04. உலகப் புகழ் பெற்ற பிரதேஸ் இசை நிகழ்ச்சி

8255_p1

ரோப்பிய நாடுகள் சதுரங்கக்காய்கள் போல் திட்ட அறிவிப்பின்றி கூட்டணியில் ஈடுபட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதன் அறிகுறி தெரிந்ததும் கசல்ஸ் அவசர அவசரமாக காடலோனியாவுக்கு விரைந்தார். பிரித்தானிய அரசும் கைவிட்ட பின்னர், தன் இன மக்களைக் காக்க அமெரிக்க உதவலாம் என சில நண்பர்கள் தெரிவித்திருந்தனர். அதையும் முயற்சி செய்து பார்த்துவிடலாமென நினைக்கும் நேரத்தில், அமெரிக்கா ஸ்பெயினின் சர்வாதிகாரி ஃபிராங்கோவுடன் கூட்டு சேர்ந்தது.

எந்தெந்த தந்திக் கம்பிகளை இணைத்தால் எப்படிப்பட்ட இசை வெளிப்படும் என்பதை தன் விரல் நுனியில் வைத்திருந்த கசல்ஸுக்கு அரசியல் கூட்டணிகளின் ரகசியம் புரியாமல் இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஜெர்மனி, இத்தாலி போன்ற சர்வாதிகார நாடுகளை எதிர்க்கும் அமெரிக்கா ஸ்பெயினின் சர்வாதிகாரக் கைகளில் எப்படி சிக்கியது என்பது கசல்ஸுக்குப் புரியவில்லை. கைவசமிருந்த ஒரு வழியும் தவறிப்போனதே என்ற சோகத்தை விட போரின் அபாயங்கள் அவரை அதிர்ச்சியில் தள்ளின. ஹிட்லர், முசோலினி போன்றவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா ஃபிராங்கோவுடன் கூட்டு சேர்ந்தது என்பது போகப் போகத்தான் அவருக்குப் புரிந்தது.

இனி தன்னால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை என கசல்ஸுக்குத் தோன்றியது. EMI நிறுவனத்துடன் பதிவு செய்த பாக்கின் செல்லோ பகுதிகள் கிடப்பில் போடப்பட்டன. செய்வதறியாது நிராயுதபாணியாக நின்ற கசல்ஸ் பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆமை என்ன செய்யுமோ அதைச் செய்தார். பிரான்ஸின் தென் பகுதி ஊரான பிரதேஸுக்குச் சென்று ஒரு சிறு வீட்டை தனது ஓடாக்கி ஓளிந்து கொண்டார். அடுத்த இருபது வருடங்களுக்கு எந்த இசை நிகழ்விலும் பங்கு கொள்ளாமல் காலத்தைக் கழித்தார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் விடாது பாக்கின் செல்லோ பகுதிகளைப் பயிற்சி செய்து வந்தார். பாக்கின் இசை மூழ்கடிக்க, தனிமையின் பேராழத்துக்குள் அமிழ்ந்தார்.

கசல்ஸ் வீடு பிரதேஸின் கானிக்யூ (Mt.Canigue) மலை அடிவாரத்தில் இருந்தது. தெற்கு பிரான்ஸின் மிக ரம்மியமான மலைப்பகுதியான பிரதேஸில் கானிக்யூ மலை ஏறக்குறைய சொர்க்கம் என்றே அழைக்கப்படுகிறது. பிரான்ஸையும் ஸ்பெயினையும் பிரித்தபடி வானை அளக்கும் கானிக்யூ சிகரங்களைப் பார்த்தபடி கசல்ஸின் செல்லோ பயிற்சி நடக்கும். ராணுவ அட்டவணைப் போல் ஒவ்வொரு நாள் காலையில் தன் பியானோவில் பாக்கின் Well tempered Clavier இசையை வாசிக்கத் தொடங்குவார். பிறகு செல்லோவில் பாக்கின் செல்லோ பகுதிகள் சிலவற்றை வாசித்தபின், தன் ஜெர்மன் ஷெபர்டுடன் நடை பயிற்சிக்குச் செல்வார்.

