இலவச இணையம் – எப்படி சாத்தியம்? – 2

சென்ற கட்டுரையின் இறுதியில் உங்கள் நிறுவனத்தில் சில சேவைகளை இலவசமாகக் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவரும்படி முடித்திருந்தேன். அதற்கு, உங்களுடைய நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் இலவசப்படுத்த வேண்டும் என்று பொருளல்ல. இன்று இணையத்தில் இலவசமாக்கப்பட்டுள்ள சேவைகளின் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்து கொண்டால், சரியாக உங்களது சூழ்நிலையையும் ஆராய்ந்து, நீங்களும் பயன்பெறலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். பழைய விளம்பர மற்றும் வியாபார முறைகள் இன்று பயன் தருவதில்லை. உதாரணத்திற்கு, எது நடந்தாலும் பல நிறுவனங்கள் தங்களது விற்பனை (sales) மற்றும் விளம்பரத்தைப் பற்றி வேறுவிதமாய் சிந்திக்க முன்வருவதில்லை. விற்பனை குறைந்தால், தொலைக்காட்சி விளம்பர பட்ஜெட்டை உயர்த்தி சரிகட்டச் செய்வது பழைய பஞ்சாங்கம். நுகர்வோர் இணையத்தின் மூலம் உங்களது தயாரிப்புகளைப் பற்றி முன்பைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதே போல, இயக்க முறைகளைத் (operational methods) தங்களுடைய ஊழியர்களை மீறி யோசிக்க நிறுவனங்கள் தயங்குகிறார்கள். ஆனால், விற்பனை குறையும்போது இயக்க ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்யத் தயங்குவதில்லை. இவை மிகப் பழைய முதலாளித்துவ முறைகள். சந்தைமாற்றம் (market change) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் காலத்து உத்திகள். இன்று 2 மாதத்தில் எல்லாம் மாறி விடுகிறது. புதிய பொருட்கள் / சேவைகள் / திறன்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கேற்ப மாறுவது அவசியமாகி விட்டது. பெரிய வெற்றியைக் கடந்த 10 ஆண்டுகளாகக் கண்டுள்ள நிறுவனங்கள் இந்த அன்பளிப்புப் பொருளாதாரத்தை சரியாகப் புரிந்து கொண்டுள்ளன. முன்னாளைய வெற்றி நிறுவனங்கள் (உதாரணம், மைக்ரோசாஃப்ட், சோனி) இதை சரிவரப் புரிந்து கொள்ளாமல் தடுமாறத்தான் செய்கின்றன.

சரி, இவர்கள் உபயோகிக்கும் உத்திகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்:

1. சில பழைய நிறுத்தப்பட்ட சேவைகளை இலவசமாக்குவது
2. சில பொருட்களின்/சேவைகளின் பயன்பாடுகளை (accessories) இலவசமாக்குவது
3. உள்ள சேவைகளில் சிலவற்றை இலவசமாக்குவது
4. முயற்சி இலவசம். பயன்பட்டால் மட்டுமே கட்டணம்
5. தயாரிப்புகளைப் பற்றிய விமர்சனம் மற்றும் இலவச சோதனை பங்கேற்பு
6. லாபநோக்கறற் ஆனால் உலகிற்கு இலவசமாக பறைசாற்றுவது
7. லாபநோக்கற்ற நல்லெண்ணம்
8. பலவகை சமூகத்தினருக்கும் இலவச வழிவகுத்தல் (facilitation)
9. எல்லாமே இலவசம்(எங்களது மிக முக்கிய தயாரிப்பு உட்பட) – ஆனால் வேறு வழியில் வருமானம்
10. எல்லாவற்றையும் இலவசமாக நுகர்வோரிடம் ஒப்படைத்தல்

இந்த 10 வகை உத்திகளின் வரிசை மிகவும் முக்கியம். 1 லிருந்து 10 வரை நுகர்வோர் நம்பிக்கை உயர்வின் அடையாளம். முதல் மூன்று உத்திகள் அரை மனது நம்பிக்கையின் வெளிப்பாடு. கடைசி ஏழு உத்திகள் அரை முதல் முழு மனது நம்பிக்கையின் வெளிப்பாடு. முக்கியமாக, உங்களது வியாபாரம் எந்த அளவுக்கு உங்கள் நுகர்வோரின் நம்பிக்கைக்கு ஆளானதோ அதன்படியே உங்களின் இலவச சேவை போக்கும் அமையும்.

சில பழைய நிறுத்தப்பட்ட சேவைகளை இலவசமாக்குவது

அதிகம் வருமானம் தராத சேவைகளை பராமரிப்பது ஒரு பாரமாக இருக்கலாம். அதனால், அதை இலவசமாக வழங்கினால், பராமரிப்பு பாரம் இருக்காது. இது மிகப் பழைய இலவச முறை. மென்பொருள் மற்றும் புத்தக உலகத்தில் இது மிக அதிகமாக இருக்கிறது. உதாரணம், இங்கெரஸ் என்ற தகவல்தள மென்பொருள் (database software) ஒரு காலத்தில் பலராலும் காசு கொடுத்து வாங்கப்பட்டது. இன்று, அது இலவசம். பிரச்சனை ஏதும் வந்தால், மற்ற உபயோகிப்பாளர்களுடன் சேர்ந்து வழி கண்டுபிடிக்கலாம் – இதெற்கென்று பராமரிப்பு நிறுவனம் இல்லை. அதே போல அமேஸானில் பழைய ஆங்கில நாவல்களை 5 ரூபாய்க்கு கூட வாங்க முடியும். போக்குவரத்து செலவு மட்டும் ஒரு நூறு மடங்காகும்! நம்மூரில், ஒரு பொருளை வாங்கினால், இன்னொரு அதிகம் விற்காத பொருள் இலவசம் என்பதைப் போன்ற ஒரு உத்தி இது. அதே போல, பல அதிவேக மாற்றம் கொண்ட நுகர்வோர் மின்னணு சாதன வியாபாரத்தில் இப்படி செய்வது, அவர்களது கையிருப்பு செலவுகளை (stocking cost) கட்டுப்படுத்த உதவுகிறது. அதாவது, ஒரு ராட்சச சோனி டிவி வாங்கினால், ஒரு MP3 இயக்கி இலவசம்.

