கணியான் கூத்து

ங்குனி சித்திரை மாதங்களில் கடுமையான வெக்கையின் காரணமாக சன்னல்களைத் திறந்துவிட்டுப் படுத்துக் கிடக்கையில், சுவர்க் கோழிகளின் இரைச்சலுடன் எங்கோ தூரத்தில் இருந்து கேட்கும் பாடலும் அதற்கு இசைவாக அடிக்கப்படும் மேளமும் தூக்கத்தை அண்டவிடாது. பெரும்பாலும் செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும்தான் இப்பாடல் காற்றில் மிதந்து வரும்.

“வாரானே சுடைலைக் கண்ணு, கைலாசம் தான் கடந்து, தான் கடந்து” “பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்” என்று உடையும் குரலில் கம்மலுடன் மத்திம காலத்தில் அப்பாடல் ஒலிக்கும். அதற்கு ஒத்திசைந்து வாசிக்கப்படும் மகுடம் (கையால் வாசிக்கப்படும் தப்பு). பாடலைப்பாடும் அண்ணாவி அதே வரிகளைத் துரித காலத்தில் பாடும்போது, சர்வலகுவாக மிருதங்கம் வாசிப்பதைப்போல் சொற்களை விளாசித் தள்ளுவார்கள் மகுடம் வாசிப்பவர்கள்.

ஏதோ ஒன்று நம்மைப் போட்டு உலுக்கியது போன்ற உணர்வுடன், ஒலி வரும் பாதையை நோக்கிச் செல்வதற்கு ஆசை எழும். பக்கத்தில் அப்பா படுத்திருக்கும்போது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பகலில் விசாரித்தால் கொடை நடக்கும் ஊர் தெரிந்து விடும். பள்ளிக்கூடத்துக்கு போகும் சாக்கில் கணியான் கூத்தும் நையாண்டி மேளமும் கேட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீடு வந்து சேர்ந்து விடலாம்.

வளர்ந்த பிறகு இந்தத் தடைகளெல்லாம் இல்லை. கொடை பார்க்க பக்கத்து ஊர்களுக்குப் போவது வழக்கமாகி விட்டது. உள்ளூரிலும் கொடை உண்டு. ஆனால் எங்கள் ஊர் அம்மன் கோவில்களில் நையாண்டி மேளமும் வில்லுப்பாட்டும் கரகமும் மட்டுமே உண்டு. சுடலைமாடன் கோவிலில்தான் கணியான் கூத்து நடக்கும். உள்ளூர் சுடலைமாடன் கோவிலில் ஆண்டுதோறும் கொடை நடக்காது என்பதால் பக்கத்து ஊரில் நடக்கும் கொடைகள்தான் ஆறுதல்.

“வருசம் தோறும் கொடை நடத்த யாருக்கிட்ட வாய்க்கரிசி இருக்கு,” என்று எங்கள் ஊர்க்காரர்கள் சலித்துக் கொள்கிறார்கள்.

சுடலை மாடன் கோவில்களில் வியாழக்கிழமை இரவு குடி அழைப்புடன் கொடை தொடங்கும். சனிக்கிழமை அதிகாலை முடியும். வியாழன் இரவு, வெள்ளிக்கிழமை பகல், வெள்ளிக்கிழமை இரவு என தொடர்ந்து கணியான் கூத்து நடக்கும். இயற்கைக் கடன்களை முடிக்கவும் சாப்பிடவும் மட்டுமே அவர்கள் செல்வார்கள். இல்லை இல்லை. செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சென்னைக்கு வந்து அதிகபட்சமாக மூன்றரை மணி நேரம் நடக்கும் கச்சேரிகளை மட்டுமே கேட்டு வரும் எனக்கு, எப்படித்தான் இந்த கணியான் கூத்து அண்ணாவி விடிய விடிய பாடுகிறாரோ, மகுடம் வாசிப்பவர் கைக் கடுக்காமல் வாசிக்கிறாரோ என்று தோன்றும்.

kaniyan1

“எப்படிங்க வாசிக்கிறீங்க” என்று கேட்டால் “அது பழகிப் போச்சு” என்கிறார் அண்ணாவி வா.முத்துபெருமாள். “சுடலைமாடன் கடையை அரைகுறையாகப் பாடமுடியுமா,” என்று கேட்கிறார்.

