ஆர்தர் ஆஸ்போர்னின் ரமணர்

1984ல், தமிழகத்தில் மூன்றாவது வேளாண்மைக் கல்லூரி, நெல்லை வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மைப் பள்ளியில் ஆரம்பிக்கப் பட்டது. இந்திய வழக்கப்படி, துளி கூட வசதிகள் இல்லாமல், செவ்வனே துவங்கியது. பொட்டல் காடு. 1 ½ ஆண்டுகள் அழகிய கோவை வேளாண் கல்லூரியில் படித்து, மாலையானால், ஆர்.எஸ்.புரம் சுற்றி வந்த நாங்கள் அனைவரும் கிள்ளிகுளம் சென்றடைந்த முதல் மூன்று மாதங்கள் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளானோம்.

எங்களுடன் மாற்றலாகி வந்திருந்தார்கள் பேராசிரியர்கள் ஸ்வாமியப்பனும், க்ருஷ்ணமோகனும். ஸ்வாமியப்பன் பூச்சியியல் துறையிலும், க்ருஷ்ணமோகன் நோயியல் துறையிலும் பெரும் வல்லுனர்கள். கோவையில் அவர்கள் கடவுள்கள் போல. கர்ப்பகிருகம் தாண்டி வரமாட்டார்கள். ஆனால், நெல்லையில் வசதிகளின்றி மாணவர்கள் துன்பப்படுவது கண்டு நெருங்கி வந்தார்கள். மாணவர்களில் திறனாளர்களை ஒன்று திரட்டி, தம் நேரத்தைச் செலவிட்டு, ஆறுதல் சொல்லி, இண்டர் காலேஜ் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வருட இண்டர் காலேஜ் போட்டிகளில் ஒரு புயல் போல் புகுந்தோம். பல போட்டிகளில் வென்று மொத்தமாக இரண்டாமிடம் பெற்றோம் – மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை விட முன்னிலையில். கோவையில் கிள்ளிகுளம் பேட்ச் என்று தனியாக வைக்கப்பட்டு, தாழ்வாகக் கேலி பேசப்பட்ட ஒரு குழு, ஒரு சிறு காலத்தில் சிறந்ததொரு மாணவக் குழுவாக மாறியது ஒரு அதிசயம்தான். இன்றும் கிள்ளிக்குளம் முதல் பேட்ச் பற்றிக் கர்ண பரம்பரைக் கதைகள் உலவுகின்றன

அடுத்த 2 ½ ஆண்டுகள் அவர்கள் எங்களுக்குக் காவல் தெய்வங்களாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியுள்ள ஒரு ஒளிவட்டம் விலக, ஒரு குருகுலம் போல் பழகினோம். ரொம்ப மிரள வைக்கும் பூச்சியியலும் நோயியலும் மிக நெருங்கி வந்தன. அவர்களின் பாதிப்பில், மிக அதிகமான மாணவர்கள் பூச்சியியலும், நோயியலும் படிக்கச் சென்றார்கள். இன்றும் இவர்களை நினைத்து மனம் நெகிழாத மாணவனே கிடையாது.

ஆர்தர் ஆஸ்போர்ன் அப்படி ஒரு பேராசிரியர். ரமண மஹர்ஷியை அணுகப் பல வழிகள் உண்டு. எல்லாவற்றிலும் மிக எளிய வழி ஆஸ்போர்னுடையது ரமணர் வழி நேர் வழி என்று சொல்லப்படுகிறது. அதாவது தத்துவம், மதம், வழிபாடு போன்ற காத்துக் கறுப்புக்களிடம் மாட்டிக்கொண்டு நேர விரயம் ஆகிவிடாமல், நேரே கடவுளென்னும் தன்னையறிதல். அந்த ரமண வழியென்னும் நெடுஞ்சாலைக்கு நம்மை, சிரமப் படுத்தாமல் கொண்டு சேர்க்கும் குறுக்கு வழியே ஆஸ்போர்னின் எழுத்து.

ஆஸ்போர்ன் இங்கிலாந்தில் பிறந்தவர். விவசாயியாக ஆசைப்பட்டுத் தன் தந்தையின் வற்புறுத்தலால், படிக்கப் போனார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தார். அங்கேயே பேராசிரியராகாமல், வாழ்க்கையின் பொருளைத் தேடிப் புறப்பட்டார். அவர் தேடுதலில் அவர் அடைந்தது Rene’ Guanon என்னும் தத்துவ ஞானியை. அவரின் “ஒன்றாயிருத்தல் – Being One” என்னும் தத்துவம் அவரை மிகவும் கவர்ந்தது. அத்தத்துவ விசாரத்தில் ஈடுபடுகையில் அவரின் பரபரப்பும், நிம்மதியின்மையும் விலகி மிக அமைதியான ஆளுமையானார்.