சில பொருட்களின்/சேவைகளின் பயன்பாடுகளை (accessories) இலவசமாக்குவது

செல்பேசி நுகர்வோர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், அதன் கைநூல் தொலைந்து விட்டால் கவலையில்லை. செல்பேசி நிறுவனத்தின் இணையதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். அதே போல, பல வங்கிகள் கணக்கு பட்டியலை (Account Statement) தங்களது இணையதளத்திலிருந்து வேண்டிய பொழுது அச்சடித்துக் கொள்ள வசதி செய்து கொடுக்கிறார்கள். உங்களிடம் உள்ள கணினி அச்சு எந்திரத்துடன் இயக்கி (driver software) மென்பொருள் கணினியின் இயக்கதளத்துடன் (operating system) கொடுக்கப்படுகிறது. இயக்கதளம் அடுத்த புதிய பதிப்புக்கு (version) மாறிவிட்டால், அச்சு பொறி தயாரிப்பாளர் அவர்களது இணையதளத்தில் புதிய இயக்கியை தரவிறக்கம் செய்ய இலவச வழி செய்கிறார்கள். இம்முறையும் பராமரிப்பு செலவை குறைக்க ஏற்படுத்தப்பட்ட வழிதான். நுகர்வோரை நம்பி எந்த சேவையையும் இலவசமாகக் கொடுத்துவிடவில்லை.

உள்ள சேவைகளில் சிலவற்றை இலவசமாக்குவது

பல இணையதளங்களில் இந்த உத்தி பின்பற்றப்படுகிறது. பிறந்தநாள் மின்னணு வாழ்த்து (electronic greeting cards) அனுப்பும் தளங்களில் சில எளிமையான கார்டுகள் இலவசம். ஆனால், அனிமேஷனுடனோ, இசையுடனோ உள்ள வாழ்த்துக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல, சில வகைப்படுத்தப்பட்ட விளம்பர இணையதளங்கள், வார்த்தைகள் மட்டுமே கொண்ட விளம்பரங்களை இலவசமாக அனுமதிக்கின்றன. படங்களுடன் பெரிய எழுத்துக்களுடன் குறிப்பிட்ட வகையில் (சைக்கிள் விளம்பரம்) முதலில் தோன்றுவதற்கு கட்டணம் உண்டு. இந்த வகையில், பல இணையதளங்களில் தனியாருக்கு இலவசம், வியாபாரங்களுக்கு கட்டணம் உண்டு என்ற இரு வகை அணுகுமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஸ்கைப் இந்த வகையைச் சேர்ந்தது. இன்னொரு உதாரணம், நச்சு மென்பொருள் எதிர்பி(anti-virus software) தயாரிப்பாளர் ஏவிஜி இப்படி செயல்படுகிறது. இதில் உள்ள முக்கிய உத்தி, இலவசமாக மென்பொருளை அல்லது இணைய தொலைபேசி சேவையை உபயோகிப்போர், வியாபாரங்களிலும் இதை பறப்புவார்கள் என்ற கணிப்பு. இலவச பதிப்புக்கும் கட்டண பதிப்புக்கும் தரத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லை. கட்டண பதிப்பில் அதிக வசதிகள் வியாபாரங்களுக்கு உண்டு.

சேவை இலவசம். பயன்பட்டால் மட்டுமே கட்டணம்

இணையத்தில் மிகவும் பிரபலமான இலவச முறை இதுதான். இணையத்தில் இடம் பிடிக்க கட்டணம் இல்லை. ஏனென்றால் தகவல் தேக்க செலவுகள் (information storage costs) முற்றிலும் குறைந்து விட்டன. முதலில் இந்த உத்தியை தொடங்கியது ஈபே என்ற ‘இணையத்தில் எதை வேண்டுமானாலும் விற்றுத் தள்ள’ உதவும் நிறுவனம். இங்கு பல லட்சம் வியாபாரிகள் (அவ்வப்பொழுது விற்பவர்கள், என்றென்றும் விற்பவர்கள், இங்கேயும் விற்பவர்கள் என்று பல ரகம் உண்டு) பேனாவிலிருந்து பழைய கார் வரை விற்கிறார்கள். ஈபேயிடம் இவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விற்றபின் விற்பனைக்கு இத்தனை என்று ஈபேயிற்கு கொடுத்துவிட வேண்டும். விற்காவிட்டால் ஈபேயிற்கு எதுவும் கொடுக்க வேண்டாம். இவர்களது சேவைகளை பற்றி வாங்குவோர் விமர்சிக்கலாம். ஒருவருக்கு 99% நல்ல விமர்சனம் வந்தால், அந்த வியாபாரியிடம் நம்பி வாங்கலாம். இது ஒரு அருமையான கட்டுப்பாட்டு முறை. என் சொந்த அனுபவத்தில் ஹாங்காங்கிலிருந்து ஒரு வியாபாரி, மோசமான ஒரு MP3 கருவியை எனக்கு விற்று விட்டார். பல முறை மின்னஞ்சல் அனுப்பியும் பயனில்லை. அவரது நிறுவனத்தைப் பற்றி கடுமையான விமர்சனம் எழுதினேன். உடனே மன்னிப்பு கேட்டு, பணம் திருப்பிக் கொடுக்கப்பட்ட்து. கடைகளில் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் கிடையாது. 80 லட்சம் பேர் வாழும் நகரத்தில் ஒருவர் இல்லையேல் இன்னொருவர் வாங்கி செல்வார் என்ற மெத்தனம் வியாபாரிகளிடம் உள்ளதென்னவோ உண்மை. இணையத்தில், நுகர்வோரின் குரல்களுக்கு மரியாதை நேராக பேசுவதை விட அதிகம். அட, டெல்லி ரேடியோ வியாபாரிகள் தபாலில் செங்கல் அனுப்பிய காலத்தில் இப்படி ஒரு வசதி இல்லாமல் போய்விட்டதே!