இவர் நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற கணியான் கூத்துக் கலைஞரான நாங்குநேரி வானமாமலையின் மகன். வானமாமலையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். பங்குனி சித்திரைகளில் ஊர்களில் கொடை விழாக்களுக்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் அவர் பெயர் பெரும்பாலும் இருக்கும்.

கணியான் என்பது ஒரு சாதி. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்த அவர்கள் இப்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள். மொத்தமாக அந்த சாதியின் எண்ணிக்கை 500 பேர்தான். சிவபெருமான் சுடலை மாடன் என்ற பெயரில் இடுகாட்டு தெய்வமாக அவதரித்த போது, தனக்காகப் பாடுவதற்கும் ஆடுவதற்கும் உருவாக்கிய கலைஞன்தான் கணியான்.

“காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்” என்று ஞானசம்பந்தர் தன்னுடைய முதல் பதிகத்தில் சுடலையைக் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சுடலைமாடன் ரொம்ப துடியான தெய்வம். “சீவலப்பேரிக்குள் யாருக்கும் பணியான் கணியான்” என்ற சொல் வழக்கு உண்டு.

இந்த சுடலைதான் தென் மாவட்டங்களில் இடுகாட்டில் காவல் நிற்கிறார். பொதுவாக ஒரு ஊரில் சுடலை மாடனை உருவாக்க வேண்டுமானால், ஏற்கெனவே சுடலைமாடன் இருக்கும் கோவிலில் இருந்து மண் எடுத்து வந்துதான் உருவாக்குவார்கள். உருவாக்குவது என்றால் ஏதோ பெரிய சிற்ப வேலை என்று நினைத்து விடாதீர்கள். இது குறித்தெல்லாம் எனது ஊர்க்காரரும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான அ.கா.பெருமாள் எழுதி குவித்திருக்கிறார்.

சதுரமான ஒரு உருவம். கீழே அகலத்துடனும் மேலே செல்ல செல்ல ஒடுங்கியும் இருக்கும். நல்ல பெரிய கருப்புக்கட்டியின் வட்டமான பாகத்தைப் போன்ற ஒரு தலை. மழையிலும் வெயிலிலும் கூரையில்லாமல் கிடக்கும் சுடலைக்கு தினமும் பூசை கிடையாது. செவ்வாயும் வெள்ளியும் உடலுக்கு களபம் சாத்தி, முகத்துக்கு மஞ்சணை தடவி, அரளிப்பூ மாலையோ, செவ்வந்தி மலையோ போட்டு, தலையில் பிச்சிப்பூவை பரிவட்டமாகக் கட்டி, சந்தணத்தை அரைத்து கண் மூக்கு வைத்து, வசதி இருந்தால் வெள்ளியிலோ கண் மலடு வைத்து சுடலைக்கு அலங்காரம் நடக்கும். கோழியோ ஆடோ என வசதிக்குத் தகுந்தபடி பலி உண்டு. பெட்டைக் கோழியையும் கிடாரியையும் (பெண் ஆடு) பலி கொடுப்பதில்லை. சேவல் பலி கொடுக்கப்பட்டாலும் சாமிக்கு குழம்பு வைக்கும் போது, சேவல் கறி படைப்பதில்லை. பொதுவாக கூட்டு சேர்ந்து சேவல் கறி சாப்பிடக்கூடாது. அப்படி செய்தால் உறவு கெட்டு, சண்டை வந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் ஊர் மாடனுக்கு பாலும் அடையும் பிடித்த படையல்கள். பச்சரிசி மாவுடன் சர்க்கரையையும் வாழைப்பழத்தையும் சேர்த்து பிசைந்து, தாராளமாக நெய்யை விட்டு சிறிய ஊத்தப்பம் சைசில் தோசைக்கல்லில் சுட்டு படைப்பார்கள். கூடவே குடிப்பதற்கு ஒரு இரண்டு பக்கா பசும்பால் காய்ச்சி வைக்க வேண்டும்.

