல் எழுப்புகிறார்:

“கேவலம் ஒரு சோப்பு விஷயம் அதுலகூட உமாவுக்குத் தானா முடிவு பண்ற உரிமையில்ல” (பக்கம் 55-வா.பா.வா.)

“தன் தங்கைக்கு மட்டும் ஆசையாசையாய் புத்தக கடை வைத்துக்கொடுத்த அப்பா, தன் மனைவியை மட்டும் வேலைக்குப் போகக்கூடாது. போனா கால ஒடப்பேன் என்று அம்மாவின் வேலைக்குப் போகும் ஆசையை முளையிலேயே கிள்ளியெறிந்தது ஏன்?”(பக்கம் 27-மனப்பிரிகை)

“பெண்ணாகப் பிறந்தால் கல்யாணமொன்றுதான் வாழ்க்கையின் உச்சப்பட்ட குறிக்கோள் என்று நம்பும் கூட்டத்தில் இருந்த அம்மாவின்மீது மாலாவுக்கு கோபம் வருவதுண்டு.” (பக்கம் 56-நெய்தல்)

“மனைவி உழைத்துப் போடும் சோறு செரிப்பதில் அவனுக்கு ஒரு பிரச்சனையுமிருக்கவில்லை.” (பக்கம்-67-குவியம்)

சிறுகதைகளில் உண்மையின் சதவீதம் அதிகமென்றும், நெடுங்கதைகளில் புனைவு அதிகமென்றும் சொல்லப்படுவதுண்டு, எனக்கு அதில் உடன்பாடில்லை. இங்கே எவரும் பத்துத் தலைகள் இருபது கைகளென்று எழுதிக்கொண்டிருப்பதில்லை.

நம்மைசுற்றி நடப்பவைதான் கூர்ந்து கவனிக்கப்பட்டு எழுத்தில் இடம் பெறுகின்றன. கற்பனைகளைக்காட்டிலும், உண்மைகள் நெஞ்சைத் தொடுபவை கண்ணீர் வரவழைப்பவை, காரணம் அவை கொடுமைகளுக்குள்ளாகின்றன, காயப்படுத்தபடுகின்றன. அவ்வனுபவத்தைத்தான் உமா, மாலா, சந்தியா, சுவாதியின் ஊடாக ஜெயந்தி தருகிறார்.

(முற்றும்)