அமேஸான் இதே உத்தியை புத்தகம் மற்றும் மின்னணு பொருட்கள், டிவிடி விற்பனையில் பயன்படுத்துகிறது. பல வியாபாரிகளும் அமேஸான் சந்தையில் இதே முறையில் விற்கிறார்கள். அவர்களது வியாபார விமர்சன நிலை (customer feedback rating) விற்பனைக்கு மிக அவசியம். அவர்களது விற்பனையை உலகளவில் அது பாதிக்கிறது. அமேஸான் ஈபேயைவிட பல படிகள் தாண்டி சென்று வாங்குவோரை மனதில் கொண்டு பல உபரி சேவைகளையும் செய்து வெற்றி கண்டுள்ளது. ஒரு விதத்தில், இது 5 வது இலவச வகையிலும் சேர்க்கலாம். வாங்குவோர் பல மின்னணு பொருட்களைப் பற்றிய அனுபவ விமர்சனம் எழுதுகிறார்கள். சில விமர்சன்ங்களில் மிகவும் கண்டனக் குரலிலும் உண்டு. சில விமர்சன்ங்கள் வாங்கிய பொருளின் பயனை புகழவும் செய்கின்றன. புதிதாக வாங்குவோருக்கு இப்படி பல கோணங்களிலும் அனுபவங்களை படித்து, வாங்குவதா வேண்டாமா என்று முடிவு செய்ய உதவியாக உள்ளது. கடைகளில் இது சாத்தியமில்லை. சமூக சூழலில் நீங்கள் வாங்க ஆசைப்படும் பொருளை வாங்கிய இன்னொருவரை சந்திப்பது என்பது அபூர்வம். பல தருணங்களிலும், ‘இப்படி தெரியாமல் போய்விட்ட்தே!’ என்று வருந்துவதே அதிகம்.

பொதுவாக இந்த உத்தி, ஒரு வியாபார சமூக அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. அதில் வருமானமும் கிடைக்கிறது. ஆனால், மிக நேர்த்தியாக வாங்குவோர் மற்றும் விற்போரிடம் நம்பிக்கையை வளர்க்கும் கட்டுப்பாட்டு முறைகளே வெற்றியின் காரணம். இவை இல்லாவிட்டால், எத்தனை வியாபாரிகள் இருந்தும் பயனில்லை.

தயாரிப்புகளைப் பற்றிய விமர்சனம் மற்றும் இலவச சோதனை பங்கேற்பு

பொதுவாக, இம்முறைகளை மேற்குலகில் பெரிய சில்லரை வியாபாரிகள் மற்றும் இணையதளங்கள் இந்த உத்தியை உபயோகித்து வருகிறார்கள். வாடிக்கையாளர்களை தங்களது கடையில்/இணையதளத்தில் வாங்கிய பொருட்களைப் பற்றி விமர்சனம் செய்யச் சொல்லுகிறார்கள். இந்த சில்லரை வியாபாரிகள் (retailers) பல தயாரிப்பாளர்களின் பொருட்களை விற்கிறார்கள். இப்படி தாராளம் காட்டுவதால், நல்ல விமர்சனங்கள் கொண்ட பொருட்கள் அதிகம் விற்கின்றன. இந்தியாவைப் போல அல்லாமல், பெரிய சில்லரை வியாபாரிகள் விற்றபின்புதான் தயாரிப்பாளர்களுக்கு காசு கொடுக்கிறார்கள். ஒரு பொருள் விற்கவில்லை என்றால், இவர்களுக்கு பொருளிழப்பு ஏதுமில்லை. ஆனால், பல மோசமான பொருட்களை விற்றால், இவர்களது பெயர் சந்தையில் கெட்டுவிடும். ஆனால், இவர்களுக்கு ஒரு சில மோசமான பொருள்களும், விமர்சனங்களும் தேவைப்படுகிறது. மோசமான விமர்சனங்கள் இவர்களது நடுவுநிலைமையை உலகிறகு பறைசாற்றுகிறது. அமேஸானில் தொடங்கிய இந்த உத்தி, பலராலும் கையாளப்படுகிறது. அத்துடன், பெரிய சில்லரை வியாபாரிகளிடம் வாங்கிய பொருள் பிடிக்கவில்லை என்றால் திருப்பி விடலாம். இன்னொன்றையும் இங்கே கவனிக்க வேண்டும். ஒரு பேச்சுக்கு சாம்சுங் என்ற தயாரிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவர்களது இஸ்திரி பெட்டியைப் பற்றி மோசமான விமர்சனத்தை ஒருவர் இணையதளத்தில் எழுதிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இதனால் ஒன்றும் சாம்சுங்கிற்கு குடி முழுகி போகப் போவதில்லை. அதே இணையதளத்தில் இவர்களின் குளிர்சாதன எந்திரம் மிகவும் பிரமாதம் என்று சில விமர்சனம் வந்தால் போதும். ஒரு குளிர்சாதன எந்திரம் 100 இஸ்திரி பெட்டிக்குச் சமம்!

விமர்சனத்தோடு, இவர்கள் செய்யும் இன்னொறு காரியம் எளிதாக ஒப்பிடல். அதாவது, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். பெரிய சில்லரை வியாபார இணையதளத்திற்கு சென்றால், உங்களது பட்ஜெட்டுக்குள் பல தயாரிப்புகள் இருக்கலாம். அதில், சில அம்சங்கள் உங்களுக்கு பிடித்திருக்கலாம், சில அநாவசியமாக படலாம். பட்ஜெட்டுக்குள் வரும் எல்லா வாஷிங் மெஷின்களையும் அழகாக ஒப்பிட முடிகிறது. இதனால், உங்களுக்கு ஒரு சில தயாரிப்புகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிகிறது. பிறகு, தேர்ந்தெடுத்த தயாரிப்புகளைப் பற்றி மற்ற வாடிக்கையாளர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று அலசலாம். மேலும், வேறு இணையதளத்திற்கு சென்று அதே போல இன்னொரு ஆய்வை நடத்தலாம். பிறகு, தேர்ந்தெடுத்த மாடல்களைப் பற்றி பொதுவாக (சில்லரை வியாபாரியின் இணையதளத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்கள்) என்ன சொல்லப்படுகிறது என்று கலந்துரையாடல் மன்றங்கள் (discussion boards) சிலவற்றையும் தேடலாம். உதாரணத்திற்கு, நிகான் காமிரா பற்றிய கலந்துரையாடல் மன்றங்கள் இதோ. இத்தனையும் இலவசம். இணையமில்லையேல் இதில் எதுவும் சாத்தியமில்லை.