“எத்தனைக் கோழி அறுத்தாலும், ஆடு அறுத்தாலும் அவருக்கு பிரதானம் அடையும் பாலும்தான் கேட்டியா” என்பார் மகராச மாமா. அது ஒரு புறம் இருக்கட்டும்.

இப்போது சுடலைமாடனின் அந்தஸ்து எங்கோ போய் விட்டது. சுடுகாட்டில் கூட விமானமும் கோபுரமும் கொண்ட கோவில்கள் எழுந்து விட்டன.

கட்டுப்பாடற்ற காவல் தெய்வம் சுடலைமாடன். இரவு 12 மணிக்குப் பிறகு கையில் வெட்டுக்கத்தியுடன் காவலுக்குக் கிளம்புவார்.

“லே நேற்று பார்த்தேன் பார்த்துக்கோ. ஆறரை அடி இருக்கும். அப்படியே போனாரு. நான் திரும்பிப்படுத்து கிட்டேன். நம்மோ உள்ளூரு ஆனதுனால அடிக்க மாட்டாரு பார்த்துக்கோ. விளையாட்டுக் காட்டினா சோலியை முடிச்சுருவாரு. சுடுகாட்டு ஆலமரத்துல கொக்குச் சுட புல்லட்ல வந்தவனுகோ இரத்தம் கக்கி சர்க்கார் ஆசுபத்திரில கிடக்காம்லா”

ஊரில் பஜனை மடத்துக்கு வெளியேயும், கோடைக்காக நார்க் கட்டிலை வெளியே போட்டுப் படுத்திருக்கும் தாத்தாக்கள் இப்படி சொல்வதைக் கேட்டு விட்டு, ஆறு மணிக்கு மேல் வெளியே போவதற்கு நடுங்கிப் போய் கண்டாங்கியை தலை வழியாகப் போர்த்திக் கிடந்த காலம் உண்டு.

எங்க அப்பாவே ஆலமரத்தில் ஆட்டுக்குக் குழை முறிக்கப் போய் கீழே விழுந்து ஒரு வாரமா காய்ச்சலில் கிடந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

“மரத்தில ஏறி ஓங்கி கிளையை வெட்டுகேன் பார்த்துக்கோ. திடீருனு யாரோ கையைத் தட்டி விடுகா. வெட்டுக்கத்தி கீழே விழுந்தது. நானும் அடிச்சுப் புரண்டு மரத்தில இருந்து கீழே இறங்கையிலே கீழே விழந்து நல்ல அடி,” என்று சொல்லியிருக்கிறார்.

பயத்தையும் மிரட்சியையும் ஏற்படுத்திய அந்த சுடலை இப்போது கான்கிரீட் போட்ட கட்டடத்துக்குள் கம்பி அளிக்குள் அடைக்கப்பட்டு விட்டார். ஆனால் கம்பீரம் குறையவில்லை. மீசையுடன், கிரீடம் அணிந்து, வீரப்பற்களுடன், ஒரு கையில் வெட்டுக்கத்தியையும் இன்னொரு கையில் குந்தாந்தடியையும் ஊன்றிக் கொண்டு நிற்கிறார்.

பல ஊர்களில் பங்குனியில் ஒரு முறையும் கார்த்திகையில் ஒரு முறையும் என ஆண்டுக்கு இரண்டு கொடை நடத்துகிறார்கள். எங்கள் ஊரில் மட்டும்தான் எப்போதாவது கொடை நடக்கும். மண் சுண்ணாம்பு, செம்மண் கலந்து கும்மாயம் எனப்படும் பசையுள்ள சாந்தால் செய்யப்பட்ட சுடலை இப்போது குறைந்து விட்டது. எல்லா ஊரிலும் சுடலை கற்சிலைக்கு மாறியாகிவிட்டது. அவர் பாடு கொண்டாட்டம். பாலாபிசேம், தேனாபிசேகம், பஞ்சாமிர்த அபிசேம் என ஒரே தடாபுடல்.