21453_11பிரதேஸ் முழுவதும் மக்னோலியா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மலையிலிருந்து இறங்கி வரும் மென்மையான காற்றுடன் கலக்கும் மக்னோலிய மணம், மரங்களின் இலை மறைவிலிருந்து ஒலிக்கும் பறவை ஒலி என கசல்ஸின் மனதுக்கு இனிமையான நாட்களாக அவை அமைந்திருந்தன. ஸ்பெயினில் இருந்து தப்பித்து வரும் காடலோனிய மக்களுக்கு அவர் வீடு மிக முக்கியமான புகலிடம். ஸ்பெயின் நாட்டின் அரசியல் நிலவரங்களை அவர்கள் மூலம் கசல்ஸ் தெரிந்துகொள்வார். மெல்ல கானிக்யூ மலை காடலோனிய தேசிய உணர்வுக்கு ஒரு தனிப்பெரும் குறியீடாக மாறியது. ஒவ்வொரு ஜூன் மாதம் 23ஆம் தேதி இம்மலையின் சிகரத்தில் காடலோனிய கொடி ஏற்றப்படுகிறது. இன்றும் காடலோனிய மக்களின் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னமாக கானிக்யூ மலை கொண்டாடப்படுகிறது.

1940 முதல் பத்தாண்டுகள் கசல்ஸ் ஒரு தவயோகி போல் பிரதேஸில் வாழ்ந்து வந்தார். இசையுடன் இயைந்த வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் என அவருக்குத் தெரியும். தனி மனித சுதந்திரம் என்பது மிக அரிதாக இருந்து வந்த காலகட்டம். இதனாலேயே ஐரோப்பாவின் மற்ற எந்த பகுதியையும் விட இப்பகுதி மனதுக்கும் உடலுக்கும் அமைதியும் பாதுகாப்பும் அளிப்பதாக கூறி வந்தார்.

1950ஆம் ஆண்டு பாக்கின் இருநூறாவது நினைவு வருடம். பாக்கின் இசை விழாவை ஜூன் மாதத்தில் கொண்டாட அலெக்ஸாண்டர் ஸ்னெய்டர் (Alexander Schneider) என்ற வயலின் கலைஞர் ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். பாக்கின் செல்லோ பகுதிகளை உலகுக்கு மீண்டும் அறிமுகப்படுத்திய பாப்லோ கசல்ஸ் தவிர இவ்விழாவை யாருமே வழி நடத்த முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். மிகப் பிரம்மாண்டமான அரண்மனைகள், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம் என கேட்டதையெல்லாம் கொடுக்க பல இசை குழுக்கள் தயாராக காத்திருந்தனர். அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளின் முக்கிய இசை அரங்களில் விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர். இரு போர்களும் முடிவுக்கு வந்து ஐரோப்பா, அமெரிக்க முழுவதும் சோர்வை உதறித்தள்ளி மக்கள் மனதில் கொண்டாட்டம் நிலவி வந்த காலகட்டம். கசல்ஸ் நினைத்திருந்தால் எந்த நாட்டையும் தேர்வு செய்திருக்க முடியும். ஐ.நா முதல் அமெரிக்க அதிபர்,வெள்ளை மாளிகை முக்கியஸ்தர்கள் வரை அவர் சொல்லுக்கு கட்டுப்படும் கூட்டம் இருந்தது.

Pablo Casals and Alexander Schneider

இரண்டாம் உலகப் போரின் கோரம் வெளிப்படும்போது எப்படியும் வாழலாம் என பல கலைஞர்கள் தங்கள் சுதந்திரத்தையும், நம்பிக்கைகளையும் அடகு வைத்தனர். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தார்மீகக் கொள்கையுடன் இருந்த கசல்ஸ் தன் இன மக்களின் நிலைமையை வெளி உலகுக்குச் சொல்ல இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என நினைத்தார். முதல் உலகப் போரிலிருந்து தன் காடலோனியாவுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என எதிர்பார்த்து ஏமாந்து போன கசல்ஸுக்கு எழுபது வயது தாண்டிவிட்டது. கோட்பாடுகளும் கொள்கைகளும் தளர்த்தி வாழ விரும்பும் வயதிலும் தன்முனைப்போடு இவ்விழாவை தனக்கு சாதமாக்க முடிவு செய்தார்.