உதாரணத்திற்கு, BestBuy என்ற மிகப் பெரிய சில்லரை மின்னணுவியல் வியாபாரி அமெரிக்கா மற்றும் கனடாவில் (இங்கு சில்லரை எல்லாம் ரொம்ப பெரிசுங்க – வால்மார்ட் உட்பட) பிரபலம். எனக்கு சென்ஹைசர் என்ற ஒலி கேட்க தலையில் அணியும் கருவி (headphones) வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். $30 விற்கும் இப்பொருளைப் பற்றித் தெரிய வேண்டுமா? அந்தப் பொருளை, அதே பட்ஜெட்டில் உள்ள வேறு இரண்டு பொருட்களுடன் ஒப்பிட வேண்டுமா? இதோ இங்கே…

இந்திய இணைய சில்லரை வியாபாரிகள் இன்னும் இந்த உத்தியை அதிகம் உபயோகிக்க தொடங்கிவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் அப்படி தங்களுக்கு தெரிந்த இந்திய இணையதளங்கள் இருந்தால் சொல்லவும். புத்தகங்கள், இசை, டிவிடி மற்றும் அன்பளிப்பு பொருட்களை விற்கும் Flipkart என்ற இந்திய இணையதளம் அமேஸான் போலவே உள்ளது. ஆனால், இன்னும் அமேஸான் போன்று மாற்று சந்தை மற்றும் தரக்கட்டுப்பாடு (marketplace with seller ratings) இருப்பதாகத் தெரியவில்லை. Indiatimes-இன் இன்னொரு இந்திய இணையதளம் இது. ஏராளமான அன்பளிப்பு பொருட்களை விற்கிறார்கள். ஆனால், இந்த இணையதளத்தின் வேகம் மிக சோகமாக இருந்ததால் அதிகம் விமர்சிக்க தோன்றவில்லை. மேலும் ஈபே நிறுவனத்தில் இந்திய இணையதளமும் வைத்திருக்கிறார்கள். இந்த உத்தியில், நுகர்வோரின் கருத்துக்களை மதிக்கும் நம்பிக்கை மிக முக்கியம். மிகையான விளம்பரங்கள் ஒரு பொருளை விற்க ஓரளவே உதவுகிறது. பயனடைந்த நுகர்வோரின் கருத்துக்கு முன் விளம்பரங்கள் ஜெயிக்காது.

லாபநோக்கற்ற ஆனால் உலகிற்கு இலவசமாக பறைசாற்றுவது

இந்த வகையைச் சேர்ந்தவர்கள் இயற்கையில் மிக நல்லவர்கள். மிகத் திறமைசாலிகள். ஆனால், தங்களது தொழிலில் உள்ள சில போக்குகளைப் பிடிக்காதவர்கள். உதாரணமாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் இயக்கதளம் தயாரித்து பல ஆயிரம் கோடி டாலர்கள் ஈட்டிவிட்டது. ஆனாலும் 3 அல்லது 4 வருடத்திற்கு ஒரு முறை புதிய பதிப்புக்காக நுகர்வோரிடம் பல விளம்பர/வியாபார ஜாலங்களை காட்டி மீண்டும் மீண்டும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. அத்துடன் போட்டியாளர்களை தயவு தாட்சிண்யமின்றி நசுக்குவது மைக்ரோசாஃப்டின் வழக்கம். இதைப் பார்த்து வெறுப்புற்ற மென்பொருள் பொறியாளர்கள் இலவசமாக தங்களது மாலை மற்றும் வார கடைசி நாட்களை செலவிட்டு அருமையான மென்பொருட்களை உருவாக்கியுள்ளார்கள். ஃபயர்ஃபாக்ஸ் அப்படிப்பட்ட ஒரு அருமையான இணைய உலாவி மென்பொருள். இதை உருவாக்கிய அத்தனை மென்பொருள் பொறியாளர்களும் உலகிற்கு ஒன்றை பறைசாற்ற விரும்பினார்கள் – “மைக்ரோசாஃப்ட் போன்ற பணபலம் இருந்தாலே தரம் வாய்ந்த மென்பொருள் உலாவிகளை உருவாக்க முடியுமென்று இல்லை. இதோ, எங்கள் ஓய்வு நேரத்தில் ஒன்று கூடி தரமான உலாவியை மைக்ரோசாஃப்டைவிட அருமையாக உருவாக்கியுள்ளோம். திறமைதான் முக்கியம், பணபலமல்ல!” இவர்கள் ஒரு படி மேலே சென்று மென்பொருளின் மூலத்தையும் (software source code) வெளியிடுகிறார்கள். யாருக்குத் திறமையிருக்கிறதோ, இலவசமாக மோஸில்லா பொறியாளர்களுடன் சேர்ந்து இதை மேலும் மேம்படுத்த உதவலாம்!

ubuntu-logoஅதே போல, விண்டோஸுக்கு (ரொம்ப வயசான ஓ.எஸ் – 24 வயதாகிறது!) மாற்றாக பல மென்பொருள் பொறியாளர்கள் லினிக்ஸ் என்ற இயக்குதளம் ஒன்றை பலவித அம்சங்களுடன் இலவசமாக அளித்து வருகிறார்கள். இந்த மென்பொருள்களை உபயோகிக்கும்போது பிரச்சனைகள் வந்தால், போன் செய்தால் யாரும் வந்து உதவ மாட்டார்கள். ஆனால், இணையத்தில், இதற்காக பல கலந்துரையாடல் மன்றங்கள் (discussion boards) உள்ளன. தாராளமாக பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் வியாபார ஒளிவு மறைவின்றி விவாதிக்கிறார்கள். உபுண்டு மற்றும் சூசே இந்த வகையைச் சேரும். இலவசமாக இயக்கதளம் வழங்குவதுடன், பல பயன்பாடு மென்பொருள்களையும் (utility programs) கொடுக்கிறார்கள். அதாவது, புகைப்படங்களை பராமரிப்பது, மின்னஞ்சல் அனுப்புவது, இணைய உலாவல், கணக்கு பார்த்தல் (spreadsheets), வார்த்தை கோப்புகள் உடுவாக்குதல் (word processing) மற்றும் MP3 இசை மற்றும் இசை குறுந்தட்டுகள் கேட்பதற்கான அத்தனை வசதிகளும் இயக்குதளத்துடன் தரப்படுகிறது. அதற்கும் கட்டணம் இல்லை. இந்த மென்பொருட்களை மேம்படுத்திக் கொண்டே வருகிறார்கள். உதாரணத்திற்கு சூசே 11 வது பதிப்பில் (2010) மற்றும் உபுண்டு 10 வது பதிப்பில். புதிய பதிப்பிற்காக கட்டணம் வசூலிப்பதில்லை.

