சகலகலாச்சாரியார் எஸ்.ராஜம்

விஸ்வரூபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டோ வாமனனுக்கும் அவ்வளவு சக்தி உண்டு. சொல்லப்போனால் விஸ்வரூபத்திற்கு எந்தப் பண்டிகையும் கிடையாது. வாமன அவதாரத்திற்கு (ஓணம்) பண்டிகை உண்டு. கர்நாடக சங்கீத ஆளுமை எஸ்.ராஜம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி கொண்டாடப்பட்டது ஒரு மணி நேரம்தான். ஒரே மணி நேரம்தான். அது பண்டிகையாகவும் கொண்டாட்டமுமாகத்தான் இருந்தது.

remembering-s-rajam-invite

மூன்று பாகங்களாய்ப் பிரித்து வேதவல்லி அம்மாள் ராஜத்தின் இசை பற்றியும், ஹிந்து கேசவ் ராஜத்தின் சித்திரத்திறமை பற்றியும் பேசினார்கள். பிறகு லலிதாராமும் எஸ்.பி.காந்தனும் பேசவில்லை. அவர்கள் இணைந்து செய்த சகலகலாச்சாரியார் ஆவணப்படம் பேசிற்று.

வேதவல்லி அம்மாள் கணீர் குரலில் அமைதியாக நிதானமாக அடக்கமாக பேசியது சிறப்பாக இருந்தது. வோலேட்டி வெங்கடேஸ்வரலு அவரை ஆந்திராவிற்கு வரவழைத்து ஆல் இந்தியா ரேடியோவில் ராஜம் மெட்டமைத்த கீர்த்தனைகளை பாட வைத்தது அந்த காலத்திலேயே பரவி இருந்த ராஜத்தின் ராக வீச்சினை பறைசாற்றியது. அவருடைய பொறுமை, கோபமின்மை, சமையல் திறமை, ஒருவர் கேட்டபோது சட்டென அந்த ரோட்டு திண்ணையில் அமர்ந்து பாடு சொல்லிக்கொடுத்த எளிமை பற்றி அருமையாக பேசினார்.

அடுத்து அழைக்கப்பட்ட கேசவ் தன்னிடம் (நாட்டியத்திற்கு நாட்டிய சாஸ்திரம் போல, சித்திரம் வரைய) சித்திர சூத்திரம் என்ற புத்தகம் இருந்ததையும், பிற்காலத்தில் அவர் ராஜத்தின் சித்திரங்களை பார்க்க நேர்ந்தபொழுது அவர் ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு அந்த புத்தகத்தின் சூத்திரங்களோடு ஒத்துப் போயிருந்தது என்பதால் ராஜம் மீது ஈர்ப்பு வந்ததையும் கூறினார்.

ராஜம் பப்பாளி நறுக்கும்போது அதை அழகான சிற்பம் போல புஷ்பம்போல செதுக்கி வெட்டி வைப்பார் என்றும், ஆரஞ்சு உரிக்கும்போதுகூட கண்டபடி உரிக்காமல் தோலை லாவகமாக வட்டமாக கொஞ்சம்கூட கட் ஆகாமல் உரித்துக்கொண்டே வந்து முடிவில் பார்க்கும்போது ஆதிசேஷன் வாயில் உலக உருண்டை இருப்பது போல முடிப்பார் என்று கூறியது கேச(வ்)வன் இன்னும் ஆதி சேஷனை மறக்கவில்லை என்று புரியவைத்தது.

ராஜம் தனது வாழ்க்கையிலேயே இவ்வளவு பதவிசாகவும் நறுவிசாகவும் லலிதமாகவும் நளினமாகவும் எளிமையாகவும் பொறுமையாகவும் இருந்ததை புரிந்துகொண்டால் அவர் பாடலும் சித்திரமும் கேட்காமலே பார்க்காமலே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் லலிதாராமும் காந்தனும் நமக்கு மேலும் புரியவைக்க அவர்கள் எடுத்த ஆவணப்படத்தில் இருந்து ஒரு பகுதியை குறும்படமாகக் காட்டினார்கள்.

மதுரை மணி அய்யர் அவர்கள் ராஜத்திடம் சொன்னது – “ராஜூ ராகமெல்லாம் குளிச்சுட்டு வர்றமாதிரி சுத்தமா இருக்கணும்.” இதை நினைவூட்டுவது போல் ராஜம் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார். ஒரு சுத்த ராகமாக திகழ்கிறார்.

வண்ணச் சிதறல்களின் க்ளோஸ் அப் குழைவுகள், நெளிவுகள், தீற்றல்கள், சித்திர சிதறல்களில் காட்சி விரிய விரிய காமிரா பின்னால் போகப் போக அது ராஜத்தின் ஓவியம்.

இவை இரண்டும் அவரின் இரு திறமைகளையும் கோடிட்டுக் காட்டும் ஆரம்பம்.