கசல்ஸ் பிடிவாதாத்துக்கு காரணம் இருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஸ்பெயின் சர்வாதிகாரியை நீக்கிவிட்டு மக்களாட்சியைக் கொண்டு வருவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசாங்கம் உறுதி அளித்திருந்தது. ஆனால், உலகப்போர் முடிந்த அடுத்த வருடமே ஃபிராங்கோ தன் ராணுவப் படையை மேலும் பலப்படுத்தினான். தத்தம் புண்களை தடவி மருந்து போடவே நேரம் சரியாக இருந்ததால் யுத்தத்துக்குப் பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும் ஸ்பெயினைப் பற்றிக் கவலைப்படவில்லை. இசை நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்குமாறு அழைத்த ஐ.நா சபையிடம் தன் கொள்கையைப் பற்றி கசல்ஸ் விளக்கினார். அதையே ஒரு பேட்டியாக டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். தன இன மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஃபிராங்கோ மன்னிப்பு கேட்கும் அதேநேரத்தில் உடனடியாக மக்களாட்சியை காடலோனியாவில் அமுலாக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

அதே நேரத்தில், கசல்ஸின் ஏகலைவனான அலெக்ஸாண்டர் ஸ்னெய்டர் இந்நிகழ்ச்சியை எப்படியேனும் நடத்தியாக வேண்டுமே என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். அவரது தலைமையில் ஒரு இசைக்குழுவை ஒருங்கிணைத்தார். அதில் பல அமெரிக்க மற்றும் ஜெர்மன் நாட்டு கலைஞர்கள் இருந்தனர். முழு குழுவும் பிரதேஸ் போக தயாராக இருந்தனர். பொதுவாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்கு இசைக்குழு, நிதிப் பற்றாக்குறை போன்றவையே நந்தி போல் நடுவில் நிற்கும்; இங்கோ கடவுள். எப்படியேனும் பேசிச் சமாளிக்க வேண்டும் என பிரதேஸுக்கு வந்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன் பாக்கின் செல்லோ தொகுப்பைக் கண்டெடுத்தது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதை விட அவை பிரபலமாவதும் முக்கியம் என கசல்ஸிடம் எடுத்துக் கூறினார். பாக் இசை மேல் கசல்ஸுக்கு இருந்த காதல் மெல்ல கசிந்துருகி பணியத்தொடங்கியது. ஆனால் தன்னால் எங்கும் வரமுடியாது எனவும் வேண்டுமானால் பிரதேஸிலேயே இசை நிகழ்வை வைத்துக்கொள்ளலாம் என சொன்னதும் அலெக்சாண்டரின் முகம் பிரகாசமானது. உலகின் அதி உன்னத இசைக்கலைஞர்களின் ஒப்புதல் கடிதத்தை அவர் முன் நீட்டினார். ஆச்சர்யத்தில் கசல்ஸின் கண்கள் விரிந்தன.

பிரதேஸ் கிட்டத்தட்ட ஒரு கிராமம். சில நுறு வீடுகளும், பல ஏக்கர் பூக்கள் மற்றும் பழத் தோட்டங்கள் மட்டுமே கொண்டது. தங்களுக்கு மத்தியில் ஒரு பெரும் இசைக் கலைஞர் வாழ்ந்து வருகிறார் எனத் தெரிந்தாலும் எதோ ஒரு சில காடலோனியா மக்கள் மட்டும் சந்தித்து வந்ததால் அவரது இருப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை.

arboussols

1950ஆம் ஆண்டு ஜூன் மாதம், பிரதேஸ் தெருக்களுக்குள் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட வண்டிகள் அணிவகுத்தன. உலகின் ஏனைய இடங்களிலெல்லாம் இசை வறட்சி ஏற்பட்டுவிட்டதோ என எண்ணுமளவு உலகின் மொத்த இசைக் கலைஞர்கள் எல்லாம் பிரதேஸில் வந்திறங்கிவிட்டனர். ஊரே கோலாகலமாக மாறியது. பல புதுக் கடைகள் தோன்றி அவற்றில் இசைப் பற்றிய புத்தகங்கள், வாத்தியக் கருவிகள், இசைத் தொகுப்புகள் இறக்குமதியாயின. செல்லோ வடிவில் பல கேக்குகளும், காட்சிப்பொருட்களும் விற்பனைக்கு வந்தன. ஒரு மாதத்துக்கு இசை உலகமே பிரதேஸை மையமாகக் கொண்டு சுற்றியது.