இன்று பல தரப்பட்ட மென்பொருள்கள் இலவசமாக மூலத்துடன் வழங்கப்படுகிறது. தொடர்பு பட்டியல் மேலாண்மை (contact management), மனித வள மேலாண்மை (human resources management), மேலாண்மை முடிவு ஆதரவு (decision support software), புள்ளியியல் (statistical software), தகவல்தளம் (database software) என்று எதையும் விட்டதாக தெரியவில்லை. சரி, இதென்ன மென்பொருள் தொழில் சார்ந்ததாகவே இருக்கிறதே என்று ஒரு எண்ணம் வரலாம். பல பத்திரிகையாளர்கள் மேற்குலகில் பத்திரிகைகள், மற்றும் செய்திதாள்களிலிருந்து வெளியேறி, மனதுக்கு பட்டதை கட்டுப்பாடின்றி ப்ளாகி தள்ளுகிறார்கள். சில விளம்பரங்களை அனுமதித்து, அவர்களுக்கு வேண்டிய அளவு சம்பாத்திதும் வென்றுள்ளார்கள். இதனால், இதழியல் வளர்ந்துள்ளதே தவிர, நலிந்துவிடவில்லை.

கல்வித்துறையிலும் இவ்வகை லாபநோக்கற்ற அணுகுமுறை மிகவும் கையாளப்படுகிறது. உலகின் மிகச்சிறந்த உயர்கல்வி அமைப்புகள் இந்த உத்தியை பயன்படுத்துகின்றன. இரு உதாரணங்கள் இங்கு பார்ப்போம். பாஸ்டன், அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. மிகவும் புகழ் பெற்ற கல்வி அமைப்பு. இங்கு ஏராளமான உயர்கல்வி துறைகளில் பாடங்கள், விடியோக்கள், வீட்டுப் பாடங்கள், செயல்முறை விளக்கங்கள் எல்லாவற்றையும் இலவசமாக இணையத்தில் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இதில் இவர்களுக்கு என்ன ஆதாயம்? தங்கள் குழந்தைகளை எம்.ஐ.டி.யில் படிக்க வைக்கத் துடிக்கும் பெற்றோருக்கு இந்த வகை ட்ரெய்லர்கள் கல்வி போதனை தரத்தை மிகவும் அழகாக கணிக்க முடிகிறது. அத்துடன், தூரக் கல்வி ஆர்வலர்களுக்கும் உதவுகிறது. சென்னையில் உள்ள, ஐ.ஐ.டியும் இணையத்தில் நல்ல சேவை செய்து வருகிறது. உதாரணத்திற்கு அருமையான ஒரு இயற்பியல் பாடம் சொல்லித்தருகிறார், பேராசிரியர் பாலகிருஷ்ணன்.

இந்த உத்தியில் அதிகம் வியாபார நோக்கில்லை. செலவிட்ட நேரத்திற்கு கொஞ்சம் சம்பாதித்து, உலகிடம் தன் திறமையை பறை சாற்றிக் கொள்வது பெரிய நோக்கம். ஆனால், இந்த உத்தி மிகவும் வெற்றியடையவே, பல பெரிய வியாபாரங்கள் தங்களின் பல்வேறு சேவைகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டன. சில வியாபார நிறுவன்ங்கள் இவ்வாறு இயங்கும் அமைப்புக்களுக்கு பண உதவி செய்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஐபிஎம் மற்றும் கூகிள் இது போன்ற பல அமைப்புக்களுக்கு உதவி செய்கிறார்கள். இது போன்ற படைப்புகளை தன் வாடிக்கையாளர்களுக்கு சிபாரிசும் செய்கிறார்கள்.

லாபநோக்கற்ற நல்லெண்ணம்

இணையத்தின் நல்முகம் இது. நம்மில் பலருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால், அதற்கான சரியான வாய்ப்பு மற்றும் வழிதான் பிரச்சனை. இணையம் வாய்ப்பு மற்றும் வழியை நமக்கு அளிக்கிறது. இது போன்ற சேவைகள் பலனை எதிர்பார்த்து செய்வதல்ல. நான் அறிந்தவரை, இந்த உத்தியை சில வகைகளாக பிரிக்கலாம்:

1. அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது
2. ஆலோசனை உதவி தேவைப்படுகிறவர்களுக்கு இலவசமாக உதவுவது
3. நிதி உதவி தேவைப்படுகிறவர்களுக்கு இலவசமாக உதவுவது
4. ஆர்வங்கள், ரசனைகளை இலவசமாக பகிர்ந்து கொள்வது
5. இடைத்தரகர்களிடமிருந்து விடுபட பாமர மக்களுக்கு இலவசகாக உதவுவது

அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது :இதில் மிகப் பெரிய முன்னோடி விக்கிபீடியா இணையதளம். இது ஒரு ராட்சச நூலகம். இவர்கள் எழுதப்படாத துறையே இல்லை எனலாம். மருத்துவம், விஞ்ஞானம், இசை, பெளதிகம், ரசாயனம், அரசியல், புகழ்பெற்றவர்களைப் பற்றிய சுயசரிதம், அமைப்புகள், என்று பல லட்சம் கட்டுரைகள். கடைசியாக பார்த்த பொழுது (2010) ஆங்கிலத்தில் 3.5 லட்சம் கட்டுரைகள் உள்ளன. டச்சு மொழியில் 655,000 கட்டுரைகள் உள்ளன. தமிழ்க் கட்டுரைகள் 26,145 மட்டுமே. சத்தியமாக டச்சு மொழி தெரிந்தவர்கள் தமிழர்களை விட குறைவு என்று எந்த ஆராய்ச்சியுமே செய்யாமல் தைரியமாகச் சொல்லலாம். தமிழில் அதிகக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் தங்களது துறையில் தமிழில் விக்கிபீடியாவுக்கு கட்டுரைகள் சமர்ப்பித்தால் தமிழுக்கு நல்லது. டச்சு மொழியை ஒரு இலக்காக வைத்து, அதைவிட அதிக தமிழில் கட்டுரைகள் இன்னும் இரண்டு வருடங்களில் வரச் செய்தால் நன்றாக இருக்கும். முற்றிலும் நன்கொடைகளால் இயங்கி வருகிறது விக்கிபீடியா.