சிவக்குமார், எஸ்.ஜானகி, கே.எஸ்.ரகுநாதன், டி.வி.ராம்ப்ரசாத், விஜயலட்சுமி சுப்பிரமணியம், கேசவ், லலிதாராம், வேதவல்லி, கிளீவ்லேண்ட் சுந்தரம் ஆகியோர் ராஜம் ஐயரைப் பற்றி அவரவர்களுடைய அனுபவங்களைப் பதிவு செய்ததில், பரமாச்சாரியாரை வரைந்த ராஜம் அய்யர் அவ்வோவியத்தில் மணியம் செல்வனையும் பங்கு பெறச் செய்ததை மணியம் செல்வனே நெகிழ்ந்து, நெகிழ்ந்ததை நெகிழ்ந்தபடி சொன்னது, அந்த ஓவியத்தைக் காட்டியதும் நெகிழவைத்தது.

2008120551330501தான் படிக்கிற காலத்தில் பாடத்தில் முப்பது மார்க்கைத் தாண்டியது இல்லை என்றது; எண்பத்து நான்கு வருடங்களாக இதே வீட்டில் இருப்பதாக சொன்னது; தனது கன்னிக் கச்சேரியில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தனக்கு தம்பூர் போட்டது; இந்தியப் பாணி ஓவியத்தில் Perpective-ஐ விட symbolism முக்கியம். உதாரணமாக, நிறையபேர் வரையப்பட்டிருந்தாலும் அதில் உள்ள அக்பரையும் மதகுருவையும் பெரியதாகவும் மற்றவர்களை சற்று தள்ளி சிறியதாகவும் வரைவார்கள். அது அக்பரின் முக்கியத்துவத்தை பார்த்தவுடன் புரியவைத்துவிடும் என்று விளக்கியது; எந்த மரத்தை வரைகிறோமோ அந்த மரத்தின் இரண்டாயிரம் இலைகளைப் போடவேண்டியதில்லை- இரண்டு இலைகளைப் போட்டாலே போதும் என்றது; அவருடைய சித்திர ரசனையையும் அவருடைய சித்திர ஞானம் அவர் தாயாரின் ஜீன்ஸ் என்பதற்கு நிரூபணமாக அவர் தாயார் போட்ட கோலத்தையும் வரலக்ஷ்மி நோம்பன்று முகத்தை எல்லார் வீட்டுக்கும் வரைந்து தந்ததை குறிப்பிட்டது என ராஜம் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த எல்லாமே – அமைதியான அகல் விளக்கின் அசையாச் சுடர்.

பஞ்சபூதக் காட்சிகளும் பின்னணியில் உண்டு. நிறைய கடல் நிறைய சூரியன் நிறைய வானம் நிறைய பூவிதழ்கள். ஒரு காட்சியில் தூரத்தில் மேசை மேல் விளக்குச்சுடர் அதன் பொறியில் இருந்து உதிக்கும் சூரியக் கதிர் பெரிதாகிக் கொண்டே வந்து சூரியனாகி இன்னும் க்ளோஸ் அப் வந்து மாபெரும் ஒளியாகி திரை முழுக்க பளிச்.

இடது ஓரத்தில் இருக்கும் ராஜம் உயர்ந்துகொண்டே போகப்போக வலது புறக் காட்சி தாழ்ந்துகொண்டே வர வர,ராஜத்தின் மறைமுக விஸ்வரூப தரிசனம். ராஜத்தின் குரலிலேயே பல விஷயங்களை சொல்ல வைத்த லலிதாராமுக்கு hats off! காந்தனும் லலிதாராமும் இசைவசீகரனுக்குப் பட்ட கஷ்டத்தில் பாதியை சகலகலாச்சாரியார், தானே எடுத்த புகைப் படங்கள், வரைந்த ஓவியங்கள், பாடிய பாடல்கள் மூலம் குறைத்துவிட்டார் என்று சொல்வதைவிட – லலிதாராமும் காந்தனும் வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி வெல்லப்பிள்ளையாருக்கே நைவேத்யம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

கேமரா அற்புதம். பைனாப்பிள் போல க்ளோசப். தூர நகர்ந்தால் மகரந்தச் செண்டு. பூவிதழ்கள், இலைகள், இலைகளின் நரம்புகள், பூவிதழ்களின் நாக்குகள், கேமரா இயங்கிய விதம் அற்புதம் என்றாலும் ஏனோ ‘மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே’ வை நினைவூட்டுகிறது.

நாம் அடுத்தவரின் சரிதையை எழுத முடியும். சுய சரிதையை எழுத முடியாது. ஆனால் ராஜத்தின் சுய சரிதையை எழுதிவிட்டார்கள் – லலிதாராமும் காந்தனும். அவ்வ்வ்வளவு நேரிடை.