சுடுகாட்டைத் தவிர ஊருக்குள்ளே தனியாகவும், முத்தாரம்மன், சந்தனமாரியம்மன், முப்பிடாரி அம்மன் என எல்லா அம்மன் கோவில்களிலும் சுடலைக்கு ஒரு இடம் உண்டு. இரண்டு மாதம் மூன்று மாதம் முன்பே கால் நாட்டி, வரி பிரித்து, பந்தல் போட்டு ஜாம் ஜாம் என்று கொடை நடக்கும். ஆனால் சுடுகாட்டு மாடனுக்கு ஒரு வெள்ளிக்கிழமை கால் நாட்டி, அதற்கு அடுத்த வெள்ளியோடு கொடையை முடித்து விட வேண்டும். இடையில் இழவு விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

கால் நாட்டியதும் கணியானுக்கும், தப்பட்டை, கருங்கொம்பு வாசிப்பவர்களுக்கும் அட்வான்ஸ் கொடுக்க இரண்டு பேர் கிளம்பி போவார்கள். கல்லிடைக்குறிச்சி இசக்கி, மூன்றடைப்பு இராமசுப்பு, நாங்குநேரி வானமாமலை ஆகியோர்தான் எனக்குத் தெரிந்த பிரபலமான கணியான் கூத்து அண்ணாவிகள்..

கணியான் குழுவினர் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ள சில சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவார்கள். மேடம் மினுங்குவான் என்றால் ஒரு ஆயிரம். இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. முதல் இராசியான மேசம் மேடமானது. இரண்டாம் இராசியைக் குறிப்பிட்டு மினுங்குவான் என்றால் இரண்டாயிரம்.

அதுபோல நடுத்துவான் சுள் சுள் என்கிறது என்று அவர்கள் சொன்னால், உடம்பின் நடுப்பகுதியில் இருக்கும் வயிறு பசிக்கிறது என்று அர்த்தம். கை வலித்தால் வீசுவான் வலிக்கிறது என்பார்கள்.

வியாழக்கிழமை மாலைக்கு கணியான் தனது குழுவினருடன் வருவார். பின்பாட்டுக்கு ஒருவர். “கைலாசம் போக வேண்டும்” என்று அண்ணாவி பாடினால் இவர் “போகவேண்டும்” என்று பின்பாட்டு போடுவார். இரண்டு பேர் மகுடம் வாசிப்பார்கள். ஒருவர் வாசிப்பது உச்சம் (வலந்தலை) இன்னொருவர் வாசிப்பது மந்தம் (தொப்பி). மகுடம் வாசிப்பவர்களும் அண்ணாவியுடன் சேர்ந்து பாடுவார்கள். எருமைக் கன்றின் தோல்தான் இந்தத் தப்புக்குப் பயன்படுத்துவார்கள்.

இரண்டு ஆண்கள் பெண் வேடம் அணிந்து ஆடுவார்கள். அவர்கள் உடை மாற்றுவதை கிடுவுக்கள் (ஓலைத் தட்டி) உள்ள இடைவெளி வழியாகப் பார்ப்பது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். பிராவை மாட்டி விட்டு, துணியைச் சுருட்டி முலையாகப் பாவித்துக் கொள்ளும் போது, “கெக்க பிக்கே” என்று எல்லோரும் சிரிப்போம்.

4582870237_b92e3c0717_z

கச்சேரி தொடங்கும் போது கணியான் பாடுவதற்கும் ஆடுவதற்கும் இடம் விட்டு சுற்றி ஊர்க்காரர்கள் அமர்ந்து கொள்வார்கள். சிறுவர்கள் சுற்றி வட்டமாக இருப்பார்கள்.

பனை ஒலையைக் கொழுத்தி, அது “சடக் சடக்” என வெடிப்புடன் எரியும் போது, அதில் உச்சத்தையும் மந்தத்தையும் சூடாக்கி சுதி சேர்ப்பார்கள். “கணங் கணங்” “பிளாங் பிளாங்” என்று சத்தம் கேட்டதுமே உள்ளத்தில் ஒரு துள்ளல் பிறக்கும்.