விக்கியைப் போல இன்னும் சில நல்ல இணையதளங்கள் உள்ளன. www.howstuffworks.com என்ற இணையதளம், பல பொருட்கள் எப்படி வேலை செய்கிறது என்று செயல் விளக்கம், அனிமேஷனுடன் அழகாக விளக்குகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இசை குறுந்தட்டில் எப்படி கணினியில் தகவல்கள் உருவாக்கப்படுகிறது என்பதை அழகாக அனிமேஷனுடன் இங்கே பார்க்கலாம். விக்கிபீடியா போலல்லாமல் விளம்பரங்கள் உண்டு.

ஆலோசனை உதவி தேவைப்படுகிறவர்களுக்கு இலவசமாக உதவுவது:இணையத்தில் ஆலோசனைகள் வழங்கும் தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், எது உண்மையான ஆலோசனை, எது போலியானது என்று கண்டுபிடிப்பது சற்று கடினமானது. நாம் இங்கே சில நல்ல இணையதளங்களை பற்றி அலசுவோம். முதலில் மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம். மேயோ கிளினிக் என்ற அமைப்பு லாப நோக்கின்றி பல மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதில் முன்னோடி. சாதாரண ஜலதோஷத்திலிருந்து, பலவித புற்று நோய் வரை எதற்கும் விளக்கம் இங்கு உள்ளது. பல மருத்துவ செயல்முறைகள், அதனால் வரும் பின் விளைவுகள் என்று பலவற்றையும் அழகாக விளக்குகிறார்கள். சில நோயாளிகள் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலும் அளிக்கிறாரகள். இதே போல, மருத்துவ துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இன்னொரு இணையதளம் இது. இந்த இணையதளத்திலும் பல வகை இலவச மருத்துவ ஆலோசனைகள் சொல்கிறார்கள். இந்த இணையதளத்தில் பல வகை மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மருத்துவர் மருந்து கொடுத்தார், அதை கடமையாய் சாப்பிட வேண்டும் என்பது நம்மில் பலருக்கு உள்ள நம்பிக்கை. மருத்துவர்களும் மனிதர்களே. ஏன் சில மருந்துகளை கொடுக்கிறார்கள் என்று தாராளமாக அவர்களிடம் விவாதிக்கலாம். உதாரணத்திற்கு, உங்களுக்கு உள்ள ஒரு அலர்ஜியுடன் அவர் கொடுக்கும் மருந்து ஒத்து போகாது என்று நீங்கள் இந்த இணையதளத்தில் படித்திருந்தால், மருத்துவரை கேட்பதில் தவறொன்றும் இல்லை.

கணினிகள், தேர்ச்சியில்லாதவர்களுக்கு சற்று பயமளிக்கக்கூடியதே. மேலும் இவை மின்சாரத்தில் வேலை செய்வதால், ஷாக் அடிக்குமோ என்ற பயம் வேறு. ஆனால், கணினியில் பல விஷயங்களை, ஆர்வமிருந்தால் தெரிந்து கொள்ளலாம். அதிகம் கல்லூரி படிப்பு எல்லாம் தேவையில்லை. இணையத்தில் பல நல்ல உபயோகமான தளங்கள் உள்ளன. உங்களது நம்பிக்கையை வளர்க்கும் http://www.computerhope.com/ அப்படிப்பட்ட ஒன்று. அடிப்படை சந்தேகங்களை தீர்க்க அழகாக கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதே போல, பல வகை மின்னணு சாதனங்கள், மற்றும் வீட்டு மின் சாதனங்கள் பிரச்சனை வரும் பொழுது யாரையாவது தேடி அல்லாடுவதற்கு முன், இணையத்தில் மற்றவர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துள்ளார்கள் என்று தேடி அறிந்து கொள்ளலாம். இந்தச் சுட்டியில் தொலைக்காட்சி பெட்டிகளில் வரும் பிரச்சனைகளை ஆராய்கிறார்கள். சில சமயம், அவ்வப்பொழுது வரும் பிரச்சனைகளுக்கு, இந்த இணையதளத்தில் கேள்வி கேட்டால், வல்லுனர் ஒருவர் சில நாட்களில் தகுந்த பதில் சொல்லக் கூடும். சில சமயங்களில் ராட்சச டிவியை கடைக்கு தூக்கிக் கொண்டு போவதை விட இம்முறை உதவலாம்.

நிதி உதவி தேவைப்படுகிறவர்களுக்கு இலவசமாக உதவுவது:நுண்ணிய நிதியுதவி (microfinance) அமைப்புகள் இணையத்தின் வீச்சு மூலம் வளரும் நாடுகளில் உள்ள எளிய வியாபாரிகள், குறிப்பாக தொழில் முனையும் பெண்களுக்கு அருமையாக உதவி வருகிறார்கள். கிவா என்ற லாபநோக்கற்ற அமைப்பு ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, ஏன் வட அமெரிக்காவில் உள்ள எளிய தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இதில் நிதி வழங்குவோர் $25 முதல் நிதியுதவி செய்யலாம். இந்த நிதியுதவியை வைத்து அந்த தொழில் முனைவோர் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்று இணையம் மூலமே பொருளுதவி செய்தவர்களுக்கு பட்டியல் தருகிறது கிவா. அத்துடன் எப்படி வாங்கிய கடனை திருப்பித் தருகிறார்கள் என்றும் ரிப்போர்ட் தருகிறார்கள். பல எளிய கிராமப்புற தொழில் முனைவோர் பயனடைந்து வருகிறார்கள். இதைப் போன்ற இன்னொரு அமைப்பு www.grameenfoundation.org. பிடித்த தொழில் முனைவோருக்கு உதவலாம். கிவா அமைப்பில் 95% பணத்தை ஒழுங்காக திருப்பித் தந்துவிடுகிறார்கள். சில தவிர்க்க முடியாத காரணங்கள் (கடும் நோய், வரட்சி, விபத்து) இந்த 5% க்கு காரணம் என்கிறது கிவா.