பின்னர் அவர் லூசியா என்னும் யூதப் பெண்மணியை மணம் செய்துகொண்டார். Rene’ Guanon ஐ பின்பற்றும் அவரது நண்பர் குழாமில் ஒருவர் திருவண்ணாமலையிலிருந்தார். அவரிடமிருந்தே ஆஸ்போர்ன் ரமண மகரிஷி பற்றி முதலில் அறிந்து கொண்டார்.

ரமண மகரிஷியோடு ஆர்தர் ஆஸ்போர்ன்
ரமண மகரிஷியோடு ஆர்தர் ஆஸ்போர்ன்

பின்னர் இவர் பேங்காக்கின் Chulalongkorn Universityல் பணியில் சேர்ந்தார். அங்கு வசிக்கையில், ரமணரின் “நான் யார்” புத்தகத்தையும், “உபதேச சாரத்தை”யும் படித்தார். உபதேச சாரத்திலிருந்த ரமணரின் புகைப் படம் அவரை மிகவும் கவர்ந்தது. ஒரு நாள் திருவண்ணாமலை சென்றே தீருவது என்று அவரது மனம் உறுதிபெற்றது. நான்காண்டுகள் பணிமுடித்து விடுமுறையில், ஆஸ்போர்ன் குடும்பத்தோடு காஷ்மீருக்கு விடுமுறையாக வந்தார். விடுமுறை முடியும் தருவாயில், இரண்டாம் உலகப் போர் உக்கிரம் பெற, மனைவியையும் குழந்தைகளையும் பேங்காக் அழைத்துச் செல்வது அபாயம் என்று உணர்ந்தார். அவரின் Rene’ Guenon குழும நண்பர் அப்போதும் திருவண்ணாமலையில் வசித்து வந்தார். அவர் உதவியோடு திருவண்ணாமலையில் வசிக்க மனைவி லூசியா மற்றும் மூன்று குழந்தைகளை அனுப்பிவிட்டு பேங்காக் திரும்பினார். (இதில் ஒரு குழந்தையான ஆடம் ஆஸ்போர்ன் டேபிள் டாப் கம்ப்யூட்டரை வடிவமைத்த விஞ்ஞானி. வெள்ளைக்காரத் தமிழன் என்று தன்னை அழைத்துக்கொண்டவர்.)

ரமண மகரிஷியோடு குழந்தை ஆடம் ஆஸ்போர்ன்
ரமண மகரிஷியோடு குழந்தை ஆடம் ஆஸ்போர்ன்

லூசியாவும் குழந்தைகளும் திருவண்ணாமலையில் வசிக்கத் துவங்கினர். பேங்காக் சென்ற ஆஸ்போர்ன், போரினால் சிறைப்பட்டார். போர் முடிந்ததும் நேரே திருவண்ணாமலை வந்த ஆஸ்போர்ன் திருவண்ணாமலையிலேயே தங்கி விட்டார். கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் பேங்காக் செல்லத் திட்டமிட்டவரின் முடிவு ஒரு நாள் ரமணரின் பார்வை தந்த அனுபவத்தால் மாறியது. (இதை நயன தீட்சை எனச் சொல்வாரும் உண்டு.) .திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். பின்னர் இந்திய விடுதலை பெற்ற தருணத்தில், இங்கிலாந்து திரும்பிவிடப் பலர் வற்புறுத்தியும் அவர் திரும்பவில்லை.

ரமணரின் மறைவுக்குப் பின்னர், கொஞ்ச காலம், பத்திரிகையாளராகப் பணியாற்றினார். கல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக ஒரு நான்காண்டுகள் பணியாற்றி, பின் விலகி திருவண்ணாமலைக்கே வந்தார். 1964ல், “Mountain Path” என்னும் காலாண்டிதழைத் துவங்கினார். இந்த இதழே ரமணரை உலகெங்குமுள்ள ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்த்தது.

ரமணாசிரமம் செல்பவர்கள் அங்கு முதலில் உணர்வது அங்கு மிளிரும் எளிமையையும், அழகையும், நேர்த்தியையும். இம்மூன்றையும் மவுண்டன் பாத் இதழில் காணலாம். ஒரு வகையில் மவுண்டன் பாத் ரமணாசிரமத்தின் இன்னொரு முகமே. அதுவே ஆஸ்போர்னின் எழுத்துப் பாணி.