இடுப்பில் மேளத்தை சுற்றிக் கட்டி விட்டு, ஒரு கையை மேல் பக்கமாக வைத்தும் இன்னொரு கையை நேரடியாக வைத்தும் வாசிப்பார்கள். உச்சம் வாசிப்பவருக்கும் மந்தம் வாசிப்பவருக்கும் மன அளவில் ஒரு ஒத்திசைவு இருக்கும். சௌக்க காலத்தில் வாசிக்கையிலும் துரித காலத்தில் வாசிக்கையும் இந்த ஒத்திசைவு அனாசியமாக வெளிப்படும்.

இந்த வாத்தியத்துக்கு இருக்கும் ஒரு சிறப்பு என்னவென்றால் தவிலிலும் மிருதங்கத்திலும் வாசிக்கக்கூடிய சொற்களை வாசித்து விடுவார்கள். நாகசுர மேதை காருகுருச்சி அருணாசலத்துக்கு பன்னிரண்டு ஆண்டுகளாக தவில் வாசித்த பெரும்பள்ளம் வெங்கடேசன் இந்த வாத்தியத்தை புகழந்து என்னிடம் பேசியிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் காருக்குருச்சியாருடன் கச்சேரி வாசித்த நாட்களில் அவர் கேட்டிருக்கிறார். “பிரமாதமா சொற்கள் வாசிப்பார்கள் தம்பி. நானே சில சொற்களை எடுத்து தவலில் கையாண்டிருக்கிறேன்” என்று ஒரு முறை என்னிடம் சொன்னார்.

சந்தேகம் இருந்தால், இயக்குநரும் எழுத்தாளருமான சுகாவின் படித்துறை திரைப்படத்தில் இளையராஜா இந்த வாத்தியங்களை உபயோகித்து, தேனுகா இராகத்தில் போட்டுள்ள நாட்டுப்புற பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

[கீழே வீடியோவில் படித்துறை படப்பாடல் பதிவிற்கு முன் நெல்லை கணியான் குழுவினர் ஒத்திகைக்காக வாசிப்பதைப் பார்க்கலாம்.]

ஒன்பது மணி அளவில் கணியான் பாட ஆரம்பிப்பார். அதற்கு முன்னதாக மகுடம் வாசிப்பவர்கள் இருவரும் சேர்ந்து வாசித்து ஒரு முத்தாய்ப்பு வைப்பார்கள். அண்ணாவி கணபதி காப்பை ஹம்சத்வனியில் பாடுவார். எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு, சுடலைமாடன் கதைக்கு வருவார்கள். நேரம் ஆக ஆக, பாட்டும், வாசிப்பும் ஆட்டமும் களை கட்டும்.

அரை மைல் நடந்து விட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறார்களே. அவர்களெல்லாம் வெறி கொண்டாற் போல் கணியான் ஆட்டக்கார்கள் ஆடுவதைப் பார்க்க்க வேண்டும். சுழன்று ஆடும் போது கோவிலின் முன்னால் கொடைக்காக விரிக்கப்பட்டிருக்கும் ஆற்று மணல் அல்லது கடல் மணல் முன் வரிசையில் இருப்பவர்கள் மீது வாரி இறைக்கப்படும். அப்படியே ஒரு சுற்று சுற்றி, புடவையால் முன்வரிசை சிறுவர்களை ஆட்டக்கார்கள் மூடப்பார்ப்பார்கள். துரித காலத்தில் பாடும் போது சுற்றி வந்து ஆடி விட்டு, பின்னர் பாட்டுக்காரரின் அருகில் வந்து, நின்ற இடத்திலேயே ஆடிக் கொண்டிருப்பார்கள்.

இப்போது கணியான் சாதியில் ஆடுவதற்கு ஆட்கள் இல்லை. பலரும் அரசாங்க வேலைக்கு சென்று விட்டார்கள். அதனால் பாவைக்கூத்து கலைஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆடுகிறார்கள்.