ஆர்வங்கள், ரசனைகளை இலவசமாக பரிந்து கொள்வது: மிக சீரியஸான இணையதளங்கள் பலவகை ரசனைகளை பகிர்ந்து கொள்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன. தமிழ் தளங்களைப் பார்ப்போம். பல பிரபல எழுத்தாளர்கள் இணையதளங்கள் மூலம் நல்ல எழுத்துக்களை இலவசமாக வழங்கி வருகிறார்கள். எழுத்தாளர் சுஜாதா இதில் முதன்மையானவர். இவரைத் தொடர்ந்து திண்ணை போன்ற பத்திரிக்கைகள், மற்றும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளார்களின் தளங்களும் அடங்கும். மேலும், பல வகை தொழில்நுட்ப, கவிதை, இறையியல், இசை, இலக்கியம், விஞ்ஞானம் என்று வெரைட்டியுடன் ‘சொல்வனம்’ போன்ற சமீபத்திய இணையதளங்களும் இந்த வகையில் அடக்கம். (பத்திரிகையாசிரியருக்கு ஐஸ்!) இதைப்போல, பல தொழில்நுட்ப மற்றும் கலைகள் சம்மந்தப்பட்ட தமிழ் இணையதளங்களும் உள்ளன. உதாரணத்திற்கு, புகைப்படக்கலைப் பற்றி தமிழில் இங்கே அலசித் தள்ளுகிறார்கள்.

இடைத்தரகர்களிடமிருந்து விடுபட பாமர மக்களுக்கு இலவசமாக உதவுவது இந்தியப் புகையிலை நிறுவனம் – ITC. இத்துறையில் பல்வேறு சமூகத் தொண்டுகளைச் செய்து வருகிறது. உதாரணத்திற்கு, ஆந்திர மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசிகளின் நிலங்கள் தரம் குறைந்து போக ஐடிசி, மற்ற லாபநோக்கற்ற அமைப்புகளுடன் சேர்ந்து யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க உதவி புரிந்து வருகிறது. அதே போல, பல விவசாயிகளுக்கும் பயிரின் சந்தை விலை தெரிய கணினி வழங்கி கிராமப்புறங்களில் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து உதவுகிறது. இதனால், சந்தைவரை சென்று வெறுங்கையுடன் திரும்பத் தேவையில்லை. அத்துடன் சரியான விலை வரும் தருணம் அறிந்து சந்தைக்குச் சென்று விற்றுவிட முடியும். இடைத்தரகர்களிடமிருந்தும் விவசாயிகளுக்கு விடுதலை. இந்த முறையை இந்தியா தவிர ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயன்படுமாறு செய்துள்ளார்கள். ஓரளவிற்கு ஐடிசிக்கு தகுந்த விலையில் கச்சாப்பொருள் கிடைப்பதற்காகச் செய்தாலும், விவசாயிகளுக்கு நேரடியாக உதவுவது மிகவும் பாராட்டத்தக்கது.

பலவகை சமூகத்தினருக்கும் இலவச சேவையைத் தருதல் (facilitation)

ஃபேஸ்புக் சமூக வலையமைப்பு இணையதளத்தை உருவாக்கியதில் மிகவும் முக்கியமானவர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது உருவாக்கிய அமைப்பு ஃபேஸ்புக். இதன் பின்னணியில் ஒரு தமாஷான விஷயம். பல ஓவியங்களைப் பற்றி அலச வேண்டிய ஒரு பணி (assignment) இருந்ததாம். மார்க் தனக்கு தெரிந்த சில ஓவியங்களைப் பற்றிய கருத்துக்களை ஃபேஸ்புக்கின் சுவர் பக்கத்தில் எழுதினாராம். அதைப் பார்த்த அவருடைய நண்பர்கள், ‘இது சரியில்லை, இதைப் பற்றி மேலும் சில விஷயங்களை விட்டு விட்டீர்கள், இதை விட்டு விட்டீர்கள்’ என்று எழுதித் தள்ளினார்கள். மார்க்கின் சமர்ப்பிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் அவரது பேராசிரியர். எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு குழுவின் அறிவு, வீச்சு, தனிநபரை விட சக்தி வாய்ந்தது என்று புரிய வைத்தது இந்த சம்பவம். இதற்கு பின், இன்னும் சில பல்கலைக்கழகங்களை இந்த அமைப்பில் இணைத்துப் பார்த்ததில், மார்க்குக்கு பல வித ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவர் நினைத்துப் பார்க்காத துறைகளில் எல்லாம் மாணவர்கள் அசத்தித் தள்ளினார்கள்.

mark-zuckerberg-1

மார்க்கிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த சமூக வலையமைப்பு மென்பொருளை உருவாக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது என்று கேட்டதற்கு இவர் அளித்த பதில் வித்தியாசமானது. இளையராஜா பாணியில், “சமூக வலையமைப்புகள் எதையும் நான் உருவாக்கவில்லை. அவை ஏற்கனவே உள்ளன. நான் உருவாக்கிய மென்பொருள் வலையமைப்புகளை மீண்டும் உயிர்பெறச் செய்துள்ளது, அவ்வளவுதான்!” என்றார். மிகவும் சரியான மதிப்பீடு. ஃபேஸ்புக்கில் நம்மை தெரிந்தவர்களுடன்தான் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்கிறோம். விட்டுப்போன கல்லூரி நண்பர்கள், பழைய அலுவலக நண்பர்கள், உறவினர்கள், ஒரே ரசனையுடையவர்கள் என்று சேர்ந்து கொண்டு பல எண்ணங்களை பரிமாற்றிக் கொள்கிறோம், விவாதிக்கிறோம். அதற்கு ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழிவகுக்கிறது.

இந்த உத்தியின் நோக்கு சமூகத்தில் உள்ள அமைப்புகளை இலவசமாக ஒன்று சேர்ந்து பயனுற வழிவகுப்பது. இப்படி வழிவகுக்கும் நிறுவனங்கள் வேறு வழியில் பயன்பெறுகின்றன. இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவுடன் இந்த அமைப்புகளுடன் எப்படியாவது தொடர்பு வைத்துக்கொள்ள நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் துடிக்கின்றன. ஏனென்றால், அமைப்புக்கேற்றார் போல விற்க முயற்சிக்கலாம். அதனால் அதிக பயனுற வாய்ப்புள்ளது. இதன் ஆரம்ப வடிவம் கணினி மென்பொருள் உலகத்தில் பல்வேறு வகையில் இருந்தாலும், இத்தனை வீச்சு இல்லை. ஆரம்ப நாட்களில் அறிக்கை பலகை (bulletin board) மென்பொருள்கள் பொறியாளர்களால் தங்களது தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்க உருவாக்கப் பட்டது. அதன் பின் பட்டியல் வழங்கியமைப்புகள் (listserv) மிகவும் பிரபலமானது (இன்றும் பொறியாளர்கள் அதிகம் உபயோகித்து வருகிறார்கள்). ஆனால், சும்மா டி.நகர் வரை நடந்து சென்றதைப் பற்றி விவாதிப்பதெல்லாம் கிடையாது. பார்த்த நாய்க்குட்டியை டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்து மேலேற்றி அதைப் பார்த்து பலரும் பரவமடைவதெல்லாம் சமீப காலத்தில்தான்!