ரமணர் வாழ்க்கை வரலாறு பற்றிய பல்வேறு புத்தகங்கள் வந்துள்ளன. சுத்தானந்த பாரதி, கி,வா.ஜ., பேராசிரியர் ஸ்வாமிநாதன் (NBT வெளியீடு), T.M.P.மகாதேவன், B.V நரசிம்ம ஸ்வாமி போன்றோர் எழுதியன. இவை தவிர்த்து, பல்வேறு தரிசனங்களை, தேவராஜ முதலியார், சூரி நாகம்மா, முருகனார், சாது ஓம், குஞ்சு ஸ்வாமி, கோஹன், v.கணேசன், முனகல வெங்கட்ராமையா முதல் டேவிட் காட்மேன், சூஸன் விஸ்வநாதன் வரை பலர் எழுதியுள்ளனர். கார்ல் யுங் முதல் கென் வில்பர் வரை பலரும் அவரின் “நான் யார்” பற்றி விதந்தோதியுள்ளனர்

ஆனால், ஆஸ்போர்னின் “Ramana Maharshi and the path of self knowledge” மேற்சொன்ன அனைவரின் ஆக்கங்களிலிருந்து ஒரு படி மேலே நிற்கின்றது. எதனால் என்று ஆராயும் போது இப்புத்தகத்தின் சில கூறுகள் தெரிகின்றன.

ஆஸ்போர்னின் இப்புத்தகத்தில் எழுதியுள்ள மொழி மிகப் புதிதாய் இன்றும் இருக்கிறது. ஒரு காலமின்மையை (timelessness) எவரும் உணர முடியும். சுத்தானந்த பாரதியின் மொழி இன்றில்லை. இன்று படிக்கும் ஒரு மனிதருக்குச் சலிப்பு தட்டும் நடை. ஆனால், ஆஸ்போர்னைப் படிக்கும் எவரும் அதன் ”இன்றைய” மொழிநடையினால், மிக எளிதாகப் படித்துச் செல்லமுடியும். அதே போல் வாக்கியங்களின் அமைதியும் அவரின் மொழியாளுமைக்குச் சான்று. சின்னச் சின்ன வாக்கியங்கள், அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள், சொல்ல வந்த விஷயத்தை ஒரு பாடலின் பயணம் போல் மேலெடுத்துச் செல்லும் நடை.

முதலிலேயே சொல்லிவிடுகிறார் – பல வார்த்தைகள் மொழி பெயர்ப்பில், ஜீவனை இழந்து விடும் என்று. அதனால், பல வடமொழி வார்த்தைகளை அப்படியே குறிப்பிட்டு, பின்னால் அவற்றின் அர்த்தங்களை விளக்கியிருக்கிறார்.

பல காட்சிகளை விளக்கும் போது, மொழிபெயர்ப்பில் அதன் அர்த்தம் திரிந்துவிடக் கூடும் என அதன் contextஐயும் விளக்கிவிடுகிறார். எடுத்துக் காட்டாக, ரமணர் ரொம்ப காலம் அண்ணாமலையிலும், அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் அலைந்தவர். ஒரு நாள் அவர் அப்படி அண்ணாமலையில் சுற்றியலைவதைப் பார்த்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணொருத்தி. “ஒன்னப் பாடையில வெக்க… இப்படி வேகாதா வெயில்ல சுத்தாம, ஒரு இடத்தில நிம்மதியா ஒக்காந்தா என்ன?” என்று திட்டியிருக்கிறாள். இதைச் சொல்லும் அவர், “May you be put on the funeral pyre. Why do you wander about in the sun like that? Why don’t you sit quiet” என்று எழுதிவிட்டு, மேலும் அதன் பிண்ணணியை விளக்குகிறார். Certainly no outcast women would have dared to speak to a swami like that என்று. இது இந்தியா என்னும் கலாச்சாரத்தின் பிண்ணணியில் புரிந்து கொள்ளப் பட வேண்டிய விஷயம்.