கணியான் பாடிய இராகங்களும் சங்கதிகளும் எனக்கு ஒரு காலத்தில் புரியவில்லை. கர்நாடாக இராகங்கள் புரிய ஆரம்பித்ததும், கணியான் அண்ணாவி கையாளும் கேதார கொளையும், கல்யாணியும், காம்போதியும் மெல்ல வருடுகின்றன. எத்தனையோ மேதைகளின் பாட்டைக் கேட்டாலும், முறையாக சங்கீதம் பயிலாத ஒருவர் இராகங்களைப் பாடும் போது அதில் ஒரு சுவையும் ஆர்வமும் மேலிடத்தான் செய்கிறது.

இரவு 12 மணிக்கு பூசை தொடங்கும். சுடலை மாடன் கைலாய மலையை விட்டு இறங்கி, காசி கடந்து மற்றுள்ள ஊர்களையெல்லாம் சுற்றி கொடை நடக்கும் ஊர் இடுகாட்டை நோக்கி வருவதை அண்ணாவி பாடிக் கொண்டிருப்பார்.

“மாயாண்டி சுடலை ஐயா….கொள்ளையிட வருகிறாரே. ஏ ஏ ஏ..

சந்தன கட்டையிலே சவம் கிடந்து எரியுதய்யா.. ஆ ஆ ஆ

பூவரசம் கட்டையிலே பிணம் கடந்து வேகுதய்யா. ஆ ஆ ஆ.”

ஒல்லியாக இருக்கும் இராமசுப்பு முழுத் தொண்டையையும் திறந்து பாடுவார். அவர் பாடும் வரிகள் மகுட வாசிப்புடன் சேர்ந்து ஒரு வெறி கொண்ட மனநிலையை உருவாக்கும். மிதமான போதையில் இருந்தால் (ரொம்ப அதிகமாக குடித்திருக்கக் கூடாது) கேட்பதற்கு இன்னும் சுகமாக இருக்கும்.

இப்போது பூசை தொடங்கும். பறை (தனியாக இதற்கென வருவார்கள்) முழங்க, கருங்கொம்பு ஊதப்படும். வள்ளியூர் அருகேயுள்ள சமூகரங்கபுரத்தைச் சேர்ந்த பரதேசி பிரமாதமாக பறை வாசித்து, கருங்கொம்பு ஊதுவார்.

தீபாராதனையின் போது ஊலை மூடி போன்ற ஒரு மண் பாத்திரத்தில் புன்னைமரக்காயின் காய்ந்த ஒடுகளைத் தீ மூட்டி உருவாக்கப்பட்ட தணலில் சாம்பிராணியை போடுவார்கள். புன்னக்காய் தோட்டில் இருந்து கிளம்பும் கசப்பான புகையுடன் சாம்பிராணி சேர்ந்து கொண்டு கிறக்கமூட்டும். சாமி ஆடுபவர், குளித்து முடித்து, ஈரத் துணியுடன் இடுப்பில் துவர்த்தை கட்டி, கண்ணீர் தாரை தாரையாக பாய, மாடனைப் பார்த்தப்படி நின்றிருப்பார்.

“ரண்டங், ரண்டங், ரண்டங்” என்று ஒரு முரசு ஒலிக்கும். அதை மற்ற முரசுக்காரர்களும், மேளக்காரர்களும், தப்பு வாசிப்பவர்களும் வாங்கி வாசிப்பார்கள். கொடை பார்க்க வந்தவர்களுக்கே ஆடலாமா என்ற மனநிலை உருவாகும் போது, சாமி ஆடுபரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். சில கோவில்களில் நாகசுரத்தில் நீலாம்பரி வாசிப்பதுண்டு.