பல நிறுவனங்கள் கொஞ்ச கொஞ்சமாக தங்களுடைய இணையதளங்களில் இப்படி இலவசமாக பதிவுசெய்யப்பட்ட நுகர்வோரை தங்களுடைய பொருட்கள்/சேவைகள் பற்றி விவாதிக்க அனுமதி தரத் தொடங்கியுள்ளார்கள். இதனால், நுகர்வோரின் யோசனைகள், தயாரிப்புகளில் உள்ள குறைகளை உடனே தெரிந்து கொள்ள மேலாண்மைக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. உடனே குறைகளை சரி செய்தால், போட்டியாளர் புதிதாக முளைத்து உங்கள் வியாபாரத்தை ஆட்டம் காணச் செய்வதற்கு முன் நீங்கள் தப்பிக்கலாம்.

எல்லாமே இலவசம் (எங்களது மிக முக்கிய தயாரிப்பு உட்பட) – ஆனால் வேறு வழியில் வருமானம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், இது கூகிள் முறை. இணைய நுகர்வோரிடம் கூகிள் எதற்கும் காசு கேட்பதில்லை. அதன் புகழ் பெற்ற தேடல் சேவையாகட்டும், அல்லது யுட்யூப், வரைபட, ப்ளாக், படிமம் (images), செய்திகள், ஓர்கூட், பிகாசா (புகைப்படம்) போன்ற சேவையாகட்டும், எதற்கும் கட்டணம் இல்லை. கூகிள் ஆவணங்கள், உலாவியான க்ரோம், ஜிமெயில் மின்னஞ்சல், உடன் செய்தி ஜிடாக் (instant messenger), அண்ட்ராய்ட் என்ற இயக்குதளம் (operating system) – இவை அனைத்தும் அருமையான இலவச சேவைகள். இலவசம் என்பதற்காக தரக்குறைவு என்று எதையும் சொல்ல முடியாது. மென்பொருள் துறைக்கே உரிய சில பிரச்னைகள் கூகிள் மென்பொருளுக்கும் உண்டு. இலவச சேவை என்பதற்காக சேவைகளின் பதிதல் (response) எந்த வகையிலும் கூகிள் சமரசப் படுத்துவதில்லை. இரவு 11 மணியாகட்டும், காலை 8 மணியாகட்டும் இந்த சேவைகளின் பதிதல் ஒன்றாகவே இருப்பது மகத்தான சாதனை. உலகிலேயே அதிக வழங்கி கணினிகளை கூகிள் வைத்துள்ளது. முதலில் இவை பல நூறாயிரம் என்று சொல்லி வந்த கூகிள் இதைப் பற்றி சமீப காலமாக அதிகம் மூச்சு விடுவதில்லை. யாஹூ, கூகிளின் போட்டி நிறுவனம், இதைப் போன்று பல சேவைகளை இலவசமாக வழங்கி வந்தது. ஆனால், கூகிள் வெற்றிக்கு அதன் விளம்பர உத்தி காரணம். இதைப் பற்றியும் கூகிளின் Adwords பற்றியும் முன்னமே ‘சொல்வனத்தில்’ எழுதியாகிவிட்ட்து. சுறுக்கமாக, கூகிள் ஒரு புதிய விற்பனை வடிவத்தை நுகர்வோருக்கு எந்த ஊடுருவலும் இல்லாமல் உருவாக்கியுள்ளது.

எதைத் தேடுகிறோமோ அதற்கேற்ப விளம்பரம், எதைப் பற்றி மின்னஞ்சலில் விவாதிக்கிறோமோ அதற்கேற்ப விளம்பரம் என்று நம்முடன் நம்மை அறியாமலே கூகிள் தன்னை இணைத்துக் கொள்கிறது. நொடிக்கு பல கோடி வேண்டுகோள்களை இப்படி கையாள்வதால், பல லட்சம் விளம்பரங்களை உலகில் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்கிறது. அதனால், பெரிய லாபமும் ஈட்டுகிறது. அத்துடன் தேடல் சேவையை ஒரு காந்தமாக கூகிள் கையாளுகிறது. முதலில், கூகிள் தேடல் சேவைக்கு முன்பதிவு தேவையில்லை (registration). அதை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. கூகிள் தேடல் பிடித்துப் போக, இன்று ஆங்கிலத்தில் கூகிள் ஒரு வினைச்சொல்லாகி விட்ட்து! எந்த புதிய மென்பொருளை வெளிக் கொண்டுவந்தாலும் அது இலவசமாக இருக்க வேண்டும் என்று இதுவரை கூகிள் பிடிவாதமாக இருந்து வந்துள்ளது. அதனால், கூகிளுடன் போட்டி போடுவது மிக கடினமாகிவிட்ட்து. தொடர்ந்து கூகிள் எப்படி செயல்படும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கூகிளுக்கு போட்டியாக முளைத்துள்ள ஃபேஸ்புக் கூகிளைப் போல விளம்பரம் மற்றும் இதர இலவச சேவைகளை செய்ய முனைந்து வருகிறது. எவ்வளவு தூரம் இந்த முயற்சி வெற்றி பெறும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த உத்தியைக் கையாளும் எந்த நிறுவனமும் நுகர்வோர் அறிந்தும் அறியாமலும் ஒரு வருமான பின்னணி இருக்க வேண்டும் (hidden revenue stream). எவ்வளவு அழகாக அந்த பின்னணி வருமான ஓட்டத்தை மறைக்கிறார்களோ அவ்வளவு வெற்றி பெறுகிறார்கள் என்பது என் கருத்து. அமெரிக்க நிறுவனங்களைத் தவிர இந்த உத்தியை அழகாக யாரும் கையாளவில்லை. இதற்கு இணைய கலாசாரமும் தேவை. ஏனோ, அதிகம் இணைய கலாசாரமுள்ள ஐரோப்பாவில் இந்த உத்தி அதிகம் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.

(தொடரும்)