அடுத்த பத்து நாட்கள் மலை முழுவதும் இசை ஒலித்துக்கொண்டேயிருந்தது. கசல்ஸால் கூட இதை நம்ப முடியவில்லை. பிரதேஸில் இசை அரங்கம் இல்லாததால், ஊரில் இருந்த ஒரே தேவாலயத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தலாம் என அலெக்ஸாண்டர் முடிவு செய்தார். தேவாலத்தின் பாதிரியார்களைச் சந்தித்த அலெக்ஸாண்டர் மற்றும் கசல்ஸ் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் அவர்களோ பாக்கின் செல்லோ பகுதிகளை தேவாலையத்துள் இசைக்கக் கூடாதென தடை செய்தனர். கசல்ஸுக்கு இது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஏன் மேற்கிசை வரலாறு தெரிந்த எல்லாருக்குமே இது அதிசயமாகத் தோன்றும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பாக், ஹைடன் (Haydn) போன்ற பர்ரோக் (Baroque) இசை மேதைகள் தேவாலயங்களில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே பல பாடல்களை உருவாக்கியவர்கள். அவை Hymns வகை துதிப்பாடல்களாக வார்த்தைகளுடன் அமைந்திருக்கும். தேவாலயங்கள் மேற்கிசையின் வளர்ச்சிக்கு மிகவும் துணை நின்றவை. பர்ரோக் இசை வகைகள் தெய்வீகமானவை. வாத்திய இசையுடன் கடவுளைப் போற்றி எழுதப்பட்ட பாடல் வரிகளும் இதில் அடங்கும். மிக உருக்கமாக அமைந்திருக்கும் பாடல்களோடு தேவாலயத்தின் உள் முகப்பில் வைக்கப்படும் ஆர்கன் குழாய்கள் மூலம் இவ்வகை இசை ஆலயத்தையே அரவணைக்கும். பொதுவாக காற்று வரும் திசையில் இக்குழாய்கள் இருப்பதால், அவற்றின் கைவரிசையிலும் இனிமையான இசை வெள்ளம் ஆலயத்தை நிரப்பும். இவ்வகை இசை மெல்ல உருமாறி பாடல்கள் இல்லாத வெறும் வாத்திய இசையாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசை அரங்கங்களில் ஒலித்தது. பின்னர் இவை ஓபரா போன்ற இசை நாடகங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது. அவ்வகையில் தேவாலய பர்ரோக் இசை பாணி மேற்கிசையின் ஆதாரமாகும்.

பின் தேவாலயத் திருச்சபை இவர்களது கோரிக்கையை நிராகரிக்க என்ன காரணம்?

பாக்கின் செல்லோ பகுதிகளின் பெயர்களே அதற்குக் காரணம். ஒவ்வொரு இசைப் பகுதியும் Allemande, Courante, Sarabande, Gigue எனப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை பர்ரோக் நடன வகையைச் சார்ந்த பெயர்கள். இதனால் பாக்கின் செல்லோ பகுதிகளை நடன இசைவகை என அவர்கள் நினைத்துவிட்டனர். பர்ரோக் நடனத்தில் இவை வெவ்வேறு வேகத்தில் நடக்கும் இசை நடனமாகும். ஆனால் இப்பெயர்களை அப்பகுதியின் வேகத்தை அளக்கும் முறைக்காக பாக் அளித்திருந்தார். பலரும் நினைத்தது போல் அவை நடனவகை இசை அல்ல. குதூகலத்துடன் வேகமாக இசைக்கப்படுவதால் சிலர் நடனத்துக்குப் பின்னணியாக உபயோகித்தாலும், பாக் உருவாக்கியது வெறும் வாத்தியத்துக்காக மட்டுமே.

marcevol-2இக்குழப்பத்தைத் தீர்த்து பாக்கின் செல்லோ பகுதிகளின் பெருமைகளை எடுத்துரைத்த பின்னரே தேவாலயத்தின் சம்மதத்தை இவர்களால் பெற முடிந்தது. கசல்ஸ் சில பகுதிகளைப் பாடி இசைத்துக் காட்டியவுடன், பாக்கின் இசை தெய்வீகமானது என்பதை அவர்கள் உணர்ந்தனர். இசை முடிந்ததும் கை தட்டக் கூடாது என்பது மட்டும் ஒரே நிபந்தனையாக திருச்சபை முன்வைத்தது. தேவாலயம் என்பதால் அலெக்ஸாண்டர் அதற்குச் சம்மதித்தார். உலகிலேயே கை தட்டல் ஆரவாரங்கள் இல்லாமல் நடந்த இசை நிகழ்வு இதுவாக மட்டுமே இருக்கும்.