kaniyan2

மேளம் உச்சத்தை எட்டும் போது, சாமி கொண்டாடி அல்லது கோமரத்தாடி, ஊ ஊ என்று கத்தி விட்டு மாடனை மூன்று சுற்று சுற்றி வந்து ஆட ஆரம்பிப்பார். அவருக்கு மணிகள் ஒலிக்கும் கச்சை அணிவித்து, தலையிலே சிவப்புத்துணியை கொள்ளி வைப்பவர்கள் கட்டுவது போல் கட்டி, இரு புறமும் தாளம் பூவை செருகி வைப்பார்கள். உடல் முழுவதும் களபமும் சந்தனமும் பூசப்படும். அக்குள் இரண்டிலும் கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தங்கள் செருகப்படும். காய்ந்த தென்னம்பாளைகளை சின்னதாகக் கிழித்து, அதில் துணியைச் சுற்றுவார்கள். பி்ன்னர் அந்த சின்ன குச்சிகளையெல்லாம் ஒன்றாக சேர்த்துக் கட்டி தடிமனான பந்தம் செய்து, அதில் சேற்றைப் பூசி வைத்திருப்பார்கள். ஆடும் போது நெய் ஊற்றி கொளுத்துவார்கள்.

அடுத்து பலி. ஆடு பலி, கோழி பலி, பன்றி பலி என முப்பலிகளும் உண்டு. சில சாதியினர் மட்டும் பன்றியை பலியிடுவார்கள். எங்கள் ஊர் சுடலைக்கு ஆட்டின் ஈரக்குலை வேண்டும். பலி கொடுக்கும் போது மேளங்கள் நிறுத்தப்படும்.

“ரீ ரீ” என்ற சுவர்க்கோழிகளின் சத்தம் மட்டும் கேட்கும். கோவில் முகப்பில் விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஆல மரத்தில் இருக்கும் ஆந்தை அலறும். காய்ந்த பனை ஓலைகள் ஒன்றோடொண்டு உரசம் ஒலிகள் கலக்கத்தை உருவாக்கும்.

அந்த நிசப்தமான சூழலில் ஆடு மட்டும் “மே மே” என்று கத்துவது என்னவோ செய்யும். ஆட்டை மலத்திப் போட்டு, முன்னங்கால்களுக்கு நடுவில் உள்ள பகுதியில் கத்தியை செருகி, நெஞ்சை வகுந்து, உள்ளே கையை விட்டு ஈரலை வெட்டி எடுத்து வாழை இலையில் வைப்பார்கள்.

பின்பு வாயிலும் கத்தியால் குத்தப்பட்ட பகுதிகளிலும் சிறிய தீப்பந்தங்களைக் செருகி வைப்பார்கள். அது முடிந்ததும், பாம்பாட்டி வாசிக்கும் வாத்தியத்தில் நையாண்டி மேளத்துக்கான மெட்டு வாசிக்கப்படும். ஒரு முரசு மட்டும் கூடவே ஒலிக்கும்.

“இவையெல்லாம் மிரட்சியையையும் பயத்தையும் உருவாக்குவதற்காக செய்யப்படும் முறைகள்,” என்கிறார் பேராசிரியர் அ.கா. பெருமாள்.

சாமியாடி ஆடிக் கொண்டே, சுடலைக்கு முன்னால் நிற்கும் கழுகு மாடனின் கழுத்தில் தொங்கும் சங்கிலி முனையில் ஒரு சேவலை உயிரோடு செருகி விடுவார். அதே துடித்துக் கொண்டிருக்கும்.

பின்னர் ஆட்டு இரத்தத்தை புதிய மண் சட்டியில் எடுத்து, அதில் சிங்கம் பழத்தை (குமரி மாவட்டத்தில் மட்டுமே விளையும் வாழைப்பழம்) சேர்த்து பிசைந்து, சுடுகாட்டுக் குழியில் வைத்து ஆடிக் கொண்டே, சாமியாடி வாயில் போட்டுக் கொள்வார். குழியில் ஆடி முடிந்ததும் பத்து பேராகச் சேர்ந்து அவரைத் தூக்கி விட வேண்டும். கரையேறியதும் அவர் கையால் கொடுக்கும் திருநீற்றை வாங்கிப் பூசுவதற்கு தள்ளு முள்ளு நடக்கும்.

அதன் பிறகு மீண்டும் கணியான் பாட, அதற்கு ஏற்ப சாமியாடுபவர் ஆடுவார். கணியான் கூத்தில் பெண் வேடமிட்டு ஆடுபவரும் சாமியாடுபவரும் சேர்ந்து ஆடுவது கண்கொள்ளா காட்சி!.