இப்புத்தகத்தின் இரண்டாவது சிறப்பு இதன் கட்டமைப்பு. ஒரு முழுமையான செவ்வியல் கட்டமைப்பு. ரமணரின் பிறப்பில் இருந்து துவங்கி, அவரின் “தன்னையறிதல்” நிகழ்ச்சி, அருணாச்சலத்துக்கு அவர் மேற்கொண்ட பயணம், அவரின் குடும்பம், அவரின் உபதேசம், அவரின் அணுக்கத் தொண்டர்கள், அவரின் பாடல்கள், இறுதியில் அவரின் மறைவு என, அவரை முழுமையாகக் கற்றுணர்ந்த ஒரு ஞானியின் மனநிலையில் இருந்து சொல்லப்படுகிறது. ரமணரைப் பற்றிய மிக முழுமையான வாழ்க்கை வரலாறு இதுவே. மேற்கத்திய பாணியில் சொல்லப் போனால். “official biography” என்று சொல்லத் தகுந்த புத்தகம்.

ramana_maharshi_and_the_path_of_selfknowledge_idi8571896 ஆம் ஆண்டு மதுரையில், “தன்னையறிந்த” ரமணர் அதன் பின் அண்ணாமலையிலும், அதைச் சுற்றியுள்ள தோட்டங்கள், குகைகளில் வசித்து வருகிறார். மிக அதிகம் அறியப்படாத ப்ராமண ஸ்வாமியாக. விருபாக்‌ஷக் குகையில் மட்டும் 17 ஆண்டுகள். இக்காலங்களில், சரியாக உணவு உண்ணாமல், மௌனியாக இருந்திருக்கிறார். இதை மிக எளிதாகப் பலரும், அவர் அண்ணாமலையில் கடுந்தவமிருந்தார் என்று எழுதியுள்ளனர். தன்னையறிந்தவருக்கு தவமெதற்கு? இதை ஆஸ்போர்ன் “Seeming Tapas” என்று மிகச் சரியாகச் சொல்கிறார்.

அவரைப் பலரும் தவயோகி, மௌனி என்றெல்லாம் கூறி வழிபட்டதை ரமணர் சிரிப்புடனே எதிர்கொண்டிருக்கிறார். பின்னர், ஸ்கந்தாசிரமம் உருவான காலத்தில், அவர் தாய் அங்கு வந்த சேரவே சம்சாரியானார். பின்னர், தாய்க்குக் கட்டிய கோவிலே இன்றைய ஆசிரமம்.

ரமணரின் பக்தர்களுக்கென்று ஒரு அத்தியாயம் ஒதுக்கிய ஆஸ்போர்ன், ஆசிரமத்தில் இருந்த விலங்குகளுக்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்கியிருக்கிறார். இந்த முக்கியத்துவமே ரமணரை ஆஸ்போர்ன் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதை விளக்கும்.

1947 வாக்கில் ரமணரின் வலது கையில் ஒரு கட்டி முளைக்கிறது. அவர் சொல்லச் சொல்லக் கேட்காமல், அதற்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதற்கு ரமணர் மீது அவரது பக்தர்கள், அதிலும் அவர் தம்பி வைத்திருந்த ஒரு முரட்டுத் தனமான பக்தியே காரணம். ரமணர் மீது பல்வேறு மருத்துவ முறைகள் ப்ரயோகிக்கப் படுகின்றன. கட்டி அவற்றையெல்லாம் வெற்றி கொண்டெழுகிறது. பக்தர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு இது. இறுதியில் ரமணரின் மரணத்தில் முடிகிறது. இச்சோக நிகழ்வைக் கூட, ஆஸ்போர்ன் மற்ற பக்தர்களின் பார்வையிலிருந்தே விளக்குகிறார். புத்தகத்தின் ஒரு வரியில் கூட தன்னை முன் நிறுத்தாமல். அது ரமணரை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒரு உண்மையான பக்தரின் வழி.

ரமணரின் இறுதிநாட்களில், பலரும் அவர் மரணத்தை எண்ணி அழுதனர். அதைக் கண்டு சிரித்த அவர், “எல்லோரும் நான் சென்றுவிடுவேன் என்று வருந்துகின்றனர். நான் எங்கு செல்ல முடியும்” என்று சொன்னார். அதுவே ரமண வழி பற்றி ரமணர் சொன்ன இறுதி வாக்கியம்.

ரமணரை அறியத் துவங்கும், விரும்பும் அன்பர்களுக்கு, இப்புத்தகமே சரியான துவக்கம். இது தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டு. “ரமணரும் ஆன்மீகப் பாதையும்” என்ற பெயரில் வந்துள்ளது. இதன் ஒரு பதிப்புக்கு மணியம் செல்வன் ஒரு மிகச் சிறந்த ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார்.