இப்படியாக உலகின் மிகப் பிரபலமான இசை நிகழ்ச்சி பல தடைகளுக்கு இடையே ஒருங்கிணைக்கப்பட்டது. அலெக்ஸாண்டரின் விடாமுயற்சி மற்றும் கசல்ஸின் லட்சிய உணர்வு இந்நிகழ்வுக்கு மிக முக்கியமான ஊக்கமாக அமைந்தது.

நிகழ்ச்சி தொடங்கிய அன்று கசல்ஸ் தன செல்லோவுடன் தேவாலயத்துள் நுழைந்தார். மேடையில் உட்காருமுன் தேவாலையத்தின் உயரமான தூண்களையும், விட்டத்தில் தூதுவர்களின் ஓவியங்களையும் பார்த்தார். ஆங்காங்கே பதிந்திருந்த நிறக் கண்ணாடிகள் வழியே ஊடுருவிய மாலை வெளிச்சம் ஆல்டரின் அலங்காரங்களில் பிரதிபலித்து அவ்விடத்தையே சொர்க்க பூமியாக மாற்றியிருந்தது. பாக்கின் இசையை வாசிக்க தேவாலயத்தை விட ஏற்ற இடம் கிடையாது என நினைத்துக்கொண்டார் கசல்ஸ். பாக் இசையின் ஒவ்வொரு அசைவும் தேவாலயத்தின் தூண் போன்றது. உலகத்தை உய்விக்க சூரிய ஒளி எங்கிருந்தோ வருவது போல் எங்கோ இருக்கும் தேவனிடம் சேர்ப்பிக்கும் ஒலிப் பிரவாகமாக அவரது இசை உருவெடுக்கும். கடவுளின் புகழ் துதிகளும், தேவதூதனின் கண்ணீர் மன்றாடல்களும் இசையாக யாசித்து இழைத்திருக்கிறார் பாக்.

செல்லோ பகுதிகளை இசைக்கத் தொடங்குமுன் கசல்ஸ் எல்லோருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக, தன இன மக்களின் கண்ணீர் துடைக்கப் பாடுபடும் பல வீரர்களையும், தியாகச் சீலர்களையும் வணங்கி இசைக்கத் தொடங்கினார். மலை வழி தவழ்ந்த மெல்லிய காற்று தேவாலயத்தில் புகுந்து குளிர்வித்தது. கசல்ஸ் இசைத்து முடிக்கும் வரை மெளனமாகக் கண்களை மூடி பார்வையாளர்கள் அனுபவித்தனர். இசை முடிந்தவுடன் சத்தமே இல்லாமல் எல்லோரும் எழுந்து நின்றனர். காற்று ஆர்கன் வழி தன் இயற்கை ஒலியை தேவாலயத்தில் நிரப்பியது. பரவச நிலையை வெளிக்காட்ட கை தட்ட முடியாமல் கசல்ஸைப் பார்த்தபடி எல்லோரும் நின்றிருந்தனர்.

வாழ்க்கை முழுவதும் தீவிரப் பயிற்சியால் துளி பிசிறில்லாமல் வெளிப்பட்ட இசை. பல்லாண்டுகளாக தனிமையின் துணையோடு பெருகிய அதீத உணர்வுகளும், பாக்கின் இசையைச் சேர வேண்டிய இடத்தில் சேர்பித்த திருப்தியும் கசல்ஸின் முகத்தில் தெரிந்தன. ஒரு தெய்வீகக் கலா சிருஷ்டியை எழுபது வயதைத் தாண்டிய அம்மாமேதை இசைத்திருக்கிறார் என்பது சந்தேகமில்லாமல் எல்லார் மனதிலும் நிறைந்திருந்தது. தேவாலயத்தின் அருகே இருந்த கானிக்யூ மலை போல் எல்லோரும் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டனர்.