இடையிடையே நிறுத்து என்பார். குறி சொல்லப்படும். மறுபடியும் அடி மேளத்தை என்பார். இப்படியே கொஞ்ச நேரம் நடக்கும். பின்னர் தாம்பாளம் நிறைய திருநீற்றைப் பரப்பி, அதில் கட்டியாக இருக்கும் சூடனை (கற்பூரம்) கொளுத்தி, தீபாராதனை காட்டுவார் சாமியாடி.

தாம்பாளத்தை மார்பில் அணைத்தபடி, மாடனை அவர் சுற்றி வரும் போது, ஊ ஊ என்று அடிக்கும் காற்றில் தீ ஜூவாலையானது அவரது மார்பில் உள்ள முடிகளைக் கருகச் செய்யும். கரைத்து வைத்திருக்கும் சந்தனத்தை அப்படியே தொழியைப் (சேறு) பூசுவது போல் பூசுவார்கள்.

நாக்கு வெட்டு, கை வெட்டு என்ற முறை சில ஊர் சுடலைமாடன் கோவில்களில் நடைபெறும். அந்த வழக்கம் இப்போது பெரும்பாலும் குறைந்து விட்டது. எங்கள் ஊரில் உள்ள செட்டியத் தெருவில் முண்டன் (தலையில்லாத சுடலை உருவம்) கோவிலில் கை வெட்டு உண்டு. கணியான் தன் கையில் ஒரு இடித்தில் இலேசாக கிழி்த்து சில துளிகள் இரத்தத்தை வெற்றிலையில் வைத்துப் படைப்பார். முத்துப்பெருமாளுக்கு மகுடம் வாசிக்கும் கணேசனின் கையில் நிரந்தரமாக ஒரு தழும்பு இருக்கும்.

“நாக்கை சிறிதாக அறுத்து இரத்தம் படைப்பதும் இருந்தது. அதெல்லாம் இப்போது நின்று விட்டது,” என்கிறார் அ.கா. பெருமாள்.

இந்த சம்பிரதாயங்களெல்லாம் முன்னதாக செம்பு பானைகளில் பொங்கி வைக்கப்பட்டிருக்கும் சோற்றை சாமிக்கு முன்னால் படைப்பார்கள். பச்சை தென்னை ஓலையைப் பாயாக முடைந்து, அதற்கு மோல் புதிய வெள்ளைத் துணியை விரித்து சாப்பாட்டைக் கொட்டி, வாழைக்காய் துவரன், முருங்கைக் கீரை பொறியல், தயிர், நெய், அப்பளம், அவித்த முட்டை என பரப்பி விட்டு, கறிக் குழம்பை அதன் மேல் ஊற்றி, படையலின் மீதும் பந்தம் கொளுத்தி வைக்கப்படும்.

எல்லாம் முடிந்ததும் இந்த சோற்றைப் பிசைந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். இதற்கும் கிழக்கே வெள்ளி முளைத்து விடும். சுடலைக்கு படைக்கப்பட்ட கள், சாராயம் (இப்போது நல்ல ரம்), பீடி, சுருட்டைத் தேடி ஒரு கூட்டம் போகும்.

கொடை நடத்தும் குழுவினர் ஒரு தாம்பாளத்தில் பழம், வெற்றிலை, பாக்குடன் பணத்தை வைத்து கணியானுக்கும் பிற கலைஞர்களுக்கும் கொடுப்பார்கள். வீட்டுக்குப் போய் படுத்தால் தூக்கம் வராது. அடுத்தநாள் பந்தலில் கட்டப்பட்டிருக்கும் வெட்டி முறிக்கப்பட்ட நிலையில் குலை இல்லாத வாழையைப் பார்க்கும் போது இனம்புரியாத சோகம் என்னை சூழ்ந்து கொள்ளும். அடுத்தக் கொடை எப்ப வருமோ!

One Reply to “கணியான் கூத்து”

Comments are closed.